திங்கள், 11 செப்டம்பர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.5 - 9.6

||9.5|| ஈஷ்வர - ஜகத் சம்பந்தத்தின் தொடர்ச்சி:

मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम्

भूतभृन्न भूतस्थो ममात्मा भूतभावन: ।। ।।

மத்ஸ்தா2நி பூ4தாநி பச்1 மே யோக3மைச்1வரம்

பூ4தப்4ருந்ந பூ4தஸ்தோ2 மமாத்மா பூ4தபா4வந: ।। 5 ।।


भूतानि  பூ4தாநி  பூதங்கள்   मत्स्थानि  மத்ஸ்தா2நி  என்னிடத்தில் நிற்பவைகளல்ல   

मे  மே  என்னுடைய   ऎश्वरम् योगम्  ஐச்1வரம் யோக3ம்  ஈஷ்வர யோகத்தின் சிறப்பை   

पश्य  பச்1  பார்    मम त्मा  மம ஆத்மா  நானே தான்   

भूतभावन:  பூ4தபா4வந:  அனைத்து உயிர்களுக்கும் இருப்பை கொடுப்பவன்/ சிருஷ்டி காரணம்   

भूतभृत्  பூ4தப்4ருத்  அனைத்தையும் தாங்குபவன்/ஸ்திதி காரணம்   

भूतस्थ:  பூ4தஸ்த2:  ஆனால் பூதங்களிடத்து இல்லை.


பூதங்கள்(உண்மையில்) என்னிடத்து நிற்பவைகளல்ல. என்னுடைய ஈஷ்வர யோக மஹிமையைப் பார்! பூதகணங்களை ஆக்கவும் காக்கவும் செய்கிற என் சொரூபம் அவைகளிடத்து இல்லை


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

(மற்றொரு வகையால் நோக்குமிடத்தே) பூதங்கள் என்றும் நிற்பனவுமல்ல, என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்குப் பார், பூதங்களைத் தரிக்கிறேன். அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது.


விளக்கம்:

=> ஸத்ய - மித்யா சம்பந்த தொடர்ச்சி:

ஈஷ்வர - ஜகத் சம்பந்தத்தை பற்றிய விசாரத்தை இங்கும் தொடர்கிறார். சென்ற சுலோகத்தின் இரண்டாவது வரியில் பகவான், எல்லா உயிர்களும் என்னிடத்து உள்ளனமத்ஸ்தா2நி ஸர்வ பூ4தாநி, என்றார். இங்கு, உயிர்கள் என்னிடத்தில் இல்லை மத்ஸ்தா2நி பூ4தாநி, என்கிறார். இவைகள் முரண்படுகின்ற வாக்கியமாகத் தோன்றலாம்; இல்லாத பாம்பை இருக்கின்ற கயிற்றில் ஏற்றிவைத்தல் என்ற தவறு செய்யப்பட்டிருப்பதால் உபதேசத்தில் இந்த முரண்பாடு தவிர்க்க இயலாதது. ஆதார-ஆதேய(आधार-आधेय), ஆதாரமாக இருப்பது மற்றும் ஆதாரத்தைச் சார்ந்து தோன்றிக் கொண்டிருக்கும் ஆதேய தத்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளும்போது இந்த முரண் நீங்குகிறது.

முதலில், எல்லா பானைகளும் என்னுள் இருக்கின்றது என களிமண் கூறியது. பின்னர், பானை என்னைச் சார்ந்தில்லை; ஏனெனில் பானை என்ற ஒன்றே கிடையாது, உண்மையில் இருப்பது களிமண்தான் என்கிறது. இதில் களிமண் ஸத்யம், அதைச் சார்ந்திருக்கும் எதுவும் வெறும் நாம-ரூபம் மட்டுமே, மித்யா

