||13.20|| பிரக்ருதி மற்றும் புருஷனின் தன்மைகள்:
कार्यकरणकर्तृत्वे हेतु: प्रकृतिरुच्यते ।
पुरुष: सुखदु:खानां भोक्तृत्वे हेतुरुच्यते ।। २० ।।
கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே ।
புருஷ: ஸுக2து3:கா2நாம் போ4க்த்ருத்வே ஹேதுருச்யதே ।। 20 ।।
कार्य करण कर्तृत्वे கார்ய கரண கர்த்ருத்வே தேகத்தையும் இந்திரியங்களையும் உண்டுபண்ணும் விஷயத்தில் प्रकृति ப்ரக்ருதி பிரக்ருதி हेतु: ஹேது: காரணமென்று
उच्यते உச்யதே சொல்லப்படுகிறது पुरुष: புருஷ: புருஷன்
सुख दु:खानां ஸுக2 து3:கா2நாம் சுக துக்கங்களினுடைய भोक्तृत्वे போ4க்த்ருத்வே அனுபவிப்பதில் हेतु: ஹேது: காரணமென்று उच्यते உச்யதே சொல்லப்படுகிறது.
உடலுக்கும் இந்திரியங்களுக்கும் காரணம் பிரக்ருதி எனப்படுகிறது. இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணம் பரப்ரம்ம தத்துவம்(புருஷன்) எனச் சொல்லப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
கார்ய காரணங்களை ஆக்கும் ஹேது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஹேது புருஷனென்பர்.
விளக்கம்:
=> பிரக்ருதி:
‘கார்ய’ என்பதன் பொதுவான பொருள் ‘விளைவு’ ஆகும். ஆனால் அது இங்கு உடலைக் குறிக்கின்றது. மேலும் இங்கு ‘கரண’ என்பது கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம் மற்றும் அஹங்காரம் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. அதாவது, சுருக்கமாக அந்தக்கரணம் என்றழைக்கப்படுகிற மனதைக் குறிக்கிறது. ‘கார்ய கரண கர்த்ருத்வே’, அதாவது இந்த உடல், அதற்கு காரணமான ஐம்பூதங்களை உள்ளடக்கியதாகவும் மற்றும் புலனுறுப்புக்களின் விஷயமாகவும் இருக்கின்ற இந்த உலகம், மனம் என இவைகளனைத்தின் உற்பத்திக்கு காரணம் பிரக்ருதி எனச் சொல்லப்படுகிறது — ப்ரக்ருதி ஹேது: உச்யதே, என்கிறார் கிருஷ்ணர். படைப்பிலுள்ள அனைத்திற்கும் மூலக்காரணமாக பிரக்ருதி உள்ளது. இங்கு சங்கரர், காரியம் என்பது மாற்றியமைக்கப்பட்ட காரணத்தின் வடிவமாகும் என காரண-காரிய சம்பந்தத்தை வரையறுக்கிறார். எனவே நாமறியும் இந்த உலகம் மட்டுமல்லாது அதன் முழு காரண-காரிய சம்பந்தத்திற்கு காரணமாகவும்(ஹேது) பிரக்ருதியே உள்ளது.
பொதுவாக, ஒரு காரணத்திலிருந்து தோன்றிய எந்தவொரு காரியத்திற்கும் அந்த காரணத்தின் பண்புகளே இருக்கும். உதாரணமாக, களிமண்ணிலிருந்து தோன்றிய பானையின் நிறம், மணம், தன்மைகள் உள்ளிட்ட அனைத்தும் களிமண்ணைப் போன்றதாகவே இருக்கும். உண்மையில் ஒரே விஷயமே ஒரு நோக்கில் களிமண்ணாகவும் மற்றொரு நோக்கில் பானையாகவும் இருக்கின்றது எனக் கூறினால் அது மிகையாகாது. அதுபோலவே ஜடமான, முக்குணத்தையுடைய, மித்யாவாகவுள்ள பிரக்ருதியின் தன்மைகளே அதிலிருந்து தோன்றியதான இந்த உடல், மனம் மற்றும் இந்த உலகிலும் இருக்கின்றது.
