திங்கள், 29 ஜூலை, 2024

விஷ்வரூபதர்ஷன யோகம் 11.28 - 11.31

||11.28|| முதல் உதாரணம்:

यथा नदीनां बहवोऽम्बुवेगा: समुद्रमेवाभिमुखा द्रवन्ति

तथा तवामी नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति ।। २८ ।।

யதா2 நதீ3நாம் 3ஹவோऽம்பு3வேகா3:

ஸமுத்3ரமேவாபி4முகா2 த்3ரவந்தி

ததா2 தவாமீ நரலோகவீரா

விச1ந்தி வக்த்ராண்யபி4விஜ்வலந்தி ।। 28 ।।


यथा  யதா2  எப்படி    नदीनां  நதீ3நாம்  நதிகளுடைய     बहव:  3ஹவ:  பல    

अम्बु वेगा:  அம்பு3 வேகா3:  விசையுள்ள நீர்ப்பெருக்குகள்   

समुद्रम् एव अभिमुखाஸமுத்3ரம் ஏவ அபி4முகா2:  சமுத்திரத்தையே நோக்கி    द्रवन्ति  த்3ரவந்தி  பாய்கின்றன   तथा  ததா2  அப்படி    अमी  அமீ  இந்த    नर लोक वीरा:  நர லோக வீரா:   நரலோக வீரர்கள்    

अभिविज्वलन्ति  அபி4விஜ்வலந்தி  எங்கும் ஜ்வலிக்கின்ற   तव  தவ  உங்களுடைய   

वक्त्राणि  வக்த்ராணி  வாய்களுள்    विशन्ति  விச1ந்தி  பிரவேசிக்கிறார்கள்.


பெருக்கெடுத்து விரைந்தோடும் நதிகள் பல கடலையே நோக்கிப் பாய்வது போன்று, எங்கும் வெந்தழல் வீசும் உங்களது வாய்களுள் இவ்வையக வீரர்கள் புகுகின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல், இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.


விளக்கம்:

பெருங்கடலை நோக்கிப் பாயும் வேகமான ஆற்றுநீரைப் போல இந்த மக்கள் அனைவரும் மரணத்தின் தாடையில் வேகமாக விரைகிறார்கள், அபி4முகா2:. ஆற்று நீரானது அயராத வேகத்துடன் கடலுக்கு விரைகிறது. அதுபோல, பீஷ்மர் துரோணரைப் போன்ற துணிச்சலான இந்த நரலோக வீரர்கள் எங்கும் ஜ்வலிக்கின்ற (அபி4விஜ்வலந்தி) உங்களது வாய்களுக்குள் மிக விரைவாக நுழைவதைக் காண முடிகிறது. இதில் கடலை விஷ்வரூபமாக எடுத்துக் கொள்ளலாம்; அப்போது அதிலுள்ள வாய்கள், ஆறுகளின் நுழைவுப் பகுதியாகிறது.   

மலையிலிருந்து வெளிவந்ததும் நதிகள் கடலைநோக்கி ஓடியாக வேண்டும். கடலைத் தவிர அவைகளுக்கு வேறு புகலிடம் எதுவுமில்லை. இந்த மண்ணுலக வீரர்கள என்னென்னவோ மனக்கோட்டை கட்டுகின்றனர். ஆனால் அவர்களெல்லாம் உங்களது விராட் வடிவத்தில் மறைவது நிச்சயம். அவர்கள் இன்னும் உண்மையை அறியவில்லை எனினும் நீங்கள் அவர்களை எடுத்து விழுங்க ஆரம்பித்துவிட்டீர்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.29|| இரண்டாம் உதாரணம்:

यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगा:

तथैव नाशाय विशन्ति लोका स्तवापि वक्त्राणि समृद्धवेगा: ।। २९ ।।

யதா2 ப்ரதீ3ப்தம் ஜ்வலநம் பதங்கா3

விச1ந்தி நாசா1 ஸம்ருத்34வேகா3:  

