வியாழன், 21 செப்டம்பர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.7 - 9.8

||9.7|| லய-காலத்தை பற்றி கூறுகிறார்:

सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम्

कल्पक्षये पुनस्तानि कल्पादौ वसृजाम्यहम् ।। ।।

ஸர்வபூ4தாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம்

கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ3 விஸ்ருஜாம்யஹம் ।। 7 ।।


कौन्तेय  கௌந்தேய  குந்தியின் புதல்வா   सर्वभूतानि  ஸர்வபூ4தாநி   எல்லா பூதங்களும்   

कल्पक्षये  கல்பக்ஷயே  கல்பத்தின் முடிவில்   मामिकाम्  மாமிகாம்  என்னுடைய   

प्रकृतिं यान्ति  ப்ரக்ருதிம் யாந்தி  பிரக்ருதியை அடைகின்றன   पुन:  புந: மறுபடியும்    

कल्पादौ கல்பாதௌ3  கல்பத்தின் துவக்கத்தில்    तानि  தாநி  அவைகளை   अहम्  அஹம்  நான்    

वसृजामि  விஸ்ருஜாமி  தோற்றுவிக்கிறேன்.    


குந்தியின் புதல்வா, எல்லா உயிர்களும் கல்பத்தின் முடிவில் என்னுடைய பிரக்ருதியை அடைகின்றன. மறுபடியும் கல்பத் துவக்கத்தில் அவைகளை நான் தோற்றுவிக்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குந்தி மகனே, கர்ப்ப நாசத்தால் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கர்ப்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன்.


விளக்கம்:

=> ஈஷ்வரனின் செயல்:

ஈஷ்வரனின் செயல் என்ன எனும் விளக்கத்தை பகவான் இந்த சுலோகத்தில் அளிக்கிறார். அனைத்து உயிரினங்களும் கல்பத்தின் முடிவில் என்னுடைய பிரக்ருதியை அடைகின்றன ஸர்வபூ4தாநி கல்பக்ஷயே மாமிகாம் ப்ரக்ருதிம் யாந்தி, என்கிறார். இங்கு பகவான் என்னுள் எனக் கூறாமல் எனது பிரக்ருதியை அடைவதாக கூறுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட உண்மையை வெளிப்படுத்துகிறார். ஒரு சுழற்சி முடிவுக்கு வரும்போது அதுகல்ப-க்ஷயஎனக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அனைத்து உயிர்களும் ஒடுக்கத்தை அடைகின்றன.  

மீண்டும் சுழற்சியின் தொடக்கத்தில், புந: கல்பாதௌ3, நான் அவைகளை வெளிப்படுத்துகிறேன், தாநி அஹம் விஸ்ருஜாமி, என்கிறார். இங்குவிஎனும் முன்னொட்டுஸ்ருஜ்எனும் வினையடியுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இது, ‘நான் முந்தைய சுழற்சியில் இருந்ததைப் போலவே ஒவ்வொன்றையும் உருவாக்குகிறேன்என்பதைக் குறிக்கிறது. எனவே மற்ற எல்லா சுழற்சியைப் போலவே இந்த படைப்பும் உள்ளது. ஜீவர்கள் தங்களது கர்மாக்களை நிறைவேற்றும் பொருட்டு மீண்டும் சுழற்சி துவங்குகிறது. பின்னர் அது ஒடுங்குகிறது, பின் அந்த ஒடுக்கத்திலிருந்து மீண்டும் படைப்பு வெளிப்படுகிறது

சிருஷ்டிக்கப்பட்ட உலகம் என்னில் உள்ளது என்றும் ஒடுக்கத்தில் அது எனது உபாதியான பிரக்ருதியை அடைகிறது எனவும் பகவான் கூறுகிறார். இந்த உபாதி என்பது என்ன? அவர் ஏன் என்னுள் ஒடுங்குகின்றன எனக் கூறவில்லை. உதாரணமாக, ஒரு பானை களிமண்ணிலிருந்து வெளிவந்து, அது அழியும்போது மீண்டும் களிமண்ணுக்குச் செல்கிறது. களிமண், ‘அது என் உபாதிக்குத் திரும்புகிறதுஎன்று சொல்லமுடியாது. படைக்கப்பட்ட ஒரு பொருளின் இருத்தலும் ஒடுக்கமும் அது எதிலிருந்து தோன்றியதோ அங்குதான் நடைபெறும். ஆனால் அதற்கு மாறாக பகவான் எனது பிரக்ருதியை அடைகிறது எனக் கூறக் காரணம் என்ன?


