||9.27|| பக்தியை மேலும் விரித்துக் கூறுகிறார்:
यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ।। २७ ।।
யத்கரோஷி யத3ச்1நாஸி யஜ்ஜுஹோஷி த3தா3ஸி யத் ।
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத3ர்பணம் ।। 27 ।।
यत् करोषि யத் கரோஷி எதைச் செய்யினும் यत् अश्नासि யத் அச்1நாஸி எதை உண்டாலும்
यत् जुहोषि யத் ஜுஹோஷி எதை ஹோமம் செய்யினும்
यत् ददासि யத் த3தா3ஸி எதை தானம் கொடுத்திடினும்
यत् तपस्यसि யத் தபஸ்யஸி எத்தவத்தைச் செய்தாலும் कौन्तेय கௌந்தேய குந்தியின் புதல்வா
तत् தத் அதை मद् अर्पणम् மத்3 அர்பணம் எனக்கு அர்ப்பணமாக कुरुष्व குருஷ்வ செய்.
குந்தியின் புதல்வா, நீ எதைச் செய்தாலும், யாது புசித்தாலும், ஏது ஹோமம் பண்ணினாலும், எதை தானம் கொடுத்தாலும், எத்தவத்தைப் புரிந்தாலும் அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான், ஒருவன் செய்யும் அனைத்து விதமான கர்மங்களையும் ஈஷ்வரார்ப்பணமாகச் செய்யவேண்டும் எனக் கூறி கர்மயோகத்தையும் பக்தியோகத்தையும் சமப்படுத்துகிறார்.
பொதுவாக மக்கள் வேள்விச் சடங்குகள், பிரார்த்தனைகள் போன்றவற்றை தங்களது யோகக்ஷேமத்திற்காக, குறிப்பிட்ட பலனை விரும்பிச் செய்கின்றனர். இது காம்ய-கர்ம எனப் பார்த்தோம். இதே கர்மங்களை நிஷ்காம-கர்மமாகவும் செய்ய முடியும். நிஷ்காம-கர்மம் எனில் பலனை எதிர்பார்க்கக் கூடாது என்று அர்த்தமல்ல. அந்தக்கரண-சுத்தியைத் தவிர வேறு எதையும் பலனாக எதிர்பார்க்கவில்லை என்பதே இதன் பொருள்.
=> அந்தக்கரண-சுத்தி:
அந்தக்கரண-சுத்தி, அதாவது மனத்தூய்மையின் உண்மையான பொருள் என்ன? விருப்பு மற்றும் வெறுப்புகளின் கையில் இல்லாமலிருப்பது மனத்தூய்மை(அந்த-கரண-சுத்தி) எனப்படுகிறது. எல்லா உளவியல் சிக்கல்களுக்கும் ஒருவனின் விருப்பு மற்றும் வெறுப்பே மூலக் காரணமாக உள்ளது. அவன் தனது பிரச்சனையாக நினைக்கும் எந்தவொன்றை எடுத்து பகுப்பாய்வு செய்தாலும் அது இந்த இரண்டின் கீழ் வருவதைக் காணலாம்.
இனி, வழிபாட்டிற்கும் மனத்தூய்மைக்கும் உள்ள தொடர்பு பற்றி சிறிது விசாரம் செய்யலாம். சித்த-சுத்தியை அடைய விரும்பும் ஒருவனுக்கு வழிபாடு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது இயலாமையைப் புரிந்து கொள்ளும் ஒருவனாலேயே தன்னை மன்னித்துக் கொள்ள முடியும். தனது வரம்பைத் தெளிவாக அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே தன்னை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும்; கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் இதைவிட சிறப்பாக தன்னால் எதையும் செய்திருக்க முடியாது என அங்கீகரிக்க முடியும். பக்தியுடன் கூடிய மனதினாலேயே இவையனைத்தும் சாத்தியப்படும். இந்தப் புரிதலே மனதில் ஒரு குறிப்பிட்ட அளவு அமைதியை உருவாக்கும். இத்தகைய அமைதியை அடைந்த மனதினால் மட்டுமே தெளிவான விசாரத்தில் ஈடுபட முடியும். இந்த சுலோகத்தில் பகவான் மோக்ஷத்தில் ஆர்வமுடைய ஒருவனைப் பற்றி பேசுகிறார். அவன் அந்தக்கரண-சுத்திக்காக மட்டுமே கர்மங்களைச் செய்கிறான். அவன் ஒரு கர்ம-யோகியாக செயல்களின் பலன்களைத் துறந்துவிட்டான்(கர்ம-ப2ல-த்யாக3). தர்ம-அர்த்த-காமத்திற்காக செயல் செய்யவில்லை; மோக்ஷத்தின் பொருட்டு மனத்தூய்மைக்காக மட்டுமே செயல் செய்கிறான். அவனுடைய ஈஷ்வர ஆராதனை எப்படிப்பட்டது என பகவான் இங்கு அர்ஜுனனிடம் குறிப்பிடுகிறார்.
