செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

க்ஷேத்ர க்ஷேத்ரஞ விபாக யோகம் 13.18 - 13.19

||13.18|| மேற்சொல்லப்பட்ட மூன்று தத்துவங்களின் முடிவுரை:

इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासत:

मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ।। १८ ।।

இதி க்ஷேத்ரம் ததா2 ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத:  

மத்34க்த ஏதத்3விஜ்ஞாய மத்3பா4வாயோபபத்3யதே ।। 18 ।।


इति  இதி  இவ்வாறு     क्षेत्रं  க்ஷேத்ரம்  க்ஷேத்திரமும்       तथा  ததா2  அவ்வாறே    

ज्ञानं  ஜ்ஞாநம்  ஞானமும்      ज्ञेयं   ஜ்ஞேயம்   அறியப்பட வேண்டிய ப்ரம்ம தத்துவமும்    

समासत:  ஸமாஸத:  சுருக்கமாக     उक्तं  உக்தம்  உரைக்கப்பட்டுள்ளன      

मद्भक्त:  மத்34க்த:  என் பக்தன்     एतत्  ஏதத்  இதை   विज्ञाय   விஜ்ஞாய  அறிந்து     

मद्भावाय  மத்3பா4வாய  என் தன்மையை அடைய     उपपद्यते  உபபத்3யதே  தகுந்தவனாகிறான்.


க்ஷேத்திரமும் ஞானமும் அறியப்பட வேண்டிய ஞேயமும் இங்ஙனம் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. இதை அறியும் என் பக்தன் என்னையடையத் தகுந்தவனாகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இங்ஙனம் க்ஷேத்திரம், ஞானம், ஞேயன் என்பனவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.


விளக்கம்:

இதுவரை விளக்கப்பட்டதை பகவான் இந்த சுலோகத்தில் முடிவுரை செய்கிறார். பின்வரும் விஷயங்கள் இங்கே சுருக்கமாகச் சொல்லப்பட்டதாகக் கூறுகிறார்ஸமாஸத:. அவைகள்:

    (1) க்ஷேத்ரம் - ஐம்பூதங்கள், அஹங்காரம், புத்தி மற்றும் புத்திக்கு காரணமாய் தோன்றா நிலையில் இருக்கின்ற மூலப்பிரக்ருதி என்றழைக்கப்படும் அவ்யக்தம் ஆகியவற்றில் ஆரம்பித்து இந்த முழு சிருஷ்டியும் க்ஷேத்திரம் எனக் கூறப்பட்டது

    (2) ஞாநம் - தற்பெருமையின்மை, தருக்கின்மை உள்ளிட்ட ஞானத்தை அடைவதற்குத் தேவையான அனைத்து நற்பண்புகள் இங்கு ஞானம் என்றே கூறப்பட்டது.

    (3) ஞேயம் - இருக்கின்றது அல்லது இல்லை எனக் கூறவொண்ணாத, ஆதியற்ற மற்றும் மரணமின்மையைத் தருகிற அந்த பரம் ப்ரம்மம், அறியப்பட வேண்டியது, ஞேயம் எனக் கூறப்பட்டது

ஞேயமே க்ஷேத்ரஞன் என பகவான் ஏற்கனவே நிறுவி விட்டதால் இங்கு க்ஷேத்ரஞனை அவர் தனியாக குறிப்பிடவில்லை. முழு வேதத்தின் மற்றும் கீதையின் பொருளை பகவான் இந்த சுலோகத்தில் சுருக்கமாகச் சொல்கிறார் என சங்கரர் தனது பாஷ்யத்தில் கூறுகிறார்


=> எனது பக்தன்:

ஞேயம்-ப்ரம்மத்தினுடைய இத்தகைய தரிசனத்திற்கு யார் தகுதி வாய்ந்தவர்? மத்34க்த, எனது பக்தன் என்கிறார் பகவான். அனைத்துமான அந்த பரமேஷ்வரனிடம் பக்தியும் அர்ப்பணிப்புணர்வுடனும் கூடியவன், ‘மத்34க்தஎனப்படுகிறான். இந்த ஞானத்தை அடைவதற்காகவென தனது முழு மனதையும் புலன்களையும் அர்ப்பணித்தவனைஎனது பக்தன்என்கிறார் பகவான்.  