அதுபோல, இங்கு உயிரினங்கள் என்னிடத்தில் இல்லை என்று பகவான் கூறுவதன் நோக்கம், ஜகத் என்ற ஒரு வஸ்து உண்மையில் இல்லை; அப்படியொன்று இருந்தால்தானே அது என்னிடத்தில் இருப்பதற்கு! என்கிறார். இதன்மூலம் த்வைதத்தை நீக்கி அத்வைத தத்துவத்தை மிகத் தெளிவாக நிலைநாட்டுகிறார். அடித்தளமில்லாமல் அங்கு பொய் என்ற ஒன்று தோன்றமுடியாது - நிரதி4ஷ்டான ப்4ரம: ஸம்ப4வதி. அதாவது உண்மை என்ற ஒன்று கண்டிப்பாக உள்ளது; அதை மறைத்துத் தான் பொய் தோன்றிக் கொண்டிருக்க முடியும். கயிறு என்ற உண்மை இல்லையெனில் அங்கு பாம்பு என்ற பொய் தோன்றியிருக்காது. கயிற்றை மறைத்து பாம்பு தெரிந்து கொண்டிருக்கிறது அவ்வளவே. கயிற்றிக்கும் பாம்பிற்கும் உள்ள அதே சம்பந்தமே இவ்வுலகிற்கும் ஈஷ்வரனுக்கும் உள்ள சம்பந்தமும் ஆகும், ஸத்ய-மித்யா சம்பந்தம். உண்மையில், பொய்யான பொருளோடு வைத்திருக்கும் சம்பந்தமும் மித்யா, பொய்யானது. எனவே பரப்ரம்மத்தை சார்ந்து தோன்றிக் கொண்டிருக்கும் இந்த மித்யா ஜகத் என்பது உண்மையில் இல்லை. இருப்பது பரப்ரம்மம் மட்டுமே. எனவே பகவான், அனைத்து உலகமும், எந்த உயிர்களும் என்னிடத்தில் இல்லை; உண்மையில் இருப்பது பரப்ரம்மமான நான் மட்டுமே என்று கூறுகிறார்.

ஒவ்வொரு எண்ணமும் நான்தான், ஆனால் என்னுள் சைத்தன்யம் மட்டுமே உள்ளது. ஒருவன் தனது கவனத்தை ஆத்மாவின் பக்கம் திருப்பும்போது அங்கே எந்த எண்ணமும் இல்லை. அதற்காக அவன் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஒரு எண்ணம் போய், இன்னொன்று வரவிருக்கும் தருவாயில் அங்கு இருக்கின்ற பிரக்ஞை அல்லது ஆத்மா என்பது எந்தவொரு எண்ணத்தையும், ஏன் இந்த முழு உலகத்தையும் சாராதது. அந்த பிரக்ஞையே, உணர்வு சொரூபமே ஆத்மாவின் இயல்பு, மற்றும் அந்த இயல்பான சொரூபத்தினுள் எந்த உயிர்களும் இல்லை.


=> ஈஷ்வர மஹிமை:

இவ்விதமாக கூறியபின், தான் சொன்னவற்றில் எந்த முரண்பாடும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த மேலும் தொடர்கிறார்பச்1 மே யோக3ம் ஐச்1வரம். ‘பச்1எனில்பார்! புரிந்து கொள்’. இணைப்பு அல்லது தொடர்பு என்ற பொருளில் வந்துள்ளயோகம்என்ற சொல்லுக்குஐச்1வரம்அடைமொழியாக்கப்பட்டுள்ளது. உலகத்துடனான எனது தொடர்பை, எனது ஈஷ்வர யோக மஹிமையைப் பார்பச்1 மே யோக3ம் ஐச்1வரம், என்கிறார். எந்தவொரு காரண-காரிய சம்பந்தத்திலும், காரணம் என்பது சுதந்திரமானதாக இருக்கும்; அதே நேரத்தில் காரியம் காரணத்தை சார்ந்ததாக இருக்கும். ஆனால் அதிலிருந்து இன்னும் ஒரு படி மேலே சென்று நுண்மையாக நோக்கும்போது, காரியம் காரணத்திலிருந்து வேறானதா என்ன? உண்மையில் அங்கு காரியம் என ஏதேனும் உள்ளதா? விசாரம் செய்யும்போது, உண்மையில் காரணத்தின் இனியொரு வடிவமே காரியம் என்பதை ஒருவன் அறியலாம். எனவே, ஜகத் காரணமான ஈஷ்வரன், முழு உலகமும் தன்னைத் தவிர வேறில்லை என்று கூறுகிறார்.

