||11.24||
नभ:स्पृशं दीप्तमनेकवर्णं व्यात्ताननं दीप्तविशालनेत्रम् ।
दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं च विष्णो ।। २४ ।।
நப4:ஸ்ப்ருச1ம் தீ3ப்தமநேகவர்ணம்
வ்யாத்தாநநம் தீ3ப்தவிசா1லநேத்ரம் ।
த்3ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதி2தாந்தராத்மா
த்4ருதிம் ந விந்தா3மி ச1மம் ச விஷ்ணோ ।। 24 ।।
विष्णो விஷ்ணோ விஷ்ணுவே नभ:स्पृशं நப4:ஸ்ப்ருச1ம் வானைத் தீண்டும் दीप्तम् தீ3ப்தம் ஜ்வலிக்கின்ற अनेक वर्णं அநேக வர்ணம் பல நிறங்களையுடைய व्यात्त आननं வ்யாத்த ஆநநம் திறந்த வாய்களையுடைய दीप्त विशाल नेत्रम् தீ3ப்த விசா1ல நேத்ரம் ஜ்வலிக்கின்ற விசாலமான கண்களையுடைய
त्वां த்வாம் உங்களை दृष्ट्वा हि த்3ருஷ்ட்வா ஹி பார்த்ததும் प्रव्यथित अन्तरात्मा ப்ரவ்யதி2த அந்தராத்மா மனம் நடுங்கியவனாய் धृतिं த்4ருதிம் தைரியத்தையும் शमं च ச1மம் ச அமைதியையும்
न विन्दामि ந விந்தா3மி காண்கிறேனில்லை.
விஷ்ணுவே, வான் அளாவிப் பல நிறங்களுடன் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களை உடைய, கனல் வீசும் விசாலக் கண்களையுடைய உங்களைக் கண்டு கலங்கிய நான் தைரியத்தையும் அமைதியையும் காண்கிறேனில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது, திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது, இளைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை, யான் அமைதி காணவில்லை.
விளக்கம்:
அர்ஜுனன் கிருஷ்ணரையே எங்கும் பார்க்கிறான்; எனவே, இப்போது அவரை ‘விஷ்ணு’ என்கிற மிகப் பொருத்தமான வார்த்தையை கொண்டு அழைக்கிறான். ‘விஷ்ணு’ எனில் எல்லாவற்றிலும் இருப்பவர், எங்கும் வியாபிப்பவர் என்று பொருள். அவர் இப்போது உண்மையாகவே விஷ்ணுவாகவே காணப்படுகிறார். அர்ஜுனன் இங்கே கிருஷ்ணரை வானத்தை தொடும் ஒருவராகப் பார்க்கிறான் — நப4:ஸ்ப்ருச1ம், அதாவது எந்த முடிவுமற்று அவரது ரூபமே எங்கும் வியாபித்திருக்கிறது.
