திங்கள், 4 செப்டம்பர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.3 - 9.4

||9.3|| சிரத்தையின் அவசியம்:

अश्रद्दधाना: पुरुषा धर्मस्यास्य परन्तप

अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ।। ।।

அச்1ரத்33தா4நா: புருஷா 4ர்மஸ்யாஸ்ய பரந்தப

அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி ।। 3 ।।


परन्तप  பரந்தப  எதிரிகளை வாட்டுபவனே   अस्य धर्मस्य  அஸ்ய 4ர்மஸ்ய  இந்த தர்மத்தில்    

अश्रद्दधाना: पुरुषा:  அச்1ரத்33தா4நா: புருஷா: சிரத்தையில்லாத மனிதர்கள்   

मां अप्राप्य  மாம் அப்ராப்ய  என்னை அடையாது    

मृत्यु संसार वर्त्मनि  ம்ருத்யு ஸம்ஸார வர்த்மநி  மரண சம்சார மார்க்கத்தில்   

निवर्तन्ते  நிவர்தந்தே  இருக்கின்றனர்/ திரும்பி வருகின்றனர்.


எதிரிகளை எரிப்பவனே, இந்த தர்மத்தில் சிரத்தை இல்லாதவர்கள் என்னை அடையாது மரண சம்சார மார்க்கத்தில் உழல்கின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பகையைச் சுடுவோய், இல்லறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் சிரத்தையின் அவசியமும் சம்சாரத்தின் சொரூபமும் விளக்கப்படுகிறது.

=> சிரத்தையில்லாத மனிதர்கள் [அச்1ரத்33தா4நா: புருஷா:] 

சிரத்தை உடையவன்ச்1ரத்33தா4எனப்படுகிறான்; எனவே சிரத்தை இல்லாதவன்அச்1ரத்33தா4ஆகின்றான். இங்கு முதலில் சிரத்தை என்றால் என்ன என புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. பொதுவாக சிரத்தை என்பதுநம்பிக்கைஎன மேலோட்டமாக மொழிபெயர்க்கப்படும். ஆனால் உண்மையில் அது அறிவிற்கு முந்தைய நிலை ஆகும். ஒருவனின் சிரத்தையே அறிவாக மாறுகிறது. ‘இந்த ஆத்ம-ஞானம், நான் இந்த படைப்பிற்கு காரணமான ப்ரம்மத்திடமிருந்து வேறானவன் அல்ல எனக் கூறுகிறது. இதை இப்பொழுது நான் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், சாஸ்திரம் கூறுவது முற்றிலும் உண்மை என நம்புகிறேன். எனக்கு புரியவில்லை என்பது என்னிடம் உள்ள தகுதிக் குறைப்பாட்டினால் மட்டுமே; மற்றபடி சாஸ்திரம் மற்றும் குரு வாக்கியத்தில் எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. அதை புரிந்து கொள்ளும் வரை தேவையான முயற்சிகளை சரியாகச் செய்வேன்என்பதே சிரத்தை ஆகும். கீழ்கண்ட மூன்றிலும்

ஒரு சாதகனுக்கு சிரத்தை அவசியமாகிறது:

   (1) ஞான சொரூபம் - அத்வைத ஞானம் 

   (2) ஞானம் சாதனம் - சாஸ்திரம், குரு 

   (3) ஞான பலன் - மனநிறைவு, மோக்ஷம் 


=> இந்த தர்மத்தில் [அஸ்ய 4ர்மஸ்ய]

தர்மம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டுஅறிவு, கடமை, ஈஷ்வர நியதி, மதம் மற்றும் ஒரு பொருளின் குணம். எனவே பயன்படுத்தப்பட்டுள்ள சூழலைப் பொருத்தே இதன் அர்த்தம் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு தர்மம் என்பது ஆத்ம-ஞானத்தைக் குறிக்கிறது. ஏனெனில், முந்தைய சுலோகத்தில்4ர்ம்யம்என்ற வார்த்தை இந்த ஞானத்தை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. இந்த ஞானத்தை உடையவன் தர்மத்திற்கு எதிராக தன்னை வெளிப்படுத்த மாட்டான் எனவும் சாஸ்திரத்துடன் இணைப்பட்டுள்ள இந்த அறிவு தர்மத்தோடு கூடியது எனவும் அங்கு பார்த்தோம். எனவே இங்கு, ஞானம்தர்மஎன்றழைக்கப்படுகிறது.

