||12.14|| அடுத்த ஐந்து குணங்கள்:
सन्तुष्ट: सततं योगी यतात्मा दृढनिश्चय: ।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्त: स मे प्रिय: ।। १४ ।।
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ3 யதாத்மா த்3ருட4நிச்1சய: ।
மய்யர்பிதமநோபு3த்3தி4ர்யோ மத்3ப4க்த: ஸ மே ப்ரிய: ।। 14 ।।
सततं सन्तुष्ट: ஸததம் ஸந்துஷ்ட: எப்போதும் சந்தோஷமுடையவனாய் योगी யோகீ3 யோகியாய் यतात्मा யதாத்மா தன்னடக்கமுடையவனாய் दृढनिश्चय: த்3ருட4நிச்1சய: திடநிச்சயமுள்ளவனாய் मयि மயி என்னிடத்து अर्पित मन: बुद्धि: அர்பித மந: பு3த்3தி4: மனம் புத்தி இவைகளைச் சமர்ப்பித்தவனாய் मद्भक्त: மத்3ப4க்த: என் பக்தனோ स: ஸ அவன்
मे மே எனக்கு प्रिय: ப்ரிய: பிரியமானவன்.
எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பவனும், யோகியாய், தன்னடக்கமுடையவனாய், திடநிச்சயமுள்ளவனாய், என்னிடத்து மனம் புத்தியைச் சமர்ப்பித்தவனாய் யார் என் பக்தனாகிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்பணஞ் செய்து என் தொண்டனாகிய யோகி எனக் கினியவன்.
விளக்கம்:
இந்த சுலோகத்திலும் பகவான் ஒரு ஞானியின் லக்ஷணங்களை தொடர்கிறார்.
=> எப்போதும் மகிழ்ந்திருப்பவன்:
ஒரு ஞானி எப்பொழுதும் நிறைந்த மனதுடன் இருக்கிறான் — ஸததம் ஸந்துஷ்ட:, சந்தோஷத்துடன் இருக்கின்றான். பொதுவாக மக்கள் அனைவருமே சந்தோஷத்தை அனுபவிப்பவர்கள்தான். ஆனால் குறிப்பிட்ட சில சாதகமான சூழ்நிலைகள் அமையப்பெறும்போது மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மற்ற நேரத்தில் அவர்களுக்கு நிறைவின்மை என்கிற நோய் தொற்றிக் கொள்கிறது. ஆனால் ஒரு ஞானியானவன் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பவனாக, மனதை நிறைத்தவனாக இருக்கின்றான். மனதை நிறைத்தவன் எனில் ‘இருப்பதில் திருப்தி அடைந்தவன்’ என்பது பொருள். அனைத்துவிதத்திலும் போதுமென்ற மனமுடையவனாக இருப்பவன் — அலம்ப்ரத்யய, என சங்கரர் வரையறுக்கிறார். வாழ்வில் எதிலும் குறை இல்லாதவன்; முழுமையைக் கண்டறிந்தவன்.
சிலருக்கு தன்னிடமிருக்கின்ற பொருள்கள் மற்றும் வசதிகள் போதுமானதாக இல்லை என்கிற அதிருப்தி இருக்கும். ஒரு சிலருக்கு செல்வம் நிறைந்திருந்த போதிலும், தன்னை நேசிக்காதவர்களைக் குறித்து குறைபட்டு வருந்தி நிறைவின்மையை அடைவார்கள். இது உணர்ச்சி ரீதியான நிறைவின்மை ஆகும். அடுத்ததாக, அறிவு ரீதியான நிறைவின்மை உடையவர்களாக சிலர் தான் அடைந்த அறிவில் திருப்தியில்லாமல் இருக்கின்றனர். அபராவித்யாவில், ஒன்றை ஆழமாக அறிய ஆரம்பிக்கும்போதுதான் அந்த துறையில் இன்னும் அறிந்து கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றிய அறியாமையின் அளவு விரிந்து கொண்டே செல்கிறது. இவ்விதம் பொருளாதாரத்தில், உளவியல் ரீதியில், அறிவு ரீதியில் என ஏதேனும் ஒன்றில் சிக்கிக் கொண்டு மக்கள் திருப்தியின்றி சந்தோஷத்தை இழக்கின்றனர். தற்காலிகமாக வந்து செல்கின்ற சில சாதகமான சூழ்நிலைகளில் மகிழ்ச்சியை அனுபவித்துக் கொள்கின்றனர்.
ஆனால் ஒரு ஞானி, ‘அனாத்மாவை என்றும் நிறைக்க முடியாது. ஆத்மாவை நிறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆத்மா பூரணமானது. நான் ஆத்மாவாக உள்ளேன்’ என்கிற ஞானத்தினால் முழுமையைக் கண்டறிந்தவனாக உள்ளான். அவனுக்கு வாழ்வில் எதிலும் எந்தக் குறையும் இல்லை. பொருள் ரீதியாக, உளவியல் ரீதியாக, அறிவு ரீதியாக அல்லது உணர்ச்சி ரீதியாக என எதிலும் குறை இல்லாதவனாக இருக்கின்றான். இந்த உள் பூரணத்துவம் சந்தோஷம் என்றழைக்கப்படுகிறது. இந்தப் பண்பை பகவான் இரண்டாவது அத்தியாயத்தில், ஸ்தித ப்ரஜ்ஞ லக்ஷணத்தில், ‘ஆத்மநி ஏவ ஆத்மநா துஷ்ட:’ எனக் கூறுகின்றார். எந்தப் பொருளின் துணையுமின்றி தன்னிடத்திலேயே தான் திருப்தியடைந்தவனாக சுகமாக இருக்கின்றான் என நாம் அங்குப் பார்த்தோம். ‘அஹம் பூர்ண:’ என்கிற ஞானம் அவனை நிறைத்துவிடுகிறது. எனவே அவனது மனநிறைவுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. இதனால் அவன் எப்பொழுதும் மகிழ்ந்தவனாக நிறைவுடன் இருக்கின்றான்.
