புதன், 5 பிப்ரவரி, 2025

க்ஷேத்ர க்ஷேத்ரஞ விபாக யோகம் 13.16 - 13.17

||13.16|| ஒன்று பலவாகத் தோன்றுகிறது:

अविभक्तं भूतेषु विभक्तमिव स्थितम्

भूतभर्तृ तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु ।। १६ ।।

அவிப4க்தம் பூ4தேஷு விப4க்தமிவ ஸ்தி2தம்

பூ4தப4ர்த்ரு தஜ்ஜ்ஞேயம் க்3ரஸிஷ்ணு ப்ரப4விஷ்ணு ।। 16 ।।


भूतेषु  பூ4தேஷு  உயிர்களில்    अविभक्तं   அவிப4க்தம்   பிரிவுபடாததாயும்     

विभक्तम् इव   விப4க்தம் இவ   பிரிவுபட்டது போலும்    स्थितम्  ஸ்தி2தம்  நிற்பது    

भूतभर्तृ   பூ4தப4ர்த்ரு   தாங்குவதும்    ग्रसिष्णु  க்3ரஸிஷ்ணு  விழுங்குவதும்     

प्रभविष्णु   ப்ரப4விஷ்ணு   உண்டுபண்ணுவதும் என்று     

तत् ज्ञेयं  தத் ஞேயம்  அது அறியப்பட வேண்டும்.


அது பிளவுபடாதது, ஜீவர்களுக்குள் பிளவுபட்டதுபோல் இருக்கிறது; உயிர்களைத் தாங்குவதும், விழுங்குவதும் தோற்றுவிப்பதும் அது என்று அறிக.

    

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி; அவற்றை உண்பது, பிறப்பிப்பது.


விளக்கம்:

ப்ரம்மத்தின் சொரூபத்தைக் குறித்த விளக்கம் இங்கும் தொடர்கிறது:

=> பிளவுபடாதது, பிளவுபட்டதுபோலத் தெரிவது:

ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் அது ஒவ்வொரு வடிவத்துக்குள்ளும் பிரிவுபட்டது போலத் தென்படுகிறது. ஒரு அறையின் சுவர்கள் போன்ற பல்வேறு விவகாரக் காரணிகளால் ஆகாசமானது, சமையலறையிலுள்ள இடம், பூஜையறையிலுள்ள இடம், படுக்கையறையிலுள்ள இடம் என ஒப்பீட்டளவில் பிரிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் அது பிரிவுக்குட்படாமல் எங்கும் பரவிக் காணப்படுகிறது. பரம் ப்ரம்ம அத்தகையது. எல்லா ஜீவர்களுக்குள்ளும் பிளவுபடாமல் இருந்துகொண்டு, ஆனால் பிரிவுபட்டது போலக் தெரிந்து கொண்டுள்ளதுபூ4தேஷு அவிப4க்தம் விப4க்தம் இவ

அறிவுக்கும் அறியாமைக்குமான வேறுபாடு என்பது ஒன்றை எவ்விதம் புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஆகாசம்பிரிவுபட்டதைப் போலத் தெரிகிறதுஎன ஒருவன் கூறினால், அவனுக்கு தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். ஆனால் ஆகாசம்பிளவுபட்டுள்ளதுஎனக் கூறும்போது அவனுக்குத் தெரியவில்லை. எனவே உண்மையான பிரிவுகள் என எதுவுமில்லாததால், தோற்றத்திற்கு மட்டுமேயாகத் தெரிகிற எந்தப் பிரிவையும் நாம் அகற்ற வேண்டியதில்லை என்பதே இதன் பொருள்.


=> சிதாபாசம்:

ஸத்-சித் சொரூபமாகவுள்ள ப்ரம்மத்தைச் சார்ந்து முக்குண மாயையானது இந்த உலகத்தை தோற்றுவிக்கிறது. ஐம்பூதங்களின் சேர்க்கையினால் உருவான இந்த உலகமும், உடலும், மனமும் உண்மையில் ஜடம் ஆகும்; உணர்வற்றது. ஐந்து சூக்ஷம பூதங்களின் சேர்க்கையினால் உருவான இந்த ஜடமான மனமானது, ப்ரம்மத்தின் அறிவு சொரூபத்தை பிரதிபிம்பிக்கின்ற தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் இரு வகையான அறிவு சாத்தியப்படுகிறது:

     (1) ப்ரம்மத்தின் அறிவு சொரூபம்

     (2) பிரதிபிம்பிக்கப்பட்ட அறிவு சொரூபம்

இந்த பிரதிபிம்ப அறிவு சொரூபம் சிதாபாசம் எனப்படும்

ஜீவன் = சிதாபாசம் + மனம் + உடல்.

