பத்தாம் அத்தியாயம்
விபூதி யோகம்
[विभूतियोग:]
முகவுரை:
=> தலைப்பு:
இந்த அத்தியாயத்தின் தலைப்பில் உள்ள ‘விபூதி’ எனும் சொல்லின் பொருள் மஹிமை, பெருமை அல்லது சிறப்பு ஆகும். சகுணப்ரம்மமாக உள்ள ஈஷ்வரன், இந்த உலகின் மூலக்காரணமாக உள்ளார். சிலந்தி வலைக்கு எவ்விதம் சிலந்தியே நிமித்தமாகவும் உபாதானமாகவும் உள்ளதோ அவ்விதமே ஈஷ்வரனும் இந்த ஜகத்தின் நிமித்த காரணம்(படைப்பவர்) மற்றும் உபாதான காரணமாக உள்ளார்.
=> உபாதானக் காரணம்(பொருள் காரணம்):
எந்தவொன்று உருவாகவும் மூலப் பொருளாக அல்லது பொருள் காரணமாக இருப்பது உபாதானக் காரணம் எனப்படும். மூன்று காலத்திலும் எது உள்ளதோ அது உபாதானக் காரணம் ஆகும் — காலத்ரயே யத் அஸ்தி. இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம். இதில், உபாதானக் காரணம் - களிமண்; நிமித்தக் காரணம்(உருவாக்குபவன்) - குயவன்; காரியம் - பானை. பானையின் உபாதானக் காரணமாகவுள்ள களிமண், பானை தோன்றுவதற்கு முன்னும், பானை தோன்றிக் கொண்டிருக்கும்போதும், பானை உடைந்த பின்னரும் என காரியமாகவுள்ள பானையின் மூன்று காலத்திலும் இருக்கிறது. காரியம் என்பது காரணத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள் ஆகும். எனவே காரியமான பானையுடன் விவகாரம் செய்யும்போது உண்மையில் நாம் உபாதானக் காரணமான களிமண்ணுடன் தான் விவகாரம் செய்கின்றோம். அதுபோல, ஈஷ்வரன் இந்த உலகிற்கு உபாதானக் காரணம் என்பதால், இவ்வுலகை பார்க்கும்போதும், விவகாரத்தில் ஈடுபடும்போதும், இதனுடன் சம்பந்தம் வைக்கும்போதும், உண்மையில் ஈஷ்வரனுடன் தான் சம்பந்தம் வைக்கின்றோம். உபாதானக் காரணத்திற்கு வேறான காரியம் இல்லை. எனவே இந்த படைப்பை பார்க்கும்போது ஈஷ்வர-புத்தி வரவேண்டுமென்றும், தானே இதன் உபாதான காரணம் என்பதை உணர்த்தவும் தனது விபூதியைப் பற்றி இங்கு பேசுகிறார்.
=> நாம் ஏன் ஈஷ்வர திருஷ்டியை இழந்தோம்?
ஈஷ்வரனே அனைத்திற்கும் காரணமெனில், எதனால் நம்மால் ஈஷ்வரனை பார்க்க முடிவதில்லை? ஒரு உதாரணத்துடன் இதை விசாரம் செய்வோம். ஆரம்ப காலத்தில் ஆடை என்பது உடலை மறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த காரணத்தை மறந்து, இன்று அதனுடைய தோற்றத்திற்கும்(ரூபம்) வடிவமைப்பிற்கும்(நாமம்) முக்கியத்துவம் கொடுக்கின்றோம். புடவை, சுடிதார், சட்டை, ஜீன்ஸ், பாவாடை என மொத்த கவனமும் நாமரூபத்திற்கு சென்றுவிட்டது. அதிஷ்டானமான உடைக்கு இருக்க வேண்டிய பயனை(ஸத்தா), அதன் நாமரூபத்தின் மீது ஏற்றிவைத்துவிட்டோம். இதனால் நமது தேவை, முயற்சி, அறிவு, சுகம் என அனைத்தும் அதிஷ்டானத்தை விட்டு நாமரூபத்திற்குச் சென்றுவிட்டது. லெளகிக வாழ்க்கையில், ஆடம்பரமான நகைகள் முதல் அன்றாடத் தேவையான உணவு வரை அனைத்து விஷயத்திலும் நாமரூபமானது அதிஷ்டானத்தை திருடிவிட்டது.
