||9.29|| நடுநிற்கும் இறைவன் இறைஞ்சுவார்க்கு எளியன்:
समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रिय: ।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ।। २९ ।।
ஸமோऽஹம் ஸர்வபூ4தேஷு ந மே த்3வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய: ।
யே ப4ஜந்தி து மாம் ப4க்த்யா மயி தே தேஷு சாப்யஹம் ।। 29 ।।
अहं அஹம் நான் सर्व भूतेषु ஸர்வபூ4தேஷு எல்லா உயிர்களிடத்தும் सम: ஸம: சமமாயிருக்கிறேன்
मे மே எனக்கு न द्वेष्य: अस्ति ந த்3வேஷ்ய: அஸ்தி பகைவனுமில்லை न प्रिय: ந ப்ரிய: நண்பனுமில்லை
तु து ஆனால் ये யே யார் मां மாம் என்னை भक्त्या ப4க்த்யா பக்தியுடன்
भजन्ति ப4ஜந்தி நாடுகிறார்களோ मयि ते மயி தே என்னிடத்து அவர்களும்
तेषु च अपि अहम् தேஷு ச அபி அஹம் அவர்களிடத்து நானும் இருக்கின்றேன்.
நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருக்கிறேன். எனக்குப் பகைவனுமில்லை; நண்பனுமில்லை. ஆனால் என்னைப் பக்தியோடு நாடுகிறவர்கள் என்னிடத்தில் இருக்கிறார்கள். நானும் அவர்களிடத்து இருக்கின்றேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன்.
விளக்கம்:
மனிதர்களிடம் தனது பாவனை என்னவாக இருக்கின்றது என்பதை பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார்.
அஹம் ஸர்வபூ4தேஷு ஸம: — நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருக்கிறேன். யாரிடமிருந்தும் நான் வேறானவனாக இல்லை. ஒரே எல்லையற்ற ஈஷ்வரனாக, அனைத்துயிர்களின் ஆத்மாவாக நானே இருக்கின்றேன். அவர்கள் என்னிடத்து வரவேண்டிய அவசியமில்லை; என்னைத் தானென்றாக்கிக் கொள்ள, ஒவ்வொருவரிடமும் அவர்களே நானாக இருக்கின்றேன். எனவே, அவர்கள் மீதான எனது அணுகுமுறை என்னவாக இருக்கிறது?
=> பகையுமில்லை, நட்புமில்லை:
மே ந த்3வேஷ்ய: அஸ்தி — எனக்கு வெறுப்புக்குரியவன் என யாருமில்லை. எல்லோரும் நானாகவே இருக்கும் பட்சத்தில் நான் வெறுப்பவன் என ஒருவன் இருக்க முடியுமா என்ன? மேலும் முழுமையானவன் என என்னை அறிந்ததனால், நான் என்னையும் வெறுக்க முடியாது. தன்னைப் பற்றிய அறியாமை கொண்ட ஒருவனே அவனையே வெறுத்துக் கொள்ள முடியும். எனவே என் வெறுப்பிற்குரியவர்கள் என யாருமில்லை.
ஒருகால் நமக்குப் பிடித்தவர்கள் யாரேனும் இருந்தால், அதுகூட மற்றவர்களின் மீது அலட்சியம் காட்ட ஒரு காரணமாக அமைந்துவிடும். மேலும் ஒரு குறிப்பிட்ட தரத்தை நிர்ணயிக்கும் காரணியாக இது மாறிவிடலாம். எனவே விரும்பத்தகாதவன் எவருமில்லை என்று மட்டும் சொன்னால் போதாது.
ஆகையினால் பகவான் எனக்கு விருப்பத்திற்குரியவன் என யாருமில்லை — ந ப்ரிய: அஸ்தி, என்கிறார். மனிதர்களுக்கு நண்பன் மற்றும் பகைவன் முதலிய பாகுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஈஷ்வரனுக்கு அல்ல. சென்ற சுலோகங்களில் கூறியதை, அவர் தன்னை வழிபடுபவர்களுக்கு மட்டும் உதவுகிறார் என்கிற வகையில் பொருள் கொள்ளக்கூடாது. இங்கு பிரச்சினை என்னவென்றால், நான் அவர்களிடமிருந்து வேறானவனாக இல்லை என பகவான் கூறுகிறார். அதை அவர்கள் அறியவேண்டும் அவ்வளவே. எனவே நான் யாருக்கும் பிரத்தியேகமாக உதவி செய்யவில்லை, ஆனால் என்னை அறிந்தவர்கள் என்னைப் பெறுகிறார்கள். இவை அனைத்தும் நியதிப் படியே நடக்கிறது. ஈஷ்வர அணுகிரஹமும்கூட கர்ம-பலனாகக் கிடைப்பதே ஆகும். அதை அடைவதற்கும் அடையாமல் இருப்பதற்கும் தனியொருவனுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் நெருப்பின் அருகிலிருப்பவனுக்கு குளிர் நீங்குகிறது. ஆனால் தூரத்திலிருப்பவனுக்கு குளிர் நீங்குவதில்லை. அதாவது அவன் அதை சரியாக பயன்படுத்த முயற்சி செய்யவில்லை என்று அர்த்தம். எனவே ஈசன் அருள் என்பது மழையைப் போன்று அனைவருக்கும் பொதுவானது. ஒரு விதை மழையை எவ்விதம் பயன்படுத்திக் கொள்கிறதோ அதுபோல ஒருவன் இறையருளை சுய முயற்சியின் துணைகொண்டு அடைதல் வேண்டும்.