இந்த பிரதிபிம்ப-அறிவானது தனித்தன்மையுடன் செயல்படுகிறது. மனதுடன் கூடிய இந்த சிதாபாசம் எந்த உடலோடு சேருகிறதோ, அப்போது அந்த ஜட உடலும் அறிவுடையதாகிறது; உணர்வுடையதாகிறது. சூக்ஷம சரீரம் எனச் சொல்லப்படும் மனமானது உடலை(ஸ்தூலத்தை) விட்டுச் செல்வதையே நாம் மரணம் என்கிறோம். மரணத்தை முடிவு செய்வதாக மனம் இருக்கிறது. கொடுக்கப்பட்ட சரீரத்தின் பயன் முடிந்ததும் அதை விட்டு விட்டு வேறொரு உடலை நோக்கிச் செல்கிறது.

இந்த அனைத்து பிரதிபிம்பத்திற்கும் ஆதாரமாக இருக்கிற ஆத்மாவாகிய ப்ரம்மம் உண்மையில் பிளவுபடாமல் உள்ளது. மனதிலுள்ள அறிவினால் உண்டான வேற்றுமையின் காரணமாக இந்த உணர்வு ரூபம் பிளவுபட்டதாகத் தெரிகிறது. எனவே பிரிவிற்குட்பட்டதாக எண்ணிக் கொண்டிருக்கிற இந்த பிரதிபிம்ப-அறிவிற்குத் தான் ஞானத்தைக் கொடுக்க வேண்டும். ப்ரம்மத்தின் அறிவு சொரூபத்திற்கு உதாரணமாக சூரியனை எடுத்துக் கொண்டால், அச் சூரியனின் பிரதிபிம்பத்தை இந்த மனதிலுள்ள பிரதிபிம்பிக்கப்பட்ட அறிவு சொரூபமாக எடுத்துக் கொள்ளலாம். இனி, கண்ணாடியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிற பிரதிபிம்ப சூரியனை நோக்கிநீ யார்? எங்கிருந்து வந்துள்ளாய்?’ என்கிற கேள்வியைக் கேட்டால் அது கீழ்கண்ட இரு விதமான பதில்களை அளிக்கலாம்:

(1) கண்ணாடியில்தான் நான் இருக்கிறேன். அதுவே எனக்கு ஆதாரம். அது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் நானும் செல்கிறேன்.

(2) உண்மையில் நான் சூரியன். இந்த பிரதிபிம்பம் எனது அம்சத்தின் சிறிய அழகான வெளிப்பாடு. இக்கண்ணாடி உடையும்போது சூரியனான நான் எனது மெய்ரூபமான சூரியனிடம் கலந்து விடுகிறேன்.

இதே கேள்வியை பிரதிபிம்ப-அறிவாகவுள்ள மனதிடம் கேட்பதானால், அதனுடைய இரு பதில்கள்:

(1) மனதில் வெளிப்பட்ட அறிவு நான். ஆகவே மனதின் தன்மை எனது தன்மை. அது செல்லுமிடமெல்லாம் உண்மையில் நான் செல்கிறேன்.

(2) ஒருகால் இந்த மனதிலுள்ள சைத்தன்யத்திற்கு ஞானம் வந்துவிட்டால், ‘இந்த மனதில் நான் வெளிப்படுகிறேன். உண்மையில் நான் ஆத்மா; பரப்ரம்மம்’.

எனவே தனிப்பட்ட மனங்களின் காரணமாக பிரிக்கப்பட்டுள்ளதைப் போலத் தோன்றினாலும், உண்மையில் இவையனைத்தும் பிளவுபடாத, ஏகமாக இருக்கின்ற, மாற்றத்தை அடையாத, என்றுமுள்ள அந்த பரமாத்மாவின் பிரதிபிம்பங்களே ஆகும்.