அதேபோல, ஈஷ்வர சொரூபமான இந்த உலகை, நாமரூபத்தினால் இழந்துவிட்டோம். உண்மையில் அதை நாம் இழக்கவில்லை எனினும் அது நம் புத்தியை விட்டுச் சென்றுவிட்டது. எனவே நாமரூபத்தில் உள்ள புத்தியை அதிஷ்டானத்திற்குக் கொண்டு வரவேண்டும். இதன்பொருட்டு பகவான், எதனால் நமது புத்தி கவரப்பட்டு உள்ளதோ, எந்த நாமரூபமெல்லாம் சிறப்பு வாய்ந்ததாக நாம் நினைக்கிறோமோ அதையெல்லாம் கூறி, அதன் சாரமாக நானே உள்ளேன். உண்மையில் அதற்கென எந்த பெருமையும் இல்லை எனப் புகட்டுகிறார். தங்கமாகவுள்ள நானே நகையாக விளங்கிக் கொண்டிருக்கும் அனைத்திற்கும் ஆதாரம் என்பதைப் போல, இந்த உலகிலுள்ள அனைத்து சிறப்பிற்கும் நானே ஆதாரம் என்கிறார். நாமரூபத்தினால் மோஹப்பட்டு நீ என்னை மறந்துவிட்டாய்.
=> இந்த அத்தியாயத்திலிருந்து நாம் அடைய வேண்டிய பலன்:
இங்கு பகவான் தனது விபூதியை கூற ஏன் முழு அத்தியாயத்தையும் பயன்படுத்துகிறார்? அதற்கான பலன் என்னென்ன என்பதை இனி விசாரணை செய்யலாம்.
(1) உபாசனார்த்தம் — தியானத்திற்காக:
எப்போது ஒரு விஷயம் நுண்மையானதாகி, அது அறிவாக மாறவில்லையோ அப்போது அதை நாம் அறிவிலிருந்து மனதிற்கு கொண்டு வரவேண்டும். அதாவது, விக்ஞான மயத்திலிருந்து மனோமயத்திற்கு கொண்டு வரவேண்டும். உதாரணமாக, பள்ளிப் பருவத்தில் கணக்குப் பாடம் பிடிபடாத மாணவனுக்கு, கணக்கு ஆசிரியர் ஒவ்வொன்றையும் முப்பது முறை அல்லது ஐம்பது முறை எழுதும்படி தண்டனை விதிப்பார். அறிவிற்கு புலப்படாதபோது மனதிற்கு அது பயிற்சியாக அளிக்கப்படுகிறது. அதுபோல இங்கும் பயிற்சிக்காக விராட் உபாசனம் என அழைக்கப்படும் விபூதி-தியானத்திற்காக இந்த முழு அத்தியாயத்தையும் உபயோகிக்கலாம்.
(2) த்வேஷ நிவாரனார்த்தம் - வெறுப்பை நீக்குவதற்காக:
நமக்கு இயற்கையாகவே இவ்வுலகின் மீது மோஹம் உள்ளது. இவ்வுலகை போகத்திற்காகவென பயன்படுத்துவது, போக சாதனமாக நினைப்பது, அவற்றை அடைவதற்கான ஆசையை வளர்த்துக் கொள்வது போன்ற இஷ்ட-புத்தி உள்ளது. இந்நிலையில் பகவானே அனைத்துமாக உள்ளார் எனும்போது அந்த மோஹம் இரட்டிப்பாகும். இது சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவதற்கு பதிலாக, சம்சாரத்தை வலுப்படுத்துவதாக ஆகிவிடும். ஆகவேதான், இந்த உலகம் துக்க சொரூபம் என சாஸ்திரம் கூறுகிறது. இதன்காரணமாக இவ்வுலகின் மீது உருவாகும் ஆரம்பகால வெறுப்பு(த்வேஷம்), நமது மோஹ-நோய்க்கான சிறந்த மருந்தாக அமைகிறது. வெறுப்பு உருவாகும்போது அதன்மீதான விருப்பம் நீங்குகிறது. எனவே, முதலில் சாஸ்திரம் தெரிந்தே இந்த உடலின் மீதும், உலகின் மீதும் வெறுப்பை வளர்க்கிறது. இனி மோஹம் சென்றவுடன் அதற்கு உபாயமாக கொடுக்கப்பட்ட வெறுப்பானது நீக்கப்பட வேண்டும். அது அனைத்துமாகவும் ஈஷ்வரனே உள்ளார் எனும் ஈஷ்வர-புத்தியைக் கொண்டு செய்யப்படுகின்றது. எனவே இறைவனின் விபூதி புகட்டப்படுகிறது.
