||9.23|| அக்ஞானியின் பக்தி:
येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विता: ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ।। २३ ।।
யேऽப்யந்யதே3வதாப4க்தா யஜந்தே ச்1ரத்3த4யாந்விதா: ।
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி4பூர்வகம் ।। 23 ।।
कौन्तेय கௌந்தேய குந்தியின் மைந்தா श्रद्धया अन्विता: ச்1ரத்3த4யா அந்விதா: சிரத்தையோடு கூடிய
ये भक्ता: யே ப4க்தா: எந்த பக்தர்கள் अन्य देवता अपि அந்ய தே3வதா அபி மற்ற தேவதைகளையும்
यजन्ते யஜந்தே வணங்குகின்றார்களோ ते अपि தே அபி அவர்களும்
अविधि पूर्वकम् அவிதி4 பூர்வகம் விதி வழுவியவர்களாய் माम् एव மாம் ஏவ என்னையே
यजन्ति யஜந்தி வழிபடுகிறார்கள்.
அர்ஜுனா, சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வணங்கும்போது, விதி வழுவியவர்களாய் என்னையே வழிபடுகிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.
விளக்கம்:
தன்னிலிருந்து வேறாக ஈஷ்வரனைப் பார்க்கும் அக்ஞானிகளின் பக்தியையும் அவர்கள் அடையும் பலனையும் குறித்து சுலோகம் இருபத்திமூன்று முதல் இருபத்தி ஐந்து வரை பேசவுள்ளார்.
=> சிறு தேவதைகளை வணங்குபவர்கள்:
அந்ய தே3வதா ப4க்தா: — மற்ற தேவதைகளை வணங்கும் பக்தர்கள். த்வைதிகள் தவறாக புரிந்துகொள்ளும் ஒரு சுலோகம் இது. இதை அவர்கள் கிருஷ்ணரைத் தவிர மற்ற தெய்வங்களை வணங்குபவர்கள் என மொழிபெயர்க்கிறார்கள். அதாவது, கிருஷ்ணர் மட்டுமே ஒரே கடவுள் என்றும் அவரைத் தவிர பிற தெய்வங்களை வழிபடுபவர்களைப் பற்றி இங்கு பகவான் கூறுகிறார் என்றும் கூறுவார்கள். ஆனால் உண்மையில் அது அவ்விதம் அல்ல.
அனைத்துமே ஈஷ்வரன், எதுவும் ஈஷ்வரனிடமிருந்து வேறில்லை என ஏற்கனவே பல சுலோகங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே எல்லா தேவதைகளும் ஈஷ்வரனே. ஆகையினால் எந்த வடிவத்தையோ அல்லது பெயரையோ, எந்தவொரு முறையில் வழிபட்டாலும் அவன் பரமேஷ்வரனை மட்டுமே வணங்குகிறான் எனும் அறிவு இல்லாதவர்களை இந்த சுலோகம் குறிக்கிறது. அதாவது, எந்தவொரு தெய்வத்தையும் ஈஷ்வரனாக அல்லாமல் தனிப்பட்ட தேவதைகளாக மட்டுமே வழிபடுபவர்களைக் குறிக்கிறது.
ச்1ரத்3த4யா அந்விதா: யஜந்தே — சிரத்தையுடன் கூடியவர்களாக வழிபடுகிறார்கள். பழங்குடிகளில் ஆரம்பித்து நவீனமானவர்கள் வரை யாராக இருப்பினும் எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பினும் எல்லா பக்தர்களும் நம்பிக்கையுடனே வழிபடுகிறார்கள்.