=> அநேக வர்ணம்:
மேலும் இந்த வடிவம் மிகவும் பிரகாசமானதாகவும் அநேக-வர்ணத்துடன் கூடியதாகவும் இருக்கிறது. ‘வர்ண’ எனில் எதைக் கொண்டு ஒன்று புரிந்துகொள்ளப்படுகிறதோ அது, வர்ண்யதே அநேந இதி வர்ண:. எனவே இது வடிவம் அல்லது நிறத்தைக் குறிக்கலாம். இந்த ரூபம் பயமுறுத்தும் பல வடிவங்களுடன் கூடி இருப்பதாக சங்கரர் விளக்குகிறார். பாம்பு போன்ற ஊர்பவைகள் சிலருக்கு பயத்தைக் கொடுக்கும்; சிலருக்கு கரப்பான் பூச்சியும் கூட அச்சத்தை உண்டாக்குகிறது. சிலவகையான கடல்வாழ் உயிரினங்கள் உண்மையில் பயம் அளிப்பவைகளாக உள்ளன. நாம் பார்த்திராத பல வடிவங்களை, அர்ஜுனன் இப்போது பார்க்கிறான் - கொம்புகளும் கோரைப் பற்களும் கொண்ட வெவ்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்கள் அவனை அச்சம் கொள்ளச் செய்கின்றன. வித்தியாசமான உடலமைப்புகளைக் கொண்ட வித்தியாசமான வடிவங்கள், ஊர்பவைகள், பறக்கும் விலங்குகள், நடக்கும் விலங்குகள், அதுமட்டுமல்லாமல் பலதரப்பட்ட மனிதர்கள், விண்ணுலக உயிரினங்கள் மற்றும் தேவர்கள் போன்ற அனைத்தையும் பார்க்க முடிகிறது. சில அழகானவைகளாகவும், சில பயமுறுத்துபவைகளாகவும் உள்ளன. இவ்விதம் பலவிதமாகத் தொகுக்கப்பட்ட வடிவங்களைக் கொண்டவன் அநேக-வர்ணன். இது முழுவதுமாக ஒரு வடிவமாக இருந்தாலும், அர்ஜுனன் அதில் இந்த பலவகையான வடிவங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கிறான், ஆகவே பயப்படுகிறான்.
=> அர்ஜுனனின் மனக் கலக்கம்:
‘திறந்த வாய்களை உடைய உங்களைப் பார்க்கிறேன், வ்யாத்த ஆநநம்’ எனக் கூறுகிறான். இதன் பொருள், எல்லாவற்றையும் விழுங்குபவராக இருக்கிறார்; காலமாக இருக்கிறார். மேலும், ஜ்வலிக்கின்ற பெரிய கண்களை உடையதாக இந்த ரூபம் இருக்கின்றது. இப்படியொரு வடிவத்தில் கிருஷ்ணரைப் பார்த்த அர்ஜுனன், ‘எனது மனம் மிகவும் கலக்கமடைந்துள்ளது, ப்ரவ்யதி2த அந்தராத்மா’, மனம் நடுங்கியவனாக இருக்கின்றேன், எனக்கு தைரியமும் அமைதியும் இல்லை — த்4ருதிம் ச1மம் ச ந விந்தா3மி , என்கிறான். அர்ஜுனன் உண்மையிலேயே மிகவும் பீதியடைந்துள்ளான். இதற்குமேலும் விஷ்வரூப வடிவத்தை அவனால் தாங்க முடியவில்லை. இந்த ரூபத்தில் நல்ல மற்றும் பயமுறுத்தும் இரு அம்சங்கள் இருந்தபோதிலும், பயமுறுத்துபவைகள் அனைத்து நல்லவற்றையும் மறைத்துவிட்டன. விஷ்வரூபத்தை பார்த்த தருணத்தில் அதன் மகத்துவத்தினால் அர்ஜுனன் முதலில் ஆச்சரியத்தை அடைந்திருந்தான். ஆனால் பயமுறுத்தும் அம்சத்தின் மீது கவனம் சென்றவுடன் இப்போது அதை மட்டுமே பார்த்தவனாய் தைரியத்தையும் அமைதியையும் இழந்தவனாக இருக்கின்றான். பொதுவாக மனமானது இப்படித்தான் செயல்படுகிறது. தவறான விஷயத்தை பார்க்க ஆரம்பித்த சில காலத்திற்குள்ளாகவே அனைத்தும் தவறானதாகத் தோன்ற ஆரம்பித்துவிடும். ஏனெனில் மனம் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை உருவாக்கிவிடுகிறது. இங்கு ஆச்சரியத்தால் நிறைந்த அர்ஜுனனின் மனம் இப்போது பயத்தினால் நிறைந்து காணப்படுகிறது. பய காரணத்தை அடுத்த சுலோகத்தில் மேலும் விரிவாகக் கூறுகிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.25|| மனக்கலத்தினால் மேலும் விளைந்தது யாது?
दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्ट्वैव कालानलसन्निभानि ।
दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास ।। २५ ।।
த3ம்ஷ்ட்ராகராலாநி ச தே முகா2நி
த்3ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபா4நி ।
தி3சோ1 ந ஜாநே ந லபே4 ச ச1ர்ம
ப்ரஸீத3 தே3வேச1 ஜக3ந்நிவாஸ ।। 25 ।।
देवेश தே3வேச1 தேவர்களின் தலைவா दंष्ट्रा करालानि த3ம்ஷ்ட்ரா கராலாநி பயமுறுத்துகிற கோரைப் பற்களையுடைய काल अनल सन्निभानि च கால அநல ஸந்நிபா4நி ச பிரளய கால அக்கினிக்கு ஒப்பானவும் ते தே உங்களுடைய मुखानि முகா2நி முகங்களை दृष्ट्वैा एव த்3ருஷ்ட்வா ஏவ பார்த்த மாத்திரத்திலேயே दिशो न जाने தி3சோ1 ந ஜாநே திசைகளை அறிகிறேனில்லை शर्म ச1ர்ம அமைதி
न लभे च ந லபே4 ச அடைகிறேனில்லை जगन्निवास ஜக3ந்நிவாஸ ஜகத்துக்கு ஆதாரமாயிருப்பவரே
प्रसीद ப்ரஸீத3 அருள்புரிக.
தேவர்களின் தலைவனே, அச்சமூட்டும் கோரைப் பற்களுடன் ஊழித்தீக்கு ஒப்பான உங்களது முகங்களைக் கண்டதும் எனக்கு திசைகள் தெரியவில்லை; அமைதியும் அடையவில்லை. வையகத்தின் இருப்பிடமே, அருள்புரிக.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அஞ்சுதரும் பற்களை யுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க.
விளக்கம்:
=> பய காரணம்:
உங்களது முகங்கள் அனைத்தும் பயமுறுத்துகிற கோரைப் பற்களைக் கொண்டுள்ளன — த3ம்ஷ்ட்ரா கராலாநி, என்கிறான் அர்ஜுனன். மனிதனின் கோரைப் பற்களும் கூட மனதிற்குகந்த இனிமையான காட்சி எனக் கூறிவிட முடியாது. பூனை அல்லது நாயின் கோரைப் பற்களோ, அல்லது இன்னும் அதிகமாக புலி போன்ற காட்டு விலங்குகளின் கோரைப் பற்களோ கடுமையான தோற்றத்தைக் கொண்டதாகவே இருக்கின்றன. அவைகள் சதையைக் கிழிப்பதற்காக இருப்பதால், எப்போதும் பயமுறுத்துபவைகளாகவும், சில சமயங்களில் வெறுப்பூட்டுபவைகளாவும், சில சமயங்களில் மனதிற்கு விரக்தியை அளிப்பவைகளாகவும் இருக்கின்றன. இங்கு விஷ்வரூபத்தில் பார்க்கின்ற அனைத்து முகங்களும் இத்தகைய, கிலியை உண்டுபண்ணுகிற நீண்ட கோரைப் பற்களுடன் இருப்பதால் அர்ஜுனன் மிகவும் பயந்துள்ளான்; அமைதியை இழந்துள்ளான்.