ஆத்மாவின் இந்த குணத்தை புரிந்துகொண்ட எவரும் இந்த வாக்கியத்தை கூறலாம். கிருஷ்ணருடன், அர்ஜுனனும்கூடமயா ததம் இத3ம் ஸர்வம்அனைத்தும் என்னாலேயே வியாபிக்கப்பட்டுள்ளதுஎன்று சொல்லலாம். ஏனெனில் ஆத்மா அனைத்தையும் வியாபித்திருக்கிறது எனவும் இரண்டாவதான ஆத்மா என எதுவுமில்லை எனவும் அவன் புரிந்து கொள்கிறான். அனைத்துயிர்களும் ஆத்மாவைச் சார்ந்தே தோன்றிக்கொண்டிருக்கின்றன, அதே நேரத்தில் எந்த உயிர்களையும் சார்ந்து ஆத்மா இல்லை. ஆத்மாவின் இந்த சொரூபத்தை புரிந்துகொண்ட எவரும், ‘என்னுடைய இந்த மஹிமையைப் பார்பச்1 மே யோக3ம் ஐச்1வரம்எனக் கூறலாம்

எல்லா முரண்பாடுகளும் மஹிமைகளே. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம்; இது புரிந்து கொள்ளப்படும்போது இந்த ஜகத் என்பதும்நான்ஆகிறேன். உண்மையில் உயிர்கள் இல்லாததால் பார்ப்பவையனைத்தும் ப்ரம்மம், ஆத்மா. எனவே ஜகத் என்ற ஒன்று இல்லை, மத்ஸ்தா2நி பூ4தாநி. ஆத்மாவிற்கு ஜகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை; ஏனெனில் தொடர்பை ஏற்படுத்தும் இரண்டாவதான பொருள் எதுவும் அதே மெய்ம்மை வரிசையில் இல்லை. இந்த அதிசயத்தையே பகவான், பச்1 மே யோக3ம் ஐச்1வரம், என்கிறார்.


=> முரண் வடிவிலான மற்றுமொரு மஹிமை:

மேலும் இந்த அதிசயத்தை வேறொரு நிலைபாட்டிலிருந்து மற்றுமொரு முரண்பாட்டில் வெளிப்படுத்துகிறார்மம ஆத்மா பூ4தப்4ருத் பூ4தஸ்த2:நானே தான் அனைத்து உயிர்களுக்கும் ஸ்திதி காரணம் ஆனால் நான் அவைகளிடத்து இல்லை. ‘ப்4ருத்எனில் தாங்குபவன், நிலைநிறுத்துபவன். எல்லா உயிர்களையும் தாங்கி நடத்துபவன், அதாவது அவைகளின் இருத்தலுக்கு(ஸ்திதி) காரணமானவன் பூ4தப்4ருத். எல்லா உயிர்களின் இருத்தலாக(ஸத்தா) இருந்து அவைகளை நிலைநிறுத்துவது ஆத்மா. அதே நேரத்தில் அது பூதங்களிடத்தில் இல்லை, பூ4தஸ்த2:. அதாவது எந்த உயிர்களினாலும் அது வரையறுக்கப்படுவதில்லை. இங்கு உலகைத் தாங்குபவன் என பகவான் கூறுவதைச் சரியாகப் புரிந்து கொள்ளல் வேண்டும். அவர் அந்த மிகப் பெரிய பணியை ஒரு செயலாகச் செய்யவில்லை. அதைக் குறிக்கும் விதமாகவே விஷ்ணுபகவான் படுத்த  கோலத்தில் காட்சி அளிக்கிறார். எப்படி சைத்தன்ய-ஆத்மா எந்த விதத்தில் ஈடுபடாமலும், ஆனால் எல்லா எண்ணங்களையும் தாங்குகிறதோ அதுபோல பகவான் இவ்வுலகைத் தாங்குகிறார். இதன் பொருள் என்னவெனில், எந்த விதத்திலும் எந்தத் தொடர்பும் இல்லை, அஸங்க:. ‘எல்லா உயிர்களும் என்னிடத்துள்ளன, ஆனால் நான் அவைகளிடத்து இல்லை, ஏனெனில் நான் அஸங்கமானவன்.’


