செவ்வாய், 16 ஜூலை, 2024

விஷ்வரூபதர்ஷன யோகம் 11.21 - 11.23

||11.21|| அர்ஜுனனின் வர்ணனை தொடர்கிறது:

अमी हि त्वां सुरसङ्घा विशन्ति केचिद्भीता: प्राञ्जलयो गृणन्ति

स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसङ्घा: स्तुवन्ति त्वां स्तुतिभि: पुष्कलाभि: ।। २१ ।।

அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா4 விச1ந்தி 

கேசித்3பீ4தா: ப்ராஞ்ஜலயோ க்3ருணந்தி  

ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்34ஸங்கா4

ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி4: புஷ்கலாபி4: ।। 21 ।।


अमी सुर सङ्घा:  அமீ ஸுர ஸங்கா4:  இந்த தேவ கூட்டங்கள்    त्वां  हि  த்வாம் ஹி  உங்களிடமிருந்தே   

विशन्ति  விச1ந்தி  பிரவேசிக்கிறார்கள்   केचित्  கேசித்  சிலர்   भीता:  பீ4தா:  பயந்தவர்களாய்   

प्राञ्जलय:  ப்ராஞ்ஜலய:  கைகூப்பியவர்களாய்    गृणन्ति  க்3ருணந்தி  புகழ்கிறார்கள்    

महर्षि सिद्ध सङ्घा:  மஹர்ஷி ஸித்34 ஸங்கா4:  மஹரிஷி சித்தர் கூட்டங்கள்    

स्वस्ति इति उक्त्वा  ஸ்வஸ்தி இதி உக்த்வா  வாழ்கவென்று உரைத்து    पुष्कलाभि:  புஷ்கலாபி4:  பூரணமான   स्तुतिभि:  ஸ்துதிபி4:  ஸ்துதிகளால்    त्वां स्तुवन्ति   த்வாம் ஸ்துவந்தி  உங்களைப் போற்றுகிறார்கள்.


இந்த தேவர் கூட்டங்கள் உங்களிடம் புகுகின்றனர். சிலர் அஞ்சிக் கைகூப்பி நின்னைப் புகழ்கின்றனர். மஹரிஷி சித்தர் கூட்டத்தார் வாழ்கவென்று நிறைபுகழ் புரிந்து நின்னைப் போற்றுகின்றனர்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார்.


விளக்கம்:

நர வடிவெடுத்து வந்துள்ள வசுக்கள் முதலிய தேவகணங்கள் (ஸுர ஸங்கா4:) தங்கள் பூலோக லீலையை முடித்துக் கொண்டு பகவானிடத்து ஒடுங்குகின்றன. இந்த தேவ கூட்டங்கள் பூமியின் பாரத்தை அகற்றும் பொருட்டு இறங்கிவந்த நல்ல மனிதர்கள் என சங்கரர் தனது பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார். மால்தூசியன் கோட்பாடு கூறுவது போல் இந்த பூமிச்சுமை மக்கள் தொகையினால் அல்ல. பொருளாதார வல்லுநரான ராபர்ட் தாமஸ் மால்தஸ் அவர்களின் கூற்றுப்படி, மக்கள்தொகையானது அதன் வாழ்வாதாரத்தை விட வேகமாக அதிகரிக்கிறது மற்றும் போர் முதலிய காரணிகள் அதைச் சரிசெய்யாவிடின், பரவலான வறுமை மற்றும் சீரழிவு இருக்கும். ஆனால் உண்மையில் இந்த பூமியை பாரமாக்குவது மக்கள் தொகையல்ல. அதர்மத்தின் வளர்ச்சியே பூமியை பாரமாக்குகிறது. நிறைய நல்லவர்களின் சகவாசம் இடையூறு அல்ல; ஆனால் ஒரு பிரச்சனையான நபர் இருந்தால், எல்லாம் அழிக்கப்படலாம். இது ஒரு மோசமான வேர்க்கடலையை சாப்பிடுவது போன்றது. மற்ற வேர்க்கடலைகள் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், கெட்டுப்போன ஒரு கடலை அந்த அனுபவத்தை பாழ்படுத்திவிடும்