=> பிரக்ருதி:

உயிர்களனைத்தும் என்னிடத்துள்ளன என பகவான் கூறும்போது, மத்ஸ்தா2நி ஸர்வாணி பூ4தாநி, அவைகள் பரமாத்மாவின் குணங்களாக உள்ளனவா? கண்டிப்பாக இல்லை. பரமாத்மாவின் சொரூபம் நிர்குணம், குணங்களற்றது. அதனால்தான் மோக்ஷம் சாத்தியமாகிறது. ஆனால் உயிரினங்கள் குணங்களோடு கூடியனவைகளாக இருக்கின்றன.

பரமாத்மாவானது உலகத்தோடு சொரூபமாக சம்பந்தப்படாதபோது, பகவான் அவைகள் என்னிடத்துள்ளன எனக் கூறுவது வேறு சில காரணிகளின் மூலமாகவே சாத்தியப்படுகிறது. அந்தக் காரணியையே நாம்மாயைஎன்றழைக்கிறோம். இந்த மாயா-உபாதியே பரமாத்மாவை ஈஷ்வரனாக மாற்றுகிறது. முழுக்க முழுக்க இந்த உபாதியின் காரணமாகவே நிர்குண பரமாத்மா, அனைத்தையும் அறிந்தவராகவும், எல்லாம் வல்லவராகவும், அனைத்தையும் படைத்தவராகவும் ஆகிறார். இதுபோன்றதொரு உபாதியின் காரணமாகவே, ஸத்-சித்-ஆனந்த சொரூபமாகவுள்ள எல்லையற்ற ஆத்மா, ஒரு வரையறைக்குட்பட்ட அறிவாக, ஒரு ஜீவனாக காட்சியளிக்கிறது. உடல்-மனம்-உணர்வுறுப்பின் நிலைபாட்டிலிருந்து ஒருவன் ஆத்மாவை நோக்கும்போது, ‘நான் வரையறுக்கப்பட்டவன்_அல்பஜ்ஞ:என்கிறான். இந்த பார்வை உபாதியை அடிப்படையாகக் கொண்ட அவனது சொந்த நிலைபாடே தவிர, அதற்கும் ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த ஆத்மாவையே ஒரு ஜீவனானவன், சர்வ வல்லமை கொண்ட மற்றும் அனைத்திற்கும் காரணமான ஈஷ்வரனாகப் பார்க்கிறான். காரணமே காரியமாகத் தோற்றமளிப்பதால், எல்லா பெயர்களும் அவருடைய பெயர்கள், எல்லா வடிவங்களும் அவருடைய வடிவங்கள். ஆகவேதான் அந்த ஈஷ்வரனை வர்ணிக்க எண்ணற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் காரணியாக அமைவது இந்த மாயா-உபாதி அல்லது பிரக்ருதி-உபாதி ஆகும்

எனவே கிருஷ்ணர் ஈஷ்வரனாக, ‘அனைத்தும் என்னிடத்து இருக்கின்றன- மத்ஸ்தா2நி பூ4தாநி,’ எனக் கூறும்போது, அவர் அந்தஎன்னில்என்பதில் மாயா-உபாதியையும் சேர்த்துக் கொள்கிறார். இந்த பிரக்ருதியின் மூலம் மட்டுமே எல்லா உயிர்களும் பரமாத்மாவில் இருக்கின்றன. சொரூபமாக பரமாத்மா நிர்குணமானது; அஸங்கமானது. ஆகவே மாயையிலிருந்தே உயிர்கள் தோன்றி அதிலேயே ஒடுக்கத்தை அடைகின்றன.   