-> தவறான பார்வை:
மனநிறைவடைந்து அமைதியாக உட்கார்ந்துவிட்டால் பின் உலகம் எப்படி இயங்கும்? யாரும் சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்க மாட்டார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்பவர்கள் உண்டு. ஆனால் உண்மையில் மனநிறைவு அடைந்தவர்களால் மட்டுமே சமூகத்திற்கு பங்களிக்க முடியும். அவனுக்கு எது கிடைத்தபோதிலும் மகிழ்ச்சியாய் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மனதிருப்தி இல்லாதவன் எவ்வளவு கிடைத்தாலும் தனக்காக மட்டுமே வைத்துக் கொள்ள எண்ணுகிறான். எனவே அதிருப்தி பங்களிப்பிற்கு உதவாது; மனதிருப்தியே பங்களிப்பை அளிக்கிறது. ஆகவேதான் ஒரு ஞானியின் முழு வாழ்க்கையும் மற்றவர்களுக்கே அர்ப்பணிக்கப்படுகிறது. அவனது நேரம், ஆற்றல், அறிவு என அனைத்தும் மற்றவர்களுக்கு கொடுக்கத் தயாராக இருக்கின்றான்.
‘போதும்’ என்கிற எண்ணம் சத்வ குணத்தின் வெளிப்பாடாக இருக்கும்போது அது ஒருவனது செயலை ஒன்றும் செய்யாது; உண்மையில் அது அவனை இன்னும் அதிக ஆர்வத்துடனும் முழு முயற்சியுடனும் செயலில் ஈடுபடுத்தும். உதாரணமாக சங்கரரின் பாஷ்யம் என்பது நிறைவின் வெளிப்பாடு. ஒருகால், ‘போதும்’ என்ற எண்ணம் தமோ குணத்தின் வெளிப்பாடாக இருப்பின், அங்கு சரியான முயற்சி இல்லாமல் செயல் சரியாக நடப்பதில்லை.
சாதகனாக இருக்கின்ற காலத்தில் ஒருவகையான நிறைவின்மை தேவைதான்; இல்லையெனில் ஞானத்திற்கானத் தகுதிகளை நோக்கி அவன் முன்னேற முடியாது. யாரை எதுவுமே நிறைக்கவில்லையோ அவனே ஆத்மதத்துவத்திற்குள் வருகிறான்.
=> யோகியாய் இருக்கிறான்:
எப்பொழுதும் யோகியாய் இருப்பவன் ஞானி - ஸததம் யோகீ3. ‘யுஜ்’ என்ற அதன் வினையடியின் இரண்டு அர்த்தங்களின் அடிப்படையில், யோகி என்கிற சொல்லுக்கும் இரு அர்த்தங்கள் உள்ளன. (1) வினையடியின் பொருளை ‘கட்டுப்படுத்துதல் அல்லது ஆளுதல் — நிரோத4நே’ என்பதாக எடுத்துக்கொண்டால், யோகி என்ற சொல் யோகத்தை உடையவனைக் குறிக்கிறது. இந்த கோணத்தில் யோகம் என்பது ‘சித்த-வ்ருத்தி-நிரோத4’ என வரையறுக்கப்படுகிறது. அதாவது தனது எண்ணங்களை அடக்கியவன்; சிந்தனைகளை ஆள்பவன்; மனதை கருவியாக மாற்றியவன்; அதற்கு தேவையான அளவு யோகாப்யாசம் செய்தவன். (2) ‘யுஜ்’ என்ற மூலத்தின் இரண்டாவது பொருள் ‘ஒன்றுபடுதல் அல்லது இணைதல்’. ஈஷ்வரனுடனான தனது ஐக்கியத்தின் காரணமாக அவன் யோகி ஆகின்றான்.
இங்கு யோகி என்பதன் பொருள் இரண்டாவது அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவனது மனதின் அமைதி என்பது தனது விருப்பத்தின் சக்தியைக் கொண்டு கட்டாயப்படுத்தி மனதை அடக்கி உருவாக்கப்பட்ட அமைதி அல்ல. ஒரு காலத்தில் அமைதியற்று இருந்த மனம், விவேகத்தினாலும் கர்மயோகத்தினாலும் குறிப்பிட்டவளவு மனக்கட்டுப்பாட்டை அடைந்து, பின்னர் அது வேதாந்த-ப்ரமாணத்திற்கு உட்படுத்தப்பட்டு மெய்ப்பொருளைப் பற்றிய அறிவை அடைகிற தனது நோக்கத்தை நிறைவேற்றுகிறது. விசாரத்தினால் அடையப்பட்ட தனது சொரூப ஞானத்தின் காரணமாக, இந்த யோகியானவன் ‘நான்’ எனும் அபிமானத்தை மனதின் மீது வைக்கவில்லை. இதனால் மனதின் வெவ்வேறு நிலைகளால், அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ‘மனம் நான் அல்ல’ என்கிற உண்மையில் அவன் மிகவும் தெளிவாக இருப்பதால், தன்னை உற்சாகமானவனாக, சோர்வடைந்தவனாக, சலனமடைந்தவனாக என மன நிலைகளின் அடிப்படையில் அவன் மதிப்பிட்டுக் கொள்வதில்லை. இந்த அறிவின் நிச்சயத்தினால் இயல்பாக உண்டான மனவமைதியாக இருப்பதனால் அவன் எப்பொழுதும் யோகியாக இருக்கின்றான். ஒவ்வொருவருக்கும் மனவமைதி குறித்த அனுபவங்கள் எப்போதாவது கிடைப்பதால் அந்த நேரத்தில் மட்டும் அவர்கள் யோகியாக உள்ளனர். அதனால்தான் பகவான் இங்கு ஞானியை எப்பொழுதும் யோகியாக இருப்பவன் எனக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்.
