செவ்வாய், 16 மே, 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.5 - 8.6

||8.5|| ஏழாவது சொல்லிற்கான விளக்கம்:

अन्तकाले मामेव स्मरन्मुक्त्वा कलेवरम्

: प्रयाति मद्भावं याति नास्त्यत्र संशय: ।। ।। 

அந்தகாலே மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம்  

: ப்ரயாதி மத்3பா4வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ச1: ।। 5 ।।


अन्तकाले   அந்தகாலே   மரணகாலத்திலும்   

माम् एव स्मरन्   மாம் ஏவ ஸ்மரந்  என்னையே நினைத்துக் கொண்டு    कलेवरम्  கலேவரம்  உடலை   

मुक्त्वा  முக்த்வா  நீத்து    : प्रयाति  : ப்ரயாதி  யார் போகிறானோ   :  :  அவன்   

मद्भावं याति  மத்3பா4வம் யாதி  என் சொரூபத்தை அடைகிறான்   अत्र  அத்ர  இதில்   

संशय: अस्ति  ஸம்ச1: அஸ்தி  சந்தேகமில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.


விளக்கம்:

=> மரணகாலம்:

அந்தகாலே மரண காலத்தில், இறக்கும் தருவாயில்; மாம் ஏவ ஸ்மரந் என்னையே நினைத்துக் கொள்பவன்; : மத்3பா4வம் யாதிஎன் சொரூபத்தை அடைகிறான். கொடுக்கப்பட்ட ஜென்மத்தில் கொடுக்கப்பட்ட உடலிலிருந்து ஒருவன் வெளியேறும் நேரம், அந்தகாலம் எனப்படுகிறது. அத்தருவாயில் என்னை நினைப்பவன் என்னையே அடைகிறான், என்கிறார் பகவான். உண்மையில் உடலை உகுக்கும் அந்த நேரத்தில் மட்டுமல்ல தன் வாழ்நாள் முழுவதும், ப்ரம்மமாக தன் சுயத்தை அறிந்த ஒருவன், ப்ரம்மமாகிய என்னையே நினைவில் கொள்வான். ‘நினைவுகூர்தல்என்ற அர்த்தத்தையுடைய ஸ்மரந் எனும் சொல் இங்கு உருவகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் இங்கு சொல்லப்படுவது யாதெனில், ப்ரம்ம-ஞானம் அடையப்பெற்ற இவனிடம், தனது வாழ்நாளின் இறுதிக் காலத்திலும் அந்த ப்ரம்ம-ஞானம் இருக்கும். அது அவனை விட்டுச் செல்லாது.


=> நினைவுகூர்தல்:

ஒருகால் ப்ரம்ம என்பது ஒரு சிந்தனைக்குரிய பொருளாக இருந்து, மரணத்தின்போது அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் எனும்போது, அது ஒருவித வாய்ப்பை பெறுவதாகவே ஆகிறது. அவன் ப்ரம்மத்தை நினைக்கலாம், நினைக்காமல் போகலாம். மேலும் அந்த நேரத்தில் நினைத்தாலும்கூட அது ப்ரம்மத்தை அறிந்ததாக பொருளாகாது ஏனெனில் ப்ரம்மத்தை நினைப்பதும் ப்ரம்மத்தை அறிவதும் ஒன்றல்ல. ப்ரம்ம என்பது ஒருவனின் சொரூபம் ஆகும். ‘நான் ப்ரம்மஎன்பது வெறும் வாக்கியம் மட்டுமல்ல; அது உட்கிரஹித்துக் கொண்ட ஞானமாக இருக்கவேண்டும். நூறு வித்தியாசமான விஷயங்களில் ஒன்றாக ப்ரம்மத்தை நினைவில் வைத்துக் கொள்ளமுடியாது, ஏனெனில் ப்ரம்மமே அந்த அனைத்து நினைவுகளின் ஆதாரமாக விளங்குகிறது. அது ஒரு ஞாபகத்திற்குரிய விஷயமல்ல; தன்னியல்பாக இருக்கின்ற சொரூபம். ஆகையினால் தன்னை ப்ரம்மமாக அறிந்தவன் ஒருபோதும் அதை மறந்திருக்க முடியாது.