(3) அபிமான நாசா1ர்த்தம் - அஹங்காரத்தை நீக்க:
பொதுவாக பணம், படிப்பு, இசை, விளையாட்டு, கலை போன்ற திறமைகள் உள்ளவர்களிடம் அதற்கான அஹங்காரமும் சேர்ந்தே இருக்கிறது. ‘இது எனது பெருமை’ எனும் அஹங்கார மனப்பான்மை, மானித்வம் எனப்படுகிறது. எல்லாம் ஈஷ்வரனைச் சார்ந்தது, அவரின் அணுகிரஹமே இந்த திறமை என்ற எண்ணத்தின் மூலம் மட்டுமே இந்த அஹங்காரத்தை நீக்க முடியும்.
(4) அஸூயா நாசா1ர்த்தம் - பொறாமை நீங்குவதற்கு:
நம்மைச் சார்ந்தவர்களிடமும் சுற்றத்தாரிடமும் உள்ள திறமையைப் பார்க்கும்போது பொறாமை வருகிறது. பெரும்பாலும் நம்மால் அறியப்படாமல் நம்மிடம் இருப்பதால், பொறாமை என்பது ஒருவனின் மிகப் பெரிய பகைவன் ஆகும். எனவே அனைத்து திறமையும் இறைவனின் மஹிமை என திறனுள்ளவனிடத்தில் ஈஷ்வரனின் பெருமையைப் பார்க்க வேண்டும்.
(5) மனோ விஷாலார்த்தம் - மனதை விரிவுபடுத்த:
எனது இஷ்ட தெய்வம்தான் அனைத்து பதார்த்தங்களிலும் இருக்கிறார் என விராட் சொரூபமாக மனதை விசாலப்படுத்த இந்த விபூதியோகம் துணைபுரிகிறது.
(6) த்3வந்த்3வ(द्वन्द्व) நிவிர்த்யர்த்தம் - இருமையை நீக்குவதற்காக:
பொதுவாக தர்ம மற்றும் சுக சொரூபமாக மட்டும் பகவானை பார்க்கும் பழக்கம் உள்ளது. அதர்ம அம்சங்களாகவும் அவரே இருக்கின்றார். அதர்மத்திற்கான பலனாக வந்தமையும் துயரம், நோய், மரணம் போன்றவைகளாகவும் நானே இருக்கின்றேன் என்கிறார்.
முதலில், தர்ம சொரூபமாக பகவான் உள்ளார் என்ற எண்ணம் மனதில் வேறூன்ற வேண்டும். அதன் உச்ச கட்டமாக அதர்மத்தை ஏற்றுக் கொள்ளமுடியாத அளவிற்கு நம் மனம் வளர வேண்டும். இந்நிலையில், மற்றவர்கள் செய்யும் அதர்மத்தினால் நமது மனம் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மற்றவர்களின் அதர்மத்தினால் தாக்கப்படாத உறுதியை மனம் அடையவேண்டும். ‘அதர்மம் செய்யாதே’ மற்றும் ‘மற்றவர்களின் அதர்மம் உன்னை பாதிக்க அனுமதிக்காதே’ எனும் இந்த மனநிலையை அடைய பகவானின் விபூதியோகம் பயன்படுகிறது.