இந்த சுலோகத்தில் பகவான், இந்த ஞானத்தின் மீதோ, ஞான சாதனமான சாஸ்திரத்தின் மீதோ அல்லது அதன் பலனின் மீதோ சிரத்தையில்லாதவர்களைப் பற்றியும் அவர்களின் நிலை குறித்தும் பேசுகிறார். சாஸ்திரத்தின் மீது நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களுக்கு, புண்ணியம் பாபம் மீதும் நம்பிக்கை இல்லை. சிரத்தை இல்லாவிடினும், நெறிமுறைகளோடு வாழ்பவர்களும் இருக்கலாம். ஆனாலும் பெரும்பாலும் சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், எளிதில் பாப-கர்மங்களை நோக்கிச் செல்லும் போக்கை கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களின் முழு முயற்சியும் தங்களது சொந்த வசதியை நோக்கியும் எப்படியேனும் புலன்களை திருப்திபடுத்துவதிலும் இருக்கின்றன. பாப-புண்ணியம் மற்றும் தர்ம-அதர்மத்தில் நம்பிக்கை இல்லாத இவர்கள், பரமேஷ்வரனுடனான ஐக்கியத்தை உணர்தல் எப்படிச் சாத்தியம்? இப்படிப்பட்டவர்களின் நிலை என்ன


=> சம்சார மார்க்கம்:

அவர்கள் என்னை அடையாமல், மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சிக்குள் வருகிறார்கள்மாம் அப்ராப்ய ம்ருத்யு ஸம்ஸார வர்த்மநி நிவர்தந்தே, என்கிறார் பகவான். ‘நிவர்தந்தேஎன்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன: ‘அவர்கள் திரும்பி வருகிறார்கள்அல்லதுஅவர்கள் இருக்கிறார்கள்’. ‘ம்ருத்யு ஸம்ஸாரஎன்பது உண்மையில்ம்ருத்யு-யுக்த-ஸம்ஸாரஆகும். இந்த கூட்டுச் சொல்லின் நடுவார்த்தை இங்கு கைவிடப்பட்டுள்ளது. மரணத்துடன் கூடிய சம்சாரம் என்பது இதன் பொருள். ‘வர்த்மந்எனில் சாலை, பாதை, மார்க்கம். இதிலிருந்து, ‘துன்பத்தை அடையும் பாதையில் இருக்கிறார்கள்அல்லதுமரண சம்சார மார்க்கத்திற்குள் திரும்பி வருகிறார்கள்எனலாம்.

இந்த சுலோகம் சிரத்தை உண்டாக்கும் நோக்கில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. முதலிரண்டு சுலோகங்களில் ஆத்ம-ஞானம் புகழப்பட்டு நேர்மறையாக சிரத்தை உருவாக்கப்பட்டது. இங்கு, இந்த ஞானம் ஒருவனிடம் இல்லையெனில் அவன் எவ்வளவு இழக்கிறான் எனக் கூறுவதன் மூலம் சிரத்தை உண்டாக்கப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.4|| ஈஷ்வர சொரூபம் விளக்கப்படுகிறது:

मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना

मत्स्थानि सर्वभूतानि चाहं तेष्ववस्थित: ।। ।।

மயா ததமித3ம் ஸர்வம் ஜக33வ்யக்தமூர்திநா

மத்ஸ்தா2நி ஸர்வபூ4தாநி சாஹம் தேஷ்வவஸ்தி2: ।। 4 ।।


अव्यक्त मूर्तिना  அவ்யக்த மூர்திநா  இந்திரியங்களுக்குப் புலப்படாத வடிவினனாகிய   मया  மயா  என்னால்   

इदं सर्वं जगत्  இத3ம் ஸர்வம் ஜக3த்  இவ்வுலகம் யாவும்    ततम्  ததம்  வியாபிக்கப்பட்டிருக்கிறது    

सर्व भूतानि  ஸர்வ பூ4தாநி  உயிரனைத்தும்   मत्स्थानि  மத்ஸ்தா2நி   என்னிடத்திருக்கின்றன   

अहं   அஹம்   நானோ    तेषु  தேஷு  அவைகளிடத்து    अवस्थित:  அவஸ்தி2:  இருக்கிறதில்லை.


வெளித்தோற்றத்திற்கு வராத என்னால் இவ்வுலகம் யாவும் வியாபிக்கப்பட்டிருக்கிறது. உயிர்களனைத்தும் என்னிடத்து இருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில் இல்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என்நிலை.