அதுபோல, இங்கு பூமியின் மீதுள்ள சுமையாக இருப்பது அதர்மம், ப்ராசுர்ய. எனவேதான் எப்பொழுதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் மேலெழுகிறதோ அப்பொழுதெல்லாம் அவதரிக்கிறேன்யதா யதா ஹி தர்மஸ்ய.., என்றார் பகவான். அதர்மத்தின் சுமையைக் குறைக்க இந்த தேவக்கூட்டங்கள்(ஸுர ஸங்கா4:) வருகிறார்கள். ‘இவர்கள் அனைவரும் உங்களுள் புகுகிறார்கள்என்கிறான் அர்ஜுனன். இதன் பொருள், இவ்வானவர் அனைவரும் பகவானிடத்து ஒடுங்குகிறார்கள்; அவர்கள் இறப்பதை நான் காண்கிறேன்.  

மேலும் பகவானின் இந்த உக்கிர விளையாட்டை ஒருவாறு அறிந்துகொண்ட சிலர் தங்களது தலைமீது கைகூப்பி நடுங்கி வணங்குகிறார்கள். அச்சத்தின் காரணமாக நிறைமொழியும்கூட அவர்களால் கூற இயலவில்லை. உலகுக்குக் கேடுகள் பல வரப்போகின்றது என குறிப்பால் அறிந்த நாரதர் போன்ற மஹரிஷிகளும், கபிலர் போன்ற சித்தர்களும் சம்பூரண ஸ்தோத்திரங்களாலும், சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்த புகழ்களாலும், ‘உலகுக்கு மங்களம் உண்டாகுகஎன்று போற்றுகிறார்கள். ‘உடலில் உள்ள கேடுகளை நீக்கும்பொருட்டு நோய் வருவதுபோல உலகில் உள்ள கேடுகளை நீக்க இறைவன் இத்தகைய ஸம்ஹாரச் செயலைச் செய்க. அதனின்று நன்மை விளைகஎன்ற கருத்தடங்கிய பாசுரங்களைப் பேரறிஞர்கள் பாடிப் போற்றுகிறார்கள், ஸ்வஸ்தி இதி உக்த்வா புஷ்கலாபி4: ஸ்துதிபி4: ஸ்துவந்தி. இறைவனது ஆணையால் நடைபெறும் உலகச் செயல்களில் பொருள்படாதவை என ஒன்றுமில்லை என்பது பேரறிஞர்களுக்கு விளங்குகிறது.

இந்த விஷ்வரூபத்தை திவ்விய கண்களில்லாமல் பார்க்க முடிந்த மற்றவர்களைப் பற்றி அர்ஜுனன் அடுத்த சுலோகத்தில் சொல்லுகிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.22|| விஷ்வரூபத்தைப் பார்க்கும் மற்றும் சிலர்:

रुद्रादित्या वसवो ये साध्या विश्वेश्विनौ मरुतश्चोष्मपाश्च।

गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा: वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे ।। २२ ।।

ருத்3ராதி3த்யா வஸவோ யே ஸாத்4யா 

விச்1வேऽச்1விநௌ மருதச்1சோஷ்மபாச்1

3ந்த4ர்வயக்ஷாஸுரஸித்34ஸங்கா4 

வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாச்1சைவ ஸர்வே ।। 22 ।।


रुद्र आदित्या:  ருத்3 ஆதி3த்யா:  ருத்திரர்கள், ஆதித்தியர்கள்   वसव:  வஸவ:  வசுக்கள்   ये  யே  யார்   

साध्या:  ஸாத்4யா:   சாத்தியர்களும்    विश्वे  விச்1வே  விஷ்வதேவர்   

अश्विनौ  அச்1விநௌ  அஸ்வினிகள் இருவரும்   मरुत:   மருத:   மருத்துக்களும்   

ऊष्मपा:   ஊஷ்மபா:   உஷ்மபர் என்கிற பித்ரு தேவதைகளும்   गन्धर्व यक्ष असुर सिद्ध सङ्घा:  3ந்த4ர்வ யக்ஷ அஸுர ஸித்34 ஸங்கா4:  கந்தவர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சித்தர்கள் இவர்களின் கூட்டங்கள்    

सर्वे एव  ஸர்வே ஏவ  எல்லோருமே    विस्मिता:  விஸ்மிதா:  வியப்படைந்து   त्वां  த்வாம்   உங்களையே    वीक्षन्ते  வீக்ஷந்தே  பார்க்கிறார்கள்.