(7) அத்3வைத3 சித்3யர்த்தம் - அத்வைதத்தை நிலைநாட்ட:
ஈஷ்வரனின் சகுண ஞானம், அதாவது குணத்துடன் கூடிய ப்ரம்மத்தை பற்றிய அறிவானது, நிர்குண ப்ரம்ம ஞானத்திற்கு ஒரு மார்க்கமாகும்.
நம்மால் அறியப்படுகிற ‘நான்’ மற்றும் ‘உலகம்’ என இரண்டாக உள்ள இந்த பேதத்தில், சாஸ்திரம் மூன்றாவதாக ஈஷ்வரன் எனும் பேதத்தை அறிமுகப்படுத்துகிறது. பிறகு ஈஷ்வர விபூதியின் மூலம், உடல் மற்றும் மனதை உள்ளடக்கிய இந்த உலகம் என்ற ஒன்று தனியாக இல்லை; ‘நானே ஜகத்’ எனக் கூறி உலகம் எனும் பேதத்தை ஸ்ருதி நீக்குகிறது. இதனால் அஹங்காரம் என்கிற ஒன்றிற்கு இருக்க இடமில்லாமல் போகிறது. இனி, எஞ்சியிருக்கும் அறிவு சொரூபமும் நானே என பகவான் கூறுவதால், ‘ஜீவ-ஈஷ்வர’ ஐக்கியமும், ‘ஈஷ்வர-ஜகத்’ ஐக்கியமும் நடைபெற்று அத்வைதம் சித்திக்கிறது.
இனி, அனைத்திற்கும் ஆதிமூலமாயிருப்பவன் நானே எனத் தனது மஹிமையை பகவான் விரிவாகக் கூறும் விபூதி யோகம் எனும் இந்த அத்தியாயத்திற்குள் செல்லலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||10.1|| அத்தியாயத்திற்கான அறிமுகம்:
श्रीभगवानुवाच ।
भूय एव महाबाहो शृणु मे परमं वच: ।
यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया ।। १ ।।
ஸ்ரீப4க3வாநுவாச ।
பூ4ய ஏவ மஹாபா3ஹோ ச்1ருணு மே பரமம் வச: ।
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா ।। 1 ।।
श्रीभगवान् उवाच ஸ்ரீப4க3வாந் உவாச ஶ்ரீ பகவான் சொன்னது
महाबाहो மஹாபா3ஹோ பெருந்தோளுடையாய் भूय: एव பூ4ய: ஏவ மீண்டும் मे மே என்னுடைய
परमं वच: பரமம் வச: மேலான சொல்லை शृणु ச்1ருணு கேட்பாயாக यत् யத் எதை
ते प्रीयमाणाय தே ப்ரீயமாணாய (என் வார்த்தைகளால்) மகிழ்ச்சியடைந்த உனக்கு
हितकाम्यया ஹிதகாம்யயா நலம் கருதி अहं वक्ष्यामि அஹம் வக்ஷ்யாமி நான் நவிலுகிறேன்.
பெருந்தோளுடையாய், மேலான என் சொல்லை மீண்டும் கேளாய். என் வார்த்தைகளால் உவகையடைந்த உனது நலம் கருதி அதை நான் நவிலுகிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்; நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே.
விளக்கம்:
=> அத்தியாயத்திற்கான அறிமுகம்:
பொதுவாக, ‘மஹாபா3ஹோ’ எனில் இரண்டு நீண்ட கைகளை உடையவன் என்பது பொருள். ஆனால் இங்கு அது வல்லமை கொண்ட, மஹிமையுடைய மனிதன் எனப் பொருள்படுகிறது. இந்த அத்தியாயத்தில் பகவான் தனது பெருமைகளைப் பற்றிப் பேசப் போகிறார் என்பதால் அர்ஜுனனை ‘மஹாபா3ஹோ’ என்றழைத்து, ‘உன்னிடமுள்ள மஹிமை எனக்குரியது’ என்று சொல்ல முயற்சிக்கிறார். இவ்விதம் அழைப்பதன் மூலம் அதையே அவர் நிரூபிக்க விரும்புகிறார். இந்த அத்தியாயத்தில் வேறொரு சுலோகத்தில், ‘ சிறந்த வில்லாளிகளில் நான் அர்ஜுனனாக இருக்கிறேன்’ என கூறப்போகிறார். ஆகவே அர்ஜுனா, உனது மஹிமை எனது மஹிமை. பெருந்தோளுடையாய், தயவு செய்து கேளாய், என்கிறார்.