விளக்கம்:

சுலோகம் நான்கு முதல் பத்து வரை ஈஷ்வர சொரூபம் விளக்கப்படுகின்றது. ஈஷ்வர தத்துவம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. (1) மாயையுடன் கூடிய ஈஷ்வரன், சகுண ப்ரம்மம்; (2) மாயையற்ற ஈஷ்வரன், நிர்குண ப்ரம்மம். சுலோகம் நான்கு மற்றும் ஐந்தில் நிர்குண ப்ரம்ம தத்துவம் விளக்கப்படுகிறது


=> வியாபித்தல்:

இவ்வுலகம் யாவும் என்னால் வியாபிக்கப்பட்டிருக்கிறதுஎன்று பகவான் கூறுகிறார். எப்படிப்பட்ட என்னால்? — ‘அவ்யக்த மூர்திநா’, வெளித்தோற்றத்திற்கு வராத என்னால்; இந்தியங்களினால் கிரஹிக்க முடியாத என்னால், என்கிறார். அதாவது வெளித்தோற்றத்திற்கு வராத என்னால், வெளித்தோற்றத்திற்கு வந்த இவைகளனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளது. ‘என்னால்என பகவான் கூறும்போது அது கிருஷ்ணரின் உடலைக் குறிக்கவில்லை, அது அவருடைய மேலான சொரூபமான ஸத்-சித்-ஆனந்தத்தை குறிக்கிறது. ஸத்-சித்-ஆனந்த ரூபமான, ப்ரம்மமான, இருத்தலாகவுள்ள, உணர்வு சொரூபமான, கால-தேச-வஸ்து வரையறைக்கு அப்பாற்பட்ட என்னாலேயே இந்த முழு உலகமும் வியாபிக்கப்பட்டுள்ளதுமயா ததம் இத3ம் ஸர்வம் ஜக3த்.  

=> சம்பந்தம்:

இந்த சுலோகத்தின் இரண்டாவது வரி, வெளித்தோற்றத்திற்கு வராத ஈஷ்வரனுக்கும் வெளித்தோற்றத்திற்கு வந்த ஜகத்திற்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது.

பிறப்பிற்குட்பட்டவை அனைத்தும்பூதஸ்_பூ4எனப்படும். தோன்றிய அனைத்தும் மாற்றத்திற்குட்பட்டது. ஆகாசம், வாயு, அக்னி, ஆப:, ப்ருத்வீ அனைத்தும் பூதங்கள், பஞ்ச பூதங்கள். பின்னர் இந்த பூதங்களிலிருந்து பல அமைப்புகளும் லோகங்களும் பிறந்தன. இந்த லோகங்களில் பல உடல் வடிவங்கள் தோன்றின. சூக்ஷம உடலுடன் கூடிய இந்த ஒவ்வொரு உடலும் பஞ்ச பூதங்களின் வெளிப்பாடாகவே உள்ளது. இவ்விதமாக, சூக்ஷம மற்றும் ஸ்தூலமான இந்த ஐந்து பூதங்களிலிருந்தே அனைத்து லோகங்களும், அவற்றுள் இருக்கின்ற அனைத்து உயிரினங்களும் வருகின்றன. ‘தானெனல்எனும் அஹங்காரம் உட்பட, ஒட்டு மொத்தமாக இவைகளனைத்தும்ஸர்வ பூ4தாநிஎன்றழைக்கப்படும். ஸர்வ பூ4தாநி மத்ஸ்தா2நி இவைகளனைத்தும் என்னிடத்தில் இருக்கின்றன, என்கிறார் கிருஷ்ணர். ஈஷ்வரனுக்கும் ஜகத்திற்கும் உள்ள இந்த சம்பந்த விளக்கத்தை பார்க்கும் முன், முதலில் பிரபலமாகவுள்ள தவறான கருத்துக்களைப் பற்றி சிறிது ஆராயலாம்.


=> தவறான கருத்துக்கள்:

ஈஷ்வர-ஜகத் தத்துவத்தை விதவிதமாக விளக்கும் பல்வேறு தத்துவங்கள் உள்ளன. இவைகளில் சில கருத்துக்களை ஆரம்ப நிலைகளாக நாமும் ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும், அதிலிருந்து முதிர்ச்சியடைந்து அடுத்த நிலைக்குச் செல்லும் படிகளாகவே இவைகள் நம்மால் பார்க்கப்படுகின்றது. எனவே அதையே இறுதி நிலையெனக் கொள்வதில் இருக்கின்ற தவறுகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