=> சிருஷ்டி மற்றும் ஸ்திதி காரணம்:

ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவாகிய நானே பூ4தபா4வந:, அனைத்து உயிர்களுக்கும் இருப்பை கொடுப்பவன், அதாவது சிருஷ்டி காரணம் என்கிறார். மாயையின் உதவியுடன் வெறும் எண்ணத்தினால் இவையனைத்தையும் உருவாக்குகிறேன். இவைகளனைத்தும் மித்யா என்பதால் இவைகள் என்னிடத்தில் இல்லை பூ4தஸ்த2:. இங்கு உதாரணமாக கனவு காண்பவனை எடுத்துக் கொள்வோம். கனவு காண்பவன் தனது சொந்த எண்ணங்களால் கனவுலகை படைக்கிறான், பூ4தபா4வந:. இப்போது முழு கனவுலகமும் அவனிடத்தில், அவனைச் சார்ந்து உள்ளது - மத்ஸ்தா2நி ஸர்வ பூ4தாநி. கனவு காண்பவன் அந்த கனவுலகைச் சார்ந்து இல்லை. கனவு காண்பவனின் மஹிமையினால் தோன்றிய அந்த கனவுலகம் அவனாலேயே நிலைநிறுத்தப்படுகிறது, பூ4தப்4ருத். இவை அனைத்திலும் எந்த முரண்பாடும் இல்லை ஏனெனில் கனவில் முழு கனவுலகமும் கனவு காண்பவனைத் தவிர வேறில்லை

கனவிலிருந்து விழித்துக் கொண்ட ஒருவன் கனவைப் பற்றியும் கனவுலகைப் பற்றியும் கனவின் நிலைபாட்டிலிருந்துதான் பேசமுடியும். விழித்து கொண்ட பிறகு அந்த நபருக்கு கனவும் அதைச் சார்ந்த அனைத்தும் மித்யா; உண்மையில் அங்கு அப்படி எதுவுமில்லை. அதுபோலவே, அனைத்தையும் படைக்கிறேன், அனைத்தையும் தாங்குகிறேன் என்று பகவான் கூறுகிறார். அதே நேரத்தில் இந்த உலகை இயக்கும் பணி அவருக்கு இல்லை ஏனெனில் உண்மையில் அங்கு தாங்குவதற்கு உயிர்கள் என எதுவுமில்லை.

பகவான் எங்கும் இருக்கிறார், அல்லது எதிலுமில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமில்லை, ஆனால் உலகம் முழுமையையும் வியாபித்துள்ளார். எனவே, இந்த என் மஹிமை புரிந்து கொள்ளப்பட வேண்டும்பச்1 மே யோக3ம் ஐச்1வரம். இந்த இரு சுலோகங்களிலும் ஸத்ய மற்றும் மித்யா தத்துவம் மிகத் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது. ‘என்னைத் தவிர வேறு எதுவும் இல்லை. நானே அனைத்தையும் படைத்தவன், அனைத்தையும் நிலைநிறுத்துபவன், எல்லாவற்றையும் ஒடுக்குபவன். உண்மையில் என்னில் உலகம் என்ற ஒன்று இல்லை. மேலும் இவ்வுலகின் வடிவில் இங்கு இருப்பவை அனைத்தும் நானேயன்றி வேறில்லை’, என்கிறார் பகவான். பகவானின் இந்த சொரூபத்தை தனது சுயரூபமாகப் புரிந்துகொள்ளும் எவரும் அதையே கூறலாம்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.6|| அஸங்கத்துவத்தை உதாரணத்துடன் விளக்குகிறார்:

यथाकाशस्थितो नित्यं वायु: सर्वत्रगो महान्

तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ।। ।।

யதா2காச1ஸ்தி2தோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ3 மஹாந்

ததா2 ஸர்வாணி பூ4தாநி மத்ஸ்தா2நீத்யுபதா4ரய ।। 6 ।।


सर्वत्रग:  ஸர்வத்ரக3:  எங்கும் செல்லுகிற   महान् वायु:  மஹாந் வாயு:  பெருங்காற்று   

नित्यं  நித்யம்  எப்பொழுதும்   यथा  யதா2  எப்படி    काशस्थित:  ஆகாச1ஸ்தி2:  ஆகாசத்தில் நிலைத்திருக்கிறதோ   तथा  ததா2  அப்படியே   सर्वाणि भूतानि  ஸர்வாணி பூ4தாநி  எல்லா உயிர்களும்   मत्स्थानि  மத்ஸ்தா2நி  என்னிடத்திருக்கின்றன    इति उपधारय  இதி உபதா4ரய  என்று தெரிந்து கொள்.


எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங்காற்று ஆகாசத்தில் நிலைபெற்றிருப்பது போல உயிர்களெல்லாம் என்னிடத்திருக்கின்றன எனத் தெரிந்துகொள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்துகொள்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் ப்ரம்மத்தின் அஸங்கத்துவத்தை, ஈஷ்வர சொரூபத்தை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். ஆகாசத்திற்குள் காற்று வியாபித்துள்ளது, ஆனால் ஆகாசம் காற்றினுடைய நல்ல மற்றும் கெட்ட வாசனைகளால் பாதிக்கப்படுவதில்லை; அசுத்தப்படுவதில்லை. ஆகாசம் அஸங்கம், தொடர்பற்றது. அதுபோல ப்ரம்மத்தின் மாயா காரியங்களெல்லாம் ப்ரம்மத்தில் நிலைத்திருந்தும், அது ப்ரம்மத்திடம் ஒரு விகாரத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ப்ரம்ம அஸங்கமானது.

 

=> இரு நியமங்கள்:

இரண்டு பொருள்கள் மிக அருகாமையிலிருந்தும் அது ஒன்றோடொன்று சம்பந்தம் வைக்காதது இரு சூழ்நிலையில் நடைபெறுகிறது:

(1) ஒன்று உருவத்துடனும், மற்றொன்று ரூபமில்லாமல் இருக்கும்போதும் அஸங்கத்துவம் சாத்தியம். .கா., உருவமற்ற ஆகாசம் - ஸ்பர்ஷம் எனும் ரூபமுடைய வாயு. ஆகாசத்துடன் மற்ற நான்கு பூதங்களும் ஸங்கம் வைக்க முடிவதில்லை.  

(2) ஒன்று ஸத்யமாகவும், மற்றொன்று கீழான ஸத்யத்துடன்(மித்யா) இருக்கும்போதும் சம்பந்தமின்மை சாத்தியப்படுகிறது. அதாவது இருவேறு மெய்ம்மை வரிசையில் இருப்பவைகளால் ஸங்கம் வைக்க முடிவதில்லை. .கா., கானல்நீர். கானல்நீரானது பூமியை நனைக்க முடியாது


=> அஸங்கத்துவம்:

எவ்விதம் ஓர் இடத்திலிருந்து இனியொரு இடத்திற்கு நகர்கின்ற காற்றானது, எப்பொழுதும் ஆகாசத்திற்குள் இருக்கின்றதோ, அவ்விதமே எல்லா உயிர்களும் ஈஷ்வரனான என்னிடத்து இருக்கின்றன, என்கிறார் பகவான். ‘ஸர்வத்ரஎனில் எங்கும், எல்லா இடங்களிலும்; ‘3எனில் செல்பவன், நகர்பவன் என்று பொருள். அது செல்லாத இடம் என ஏதுமில்லையாதலால் இங்கு வாயுஸர்வத்ரக3என அழைக்கப்படுகிறது. இதனாலேயே அதுமஹாந்என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு இச்சொல் வியாபகத் தன்மையை குறிக்கிறது. எங்கும் பரந்து வியாபிக்கும் நோக்கில் வாயு மேலானது(மஹாந்) ஆகிறது. அதுபோல எல்லா உயிர்களும் எங்கு சென்றாலும் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவைகள் என்னில் இருக்கின்றனஸர்வாணி பூ4தாநி மத்ஸ்தா2நி.