=> பயணிப்பவன்:

கலேவரம் முக்த்வா : ப்ரயாதி இந்த ஸ்தூல சரீரத்தை விட்டுவிட்டு புறப்படுபவன், பயணிப்பவன். அவன் எங்கு செல்கிறான்? : மத்3பா4வம் யாதிஎன்னை அடைகிறான், பரமாத்ம சொரூபமான எனது இயல்பைப் பெறுகிறான். உயிரோடு இருக்கும்போதும் தனக்கும் ப்ரம்மத்திற்குமான ஐக்கியத்தை அறிந்த இந்த ஜீவன்-முக்தன், இறந்தபின், இந்த உடலைத் துறந்தபின் ப்ரம்மமாகவே ஆகிறான்.  

ஒரு அக்ஞானியின் ஸ்தூல உடல் இறக்கும் போது, அவனது சூக்ஷம உடலானது தொடர்ந்து இருக்கின்றது. ஏனெனில் அவனது காரண உடல், அறியாமை, இன்னும் இருக்கின்றது. சுய-அறியாமையின் காரணமாக அவனது கர்மங்கள் அனைத்தும் பலனளிக்கக் காத்திருக்கின்றன. எனவே மரணத்தின்போது அந்த கர்மங்களுக்கு ஏற்ற உடலைப் பெற்று, அவைகள் நிறைவேறுவதற்கு ஏற்றதொரு இடத்திற்குப் பயணிக்கிறான்.

ஆனால் ஒரு ஜீவன்-முக்தனைப் பொறுத்தவரை, அத்தகைய பயணம் நடைபெறுவதில்லை. ஏனெனில் மரணத்தின் போது அவனது சூக்ஷம சரீரம் சிதைவுறுகிறது. ஒருவன் இறந்தபின் பயணிக்கிறான் என்று நமக்குச் சொல்லும் அதே சாஸ்திரம், பயணிக்க வேண்டிய சூக்ஷம சரீரம் எதுவும் ஞானியிடம் இல்லை என்றும் சொல்கிறது. சூக்ஷம சரீரத்திற்கு காரணமாக விளங்கும் அறியாமை நீங்கியதால் அது மறைந்துவிட்டது. மேலும் காரண சரீரம் என்பது அறியாமை; ஆத்மாவே ப்ரம்மம் எனும் அறிவு அந்த காரண சரீரத்தையும் நீக்குகிறது. காரணம் மறைந்துவிட்டால் காரியமும் இருக்காது. எவ்விதம் நூல்களை எரித்துவிட்டால் அதன் வெளிப்பாடான துணி இருக்கமுடியாதோ அவ்விதமே அறியாமை நீங்கிவிட்டால் சூக்ஷம சரீரமும் இருக்க முடியாது. ஆகையினால் பயணம் எதுவும் இல்லை.


=> அடைதல்:

இந்த உடலைத் துறந்து என்னையே அடைகிறான்என்கிறார் பகவான். இங்குஅடைதல்என்பது முற்றிலும் உருவகமாக மட்டுமே உள்ளது. ‘நான்என்பதன் அர்த்தம் பரப்ரம்ம என்பதை பகவான் ஏற்கனவே கூறியிருக்கிறார். ப்ரம்ம என்பது ஆத்மாவிலிருந்து பிரிக்கப்படாதது என்பதால் இங்கு உண்மையான அடைதல் என எதுவும் இருக்க முடியாது. ‘ஈஷ்வரனிடமிருந்து பிரிக்கப்படாததாக இருத்தல்என்கிற பொருளில்அடைதல்சொல்லப்படுகிறது அவ்வளவே. அதாவது அவன் உயிருடன் இருந்தபோது, வெளித்தோற்றத்தில் செயல் செய்பவனாக, அனுபவிப்பவனாக இருந்தான். இப்போது அதுவும் இல்லை. ஆத்மஞானத்திற்கு முன் அவன் செயல் செய்து கொண்டிருந்தான். அறிவை அடைந்தபிறகு அவன் கர்மங்களைச் செய்வதுபோலத் தெரிந்தான். அவனது உடல் பிரிந்த பிறகு வெளித்தோற்றத்திலும் கூட எதுவும் செய்யவில்லை.