(1) த்வைதிகள்: படைக்கும் ஈஷ்வரன் வேறு, படைக்கப்பட்ட இந்த உலகம் வேறு. பானைக்கு எப்படி குயவனோ, அவ்விதம் இவ்வுலகிற்கு நிமித்தமாக மட்டும் இறைவன் இருக்கிறார் என்பது த்வைதிகளின் கருத்து ஆகும். அவர்கள் இதையே இறுதி படிநிலையாக எடுத்துக் கொள்கின்றனர். இது ஏன் தவறு? பகவான் நிமித்த காரணமாக, அதாவது உருவாக்குபவராக மட்டும் இருக்கிறாரெனில், இந்த உலகிற்கான பொருள்-காரணம் ஈஷ்வரனுக்கு அந்நியமானதாக ஆகிறது. இறைவனுக்கு அந்நியமான ஒன்று இருக்கிறது எனில் அவர் எப்படி பூர்ணமானவராக இருக்க முடியும்? ஆகவே ஈஷ்வரனற்ற ஜகத் எவ்விதம் சாத்தியம்?

(2) விசிஷ்டாத்வைதம்: இந்த உலகம் பகவானின் உடல் அல்லது அங்கம் என்பது இவர்களின் தத்துவமாகும். விசிஷ்ட அத்வைதம் - வேறுபாட்டை உடைய அத்வைதம். மரம் என்பது அத்வைதம் எனில் கிளை, பழம், வேர், இலைகள் விசிஷ்டாத்வைதம் ஆகிறது. இது ஏன் தவறு? அங்கத்தில் குறைவு வந்தால் அது அங்கியை, அதாவது அங்கத்தை உடையவனை பாதிக்கும் என்பது பொது நியதி. எனில் உலகிலுள்ள அனைத்து சம்சாரமும் விகாரமும் ஈஷ்வரனையும் பாதிப்பதாகிறது. மேலும் விசிஷ்ட அத்வைதம் என்ற சொல்லே வ்யாகாத(व्याघात) தோஷத்தை, சுய-முரண்பாட்டை உடையது. உதாரணமாக, நான் ஊமை என ஒருவன் கூறுவதைப் போல.

(3) ஸ்வபா4-வாதம்: உலகம் மட்டும் தான் ஈஷ்வரன்ஜகமேவ ஈஷ்வர:. உலகிற்கு அப்பாற்பட்டு ஈஷ்வரன் என்ற எதுவும் கிடையாது. இயற்கையே கடவுள் எனக் கூறும் இவர்கள், இந்த உலகம் ஸத்யம் மற்றும் அனைத்தும் தானாகவே சுபாவமாக தோன்றியது என்கிறார்கள். இது ஏன் தவறு? அநித்ய ரூபமான இவ்வுலகம் ஈஷ்வரன் அல்ல.

(4) சித்தாந்தம்: இனி நமது கருத்தை பார்க்கலாம். அத்வைதிகளான நாம், ஈஷ்வரனுக்கும் இவ்வுலகிற்கும் உள்ள சம்பந்தம் ஸத்ய-மித்யா சம்பந்தம் எனக் கூறுகிறோம். உதாரணமாக, மாலைநேர மங்கிய வெளிச்சத்தின் காரணமாக நம்மால் தவறாக ஏற்றி வைக்கப்பட்ட பாம்பிற்கும் அதன் அதஷ்டானமாகவுள்ள கயிற்றிற்கும் உள்ள சம்பந்தத்தை போன்றது அது. இந்த சம்பந்தத்தை பகவான் மூன்று படிகளாக இந்த சுலோகங்களில் விளக்குகிறார். அதை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் இங்கு காணலாம்


=> ஸத்ய-மித்யா சம்பந்த விசாரம்:

ஸத்ய-மித்யா சம்பந்தத்தை விளக்க, களிமண்-பானை உதாரணத்தை எடுத்துக் கொள்கிறோம்.

களிமண் + நாமரூபம் = பானை[காரணம் + நாமரூபம் = காரியம்]

களிமண் எனும் காரணத்துடன் ஒரு குறிப்பிட்ட பெயரும் உருவமும் சேரும்போது அது பானை எனும் காரியமாக(விளைவு) தோன்றுகிறது. எனவே இங்கு தோன்றியது என்பது என்னவெனில், ஏற்கனவே உள்ள களிமண்ணுடன் ஒரு பெயரும் ஒரு உருவமும் தானே தவிர அங்கு உண்மையில் இருப்பது களிமண்ணே ஆகும். பானை என்ற ஒரு பொருள் கிடையாது, பானை என்ற பெயர் கொண்டு ஒரு குறிப்பிட்ட உருவத்துடன் அங்கு தோன்றிக்கொண்டிருப்பது களிமண்தான் என்பதால், அங்கு உண்மையில் களிமண்தான் இருக்கின்றது. எனவே களிமண்தான் ஸத்யம்; பானை மித்யா. காரணம் ஸத்யம்; காரியம் மித்யா. இனி, களிமண் நமக்கு மூன்று படிகளாக ஞானத்தை உபதேசிப்பதாக வைத்துக் கொள்வோம்

   (1) எல்லா பானைகளும் என்னிடத்தில் இருக்கின்றன.