=> பிரளய கால அக்னி:
அர்ஜுனன் தான் பார்க்கின்ற இந்தக் காட்சியை பிரளயத்திற்கு ஒப்பிடுகிறான். மிகப் பெரிய, கட்டுப்பாடற்ற பயங்கரமான நெருப்பு முழு சிருஷ்டியையும் விழுங்குவதால் பிரளயம் உண்டாகிறது எனச் சொல்லப்படுகிறது. அனைத்தையும் உட்கொள்ளவல்ல அந்த நெருப்பு ‘கால-அநல’ எனப்படுகிறது. அநல எனில், ஒருபோதும் போதுமானதாக இல்லாதது — அலம் ந வித்3யதே யஸ்ய இதி அநல:. அதாவது எவ்வளவு கொடுக்கப்படுகிறதோ அவ்வளவு அதிகமாக அது உண்கிறது. அப்படிப்பட்ட ஒன்று நெருப்பு ஆகும். நெருப்பிற்கு தீனியாக எவ்வளவு அளித்தாலும் அது அவ்வளவையும் உண்டு மீண்டும் கோரி நிற்கிறது. இங்கு அர்ஜுனனால் பார்க்கப்படும் இந்த நீண்ட கோரைப் பற்களுடன் கூடிய வாய்கள், கண்ணில் பட்டதையெல்லாம் விழுங்குவதை அவன் நெருப்போடு, அதுவும் பிரளயகாலத்தில் அனைத்தையும் அழிக்கவல்ல ஊழித்தீக்கு ஒப்பிடுகிறான்.
=> திசைகள் புலப்படவில்லை:
மேலும், ‘எனக்கு திசைகள் தெரியவில்லை, தி3சோ1 ந ஜாநே’ என்கிறான். ‘இந்த விஷ்வரூபத்தைப் பார்த்தால் எது கிழக்கு, எது மேற்கு, எது வடக்கு, எது தெற்கு என்று தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் நீங்களே இருக்கிறீர்கள் என்பதால் எனக்கு எதுவும் புலப்படவில்லை’. ஒரு சூரியனை அல்லது சந்திரனை இலக்காக வைத்துக் கொண்டு திசைகள் அறியப்படுகின்றன. பார்க்குமிடமெங்கும் பரஞ்சோதியாயிருப்பதால் திக்குகள் தென்படாமற் போய்விட்டன. இதனால் எங்கு சூரியன் உதிக்கிறான்? எங்கு மறைகிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் எல்லா வகையான சூரியர்களையும் சந்திரர்களையும் ஒரே நேரத்தில் பார்க்கிறான்; ஆகையினால் அது பகலா அல்லது இரவா என்பதும்கூட அவனுக்குத் தெரியவில்லை. கண்கொண்டு காண இயலாத அளவு அனைத்து சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் பிரகாசிக்கிறது. இதனால் அவன் திகைத்து, பயந்து அமைதியிழந்து காணப்படுகிறான். ‘நான் அமைதியை அடையவில்லை,’ என்கிறான். ஆரம்பத்தில் இருந்த ஆச்சரியம் முற்றிலும் மறைந்து இனி இந்த விஷ்வரூபத்தை காண்பதில் மகிழ்வில்லை எனும் நிலைக்கு அர்ஜுனன் வந்துவிட்டான். எனவே தனது அமைதியை மீட்டெடுக்கும் பொருட்டு பகவானிடம் கோருகிறான். ‘தேவர்களின் தலைவா, வையகத்தின் இருப்பிடமாக உள்ளவரே, என்னை ஆசிர்வதியுங்கள், எனக்கு அருள் புரியுங்கள்’ என பிரார்த்திக்கிறான்.
போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற அர்ஜுனனின் சந்தேகத்தை இப்போது அவன் பார்க்கும் காட்சி தீர்க்கிறது. அதை அடுத்த சுலோகத்தில் விவரிக்கிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.26||
अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्रा: सर्वे सहैवावनिपालसंघै: ।
भीष्मो द्रोण: सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपि योधमुख्यै : ।। २६ ।।
அமீ ச த்வாம் த்4ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா:
ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை4: ।
பீ4ஷ்மோ த்3ரோண: ஸூதபுத்ரஸ்ததா2ஸௌ
ஸஹாஸ்மதீ3யைரபி யோத4முக்2யை: ।। 26 ।।
अवनि पाल संघै: सह एव அவநி பால ஸங்கை4: ஸஹ ஏவ பார் ஆளும் வேந்தர் கூட்டத்துடனே
अमी च அமீ ச இதோ இந்த धृतराष्ट्रस्य த்4ருதராஷ்ட்ரஸ்ய திருதராஷ்டிரனுடைய
सर्वे पुत्रा: ஸர்வே புத்ரா: எல்லா புத்திரர்களும் तथा ததா2 அப்படியே भीष्म: பீ4ஷ்ம: பீஷ்மர்
द्रोण: த்3ரோண: துரோணர் असौ सूतपुत्र: அஸெள ஸூதபுத்ர: இந்த சூதபுத்திரன் (கர்ணன்)
अस्मदीयै: अपि அஸ்மதீ3யை: அபி நம்மவர்களிலும் योधमुख्यै: सह யோத4முக்2யை: ஸஹ முக்கியமான யுத்த வீரர்களுடன் त्वां த்வாம் உங்கள் (வாயினுள் புகுகிறார்கள்).