இனி, ப்ரம்மம் மற்றும் மாயை எனும் இருமை தென்படுகிறதே என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் மாயை என்பது மித்யா; ஏனெனில் அதற்கென சுதந்திரமான இருப்பு கிடையாது. அது தனது இருத்தலுக்கு ப்ரம்மத்தையே சார்ந்துள்ளது. அதனால்தான் சாஸ்திரம்யா மா ஸா மாயா’, ‘எது இல்லையோ அது மாயைஎன இந்த மாயையை வரையறுக்கிறது


=> இரு நிலைகள்:

மாயை மித்யா; மாயையிலிருந்து தோன்றிக் கொண்டிருக்கும் இந்த ஜகத் மித்யா. மித்யாவான இந்த ஜகத் இரண்டு அவஸ்தைகளைக் கொண்டது:

(1) வ்யக்த அவஸ்தை அல்லது காரிய நிலை - இது வெளித் தோற்றத்திற்கு வந்த நிலையைக் குறிக்கும்.

(2) அவ்யக்த அவஸ்தை அல்லது காரண நிலை - வெளித்தோற்றத்திற்கு வராத இந்த நிலை பிரக்ருதியைக் குறிக்கிறது. மரத்திற்கு விதை போன்ற நிலை.

காரண அவஸ்தை, பிரக்ருதி மற்றும் மாயை இவை மூன்றின் பொருளும் ஒன்றே. இது ஈஷ்வரனைச் சார்ந்து இருக்கின்றது. சார்ந்து இருப்பது மித்யா எனப் பார்த்தோம். ஜட சொரூபமான மற்றும் முக்குண வடிவமான மாயையிலிருந்து இந்த உலகம் தோன்றியுள்ளது. ‘நான் மாயையின் துணைக் கொண்டு இவ்வுலகை தோற்றுவித்து மீண்டும் அதிலேயே ஒடுக்கிக் கொண்டிருக்கிறேன்’, என்கிறார் பகவான்.  

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.8|| ஈஷ்வரனே நிமித்த காரணம் என்கிறார்:

प्रकृतिं स्वामवष्टभ्य वसृजामि पुन: पुन:

भूतग्रममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात् ।। ।।

ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்4 விஸ்ருஜாமி புந: புந:

பூ4தக்3ராமமிமம் க்ருத்ஸ்நமவச1ம் ப்ரக்ருதேர்வசா1த் ।। 8 ।।


स्वाम् प्रकृतिं  ஸ்வாம் ப்ரக்ருதிம்  என்னுடைய பிரக்ருதியை   अवष्टभ्य  அவஷ்டப்4  கட்டுக்குள் வைத்துக் கொண்டு   अवशं  அவச1ம்  தன்வசமில்லாது   प्रकृते:  ப்ரக்ருதே:  பிரக்ருதியினுடைய   वशात्  வசா1த்  வசத்திலிருக்கின்ற   इमं कृत्स्नम् भूतग्रमम्  இமம் க்ருத்ஸ்நம் பூ4தக்3ராமம்   இந்த முழு உயிரினக் கூட்டங்களையும்   पुन: पुन:  புந: புந:  மீண்டும் மீண்டும்   वसृजामि  விஸ்ருஜாமி  படைக்கிறேன்.