அனைத்து பானைகளின் காரணமாக நானே இருப்பதால், காரியம் என்பது காரணத்திலிருந்து வேறில்லை என்பதால், எல்லா பானைகளும் என்னிடத்தில் இருக்கின்றன.

   (2) நான் பானைகளிடத்தில் இல்லை.

அதாவது களிமண்ணாகிய நான், களிமண்ணாக இருக்க பானையைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பானை பானையாக இருக்க, அது களிமண்ணாகிய என்னை சார்ந்திருக்க வேண்டும். பானையாக இருக்கும்போதும், பானை உடைக்கப்பட்ட பின்னரும் அது களிமண்தான். இதில் பானை என்பது சார்ந்திருக்கும் தத்துவம்; ஆனால் களிமண் சுதந்திரமானது, அதன் இருப்புக்கு அது எதையும் சார்ந்தில்லை. எந்தவொன்று சார்ந்துள்ளதோ அது உண்மையில் கிடையாது; அது வெறும் தோற்றமே. ‘பரதந்த்ரம் மித்யா; ஸ்வதந்த்ரம் ஸத்யம்’.

   (3) பானை என்னைச் சார்ந்தும் இல்லை.

பானை களிமண்ணாகிய என்னிடத்திலும் இல்லை, ஏனெனில் உண்மையில் பானை என்ற ஒரு பொருளே இல்லை. அது வெறும் ஒரு சொல் மற்றும் உருவமே தவிர அது ஒரு வஸ்து அல்ல. களிமண்ணே உண்மையான வஸ்து, ஸத்யம். தோற்றமாக, வெறும் நாமரூபமாக மட்டுமே இருப்பதால் பானை மித்யா. மித்யா எனில் அஸத்(இல்லாதது) அல்ல என்பது தெளிவாக உணர வேண்டும்.

(i) ஸத் - எப்போதும் இருப்பது.

(ii) அஸத்இல்லாதது. அனுபவத்திற்கு இல்லை .கா., முயற்கொம்பு.

(iii) மித்யா - இதுவும் அஸத் தான். உண்மையாக இல்லை தான். ஆனால் அனுபவத்திற்கு இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்துக் கொண்டுள்ளது.

எப்பொழுதும் காரியம் தோற்றம்; காரணம் மட்டுமே ஸத்யம். இந்த உதாரணத்தில் முதலில் பானையை இருப்பதாக அறிமுகப்படுத்தி, பின் அது களிமண்ணை சார்ந்துள்ளதாக கூறி, அதன்பின் சார்ந்திருப்பதால் பானை என்ற ஒன்று உண்மையில் இல்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல இந்த சுலோகத்தில் பகவான், முதலில் எல்லா உயிரினங்களும் இருப்பதாக அறிமுகப்படுத்தி, பின் அது காரணமான என்னிடத்தில் இருப்பதாகவும் நிர்குண ப்ரம்மனான நான் அவைகளிடத்தில் இல்லை எனவும் பகவான் கூறுகிறார். மத்ஸ்தா2நி ஸர்வ பூ4தாநி அஹம் தேஷு அவஸ்தி2: — உயிர்களனைத்தும் என்னிடத்து இருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில் இல்லை.

 அதாவது, நான் சுதந்திரமானவன், அவைகளைச் சார்ந்து நான் இல்லை. ஆனால் அவைகள் என்னைச் சார்ந்து இருக்கின்றன என்பது இதன் பொருள். ஆகவே சுதந்திர சொரூபமாகவுள்ள ஈஷ்வரனான நான் ஸத்யம்; என்னைச் சார்ந்திருப்பதால் இவைகளனைத்தும் மித்யா.

இனி அடுத்த சுலோகத்தில் உலகம் என்ற ஒரு வஸ்து இல்லை எனும் விதமாக, எந்த உயிரினங்களும் என்னிடத்தில் இல்லை எனக் கூறி, ஸத்ய-மித்யா சம்பந்தத்தை மேலும் அடுத்த நிலைக்கு பகவான் எடுத்துச் செல்ல இருக்கிறார்

---------------------------------------------------------------------------------------------------------------------