சனி, 22 பிப்ரவரி, 2025

க்ஷேத்ர க்ஷேத்ரஞ விபாக யோகம் 13.22 - 13.23

||13.22|| விடுதலைக்குரிய சரியான அறிவை போதிக்கிறார்:

उपद्रष्टानुमन्ता भर्ता भोक्ता महेश्वर:

परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुष: पर: ।। २२ ।।

உபத்3ரஷ்டாநுமந்தா 4ர்தா போ4க்தா மஹேச்1வர:  

பரமாத்மேதி சாப்யுக்தோ தே3ஹேऽஸ்மிந்புருஷ: பர: ।। 22 ।।


अस्मिन् देहे  அஸ்மிந் தே3ஹே  இந்த தேகத்தில்    

पर: पुरुष:  பர: புருஷ: மேலான புருஷனாக இருப்பவன்     उपद्रष्टा  உபத்3ரஷ்டா  சாக்ஷி   

अनुमन्ता  அநுமந்தா  அனுமதிப்பவன்    भर्ता   4ர்தா   தாங்குபவன்    

भोक्ता  போ4க்தா  அனுபவிப்பவன்   महेश्वर:  மஹேச்1வரமஹேஷ்வரன்   परमात्मा  பரமாத்மா  பரமாத்மா    इति अपि उक्त:  இதி அபி உக்த:  இப்படியெல்லாம் சொல்லப்படுகிறான்.


இந்த தேகத்திலுள்ள பரம புருஷனானவன் சாக்ஷி, அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேஷ்வரன், பரமாத்மாஇப்படியெல்லாம் சொல்லப்படுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், சுமப்பான், உண்பான், மகேசுவரன் இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.


விளக்கம்:

அறியாமையினால் தன்னைத் தவறாக அடையாளப்படுத்திக் கொள்வதால் சம்சாரம் உண்டாகிறது என சென்ற சுலோகத்தில் பார்த்தோம். எனவே அறியாமை நீங்கி சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவதற்குத் தேவையான சரியான அறிவை இந்த சுலோகத்தில் பகவான் போதிக்கிறார். புருஷனைப் பற்றிய அறிவைக் கொடுக்கிறார்.


=> புருஷன் எத்தகையவர்?

   * சாக்ஷி புருஷனை பகவான்உபத்3ரஷ்டாஎன்கிறார். இதற்கு மூன்று வகையான பொருள்விளக்கத்தை அளிக்கலாம்

   (1) ‘த்3ரஷ்டாஎனில் அருகிலிருந்து காண்போன்; சாக்ஷி. இங்கு, ‘அருகில்எனும் பொருளைக் கொடுக்கின்றஉபஎனும் முன்னொட்டு, அந்த சாக்ஷி மிக அருகிலிருக்கிறான் என்பதைக் குறிக்கிறது. இதற்கு சங்கரர் வேதச் சடங்கு ஒன்றை உதாரணமாகத் தருகிறார். ஒரு சடங்கில் குறிப்பிட்ட சில செயல்களை செய்யும் எஜமானன் இருப்பார்; சடங்கை செய்யும் அர்ச்சகர்கள்(ரித்விக்) இருப்பார்கள்; மேலும் அந்த சடங்கை எவ்விதம் செய்யவேண்டும் என்பதை முழுதும் அறிந்த ஆனால் சடங்கில் எந்த செயலையும் செய்யாமல் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கின்ற ஒருவர் இருப்பார். அதேபோல, எந்த செயலிலும் ஈடுபடாமல், தன்னுடைய சானித்யத்தில் உடல், புலன்கள், மனம் மற்றும் புத்தி செயல்படுவதைப் பார்த்துக் கொண்டு சாக்ஷியாக புருஷன் இருக்கிறார். உதா3ஸீநத்வே ஸதி த்3ஷ்ட்1ருத்வம் - எந்த செயலும் செய்யாமல் பார்த்தலை மட்டும் செய்பவர். இதே கருத்து, ச்1ரோத்ரஸ்ய ச்1ரோத்ரம், காதுக்கு காதாக இருப்பவர் என ஒரு உபநிஷத்தில் கூறப்படுகிறது. அதாவது எந்தச் செயலிலும் ஈடுபடாது ஆனால் அனைத்து புலனுறுப்புக்கள் மற்றும் மனம் ஆகியவற்றின் பின்னனியில் இருப்பதாக அது இருக்கிறது. அதுவே ஆத்மா. ‘உபஎனும் முன்னொட்டு இங்கு முக்கியமானது ஏனெனில் புருஷன் ஒருபோதும் விலகியில்லை என்பதை அது குறிக்கிறது.  