ருத்திரர், ஆதித்தியர், வசுக்கள், சாத்தியர், விஷ்வேதேவர், அஸ்வினிதேவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இவர்கள் கூடி வியப்படைந்து உங்களையே பார்க்கிறார்கள்.

 

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர்.


விளக்கம்:

அனைத்து தேவர்களும், பதினொரு ருத்திரர்களும், பன்னிரண்டு ஆதித்தியர்களும், எட்டு வசுக்களும், சாத்தியர்கள் எனப்படும் ஒரு குறிப்பிட்ட தேவர்களும் அர்ஜுனனுடன் இந்த விஷ்வரூபத்தைப் பார்க்கின்றனர். மேலும் விஷ்வேதேவர்கள், இரண்டு அஸ்வினி குமாரர்கள் மற்றும் மருத்-தேவர்களின் ஏழு குழுக்கள் பார்க்கின்றனர். பின்னர், உஷ்மபர் என்கிற பித்ரு தேவதைகளும் மற்றும் கந்தவர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சித்தர்கள் இவர்களின் கூட்டங்களும் ஆச்சரியமடைந்து உங்களையே காண்கின்றனர்விஸ்மிதா: த்வாம் வீக்ஷந்தே. தேவலோக இசைக் கலைஞர்கள் கந்தர்வர்கள் ஆவர். செல்வத்தின் அதிபதியான குபேரனின் தலைமையில் யக்ஷஸ் என்று அழைக்கப்படும் மற்றொரு வகை வானவர்கள் உள்ளனர். மேலும் விஷ்வரூபத்தை பார்க்கின்ற இந்த கூட்டத்தில் அசுரர்களும் உள்ளனர். இவர்கள் பொதுவாக நம்மால் எண்ணப்படுகின்ற சாதாரணமான அசுரர்கள் அல்ல, ஏனெனில் அசுரர்களால் ஈஷ்வரனைப் பார்க்க முடியாது. பிரஹலாதனின் மகனும் மகாபலியின் தந்தையுமான விரோசனன் போன்ற அசுர குலத்தில் பிறந்த மேன்மையானவர்களை இச்சொல் குறிக்கிறது. மேலும் கபிலர் உள்ளிட்ட சித்தர்களும் வியப்புடன் இந்த விஷ்வரூபத்தை பார்ப்பதாக அர்ஜுனன் கூறுகிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.23|| பயம் என்ற பாவனை வெளிப்படல்:

रूपं महत्ते बहुवक्त्रनेत्रं महाबाहो बहुबाहूरुपादम्

बहूदरं बहुदंष्ट्राकरालं दृष्ट्वा लोका: प्रव्यथितास्तथाहम् ।। २३ ।।

ரூபம் மஹத்தே 3ஹுவக்த்ரநேத்ரம்

மஹாபா3ஹோ 3ஹுபா3ஹூருபாத3ம்

3ஹூத3ரம் 3ஹுத3ம்ஷ்ட்ராகராலம்

த்3ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதி2தாஸ்ததா2ஹம் ।। 23 ।।


महाबाहो  மஹாபா3ஹோ  பெரிய தோள்களை உடையவரே   

बहु वक्त्र नेत्रं  3ஹு வக்த்ர நேத்ரம்  பல முகங்களையும் கண்களையும் உடைய     

बहु बाहू उरु पादम्  3ஹு பா3ஹூ உரு பாத3ம்  பல கைகள், தொடைகள், பாதங்கள் உடைய    

बहू उदरं  3ஹூ உத3ரம்  பல வயிறுகளையுடைய     

बहु दंष्ट्रा करालं  3ஹு 3ம்ஷ்ட்ரா கராலம்  பல வளைந்த பற்களால் பயமுறுத்துகிற     

ते  தே  உங்களுடைய    महत्  மஹத்  பெரிய   रूपं  ரூபம்  வடிவத்தை    दृष्ट्वा  த்3ருஷ்ட்வா பார்த்து    

लोका:  லோகா:  உலகங்கள்    प्रव्यथिता:  ப்ரவ்யதி2தா:  நடுங்குகின்றன   

अहम्  அஹம்  நானும்     तथा  ததா2  அப்படியே.