=> புருஷன்:
சுக-துக்கம் முதலிய அனுபவத்திற்கு காரணம் புருஷன் எனச் சொல்லப்படுகிறது — ஸுக2 து3:கா2நாம் போ4க்த்ருத்வே ஹேது: உச்யதே, என்கிறார் பகவான். பிரக்ருதியிலிருந்து தோன்றியதால் இந்த உலகம், உடல் மற்றும் மனம் எல்லாம் ஜடம் எனில் விவகாரம் எப்படி நடக்கும்? எனவே அதற்கு அனுபவிப்பவன் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் என்கிற இருமை தேவைப்படுகிறது. இதனால் பிரக்ருதியிலுள்ள ஒரு தத்துவம் அனுபவிப்பவனாக (போக்தாவாக) மாற, புருஷன் காரணமாகிறது. யார் அந்த போக்தா? நமது மனம். சூக்ஷம சரீரமான மனம் போக்தாவாக மாறி, உலகம் அனுபவிக்கப்படும் பொருளாக மாறுகிறது. இந்த மாற்றத்திற்கு காரணம் சைத்தன்ய-சொரூபமான புருஷன், பரமாத்மா ஆகும். அவர் அறிவை பிரதிபிம்பிக்குமளவு நுண்மையாகவுள்ள இந்த மனதிற்கு அறிவை கொடுத்துவிட்டார். இதனால் மனமானது அறிவுடன் கூடியதாக, உணர்வுடையதாக சேதனமாக ஆகிறது. பிரக்ருதியிலுள்ள எல்லா ஜடமும் அறிவைப் பெறுவதில்லை. இந்த சூக்ஷம சரீரம் மட்டுமே அறிவைப் பெற்று சேதன தன்மையை அடைவதால் பிரக்ருதி இரண்டாக பிரிவதைப் போல் ஆகிறது.
(1) ஜடமான பிரக்ருதி(உலகம்) (2) சேதனமான பிரக்ருதி(மனம்)
இந்த மனம் உடலுடன் சேரும்போது உடலும் சேதனமானதாக தெரிகிறது. எனவே விதவிதமான உணர்வுகளை இந்த ஜடமான மனம் அனுபவிப்பதற்கு காரணமாக(ஹேது) இருப்பது புருஷ தத்துவம் ஆகும். ஜீவன், க்ஷேத்திரஞன் மற்றும் போக்தா அனைத்தும் புருஷனைக் குறிக்கின்ற ஒத்த சொற்களாக உள்ளன என்கிறார் சங்கரர். போக்தாவாக இருப்பது என்பது அறிவதையும் குறிக்கிறது. எனவே அறிபவராக, பார்ப்பவராக, சிந்திப்பவராக, சந்தேகப்படுபவராக என பலவிதங்களில் மாறுபவராக புருஷன் ஆகிறார். இங்கு மாறுகிறார் என்பது மாறுவதைப் போல ஆகிறார் என்பதைக் குறிக்கிறது. அதாவது புருஷ தத்துவத்தினாலேயே இந்த மாற்றங்கள் சாத்தியப்படுகின்றன. புருஷனில்லாத கர்த்தா(செய்பவன்) அல்லது போக்தா(அனுபவிப்பவன்) இல்லை, ஆனால் புருஷன் போக்தாவிலிருந்து சுதந்திரமானவர்; போக்தாவைச் சாராமல் சுயமாக இருப்பவர். இங்கு, ‘போ4க்த்ருத்வே ஹேது’ என்பது நிமித்த-காரணத்தைக் குறிக்கிறது. புருஷ: போ4க்த்ருத்வே நிமித்த ஹேது:, ப்ரக்ருதி: கர்த்ருத்வே உபாதா3ந ஹேது:.
பொதுவாக நிமித்த-காரணத்தை இரு வகைகளாகச் சொல்லலாம்.
(1) சில நிமித்தங்கள் மாற்றத்தை அடையாமல் காரணமாக இருக்கும். எ.கா., கயிறு-பாம்பு.
(2) சில நிமித்தங்கள் செயல்பட்டாக வேண்டியதாக இருக்கும். எ.கா., பானைக்கு குயவன் நிமித்த-காரணம்(உருவாக்குபவன்). குயவன் செயல்படும்போதே களிமண் பானையாக ஆகிறது.