‘எப்பொழுதும்’ என்கிற பொருளைக் கொடுக்கும் ‘ஸததம்’ எனும் சொல்லானது இரண்டிற்கும் அடைமொழியைக் கொடுக்கும் வண்ணம் ‘ஸந்துஷ்ட:’ மற்றும் ‘யோகீ3’ எனும் இரு சொற்களின் நடுவில் வந்துள்ளது. இது ‘காகாக்ஷி-நியாயம்’ என்றழைக்கப்படுகிறது; காகத்தின் கண்ணின் ஒப்புமை. ஒரு காகத்தின் கண் அதன் குழிக்குள் அசையாது, அதனால் தலையைத் திருப்பிப் பார்க்கும்போது, ஒரு கண்ணிமை மற்ற குழிக்குச் செல்வது போல் தோன்றும். இங்கேயும் அப்படித்தான். இரண்டு பெயர்ச்சொற்களுக்கு இடையில் வைக்கப்படும் இந்த ஒற்றைச் சொல், இரண்டு பெயர்ச்சொற்களின் அர்த்தத்தையும் மாற்றியமைக்கக் கூடியது.
=> மனதைக் கட்டுப்படுத்தியவன்:
ஞானி தன்னைக் கட்டியவனாக இருக்கின்றான் — யதாத்மா. எப்பொழுதும் யோகியாய், சித்த-சமாதானத்துடன் இருப்பதென்பது மனதுடன் எந்த தொடர்பும் இல்லாததால் மட்டுமே சாத்தியமாகிறது. எனில் அவன் தனது மனதை கட்டுக்குள் கொண்டவனாக இருக்கிறான் — யதாத்மா. இங்கு ‘ஆத்மா’ என்பது மனதைக் குறிக்கிறது. எனவே மனமானது கட்டுபடுத்தப்பட்டுவிட்டது; வென்றெடுக்கப்பட்டுவிட்டது, யத. யதாத்மாவாக இருப்பதினாலேயே ஒரு ஞானி சததம் யோகியாய் இருக்க முடிகிறது. வெளிப்புற சூழ்நிலைகளால் எளிதில் பாதிக்கப்படுவதும் அமைதியின்மையும் மனதின் இயல்பு ஆகும். ஆகையினால் அதனுடைய இயல்பிற்கு உட்படாதவாறு மனமானது தன்னில் ஒடுக்கப்படும்போதே ஒருவன் எப்பொழுதும் யோகியாய் இருக்க முடியும். ஞானி தனது தவறான சுபாவத்தை வென்றவனாக யதாத்மாவாக இருக்கிறான். ஒருவனின் சுபாவத்தை மாற்றுவது மிக மிக கடினம். எனவே, முயற்சியுடன் இயல்பை(ப்ரக்ருதி) வென்றவனாக இருப்பதால் ஞானி யதாத்மா ஆகின்றான்.
=> திடநிச்சயமுள்ளவன்:
தனது ஞானத்தில் உறுதியாக இருப்பவன் ஞானி - த்3ருட4நிச்1சய:. ‘த்3ருட4’ எனில் ஸ்திர; ‘நிச்1சய:’ எனில் ப்ரஜ்ஞ; என்பதை ஸ்திர ப்ரஜ்ஞன் எனவும் கூறலாம். யாருடைய அறிவானது உறுதியானதாக உள்ளதோ அவன் ஸ்தித ப்ரஜ்ஞன். ‘நான்’ என்பதன் உண்மைப்பொருள் (அஹமர்த:) மற்றும் இந்த உலகம் எப்படிப்பட்டது (இதமர்த:) என்ற ஞானத்தில், சந்தேகமில்லாத உறுதியை உடையவன் ஞானி. இது பிடிவாதம் அல்ல, சுய சொரூபத்தில் இருக்கின்ற நிச்சய ஞானம் ஆகும்.