   (2) ‘உபத்3ரஷ்டாஎனில் நெருக்கமானர் என்கிற பொருளில் மிகவும் உட்புறமாக இருந்து பார்க்கின்ற பார்வையாளன் என்கிற அர்த்தத்தைக் கொடுக்கிறது. தொடுவுணர்வினால் ஊடுருவப்பட்டு குளிர் மற்றும் வெப்பமானது கண்டறியப்படுவதால் இந்த உடல் ஒரு பார்வையாளன் ஆகிறது. அதேபோல, புலனுறுப்பாகிய கண், காது போன்றவைகள் விஷயங்களின் பார்வையாளர்கள். பின்னர் மனம் ஒரு பார்வையாளன், ஏனெனில் அது இல்லாமல் புலனுறுப்புகள் எதுவும் செயல்பட முடியாது. மனம் பார்க்கின்றபோதே புலனுறுப்புகள் அதனதன் செயலைச் செய்கின்றன. ஆனால் இந்த மனதையும் பார்ப்பவனே உண்மையான பார்வையாளன். ஏனெனில் அவனால்தான் இந்த மனம் மற்றும் புலன்கள் அனைத்தையும் பார்க்கின்றன. இவ்விதம் இறுதிப் பார்வையாளனாக, அதாவது யாருக்கு அப்பால் இனியொரு பார்ப்பவன் இல்லையோ அப்படிப்பட்டவனாக இருப்பவன்உபத்3ரஷ்டாஎன்றழைக்கபடுகிறான்

   (3) அறிபவன்(ஞாதா), அறிவு(ஞாந) மற்றும் அறியப்படும் பொருள்(ஞேய) இவைகளனைத்தையும் ஒளிரச் செய்பவர். எப்போதும் அருகிலிருந்து கொண்டு, அதே நேரத்தில் எல்லாவற்றையும் பார்க்கின்ற பார்வையாளன் ஆகையால்உபத்3ரஷ்டாஎனப்படுகிறார்.


   * அனுமதிப்பவன் — ‘அநுமந்தாஎனும் சொல்லிற்கும் மூன்றுவித பொருள்விளக்கம் சாத்தியப்படுகிறது:

   (1) ‘அநுமந்தாஎனில் அனைத்தையும் ஆமோதிப்பவர், சம்மதம் கொடுப்பவர், அனுமதிப்பவர் என்று பொருள். மனம் எதைச் செய்தபோதிலும் ஆத்மா அனுமதி கொடுக்கிறது. நிவாரயதிஎதையும் தடை செய்வதில்லை; தூண்டிவிடுவதுமில்லை. புருஷன் இயல்பிலேயே பூரண சொரூபமானவர் ஆகையால் மனதில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டாலும், பூரணத்துவம் குறையாது எப்போதும் நிறைவாகவும், ஆனந்தமாகவும், ஆசுவாசமாகவும் இருப்பவர். அனைத்தையும் அனுமதித்தபோதிலும் எள்ளளவும் மாற்றத்தை அடையாதவர்.

   (2) ஆத்மாவாகிய புருஷன் எந்தச் செயலையும் செய்யவில்லை எனினும், மனம், புலன்கள் மற்றும் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவரே ஆதாரமாக இருப்பதன்மூலம் துணைபுரிகிறார். ஆத்மா இல்லாமல் அவைகள் எதுவும் செயலில் இருக்க முடியாது என்பதால்அநுமந்தா’.

   (3) உடல், மனம் மற்றும் புலன்களின் அனைத்து செயல்பாடுகளையும் ஒளிரச் செய்வதன்மூலம் அனைத்தையும் அனுமதிப்பவராக ஆகிறார் என்கிறார் சங்கரர். எவ்வித செயலுக்கும் எதிராக நிற்காதவர் என்பதாலேயே புருஷன் பெரிய ஆதரவாளராக இருக்கிறார். அமைதியான மனதை எவ்விதம் ஆத்மா பிரகாசிக்கிறதோ அதுபோலவேதான் அமைதியற்ற மனதையும் ஒளிரச் செய்கிறது. அது எந்தவொரு நிபந்தனைக்கும் உட்படாமல் சூரியனைப் போல அனைத்தையும் ஒளிரச் செய்கிறது