திருதராஷ்டிரனுடைய புத்திரர்கள் எல்லாரும் பார் ஆளும் வேந்தர் கூட்டத்துடனும், பீஷ்மர், துரோணர், சூதபுத்திரனுடனும், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் உங்கள் (வாயினுள் புகுகிறார்கள்) …
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும், நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும்...
விளக்கம்:
இந்த சுலோகத்தின் தொடர்ச்சியாக அடுத்த சுலோகம் அமைவதால், இதன் பொருள்விளக்கத்தை அடுத்த சுலோகத்துடன் சேர்த்து அங்கு காண்போம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.27||
वक्त्राणि ते त्वरमाणा विशन्ति दंष्ट्राकारालानि भयानकानि ।
केचिद्विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गै: ।। २७ ।।
வக்த்ராணி தே த்வரமாணா விச1ந்தி
த3ம்ஷ்ட்ராகராலாநி ப4யாநகாநி ।
கேசித்3விலக்3நா த3ச1நாந்தரேஷு
ஸந்த்3ருச்1யந்தே சூர்ணிதைருத்தமாங்கை3: ।। 27 ।।
त्वरमाणा த்வரமாணா பரபரப்புடன் ते தே உங்களுடைய
दंष्ट्रा कारालानि த3ம்ஷ்ட்ரா கராலாநி கோரைப் பற்களுடைய भयानकानि ப4யாநகாநி பயங்கரமான वक्त्राणि வக்த்ராணி வாய்களுள் विशन्ति விச1ந்தி நுழைகிறார்கள் केचित् கேசித் சிலர்
चूर्णितै: उत्तम अङ्गै: சூர்ணிதை: உத்தம அங்கை3: பொடி செய்யப்பட்ட தலைகளோடு
दशनान्तरेषु த3ச1நாந்தரேஷு பல்லிடுக்குகளில் विलग्ना: விலக்3நா: அகப்பட்டு
संदृश्यन्ते ஸந்த்3ருச்1யந்தே காணப்படுகிறார்கள்.
பயங்கரமான கோரைப்பற்களையுடைய உங்களது வாய்களுள் வேகமாக நுழைகிறார்கள். சிலர் பொடிபட்ட தலைகளோடு உங்களது பல்லிடுக்குகளில் அகப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர்.