தனது சுயத்தை ப்ரம்மம் என தெளிவாகக் காணும்போது ஒருவனது இருதய முடிச்சானது வெட்டப்படுகிறது — பி4த்3யதே ஹ்ருத3யக்3ரந்தி, என சுருதி கூறுகிறது. ஆத்மாவிற்கும் தேகத்திற்கும் இடையே அறியாமையால்(அவித்யா) ஒரு முடிச்சு உள்ளது. அறியாமையிலிருந்து ஆசையும்(காம) அதைத் தொடர்ந்து கர்மமும் எனச் சேர்ந்து மூன்று இழைகள் கொண்ட சரம், அவித்யா-காம-கர்ம, பிணைக்கப்பட்டு உருவாகும் முடிச்சு ‘ஹ்ருத3யக்3ரந்தி’ எனப்படுகிறது. ஒவ்வொருவனும் இந்த இருதய முடிச்சுடன் பிணைக்கப்பட்டுள்ளதால், இந்த முடிச்சு அவிழ்க்கப்படும்போதே விடுவிக்கப்பட்டவனாகிறான். எவ்விதம் சிக்குண்ட பந்தைக் கட்டவிழ்க்கும்போது தவறான இழைகளை இழுத்தால் நூற்பந்து மேலும் சிக்கலாகுமோ, அவ்விதமே ஆன்மிகத்திலும்; சம்சாரத்திற்குள்ளாகவே ஒருவன் தீர்வு காண முயற்சிக்கும்போது அது பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது. இங்கு சிக்கலின் மூலக்காரணமாக அறியாமை இருப்பதால் அதை அவிழ்க்க விவேகம் எனும் நுட்பமே பயன்படுகிறது. சம்சாரம் என்கிற சிக்குண்ட நூற்பந்திலிருந்து தர்ம, அர்த்த, காம மற்றும் மோக்ஷம் எனும் நான்கு இழைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் மோக்ஷம் எனும் நூலைத் தவிர மற்ற மூன்றும் இழுபடும்போது அது சம்சாரப் பந்தை மேலும் சிக்கலானதாகவே மாற்றுகிறது. இதில் தர்மம் என்பது ஓரளவு பிரச்சனைகளை தீர்த்தபோதிலும், அது ‘ஹ்ருதயக்ரந்தி’ என்ற அடிப்படை முடிச்சை அவிழ்க்காது. அதற்கு அறியாமை எனும் முடிச்சு அகற்றப்பட வேண்டும். அதுவே ஆத்மா வரையறுக்கப்பட்டதா அல்லது எல்லையற்றதா? கர்த்தாவா அல்லது அகர்த்தாவா? போக்தாவா அல்லது அபோக்தாவா? குணத்துடன் கூடியதா அல்லது நிர்குணமானதா? அழியக்கூடியதா அல்லது என்றுமிருப்பதா? உள்ளிட்ட அனைத்து சந்தேகத்தையும் தீர்க்கிறது. தனது சுயசொரூபத்தைக் குறித்த இதுபோன்ற எந்தவித சந்தேகமும் அற்றவனாக, திடநிச்சயத்தை அடைந்தவனாக ஞானி இருக்கின்றான்.
=> மனம் மற்றும் புத்தியை சமர்ப்பித்தவன்:
மனம் மற்றும் புத்தி இரண்டையும் பகவானிடம் சமர்ப்பித்தவன் ஞானி - மயி அர்பித மந: பு3த்3தி4:. யோகத்தால் தான் பெற்ற தெள்ளிய மனதையும் புத்தியையும் அவன் கடவுளுக்கென்றே ஒப்படைக்கிறான். பொதுவாக மனம் மற்றும் புத்தி இரண்டும் எண்ணங்களையே குறித்தாலும், இங்கு கூறப்பட்டுள்ளதைபோல தனித்தனியே குறிக்கப்படும்போது அதன் தனித்துவமான செயல்பாடுகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என ஏற்கனவே பார்த்துள்ளோம். மனதின் இயல்பு என்பது ஒரு விஷயத்திற்கும் அதனுடைய எதிர் துருவத்திற்குமிடையே ஊசலாடுவதாக, சங்கல்ப-விகல்பாத்மக-மாக உள்ளது. மாறாக புத்தியானது, தீர்க்கமான நிச்சயத்தை செய்வதாக உள்ளது. இவையிரண்டையும் பரமேஷ்வரனான என்னிடத்தில் அர்பித்தவன் ஞானி என்கிறார் பகவான். வேறு கோணத்தில் சொல்வதானால், உணர்ச்சிரீதியான ஆளுமை மற்றும் பகுத்தறிவு-புத்தி அல்லது கேள்வி-புத்தி இரண்டையும் பகவானிடம் ஒப்படைத்தவன் ஞானி. ‘நான்_அஹம்’ எனும் எண்ணம் மற்றும் ‘இது_இதம்’ எனும் எண்ணம் இரண்டையும் பகவானிடத்தில் வைத்தவன் ஞானி.
பரமேஷ்வரனைப் பற்றிய முழுமையான ஞானத்தினால் அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்படுகின்றது. இதனால் மனம் புத்தி என அனைத்தும் பரமாத்மாவினிடத்தில் வைக்கப்படுகின்றது. எல்லாவிதமான சந்தேகங்களிலிருந்து விடுபட்டதாலேயே இந்த ஞானி திடநிச்சயத்தை உடையவனாக(த்3ருட4நிச்1சய:) இருக்கின்றான். ‘யதாத்மா’-வாக இருப்பதனால் அவன் ஒரு யோகி எனப் பார்த்தோம். இவ்விதம் இரண்டு வார்த்தைகளுக்கு இடையிலான இந்த காரண-விளைவு உறவு ‘ஹேது-ஹேதுமத்-பா4வ:’ என்று அழைக்கப்படுகிறது. இதில் காரணம்(ஹேது) என்பது ‘மய்யர்பித மநோ பு3த்3தி4:’, அதன் விளைவாக அடையப்பட்டது(ஹேதுமத்) அவனுடைய ‘த்3ருட4நிச்1சய:’ எனும் பண்பு ஆகும்.
=> எனக்கு பிரியமானவன்:
இப்படிப்பட்ட எனது பக்தன் எனக்கு பிரியமானவன் - ஸ: மத்3ப4க்த: மே ப்ரிய:, என்கிறார் பகவான். இங்கு பக்தன் என்பது பராபக்தனை, ஞானியைக் குறிக்கின்றது. ஏழாவது அத்தியாயத்தில் பகவான், ஞானியை ‘நான்’ என்றே கூறுகிறார் - ஞானி து ஆத்மைவ மே மதம். அங்கும், ஞானி தனக்கு மிகப் பிரியமானவன் ஏனெனில், ‘அவன் என் ஆத்ம சொரூபமாக, நானாகவே உள்ளான். அவன் என்னிடமிருந்து வேறானவனாக இல்லை, என்றார். இங்கும் பராபக்தனான ஞானி தனக்குப் பிரியமானவன் எனக் கூறி, அந்த வாக்கியத்தை இங்கு முழுமைப்படுத்துகிறார்.