   * தாங்குபவன் — ‘4ர்தாஎனில் தாங்குபவன், நிலைநிறுத்துபவன், காப்பவன் என்பது பொருள். உடல், மனம், புலன்களின் இருப்புக்கும் மற்றும் உணர்வுக்கும் காரணமாக ஆத்மாவே உள்ளது. ஆத்மாவின் காரணமாக கண்கள் பார்வைக்கான கருவியாகவும், காதுகள் கேட்கும் கருவியாகவும் செயல்படுகின்றன. இந்த சைத்தன்ய-ஆத்மாவான புருஷன் இந்த உடலுக்கு மட்டுமல்லாது, முழு பிரக்ருதிக்கும் இருப்பைக் கொடுப்பதன்மூலம் அவைகளை தாங்கிக் கொண்டுள்ளது. சினிமாத் திரை சினிமாப்படத்தைத் தாங்குவது போன்று இந்த பரமாத்மாவானவர் பிரக்ருதியைத் தாங்குகிறார்.  


   * அனுபவிப்பவன் — ‘போ4க்தாஎனில் அனைத்தையும் அனுபவித்து மகிழ்பவர் என்பது பொருள். இங்கு அஹங்காரம் என்பது போக்தா எனில், அதற்கு இருப்பைத் தந்து தாங்குவதனால் புருஷன் போக்தா ஆகிறார். இச்சொல்லின் இனியொரு பொருள், எல்லாவற்றையும் விழுங்குபவன், ஸம்ஹரண-கர்தா. புருஷனைத் தவிர அனைத்தும் ஆழ்ந்த உறக்கத்தில் ஒடுக்கத்தை அடைகின்றன. மேலும் இந்த முழு சிருஷ்டியின் லயத்தின்போதும், அனைத்தும் புருஷனுக்குள் ஒடுக்கத்தை அடைகின்றன. புருஷனில் வேரூன்றியுள்ள பிரக்ருதி-உபாதியில், அனைத்து நாம-ரூபங்களும் ஒடுங்கிவிடுகின்றன. இதன் காரணமாகவும் அனைத்தையும் விழுங்குபவன் எனும் அர்த்தத்தில் புருஷன்போ4க்தாஎனப்படுகிறார்


   * மஹேஷ்வரன் — ‘மஹேச்1வரஎனில் அனைத்தையும் ஆள்பவர். மஹாந் அசெள ஈஷ்வர:எல்லையற்றவராகவும் ஈஷ்வரனாகவும் இருப்பவர். யாருடைய முன்னிலையில் அனைத்துவிதமான செயல்களும் நடைபெறுகின்றனவோ அவர் ஈஷ்வரன். மேலும் ஈஷ்வரன் படைப்பவராகவும் இருப்பவர். இதிலிருந்து புருஷன், பிரக்ருதியுடன் சேர்ந்து காப்பவராகவும்(4ர்தா), அழிப்பவராகவும்(ஸம்ஹரண-கர்தா), அனுபவிப்பவராகவும்(போ4க்தா) இருப்பதோடு மட்டுமல்லாமல் நிமித்த-காரணமாக இருந்து இந்த முழு சிருஷ்டியின் படைப்பாளியாகவும் ஆகிறார்

சுருதியில் இந்த புருஷன் பரமாத்மா என்றழைக்கப்படுகிறார்பரமாத்மா இதி அபி உக்த:, என்கிறார் கிருஷ்ணர். எல்லையற்றவராகவும் தானாக விளங்கிக் கொண்டிருப்பவராகவும் இருப்பவர் பரமாத்மா எனப்படுகிறார். ‘பரமாத்மாவை அறிந்து அவன் பரமாத்மாவாகிறான்என கைவல்யோபநிஷத் கூறுகிறது. அறிவதன்மூலம் அதுவாக ஆதல் என்பது ஏற்கனவே அடைந்த ஒன்றாக இருக்கும்போது மட்டுமே சாத்தியப்படுகிறது. இந்த உடலில் அந்த மேலான புருஷன் இருக்கிறார்அஸ்மிந் தே3ஹே பர: புருஷ:, என்கிறார் கிருஷ்ணர். ‘பரஎனில் எல்லையற்ற, மேலான, வரையறைக்குட்படாத, எதற்கும் கட்டுப்படாத என்பது பொருள். இங்ஙனம் இந்த சிருஷ்டியை படைத்து, காத்து அழிக்கின்ற பரமாத்மாவான அந்த எல்லையற்ற புருஷன், ‘நான்என்பதன் பொருளாக இந்த தேகத்தினுள்ளேயே வீற்றிருக்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