கௌந்தேய தத் மத்3 அர்பணம் குருஷ்வ — குந்தியின் புதல்வா, நீ எதைச் செய்தாலும் அதை எனக்கு அர்ப்பணமாகச் செய், என்கிறார். அதாவது யோகக்ஷேமத்தை எதிர்பாராது, ஈஷ்வர ஆராதனையாகச் செய். அர்ப்பண-புத்தி என்பது கீழ்கண்ட இரு பாவனையை உள்ளடக்கியது :
(1) பலனைப் பற்றிய எதிர்பார்ப்பு இல்லாமல் அந்த செயலை செய்வதிலேயே முழு திருப்தியை அடைதல்.
(2) ‘மமதா த்யாக3:’ - என்னுடையது எனும் மனப்பான்மையை தியாகம் செய்தல். எதுவும் எனக்கு சொந்தமில்லை; நான் எதற்கும் உரிமையாளன் அல்ல. இவையனைத்தும் என் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டவை அவ்வளவே.
இதுவே பக்தியின் வெளிப்பாடு ஆகும். இத்தகைய பிரார்த்தனையின் பலனாக உள்ளம் தூய்மையை அடைகிறது.
யத் கரோஷி — நீ எதைச் செய்தாலும். இங்கு பகவான் அர்ஜுனனிடம் நேரடியாகப் பேசுகிறார். நீ எதையெல்லாம் செய்கிறாயோ அதை எனக்கும் அர்ப்பணமாகச் செய்து, அதன் பலனை எனது பிரசாதமாக ஏற்றுக் கொள்.
யத் அச்1நாஸி — எதை உண்டாலும். எதை சாப்பிடும்போதும் அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்து புசிப்பாயாக என்கிறார் பகவான். ஆகவேதான் சாப்பிடுவதற்கு முன், ‘ப்ராணாய ஸ்வாஹா, அபானாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதானாய ஸ்வாஹா, சமானாய ஸ்வாஹா, ப்ரஹ்மனே ஸ்வாஹா’ என்று கூறி உணவைப் படைக்கிறோம். இதன் பொருள்: சுவாச வடிவமான பிராண, காற்றை உள்ளே இழுக்கும் அமைப்பான அபான, ஜீரணிக்கும் சக்தியான சமான, முழு இரத்த ஓட்டம் நடைபெற உதவும் சக்தியான வியான, மரணத் தருவாயில் உடலைவிட்டு உயிர் வெளியேற உதவும் அமைப்பான உதான, நான் இந்த உணவைப் படைக்கிறேன். ஒவ்வொரு உடலிலும் வசிக்கும் சூக்ஷம உடலின் அதிபதியான ஹிரண்யகர்பனுக்கு இந்த உணவை அளிக்கிறேன். இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்து உணவருந்தும் பழக்கம் இன்றும் உள்ளது. உணவில் வைத்துள்ள பற்றானது போகப் பிரியத்துக்கு அறிகுறியாகும். உண்பதையே கடவுள் ஆராதனையாகச் செய்து பழகப் பழக போகமானது யோகமாக மாறியமைகிறது. ஈஷ்வரனுக்கு படைக்கப்பட்ட உணவு பிராசதமாக ஆகிறது.