இங்கு, ‘பிரியமானவன்’ என்பது ஒரு உருவக வெளிப்பாடாகும். உண்மையில் இந்த படைப்பில் தன்னை விட பிரியமானது என எதுவும் இல்லை. ஒருவர் எனக்கு பிரியமானவர் எனக் கூறும்போது, அது அவர் என்னை மகிழ்விப்பதால் வெளிப்படும் அந்த மகிழ்ச்சியான ‘நான்’ எனக்கு பிடித்தமானது என அர்த்தம்; ஆகையினால்தான் அவர் எனக்கு பிரியமானவர் ஆகின்றார் என்பதே அதன் நுண்மை. ஆத்மநஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் ப4வதி - அனைத்திலும் ஒருவனுக்கு மிகப் பிரியமானது ஆத்மாவாகவே உள்ளது; பிரியமான ஆத்மாவின் பொருட்டே அவன் எதையும் விரும்புகிறான். எனவே ஆத்மா மட்டுமே பிரியமானது ஆகும். பகவான் ‘ஸ: மே ப்ரிய:’ எனச் சொல்லும்போது, அவன் ஆனந்தசொரூபமான நானே எனக் கூறவிழைகிறார். அதுவே உண்மையான நான், உலகில் வேறு எந்த பொருளும் எனது பிரியத்திற்குரியது அல்ல. எனவே ‘மே ப்ரிய:’ என்பது இங்கு ‘எனது சொரூபமானவன்_மம ஸ்வரூப:’ என்பதைக் குறிக்கிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மனிதன் சமர்ப்பிக்கும் சொத்துக்களையெல்லாம் ஈஷ்வரன் மதிக்கிறானா? இல்லவே இல்லை. பக்தியையும் பிரேமையையும் எவனொருவன் சமர்ப்பிக்கிறானோ அவனுக்கு மட்டும்தான் ஈஷ்வரனுடைய கிருபை உண்டாகும். தன் பொருட்டு உண்டாகும் பக்திப் பிரேமைகளையும் விவேக வைராக்கியங்களையுமே ஈஷ்வரன் சிலாகித்துக் கொண்டாடுகிறான்.
---------------------------------------------------------------------------------------------
||12.15|| ஞானியின் குணங்களை மேலும் தொடர்கிறார்:
यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च य: ।
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो य: स च मे प्रिय: ।। १५ ।।
யஸ்மாந்நோத்3விஜதே லோகோ லோகாந்நோத்3விஜதே ச ய: ।
ஹர்ஷாமர்ஷப4யோத்3வேகை3ர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: ।। 15 ।।
यस्मात् யஸ்மாத் யாரிடமிருந்து लोक: லோக: உலகமானது
न उद्विजते ந உத்3விஜதே துன்பப்படுவதில்லையோ च य: ச ய: மேலும் யார்
लोकात् லோகாத் உலகத்தினின்று न उद्विजते ந உத்3விஜதே இடர்படுவதில்லையோ
य: च ய: ச இன்னும் யார் हर्ष अमर्ष भय उद्वेगै: ஹர்ஷ அமர்ஷ ப4ய உத்3வேகை3: களிப்பு, கோபம், அச்சம், மனக்கலக்கம் இவைகளினின்று मुक्त: முக்த: விடுபட்டவனோ
स: ஸ அவன் मे மே எனக்கு प्रिय: ப்ரிய: பிரியமானவன்.
யாரிடமிருந்து உலகுக்கு இடர் இல்லையோ, யார் உலகத்திலிருந்து இடர்படுவதில்லையோ, இன்னும் யார் களிப்பு, கோபம், அச்சம், மனக்கலக்கம் இவைகளினின்று விடுபட்டவனோ அவன் எனக்கு பிரியமானவன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்.
விளக்கம்:
=> துன்பப்படுத்துவதுமில்லை, துன்புறுவதுமில்லை:
பகவான் ஞானியின் இலக்கணத்தை மேலும் தொடர்கிறார். யாரால் உலகமானது துன்பப்படுவதில்லையோ அவன் ஞானி — யஸ்மாத் லோக: ந உத்3விஜதே, என்கிறார். இங்கு உலகம் அல்லது மக்கள் என்கிற அர்த்தத்தில் குறிக்கப்பட்டுள்ள ‘லோக:’ எனும் சொல் கூட்டுப்பெயர்சொல் ஒருமையைக் குறிக்கிறது. எந்தவொரு உயிருக்கும் துயரத்தையோ, பயத்தையோ அல்லது சங்கடத்தையோ ஏற்படுத்தாதவன் ஞானி. மேலும், இந்த ஞானியானவன் உலகத்தால் இடர்படுவதில்லை — லோகாத் ந உத்3விஜதே, என்கிறார் பகவான்.
உலகத்தால் ஒருவன் இடர்படுவதில்லை அல்லது பயப்படுவதில்லை என்பது பெரிய வெற்றியாக இருந்தாலும் அது மட்டும் குறிப்பிடப்படுவது இங்கு போதாது. ஏனெனில் சர்வாதிகாரியும் கூட உலகத்தைப் பற்றி பயப்படுவதில்லை. ஆகவேதான் ‘அவனால் உலகுக்கு எந்த இடரும் இல்லை - லோக: ந உத்3விஜதே’ என்பதும் சொல்லப்பட்டாக வேண்டும். அவன் உலகை பயப்படுத்துவதில்லை; உலகைக் கண்டு அவன் பயப்படுவதில்லை.