புருஷ பிரக்ருதியின் மூலமாகவே உலகம் உண்டாயிற்று. அது எப்படியென்று தெரியுமா? வீட்டு எஜமானன் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செலுத்துகிறான். வீட்டு எஜமானி இப்பக்கமும் அப்பக்கமும் ஓடி அலைந்து அலுவல்களைக் கவனிக்கிறாள். சுறுசுறுப்பாக வேலைபார்த்து, வீட்டுக்கு வருபவர்களையும் வரவேற்றுக் கவனித்துக் கொள்கிறாள். அடிக்கடி தன் கணவனிடம் சென்று அலுவல்கள் எவ்வாறு நடந்து வருகின்றன என்பதை அறிவிப்பதோடு ஆலோசனைகளையும் கேட்டு வருகிறாள். தலைவனும் குறிப்பறிந்து தன் சம்மதத்தைத் தலையசைப்பின் மூலமாகத் தெரிவிக்கிறான். பிரக்ருதி, புருஷன் இவர்களது காரியமும் இப்படித் தான் நடைபெற்று வருகிறது.

---------------------------------------------------------------------------------------------

||13.23|| ஞான பலன்:

एवं वेत्ति पुरुषं प्रकृतिं गुणै: सह

सर्वथा वर्तमानोऽपि भूयोऽभिजायते ।। २३ ।। 

ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் கு3ணை: ஸஹ

ஸர்வதா2 வர்தமாநோऽபி பூ4யோऽபி4ஜாயதே ।। 23 ।।


:  :  யார்    एवं  ஏவம்  இவ்விதம்    पुरुषं  புருஷம்  புருஷனையும்    

गुणै: सह  கு3ணை: ஸஹ  குணங்களுடன் கூடிய     प्रकृतिं  ப்ரக்ருதிம்   பிரக்ருதியையும்    

वेत्ति  வேத்தி  அறிகிறானோ    :  :  அவன்    सर्वथा  ஸர்வதா2  எவ்வாறு    

वर्तमान: अपि  வர்தமாந: அபி  வாழ்பவனாயிருப்பினும்    भूय:  பூ4:  மீண்டும்    

अभिजायते  அபி4ஜாயதே  பிறப்பதில்லை.


இங்ஙனம் புருஷனையும் குணங்களுடன் கூடிய பிரக்ருதியையும் அறிபவன் எவ்வாறு வாழ்பவனாயினும் அவன் மறுபடியும் பிறப்பதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.


விளக்கம்:

ஞானப் பலனை பகவான் இந்த சுலோகத்தில் எடுத்துரைக்கிறார். புருஷனையும், குணங்களுடன் கூடியதான இந்த பிரக்ருதியையும் இங்கு சொல்லப்பட்ட விதத்தில் அறிபவன் மீண்டும் பிறப்பதில்லை என்கிறார் பகவான். இங்கு விளக்கியபடி எனில்,

  * புருஷன் - (1) ஸத், சித் சொரூபமானவர் (2) அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர்  (3) எல்லையற்றவர்  (4) ‘நான்என்பதன் பொருளாக இருக்கும் பரமாத்மா

  * பிரக்ருதி - (1) பரமாத்மாவைச் சார்ந்திருப்பது  (2) ஏற்றிவைக்கப்பட்டது  (3) முக்குணமுடையது. குணங்களுடன் கூடியதாகையால் ஜென்ம, மரணம் பிரக்ருதியைச் சார்ந்தது.


=> மறுபிறவியில்லை:

கண்ணாடியின் எதிரே தோன்றும் வடிவங்களின் பிம்பத்தை கண்ணாடி அப்படியே காட்டுகிறது. ஆனால் கண்ணாடி அந்த வடிவங்களினால் நலம் கேடு எதையும் அடைவதில்லை. பிரக்ருதியின் விகாரங்களால் ப்ரம்மமும் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. ப்ரம்மத்தை அறிபவன் ப்ரம்மமாகிறான். புருஷனையும் பிரக்ருதியையும் குறித்த அறிவை அடைந்தவன் எவ்வாறு வாழ்பவனாயினும் அவன் மீண்டும் பிறப்பதில்லைஸர்வதா2 வர்தமாந: அபி பூ4: அபி4ஜாயதே, என்கிறார் கிருஷ்ணர். அவன் ஒரு அரசனாக இருந்தால், ஜனகரைப் போல தொடர்ந்து ஆட்சி செய்யலாம்; அவன் ஒரு சாதுவாக இருந்தால், இந்த அறிவை பிறருக்கு கற்பிக்கலாம் அல்லது கற்பிக்காமலும் இருக்கலாம். கிரஹஸ்த ஆஷ்ரமத்தில் இருப்பவனாக இருந்தால், அவன் குடும்பத்துடன் இருக்கலாம் அல்லது யாக்ஞவல்கியரைப் போல குடும்ப வாழ்வை விட்டு வெளியேறலாம். இந்த அறிவைப் பெற்ற பிறகு, ஒருவன் எந்த வகையான வாழ்க்கையையும் வாழலாம், ஆனால் அந்த வாழ்க்கையை வாழ்வதில் செய்யப்படும் கர்மங்கள் அவனை தொடுவதில்லை. தன் உடல் வீழ்ந்தவுடன், அவன் வேறொரு ரூபத்தில் பிறப்பதில்லை, ஏனென்றால் தனக்கு உருவம் இல்லை என்பதையும், காலத்திலிருந்து விடுபட்டவன் என்பதையும் அவன் அறிவான்.

ஞானத்திற்கு பிறகும் பிராரப்த கர்மம் நீடிப்பதால், அவனது சூழ்நிலையிலிருந்து அவனுக்கு விடுதலை கிடையாது. ஆனால் அதை பொருள்படுத்தும் மனதிடமிருந்து அவன் விடுதலையடைகிறான். பிராரப்த கர்மத்தால் உடலில் ஏற்படும் இன்ப துன்பங்களில் அவன் கட்டுப்படுவதில்லை. ஜகத் என்பது வெறும் தோற்றம் என்று அவன் அதைப் புறக்கணிப்பதால் அதனால் பாதிப்படைவதில்லை. புருஷன் எந்தச் செயலையும் செய்பவனல்ல என்கிற ஞானத்தினால், ‘நான் செய்கிறேன்எனும் எண்ணம் நீங்கி கர்த்தா இல்லாமல் ஆவதால், அவனது செயல்களுக்கு அதிர்ஷ்ட-பலன்(ஆகாமி கர்ம) உருவாவதில்லை. ஏற்கனவே கர்த்தா நீக்கப்பட்டு விட்டதால், கடந்த காலத்தில் திரட்டப்பட்ட சஞ்சித-கர்மமும் போய்விடுகிறது. அவை கனவில் செய்த செயல்கள் போன்று ஆகிவிடுகின்றன. தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அவைகளுக்கு ஒருவன் பொறுப்பேற்க முடியாது. அதுபோல ஞானத்தினால் நீக்கப்பட்ட இந்த கர்த்தாவை சார்ந்திருக்கின்ற கர்மங்களும்(சஞ்சித, ஆகாமி) நீக்கப்பட்டுவிடுகின்றன. இதனால் அவைகள் எந்தப் பிறவியையும் உண்டாக்க இயலாதவைகளாக ஆகின்றன

பிராரப்தம் மட்டும் நீடித்து, இவ்வுடல் இருக்கும்வரை அதில் வாழ்க்கையானது பிராரப்தத்துக்கு ஏற்றவாறு விதவிதமாய் நடைபெறுகிறது. அதற்கிடையில் ஞானி ஜீவன்முக்தனாய் வாழ்கிறான். உடல் வீழ்ந்த பிறகு அவன் இன்னொரு பிறவி எடுப்பதில்லை. தீயில் வெந்த கயிறு கட்டுவதற்கு உதவாது. அதுபோல ஞானத்தீயில் வெந்த சஞ்சித ஆகாமிய கர்மம் இன்னொரு பிறவியை உண்டுபண்ணுவதில்லை.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சூளையில் வேகாத மண்பாண்டம் உடைந்தால் அம்மண்ணை வேறு புதிய பாண்டம் உண்டாக்கக் குயவன் உபயோகிப்பான். ஆனால் சூளையில் வெந்த மண்பாண்டம் உடைந்தாலோ அதன் துண்டுகளை அப்பால் அவன் உபயோகிக்க முடியாது. அதுபோல ஒருவன் அக்ஞானத்துடன் மரணமடைந்தால் மறுஜன்மம் அடைவான். ஆனால் உண்மை ஞானமாகிய அக்கினியால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறுஜன்மம் கிடையாது.

---------------------------------------------------------------------------------------------