பூ4ய: ஏவ ச்1ருணு மே பரமம் வச: — மீண்டும் என்னுடைய மேலான சொல்லைக் கேட்பாயாக. பகவானைப் பற்றிய உண்மையை(பகவத்-தத்வ) திரும்பக் கூறுதலை இங்கு ‘மீண்டும்’ என்ற சொல் குறிக்கிறது. ஏற்கனவே ஏழாவது மற்றும் ஒன்பதாவது அத்தியாயத்தில் பகவானின் மஹிமைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. உருக்கிய பொன்னை திரும்பவும் உருக்கினால் அது மாசு நீங்கி ஒளிவீசும். அதுபோல பகவானின் விபூதியை ஆராய ஆராய உபாசனை வலுக்கிறது; பக்தி பெருகுகிறது; தியானம் தெளிவுபடுகிறது.
‘சொல்’ எனப் பொருள்படும் ‘வச:’ என்பதற்கு, ‘மேலான_பரமம்’ என்பது அடைமொழியாகக் கொடுக்கப்பட்டுள்ளது — மேலான சொல். சொல் எப்படி மேலானதாக ஆகும்? பரமவஸ்துவைப் பற்றிய மெய்மொழியாதலால், அச்சொல்லும் பரம வசனமெனப்படுகிறது.
=> மீண்டும் சொல்லக் காரணங்கள்:
(1) ஞாதவ்யஸ்ய சூக்ஷமத்வாத் - அறியப்பட வேண்டிய விஷயம் மிகவும் நுண்மையாக இருக்கும் காரணத்தினால்,
(2) துர்விக்ஞேயத்வாத் - அறிவது கடினமானதாக இருப்பதால், [மனம் பக்குவமடைய அடைய அடைய இது புரிய ஆரம்பிக்கிறது. ஆகையினால் விஷயம் புரியும் வரை அதை மீண்டும் மீண்டும் படித்தல் வேண்டும்]
(3) அவக3தி பர்யந்தம் ச்1ரோதவ்யத்வாத் - புரிந்து கொள்ளும் வரை கேட்கப்படவேண்டியது.
=> அர்ஜுனனின் ஆர்வம்:
யத் தே ப்ரீயமாணாய அஹம் வக்ஷ்யாமி — என் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்த உனக்கு நான் நவிலுகிறேன், என்கிறார் கிருஷ்ணர். அர்ஜுனனின் தோற்றம் மற்றும் ஆர்வத்திலிருந்து அவன் மகிழ்ச்சியடைந்துள்ளான் என்பது தெளிவாகிறது. பகவத் விபூதியைக் கேட்பதில் அர்ஜுனன் கொண்டுள்ள பிரியத்தை இங்கு பகவான் அங்கீகரித்துப் பாராட்டுகிறார். கேள்வியினால் முயற்சியுடையார்க்கும், அதற்குரிய பதிலை எடுத்துச் சொல்லுவதால் உபதேசிப்பவருக்கும் ஊக்கம் பிறக்கும். அதை இங்கு காண்கிறோம். ‘புகட்டுபவர் அதிசயிக்கத் தகுந்த மேலானவர், அதைக் கேட்கப்பெறும் சிஷ்யன் கெட்டிக்காரன் — ஆச்1சர்யோ வக்தா குச1ல: அஸ்ய லப்3தா4’ என்கிற சாஸ்திர வாக்கியம் ஶ்ரீ கிருஷ்ணார்ஜுனனாகிய இவ்விருவர் மூலம் நிரூபிக்கப்படுகிறது. அமிர்தபானம் பண்ணுவதுபோன்று அர்ஜுனன் அவரது அருள்மொழியைக் கேட்கின்றான்.