உலகத்தைப் பற்றிய பயமும், அதைச் சார்ந்திருப்பதும் பெரும்பாலும் சுய-மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த சுய-மதிப்பீடு என்பது ஒருவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதையும் மற்றவர்கள் அவனைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவன் அதை நிர்ணயிப்பதுமாக உள்ளது. என்னைப் பற்றி நான் நினைப்பது உண்மையல்ல என சாஸ்திரம் கூறுகிறது; இப்படியிருக்கையில் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எவ்விதத்தில் அர்த்தம் சேர்க்கப்போகிறது. மற்றவர்களின் புன்னகையும் முகச்சுளிப்புமே ஒருவனது மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், தனது பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் மற்றவர்களின் கருத்துக்கள் சார்ந்ததாக மனிதன் ஆக்கிவிட்டான். ஆனால் இங்கு ஞானியோ உலகத்தால் தொந்தரவு ஏற்பட்டுவிடும் என்ற பயம் இல்லாதவனாக இருக்கிறான். தன்னை தொந்தரவு செய்ய ஒருவன் எவ்வளவு அனுமதிக்கிறானோ அந்த அளவுக்கு மட்டுமே மற்றவர்களால் அவனை தொந்தரவு செய்ய முடியும். ஒருவன் தனது நல்வாழ்வுக்காக மற்றவர்களைச் சார்ந்திருக்கும் வரை அவர்கள் அவனைத் தொந்தரவு செய்வார்கள். நான் மரணத்திற்குட்பட்டவன், குறைபாடுகளுடன் கூடியவன், என்னிடம் நிறைய போதாமைகள் இருக்கின்றன என ஒருவன் நினைத்தால் அவன் மற்றவர்களைச் சாராமல் இருக்க முடியாது. ஆனால் இங்கு பகவானால் வரையறுக்கப்படும் இந்த ஞானியோ, அக்ஷர ப்ரம்மத்தை ஆத்மாவுடன் ஐக்கியப்படுத்தியவன். உடல், மனம் மற்றும் புலன்கள் அபூரணமானதாக இருந்தாலும் தனது சுயசொரூபமான சைத்தன்ய-ஆத்மா பூரணமானது; குறைபாடுகளற்றது என்கிற ஞானத்தை உடையவன். மாறுதல், தேய்தல், அழிதல் முதலிய குறைகளனைத்தும் மித்யாவான அனாத்மாவைச் சேர்ந்தது, அது ஸத் சொரூபமான தனது சுயத்தை எந்த வகையிலும் தொடுவதில்லை என்கிற தெளிவை அடைந்தவன். இந்த ஞானத்தின் பின்னணியுடன் அவன் உலகை அணுகுவதால் அவன் உலகத்திடமிருந்து துன்பத்தை, பயத்தை, சங்கடத்தை அடைவதில்லை.
ஞானியின் மனமானது மிக மிக மென்மையாகவும் அதே சமயத்தில் மிக மிக கடினமானதாகவும் உள்ளது. வஜ்ரத்தைக் காட்டிலும் கடினமாகவும் மலரைக் காட்டிலும் மென்மையாகவும் உள்ளது எனக் கூறப்படுகிறது — வஜ்ராதபி கடோராநி ம்ருதூநி குஸுமாதபி. இப்படிப்பட்ட ஞானியின் மனதை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது. மனதில் மென்மையும் கடினமும் சாதாரண மனிதர்களிடமும் காணப்பட்டாலும், அங்கு சூழ்நிலை என்பது அப்படியே தலைகீழானதாக இருக்கும். அக்ஞானி ஒருவன் மற்றவர்களிடம் சொல்லை விடும்போது பாறை போலவும், சொல்லை வாங்கும்போது மலரைப் போலவும் இருப்பான். இதனால் மற்றவர்களிடம் கடுமையாகவும் தன்னிடம் மற்றவர்கள் இனிமையாக நடந்துகொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்புடனும் இருக்கிறான். ஆனால் ஞானியோ சொல்லை விடும்போது மலரைப் போல மென்மையாகவும், சொல்லை வாங்கும்போது பாறையைப் போன்றுமிருப்பான். எனவே அவன் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. இதனால் அவன் பயப்படுவதுமில்லை; பயப்படுத்துவதுமில்லை. துன்பமடைவதுமில்லை; துன்பப்படுத்துவதுமில்லை.
ஞானியின் இந்த இயல்பு ஒரு முமுக்ஷுவிற்குரிய முக்கியமான சாதனையாக ஆகிறது. பொதுவாக நம்மையறியாமல் யாருக்கு என்ன பலகீனம் என்பதைதான் நமது மனம் முதலில் தேடுகிறது. பிறகு அந்த பலகீனத்தை பயன்படுத்தி நமது காரியத்தை சாதித்துக் கொள்ள முயல்கிறோம். இந்த குணத்தின் காரணமாக அக்ஞானிகள் உலகை பயப்படுத்துகிறார்கள். ஆனால் அஹிம்சையை பின்பற்றும் ஞானி, உலகிற்கு அபயத்தை கொடுக்கிறான்.
=> முக்தன்:
‘முக்த:’ எனில் விடுவிக்கப்பட்டவன்; விடுதலையடைந்தவன் என்பது பொருள். பொதுவாக நாம் ஒரு ஞானியை முக்தன் எனக் கூறும்போது, எதிலிருந்து விடுதலை அடைந்தவன் என்கிற சந்தேகம் எழுகிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பகவான் இங்கு இந்த வரையறையைக் கொடுக்கிறார். இங்கு விடுதலை என்பது புற விடுதலையைக் குறிக்கவில்லை. வேதாந்தம் ஒருவனின் அக விடுதலையைப் பற்றியே கவலைப்படுகிறது. எனவே இங்கு ஒருவனின் உள்ளத்தை பாரமாக மாற்றக்கூடிய பயங்கரமானதான நான்கு விஷயங்கள் பட்டியலிடப்பட்டு அதிலிருந்தெல்லாம் ஒரு ஞானி விடுதலை அடைகிறான் எனக் கூறப்படுகிறது — ஹர்ஷ அமர்ஷ ப4ய உத்3வேகை3: முக்த:.