நெடுந்தோளாய், பல முகங்கள், கண்கள், பல கைகள், தொடைகள், பாதங்கள், பல வயிறுகள், பயமுறுத்தும் பல வளைந்த பற்கள் உடைய உங்களது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன; நானும் அப்படியே (பயந்துள்ளேன்).


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, யானும் அங்ஙனமே.


விளக்கம்:

சுலோகம் இருபத்தி மூன்று முதல் முப்பது வரை அர்ஜுனன் பயம் என்ற பாவனையில் விஷ்வரூபத்தைப் பார்ப்பதை விவரிக்கிறான்

=> இருத்தல் மூன்று வகை:

     (1) ப்ராதிபாஷிகம் (நமக்கு மட்டும் தெரிவது, .கா., கனவுலகம்)

     (2) வ்யாவஹாரிகம் (பொதுவாக உள்ளது, .கா., விழிப்பு நிலை உலகம்)

     (3) பாரமார்த்திகம் (அனுபவத்திற்கு வராதது, ஆனால் மூன்று காலத்திலும் உள்ளது)

இனி, இந்த விஷ்வரூபம் என்பது இவைகள் மூன்றில் எந்த வகையைச் சார்ந்தது? இது திருஷ்யமாக வெளித்தோற்றத்திற்கு வந்துள்ளதால் இது பாரமார்த்திகம் அல்ல. அனைவருக்கும் பொதுவானதாகத் தெரியாமல், அர்ஜுனன் சஞ்ஜயன் மற்றும் தேவர்கள் என சிலருக்கே இக்காட்சி தெரிவதால் இது வ்யாவஹாரிகமும் அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தெரிவதால் இது ப்ராதிபாஷிகமும் அல்ல. ஆகையினால்தான் இது ஆச்சரியம். பக்தர்களுக்காக பகவான் கொடுக்கும் காட்சி ஆகையால் இது முற்றிலும் வேறுபட்ட இருப்புடன் கூடியது.


=> பயம்:

     * பொதுவாக பயத்தின் வெளிப்பாட்டை மூன்றாகப் பிரிக்கலாம்:

(1) கஷ்டம் குறித்த பயம்

(2) மரண பயம்

(3) தெரியாத ஒன்றைக் குறித்த பயம்

இங்கு அர்ஜுனனின் பயம் மூன்றாவது வகையைச் சார்ந்ததாக உள்ளது. இறைவா, உங்களது இந்த பேருருவம், மஹத், கிரஹிக்க முடியாதது; நினைத்துப் பார்க்க முடியாதது; அளவிட முடியாதது, என்கிறான். உண்மையில் இது அற்புதமானதொரு விஷயம். ஆனால் இங்கே பிரச்சனை என்னவெனில், அர்ஜுனன் பயப்படுகிறான். இத்தகையதொரு வடிவத்தை எப்படிக் கையாள்வது என அவனுக்குத் தெரியவில்லை. உதாரணமாக வேறொரு கிரஹத்து உயிரினம் ஒன்றை நாம் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது நமது எதிர்வினை என்னவாக இருக்கும்? அது பாதிப்பில்லாததாக இருந்தாலும்கூட, ஒரு வகையில் நமது மனம் பதட்டத்தையே அடையும். ஏனெனில் பார்க்கின்ற எதையும் மனமானது ஏதேனும் ஒரு விதத்தில் வகைப்படுத்திப் பழக்கப்பட்டிருக்கிறது. வகைப்படுத்த முடியாத எந்தவொன்றையும் அது அச்சுறுத்தலாகவே பார்க்கிறது

இப்போது அர்ஜுனன் அப்படியொரு வடிவத்தை, எண்ணற்ற முகங்களையும் கண்களையும் கொண்ட பேருருவத்தைப் பார்க்கிறான். பல கைகள், தொடைகள், பாதங்கள், பல வயிறுகளையுடைய ரூபத்தைப் பார்க்கிறான். மேலும் வாயிலிருந்து எண்ணற்ற கோரைப் பற்கள் வெளிப்படுவதைப் பார்க்கிறான். அதுவே அவனை மிகவும் பயமுறுத்துவதாக ஆகிறது

