திங்கள், 11 டிசம்பர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.31 - 9.32

||9.31|| நிஷ்காம பக்தியின் பலன்:

क्षिप्रं भवति धर्मात्मा शश्वतच्छान्तिं निगच्छति

कौन्तेय प्रतिजानीहि मे भक्त: प्रणश्यति ।। 

க்ஷிப்ரம் 4வதி 4ர்மாத்மா 1ச்1வச்சா2ந்திம் நிக3ச்ச2தி

கௌந்தேய ப்ரதிஜாநீஹி மே 4க்த: ப்ரணச்1யதி ।। 31 ।।


क्षिप्रं  க்ஷிப்ரம்  விரைவில்    धर्म त्मा भवति  4ர்ம ஆத்மா 4வதி   தர்மாத்மா ஆகிறான்   

शश्वत्  1ச்1வத்  நித்திய   शान्तिं  சா1ந்திம்  சாந்தியை   निगच्छति  நிக3ச்ச2தி  அடைகிறான்   

कौन्तेय  கௌந்தேய  குந்தியின் புதல்வா   मे भक्त:  மே 4க்த:  என்னுடைய பக்தன்   

प्रणश्यति  ப்ரணச்1யதி  நாசமடைவதில்லை (என்று)   प्रतिजानीहि  ப்ரதிஜாநீஹி  அறிவுறுத்து.   


விரைவில் அவன் தர்மவான் ஆகின்றான். நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசமடைவதில்லை என்று நன்கு அறிவுறுத்துக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அன்னவன் விரைவிலே அறவானாவான்,
நித்திய சாந்தியு மெய்துவான்.
குந்தி மகனே; குறிக்கொள்!
என தன்பன் சாகமாட்டான்.


விளக்கம்:

எத்தனை பிறவிக்குப் பின் ஒரு சாதகன் சாது ஆகிறான் என்ற கேள்விக்கு பதிலை பகவான் இந்த சுலோகத்தில் உரைக்கிறார்.


=> தர்மவான்:

4ர்மாத்மா தர்மத்துடன் வாழ்பவன்; யாருடைய மனம் தர்மத்திற்கு இசைவாக செயல்படுகிறதோ அவன் தர்மாத்மா எனப்படுகிறான். தர்மத்துடன் வாழ்தல் என்பது ஈஷ்வர பக்தியின் ஒரு பகுதியாக இருப்பதால், ஈஷ்வர ஞானத்தை அடைய விரும்பும் இவனுக்கு தர்ம வாழ்க்கை என்பது இயல்பாகிறது. தர்ம-அதர்ம பாகுபாட்டை குறிக்கும் தார்மீக ஒழுங்கு என்பது தனிமனிதனால் உருவாக்கப்படவில்லை; அது இந்த சிருஷ்டியின் ஒரு பகுதியாகும். தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் இத்தகைய ஒழுங்கு தேவைப்படுகிற ஒன்றாக உள்ளது. இந்த படைப்பு என்பது ஈஷ்வரனால் உருவாக்கப்பட்டது; ஈஷ்வரனிடமிருந்து வேறாக இல்லாதது. எனவே, தர்மம் என்பதும் ஈஷ்வரனே ஆகும்.  

சென்ற சுலோகத்தில் கூறப்பட்டதைப் போல, முன்பு துராசாரனாக இருந்தவன், அவனுடைய தெளிவான புரிதலின் காரணமாக(ஸம்யக்3வ்யவஸித:), விரைவில் தர்மாத்மாவாக மாறுகின்றான்க்ஷிப்ரம் 4ர்மாத்மா 4வதி. ஈஷ்வர பக்தியின் காரணமாக இயற்கையாகவே இந்த மாற்றம் விரைவாக நிகழ்கிறது. இப்பயணத்தை துவங்கிய பொழுதில் அவன் கீழான நடத்தையுடன் இருந்தபோதிலும், அவனுடைய பக்தியும் ஞானமும் அவனது எல்லா முறைகேடான பழக்கங்களையும் உறிஞ்சிவிடுகிறது. இதனால் அவன் முரண்களிலிருந்து விடுபட்டவன் ஆகின்றான். எனவே அவன் நித்திய சாந்தியைப் பெறுகிறான்1ச்1வத் சா1ந்திம் நிக3ச்ச2தி


=> சாந்தியின் வகைகள்:

ஒருவனின் சாந்தியை பல்வேறு வகைகளாகக் கூறலாம். இங்கு விவாதிக்கப்படுபவன், செய்ய வேண்டியதைச் செய்து, செய்யக் கூடாததை செய்யாமல் தவிர்ப்பதனால் இயல்பாகவே அவனுள் ஒரு ஒப்பீட்டளவிலான அமைதி(சா1ந்தி) நிலவுகிறது. மேலும் அவன் தெளிவான புரிதலுடன் இருக்கும் காரணத்தினால் தர்மவான் ஆகிறான். இதனால் அவனது நடத்தையும், குணங்களும், இயல்புகளும் மேம்படுகின்றன. ஆத்மாவைப் பற்றிய புரிதலானது தெளிவை அடைகிறது. சுயத்தின் தன்மை என்பது மாற்றத்திற்கு உட்பட்டதல்ல என்கிற இந்த புரிதல் அவனுக்கு நித்தியமான ஆனந்தத்தை தருகிறது. ஆகவே அவனுடைய சாந்தி என்பது 1ச்1வத் சா1ந்தி, சுய சொரூபத்தின் இயல்பாகவே இருக்கின்ற என்றுமுள்ள சாந்தமாகும். மனதின் பல்வேறு நிலைகள் தனது சுயத்தினுடைய மதிப்பீட்டிற்கான காரணியாக இல்லாமல், ‘ஆத்மா மாற்றத்தை அடையாததுஎனும் ஞானம் உறுதியாக இருக்கும்போது உண்டாகும் அமைதி, 1ச்1வத் சா1ந்தி ஆகும். எனவே தன்னறிவு, சாந்தி என்று அழைக்கப்படும்.


=> பக்தனுக்கு வீழ்ச்சியில்லை:

கௌந்தேய ப்ரதிஜாநீஹி மே 4க்த: ப்ரணச்1யதிஅர்ஜுனா, என்னுடைய பக்தன் நாசமடைவதில்லை என்பதை உறுதியாக அறிவாயாக, என்கிறார். இது மிகப் பிரபலமான வாக்கியம் ஆகும். இங்கு பக்தன் என்பது அர்ப்பணிப்புடன் கூடியவனைக் குறிக்கிறது, அதாவது ஈஷ்வரனை அங்கீகரிப்பவன் என்பது பொருள். ஈஷ்வரனை அடையாளம் காண்பது எளிதான காரியம் அல்ல என்பதால் இந்த அங்கீரித்தல் என்பது ஒரு பெரிய வரம் ஆகும். அதை உணர்ந்தவனாக, ஈஷ்வரனைப் பற்றிய அறிவை அடைவதை இலக்காகக் கொள்பவன் இங்கு பக்தன் எனப்படுகிறான்

இங்கு நாசமடைவதில்லை( ப்ரணச்1யதி) என்பது மனம் அடைந்த அந்த ஆன்மீக வளர்ச்சியிருந்து திரும்ப வீழ்ச்சியடைய மாட்டான் என்பதைக் குறிக்கிறது. ஒவ்வொரு சாதகனுக்கும், தங்களின் பழைய குணங்கள் மாறி தர்மம் மற்றும் ஞானத்தில் நிலைக்க முடியுமா என்கிற பயம் உள்ளூர இருக்கும். அந்த பயத்தை இங்கு பகவான் நீக்குகிறார். எனது வார்த்தை மீதும் என் ரூபமாகவேயுள்ள தர்மத்தின் மீதும் முழு நம்பிக்கை வைத்தவன் வீழமாட்டான், என்கிறார் பகவான்

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.32|| யார் மோக்ஷத்திற்கு தகுதியானவர்கள்:

मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्यु: पापयोनय:

स्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ।। ३२ ।।

மாம் ஹி பார்த2 வ்யபாச்1ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய:

ஸ்த்ரியோ வைச்1யாஸ்ததா2 சூ1த்3ராஸ்தேऽபி யாந்தி பராம் 3திம் ।। 32 ।। 


पार्थ  பார்த2  பார்த்தா   पाप योनय:  பாப யோநய:  கீழான நடத்தையுடைய குடும்பத்தில் பிறந்தவர்கள்   

तथा  ததா2  அங்ஙனமே    स्रिय:  ஸ்த்ரிய:  பெண்கள்    वैश्या:  வைச்1யா:  வைசியர்கள்     

शूद्रा:  சூ1த்3ரா:  சூத்திரர்கள்   ये  யே  யார்    अपि स्युஅபி ஸ்யுஇருக்கிறார்களோ   ते अपि  தே அபி  அவர்களும் கூட   मां व्यपाश्रित्य  மாம் வ்யபாச்1ரித்ய  என்னைச் சார்ந்திருந்து    

परां गतिम्  பராம் 3திம்  மேலான கதியை (மோக்ஷத்தை)    हि  ஹி  நிச்சயமாக    यान्ति  யாந்தி  அடைகிறார்கள்.