யத் ஜுஹோஷி — எதை ஹோமம் செய்யினும். ஸ்ரெளத-கர்ம அல்லது ஸ்மார்த்த-கர்ம போன்ற தினசரி அல்லது விசேஷ சந்தர்ப்பங்களில் செய்யப்படும் எந்தவொரு வேள்விச் சடங்கையும் எனக்கு அர்ப்பணமாகச் செய். தர்மத்திற்காகவோ, அர்த்தத்திற்காகவோ அல்லது காமத்திற்காகவோ அல்லாமல் எனக்காகச் செய், என்கிறார் பகவான். ஒருவனின் பாவனையே இங்கு முக்கியமானது. மற்றபடி, நாம் அர்ப்பணமாகக் கொடுத்து பகவானுக்கு ஆகப் போவது என எதுவுமில்லை. இருப்பினும், இதை தொடர்ந்து செய்யச் செய்ய அது ஒரு குறிப்பிட்ட பாவனையை மனதில் நிலைபெறச் செய்யும்.
யத் த3தா3ஸி — எதை தானம் கொடுத்திடினும். பணம், பொன், உணவு, உடை, காலம் என எதை தானமாகக் கொடுக்கும்போதும் அதை ஈஷ்வரார்ப்பணமாகச் செய், என்கிறார். கருமியாகவுள்ள லோபியைக் காட்டிலும் தானம் கொடுப்பவன் மேலானவன். ஈதல் அறம் எனப்படுகிறது. அப்படி கொடுக்கிறவன் தன்னைப் பெரியவனாகக் கருதுவானேயானால் அஹங்காரத் தடிப்பால் அவன் சிறியவனாகிறான். தானம் செய்வதை நாராயண சேவையாகக் கருதுமிடத்து அஹங்காரம் தேய்கிறது. கடவுளுக்குப் பூஜை செய்யும் பாவனையே தானம் செய்வதிலும் வந்தமைய வேண்டும்.
யத் தபஸ்யஸி — எத்தவத்தைச் செய்தாலும். விரதம், ஜபம், தியானம் என பலவிதமான தவங்கள் உள்ளன. சித்தியின் பொருட்டுச் செய்யும் காமிய தபசாக அல்லாமல், அதை இறைவனைப் பொருட்டு நிஷ்காமமாகச் செய்யவேண்டும். ‘தவசிகளுக்கிடையில் நான் தபசாயிருக்கிறேன்’ என சுலோகம் 7.9 - ல் பகவான் கூறினார். ஆகையினால் தவம் என்பது தெய்வ சம்பத்து, அவரிடத்திலிருந்து வந்தது. அதனால் அவரது பெருமையே நிலைபெறுக என்றெண்ணி, ஈஷ்வரார்ப்பணமாக தவம் புரிதல் சாலச் சிறந்தது.
இவ்விதம் அன்றாடச் செயல்கள் முதல் தானம் தவம் பூஜைகள் பிரார்த்தனைகள் வரை எதைச் செய்தபோதிலும் அது ஈஷ்வரனுக்காகவென செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்யுமிடத்து இது ஈஷ்வர ஆராதனை, இது லெளகிகம் என்கிற வேறுபாடு இல்லாது, வாழ்க்கையே ஓர் இடையறாத ஆராதனையாகிறது. மோக்ஷத்தை விரும்புவது என்பது ஈஷ்வரனை விரும்புவதாகும், ஏனெனில் மோக்ஷம் என்பது ஈஷ்வரனிலிருந்து பிரிக்கப்படாதது. முழுமை என்பதை இயல்பெனக் கொண்ட, சிருஷ்டிக்கு காரணமான அந்த ஈஷ்வரன் நானாகவே இருக்கின்றேன் என அறிதலே மோக்ஷம். இத்தகைய மோக்ஷத்தை அடைய மனத்தூய்மை மிக அவசியமானத் தகுதியாகும். இறைவனுக்காகவென செய்கின்ற செயல்களால் விருப்பு-வெறுப்பின் பிடியிலிருந்து மனமானது விடுபட்டு தூய்மையை அடையப்பெறுகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் பிரார்த்தனை:
‘தாயே நான் ஒரு யந்திரம்; நீ ஒரு யந்திரீ. நான் ஓர் அறை; நீ அதில் குடியிருப்பவள். நான் உறை; நீ அதனுள் போடப்படும் வாள். நான் ரதம்; நீ சாரதி. நீ ஆட்டிவைக்கிறபடி நான் ஆடுகிறேன். நீ பேசுவிக்கிறபடி நான் பேசுகிறேன். என் செயல் என்பதெல்லாம் என் உள்ளிருக்கும் உன் செயலே. நான் அல்லேன், நான் அல்லேன், எல்லாம் நீ தான்’.