கௌந்தேய அவிதி4 பூர்வகம் மாம் ஏவ யஜந்தி — அர்ஜுனா, விதி வழுவியவர்களாய் அவர்களும் என்னையே வழிபடுகிறார்கள், என்கிறார். ‘அவிதி4 பூர்வகம்’ என்பது இங்கு அக்ஞானத்துடன் கூடியவர்களை, ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொருவரிடமிருந்தும், ஈஷ்வரனிடமிருந்தும் வேறுபட்டது என நினைப்பவர்களைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட அறியாமையுடன் கூடியவர்களாக உண்மையில் அவர்கள் பரமேஷ்வரனாகிய என்னையே வழிபடுகிறார்கள். அவர்களின் வெவ்வேறு வகையான பிரார்த்தனைகளை இறுதியில் பெறுபவன் நானே, அறியாமையினால் அவர்கள் அதை உணர்வதில்லை.
ஓர் அரசாங்கத்தை நிர்வகிக்கும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் ஆணைகளையெல்லாம் அரசனிடமிருந்து பெறுகிறார்கள். விண்ணப்பதாரர் ஒருவன் தன் காரியம் நிறைவேறுவதற்கு உத்தியோகஸ்தருடைய தயவைப் பெற்று அதனின்று தனக்குத் தேவையான காரியம் நிறைவேறியதாக எண்ணுவானாகில், அவ்வெண்ணமானது அரசனது ஆதிக்கத்தைப் பற்றிய அக்ஞானத்தினின்று உதித்ததாகும். அரசனின் ஆட்சி முறையே எந்தவொரு காரியசித்திக்கும் அடிப்படையான காரணமாகிறது.
அதுபோல காரியசித்தி, புக்தி, முக்தி ஆகிய யாவும் முழுமுதற் பொருளாகிய சர்வேஷ்வரனிடமிருந்து வருபவைகள் என்று அறியாது, சிறு தேவதைகள் ஈசனுக்குப் புறம்பானவைகள் என்றெண்ணி, அச்சிறு தேவதைகளிடத்து வரம் வேண்டுபவர் விதிவழுவி விண்ணப்பித்தவர் ஆகின்றனர்.
ஏன் அதை முறை வழுவிய விண்ணப்பம் என்று சொல்ல வேண்டும் என்பதற்கான விடையாக அடுத்த சுலோகம் வருகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------
||9.24||நானே முழுமுதற் கடவுள்:
अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ।। २४ ।।
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ4க்தா ச ப்ரபு4ரேவ ச ।
ந து மாமபி4ஜாநந்தி தத்த்வேநாதச்1ச்யவந்தி தே ।। 24 ।।
हि ஹி நிச்சயமாக अहं एव அஹம் ஏவ நானே सर्वयज्ञानां ஸர்வயஜ்ஞாநாம் எல்லா வேள்விகளினுடைய भोक्ता च போ4க்தா ச போக்தாவாகவும் प्रभु: च ப்ரபு4 ச தலைவனாகவும் இருக்கின்றேன்
तु து ஆனால் ते தே அவர்கள் माम् மாம் என்னை तत्त्वेन தத்த்வேந உள்ளபடி
न अभिजानन्ति ந அபி4ஜாநந்தி அறிவதில்லை अत: அத: ஆகையினால் च्यवन्ति ச்யவந்தி வீழ்கிறார்கள்.
நானே சகல வேள்விகளுக்கும் போக்தாவாகவும் தலைவனாகவும் இருக்கின்றேன். ஆனால் பல தேவதைகளை வணங்குபவர் என்னை உள்ளபடி அறிவதில்லை. ஆகையால் அவர்கள் வழுவிப் பிறவியில் வீழ்கிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வார்.
விளக்கம்:
நானே முழுமுதற் கடவுள், அனைத்து தேவதைகளுக்கும் நானே சக்தியைக் கொடுக்கிறேன், அவர்களுக்கென எந்த சக்தியும் தனியாக இல்லை என்பதை பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார்.
=> முழுமுதற் தலைவன்:
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ4க்தா — நானே எல்லாவித வேள்விகளையும் அனுபவிப்பவன்(போக்தா) ஆகின்றேன். வேதச் சடங்குகள், வேள்விகள், பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் முதலிய அனைத்துவித ஸ்ரெளத மற்றும் ஸ்மார்த்த கர்மங்களுக்கும் நானே போக்தா. இறுதியில் அவைகள் என்னையே வந்தடைகின்றன. ‘போ4க்தா’ என்பது உண்பவன், அனுபவிப்பவன் என்று பொருள்படுகிறது. எல்லா வழிபாட்டின் இறுதியான திருமேனியாக நானே உள்ளேன்.