-> மிகுதியான மகிழ்ச்சி:
‘ஹர்ஷ’ எனில் களிப்பு; அதிக உற்சாகம்; மிகுதியான மகிழ்ச்சியை அடைவதைக் குறிக்கிறது. மகிழ்ச்சி, உற்சாகம் எப்படி ஒருவனை பந்தப்படுத்தும் என்கிற சந்தேகம் எழலாம். எனவே உற்சாகத்திற்கும் அதிக உற்சாகத்திற்குமான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. அதிக உற்சாகம் என்பது ஒரு வகை மகிழ்ச்சிதான். ஆனால் அந்நிலையில் ஒருவன் தனது விவேக சக்தியை, பகுத்தறியும் புத்தியை இழக்கிறான். விவேகத்தை மழுங்கடிக்கும் எந்தவொரு உணர்ச்சியும் நமக்கு விரோதமானது. அதனால் உற்சாகமோ மகிழ்ச்சியோ கூட எல்லையை மீறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதிக பரவசத்தினால் விவேக சக்தி மறைக்கப்படும்போது, ‘இது தற்காலிகமானது’ என்கிற உண்மை மறக்கப்படுகிறது. இதனால் அது தன்னிடம் நிரந்தரமாக இருக்கும் என்கிற தவறான எதிர்பார்ப்பு உண்டாகிறது. மேலும் அது கைநழுவி போகும்போது அவன் மனதளவில் நொருங்கிவிடுகிறான். மேலும் இந்த அதிக உற்சாகம் என்பது உடலளவிலும் கூட ஆபத்தானதே. நற்செய்தி கேட்டு மாரடைப்பால் இறந்தவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். இவ்விதம் விரும்பிய ஒன்றை அடையும்போது ஏற்படும் அதீத மனநிலை ‘ஹர்ஷ’ ஆகும். இந்த மகிழ்ச்சியான உணர்ச்சியின் உச்சம், திகில் மற்றும் கண்ணீர் சிந்துதலாகவும் வெளிப்படுவதாக சங்கரர் சுட்டிக் காட்டுகிறார். ஒரு ஞானி இப்படிப்பட்ட அதிக மகிழ்ச்சி எனும் உணர்விலிருந்து விடுதலை அடைந்தவனாக உள்ளான். எந்தவொன்றும் அவனுக்கு அதீதமான உணர்ச்சி பெருக்கை கொடுக்காது.
-> சகிப்புத்தன்மையின்மை:
‘அமர்ஷ’ என்பது சகித்துக் கொள்ளாமை; எரிச்சலடைதல்; பொறாமை; பொறுமையற்ற தன்மையைக் குறிக்கிறது. மற்றவர்களின் மேன்மையை அல்லது சந்தோஷத்தை பொறுத்துக் கொள்ளமுடியாமல் பொறாமையினால் உண்டாவது இந்த சகிப்புத்தன்மையின்மை ஆகும். மேலும் மற்றவர்களின் நற்பண்புகளைக் பெரிதும் கண்டுகொள்ளாமல் அவர்களிடம் இருக்கின்ற குறையை அல்லது தவறுகளை பிரதானப்படுத்துதலும் ‘அமர்ஷ’ எனப்படுகிறது. தான் விரும்பியபடி விஷயங்கள் நடக்காதபோது, அல்லது உலகம் தன்னை ஏமாற்றுகிறது என்கிற எண்ணம் உண்டாகும்போது ஏற்படுகிற உணர்வு ‘அமர்ஷ’ ஆகும்.
இதில் எவ்வாறாயினும், ஒரு ஞானியானவன் யாரொருவனது சாதனையையும் மகத்துவத்தையும் தனது சொந்த பெருமையாக அங்கீகரிப்பதால் அவன் இக்குணத்திலிருந்து விடுபட்டவனாக இருக்கின்றான். எல்லா சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள ஈஷ்வரனான ப்ரம்ம தத்துவம், ஆத்மாவாகிய என்னிடத்திலிருந்து வேறானது அல்ல என்கிற ஞானம் அவனை எல்லா சிறப்புகளையும் தனது சொந்த சிறப்புகளாகக் காண உதவுகிறது. இதனால் ஞானி மற்றவர்களின் மேன்மையை ரசிக்கின்றான்; மற்றவர்களின் குறைகளை ஏற்றுக் கொள்கின்றான். அவனிடம் பொறாமையோ அல்லது சகித்துக் கொள்ளாமையோ இல்லை.
