திங்கள், 6 நவம்பர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.21 - 9.22

||9.21|| ஸகாம பக்தர்களின் நிலை:

ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति

एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ।। २१ ।।

தே தம் பு4க்த்வா ஸ்வர்க3லோகம் விசா1லம் 

க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விச1ந்தி  

ஏவம் த்ரயீத4ர்மமநுப்ரபந்நா 

3தாக3தம் காமகாமா லப4ந்தே ।। 21 ।।


ते  தே  அவர்கள்   तं  தம்  அந்த    विशालं   விசா1லம்  விசாலமான   

स्वर्ग लोकं  ஸ்வர்க3 லோகம்  சொர்க்க லோகத்தை   भुक्त्वा  பு4க்த்வா  அனுபவித்து   

क्षीणे पुण्ये  க்ஷீணே புண்யே  புண்ணியம் தேய்ந்த பின்பு     मर्त्य लोकं  மர்த்யலோகம்  மனுஷ்ய லோகத்தை    विशन्ति  விச1ந்தி  புகுகிறார்கள்   एवं  ஏவம்  இங்ஙனம்   त्रयीधर्मम्  த்ரயீத4ர்மம்  மூன்று வேதநெறிகளையும்   अनुप्रपन्ना:  அநுப்ரபந்நா  பின்பற்றும்    कामकामा:  காமகாமா:  இன்பப்பித்தர்களாய்    

गतागतं  3தாக3தம்  போவதையும் வருவதையும்    लभन्ते  லப4ந்தே  அடைகிறார்கள்.


அவர்கள் அந்த அகன்ற வானுலகை அனுபவித்து, புண்ணியம் தேய்ந்த பின்பு மண்ணுலகில் புகுகிறார்கள். இங்ஙனம் மூன்று வேதநெறிகளையும் பின்பற்றும் போகப்பித்தர்கள் பிறப்பு இறப்பு எய்துகின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.


விளக்கம்:

பொருள் உள்ள அளவு மண்ணுலகில் மதிப்பு இருப்பது போன்று புண்ணியம் உள்ள அளவு விண்ணுலகில் மதிப்பு உண்டு. அது அழிந்ததும் அங்கு அவர்களுக்கு இடமில்லை. புதிய புண்ணியத்தைத் தேடக் கர்ம பூமிக்கு அவர்கள் திரும்பி வருகிறார்கள். சுதந்திரமற்று இன்ப நுகர்ச்சிக்காக அவர்கள் யாண்டும் உழன்றாக வேண்டுமென பகவான் கூறுகிறார்


=> போகப் பிரியர்களின் நிலை:

தே தம் விசா1லம் ஸ்வர்க3 லோகம் பு4க்த்வாஅவர்கள் பரந்த அந்த சொர்க்கலோகத்தை அனுபவிக்கிறார்கள். வகைகள், பன்முகத்தன்மை மற்றும் காலத்தின் நோக்கில் சொர்க்கம் விசாலத்தை உடையது. அவர்கள் சொர்க்கம் செல்வதற்குக் காரணமாக இருந்தது புண்ணியமே; எனவே புண்ணியம் எஞ்சியிருக்கும் வரை மட்டுமே அங்கு இருக்கமுடியும். பரலோகத்தில் அவர்கள் அனுபவிக்கும் உடல் முதல் அவர்கள் அடையும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் தாங்கள் சம்பாதித்த புண்ணியத்தை செலவிடுகிறார்கள். இவ்விதம் அவர்களின் புண்ணியங்கள் அனைத்தும் தீர்ந்தவுடன்(க்ஷீணே புண்யே) என்ன நடக்கிறது?