ஹிதகாம்யயா — உனது நலம் கருதி இதை நான் உனக்குச் சொல்கிறேன். ‘ஹித’ எனில் நன்மை; சம்சாரம் நீங்குதலே நன்மை; ஆகவே மோக்ஷமே ஹிதம். பகவானின் எந்தவொரு மஹிமையும் அவரின் உண்மைத் தத்துவத்தை புகட்டும் ‘தத் த்வம் அஸி’ எனும் வாக்கியத்தை புரிந்துகொள்ள உதவும். மெய்ப்பொருளை விளக்கும் இந்த வாக்கியத்தை புரிதலே ஹிதம், சிரேயஸ். ஈஷ்வரனை அங்கீகரிக்கும் இந்த புரிதலை விட மேலானது எதுவுமில்லை. ஆகவே அர்ஜுனா, உனது நலம் கருதி இதை நான் மீண்டும் உனக்குச் சொல்லுகிறேன், என்கிறார்.
=> ஈஷ்வர விபூதியை அறிவதன் பலன்:
எல்லா சிறப்புகளையும் ஈஷ்வரனின் மஹிமையாக உணர்வதன் மூலம் ஒருவனின் அஹங்காரம் குறைகிறது. அது ஈஷ்வரனைப் பற்றிய சரியான புரிதலுக்கு வழி வகுக்கிறது. எனவே, தனது சிறப்பென நினைக்கும் அனைத்தும் பகவானுடையது எனும் புரிதல், தனிப்பட்ட ஒருவனுக்கும் ஈஷ்வரனுக்கும் இடையில் நிற்கும் அஹங்காரத்தை நீர்த்துப் போகச் செய்கிறது. சொந்த முயற்சியினால் சேகரித்த செல்வம் முதல் சிந்தனையிலுள்ள தெளிவு வரை எதை எடுத்துக் கொண்டாலும் அங்கு தனிப்பட்ட சாதனை என எதுவுமில்லை. அனைத்தும் ஈஷ்வரன் ஆகையால் தன்னிடமுள்ள அனைத்து பெருமையும் ஈஷ்வரனின் மஹிமை என்ற அங்கீகாரம் மற்றும் புரிதல், ஒருவகையான ஹிதம் ஆகும்.
ஒரு சாதகனுக்கு, இந்த விபூதி யோகம் இரு விதத்தில் நன்மைகளை அளிக்கிறது. இது பகவானின் தத்துவத்தை வெளிப்படுத்துவதால், ‘அஹம் ப்ரம்ம அஸ்மி’ என்கிற வாக்கியத்தின் முழு அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதுவே ஒருவன் அடையும் மேலான ஹிதம் ஆகும். இது சிரேயஸ் என்று அழைக்கப்படும். இந்த மேலான சிரேயஸை அடைய, ஒப்பீட்டளவிலான ஹிதம் அவசியம். அனைத்தும் ஈஷ்வரனின் விபூதி என்பதை உணர்வதன் மூலம் அது கிடைக்கிறது. நல்ல திறமையுள்ள ஒருவனைப் பார்க்கும்போது, பொறாமைபடுவதற்கு பதிலாக, ‘எனக்குச் சில சிறப்புகள் இருப்பது போல, அவனுக்கும் சில பெருமைகள் உள்ளன. அங்கே அவனில் ஈஷ்வர மஹிமை சிறப்பாக வெளிப்பட்டுள்ளது’, என்ற மனப்பான்மை வருகிறது. இதனால் பொறாமை, அஹங்காரம், கர்வம், தாழ்வு மனப்பான்மை முதலியவை நீங்கிவிடும். அழகான, சிறப்பு பொருந்திய எதை பார்க்கும்போதும் ஈஷ்வரனின் மஹிமையே அங்கு பார்க்க முடியும்.
எனவே, சாதகர்களுக்கு இதுவொரு முக்கியமான அத்தியாயம் ஆகும். இங்கு பகவான் சொல்வதை உள்வாங்குவது அவர்களின் பக்குவத்திற்கு அவசியமான ஒன்றாகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------