அனைத்தையும் அடைய விரும்பும் ஒருவன், அதாவது அனைத்துமாய் இருக்கின்ற ஈஷ்வரனை அடைய விரும்புபவன், முதலில் அனைத்தையும் விட்டுக் கொடுக்கவேண்டும். இங்கு விட்டுக் கொடுத்தல் என்பது உண்மையில் ஒன்றிலிருந்து வளர்ந்து வெளிவருதலைக் குறிக்கிறது. தனது வளர்ச்சியின் காரணமாக பலூன்களையும் கோலிக் குண்டுகளையும் விட்டுக் கொடுத்து சிறுவன் ஒருவன் இளைஞனாக வெளிவருகிறான். இதில் அவனுக்கு எந்த இழப்பின் வலியும் இல்லை. அதைப் போலவே சாதகன் ஒருவன் ஸத்ய-மித்யா ஞானத்தின் மூலம் மித்யாவான அனைத்தையும் விட்டுக் கொடுத்து ஸத்ய-வஸ்துவை அடைகிறான் என்பதால் இங்கு எந்தவித இழப்பின் உணர்வும் இல்லை. இவ்விதம் மெய்ப்பொருளை பற்றிய ஞானத்தை அடையும் நோக்கில் அனைத்தையும் துறக்கத் தயாராக இருக்கின்றவன்மத்34க்தஎனப்படுகிறான்.

=> என் மயமாகிறான்

அந்த பக்தன் எதைக் கண்டாலும், எதைக் கேட்டாலும், எதைத் தொட்டாலும் என அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணமாகவே செய்கிறான். அனைத்தும் பகவான்தான் என்கிற இந்த போற்றுதலால் அவனது மனம் நிரம்பி வழிகிறது. இப்படிப்பட்டவன், இதைத் தெளிவாக அறிந்து, ஏதத் விஜ்ஞாய, அதாவது முந்தைய சுலோகங்களில் சொல்லப்பட்ட இந்த ஞேயம் ப்ரம்மத்தை அறிந்து, என்னை அடையத் தகுந்தவனாகிறான்மத்3பா4வாய உபபத்3யதே, என்கிறார். ‘மத்3பா4வாயஎனில் என் சொரூபமாகவே, எனது தன்மையாகவே ஆகின்றான் என்பதைக் குறிக்கிறது. அதாவது, பரமாத்மாவாக ஈஷ்வரனுடனான தனது ஐக்கியத்தை அங்கீகரித்தலைக் குறிக்கிறது. எவ்விதம் பத்தாவது மனிதனானவன்நான்தான் அந்த பத்தாவது மனிதன்எனத் தன்னை அறிந்ததன் மூலம் பத்தாவது மனிதனாக ஆனானோ, அவ்விதம் ஈஷ்வரனின் பக்தனானவன் ஈஷ்வரனின் தன்மையை அடைகிறான்

மனிதன் எதனிடத்து தன் முழுமனதைச் செலுத்துகிறானோ அதை அறிய வல்லவனாகிறான். ஈஷ்வரனை உபாசிக்கிறவன் ஈஷ்வரனை அறிகிறான். இத்தனையுமாய் விளங்குவதும் ஈஷ்வரனே என்ற ஞானம் வந்த பிறகு எப்போதும் அவன் ஈசனுடைய சான்னித்தியத்திலேயே இருந்து ஈசனை அடையத் தகுந்தவனாகிறான்.  

இனி, ஏழாவது அத்தியாயத்தில் விவாதிக்கப்பட்ட பிரக்ருதியின் இரண்டு வகைகளான பரா மற்றும் அபரா பிரக்ருதியை அடுத்த சுலோகத்துடன் இணைக்கிறார் சங்கரர். இவைகளிரண்டுமே முழு படைப்பிற்கும் காரணம் என்பதை அங்கு கண்டோம். இந்த அத்தியாயத்தில் க்ஷேத்ரஞ-ஆத்மா என்றழைக்கப்பட்ட ப்ரம்மமே அந்த பரா-பிரக்ருதியாகவும், மற்றும் க்ஷேத்திரம் என்பது அந்த அபரா-பிரக்ருதியாகவும் இருக்கிறது

அடுத்த சுலோகத்தில் பகவான் க்ஷேத்திரமான பிரக்ருதியையும் க்ஷேத்ரஞான புருஷ தத்துவத்தையும் விளக்குகிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஈஷ்வரனைக் கண்டவனே ஞானி. அவன் அப்போது குழந்தையின் சுபாவமுடையவனாகின்றான். குழந்தைக்குத் தனி வியக்தித்வம் ஒன்று இருக்கிறதென்றாலும் அது வாஸ்தவமானதல்ல; வெளித்தோற்றம் மட்டுமே. குழந்தையின் இயல்பு வயது வந்தவனுடையதைப் போன்றதன்று.