---------------------------------------------------------------------------------------------------------------------
||9.28|| நிஷ்காம பக்தியின் பலன்:
शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनै: ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ।। २८ ।।
சு1பா4சு1ப4ப2லைரேவம் மோக்ஷ்யஸே கர்மப3ந்த4நை: ।
ஸம்ந்யாஸயோக3யுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி ।। 28 ।।
एवं ஏவம் இங்ஙனம் शुभ-अशुभ-फलै: சு1ப4 அசு1ப4 ப2லை: சுப அசுப பலன்களைத் தருகின்ற
कर्म बन्धनै: கர்ம ப3ந்த4நை: கர்ம பந்தங்களிலிருந்து मोक्ष्यसे மோக்ஷ்யஸே விடுபடுவாய்
संन्यास-योग-युक्त-आत्मा ஸம்ந்யாஸ யோக3 யுக்த ஆத்மா சந்யாச யோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்தவனாய் विमुक्त: விமுக்த: வினையினின்று விடுபட்டு
माम् उपैष्यसि மாம் உபைஷ்யஸி என்னை அடைவாய்.
இங்ஙனம் நன்மை தீமைகளை உண்டாகும் கர்ம பந்தங்களிலிருந்து விடுபடுவாய். சந்யாச யோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்தவனாய், வினையிலிருந்து விடுபட்டு என்னை அடைவாய்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய். என்னையும் பெறுவாய்.
விளக்கம்:
எல்லாம் ஈஷ்வரனுக்கு அர்ப்பணம் செய்வதால் ஒரு ஜீவன் அடையும் நன்மை என்ன? நிஷ்காம பக்தியின் பலன் என்ன? என்பதை பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார்.
சு1ப4 அசு1ப4 ப2லை: கர்ம ப3ந்த4நை: மோக்ஷ்யஸே — சுப அசுப பலன்களைத் தருகின்ற கர்ம பந்தங்களிலிருந்து விடுபடுவாய், என்கிறார் கிருஷ்ணர். ஒவ்வொரு கர்மமும் இரு வகையான முடிவுகளை உருவாக்குகிறது. விரும்பத்தக்கது, சு1ப4-ப2ல, புண்ணியம்; விரும்பத்தகாதது, அசு1ப4-ப2ல, பாபம். செயல் செய்கிற கர்த்தாவிற்கு ஏதேனுமொரு பிரயோஜனத்தை கொடுப்பதால் இக்கர்மங்கள் அனைத்தும் பந்தத்தை உண்டாக்குகின்றன — கர்ம ப3ந்த4. ஏனெனில் சுக-துக்க வடிவில் வருகின்ற இந்த கர்மபலனை இந்த கர்த்தாவே அனுபவிக்க வேண்டும். இதன் பொருட்டு அவனுக்கு உடல், மனம் மற்றும் புலன்கள் இருக்க வேண்டும். எனவே அவனுக்கு பிறப்பு(ஜந்ம) தேவைப்படுகிறது. இவ்விதம் கர்மத்தின் காரணமாக ஜென்மமும், ஜென்மத்தின் காரணமாக கர்மமும் உண்டாகிறது.
இவை அனைத்திலிருந்தும் நீ விடுபடுவாய் என்று பகவான் கூறுகிறார். எப்படி?