என் பிரக்ருதியை கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்வசமில்லாது அந்த பிரக்ருதியின் பிடியிலிருக்கின்ற இந்த உயிர் கூட்டங்கள் முழுமையையும் மீண்டும் மீண்டும் படைக்கிறேன்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

என் சக்தியில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் பூதத் தொகுதி முழுவதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான், மாயையானது ஈஷ்வரனின் வசத்தில் உள்ளது என்றும், ஜீவராசிகள் மாயையின் வசத்தில் உள்ளனர் என்றும் கூறுகிறார். பிரக்ருதி என்பது கர்மபலன்களின் சேமிப்பு கிடங்கு ஆகும். அது ஒவ்வொரு ஜீவராசியினுடைய பாப புண்ணியங்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது. அதிலிருந்தே அந்த குறிப்பிட்ட உயிர்க்கான உலகம் சூழ்நிலையின் பெயரால் படைக்கப்படுகின்றது. எந்த ஜீவராசியும் சுதந்திரமானதாக இல்லை; ஒவ்வொன்றிற்கும் அதற்கேயுரிய குணங்கள் இருக்கின்றன. அந்த குணங்களாலேயே அனைத்தும் பந்தப்பட்டு இருக்கின்றன. எனவே விதிவிலக்கில்லாமலும், தோன்றியவை அனைத்தும் வேறு வழியில்லாமலும், தன்வசமில்லாது மாயையின் முக்குணத்தின் பிடியில் உள்ளன. இந்த என்னுடைய மாயையை என் கட்டுக்குள் வைத்து இவ்வுயிர்திரள் யாவற்றையும் திரும்பத் திரும்ப நான் தோற்றுவிக்கிறேன் என்கிறார் பகவான்

இங்கு பகவான், மீண்டும் மீண்டும் படைக்கிறேன்விஸ்ருஜாமி புந: புந:, என்கிறார். ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் அடையும் ஒடுக்கத்திற்குப் பிறகு மீண்டும் அவைகளை நானே உருவாக்குகிறேன். எனது சொந்த பிரக்ருதியை, எனது மாயா-உபாதியை என் கைகளில் வைத்துக் கொண்டு நான் படைக்கிறேன், ஸ்வாம் ப்ரக்ருதிம் அவஷ்டப்4, என்கிறார். இதுவே ஒரு ஜீவனுக்கும் ஈஷ்வரனுக்கும் உள்ள வேறுபாடு ஆகும். ஈஷ்வரன் மாயையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், ஆனால் ஜீவன் அதிலிருந்து விடுபடும்வரை மாயை எனும் இந்த அவித்யாவின் கட்டுக்குள் இருக்கின்றான்.


=> மாயையின் இரு தன்மைகள்:

மாயையிடம் இரு தன்மைகள் உள்ளன. ஒன்று மறைக்கும் சக்தி(ஆவரணம்); இனியொன்று உருவாக்கும் சக்தி(விக்ஷேபம்). எவ்விதம் நித்ரா சக்தியானது நமது விழிப்பு நிலையை மறைத்து கனவை படைக்கிறதோ, அவ்விதம் நமது சுய சொரூபத்தை மறைத்து மாயையானது இவ்வுலகத்தை படைக்கின்றது. ஜீவர்கள் மாயையின் வசத்தில் கட்டுண்டு இருப்பதால் அவர்களின் நிர்குண சொரூபம் மறைக்கப்பட்டு, தன் வசமில்லாமல் மாயையின் சத்வ ரஜஸ் மற்றும் தமஸ் எனும் முக்குணத்தினால் பந்தப்படுகிறார்கள். ஆனால் மாயையினால் ஈஷ்வரனின் சொரூபத்தை மறைக்க முடியாது. ஈஷ்வரன் மாயையோடு இருந்தபோதிலும், ‘நான் வேறு; மாயை வேறு; நான் ப்ரம்மம்என்ற ஞானத்துடனே இருக்கிறார். இதனால் விக்ஷேப சக்தி, அதாவது உருவாக்குதல் மட்டுமே அவரிடம் நடைபெறுகிறது; ஆவரணம் கிடையாது. என் வசமுள்ளது என பகவான் கூறும் இந்த பிரக்ருதியே நம்மை பந்தப்படுத்துகிறது. திருடனை சுற்றியிருக்கும் காவல் அதிகாரிகளைப் போன்றது நமக்கும் மாயைக்குமான சம்பந்தம்; பாதுகாப்பு பணியில் மந்திரியை சுற்றி நிற்கும் காவலர்களைப் போன்றது ஈஷ்வரனுக்கும் மாயைக்குமான சம்பந்தம். முன்னது அலங்கோலம்; பின்னது அலங்காரம். எனவே பகவானுக்கு இருக்கும் ஞானம் நமக்கு வரும்போது இவ்வுலகம் நம்மை பந்தப்படுத்துவதில்லை; பிரபஞ்சம் ஒரு நந்தவனமாக ஆகிறது