இங்கு, புருஷன் எந்த மாற்றத்தையும் அடையாத நிமித்த-காரணம்; ஆனால் பிரக்ருதியோ மாற்றத்தை அடையும் உபாதாந-காரணம் மற்றும் படைப்பு எனும் செயல்பாட்டிற்கு காரணமாக உள்ளது. எனவே புருஷனில்லாத கர்த்தாவோ அல்லது போக்தாவோ இல்லை, ஆனால் புருஷன் கர்த்தா மற்றும் போக்தாவிலிருந்து சுயாதீனமாக இருப்பவர். இந்தப் பிரக்ருதி தனது இருப்புக்கு புருஷனைச் சார்ந்துள்ளது. புருஷனும் பிரக்ருதியும் சேர்ந்து சம்சாரத்திற்கு காரணமாக அமைகின்றன.
=> சம்சாரம்:
பிரக்ருதியானது உடல், புலன்கள், உலகம், மற்றும் இன்ப-துன்பம் போன்ற மனதின் பல்வேறு தன்மைகளாக மாறவில்லையெனில், மேலும் அவற்றையெல்லாம் அனுபவிக்கும் உணர்வு இல்லையெனில் உண்மையில் சம்சாரம் என்பதே இல்லை என இங்கு சங்கரர் கூறுகிறார். அதனால்தான் ஆழ்ந்த உறக்கத்தில் சம்சார அனுபவம் இல்லை. பிரக்ருதி இந்த மாற்றங்களுக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால், இந்த உலகமோ அல்லது அதை தெரிவிக்கும் இந்த புலன்களோ இருந்திருக்காது. அதுபோலவே சைத்தன்ய சொரூபமான புருஷனும் தேவை, இல்லையேல் எதுவும் சாத்தியமில்லை. இப்படிப்பட்ட புருஷனுக்கும் பிரக்ருதிக்குமான தொடர்பு என்பது என்னவாக இருக்கமுடியும்? புருஷனின் இயல்பு, அஸங்கத்வம், எதனோடும் இணைக்கப்படாதது; ஆனால் ஜடமான பிரக்ருதியோ புருஷனைச் சார்ந்திருப்பது. இவையிரண்டிற்குமான தொடர்பு என்ன மாதிரியானதாக இருக்கமுடியும்?
இது அறியாமையினால்(அவித்யா) ஏற்பட்ட இணைப்பு என்றும் ஆகவே இது மித்யா என்றும் சங்கரர் விளக்கமளிக்கிறார். இந்த முழு விஷயமும் ஏற்றிவைக்கப்பட்ட ஒன்று ஆகும். அறியாமையின் காரணமாக மனதிற்கு ஏற்படும் அனுபவங்களெல்லாம் நமக்கு ஏற்படுவதாக தோன்றுகிறது, ஆகவே அங்கு சம்சாரம் உண்டாகிறது. உண்மையில் பிரக்ருதிதான் பிரக்ருதியோடு விவகாரம் செய்து கொண்டுள்ளது — குணா குணேஷு வர்தந்தே. நாம் ஏற்கனவே பார்த்ததைப்போல பிரக்ருதியான இந்த ஜடமான மனம் உணர்வை அடைந்து, ஜடமான இந்த உலக விஷயங்களோடு விவகாரம் செய்து கொண்டுள்ளது. சாப்பாடு சாப்பாட்டை சாப்பிடுகிறது.
சாஸ்திர ஞானம் அடையாதவரை, இந்த மனதையும் அதனுடன் சம்பந்தப்பட்ட இந்த உடலையும்தான் ‘நான்’ என பொருள்படுத்தி, உடலுக்கும் மனதுக்கும் நடப்பவைகளை நமக்கு நடப்பதாக ஏற்றிவைத்து வருகிறோம். ‘நான்’ எனும் புத்தியானது கர்த்தா, போக்தா என பிரக்ருதியில் அமர்ந்துள்ளது. அதை புருஷன் என்பதில் போட வேண்டும். மித்யாவான சம்சாரம் நீங்க இது மட்டுமே வழி. மோக்ஷ சொரூபமான புருஷனை தனது சொரூபமாக புரிந்து கொள்வது மட்டுமே ஒரே வழி.