=> சந்யாச-யோகம்:
ஏவம் — இவ்விதம். அதாவது சென்ற இரண்டு சுலோகங்களில் பகவானால் சொல்லப்பட்ட நிஷ்காம பக்தியின் மூலம், என்பது இதன் பொருள். இவ்விதம் அனைத்து செயல்களையும் ஈஷ்வரனுக்கு அர்ப்பணமாகச் செய்வதன் மூலம், சந்யாசத்துடனும் யோகத்துடனும் பொருந்திய மனதை உடையவன் ஆகின்றான் — ஸம்ந்யாஸ யோக3 யுக்த ஆத்மா. கர்மத்தை விடுதல், கர்மத்தைச் செய்தல் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள முரண்பாடு இங்கு சந்யாச-யோகத்தில் சமரசம் பெறுகிறது. இவன் அனைத்து கர்மத்தையும் செய்தபோதிலும், தனக்கென்று ஒன்றும் செய்யாது எல்லாம் ஈஷ்வரார்ப்பணமாகச் செய்கிறபடியால் அது சந்யாசமாகிறது. ஏனெனில் இங்கு பலனைத் தியாகம் செய்கின்றான். இருப்பினும், பகவான் பொருட்டு முறையாகவும் ஊக்கத்துடனும் சொந்த விருப்பு-வெறுப்பின்றியும் செயல் நடைபெறுவதால் அது யோகமாகிறது. அத்தகைய யோகிக்கு கர்ம சொரூபமாகவுள்ள வாழ்க்கையில் குறையொன்றுமில்லை. ஜீவன் முக்தனாக யோகி உடலில் வாழ்கின்றான். உடலை உகுத்தும் அவன் விதேக முக்தனாகின்றான்.
பொதுவாக கர்மம் ஒருவனை பந்தப்படுத்துகிறது. ஆனால் மனதின் பாவனையை மாற்றுவதன் மூலம், அதே செயல் ஒருவனின் மோக்ஷத்திற்கு வழிமுறையாக ஆகிறது. பந்தப்படுத்தும் கர்மம் பந்தப்படுத்தாததாக மாறுகிறது. அனைத்தையும் ஈஷ்வரனுக்காகவென செய்வதால், அவன் ஒரே நேரத்தில் பக்தனாக, கர்மயோகியாக, ஜிக்ஞாசுவாக மற்றும் முமுக்ஷுவாக ஆகின்றான். அவன் சந்யாச-யோக-யுக்த-ஆத்மா என்பதால் ஞானத்தை அடைவதற்கான அனைத்து தகுதிகளையும் பெறுகின்றான். அதனால், ஞானத்தை அடைதல் அவனுக்கு எளிதாகிறது.
=> நிஷ்காம பக்தனின் சந்யாசம்:
மோக்ஷத்தை பின்தொடரும் சாதகன் ஒருவன், தனது சாதனையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்தை தியாகம் செய்கிறான்.
(1) கர்மயோகம் - ‘இந்த குறிப்பிட்ட பலன் வேண்டும்’ என்ற சங்கல்பத்தை தியாகம் செய்கிறான். எந்த பலனையும் எதிர்பாராது மனத்தூய்மைக்காக மட்டுமே எல்லாவிதச் செயல்களையும் செய்கின்றான்.
(2) பக்தியோகம் - ‘மமதா_என்னுடையது’ எனும் எண்ணத்தை தியாகம் செய்கிறான். சென்ற சுலோகத்தில் பார்த்ததைப் போல, ‘எனக்கு எதுவும் சொந்தமில்லை, நான் உரிமையாளன் அல்ல’ எனும் விதத்தில் என்னுடையது எனும் மனப்பாங்கை துறந்து அனைத்தையும் ஈஷ்வரார்ப்பணமாகச் செய்கின்றான்.
(3) ஞானி - இறுதியில் சாதகன் ஒருவன் ‘அஹந்தா_நான்’ என்பதை தியாகம் செய்கிறான். தானெனல் எனும் அஹங்காரத் தியாகமே ஒருவனை ஞானியாக ஆக்குகிறது.
=> எதிர்காலப் பிரயோகம்:
விமுக்த: மாம் உபைஷ்யஸி — வினையினின்று விடுபட்டு என்னை அடைவாய். கால இடைவெளியை காட்டும் நோக்கில், பகவான் இந்த வாக்கியத்தை எதிர்காலத்தில் கூறுகிறார். முதல் வரியில் மோக்ஷ்யஸே, விடுபடுவாய் எனக் கூறினார், அதை தொடர்ந்து இங்கு என்னை அடைவாய் எனக் கூறுகிறார். நேரம் சம்பந்தப்பட்டிருப்பதால் இவ்விரு இடங்களிலும் எதிர்காலத்தைப் பிரயோகிக்கிறார். ஞானத்தை அடைய காலம் தேவைப்படுவதில்லை. ஆனால் அந்த ஞானத்தை அடைவதற்கான தகுதியைப் பெற, தடைகளை நீக்க காலம் தேவைப்படுகிறது. நிஷ்காம பக்தி -> சித்த சுத்தி -> வேதாந்த ஞானம் -> ஞான நிஷ்டை -> மோக்ஷம். ஒரு கர்மயோகியாக, மனத்தூய்மையை அடைந்து, அந்த மனத்துடன் சாஸ்திரத்தை புரிந்து கொள்வதன் மூலம் முக்தியை அடைகிறான் — விமுக்த:. வாழும்போதே பந்தத்திலிருந்து விடுபட்டவனாய், மனதை நிறைத்தவனாய் ஜீவன் முக்தனாகிறான்.