என் மாயையை என் கட்டுக்குள் வைத்துக் கொண்டு உருவாக்குகிறேன் என்கிறார் பகவான். அவர் எதை உருவாக்குகிறார்? இந்த முழு உயிரினக் கூட்டங்களையும், இமம் க்ருத்ஸ்நம் பூ4தக்3ராமம். அதாவது ஒருவனால் பார்க்கப்படும் அனைத்தையும், இந்த முழு உலகத்தையும் நான் படைக்கிறேன், அஹம் விஸ்ருஜாமி, என்கிறார். எதற்காக அவர் அதைச் செய்கிறார்?


=> கடவுள் ஏன் உலகைப் படைத்தார்:

அவச1ம்எனில் அது நடைபெற வேண்டிய ஒன்று. அதாவதுஈஷ்வரனின் எந்த சொந்த விருப்பத்திற்கும் இடமில்லாமல் அது நடைபெறுகிறது. ‘கடவுள் எதற்காக உலகைப் படைத்தார்?’ எனும் இந்த கேள்வி பலராலும் அடிக்கடி கேட்கப்படுகிறது. இதற்கு அளிக்கப்படும் எந்த பதிலும் வெறும் கற்பனையே. அதிகமாக கூறப்படும் ஒரு பதில் - கடவுளின் லீலை; விளையாட்டு. விளையாட்டிற்காக உலகை படைக்குமளவு கடவுள் அமைதியற்றவரா, அல்லது சலிப்புடன் கூடியவரா, அல்லது தனிமையில் உள்ளாரா? எனில், அவர் எப்படி இறைவனாக முடியும்? அவரும் ஜீவனைப் போல ஒரு சம்சாரி ஆகிவிடுவாரே!

அடுத்த வரியில், அவர் எதையும் உருவாக்கவில்லை என்று பகவானே இந்த கேள்விக்கான பதிலைச் சொல்லப் போகிறார். அவர் படைத்திருந்தால்தானே இந்த கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும், உண்மையில் அவர் எதையும் உருவாக்கவில்லை. ஒரு படைப்பு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அது அவரிடமிருந்து உண்டான எந்தவொரு விருப்பமுமில்லாமல் வந்தது என்றுதான் சொல்ல முடியும். பிறகு எப்படி வந்தது?


=> மாயையின் வசத்தினால்:

ப்ரக்ருதே: வசா1த், பிரக்ருதியின் சக்தியினால் படைப்பு உண்டாகிறது. நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல, படைத்தல் உருவாக்குதல் பிரக்ருதியின் தன்மை. எனவே ஈஷ்வரன் மட்டுமல்ல, தனிப்பட்ட ஒருவனும் இதையே கூறலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய எண்ணம் ஏன் உண்டாகிறது? அதே பிரக்ருதியின் சக்தியினால் தான் - ப்ரக்ருதே: வசா1த். தானாகவே தோன்றிய இந்த எண்ணம் ஒருகால் அதர்மமான எண்ணமாக இருக்கும் பட்சத்தில், அதற்கான பழியையும் குற்ற உணர்ச்சியையும் தன் மேல் சுமத்திக் கொள்வதே பந்தத்தில் பிணைக்கிறது. இங்கு, அதைநான் நினைக்கிறேன்என கூறுவதுதான் பிரச்சினை. ‘பிரக்ருதி நினைக்கிறதுஎனக் கூறும்போது அங்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. இந்த அறிவின் காரணமாகவே ஒரு ஞானி அனைத்தையும் பிரக்ருதியின் ஒரு பகுதியாகப் பார்க்கிறான். சிந்திப்பது மட்டுமல்ல, ‘பார்ப்பது, கேட்பது, தொடுவது, நுகர்வது, சாப்பிடுவது, நடப்பது போன்ற எதுவும் நான் செய்யும் செயல் அல்ல, பச்1யந் ச்1ருண்வந் ஸ்ப்ருச1ந் ஜிக்4ரந் அச்1நந் 3ச்ச2ந் கிஞ்சித் ஏவ கரோமி, என ஞானி நினைப்பதாக சுலோகம் 5.8 மற்றும் 5.9-ல் பகவான் கூறினார்