ப்ரபு4 ச — நான் தலைவனாகவும் இருக்கின்றேன். தலைவன், உரிமையுடையவன், சொந்தக்காரன் ‘ப்ரபு4’ எனப்படுகிறான். ஒவ்வொரு வேள்வியும் ஒரு குறிப்பிட்ட பலனை உருவாக்குகிறது. அந்த பலனைத் தருபவனாக (கர்ம-பல-தா3தா) நான் இருக்கின்றேன். வேள்வியில் ஆவாகனம் செய்யப்படும் தேவதைகளின் மூலமாக பலன் வந்தபோதிலும் அது உண்மையில் என்னிடமிருந்தே வருகின்றது. இறுதியாகக் கொடுப்பவனாக நான் இருப்பதால் எந்தவொரு கர்மத்திற்கும் நானே தலைவன்.
=> உள்ளபடி அறியாதவர்கள்:
து தே தத்த்வேந மாம் ந அபி4ஜாநந்தி — ஆனால் அவர்கள் உள்ளபடி என்னை அறிவதில்லை. இதுவே சிறு தேவதைகளை வணங்குபவர்களிடம் இருக்கின்ற ஒரே சிக்கல். ஈஷ்வரன் என்பவர் யார்? அவரின் இயல்பு என்ன? இந்த தேவதைகள் யார்? கர்த்தா யார்? கர்மபலனைத் தருபவர் யார்? இவைகளைப் பற்றியெல்லாம் அவர்கள் அறிவதில்லை. எந்தவொரு வழிபாடும் மோக்ஷத்திற்கு இட்டுச் செல்லும் அந்தக்கரண-சுத்தியைப் பலனாக அளிக்கும் என்றபோதிலும், அவர்களுக்கு அந்தப் பலன் கிடைப்பதில்லை. காரணம், பகவானைப் பற்றிய ஒரு மேலோட்டமான அறிவும் கூட அவர்களுக்கு இருப்பதில்லை. எனில், அவர்கள் எதை அடைகிறார்கள்?
அத: ச்யவந்தி — ஆகையினால் வீழ்கிறார்கள். மோக்ஷத்திற்கு உபாயமான மனத்தூய்மையைப் பெறுவதிலிருந்து வீழ்கிறார்கள்; மோக்ஷத்திலிருந்து வழுவுகிறார்கள். சித்த-சுத்திக்கு என செயலைச் செய்யும் கர்ம-யோகியே மேலான பலனை அடைகிறான். மற்றபடி, முந்தைய சுலோகங்களில் நாம் பார்த்த காம-காமி, அற்பமான முடிவிற்குட்பட்ட பலன்களில் ஆர்வமுள்ளவன், அதை அடைவதற்கென சிறிய தேவதைகளை வணங்கி அதை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறான். ஆகையினால் மேலான பலனாகிய மோக்ஷத்திலிருந்து விலகிச் செல்கிறான். என்னை உள்ளபடி அறியாமலேயே என்னை வழிபடுகிறான். இதனால் வரம்பற்ற நிலையை பெறுவதற்குப் பதிலாக வரையறுக்கப்பட்ட முடிவை மட்டுமே பெறுகிறான். பிரார்த்தனை என்பது என்றும் குறையுடையதல்ல, ஆனால் அவர்களின் சொந்த அறியாமையினால் பலனின் மகத்துவம் குறைந்து விடுகிறது.
இருப்பினும் இந்த பக்தர்கள் அனைவரும் நிச்சயமாக பலன்களைப் பெறுகிறார்கள் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அதாவது, அவரது கர்மங்களின் பலனை யாரும் மறுக்கவில்லை. இது அடுத்த சுலோகத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------