எனில், மரண காலத்தில் என்ன நடக்கிறது? இறக்கும் தருவாயில் உடல் விழும்போது, அவன் ஈஷ்வரனுடன் ஐக்கியமாகிறான். ஜீவத்துவம் எனும் தனித்தன்மையை நீக்கிவிட்டபடியால் இருப்பது ஈஷ்வரன் மட்டுமே. ஜீவன் ஈஷ்வரனுடன் ஒடுக்கத்தை அடைவதால், அவன் ஈஷ்வரனுடன் ஒன்றாகிறான். உயிருடன் இருக்கும்போதும் ஈஷ்வரன் மட்டுமே இருக்கின்றார் எனினும், பிராரப்த-கர்மத்தின் காரணமாக உடல், மனம் மற்றும் புலன்கள் உள்ளிட்ட வெளித்தோற்றமான வரம்புகள் தொடர்கிறது. பின்னர், உடல் உதிரும்போது, தோற்றத்திற்கு தெரிகிற இந்த வரம்புகளும் மறைந்துவிடுவதால், ஈஷ்வரன் மட்டுமே இருக்கின்றார்.
=> சரியான புரிதல்:
இங்கு பகவான், நீ என்னை வந்தடைவாய்(மாம் உபைஷ்யஸி) எனக் கூறுகிறார். இது, இப்பொழுது இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜீவர்களை நோக்கி சொல்லப்படுகின்றதே தவிர, சத்-சித்-ஆனந்த-ஆத்மாவை நோக்கி அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
இதுவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் வாக்கியங்களில் ஒன்று. நீ நானாகவே இருந்தும், என்னை வந்தடைகிறாய். ஒரு அந்நியனைப் போல என்னிடம் திருப்பி வருகிறாய் என்பது போன்ற இந்த வாக்கியம் ஒரு உருவக வெளிப்பாடு மட்டுமே. மற்றபடி, பகவானிடம் வருவதோ அல்லது பகவானை விட்டுப் போவதோ என எதுவுமில்லை. அவரிடமிருந்து எப்பொழுதும் யாரும் வேறானவராக இல்லை. இது புரிதலை மட்டுமே குறிக்கிறது.
முந்தைய சுலோகத்தில், அர்ஜுனா நீ எதைச் செய்தாலும் எனக்கு அர்ப்பணமாகச் செய் எனக் கூறுகிறார். அவ்விதம் ஈஷ்வர ஆராதனையாகச் செயல் செய்பவன் ஈஷ்வரனை அடைகிறான் எனில் மற்றவர்கள் அடைவதில்லை எனப் பொருள்படுவதாகிவிடும். தம்மைத் தொடர்ந்திருப்பவர்களுக்குத் துணைபுரிவதும் மற்றவர்களிடத்துப் பாரா முகமாயிருப்பதும் உலகத்தவர் இயல்பு. பகவானும் அதைத்தானே செய்கிறார்? அவருக்கும் விருப்பு வெறுப்பு உண்டு என்ற ஐயம் எழலாம். அதற்கு விடையாக அடுத்த சுலோகம் வருகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
இவ்வுலகில் இருக்கையில் நீ என்ன செய்யவேண்டும்? எல்லாவற்றையும் ஈஷ்வரனுக்கு அர்ப்பணம் செய்துவிடு. நீயும் அவனைச் சரணமடை. அப்பால் உனக்குத் துன்பமே இராது. சீக்கிரத்தில் ஈஷ்வர சன்னிதானத்தை அடைவாய்.
---------------------------------------------------------------------------------------------------------------------