இதைக் கண்டு மக்கள் பயப்படுகிறார்கள், நானும் பயந்துள்ளேன்’, என்கிறான் அர்ஜுனன். தன் மனநிலையையே ஒருவன் உலகினிடமும் ஏற்றிவைக்கிறான். பகவானது இந்த விஷ்வரூபத்தையும் அவரது பயங்கரச் செயலையும் முன்பு அர்ஜுனன் கண்டு அறிந்ததில்லை. அதை அவன் இப்பொழுது முதன்முதலில் கண்டு கலங்குகிறான். உலகிலுள்ள மற்ற உயிர்களும் கலங்குவதாக அவன் காட்சியில் படுகிறது. அவனது நிலையில் இருக்கிறவர்களுக்கெல்லாம் இந்த கலக்கம் இருக்கலாம். ஏன் அச்சம் ஏற்பட்டதென்பதற்கு அவனே அடுத்த சுலோகத்தில் பதில் தருகிறான்.


=> அர்ஜுனனின் பயம் குறித்த விசாரம்:

எந்த நேரத்திலும் இந்த படைப்பானது இறைவனிடமிருந்து பிரிக்கப்படாததாகவே இருக்கிறது. இறைவன் சிருஷ்டியிலிருந்து சுதந்திரமானவர், ஆனால் இந்த சிருஷ்டியோ ஒருபோதும் சுதந்திரமானதல்ல, அது இறைவனைச் சார்ந்தே உள்ளது. சிருஷ்டியானது ஈஷ்வரனைத் தவிர வேறில்லை என்றாலும், நம்மால் அவரைப் பார்க்கமுடிவதில்லை. ஏனெனில் நாம் நமது புலனுணர்வு சக்திகளால் வரையறுக்கப்பட்டிருக்கிறோம். நமது புலன் உறுப்புகளின் உணரும் திறன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டது. ஆகவே அதைக் கொண்டு முழுவதையும் பார்த்துவிட முடியாது. ஆனால் இங்கு அர்ஜுனன் கிருஷ்ணரின் அருளால் கிட்டத்தட்ட முழுவதையும் (தன்னை தவிர்த்து) பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஷ்வரூபத்தை பார்த்து, கிருஷ்ணரே படைப்பிற்கு மூலகாரணம், அவரே புரிந்து கொள்ளப்பட வேண்டியவர் என்றெல்லாம் அர்ஜுனனால் தெளிவாக அனுமானம் செய்யமுடிகிறது. எனவே, அர்ஜுனுக்கு தனது புலன் உறுப்புகள், குறிப்பாக கண்கள் சாதாரணமாகப் பார்ப்பதை விட மேலான ஒன்றைப் பார்ப்பதன் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் அவன் விஷ்வரூபத்திலிருந்து தன்னைப் பிரிப்பதால், அச்சம் கொள்கிறான். அதுவே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. பகவான் அவனுக்கு திவ்விய-கண்களைக் கொடுத்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஞான-கண்களினால் மட்டுமே அந்த ரூபத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள முடியும். இருமையற்றதான அந்த நோக்கு, அர்ஜுனனுக்கு அச்சமின்மையை அளித்திருக்கும். ஏனெனில் தான் அல்லாத வேறொன்றின் இருப்பே பயத்திற்கு ஆதாரம் ஆகிறது. சிறியதானதாக இருந்தாலும்கூட போதும்; பயம் ஏற்பட தன்னிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்கும் சிறு பிரிவும் கூட போதுமானது. வரையறைக்குட்பட்ட நமது புலனுணர்வு சக்திகள் காட்டும் இந்த வரம்பு நிறைந்த வேறுபாடுகளைச் சமாளிப்பதே நமக்கு மிகப் பெரிதாக தெரிகிறது. அப்படியிருக்க, இங்கு அர்ஜுனனோ முழு பிரபஞ்சத்தையே தன்னிலிருந்து வேறான ஒன்றாக நேரடியாகப் பார்க்கிறான். இந்நிலையில் நம்மைப் பொருத்திப் பார்க்கும்போது அதன் தீவிரம் புரிகிறது. அர்ஜுனனுக்கும் அதுவே நடந்தது. அர்ஜுனன் இந்த விஷ்வரூபத்தை பார்க்க ஆசைப்பட்ட போதிலும், அவன் எதை எதிர்கொள்ளப் போகிறான் என்பது அவனுக்கு தெரியவில்லை. இப்போது அவன் விரும்புவது அனைத்தும் இந்த மனக்கலக்கத்திலிருந்து கொஞ்சம் அமைதியையே.

---------------------------------------------------------------------------------------------------------------------