அவர்கள் மனித உலகிற்கு வருகிறார்கள்மர்த்யலோகம் விச1ந்தி. இதிலிருந்து சொர்க்கத்தை அமிர்த-லோகம், அதாவது அழியாதது என அழைப்பது அர்த்தமற்றது எனத் தெளிவாகிறது. காலத்தின் அடிப்படையில், ஒப்பீட்டளவில் மண்ணுலகைக் காட்டிலும் விண்ணுலகு நீண்டது அவ்வளவே. எனவே அதை நித்தியமானது, காலமற்றது, மோக்ஷத்திற்கிணையானது எனக் கூறுவது தவறான கருத்தாகும். இதனாலேயே அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று, சொர்க்க சுகங்களை நாளுக்கு நாள் அனுபவிக்க காரணமான புண்ணியங்கள் தீர்ந்தவுடன் திரும்பி வருகிறார்கள். மேலும் அங்கு, ‘கர்த்ருதுவம்எனும் செயல் செய்தல் இல்லையாதலால் கர்மங்களைச் செய்து புதிய புண்ணியங்களைச் சேர்க்க முடியாது. அங்கு போக்தாவாக மட்டுமே ஒருவன் இருக்க முடியும். எனவே தங்களிடமிருந்த புண்ணியங்கள் தீர்ந்து, புதிய புண்ணியங்களைச் சேகரிக்கவேண்டி மீண்டும் பூலோகம் புகுகிறார்கள்


=> கர்ம காண்டத்தை எடுத்துக் கொண்டவர்கள்:

த்ரயீத4ர்மம் ஏவம் அநுப்ரபந்நா இங்ஙனம் மூன்று வேதநெறிகளையும் பின்பற்றுபவர்கள். இங்குஏவம்என்பது முந்தய சுலோகத்தில் சொல்லப்பட்ட விதத்தில், என்பதைக் குறிக்கிறது. அதாவது, சோம-யாகத்தைச் செய்வது மற்றும் வைதிக கர்மங்களைச் செய்வதன் மூலம் தவறான செயல்களைத் தவிர்ப்பதைக் குறிக்கிறது. ‘த்ரயீஎனில் மூன்று வேதங்கள், மற்றும்4ர்மம்எனும் சொல் இங்கு கர்மத்தைக் குறிக்கிறது. அதாவது பிற லோகங்களை அடைவதன் பொருட்டு மூன்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வேள்விச் சடங்குகள் மூலம் தேவதைகளை ஆவாகனம் செய்தல் முதலிய கர்மங்களைக் குறிக்கிறது. இவர்கள் நியாயமான இன்பங்களை மட்டுமே பின்தொடர்கிறார்கள். எனவே, தர்மத்திற்கு எதிரானதாக அல்லாத இச்செயல்கள்தர்மஎன்றே இங்கு அழைக்கப்படுகிறது. ‘அநுப்ரபந்நாஎன்றால் பின்பற்றுபவர்கள், ஸ்ருதியில் சொல்லப்பட்ட பல்வேறு கர்மங்களை எடுத்துக் கொண்டவர்கள்.

பொதுவாக வேதங்களில் இரண்டு விஷயங்கள் கையாளப்படுகின்றனகர்மம் மற்றும் ஞானம். உபாசனையும் கர்ம காண்டமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. பகவான் இங்கு, மூன்று வேதங்கள் விதித்துள்ள கர்மங்களைப் பின்பற்றுபவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார், ஞானத்தை தொடர்பவர்களைப் பற்றி அல்ல. ‘த்ரயீத4ர்மஎனும் இச்சொல் ஞானத்தையும் உள்ளடக்கியிருந்தாலும், இங்கு கர்மத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். இனி, இத்தகைய மக்களைப் பற்றி விளக்குகிறார்


=> விஷய இச்சை கொண்டவர்கள்:

காமகாமா: இவர்கள் விஷயத்தை விரும்புபவர்கள், போகப்பிரியர்களாக உள்ளனர். ‘காமஎனில் ஆசை, பொதுவாக அது ஒரு பொருளை ஆசைப்படுகின்ற அந்த குறிப்பிட்ட எண்ணஓட்டங்களைக் குறிக்கலாம் அல்லது அது ஒரு விரும்பத்தக்க பொருளைக் குறிக்கலாம். இங்கே அது விரும்பிய பொருளைக் குறிக்கிறது. எனவே இந்த முழு சொல்லின் அர்த்தம், ஆசைக்குரியப் பொருள்களை விரும்புபவர்கள்காமாந் காமயந்தி இதி காம-காமா:. வேதங்களில் பலவிதமான விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொருவரும் அவரவர்களின் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு செல்வம், பதவி, சந்ததி, மறுமை, சொர்க்கம், துறவு, மோக்ஷம் இவைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கின்றனர். அதனாலேயே சங்கரர், மூன்று வேதங்களும் சந்யாசம் மற்றும் மோக்ஷத்தைப் பற்றி பேசினாலும், இங்கு அதை தொடர்கிறவர்களைப் பற்றி பகவான் பேசவில்லை. அவர்காம-காமா:எனக் குறிப்பிட்டுள்ளதால் இவர்களுக்கு மோக்ஷத்தில் ஆர்வம் இல்லை எனப் புரிந்துகொள்கிறோம். இல்லையெனில்த்ரயீத4ர்மம் அநுப்ரபந்நா:என்பது முமுக்ஷுக்களையும் உள்ளடக்குகிறது

இங்கு கூறப்பட்டுள்ளவர்கள், பல்வேறு முடிவிற்குட்பட்ட பலனில் விருப்பமுடையவர்களாக, சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு கர்மங்களை சிரத்தையுடன் செய்கிறார்கள். இதன் பலனாக அவர்கள் அடைவது என்ன?


=> பிறப்பு இறப்புச் சுழற்சி:

3தாக3தம் லப4ந்தே இத்தகையவர்கள் போவதையும்(3) வருவதையும்(ஆக3) அடைகின்றனர். அதாவது சம்சாரத்தில் உழல்கின்றனர் என்பது பொருள். விஷய சுகத்தை விரும்பியவர்களாக இவர்கள் சம்சாரத்தையே அடைகின்றனர். எந்த விதமான சுதந்திரமும் இல்லாமல், கர்மத்தின் கைகளில் சிக்குண்டு, பாப-புண்ணியத்தை சேகரித்து, அதற்காக பல ஜென்மங்கள் எடுக்கின்றனர். ஜென்மத்தினால் கர்மம் செய்கின்றனர், கர்மத்தினால் ஜென்மத்தை அடைகின்றனர். பிறப்பு மற்றும் இறப்பு எனும் சுற்றுப்பாதையில் ஆதரவற்று சுழற்கின்றனர்.     

மாறாக, ஆசைகளிலிருந்து விடுபட்டு, ஆத்மாவைப் பற்றிய தெளிவான ஞானத்தை உடையவர்களைக் குறித்து பகவான் பேசப்போவதாக சங்கரர் அடுத்த சுலோகத்திற்கான அறிமுகத்தை பாஷ்யத்தில் கொடுக்கிறார். அவர்கள் தர்ம, அர்த்த மற்றும் காமத்தை பின்தொடர்வதை விட்டுவிட்டு, மோக்ஷ லக்ஷியத்தில் உறுதியாக இருக்கிறார்கள். மோக்ஷமும் ஒரு வகையான இச்சைதான் எனினும் அது விவேகம் மற்றும் வைராக்கியத்தின் விளைவாக தோன்றுவது ஆகும்

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.22|| ஆசையை வென்ற நிஷ்காம பக்தர்களுக்கு பகவானின் உறுதிமொழி:

अनन्याश्चिन्तयन्तो मां ये जना: पर्युपासते

तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ।। २२ ।।

அநந்யாச்1சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே

தேஷாம் நித்யாபி4யுக்தாநாம் யோக3க்ஷேமம் வஹாம்யஹம் ।। 22 ।।


 ये जना:  யே ஜநா:  எந்த ஜனங்கள்   अनन्या:  அநந்யா:  அன்னியரல்லாராய்   मां  மாம்  என்னை   