இனி, அடுத்த சுலோகத்திற்கான அறிமுகத்திற்காகவென சங்கரர், ‘சம்சாரம் என்றழைக்கப்படுகிற இது என்ன?’ என்கிற கேள்வியைக் கேட்கிறார். பின்னர், ‘இன்ப-துன்பத்தின் கடுமையான அனுபவங்களே சம்சாரம்’ என அதற்கு வரையறைத் தருகிறார். இந்த சம்சாரத்தை அனுபவிப்பவன் சம்சாரி என்றழைக்கப்படுகிறான். எனில், புருஷன் சம்சாரியாக ஆவதாக ஆகிறது. எதனுடனும் தொடர்பில்லாத சைத்தன்யமான புருஷன் சம்சாரியாக ஆகிறாரா? என்ற கேள்விக்கு விடையாக அடுத்த சுலோகம் வருகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பிரம்ம ஞானப் பிராப்தி, பரமானந்த போகம் முதலியவைகளெல்லாம் மாயையால்தான் நமக்குக் கிடைக்கின்றன. இல்லாவிட்டால் இவையெல்லாம் நமக்கு லபிக்குமெனக் கனவிலும் கண்டவர் எவர்? மாயையிலிருந்துதான் துவைதமும் மற்ற வியவஹாரமும் உண்டாகின்றன. மாயைக்கு அப்பால் போகம் போகி என்பவை கிடையா.
---------------------------------------------------------------------------------------------
||13.21|| பிறவிக்கு வித்து:
पुरुष: प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान्गुणान् ।
कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ।। २१ ।।
புருஷ: ப்ரக்ருதிஸ்தோ2 ஹி பு4ங்க்தே ப்ரக்ருதிஜாந்கு3ணாந் ।
காரணம் கு3ணஸங்கோ3ऽஸ்ய ஸத3ஸத்3யோநிஜந்மஸு ।। 21 ।।
पुरुष: புருஷ: புருஷன் प्रकृतिस्थ: हि ப்ரக்ருதிஸ்த2: ஹி பிரக்ருதியில் இருப்பதனாலேயே प्रकृतिजान् ப்ரக்ருதிஜாந் பிரக்ருதியில் பிறந்த गुणान् கு3ணாந் குணங்களை
भुङ्क्ते பு4ங்க்தே அனுபவிக்கிறான் अस्य அஸ்ய அவனுக்கு
सत् असत योनि जन्मसु ஸத் அஸத் யோநி ஜந்மஸு நலம் கேடு உடைய யோனிகளில் பிறப்பதற்கு गुणसङ्ग: கு3ணஸங்க3: குணப்பற்றுதலே कारणं காரணம் காரணமாகிறது.
புருஷன் பிரக்ருதியில் நின்று பிரக்ருதியில் தோன்றிய குணங்களைத் துய்க்கிறான். அவனுக்கு நலம், கேடு உடைய பிறவிகள் ஆதற்குக் காரணம் குணப்பற்றே.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.
விளக்கம்:
யார் சம்சாரி? எது சம்சார காரணம் என்பதற்கு விடையாக இந்த சுலோகம் வருகிறது. சம் + சாரி = சம்சாரி; சம் - நன்கு, சாரி -> சரதி -> பிறந்து பிறந்து இறத்தல். நன்கு பிறந்து பிறந்து இறப்பவன் சம்சாரி.
=> யார் சம்சாரி?
உண்மையில் யார் சம்சாரி என நேரடியாகக் கூறவே முடியாது. விசாரம் செய்யாதவரை இருப்பதுபோலத் தோன்றிக் கொண்டிருக்கும் சம்சாரி, பகுப்பாய்வின் இறுதியில் இல்லாதவனாக ஆகிறான். உதாரணமாக, ஒரு மலரை எடுத்துக் கொண்டு, இதில் எது மலர் என அதனுடைய இதழ்கள், மகரந்தம், காம்பு, இலை என பிரித்துப் பார்த்துக் கொண்டே வரும்போது அங்கு மலர் என்ற ஒன்று எஞ்சியிருப்பதில்லை.
பிரக்ருதி தன் இருத்தலுக்கு புருஷனையே முழுதும் சார்ந்திருப்பதால், சம்சாரி எனும் தன்மையும் புருஷனிடமே ஏற்றி வைக்கப்படுகிறது என்கிறார் கிருஷ்ணர். புருஷன்தான் மனதிற்குள் அறிவு சொரூபமாக இயங்கி சம்சாரியாக தெரிந்து கொண்டிருக்கிறார். இதனால் புருஷன் சம்சாரியாக ஆவதைப் போலாகிறார். இதைவைத்து ஒரு மறைமுக உண்மையைப் புரிந்துகொள்ளலாம். புருஷன் சம்சாரி ஆகிறார் எனில் என் ரூபமாக துயரத்தில் சிக்கிக் கொண்டிருப்பது புருஷனான அந்த ஈஷ்வரனே. பின்னர் சரியான அறிவை அடைந்து அவர் மோக்ஷத்தை அடைகிறார்; தனது உண்மை சொரூபத்துடன் ஐக்கியமாகிறார்; ஈஷ்வரனாகிறார்.