=> இறைவனை நாடுபவர்கள்:
யே மாம் ப4க்த்யா ப4ஜந்தி — என்னை பக்தியுடன் நாடுகிறவர்கள். ‘ப4ஜந்தி’ எனில் வழிபடுபவர்கள், நாடுபவர்கள், தேடுபவர்கள், துதிப்பவர்கள் என்று பொருள். மயி தே தேஷு ச அபி அஹம் — என்னிடத்து அவர்களும் மற்றும் அவர்களிடத்து நானும் இருக்கின்றேன், என்கிறார். அவர்கள் என்னை நாடுவதால், என்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களாக என்னிடத்தில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் என்னுடன் ஒன்றாகிவிடுவதால் நான் அவர்களிடத்தில் இருக்கின்றேன். மற்றவர்களும்கூட என்னிடம்தான் இருக்கிறார்கள் எனினும் அவர்கள் அர்ப்பணிப்புடனும் பக்தியுடனும் என்னை நாடாத காரணத்தினால் அதை அவர்கள் அறிவதில்லை.
என்னைப் பொருட்படுத்தாதவர்களிடம் எனக்கு வெறுப்பு கிடையாது. என்னை வேண்டுபவர்களிடம் எனக்கு விருப்பும் கிடையாது. எல்லா உயிர்களிலும் நான் சமமாக இருக்கின்றேன். என்னை சொந்தமாக்கிக் கொள்வதென்பது அவரவர்களின் தெரிவு. பரமேஷ்வரனாக நானே அனைவரின் ஆத்மாவாக இருக்கின்றேன். நான் யாரிடத்திருந்தும் என்னை மறைக்கவில்லை; யாரிடமாவது என்னை வெளிப்படுத்தும் பொருட்டு நான் யாரையும் தேர்ந்தெடுப்பதும் இல்லை. மேலும் நான் சிலருக்கு உபகாரமும் மற்றவர்களுக்கு தண்டனையும் வழங்குவதில்லை. இவை அனைத்தும் அவரவர்களின் சொந்தச் செயல்.
=> நடுநிற்பவன்:
நல்லது கெட்டது என்ற வேற்றுமை பாராட்டாது எல்லாப் பொருள்கள் மீதும் சூரிய வெளிச்சம் சமமாகப் படுகிறது. அவ்வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளுதல் அந்தந்தப் பொருள்களின் இயல்பைப் பொறுத்ததாகும். கருமணல், வெண்மணல், கண்ணாடி ஆகிய இவையாவும் ஒரு பொருளின் வெவ்வேறு தோற்றங்கள். சூரிய வெளிச்சம் இவைகளின் மீது ஒரே விதமாகப் படிகிறது. ஆனால் சூரியனுடைய சான்னித்தியத்தைக் கண்ணாடியில் காண்பதுபோன்று வெண்மணலில் காண முடியாது; வெண்மணலில் காண்பதுபோன்று கருமணலில் காண முடியாது. ஈஷ்வர சான்னித்தியம் ஓரளவு அதுபோன்றது. நீக்கமற எங்கும் நிறைந்துள்ள இறைவன் இமைப்பொழுதும் நீங்காது நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கிறான். உள்ளத்தை தூயதாக்காதவர்களுக்கு அவ்வுண்மை விளங்குவதில்லை. அநந்ய பக்தியால் மனதைப் பண்படுத்தியவர்களுக்கு அது விளங்குகிறது. எப்பொழுதும் பகவானுடைய முன்னிலையிலேயே அத்தகைய பக்தர்கள் வாசம் செய்கிறார்கள். கண்ணாடியில் சூரியன் போன்று, கருவி கரணங்கள் ஓய்ந்த தொண்டர்களிடத்து பகவான் வீற்றிருக்கிறான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
எல்லா மனிதர்களிடத்தும் ஈஷ்வரன் இருக்கிறான். ஆனால் ஈஷ்வரனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் அவர்கள் துன்பப்படுவதற்குக் காரணம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||9.30|| பக்தியின் சிறப்பு எத்தகையது:
अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्य: सम्यग्व्यवसितो हि स: ।। ३० ।।
அபி சேத்ஸுது3ராசாரோ ப4ஜதே மாமநந்யபா4க் ।
ஸாது4ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்3வ்யவஸிதோ ஹி ஸ: ।। 30 ।।
सुदुराचार: अपि ஸுது3ராசார: அபி மிகக் கீழான நடத்தையுடையோனும்
अनन्यभाक् அநந்யபா4க் ஒன்றையும் எண்ணாது
माम् भजते चेत् மாம் ப4ஜதே சேத் என்னை வழிபடுவானானால் स: ஸ: அவன்
साधु: एव मन्तव्य: ஸாது4: ஏவ மந்தவ்ய: சாது என்றே கருதப்பட வேண்டும் हि ஹி ஏனென்றால்
स: ஸ: அவன் सम्यग्व्यवसित: ஸம்யக்3வ்யவஸித: நன்கு தீர்மானித்தவன்.