விளக்கம்:
=> எதிர்ப் படையின் வீரர்கள்:
விஷ்வரூபத்தை பார்த்துக் கொண்டிருக்கும் அர்ஜுனன், ‘இவர்கள் அனைவரும் கொடிய பற்களையுடைய உங்களது பயங்கரமான வாய்களுள் வேகமாக நுழைகிறார்கள் — தே த3ம்ஷ்ட்ரா கராலாநி ப4யாநகாநி வக்த்ராணி த்வரமாணா விச1ந்தி’, என்கிறான். அப்படி அவன் யாரையெல்லாம் பார்க்கின்றான்? திருதராஷ்டிரனின் மகன்கள் அனைவரையும், த்4ருதராஷ்ட்ரஸ்ய ஸர்வே புத்ரா:, மேலும் புவி ஆளும் வேந்தர் கூட்டத்துடனே அவரது வாய்களுள் பிரவேசிக்கிறார்கள், அவநி பால ஸங்கை4: ஸஹ ஏவ. ‘அவநி’ எனில் பூமி, ‘அவநி-பால’ என்பது பூமியைக் காப்பவர்களை, ஆட்சியாளர்களை, இங்கு வேந்தர்களைக் குறிக்கிறது. வரவிருக்கும் போருக்காக பல்வேறு அரசர்களும் தலைவர்களும் மாபெரும் வீரர்களும் அங்கு கூடியுள்ளனர்; அவர்கள் அனைவரும் இப்போது இந்த வாய்களுள் மிக வேகமாக நுழைவதைக் காண்கிறான்.
மேலும் எதிர்ப் படையைச் சார்ந்த, குரு வம்சத்தின் மிக மூத்தவரான, கம்பீரமான, வெல்ல முடியாதவராக அறியப்படும் பீஷ்மரும், தனது வில்வித்தை ஆச்சாரியருமான துரோணரும் நுழைவதைப் பார்க்கிறான். அதேபோல, தேரோட்டியின் மகனான கர்ணனும் நுழைகிறான். கர்ணன் குந்தியின் மகனாக இருந்தபோதிலும், அது கிருஷ்ணரையும், குந்தியையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
=> தங்களது அணி வீரர்கள்:
இனி, திருஷ்டத்யும்னன், துருபதன், அபிமன்யு, விராடன் போன்ற தனது பக்கத்து முக்கிய வீரர்கள் நுழைவதையும் பார்க்கிறான். நம்மவர்களிலும் முக்கியமான யுத்த வீரர்கள் நுழைகிறார்கள் — அஸ்மதீ3யை: அபி யோத4முக்2யை:.
‘இவர்கள் அனைவரும் உங்கள் வாய்களுள் நுழைகிறார்கள்’ என்கிறான் அர்ஜுனன். அதுவும் சாதாரணமாக நுழையவில்லை, அவசரத்துடன் மிக விரைவாக இந்த அழிவுவெனும் வாய்களுள் வீழ்கிறார்கள் — த்வரமாணா விச1ந்தி. அப்போது அந்த வாய்கள் எப்படிப்பட்டதாக உள்ளன என்பதையும் அர்ஜுனன் வர்ணிக்கிறான். பீதியை உண்டாக்குகிற, ப4யாநகாநி, வெளியே தெரிகிறவளவு மிக நீண்ட கோரைப்பற்களை வரிசை வரிசையாகக் கொண்டதாக இந்த வாய்கள் இருக்கின்றன, த3ம்ஷ்ட்ரா கராலாநி. இந்த பயங்கரமான பற்கள் முழுவதும் வெளியே தெரியும்படி இருப்பதால் உள்ளே நுழைந்தவர்களில் சிலர் பல் இடுக்குகளில் சிக்கிக் கொண்டிருப்பதும் தெரிகிறது — த3ச1நாந்தரேஷு விலக்3நா:. மேலும் சிலரின் தலை நசுக்கப்பட்டு, காலம் என்னும் வாயால் பொடி செய்யப்படுபதைப் பார்க்கிறான், ப்ர்ணிதை: உத்தம அங்கை3: ஸந்த்3ருச்1யந்தே.
பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைக் காட்டுகிறார். பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் மற்றும் பலர் அவரால் விழுங்கப்படுகின்றனர். காலம் என்னும் பற்களால் மெல்லப்படுகின்றனர்.
இவர்களனைவரும் எவ்விதம் இந்த அழிவின் வாய்களுள் நுழைகிறார்கள்? அர்ஜுனன் இதை இரண்டு உதாரணங்களைப் பயன்படுத்தி, அடுத்து வரும் இரு சுலோகங்களில் விவரிக்கிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------