---------------------------------------------------------------------------------------------

||13.19|| பிரக்ருதியும் புருஷனும் ஆதியற்றவைகள்:

प्रकृतिं पुरुषं चैव विद्ध्यनादी उभावपि  

विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसंभवान् ।। १९ ।।

ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்3த்4யநாதீ3 உபா4வபி

விகாராந்ச்1 கு3ணாந்ச்1சைவ வித்3தி4 ப்ரக்ருதிஸம்ப4வாந் ।। 19 ।।


प्रकृतिं  ப்ரக்ருதிம்  பிரக்ருதியையும்     पुरुषं एव  புருஷம் ஏவ  புருஷனையும்    

उभौ अपि  உபெள அபி  இரண்டையுமே   अनादी  அநாதீ3   ஆதியில்லாதவைகளென்று     

विद्धि   வித்3தி4  அறிக     विकारान्   விகாராந்   பல்வேறு தோற்றங்களும்     

गुणान् एव   கு3ணாந் ஏவ   குணங்களும்      

प्रकृति संभवान्  ப்ரக்ருதி ஸம்ப4வாந்  பிரக்ருதியில் பிறந்தவைகள் என    विद्धि   வித்3தி4  அறிக.


பிரக்ருதி புருஷன் ஆகிய இரண்டுமே ஆதியில்லாதவைகளென்று அறிக. வேறுபாடுகளும் குணங்களும் பிரக்ருதியில் பிறந்தவைகள் என்றுணர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே பிறப்பன என்றுணர்.


விளக்கம்:

பிரக்ருதி மற்றும் புருஷன் என்பதன் விளக்கத்தை பகவான் இந்த சுலோகத்தில் அளிக்கிறார். ‘ப்ரக்ருதிஎன்பதற்கு குணம், சுபாவம், தன்மை உள்ளிட்ட பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. கபில முனிவரின் சாங்க்ய மதத்தில் மாயையைப்ரக்ருதிஎன்றழைக்கின்றனர். கால தேச வர்த்தமானத்தில் கட்டுப்பட்டதாகத் தென்படும்போது அது பிரக்ருதி என்றும், மாயை என்றும், இயற்கை என்றும் அழைக்கப்படுகிறது. புத்தி முதல் ஜடப்பொருள் வரை வெவ்வேறு வடிவெடுக்கும் தன்மை பிரக்ருதியினிடம் உண்டு. முக்குணங்களாய் பரிணமிப்பதும் அதுவே.

ப்ரகர்ஷேந க்ருதி யோக்3யத்வாத் ப்ரக்ருதி:சிருஷ்டிக்கான முழு யோக்கியத்தை உடையதாக இருப்பது, படைப்பிற்கென தன்னை முழுமையாகக் கொடுப்பது, பிரக்ருதி எனப்படுகிறது. உதாரணமாக, களிமண்ணானது மட்பாண்டங்களுக்கான பிரக்ருதி எனச் சொல்லிவிட முடியாது. அதனை ஒரு குறிப்பிட்ட திறன் கொண்டுள்ள ஒரு காரணம் என்று மட்டுமே கூறலாம். ஒரு பானைக்கு அது பொருள்காரணமாக இருக்கமுடியும் என்றாலும், அதனால் ஒரு கண்ணாடிக்கு காரணமாக இருக்கமுடியாது. ஆனால், பிரக்ருதி அனைத்தையும் உருவாக்கும் ஆற்றல் கொண்டது; தனியாக இல்லை என்றாலும் இந்த படைப்பிற்கு இருப்பை(ஸத்) கொடுக்கின்ற புருஷனுடன் சேர்ந்து பிரக்ருதியானது இப்படிப்பட்ட காரணமாக விளங்கிக் கொண்டுள்ளது. பிரக்ருதியும் புருஷனும் ஈஷ்வரன் என்கிற ஒரு பெயரில் இருக்கின்ற இரு காரணங்களாக உள்ளன. ஆனால் காரணம் என்கிற நிலையில் இரண்டுமே இருந்தாலும், புருஷ தத்துவமே பிரக்ருதியின் ஆதாரமாக உள்ளது.