இதில் எந்த சந்தேகமும் இல்லை - அத்ர ஸம்ச1: அஸ்தி, என்கிறார். இதில்_அத்ர என்பதற்குமீண்டும் பிறவாது பரப்ரம்மமான என்னையே அடைகிறான் எனும் இந்த விஷயத்தில்என்பது பொருள். இவ்விதிக்கு விலக்கு இல்லை. ஆகவே இதைப்பற்றி ஐயம் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்கிறார். வஸ்து நித்தியமானது, அது பிறக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை. அந்த மெய்ப்பொருளாகத் தன்னை அறிந்தவுடன், அவன் எப்படி பிறக்க முடியும்? நித்தியமானது பிறக்க முடியாது. இந்த அறிவிற்கு முன்பே அவன் நித்தியமானவன் எனினும், தன்னைப் பற்றிய அந்த உண்மை அவனுக்குத் தெரியாது. எனவே தவறான உருபொருள் ஒன்று சேர்த்துவைத்த கர்ம பலன்களுக்காக மேலும் பிறவிகள் தேவை என்பதாக ஆனது. இப்போது அவன் தன் இயல்பை அகர்த்தா என்று அறிவான்; எனவே அவனுக்கு எதிர்காலப் பிறவி பற்றிய கேள்வியே இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.6|| பொதுவானதொரு நியமத்தை கூறுகிறார்:

यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम्

तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावित: ।। ।।

யம் யம் வாபி ஸ்மரந்பா4வம் த்யஜத்யந்தே கலேவரம்  

தம் தமேவைதி கௌந்தேய ஸதா3 தத்3பா4வபா4வித: ।। 6 ।।


कौन्तेय  கௌந்தேய  குந்தியின் புதல்வா   अन्ते  அந்தே  மரண காலத்தில்   

यं यं वा अपि  யம் யம் வா அபி  எந்த எந்த   भावं  பா4வம்  பொருளை   स्मरन्  ஸ்மரந்  எண்ணிக் கொண்டு   कलेवरम्  கலேவரம்  உடலை  त्यजति  த்யஜதி  துறக்கிறான்   सदा  ஸதா3  எப்பொழுதும்    

तद्भाव भावित: தத்3பா4 பா4வித:  அப்பொருளை பாவிப்பவனாய்   तं तं एव  தம் தம் ஏவ  அப்பொருளையே   एति  ஏதி  எய்துகிறான்.


குந்தியின் புதல்வா, மரண காலத்தில் எப்பொருளை எண்ணிக் கொண்டு ஒருவன் உடலை துறக்கிறானோ, எப்பொழுதும் அப்பொருளை பாவிப்பவனாகிய அவன் அதையே அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பானாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.


விளக்கம்:

இறைவனை நினைக்காமல் வேறு எண்ணத்தோடு உயிர் விடுகின்றவர்களது நிலை என்னவாகிறது என்னும் கேள்விக்கு பதிலாக இந்த சுலோகம் அமைகிறது. ஒருவன் எதை நினைத்துக் கொண்டு இறக்கின்றானோ அதை அடைகிறான்; அதை அடைவதற்கான சூழ்நிலையில் பிறக்கிறான். ஒருவன் வாழ்க்கை முழுதும் எதை நினைக்கின்றானோ அதையையே கடைசி காலத்திலும் நினைக்கமுடியும். இதைப் புரிந்து கொள்ள மனதின் தன்மையைப் பற்றிய ஒரு சிறு விசாரத்தை மேற்கொள்ளலாம்


=> மனதின் தன்மை:

* எதை நம் மனமானது தொடர்ந்து நினைக்கின்றதோ அது நமது ஸ்வபாவமாக மாறிவிடும். இன்று நம் மனம் எப்படி உள்ளது என்பது இதுவரையில் நாம் என்ன நினைத்தோம், படித்தோம், வாழ்ந்தோம் என்பதன் விளைவு ஆகும். இதிலிருந்து தொடர் பழக்கத்தினால்(அப்யாஸம்) நம் மனதை உருவாக்குவது நாம்தான்.

