எட்டாம் அத்தியாயம்
அக்ஷரப்ரஹ்ம யோகம் [अक्षरब्रह्मयोग:]
முகவுரை:
அக்ஷரப்ரஹ்ம யோகம் என்று அழைக்கப்படும் இந்த அத்தியாயத்தின் முக்கிய தலைப்பு உபாசனை ஆகும். ஆறாவது அத்தியாயத்தில் சிரவணம் மநநம் உள்ளிட்ட ஞானயோகத்தின் ஒரு அங்கமாக நிதித்யாசனம் எனும் தியானம் பேசப்பட்டது. இங்கு மானஸ-கர்ம என்றழைக்கப்படும் நேரடியான உபாசனை பேசப்படுகிறது. ‘உபாசந’ எனில் சகுண-ப்ரம்ம-விஷய-மானஸ-வியாபர. அதாவது, இதில் தியானத்திற்குரிய விஷயம் சகுணப்ரம்மம் ஆகும்.
மனதினால் செய்யப்படும் செயலாகவுள்ள இந்த உபாசனை கர்ம-காண்டத்தில் இல்லாமல், ஞான-காண்டமான உபநிஷத்திலும் கீதையிலும் சொல்லப்பட காரணம் என்ன? ஏனெனில் கர்மத்திற்கும் ஞானத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உண்டு. கர்மமானது ஒருவனை மறைமுகமாக ஞானத்திற்குத் தயார் செய்கிறது. சாஸ்திரத்தில் கூறப்படும் நித்திய நைமித்திக கர்மங்களைச் சரியான பாவனையுடன் செய்யும் ஒருவன் மனத்தூய்மையை(சித்த சுத்தி) அடைவதால், இது பஹிரங்க சாதனம் எனப்படுகின்றது. உபாசனை என்பது அந்தரங்க சாதனம் ஆகும். ஏனெனில் இதன் பலனாகக் கிடைக்கும் மன ஒருமுகப்பாடு(சித்த நைஷ்சல்ய), ஞானத்திற்கு இடையூறாக நிற்கும் அனைத்து தடைகளையும்(பிரதிபந்தக) நீக்குவதற்கு அவசியமாகிறது. மேலும் ஞானம் என்பது மனதில் உண்டாகும் விஷயம். ஆகவே மானஸ-கர்மமான உபாசனைகள் ஞான-காண்டத்தில் இருப்பதே பொருத்தமானது.
ஆத்மா என்பது ஸத்-சித்-ஆனந்த சொரூபமான ப்ரம்மன். அறியாமையினால் இந்த உண்மை ஜீவனுக்கு தெரிவதில்லை. ஆகவே இந்த அறியாமை எனும் முதல் தடையை ஒழிக்க ஒருவனுக்கு வேதாந்த சாஸ்திரம் எனும் பிரமாணம் தேவைப்படுகிறது. ‘நான் ப்ரம்மமாக இருக்கின்றேன்’ எனும் ஞானத்தை புரிந்துகொள்வதால் இந்த அறியாமை நீங்குகிறது. ஆனால் இந்த ஞானத்தை புரிந்துகொள்ள மனம் தயாராக இருக்கவேண்டும். மனம் தயாராக இல்லாத பட்சத்தில், மனம் சம்பந்தப்பட்ட மேலும் இரு தடைகள் பேசப்படுகின்றன. ஒன்று மலம் மற்றும் இனியொன்று விக்ஷேபம். இங்கு ‘மல’ என்பது அசுத்தம், அதாவது விருப்பு-வெறுப்பு எனும் அசுத்தங்களைக் குறிக்கிறது. இவற்றை அகற்ற கர்மயோகம் உதவுகிறது. அடுத்ததாக, ‘விக்ஷேப’ என்பது மன அமைதியின்மையை அல்லது அலைபாயும் தன்மையைக் குறிக்கிறது. இந்த விக்ஷேபத்தை நீக்கும் ஒரே வழி உபாசனை ஆகும். இது ஜபம் மற்றும் தியான வடிவில் செய்யப்படுகிறது. சகுண-ப்ரம்ம-தியானம், அஹங்கிரஹ-உபாசனம், சம்பத்-உபாசனம் போன்ற பல உபாசனைகள் சாஸ்திரத்தில் பேசப்படுகின்றன. இதுபோன்ற தியானமுறைகள் மன ஒருமுகப்பாட்டிற்கும் மன ஒடுக்கத்திற்கும் சாஸ்திரத்தினால் பரிந்துரைக்கப்படுகின்றது.