चिन्तयन्त:  சிந்தயந்த:    சிந்தித்துக் கொண்டு    पर्युपासते  பர்யுபாஸதே  உபாசிக்கிறார்களோ   

तेषां  தேஷாம்  அவர்களுடைய   नित्य अभियुक्तानां   நித்ய அபி4யுக்தாநாம்  நித்திய யோகிகளுடைய    

योग क्षेमं  யோக3 க்ஷேமம்  பெற வேண்டியதையும் பாதுகாப்பதையும்   अहम्  அஹம்  நான்    

वहामि  வஹாமி  வழங்குகிறேன்.


எனக்கு அன்னியரல்லாராய் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோகக்ஷேமத்தை நான் வழங்குகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.


விளக்கம்:

நிஷ்காம பக்தர்களுக்கு பகவான் அளிக்கும் ஒரு உறுதிமொழியாக இந்த சுலோகம் அமைவதால், இது மிகவும் புகழ்பெற்ற மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் சுலோகமாக உள்ளது.


=>‘அநந்யதத்துவம்:

அநந்யா:எனில் இறைவனாகிய என்னிடமிருந்து வேறுபடாதவர்கள், அதாவது பகவானுக்கு அன்னியமாக இல்லாதவர்கள், பிளவுபடாதவர்கள் என்பது பொருள். ‘அநந்ய:எனில் வேறில்லை அல்லதுபல அல்ல ஒன்றுஎனப் பொருள்

அநந்ய தத்துவத்தை இலக்காகக் கொண்ட, நிஷ்காம பக்தர்கள் கீழ்கண்ட மூன்று நிலைகளில் உள்ளனர்:

(1) இறைவனைத் தவிர வேறு இலக்கு(சாத்யம்) அற்றவர்கள். ஈஷ்வராத் அந்யம் ஸாத்4யம் வித்3யதே - ஈஷ்வரனுக்கு வேறான சாத்யம் அற்றவர்கள்; சாத்யம் ஏகம்.

(2) ஈஷ்வரனே சாதனம் மற்றும் ஈஷ்வரனே சாத்யம். சாதனம் என்பது இலக்கை அடைய உதவும் கருவி ஆகும். பூர்வ மீமாம்சகர்கள் மோக்ஷம் எனும் இலக்கை, வேள்வி எனும் சாதனையின் மூலமாக அடைய விரும்புகிறார்கள். இதனால் சாதனம் வேறு சாத்யம் வேறு என்றாகிறது. ஆனால் இங்கு சாதனமும் சாத்யமும் ஒன்றே, ஏகம்.

(3) சாதகன், சாதனம் மற்றும் சாத்யம் மூன்றும் ஒன்றே, ஏகம். இங்கு சாதகன் பகவானை தன்னிடமிருந்து வேறாக இல்லாதவனாக ஆக்குகிறான். எனவேஅத்வைத தர்ஷிந:என்கிறார் சங்கரர்.

இவ்விதமாக இவர்கள், பரமேஷ்வரனான என்னை தங்களிலிருந்து வேறாக பார்க்காதவர்களாக உள்ளனர். இவர்கள் எப்பொழுதும் என்னிடமிருந்து பிரிந்திருப்பது இல்லை.  