-> பயவுணர்வு:
‘ப4யம்’ என்பது அடிப்படை பாதுகாப்பின்மையைக் குறிக்கிறது. தனக்கு ஏதேனும் துயரம் வந்துவிடுமோ என்பதில் ஆரம்பித்து மரண பயம் வரை இருக்கின்ற உள்ளார்ந்த பயத்தைக் குறிக்கிறது. பொதுவாக மக்களுக்கு துன்பத்தை விட, துன்பம் வந்துவிடுமோ என்கிற எண்ணம்தான் அதிக அச்சத்தைக் கொடுக்கிறது. புலனின்பங்களை அனுபவிக்கும்போதும் அதனால் நோய் ஏதேனும் ஏற்பட்டுவிடுமோ என்கிற பயமான ‘போகே-ரோகபயம்’ என்பதில் தொடங்கி, குலநாச பயம், அவமான பயம், வலிமையானவர்கள் நம்மை தாக்கி விடுவார்களோ என்கிற பயம், எந்த துறையிலும் இருக்கின்ற எதிராளியைக் குறித்த பயம், உடல் அழகு சென்றுவிடுமோ என்கிற பயம், முதுமை குறித்த பயம், சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்த பயம், நற்குணங்களையும் விமர்சிக்கும் சமுதாயத்தை குறித்த பயம் என சாதாரண மக்கள் அனுபவிக்கின்ற அச்சத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஒருவனின் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை தொடர்கிறது இந்த நச்சரிக்கும் பய உணர்வு. இந்த மோசமான குணத்திலிருந்து ஞானியானவன் விடுபட்டவனாக இருக்கின்றான். ஒரு ஜீவன், கர்மயோகியாக இருக்கின்ற காலங்களில் ஈஷ்வர நியதியில் முழு அர்ப்பணிப்புடன் இருப்பதால் அவன் தனது வாழ்க்கையில் ஒப்பீட்டளவில் பயமின்றி இருக்கின்றான். ஈஷ்வரனைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கின்ற அளவு ஒருவன் தனது வாழ்க்கையை ஆசுவாசமாகக் கழிக்கமுடியும். அனைத்தையும் ஈஷ்வர பிரசாதமாக ஏற்றுக்கொள்வதால் கடந்த காலத்தில் நடந்தவைகள் மற்றும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பவைகளைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் விட்டுவிட முடியும். இதனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி செய்ய வேண்டியதைச் செய்யலாம். இந்தவொரு தனித்துவமான அணுகுமுறை கர்மயோகம் உள்ளிட்ட பிரார்த்தனையினால் கைகூடுகிறது. ஈஷ்வரனை அங்கீகரிக்குமளவு அச்சவுணர்வு குறைவாக ஆகிறது.
ஆனால் பயத்திலிருந்து முழுமையான விடுதலை என்பது ஞானத்தினால் மட்டுமே அடையப்படக்கூடியது. ‘த்3விதீ3யாத்வை ப4யம் ப4வதி’ என்பது சுருதி வாக்கியம். இரண்டாவது பொருள் இருக்கின்ற பொழுது பயம் உண்டாகிறது. எனவே இரண்டாவது விஷயம் இல்லை என்ற ஞானத்தினால் மட்டுமே பயம் முழு விலக்கத்தை அடைகிறது. நான் பரப்ரம்மனாக இருந்தாலும், எனக்கு இணையான மெய்மையையுடைய இனியொரு பரப்ரம்மம் இருந்தால் பயம் உருவாகிறது. ஏனென்றால் அதிகாரம், ஏமாற்றுதல், ஒப்பிடுதல், தனிமை, பிரிவு போன்றவைகளுக்கான சாத்தியங்கள் ஏற்படுவதால் இரண்டாவது விஷயம் இருக்கும்போது மட்டுமே அச்சம் உண்டாகிறது. ‘ஆத்மா ஏகம்; இரண்டற்றது; பூரணமானது’ என்கிற ஞானத்தினால் ஞானி இருமையற்ற பார்வையை உடையவனாக இருக்கின்றான். இருமையற்ற இடத்தில் அச்சவுணர்வு இருப்பதில்லை.
-> மனக்கலக்கம்:
‘உத்3வேகை3:’ எனில் மனச்சோர்வு; கவலை. இது பொறாமை, சகிப்புத்தன்மையின்மை, பயம் முதலிய எதிர்மறை உணர்ச்சிகளால் உண்டாகும் மனக்கலக்கத்தை குறிக்கிறது. இவ்வகையான மனத் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டவனாக இந்த பரா-பக்தன் இருக்கின்றான். ‘ஆத்மா அஸங்கமானது; ஆனந்த சொரூபமானது’ என்பதில் உறுதியை அடைந்த ஞானிக்கு மன உளைச்சல்கள் என எதுவுமில்லை.
சாதகன் ஒருவன் இந்த நிலையை அடைவதென்பது படிப்படியான செயல் ஆகும். ஏழாவது அத்தியாயத்தில் கூறப்பட்டதைப் போல உலகத்தை சார்ந்திருத்தலில் ஆரம்பித்த பயணம் கடவுளைச் சார்ந்திருத்தலுக்கும், பின்னர் சுயசார்பு நிலைக்கும் வந்தடைய வேண்டும். உலகத்தை மையமாக கொண்டிருக்கும் வாழ்க்கையை கர்மயோகத்தின் துணைகொண்டு ஈஷ்வர-மையமான வாழ்க்கையாக மாற்றவேண்டும். பிறகு ஞானயோகத்தின் துணையுடன் சுயசொரூபத்தை பற்றிய ஞானத்தை அடைந்து அதை சுயசார்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும். இந்த சுயசார்பு நிலையே மோக்ஷ நிலை; விடுதலையான நிலை; ஜீவன்-முக்தி நிலை. ‘இந்த ஜீவன்-முக்தன் நானாகவே இருக்கின்றான். இப்படிப்பட்ட முக்தன் எனக்கு பிரியமானவன்— ஸ மே ப்ரிய:’, என்கிறார் பகவான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பிறருடைய குணதோஷங்களைப் பற்றிப் பேசுவதில் காலத்தைச் செலவிடுபவன் தன் காலத்தை வீணிலே கழிப்பவனாகிறான். ஏனெனில் அப்படிச் செலவிடப்பட்ட காலம் தன்னையாவது ஈஷ்வரனையாவது பற்றிச் சிந்திக்கப்படாமல் பிறரைப்பற்றி யாதொரு பிரயோஜனமுமில்லாமல் சிந்திக்கப்பட்ட காலமாகிறது.
---------------------------------------------------------------------------------------------