பல்வேறு உபாஸ்ய-தேவதைகள் அல்லது இஷ்ட-தேவதைகளுடன் கூடிய பல்வேறு வகையான உபாசனைகள் உள்ளன. ஏனெனில் ஒவ்வொருவரும் அவர்களுக்கேயுரிய தனிப்பட்ட சம்ஸ்காரங்களைப்(பதிவுகளை) பெற்றுள்ளதால் அவர்களது இஷ்ட தெய்வத்தை குறித்த உபாசனையில் அவர்களால் எளிதாக ஒடுங்க முடியும். இவ்வகையான உபாசனையின் பலன்களை, உபாசகன் மற்றும் அவனது பாவனையைப் பொருத்து நான்காகப் பிரிக்கலாம்:
(1) அதிகாரித்துவம் - இஹலோக ஐஸ்வர்யங்களில் விருப்பமில்லாத ஒரு முமுக்ஷு, ஞானத்திற்கானத் தகுதியை அடைய நிஷ்காமமாக உபாசனையில் ஈடுபடும்போது அவன் அதிகாரித்துவத்தை, சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைகிறான்.
(2) இஹலோக ஐஸ்வர்யம் - இந்த லோகத்தில், இந்த ஜென்மத்தில் செல்வம், பதவி, புத்திரன் முதலிய விருப்பங்களை அடைய ஷகாமமாக உபாசனையை செய்யும்போது அவன் இஹலோக ஐஸ்வர்யங்களை அடைகிறான்.
(3) பரலோக ப்ராப்தி - இறந்த பிறகு நற்கதியை, நல்ல லோகங்களை அடையும் எண்ணத்துடன் செய்யப்படும் உபாசனையின் பலனாக சொர்க்கம், பித்ரு லோகம், சத்ய லோகம் முதலிய உயர்ந்த லோகத்தை அடைகிறான்.
(4) ப்ரம்ம லோக ப்ராப்தி - ப்ரம்ம லோகத்திற்குச் செல்லும் ஆசையுடன் உபாசனை செய்து, அதன் பலனாக ப்ரம்மலோகம் செல்கிறான். அங்கு அவனது புண்ணியத்தைப் பொறுத்து பிரம்மதேவரால் கற்பிக்கப்பட்டு ஆத்ம-ஞானம் அடையப்பெற்றவன் கிரம-முக்தியை அடைகிறான். இல்லையெனில், புண்ணியம் தீர்ந்தவுடன் மீண்டும் பூமியில் பிறக்கின்றான்.
சென்ற அத்தியாயத்தில் பகவான் அறிமுகப்படுத்திய ஏழு சொற்களுக்கான விளக்கத்தை இந்த அத்தியாயத்தின் தொடக்க சுலோகங்களில் தருகிறார். பின்னர் உபாசனைகளையும் அதன் பலன்களைக் குறித்தும் விவரிக்கிறார். அத்தியாயத்தின் இறுதியில் ஒரு ஜீவன் இறந்தபின் அடையும் இரு வகையான மார்க்கத்தை அல்லது கதியை குறித்து விளக்கமளிக்கிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||8.1|| அர்ஜுனனின் கேள்விகள்:
अर्जुन उवाच
किं तत्ब्रह्म किमध्यात्मं किं कर्म परुषोत्तम ।
अधिभूतं च किं प्रोक्तमधिदैवं किमुच्यते ।। १ ।।
அர்ஜுந உவாச
கிம் தத்3ப்3ரஹ்ம கிமத்4யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம ।
அதி4பூ4தம் ச கிம் ப்ரோக்தமதி4தை3வம் கிமுச்யதே ।। 1 ।।
अर्जुन उवाच அர்ஜுந உவாச அர்ஜுனன் சொன்னது
परुषोत्तम புருஷோத்தம ஓ புருஷோத்தமா तत् ब्रह्म தத்3 ப்3ரஹ்ம அந்த ப்ரம்மம் किं கிம் யாது
अध्यात्मं किं அத்4யாத்மம் கிம் அத்யாத்மம் என்றால் என்ன कर्म किं கர்ம கிம் கர்மம் என்பது யாது
अधिभूतं அதி4பூ4தம் அதிபூதம் என்று किं प्रोक्तम् கிம் ப்ரோக்தம் எது சொல்லப்படுகிறது च ச மேலும் अधिदैवं அதி4தை3வம் அதிதெய்வம் என்று किम् उच्यते கிம் உச்யதே எது சொல்லப்படுகிறது?
ஓ புருஷோத்தமா! அந்த ப்ரம்மம் யாது? அத்யாத்மம் எது? கர்மம் என்பது யாது? அதிபூதம் என்று சொல்லப்படுவது எது, மேலும் அதிதெய்வம் என்று எது அழைக்கப்படுகிறது?