இனியொரு கோணத்தில் ஆராயும்போது, உண்மையில் யார் சம்சாரி எனில், சிதாபாசத்துடன் கூடிய மனம்தான் சம்சாரி. அந்த மனதில் ‘நான்’ என்கிற புத்தி உள்ளவரை ‘நான் சம்சாரி ஆகிறேன்’. அதிலிருந்து ‘நான்’ என்கிற புத்தியை நீக்கிவிட்டால், சம்சாரம் என்பது மனதினுடைய குணமாக மாறி ‘நான் சாக்ஷியாக ஆகிறேன்’. மனதில் நடப்பதை வேடிக்கைப் பார்த்தல் வேண்டும். ‘நான்’ என்பதை புருஷ தத்துவமாகப் புரிந்து, அதை ஆதாரமாகக் கொண்டு மனதை வேடிக்கைப் பார்த்தல் மோக்ஷம் ஆகும்.
=> குணங்களைத் துய்ப்பவர்:
புருஷன் பிரக்ருதியில் இருந்துகொண்டு, பிரக்ருதியிலிருந்து தோன்றிய குணங்களை அனுபவிக்கிறார் — புருஷ: ப்ரக்ருதிஸ்த2: ஹி ப்ரக்ருதிஜாந் கு3ணாந் பு4ங்க்தே, என்கிறார் கிருஷ்ணர். இந்த உடல், புலனுறுப்புகள், மனம் மற்றுமிந்த உலகமாக மாறியுள்ள பிரக்ருதியில் பரமாத்மாவான புருஷன் குடிகொண்டு இருக்கிறார். அதாவது, சூக்ஷம சரீரமான மனதில் தனது பிரதிபிம்பமாக புருஷன் நின்றுகொண்டு, பிரக்ருதியிலிருந்து தோன்றிய குணங்களை அனுபவிக்கிறார். உண்மையில் பிரக்ருதியில் வெளிப்படுவதால் அவர் சம்சாரியாக ஆவதில்லை. பிரக்ருதியை தனது ஆத்மாவின் சொரூபம் என எடுத்துக் கொள்ளும்போது சம்சாரியாக ஒருவன் ஆகிறான். உண்மையில் எதிலும் ஈடுபாடு இல்லாத, எதனுடனும் தொடர்பில்லாத அஸங்கமானவனாக இருந்தபோதிலும், அறியாமையின் காரணமாக மனம்-உடலை ‘நான்’ என எடுத்துக்கொண்டு கர்த்தா மற்றும் போக்தாவாக ஆகிறான். இதனால் பிரக்ருதியானது அவனுக்கு ஆத்மாவாக ஆவதால், பிரக்ருதியிலிருந்து தோன்றிய சுகம்-துக்கம் எனும் பல்வேறு மனநிலைகளை அவன் அனுபவிப்பவனாக ஆகிறான் -பு4ங்க்தே. அவைகளை இது மகிழ்ச்சி, இது துக்கம் என்பதாக அனுபவிப்பவனாக அல்லாமல், ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் வேதனையுடன் இருக்கிறேன்’ என்பதாக அதை அனுபவிக்கிறான். அறியாமையின் விளைவினால் ஏற்பட்ட இந்த தொடர்பின் காரணமாக அந்த சுக-துக்க அனுபவங்களை தானாக எடுத்துக்கொள்கிறான்.
இந்த மோஹத்திற்கு அடிப்படைக் காரணம் அறியாமை (அவித்3யா) ஆகும். ஆனாலும் இந்த ஒரு குறிப்பிட்ட பிறவி எடுப்பதற்கான உடனடிக் காரணமாக இருப்பது எது? இந்த உடல், இந்த பெற்றோர், இந்த சூழ்நிலை என்பதற்கு பொதுவானதான காரணத்தை தவிர குறிப்பிட்டதான சில காரணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டுமே, அது எது? அதையே நாம் ‘கர்மா’ அல்லது கர்மவினை என அழைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட உடல் பிறப்பதற்கான தனித்துவமான காரணங்களின் தொகுப்பை நாம் ‘யோநி’ என்றழைக்கிறோம். தேவர்கள் போன்ற சரீரம்(சத் யோநி) அதிகபட்ச புண்ணியத்தினாலும், மிருக சரீரங்கள்(அசத் யோநி) அதிகபட்ச பாபத்தினாலும் அமைகின்றன. சமபங்கு புண்ணியம் மற்றும் சமபங்கு பாபம் கலவையினால் மனித சரீரம் (ஸத் அஸத் யோநி) கிடைக்கின்றது. இதுபோன்ற பிறப்பிற்கு காரணமாயிருப்பது குணப்பற்றுதலே ஆகும் — அஸ்ய காரணம் கு3ணஸங்க3:.