இத்தகைய வாயு, எல்லையற்ற மற்றும் எங்கும்-பரந்துள்ள ஆகாசத்தில் சஞ்சரித்த போதிலும் அது எந்த தடத்தையும் உண்டாக்குவதில்லை. ஆகாசமானது அஸங்கமாக, வாயுவுடன் தொடர்பில்லாததாக உள்ளது. இவ்விதம் ஆத்மாவும் அஸங்கமானது எனக் கூறும் நோக்கில் இந்த உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது


=> என்னிடத்து இருக்கின்றன:

எல்லா இடத்திலும் நகர்ந்த போதிலும் வாயுவானது ஒருகாலும் ஆகாசத்தை விட்டு வெளியே செல்லமுடியாது. அதுபோல அனைத்து உயிர்களும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்தாலும், எல்லா உலகங்களும் தோற்றத்திற்கு வந்து பின்னர் ஒடுக்கத்தை அடைந்தாலும் எதுவும் ஆத்மாவிலிருந்து விலகி இல்லை. பிரம்மலோகத்திற்கு செல்லும் ஆன்மாவின் முழு நகர்வும் ப்ரம்மத்தினுள் தான் உள்ளது. ஏனெனில் ஆன்மாவும் பிரம்மலோகம் உள்ளிட்ட எந்தவொரு லோகமும் ப்ரம்மமே ஆகும்; ஆத்மாவே ஆகும். எனவே ஒருபோதும் ப்ரம்மத்தை விட்டுப் போகமுடியாது. அனைத்து இயக்கங்களும், அனைத்து உயிர்களும், அனைத்து பரிவர்த்தனைகளும், அனைத்து வகையான வருதலும் போதலும் என அனைத்தும் ப்ரம்மத்தில் உள்ளன.

இங்கு அனைத்தையும் ப்ரம்மம் எனக் கூறாமல் ஏன் அனைத்தும் ப்ரம்மத்தில் இருக்கின்றன என பகவான் கூறுகிறார்? ‘நான்தொடப்படாதவனாக, அஸங்கமானவனாக இருக்கின்றேன் என்பதை தெளிவுபடுத்தும் நோக்கில் இவ்விதம் கூறுகிறார். எப்படி ஆகாசத்தில் வாயு எந்த தடத்தையும் ஏற்படுத்தாமல் நகர்கின்றதோ அப்படி ஆத்ம-சைத்தன்யமான என்னில் இந்த உயிர்கள் அனைத்தும் எந்த தடத்தையும் சம்பந்தத்தையும் ஏற்படுத்துவதில்லை. இதை நீ தெளிவாகத் தெரிந்து கொள் அர்ஜுனாஉபதா4ரய, என்கிறார்

அனைத்தும் என்னிடத்தில் இருக்கின்றனமத்ஸ்தா2நி’, என பகவான் கூறும்போது அது அவைகளின் ஸ்திதி காலத்தை, அதாவது அவைகள் இருக்கின்ற காலத்தைக் குறிக்கின்றது. காற்று ஆகாசத்தினுள் தனது இருத்தலை கொண்டிருப்பதைப் போல, பெயர் மற்றும் வடிவங்களாகவுள்ள இவ்வுயிர்களனைத்தும் தாங்கள் இருக்கின்ற காலத்தில் பரப்ரம்மத்தில் தங்களது இருத்தலைக் கொண்டுள்ளன. பொதுவாக எந்தவொரு படைப்பும் மூன்று அம்சங்களைக் கொண்டது: சிருஷ்டி_படைப்பு, ஸ்திதி_இருத்தல், லயம்_ஒடுக்கம். இவை மூன்றிற்கும் ப்ரம்மமே காரணம். அடுத்த சுலோகத்தில் பகவான் லய-காலத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும் கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை. பரம்பொருளும் அந்தக் காற்றைப் போன்றது

---------------------------------------------------------------------------------------------------------------------