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் செல்லுகிறான்: அந்த பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? புருஷோத்தம, கர்மமென்பது யாது? பூத ஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை?
---------------------------------------------------------------------------------------------------------------------
||8.2|| அர்ஜுனனின் கேள்விகளின் தொடர்ச்சி:
अधियज्ञ: कथं कोऽत्र देहेऽस्मिन्मधुसूदन ।
प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभि: ।। २ ।।
அதி4யஜ்ஞ: கத2ம் கோऽத்ர தே3ஹேऽஸ்மிந்மது4ஸூத3ந ।
ப்ரயாணகாலே ச கத2ம் ஜ்ஞேயோऽஸி நியதாத்மபி4: ।। 2 ।।
मधुसूदन மது4ஸூத3ந மது என்ற அரக்கனை அழித்தவனே अत्र அத்ர இங்கே
अस्मिन् देहे அஸ்மிந் தே3ஹே இந்த தேகத்தில் कथं கத2ம் எப்படி क: க: யார்
अधियज्ञ: அதி4யஜ்ஞ: அதியக்ஞனாக இருக்கிறார் प्रयाणकाले च ப்ரயாணகாலே ச மரண காலத்திலும் नियत आत्मभि: நியத ஆத்மபி4: தன்னடக்கம் பழகியவர்களால் कथं கத2ம் எங்ஙனம்
ज्ञेय: असि ஜ்ஞேய: அஸி அறியப்படுபவர் ஆகின்றீர்?
ஓ மதுசூதனா, இந்த தேகத்தில் அதியக்ஞன் என்பவர் யார்? அவர் எப்படி இருக்கிறார்? தன்னடக்கம் பழகியவர்களால் மரண காலத்திலும் நீங்கள் எங்ஙனம் அறியப்படுபவர் ஆகின்றீர்கள்?
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
யாகஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவதெங்ஙனே?
விளக்கம்:
இவ்விரண்டு சுலோகங்களையும் சேர்த்து மொத்தம் ஏழு அறியத் தகுந்த விஷயங்கள் உள்ளன. முன் அத்தியாயத்தின் இறுதியில் வந்த சுலோகங்கள் இரண்டும் இக்கேள்விகளுக்கு இடந்தருகின்றன. ஆகவே, அர்ஜுனன் அவைகளைக் கேட்கின்றான்.
=> கேள்விகள்:
ஞானிகளுக்குத் தெரியும் என்று நீங்கள் சொல்லும் அந்த ப்ரம்ம எது என்று அர்ஜுனன் கேட்கிறான். ‘ப்ரம்ம’ என்ற சொல்லுக்கு, வேதம், பிராமணன், பிரம்மதேவர் அல்லது மிகப் பெரியது எனப் பல அர்த்தங்கள் உண்டு. இதில் ‘ப்ரம்ம’ என்பது எதைக் குறிக்கின்றது? பின் ‘அகிலம் கர்ம’ எனக் குறிப்பிட்டீர்களே அதன் பொருள் என்ன? இது கடந்த கால கர்மமா, நிகழ்கால கர்மமா அல்லது எதிர்கால கர்மமா?
இந்த அத்யாத்மம் எது? அதிபூதம் என்று சொல்லப்படுவது எது? மேலும் அதிதெய்வம் என்று எது அழைக்கப்படுகிறது? இந்த உடலில் ஒரு அதியக்ஞன் இருக்கின்றாரா? அவர் எவ்விதம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்?
நிலைத்த உறுதியான மனதை உடையவர்கள் உடலை விட்டுப் பிரியும் நேரத்திலும் என்னை அறிவார்கள் என்று பகவான் சென்ற அத்தியாயத்தில் கூறியிருந்தார். இது எப்படி சாத்தியம்? பொதுவாக மக்கள் மரணத்தின் போது தங்கள் உயிர்வாழ்வைப் பற்றி கவலைப்படுவார்கள் அல்லது தங்களுக்குப் பிரியமானதை நினைப்பார்கள். எனவே அர்ஜுனனுக்கு இந்த கேள்வி வருகிறது. இறப்பின் போது பலவிதமான கவலைகள் மற்றும் எண்ண ஓட்டங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் உங்களை எப்படி நினைவில் கொள்கிறார்கள்? அவர்களின் அறிவின் விஷயமாக எப்படி ஆகிறீர்கள்?
அர்ஜுனனின் இந்த கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக இனிவரும் நான்கு சுலோகங்களில் கிருஷ்ணர் பதிலளிக்கிறார். பின்னர் அதை மீண்டும் விளக்கமாகப் பேச இருக்கிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------