புருஷ தத்துவத்தை பரம் ப்ரம்மம் என்றும், க்ஷேத்திரஞன் என்றும், ஆத்மா என்றும் கூறலாம். ‘நிருப்திஎன்றழைக்கப்படும் சொற்பிறப்பியலின்படி, இதற்கு இரு வகையான பொருள் அளிக்கலாம். (1) புரி சே1தே இதி புருஷ: - தேகம் எனும் நகரத்தில் உறங்கிக்கொண்டு, அதாவது தங்கியிருப்பவர் புருஷன். இந்த சரீரத்தில் எந்த மாற்றத்தையும் அடையாமல் விளங்கிக் கொண்டிருக்கும் அறிவுதத்துவம் புருஷன் ஆகும். (2) ஸர்வம் பூரயதி இதி புருஷ: - அனைத்தையும் வியாபித்திருப்பவர் புருஷன். ஸத் சொரூபமாக வியாபித்து இருக்கிறார், ஸர்வ வ்யாபி.


=> ஆதியற்றவைகள்:

புருஷன் மற்றும் பிரக்ருதி இரண்டுமே ஆரம்பம் இல்லாதவைகள், அதாவது பிறப்பற்றவைகள்அநாதீ3 உபெள, என்கிறார் பகவான். காலத்தினால் வரையறுக்கப்படாதது ஆகையால் புருஷ-தத்துவத்திற்கு ஆரம்பமும் இல்லை, அதே சமயத்தில் முடிவும் இல்லை. தனது ஆதாரமாக புருஷ-தத்துவமே இருப்பதாலும், மேலும் தனது இருப்புக்கும் புருஷனையே முழுவதும் சார்ந்திருப்பதாலும் பிரக்ருதியும் ஆரம்பமற்றதாகவே உள்ளது

ஒருகால் பிரக்ருதிக்கு ஒரு ஆரம்பம் இருந்திருந்தால், அது தோன்றுவதற்கு முன்னர் பிரக்ருதி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருக்கும். அப்படியானால், ஒரு காலத்தில் இல்லாமல் இருந்து திடீரென்று இடையில் தோன்றிய இந்த பிரக்ருதி எதிலிருந்து உருவாக்கப்பட்டது என்ற கேள்வி வரும். இது நம்மை எல்லையற்ற பின்னடைவிற்கும், படைப்பின் சாத்தியமற்ற நிலைக்கும் இட்டுச் செல்கிறது. எனவே, பிரக்ருதியும் அநாதி. படைப்பின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது மித்யாவான இந்த படைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான மாயையாக அது இருக்கிறது. மற்றும், தனிநபரின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது, நாம் இதை அறியாமை(அவித்3யா) என்று அழைக்கிறோம். சிருஷ்டியின் ஒடுக்கம் நிகழும்போது, ப்ரம்மமும் வெளிப்படாத நிலையில் பிரக்ருதியும் எஞ்சியிருக்கிறது, ஆகையால் இரண்டுமே ஆரம்பமற்றவைகள் ஆகின்றன.


=> ஈஷ்வர தத்துவம்:

இந்த இரு தத்துவமும் சேர்ந்தே ஈஷ்வரனுக்கு ஈஷ்வரன் என்கிற அந்தஸ்தை அளிக்கின்றன. ஒருகால் ஈஷ்வரன்நிமித்த-காரணம்எனப்படுகிற படைப்பவராக மட்டுமே இருந்திருந்து, படைப்பிற்கு பொருள்காரணமாக(உபாதான காரணம்) தான் அல்லாத மற்றொரு காரணியைச் சார்ந்திருந்தாரெனில், சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் எங்கும் நிறைந்தவர் என்ற நிலையை இதனால் இழந்துவிட்டதால் இனி அவரை ஈஷ்வரன் என்று அழைக்க முடியாது போயிருக்கும். ஆனால் பரா-பிரக்ருதியான புருஷன் மற்றும் அபரா-பிரக்ருதியான மாயை இரண்டும் தன்னுடன் இருப்பதினாலேயே அவர்ஈஷ்வரன்என்கிற அந்தஸ்தை அனுபவிக்கிறார். மாறாமல் இருந்து எல்லாவற்றிற்கும் இருப்பை(ஸத்) அளிக்கின்ற அதிஷ்டானமும் மற்றும் மாற்றத்திற்கு உள்ளாகி படைப்பாக தோன்றிக் கொண்டிருக்கும் மாயை ஆகிய இரண்டும் ஈஷ்வரன்தான். ஒன்று ஈஷ்வரனின் சொரூபமாக, சைத்தன்ய-ஆத்மாவாக இருக்கின்ற புருஷன், மற்றொன்று சுவபாவமான மாயை, பிரக்ருதி. இவையிரண்டின் காரணமாகவே ஈஷ்வரன் இந்த உலகின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலுக்கு(சிருஷ்டி, ஸ்திதி, லயம்) மூலகாரணமாகிறார். இவையிரண்டுமே ஒன்றாக சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றன, மேலும் இரண்டுக்குமே ஆதி என்பது இல்லை.   