* ஒரு விஷயத்தை அதிக காலம் நினைப்பதன் விளைவு அது நம் மனதில் வாசனையாக, சம்ஸ்காரமாக மாறிவிடும். நம் மனதும்கூட ஸ்தூல உடலைப் போன்றதுதான். வயது ஆக ஆக மனதின் சக்தி குறைகிறது. புதிதாக சிந்தித்து புதிய சம்ஸ்காரத்தை உருவாக்கும் சக்தியை மனம் இழந்துவிடும். ஆகையினால் சிறிய வயதிலிருந்தே நல்ல விஷயத்தை சிந்தித்து அதை குணமாக மாற்றியிருந்தால்தான் வயதான காலத்தில் அது நமக்கு பயன்படும்.

* வயதான காலத்தில் நமது சம்ஸ்காரங்கள் நம் முயற்சியின்றி தானாக மேலே வரும். நமது மனம் சிந்திக்கும் திறனை இழந்திருப்பதால் அதற்கு வேறு வழி கிடையாது. ஆகவே ஆரம்ப காலத்திலிருந்தே பகவானை நினைக்கும்போது, அதன் பலனாக மரண காலத்தில் எந்த முயற்சியுமில்லாமல் தானாக பகவானை நினைத்தல் நடைபெறுகிறது

* இறைவனை ஒரு குறிப்பிட்ட பொருளை அடைய உதவும் கருவியாக எண்ணுகிறார்களா? அல்லது ஈஷ்வரனின் சொரூபத்தையே அடைய நினைக்கிறார்களா? என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஏனெனில் ஈஷ்வரனை கருவியாக நினைத்திருந்தால், அந்த பொருள்தான் ஞாபகத்திற்கு வருமே தவிர ஈஷ்வரனின் எண்ணம் வருவதில்லை. மாறாக, ஈஷ்வரனை நிஷ்காமமாக நினைத்திருக்க வேண்டும். நிஷ்காம பக்தன் அப்யாஸத்தின் மூலமாக மனதில் வாசனையை உருவாக்கி, கடைசி காலத்தில் இறைவனையே எண்ணி உயிர் துறக்கின்றான்

* ஆகையினால் புலனடக்கம் மற்றும் மனக்கட்டுப்பாடு மூலம் தேவையில்லாத எண்ணங்களை, மனதில் சக்தி இருக்கும்போதே நீக்கிவிட வேண்டும். எண்ணத்தில் கவனத்துடன் இருப்பது மிக அவசியம்.


=> பொது நியதி

எந்தெந்த பொருளை அல்லது தத்துவத்தை நினைத்துக் கொண்டு மரணகாலத்தில் உடலை விடுகின்றானோயம் யம் வா அபி பா4வம் ஸ்மரந் கலேவரம் த்யஜதி, எப்பொழுதும் அதை பயிற்சி செய்தவனாக, அதில் சம்ஸ்காரத்தை அடைந்தவனாகஸதா3 தத்3பா4 பா4வித:, அந்தந்த பொருளையே அடைகின்றான்

இதே கருத்து முண்டகோபநிஷதத்தில் கூறப்படுகிறது. காமாந் : காமயதே மந்யமாந:யார் பொருள்களை நினைத்துக் கொண்டு உயிர்விடுகிறானோ, : காமபி4: ஜாயதே தத்ர தத்ரஅவன் அடுத்த பிறவியில் எங்கு பிறந்தால் அந்த ஆசைப்பட்ட பொருள் கிடைக்குமோ அங்கு பிறக்கின்றான். பர்யாப்த காமஸ்ய க்ருதாத்மந: இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமா:யார் ஞானத்தினால் எல்லா ஆசைகளையும் நீக்குகின்றானோ அவனுக்கு அனைத்து ஆசைகளும் இங்கேயே மடிந்து விடுகின்றது. அவன் மீண்டும் பிறப்பதில்லை

-------------------------------------------------------------------------------------------------------------------------