பார்த்தா, கீழான நடத்தையுடைய குடும்பத்தில் பிறந்தவர்கள், அங்ஙனமே பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் இவர்களனைவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாக மேலான கதியை (மோக்ஷத்தை) அடைகிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பாவிகளென்னைப் பணிவாராயினும்,
மாதரேனும், வைசியரேனும்,
சூத்திரரும் பரகதி பெறுவார்.


விளக்கம்:

மோக்ஷத்தை அடைய யாருக்கு தகுதி என்பது குறித்து, அதாவது அதிகாரித்துவமாக அமைவது எது என்பது குறித்து பகவான் இச் சுலோகத்தில் பேசுகிறார்


=> தகுதியுடையவர்கள்:

பாப யோநய:கீழான நடத்தையுடைய குடும்பத்தில் பிறந்தவர்கள். மனபரிபாகத்துக்கு ஏற்றாற்போல பிறவி மேலானது அல்லது கீழானது ஆகிறது. எனவே, இச்சொல் நிஷித்த கர்மம் எனச் சொல்லப்படும் செய்யக்கூடாத செயலைச் செய்பவர்களை அல்லது குற்றவாளிகள் போன்ற மிக மோசமான நடத்தை கொண்ட பெற்றோருக்குப் பிறந்தவர்களைக் குறிக்கிறது. கஜேந்திரன் என்னும் யானை மோக்ஷத்தை அடைந்தது போன்ற கதைகளும் நம்மிடம் இருப்பதால், இது மனிதர்களின் ஜென்மத்துடன் ஒப்பிடும்போது கீழானதாக கருதப்படும் விலங்கினங்களைக் குறிக்கிறது எனவும் கூறலாம். குளத்திற்குச் சென்றபோது அங்குள்ள முதலையின் வாயில் அகப்பட்டு, அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற வேண்டி குளத்திலிருந்த தாமரையைப் பறித்து இறைவனுக்குப் படைத்தது யானை. இந்த தூய்மையான பக்தியின் காரணமாக, முதலையிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இறைவன் அருளினார். மேலும், ஜடாயு எனும் பறவையும், வானர இனத்தைச் சேர்ந்த ஹனுமனும் மோக்ஷத்தைப் பெற்றனர்

பொதுவாக, ‘பாப-யோநய:என்பது எந்தப் பிறவியில் துன்பம் மேலோங்கி இருக்கின்றதோ அந்த பிறப்பு ஆகும். பாபம் என்பது துக்கத்தை பலனாகக் கொடுப்பதைக் குறிக்கிறது. இதனடிப்படையில் கொசுக்கடியும் கூட ஒருவகையில் பாபத்தின் வெளிப்பாடு எனலாம்

அதேபோல, பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் இவர்களனைவரும் நிச்சயமாக மேலான கதியை, அதாவது மோக்ஷத்தை அடைகிறார்கள்ததா2 ஸ்த்ரிய: வைச்1யா: சூ1த்3ரா: தே அபி ஹி பராம் 3திம் யாந்தி. இதன் உட்கருத்து என்னவெனில், மோக்ஷத்தை பெறுவதற்கான தகுதி என்பது அவர்களின் பெற்றோரையோ அல்லது வர்ணத்தையோ சார்ந்தது அல்ல. வாழ்க்கை முறையை குறிப்பதாகவுள்ள ஆஷ்ரமத்தையோ, வயதையோ அல்லது ஆண்-பெண் பேதத்தையோ சார்ந்தது அல்ல


=> கர்ம-காண்டத்திற்கும் ஞான-காண்டத்திற்குமுள்ள முக்கிய வேறுபாடு:

வேதத்தின் பூர்வ பாகமான கர்ம காண்டத்தில் கீழ்கண்ட இரண்டும் முக்கியத்துவம் பெறுகிறது:

(1) அர்த்தித்வம் - இது யாக பலனில் ஆசை கொள்ளும் தன்மையைக் குறிக்கிறது. அதாவது சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற இச்சை இருந்தால்தான் அவன் அதற்குரிய வேள்வியைச் செய்ய தகுதியுடையவன் ஆகின்றான். இச்சையின் காரணமாகவே அவன் அச்செயலைச் செய்வதால் அங்கு ஆசை முக்கியதுவம் பெறுகிறது

(2) தக்ஷத்வம் - அந்த குறிப்பிட்ட வேள்விக்கான தகுதிகளைக் குறிக்கிறது. அதாவது பிரம்மச்சாரி, கிரஹஸ்தன் போன்ற வேள்வி செய்யும் எஜமானனின் ஆஷ்ரமம்; பிராமண, க்ஷத்ரியன் போன்ற வர்ணம்; வயது; ஆண்-பெண் பேதம் முதலிய பல்வேறு விதிகள் உள்ளன. ஒவ்வொரு விதமான வேள்விக்கும் ஒரு குறிப்பிட்ட நியமங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நியமங்கள் மீறப்படும்போது அந்த வேள்வி பலன் அளிக்காது அல்லது விபரீதமான பலனை அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஞான காண்டத்தில் இந்த விதிகள் எதுவும் கிடையாது. இங்கு அர்த்தித்வம் என்பது மோக்ஷ ஆசை. தக்ஷத்வம் என்பது சாதன சதுஷ்டய சம்பத்தி எனக் கூறப்படும் விவேகம், வைராக்கியம், புலனடக்கம், மனக்கட்டுப்பாடு போன்ற குணங்களைக் குறிக்கிறது. எனவே கர்ம-காண்டத்திற்கும் ஞான-காண்டத்திற்கும்,

(i) விஷயம் வேறு வேறு.

(ii) அதிகாரி, தகுதியுடையவன் வேறு வேறு.

(iii) பலன் வேறு வேறு.

எனவேதான் பகவான் இந்த சுலோகத்தில் மோக்ஷத்திற்கான அதிகாரித்துவத்தை, தகுதியை இவ்விதம் கூறுகிறார்மாம் வ்யபாச்1ரித்ய, என்னைச் சார்ந்திருந்து. அதாவது, என்னிடம் பக்தி செலுத்தி, என்னை ஆதாரமாகக் கொண்டவன் மேலான கதியை அடைகிறான். ஞான வடிவில் இருக்கும் மோக்ஷத்தை அடைய பிறப்போ, குலமோ, ஆஷ்ரமமோ, ஆண்-பெண் பேதமோ என எதுவும் கிடையாது


=> மேலான கதி:

அழுக்குப் படிந்த உடல் நீராடுவதால் சுத்தியடைகிறது. பரமனைப் பக்தியுடன் போற்றுவதால் சித்தமலம் அகலுகிறது; மனம் குவிகிறது; பரபோதம் ஓங்குகிறது; பரகதியும் கைகூடுகிறது. மேற்கூறப்பட்ட பேதங்கள் எதுவும் ஒருநாளும் பக்திக்கு இடைஞ்சல் அல்ல. கடலை அடையும் நதிகளெல்லாம் கடல் மயம் ஆகின்றன. புண்ணிய நதி, சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன. அதுபோல கடவுளைக் கருதும் மனிதர்களெல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர். இறைவனை அடையத்தகாதார் என எவருமில்லை.

எனவே ஈஷ்வரனை நாடுபவர்கள் எவராயிருப்பினும் அவர்கள் பரா கதியை, எதை அடைந்தால் திரும்புதல் இல்லையோ அந்நிலையை அடைகின்றனர். பந்தத்திலிருந்து விடுவிக்கும் இந்த மேலான முடிவிற்கு இணையான முடிவு என வேறெதுவுமில்லை


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

புயல்காற்று அடிக்கும்போது அரசமரம் இன்னது, ஆலமரம் இன்னது என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல பக்தி என்னும் புயற்காற்று ஒருவனுக்குள் அடிக்கும்போது அவனிடம் ஜாதிபேதம் இருக்க முடியாது.

---------------------------------------------------------------------------------------------------------------------