=> சிருஷ்டி, ஸ்திதி, லய காரணம்:

பாக்கி நான்கு பூதங்களையும் ஆகாசம் தாங்குவது போல, எல்லா உயிர்கள் மற்றும் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் தாங்குபவராக இருப்பது அந்த ப்ரம்மம்பூ4தப4ர்த்ரு . மேலும் இந்த உலகம் முழுவதையும் விழுங்குபவராகவும் அதுவே இருக்கின்றதுக்3ரஸிஷ்ணு. அதாவது பிரளய காலத்தில் இவைகளனைத்தும் ப்ரம்மத்திடமே ஒடுக்கத்தை அடைகிறது. அந்த ப்ரம்மத்திடமிருந்தே இந்த சிருஷ்டி முழுதும் மீண்டும் வெளிவருகின்றன - ப்ரப4விஷ்ணு , சிருஷ்டிப்பவராக அந்த பரமாத்மாவே இருக்கிறார். எனவே அறியத்தக்கதாக இருக்கின்ற அந்த ப்ரம்மமே, சிருஷ்டியைத் தோற்றுவிக்கும் ப்ரம்மனாக, படைப்பைக் காத்தருள்கிற விஷ்ணுவாக, ஒடுக்கத்தின்மூலம் சிருஷ்டியை திரும்பப் பெறுகிற ருத்ரனாக இருக்கிறது. படைப்பு, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய மூன்று நிலைகளிலும் இவைகளனைத்தும் ஆத்மாவான ப்ரம்மத்திற்கு புறம்பாக இல்லை. அலைகள் கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலில் ஒடுங்குவது போல இவையாவும் பரமாத்மாவிடம் தோன்றி, இருந்து, இறக்கின்றன.

அறியப்படவேண்டியது என பனிரெண்டாவது சுலோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த ப்ரம்ம, இந்த சுலோகங்களினால் மிகத் துல்லியமாகவும் முழுமையாகவும் விளக்கப்பட்டு வருகிறது. முழு சாஸ்திரத்தின் சாரம் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முரண்பாடுகளெனத் தெரிகிற இந்த வாக்கியங்கள், வேதாந்தத்தின் உள்ளடக்கமான ஸத்ய-மித்யாவை விளக்குகின்றன. இந்த சுலோகங்கள் கீதையின் நோக்கத்தை தீர்மானிக்கின்ற உபதேசங்களாக அமைகின்றன

அடுத்த சுலோகத்துக்கான அறிமுகத்தை சங்கரர் ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கிறார். நேரம், இடம் மற்றும் பொருள் போன்ற எதுவும் ப்ரம்மத்திலிருந்து விலகியில்லாததாக, ப்ரம்மம் அனைத்தையும் வியாபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும் அது உணரப்படவில்லையெனில் ப்ரம்மம் என்பது ஒருவிதமான இருளா, தமஸ்?


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மாசு மறுவற்று விளங்கிய ஆகாசத்தில் திடீரென்று மேகங்கள் தோன்றுவதையும் அடுத்த நிமிஷத்தில் அவை காற்றினால் அப்பால் போக்கப்படுவதையும் ஒருக்கால் கண்ட பரமஹம்ஸர் ஒருவர், மிகுந்த குதூகலத்துடன் குதிக்கத் தொடங்கி, “இதைப் போன்றதுதான் ஜகத்தும்; முதலில் அது இருந்ததில்லை. ப்ரம்மமாகிற நிர்மல ஆகாயத்தில் திடீரென்று தோன்றி இத்தனை பொருள்களையும் உண்டாக்கியது, பிறகு அதே ப்ரம்மத்தின் காற்றினால் அகற்றப்படுகிறதுஎன்றார்.

---------------------------------------------------------------------------------------------

||13.17|| பரப்ரம்மம் எத்தகையது?