மிகக் கீழான நடத்தையுடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னை வழிபடுவானாகில், அவன் சாது என்றே கருதப்பட வேண்டும். ஏனென்றால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகின்றான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின்,
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் பக்தியின் மஹிமையைப் பற்றி பேசுகிறார்.
ஸுது3ராசார: — கேடு மிக உடைய கீழோன். மிக மிக கீழான வாழ்க்கையை வாழ்பவன். தர்மத்தை முறையாகச் செய்கின்றவர்களும் புலனடக்கம் உடையவர்களும் சதாசாரம் உடையவர்கள் ஆகின்றனர். கொலை, கொள்ளை முதலிய பாபச் செயலைச் செய்கின்றவர்களும் மனம் அடங்காது புலன்களின் வழியாக விஷயங்களில் மூழ்குபவரும் துராசாரம் உடையவர் ஆகின்றனர். இவர்கள் முழுக்க முழுக்க சுயநலத்துடன் கூடியவர்களாக, மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் நலனில் முற்றிலும் அக்கறையற்றவர்களாக, செய்யக்கூடாததை எல்லாம் செய்கின்றனர். இத்தகையவர்கள் மேலும் மேலும் அதோகதியை அடைகின்றனர். ஆனால் இக்கீழ் மக்களும் மேன்மக்கள் ஆவதற்கு வழியுண்டு. எண்ணமே பெருமைக்கும் சிறுமைக்கும் முதற்காரணம்.
=> நல்லெண்ணம்:
அநந்யபா4க் — ஈஷ்வரனைத் தவிர வேறொன்றையும் எண்ணாதவன். கீழான நடத்தையுடையவனாக இருந்தபோதிலும், சில முந்தைய கர்மபலனின் காரணமாக இவனிடம் ஈஷ்வர-பக்தி உண்டாகி, ஈஷ்வர அறிவை அடைவதில் உறுதியாக இருக்கின்றான்.
ஸ: ஸாது4: ஏவ மந்தவ்ய: — அவன் சாது என்றே கருதப்பட வேண்டும். ஏனெனில் அவனுடைய சிந்தனை அல்லது புரிதல் தெளிவாக இருக்கின்ற காரணத்தினால், அவன் ஈஷ்வர ஞானத்தை அடையும் பாதையில் தன்னை நிலை நிறுத்தியுள்ளான் — ஹி ஸ: ஸம்யக்3வ்யவஸித:. தவறான வாழ்க்கையை வாழ்ந்தபோதிலும் இப்போது அவன் சரியான பாதைக்கு வந்துள்ளான்.
அவன் வேறு எதையும் நாடாதவனாக, முழு அர்ப்பணிப்புடன் பரமவேஷ்வரனைப் பற்றிய ஞானத்தை பின்தொடர்கிறான். இந்த எண்ணம் வலுக்கும்போது, கீழான விஷயபோகங்கள் மற்றும் பாபச் செயல்களைப் பற்றி முன்பு எண்ணிய எண்ணங்கள் அடிபடுகின்றன. பகவானைப் பற்றிய நல்லெண்ணம் ஒன்றே பாக்கியிருக்கிறது. நற்செயலுக்கும் நல்லியல்புக்கும் வித்தாவது நல்லெண்ணம். ஆகவே, இடையறாது இறைவனை பஜிக்கத் தீர்மானம் செய்கிறபோது, கேடுடைய ஒருவன் சாதுவாகிறான். அவனது முறையற்ற நடத்தை மற்றும் கீழான பழக்கங்களுக்கு மையமாக விளங்கும் அஹங்காரம், ஈஷ்வர அங்கீகாரத்தினாலும் பக்தியினாலும் நீர்த்துப் போக ஆரம்பிக்கின்றது. ஈஷ்வர ஞானத்தை அடைய அடைய அது மேலும் மேலும் நீர்த்துப் போவதால் ஏமாற்றுதல், காயப்படுத்துதல், வஞ்சித்தல் போன்ற தீய குணங்கள் தானாகவே கைவிடப்படுகிறது. இவ்விதம் எப்படிப்பட்ட கீழான வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும், நிஷ்காம பக்தியின் மூலம் அவன் தன்னை தூய்மைப்படுத்தி மேலான நிலையை அடைய முடியும்.
---------------------------------------------------------------------------------------------------------------------