இந்த உலகத்தோடு ஜீவன் இணக்கம் வைத்து சம்சாரத்தை அனுபவிக்க பிரக்ருதியும் புருஷனும் பின்வரும் பங்களிப்பை அளிக்கின்றன.


புருஷன்

பிரக்ருதி

1

ஸத்யம்

மித்யா

2

அறிவு சொரூபம் (சேதனம்)

ஜடம்

3

மாறாதது(நிர்விகார:)

மாற்றத்தை அடைவது(ஸவிகார:)

4

குணங்களற்றது(நிர்குணம்)

முக்குணங்களுடையது(த்ரிகுணாத்மிகா)


=> வேறுபாடுகள் பிரக்ருதியினுடையது:

பிறகு கிருஷ்ணர், வேறுபாடுகளும் குணங்களும் பிரக்ருதியிலிருந்து பிறந்தவைகள் என்றுணர்விகாராந் கு3ணாந் ஏவ ப்ரக்ருதி ஸம்ப4வாந் வித்3தி4, என்கிறார். பஞ்ச பூதங்களில் தொடங்கி, புத்தி புலன்கள் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளும், இன்பம் துன்பம் மோஹம், பயம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தோன்றிக் கொண்டிருக்கின்ற குணங்களும் பிரக்ருதியிலிருந்து உண்டானவைகள் ஆகும். இவையனைத்தும் சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய முக்குணங்களைக் கொண்டுள்ள இந்த மாயையிலிருந்து பிறந்தவைகள் ஆகும். மாற்றத்திற்குள்ளாகி உலகமாக தெரிந்து கொண்டிருக்கும் பொருள்காரணமாக, அதாவது பரிணாமி-உபாதான-காரணமாக ஈஷ்வரனின் பிரக்ருதி உள்ளது என்றும், எந்த மாற்றத்தையும் அடையாமல் இந்த முழு படைப்பின் காரணமாக, அதாவது விவர்த-உபாதான-காரணமாக ஈஷ்வரனின் புருஷன் உள்ளது என்றும் கூறி சங்கரர் தனது பாஷ்யத்தில் இந்த சுலோகத்திற்கான தனது விளக்கத்தை முடிக்கிறார். இரண்டு காரணங்களும் ஈஷ்வரனில் நிலைத்திருக்கின்றன, அதில் ஈஷ்வரன் புருஷன், அவரிலிருந்து பிரிக்கப்படாததாக பிரக்ருதி இருக்கிறது

பிரக்ருதியான மாயையே மாற்றத்திற்கு உள்ளாகிறது என்பதை கீதை இந்த சுலோகத்தில் தெளிவுபடுத்துகிறதுவிகாராந்ச்1 கு3ணாந்ச்1சைவ வித்3தி4 ப்ரக்ருதிஸம்ப4வாந். எனவே குணங்களும் வேறுபாடுகளும் பிரக்ருதியிலிருந்து பிறந்தவைகளே ஆகும். இந்த பிரக்ருதி விவர்த-உபாதான-காரணமான புருஷனைச் சார்ந்துள்ளது

இனி அடுத்த சுலோகத்தில், பிரக்ருதியிருந்து தோன்றிய மாற்றங்களும் குணங்களும் என்னென்ன? என்பதான விளக்கம் வருகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சமுத்திர ஜலம் சிலவேளை அமைதியாயும், சிலவேளை அலைகள் பொங்கிக் கொந்தளித்தும் இருப்பதுபோல ப்ரம்மமும் மாயையும் இருக்கின்றன. சலிக்கும் சமுத்திரம் மாயை; சலனமற்ற சமுத்திரம் ப்ரம்மம்.

---------------------------------------------------------------------------------------------