ததை2 நாசா1 விச1ந்தி லோகா 

ஸ்தவாபி வக்த்ராணி ஸம்ருத்34வேகா3: ।। 29 ।।


यथा  யதா2  எப்படி    पतङ्गा:  பதங்கா3:  விட்டிற்பூச்சிகள்   समृद्ध वेगा:  ஸம்ருத்34 வேகா3:  அதிவிரைவில்  नाशाय  நாசா1  நாசமடைதற் பொருட்டு    ज्वलनं  ஜ்வலநம்  சுடர்விட்டு எரியும்   प्रदीप्तं  ப்ரதீ3ப்தம்  தீயில்    विशन्ति  விச1ந்தி  பாய்கின்றன    तथा  ததா2  அப்படியே    लोका: अपि  லோகா: அபி  உலக மக்களும்   

नाशाय एव   நாசா1 ஏவ நாசமடைதற்கே    तव  தவ  உங்களுடைய    वक्त्राणि  வக்த்ராணி வாய்களில்    

समृद्ध वेगा:  ஸம்ருத்34 வேகா3:  அதிவிரைவில்    विशन्ति  விச1ந்தி  நுழைகிறார்கள்.


நாசமடைதற்கு விட்டிற்பூச்சிகள் வெந்தழலில் விரைந்து வீழ்வதுபோன்று, உலக மக்களும் நாசமடைதற்கே உங்களது வாய்களுள் நுழைகின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

விளக்குப் பூச்சிகள் மிகவும் விரைவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போலே, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன.


விளக்கம்:

எதற்காக இவர்கள் இந்த வாய்களுள் நுழைகிறார்கள்? என்ற கேள்வி வருமிடத்து, எப்படி விட்டிற்பூச்சிகள் அவற்றின் அழிவுக்காக மட்டுமே தீப்பிழம்பிற்குள் நுழைகின்றனவோ அப்படி இவர்கள் தங்களது அழிவின் பொருட்டு நுழைகிறார்கள். விட்டிற்பூச்சியானது மிகுந்த உற்சாகத்துடனும், அதி வேகத்துடனும் பிரகாசமான ஒளிப்பிழம்பை நோக்கிப் பாய்கிறதுஅதன் அழிவின்பொருட்டு. அதேபோல உலகமக்கள் அனைவரும் தங்களது அழிவின்பொருட்டு இந்த எரிகின்ற வாய்களுக்குள் நுழைகிறார்கள்.

சமுத்திரத்தில் சங்கமமான நதிகள் தமது நாமரூபங்களை இழக்கின்றன. ஆயினும் நதியின் நீருக்கு அழிவில்லை. தீயில் விழும் விட்டில் பூச்சிகள் உடலையே இழக்கின்றன. போர்முனையில் கூடிய வீரர்கள் தங்கள் சுபாவத்தால் தூண்டப்பெற்று, அறிவை இழந்து உடலையும் இழக்க முந்துகின்றனர். அவர்களை அழித்துப் புதிய வடிவில் அமைப்பதன்மூலம் அவர்களைத் திருத்துதற்குப் பகவான் துணைபுரிகிறார்.  

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.30|| பகவானின் உக்கிர ரூபத்தை வர்ணிக்கிறான்:

लेलिह्यसे ग्रसमान: समन्ताल्लोकान्समग्रान्वदनैर्ज्वलद्भि:

तेजोभिरापूर्य जगत्समग्रं भासस्तवोग्रा: प्रतपन्ति विष्णो ।। ३० ।।

லேலிஹ்யஸே க்3ரஸமாந: ஸமந்தா

ல்லோகாந்ஸமக்3ராந்வத3நைர்ஜ்வலத்3பி4:

தேஜோபி4ராபூர்ய ஜக3த்ஸமக்3ரம் 

பா4ஸஸ்தவோக்3ரா: ப்ரதபந்தி விஷ்ணோ ।। 30 ।।


ज्वलद्भि: वदनै:   ஜ்வலத்3பி4: வத3நை:  ஜ்வலிக்கின்ற வாய்களினால்       

समग्रान् लोकान्  ஸமக்3ராந் லோகாந்  எல்லா உலகங்களையும்   ग्रसमान:  க்ரஸமாந:  விழுங்கி     

समन्तात्  ஸமந்தாத்  எப்பக்கத்திலும்   लेलिह्यसे லேலிஹ்யஸே  நக்கி ருசிபார்க்கிறீர்கள்    

विष्णो  விஷ்ணோ  விஷ்ணுவே    तव  தவ  உங்களுடைய    उग्रा: भास:  உக்3ரா: பா4:  உக்கிரமான ஒளிகள்     तेजोभि:  தேஜோபி4:  தேஜஸ்களினால்     समग्रं जगत्   ஸமக்3ரம் ஜக3த்  முழு உலகையும்     

आपूर्य  ஆபூர்ய  நிரப்பிக் கொண்டு     प्रतपन्ति  ப்ரதபந்தி  எரிகின்றன.