ज्योतिषामपि  तज्ज्योतिस्तमस: परमुच्यते

ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ।। १७ ।।

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநக3ம்யம் ஹ்ருதி3 ஸர்வஸ்ய விஷ்டி2தம் ।।17 ।।


तत्  தத்  அது      ज्योतिषाम् अपि   ஜ்யோதிஷாம் அபி  ஜோதிகளுக்கும்    

ज्योति:  ஜ்யோதி:  ஜோதியாய்      तमस:  தமஸ:  இருளுக்கு     परम्  பரம்   அப்பாற்பட்டது என்று     उच्यते  உச்யதே  சொல்லப்படுகிறது   ज्ञानं  ஜ்ஞாநம்  ஞானமாயும்   ज्ञेयं  ஜ்ஞேயம்  அறியத்தக்கது  ज्ञानगम्यं  ஜ்ஞாநக3ம்யம்  ஞானத்தினால் அடையப்படுவது    सर्वस्य  ஸர்வஸ்ய   எல்லோருடைய     हृदि  ஹ்ருதி3  ஹிருதயத்தில்     विष्ठितम्  விஷ்டி2தம்நிலைத்திருப்பது.


ஒளிக்கெல்லாம் ஒளியாகிய அது இருளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படுகிறது. அறிவும், அறியத்தக்கதாயும், அறிவினால் அடையப்படுவதுமாகிய அது எல்லாருடைய உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி; இருளிலும் உயர்ந்ததென்ப. அதுவே ஞானம்; ஞேயம்; ஞானத்தால் எய்தப்படுபொருள்; எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது.


விளக்கம்:

பிரளய காலத்தில் காரிருள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றையும் அது விழுங்கவும் செய்கிறது எனலாம். பரப்ரம்மம் அத்தகையதோ என்கிற ஐயம் ஏற்படலாம். அதற்கு விடையாக இந்த சுலோகம் வருகிறது

=> ஜோதிகளுக்கெல்லாம் ஜோதி:

அறியப்பட வேண்டிய அந்த ப்ரம்மம் அனைத்து ஒளிகளுக்கும் ஒளியாக உள்ளதுஜ்யோதிஷாம் அபி ஜ்யோதி:. கண் எனும் காட்சி உறுப்பானது ஒன்றைக் காணவேண்டுமெனில் அதற்கு சூரியன், சந்திரன் மற்றும் ஒளி விளக்குகள் போன்ற பல்வேறு ஆதாரங்களிலிருந்து வருகிற வெளிச்சம் தேவைப்படுகின்றன. அந்த பொருளே ஒளிபொருந்தியதாக இருந்தால் அதை நேரடியாகப் பார்க்கமுடியும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த பொருள் வேறொரு ஒளிமூலத்திலிருந்து வருகிற ஒளியை பிரதிபலிக்கும் போதே அதை நாம் காணமுடிகிறது. அது இங்கு ஆத்மாவை விளக்க ஒப்புமையாகக் கூறப்படுகிறது

ஒளிபொருந்தியதாக இருக்கின்ற சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் ஒளி விளக்குகள் போன்றவற்றைக் காண வேறொரு ஒளி ஆதாரம் தேவையில்லை. மின்மினிப் பூச்சிகளும்கூட இரவில் வேறொரு வெளிச்சத்தின் துணையின்றி தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இனி கேள்வி என்னவெனில், இந்த ஒளிமூலங்கள் சுயமாக வெளிப்படுத்தப் படுகின்றனவா? அதாவது சுயமாக வெளிப்படுகின்றன எனில், ஒருவன் கண்ணை மூடிக் கொண்டாலும் அவைகள் தங்களை அவ்விதமே வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் சக்திவாய்ந்த ஒளிமூலமான சூரியனாலும் கூட அதைச் செய்ய முடியாது. அவ்விதமே மற்ற எந்த ஒளிமூலங்களும் தன்னை வெளிப்படுத்துவதில்லை. பிறகு எப்படி அதன் இருப்பை நாம் அடைகிறோம்? பார்த்தல் எனும் உணர்வால் மட்டுமே இது சாத்தியம். தானே ஒளிமூலமாக அல்லாமல் மற்றவற்றின் ஒளிகளின் துணையில் தன்னை காட்டிக் கொண்டிருக்கும் எந்தவொரு பொருளுக்கும் கூட கண்களின் ஒளியே ஆதாரமாக உள்ளது. அதாவது, கண்களில் உள்ள ஒளியினால் அனைத்தும் பிரகாசிக்கப்படுகிறதே தவிர எதுவும் சுயமாகத் தெரிவதில்லை.  