இது எப்படி சாத்தியம்? தனிமனிதர்களான இவர்கள், ஈஷ்வரனிடமிருந்து எப்படி பிரியாதவர்களாக ஆகிறார்கள்? இவர்களின் அனைவரின் ஆத்மாவாக ஈஷ்வரனே இருப்பதால் இது சாத்தியப்படுகிறது என்கிறார் சங்கரர். ஈஷ்வரனின் ஆத்மாவாக எது உள்ளதோ அதுவே ஜீவனின் ஆத்மாவாகவும் இருக்கிறது. அந்த சைத்தன்ய ஆத்மா, ஏகம், இரண்டற்றது; அதுவே ஸத்யம்-ஞானம்-அனந்தம்-ப்ரம்ம. இப்படிப்பட்ட விதத்தில் தன்னை அடையாளம் காண்பவன்அநந்யாஆகின்றான். மற்றவர்களும் ஈஷ்வரனிடமிருந்து பிரிக்கப்படாதவர்கள்தான் எனினும் அவர்கள் அதை உணர்வதில்லை. ஞானம் மற்றும் அறியாமை அல்லது அங்கீகாரம் மற்றும் அங்கீகாரமின்மை என்பதே இங்கு சொல்லப்படுபவர்களுக்கும் சென்ற சுலோகத்தில் சொல்லப்பட்ட கூட்டத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம் ஆகும். ஆனால் உண்மையில் இது மிகப் பெரிய வித்தியாசமாகவே உள்ளது.


=> யோக க்ஷேமம்:

மாம் சிந்தயந்த:, என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்கள் என்னை உபாசிக்கிறார்கள்(பர்யுபாஸதே). இந்த நித்திய யோகிகளுடைய(நித்ய அபி4யுக்தாநாம்) யோகக்ஷேமத்தை நான் கவனித்துக் கொள்கிறேன். இது கீதையின் மிகப் பிரபலமான வாக்கியங்களில் ஒன்றுயோக3 க்ஷேமம் வஹாமி அஹம்.

யோக3எனும் சொல்லுக்கு இணைதல், சேர்த்து வைத்தல், அத்தியாயத்தின் தலைப்பு போன்ற பல அர்த்தங்கள் உண்டு. இங்கு யோகமும் க்ஷேமமும் ஒரு கூட்டுச் சொல்லாக தோன்றி இருப்பதால், அதுஇல்லாததை அடைதல்என்பதைக் குறிக்கிறதுஅப்ராப்தஸ்ய ப்ராபணம். வாழ்க்கைக்கு தேவையான ஆனால் அவனிடம் இல்லாத பொருள்களை அடைதலைக் குறிக்கிறது. ‘ க்ஷேமம்என்பது அடைந்ததை பாதுகாத்தல் அல்லது தக்கவைத்தலைக் குறிக்கிறதுப்ராப்தஸ்ய ரக்ஷணம்

யாரொருவனின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டாலும், அவனுடைய கவலை முழுக்க இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றாகத் தான் இருக்கும். விரும்பிய ஒன்றை அடைவதைப் பற்றியது அல்லது எதையாவது இழந்து விடுவேனோ எனும் பயத்தைப் பற்றியது. பணம் இல்லை - அடைய வேண்டும், நிம்மதி இல்லை - அடைய வேண்டும், என்பது போன்ற யோகமும்; தலைமுடி தொடங்கி, உடல் ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏற்கனவே இருப்பதை தக்கவைத்துக் கொள்வது போன்ற க்ஷேமமும் என ஒருவனுடைய வாழ்க்கை யோக க்ஷேமத்தை சுற்றியே நகர்கிறது. இந்த யோக-க்ஷேமம் கவனித்துக் கொள்ளப்படும்போது அனைத்தும் கவனித்துக் கொள்ளப்பட்டதாக ஆகிறது

பரமேஷ்வரனாகிய என்னையே குறிக்கோளாகக் கொண்டு, இரண்டற்ற ஆத்மாவாக விளங்கும் என்னைப் புரிந்துகொள்ள, முழு நேரமும் மனதையும் புத்தியையும் பயன்படுத்தும் நிஷ்காம பக்தர்களாகிய ஜிக்ஞாசு, முமுக்ஷு, சந்யாசி மற்றும் ஞானிகளின் யோகக்ஷேமத்தை நான் பார்த்துக் கொள்கிறேன், அவர்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன் என்கிற உறுதிமொழியைத் தருகிறார் பகவான்