=> அறியாமையே சம்சார காரணம்:
குணப்பற்றுதல் எதனால் உண்டாகிறது? தன்னை உடலாக நினைப்பதும், அதனால் உண்டாகும் கர்த்ருத்துவமுமே(நான் இதைச் செய்கிறேன் எனும் எண்ணம்) ஒருவனுடைய குணப்பற்றுதலுக்கு காரணம் ஆகும். இவ்விதம் பிரக்ருதியின் குணங்களை ‘நான்’ என எடுத்துகொள்வதால், ‘எனக்கு சுகம் வேண்டும்’ என்கிற ஆசையையும் ‘நான்’ என்றே எடுத்துக் கொள்கிறோம். இதனால் சுகத்தை அடைவதற்கான செயலைச் செய்கிறான். இந்த கர்மங்கள் தர்மத்திற்கு உட்பட்டு இருக்கும்போது புண்ணியத்தையும், தர்மத்திற்கு புறம்பாக இருக்கும்போது பாபத்தையும் உண்டாக்குகின்றன. இந்த புண்ணியமோ அல்லது பாபமோ அதன் பலனை அளிக்க அதற்கொரு உடல் தேவைப்படுகிறது. அவனது புண்ணிய-பாபத்தின் தன்மையைப் பொறுத்து அவனுக்கு மேலான அல்லது கீழான பிறவி உண்டாகிறது, . இவ்விதம் குணத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக (கு3ணஸங்க3:), அவனது சம்சார சக்கரம் சுழல்கிறது. புற விஷயங்களின் சரியான மதிப்பீட்டின் காரணமாக உண்டாகும் வைராக்கியதுடன் ஆத்ம-ஞானத்தை அடைந்து இந்த சக்கரத்திலிருந்து ஒருவன் விடுபட வேண்டும்.
பிரக்ருதியின் குணங்களை புருஷன் மீது ஏற்றிவைத்தல் என்கிற இந்த தவறு, அதாவது இந்த சம்சாரம் என்பது அறியாமையினால் நிகழ்கிறது. இதிலிருந்து சம்சாரம் என்பது ஆத்மாவாகிய புருஷனுக்கு உரியது அல்ல என்பது தெளிவாகிறது. உணர்வுடைய சைத்தன்யமே ஒன்றை அனுபவிக்கமுடியும், போக்தாவாக முடியும் என்பதால் சம்சாரம் என்பது பிரக்ருதியிடமும் இல்லை. சைத்தன்ய-ஆத்மா அஸங்கமாகவும் நிர்குணமாகவும் இருப்பதால் ஆத்மாவும் போக்தா அல்ல. இந்த சம்சாரம் என்பது அறியாமையின் காரணமாக, தன்னை அவைகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால் உண்டாகிறது அவ்வளவே. உண்மையில் அறியாமை மட்டுமே சம்சாரத்தை கொடுப்பதில்லை. ஏனெனில் ஆழ்ந்த உறக்கத்தில் நாம் முழு அறியாமையில் இருக்கிறோம்; ஆனால் அங்கு எந்த துக்க அனுபவமும் இல்லை. ஆகவே தவறான ஒன்றில் வைக்கப்படுகின்ற தவறான அடையாளப்படுத்துதலே துயரத்திற்கு காரணமாக அமைகிறது. ‘நான்’ அல்லாத ஒன்றின் மீது ‘நான்’ என்கிற தவறான ஏற்றிவைத்தல் சம்சாரத்திற்கு காரணமாகிறது. இந்த தவறான அடையாளத்தை தன்னறிவின் துணைக்கொண்டு நீக்கும்போது சம்சாரத்திலிருந்து அவன் விடுதலை அடைகிறான்.
தொடர்ந்து வருகிற ஜனன மரண சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவதற்கான வழி என்ன என்கிற கேள்விக்கு விடையாக அடுத்த சுலோகம் வருகிறது.
---------------------------------------------------------------------------------------------