இனி, கண்களின் ஒளி அல்லது கண்ணுறுப்பின் பிரகாசம் என்பது சுயமானதா எனில், இல்லை, மனம் ஒத்துழைக்கவில்லையெனில் கண்கள் எதையும் காணாது. கண் கண்ணாகச் செயல்படுவது மனதையே சார்ந்துள்ளது. எனில், மனம் சுயமாக-ஒளிர்வதா? கண்டிப்பாக இல்லை. எப்படியெனில் அது சுயமாக பிரகாசிப்பதானால் அதனால் மாற இயலாது; இதன் பொருள் நம்மால் விதவிதமான பொருளை உணர இயலாது. ஒரு பொருளைப் பார்க்க, அப்பொருளின் வடிவத்தில் ஒரு எண்ணம்(வ்ருத்தி) தோன்றவேண்டும். எனவே, மனமும் வேறொன்றால் ஒளிர்விக்கப்படுவதாக இருப்பதினாலேயே விதவிதமான எண்ணங்கள் சாத்தியப்படுகின்றன. எனில் இறுதி ஆதாரமாக, சுயமாக-ஒளிர்வதாக(ஸ்வப்ரகாச1) இருப்பது எது? அது ஆத்மாவாக மட்டுமே இருக்க முடியும். தான் யாராலும் ஒளிர்விக்கப்படாமல் அனைத்தையும் ஒளிர்விப்பதாக இருப்பது ஆத்மாஜ்யோதிஷாம் ஜ்யோதி:. எனவே ஒளிர்தல் வரிசை பின்வருமாறு அமைகிறது:

   சூரியன் —> கண்கள் —> மனம் —> ஆத்மா

அனைத்திற்கும் சாக்ஷியாக இருக்கின்ற ஆத்மாவான ப்ரம்மம், ஸ்வயம் ஜ்யோதி, தானாக பிரகாசிப்பது ஆகும். ஆகவே அதுவே ஒளிக்கெல்லாம் ஒளியாக திகழ்வதாக ஆகிறது.

=> இருளையும் ஒளிர்விப்பது:

இது இருளைக் கடந்ததாக உள்ளதுதமஸ: பரம் உச்யதே. இங்குஇருள்எனும் அர்த்தத்தைக் கொடுக்கின்றதமஸ்என்கிற சொல்லானது, அறியாமைக்கு ஒப்புமையாகக் கொடுக்கப்படுகிறது. ஒளி என்பது இருளுக்கு எதிரானது; ஒளி வரும்போது இருள் விலகியே ஆகவேண்டும். ஆனால் ஆத்மஜோதியானது அறியாமை எனும் இருளுக்கும் எதிரானது அல்ல. அது அறியாமை-இருள் உட்பட அனைத்தையும் அனுமதிக்கிறது. அதாவது, இருமைக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்ற இந்த ஆத்ம சைத்தன்யமானது, இருப்பதையும் இல்லையென்பதையும் சமமாகவே ஒளிரச் செய்கிறது. இருப்பதைக் காட்டிக் கொடுக்கின்ற விருத்தியை அது ஒளிரச் செய்யும் அதே செயல்திறனுடனே அறியாமையையும் ஒளிரச் செய்கிறது. ஆத்மா எனும் பார்ப்பவன் ஒருபோதும் தேயாதவன், அலுப்த-த்3ருக். மனம் உறங்கச் செல்லும்போதும், கனவு காணும்போதும், சுவையையோ அல்லது சப்தத்தையோ கொண்டுவரும்போதும், ஆத்மா அப்படியே ஒளிர்கிறது. அது தனது ஒளியை ஒருக்காலும் இழப்பதில்லை

ஜடப் பொருளுக்கு உண்டாகிற இருளும் வெளிச்சமும் ஆத்ம சைத்தன்யத்தை அணுகவதில்லை. நள்ளிரவில் ஒருவனுக்கு தனது உடலும் உடையும் தென்படுவதில்லை. ஆயினும்நான் இருக்கின்றேன்என்கிற உணர்வு இருளில் மறைவதில்லை. சூரிய வெளிச்சத்தில் அவ்வுணர்வு அதிகரித்துக் காணப்படுவதுமில்லை. ஆத்ம சைத்தன்யத்தின் அறிவைக்கொண்டே சூரியனையும் அறிகிறோம், இருளையும் அறிகிறோம். சூக்ஷம உடலானது ஸ்தூல உடலை விட்டு வெளியேறும்போதும், ஆத்மா அதே தூய உணர்வாகவே ஒளிர்கிறது. எனவே, அஞ்ஞானம் எனப்படும் இருளுக்கு மேலாகவும், அனைத்து ஒளிகளின் ஒளியாக இருப்பதும் ஆத்ம ஜோதியாகும்.