சில சமயங்களில் நாமாக முன்வந்து வேண்டுமென்றே சிந்திக்கும் எண்ணங்களும் உள்ளன. அதுவாகவே எழும் எண்ணத்தைப் போலவே ஒரு அக்ஞானியானவன் இவ்வித எண்ணங்களையும், ‘நான் நினைக்கின்றேன்என்றே எண்ணுகிறான். எவ்வாறாயினும், ஒரு ஞானி, ஆத்மா அகர்த்தா என்ற அறிவின் மூலம், ‘நான் நினைப்பவன்; நான் செய்பவன்போன்ற எண்ணங்களை அறவே அகற்றியவனாக இருக்கின்றான். ஆத்மா அகர்த்தா எனில், பிரக்ருதியின் சக்தியால் மட்டுமே எண்ணங்கள் நிகழ்கின்றன, ப்ரக்ருதே: வசா1த். ஆசையோ அல்லது விருப்பமோ அல்லது எந்த விதமான செயலும் அங்கு இல்லை. நடைபெறுகிற அனைத்தும், ‘நான் எதையாவது செய்கிறேன்என்பது போலவும், அதே சமயம்நான் எதுவும் செய்யவில்லைஎன்பது போலவும் இருக்கிறது. காரியங்கள் அனைத்தும் அதனது விருப்பப்படி நடப்பது போல் உள்ளது, ப்ரக்ருதே: வசா1த்.

ஆகவே நடப்பவை அனைத்தும் பிரக்ருதியால் நடைபெறுகின்றன. உண்மையில் பகவான் எதிலும் பங்கேற்பதில்லை. ‘எதையும் நான் உருவாக்கவே இல்லைஎன அவர் கூறும்போது, ‘நான்எனும் சொல் ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவைக் குறிக்கிறது; ஜீவனுக்கும் ஈஷ்வரனுக்கும் பொதுவானதாகவுள்ள அந்த ஒரேயொரு ஆத்மாவைக் குறிக்கிறது. இந்த ஆத்மாவின் முன்னிலையில் பிரக்ருதி எல்லாவற்றையும் நடத்துகிறது.

இங்கு இனியொரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். பிரக்ருதியினால் மட்டும் உருவாக்க முடியாது, ஆத்மாவினாலும் தானாக உருவாக்க முடியாது; ஏதேனும் விதத்தில் இரண்டும் சேர்ந்து இந்த படைப்பு உருவாகிறது. ஆனால் இவைகள் ஒரே அளவிலான மெய்ம்மையை அனுபவிக்கும் இரு வஸ்துக்கள் அல்ல. இதில் ஒன்று ஸத்யம், மற்றொன்று மித்யா. எனவே ஒன்றுதான் உண்மையில் எப்பொழுதும் தொடர்ந்து இருக்கின்றது. மற்றொன்று இதைச் சார்ந்தும், இருப்பதைப் போல தோன்றிக் கொண்டும் உள்ளது. இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் இருமை(த்வைதம்) உண்டாகிறது. அதனால்தான் பகவான் கிருஷ்ணர், ‘எல்லாவற்றையும் நான் படைத்தேன்; நான் எதையும் உருவாக்கவில்லை’, என்கிறார். மேற்சொன்னது புரிந்து கொள்ளப்படாதபோது இந்த வாக்கியம் முரண்பாடாகத் தெரிகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------