ஜ்வலிக்கின்ற வாய்களால் உலகனைத்தையும் விழுங்கி எப்பக்கத்திலும் நக்கி ருசி பார்க்கிறீர்கள். விஷ்ணுவே, உமது உக்கிரமான சுடர்கள் வையகம் முழுவதையும் கதிர்களால் நிரப்பிச் சுடுகின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் கதிர்களால் வைய முழுவதையும் நிரப்பிச் சுடுகின்றன.


விளக்கம்:

=> அழிவின் செயல்முறை:

பகவான் இங்கு எவ்விதத்திலும் அனுதாபப்படவில்லை. மாறாக, இந்த அழிவை அவர் ரசித்து, ருசித்து, கண்ணில்படும் அனைத்தையும் மிகுந்த ஆர்வத்துடன் விழுங்குகிறார். ‘லேலிஹ்யஸேஎனில் நாக்கை வெளியே கொண்டுவந்து நக்கி ருசிபார்த்தலைக் குறிக்கிறது, நாம் தேனை உண்பது போல. அவர் இந்த அழிவின் ருசியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். எல்லா உலகங்களையும் முழுவதுமாக விழுங்குகிறீர்ஸமக்3ராந் லோகாந் ஸமந்தாத் க்ரஸமாந:, என்கிறான் அர்ஜுனன். உலக மக்களனைவரும் அவரது வாய்களுள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்

அதை பகவான் எப்படி அனுபவிக்கிறார்? அனைத்தையும் தனது ஜ்வலிக்கின்ற வாய்களினால் விழுங்குகிறார். இந்த கொடூரமான தீப்பிழம்புகள் உலகம் முழுவதையும் எரிக்கின்றனஉக்3ரா: பா4: ஸமக்3ரம் ஜக3த் ப்ரதபந்தி . இந்த உக்கிரமான ஒளிச்சுடர்கள் அனைத்தையும் சூழ்ந்து எரிக்கின்றன. விஷ்வரூபத்திற்குள் நடப்பதைக் காணும் அர்ஜுனன், அழிவின் செயல்முறைப் பற்றிக் கூறும் விளக்கம் இது.

விஷ்வரூப தரிசனத்தை அர்ஜுனன் வேண்டியபோது, அற்புதமானதொரு வடிவத்தை காணப்போகிறோம் என அர்ஜுனன் எதிர்ப்பார்த்திருந்தான். உண்மையில் இது அற்புத வடிவம் தான். அதை உணர்ந்ததாலேயே முதலில் அவனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. ஆனால் இந்த ரூபத்தின் மறுபக்கத்திற்கு அவன் தயாராக இல்லை. பகவான் எல்லாவற்றையும் தாங்குபவர் மட்டுமல்ல, அழிப்பவரும் கூட. இங்கு அர்ஜுனன் பார்ப்பதும் சிருஷ்டியில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் அந்த அழிவைத்தான். இதுவும் ஒரு படைப்பின் அவசியமான பகுதியே ஆகும். எனவே விஷ்வரூபத்தில் இதுவும் சேர்க்கப்பட வேண்டும். உருவாக்குதல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியான செயல்முறை ஈஷ்வரன். ஆனால் ஈஷ்வரனின் அழித்தல் அம்சத்தை காண்பதென்பது அவ்வளவு எளிதானது அல்ல

எனவே விஷ்வரூபத்தில் அழித்தலின் அம்சத்தை எதிர்ப்பார்த்திராத அர்ஜுனன் பின்வருமாறு கூறுகிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.31|| அர்ஜுனனின் கோரிக்கை:

आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तुते देववर प्रसीद

विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं हि प्रजानामि तव प्रवृत्तिम् ।। ३१ ।।