=> ஞானம், ஞேயம் மற்றும் ஞானப்பலனாக இருப்பது:

அறிதலுக்கும் அறியாமைக்கும் அப்பாற்பட்டதான, தூய பிரக்ஞையாக விளங்கிக்கொண்டிருக்கும் அந்த ஒளியே ஞானம் (ஜ்ஞாநம்) ஆகும். எல்லாவற்றிற்கும் காரணமான பரப்ரம்மமாக இருப்பதால் அதுவே அறியத்தக்கதான ஞேயம்(ஜ்ஞேயம்) ஆகும். இது ஞானத்தினால், ஞானத்தின் பலனாக அடையப்படுவது(ஜ்ஞாநக3ம்யம்) ஆகும். அதாவது மோக்ஷத்தைக் குறிக்கிறது. மோக்ஷத்தைக் கொடுக்கின்ற ஞானத்திற்கான சாதனமாக விளங்குவதால் ஞானம் என்றே பெயரிடப்பட்டு கிருஷ்ணரால் ஏற்கனவே விளக்கப்பட்ட அந்த இருபது பண்புகளுடனும் சாஸ்திர பிரமாணத்தின் துணையுடனும் அது அடையப்படுவதாக உள்ளது. அது எங்கு அறியப்படுகிறது? அனைவரின் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறதுஸர்வஸ்ய ஹ்ருதி3 விஷ்டி2தம். எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாத தூய உணர்வாக எல்லோருடைய மனதிலும் அது எப்போதும் குடிகொண்டுள்ளது.

இதிலிருந்து உண்மையில் இந்த நற்பண்புகள், ப்ரம்மம் மற்றும் மோக்ஷம் இவைகளனைத்தும் ஏற்கனவே நமக்குள்தான் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது. அதை அடைகின்ற நோக்கத்துடன் அதற்கான சாதனையைச் செய்யும்போது அது வெளிப்படுகிறது. எனவே அவைகள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தலே இந்த ஆன்மீகப் பயணம் ஆகும். எந்தவொரு சாதுவிற்கும் கடந்த காலம் என்ற ஒன்று இருக்கும். அதிலிருந்தே அவர் சாதுவாக வெளிப்பட்டுள்ளார். தர்க்க சாஸ்திரத்தில், ‘ஸத் காரிய வாதம்என்கிற ஒரு வாதம் உள்ளது. அதாவது இருப்பதில் இருந்துதான் ஒன்று வந்தாக வேண்டும். இப்போது வெளித்தோற்றத்திற்கு வந்துள்ள பானையானது ஒரு காலத்தில் களிமண்ணில் ஏற்கனவே வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருந்தது என அது கூறுகிறது. எனவே அறிவு சொரூபமாக, அறியத் தக்கதாக, ஞானத்தினால் அடையப்படுவதாக இருக்கின்ற, ஒளிக்கெல்லாம் ஒளியான அந்த ஆத்மஜோதி எப்போதும் ஹிருதய கமலத்தில் வீற்றிருக்கின்றது.  

இதுவரை சொல்லப்பட்டதின் முடிவுரையாக பின்வரும் சுலோகம் அமைகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உள்ளே [ஹிருதயத்தில்] ஈஷ்வரனை உணர்பவன் புறம்போயும் அவனைக் காண்பான். தன்னுள்ளே ஈஷ்வரனைக் காணாதவன் தனக்கு வெளியேயும் அவனைக் காணமாட்டான். ஆகவே தேகாலயத்தில் தெய்வத்தைக் காண்பவன் அகிலாண்டத்திலேயும் அவனைக் காண்பான்.

---------------------------------------------------------------------------------------------