மற்ற பக்தர்களின் யோகக்ஷேமத்தையும் பகவான் தான் கவனித்துக் கொள்கிறார். எனினும் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. அவர்கள் பகவானை கர்மபலனைத் தருபவராகவும், சென்ற சுலோகத்தில் பார்த்ததைப் போல சொர்க்கம் முதலிய தனது விருப்பத்தை அடைவிக்க உதவும் ஒரு கருவியாகவும் மட்டுமே கொண்டு பிரார்த்தனை செய்கிறார்கள். இதனால் முடிவிற்குட்பட்ட பலனை விரும்பியவர்களாக தங்களின் யோகக்ஷேமத்தை குறித்த கவலையோடு பக்தி செலுத்துகிறார்கள். மாறாக இங்கு கூறப்படும் நித்திய யோகிகள், கர்மபலனை அளிப்பவராக ஈஷ்வரனே இருப்பதால், நியதிகளின் அடிப்படையில் அவரே யோகக்ஷேமத்தை கொடுக்கின்றார் என்பதை புரிந்துள்ளனர். எனவே அது குறித்த எந்த எதிர்பார்ப்பும் கவலையும் இவர்களுக்கில்லை. எது வரினும் அதை பகவானின் பிரசாதமாக ஏற்றுக் கொண்ட இவர்கள் பரமேஷ்வரனையே இலக்காகக் கொண்டு, சாஸ்திர பிரமாணத்தின் மூலம் எக்காலமும் அவரைப் பற்றியே விசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  

யோக3 க்ஷேமம்எனும் வார்த்தைகளை வேறொரு கோணத்திலும் விசாரிக்கலாம். ‘யோகஎனில் ஞானம் மற்றும்க்ஷேமம்எனில் ஞான நிஷ்டை. என்னை அடைய முயற்சிப்பவர்களுக்கு, மற்ற மூன்று இலக்குகளான தர்ம, அர்த்த மற்றும் காமத்தை விட்டுவிட்டு மோக்ஷத்தையே குறிக்கோளாகக் கொள்பவர்களுக்கு, அதற்கான பலனான ஞானத்தையும் ஞான நிஷ்டையையும் நான் தருகிறேன்

பர்யுபாஸதேஇவர்கள் அனுபவங்களின் ஒவ்வொரு நிலைகளிலும் என்னையே நாடுகிறார்கள், வழிபடுகிறார்கள். இங்குஉபாஸதேஎனும் சொல்லிற்கான முன்னொட்டாகவுள்ளபரிஎன்பது, எல்லா காலங்களிலும் மற்றும் எல்லா அனுபவநிலைகளிலும் என்பதைக் குறிக்கின்றது. சிந்தயந்த: அவர்களின் நேரம் முழுதும் பரமேஷ்வரனை புரிந்துகொள்ள பயன்படுத்துபவர்களாக உள்ளனர். யார் இவர்கள்? — நித்ய அபி4யுக்தாநாம். சிரவண மநந நிதித்யாசனத்தின் மூலம் ஈஷ்வரனைத் தீவிரமாக வழிபட்டு, அமானித்துவம் முதலிய நற்பண்புகளைக் கொண்டிருக்கும் எவருடைய மனமானது, எப்பொழுதும் என்னை நோக்கி விழித்திருக்கின்றதோ, மேலும் யார் தனது ஆத்மா ஈஷ்வரனிடமிருந்து வேறாக இல்லை என்ற அங்கீகாரத்தில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள் இந்த நித்திய யோகிகள் ஆவர். இவர்களுக்கும் இவர்களின் ஞானத்திற்கும் இடையில் மனம் வருவதில்லை. முழு வழிமுறைகளையும் கடந்துவந்த இவர்களின் தன்னறிவை தடுக்கும் காரணி என எதுவுமில்லை. இப்படிப்பட்டவர்களின் யோகக்ஷேமத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் பகவான்

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி வைத்தால் பகவான் பக்தனை நோக்கிப் பத்து அடி வருகிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------