ஆக்2யாஹி மே கோ 4வாநுக்3ரரூபோ

நமோऽஸ்து தே தே3வவர ப்ரஸீத3

விஜ்ஞாதுமிச்சா2மி 4வந்தமாத்3யம்

ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம் ।। 31 ।।


उग्ररूप:  உக்3ரரூப:  உக்கிரமான ரூபத்தையுடைய   भवान्   4வாந்  தாங்கள்   :  :  யார்    मे  மே  எனக்கு   आख्याहि  ஆக்2யாஹி  சொல்லுங்கள்   ते  தே  உங்களுக்கு   नम: अस्तु  நம: அஸ்து  வணக்கம் இருக்கட்டும்    देववर  தே3வவர  தேவர்களுக்கு தலைவா    प्रसीद  ப்ரஸீத3  அருள்புரிக     आद्यं  ஆத்3யம்  முதல்வன்    

भवन्तम्  4வந்தம் தங்களை     विज्ञातुम्  விஜ்ஞாதும்  அறிந்துகொள்ள    इच्छामि  இச்சாமி  விரும்புகிறேன்    हि  ஹி  ஏனென்றால்     तव  தவ  உங்களுடைய    प्रवृत्तिम्  ப்ரவ்ருத்திம்  செயலை    

प्रजानामि  ப்ரஜாநாமி  அறியவில்லை.


உக்கிரமான ரூபத்தையுடைய தாங்கள் யார் என்று எனக்குச் சொல்லுங்கள். உங்களை வணங்குகிறேன்; தேவர் தலைவா, அருள்புரிக. முதல்வனாகிய தங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உங்களது செயல் எனக்கு விளங்கவில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக. தேவர்களில் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள்புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன்.


விளக்கம்:

இந்த அழிவுகளைக் கண்டும், எதிர்வருவதைப் பார்த்தும் அர்ஜுனன் குழம்புகிறான். எனவே, ‘இந்த பயங்கரமான வடிவத்தை உடைய நீங்கள் யார் என்பதை என் பொருட்டுச் சொல்லுங்கள்என்கிறான். மேலும், ‘உங்களுக்கு எனது நமஸ்காரங்கள், தே நம: அஸ்து, ! தேவர்களின் தலைவா, அருள்புரியுங்கள்என மன்றாடுகிறான். ‘உங்கள் செயல் எனக்குப் புரியவில்லை, தவ ப்ரவ்ருத்திம் ப்ரஜாநாமிஎன்கிறான். ‘ப்ரஎனும் முன்னொட்டுஜாநாமிஎன்பதன் பொருளை மேம்படுத்திக் கொடுக்கிறது, அதாவது ஒன்றுமே புரியவில்லை என்பதாக அழுத்திக் கூறுகிறது. ‘எல்லோரையும் காக்கும் விஷ்ணுவென உங்களை நினைத்தேன். ஆனால் இவர்களையெல்லாம் அழிப்பதில் நீங்கள் குறியாக இருப்பவராகத் தெரிகிறது. உங்களது செயல் எனக்கு கொஞ்சமும் கூடப் புரியவில்லை. யார் நீங்கள்? தயவுசெய்து எனக்கு அருள்புரியுங்கள்’.  

ஜீவர்களின் இயல்பு உக்கிரமூர்த்தியை விரும்பி வணங்குவது அல்ல என்பதை இங்கு அர்ஜுனனின் செயல் விளக்குகிறது. தேவர்கள் உட்பட அகிலத்துக்கும் முழுமுதற்பொருள் ஈசன் என்பது இப்போது அர்ஜுனனுக்குப் பிரத்தியக்ஷம். ஆனால் நேரடியாகக் காண்பதாலேயே அவரை அவன் முழுதும் அறிந்து கொண்டுவிட்டான் எனக் கூறமுடியாது. ஒரு மனிதனும் அவனது செயலும் தொடர்ந்து சம்பந்தப்பட்டவைகள். செயலைக் கொண்டு அம்மனிதனை அறியலாம். செயலைக் கொண்டு கடவுளையும் ஒருவாறு அறியலாம். இங்கு அர்ஜுனன் விரும்புவதும் அதுவே. பகவானது செயலைகளைக் கொண்டு அவரது மஹிமைகளை அறிய அவன் அவாவுறுகிறான். அவ்விருப்பத்தை அவன் அஞ்சியவாறு வெளியிடுகிறான். அதற்கு பகவானது விடை அடுத்த சுலோகத்தில் வருகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------