செவ்வாய், 9 மே, 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.3 - 8.4

||8.3|| பகவானின் பதில்:

श्रीभगवानुवाच

अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते

भूतभावोद्भवकरो विसर्ग: कर्मसञ्ज्ञित: ।। ।। 

ஸ்ரீப43வாநுவாச

அக்ஷரம் ப்3ரஹ்ம பரமம் ஸ்வபா4வோऽத்4யாத்மமுச்யதே  

பூ4தபா4வோத்34வகரோ விஸர்க3: கர்மஸம்ஜ்ஞித: ।। 3 ।।


श्रीभगवान् उवाच  ஸ்ரீப43வாந் உவாச  ஶ்ரீ பகவான் சொன்னது

अक्षरं  அக்ஷரம்  அழிவற்றதாயும்   परमं  பரமம்  மேலானதாயிருப்பது    

ब्रह्म  ப்3ரஹ்ம  ப்ரம்மம்   स्वभाव:  ஸ்வபா4:  ஸ்வபாவம்   

अध्यात्मम् उच्यते அத்4யாத்மம் உச்யதே  அத்யாத்மம் என்று சொல்லப்படுகின்றது  

भूत भाव उद्भवकर:  பூ4 பா4 உத்34வகர:  உயிர்களுக்கு உடல்கள் எடுக்க காரணமான  

विसर्ग:  விஸர்க3:  ஆஹுதி(வேள்வியில் படைப்பது)   

कर्म सञ्ज्ञित:  கர்ம ஸம்ஜ்ஞித:  கர்ம என்று சொல்லப்படுகின்றது.    


ஶ்ரீ பகவான் சொன்னது

அழிவற்றதாயும் மேலானதாயுமிருப்பது ப்ரம்மம். அதன் ஸ்வபாவம் அத்யாத்மம் என்று சொல்லப்படுகின்றது. உயிர்களை உண்டாக்கி நிலைத்திருக்கச் செய்தலாகிய வேள்வி கர்மம் என்று சொல்லப்படுகின்றது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.


விளக்கம்:

=> மேலான அழியாத ப்ரம்மம்:

அழிவற்றதாகவும் மிக உயர்ந்ததாகவுமிருப்பது ப்ரம்மம்அக்ஷரம் பரமம் ப்3ரஹ்ம. ப்ரம்ம என்பது முழுமுதற்பொருள். அது எக்காலத்திலும் உள்ளது; எக்காரணத்தைக் கொண்டும் அதனிடத்து மாறுதல் உண்டாகாது. ஆதலால் அதற்கு அக்ஷரம் என்ற பெயர் வந்துள்ளது. எது அழியாததோ, எது அனைத்தையும் வியாபிக்கின்றதோ அது அக்ஷரம். நாசமடையும் தன்மையுடைய எதுவும் காலத்திற்கு உட்பட்டதாக, பின்வரும் ஆறுவித மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். அவைகள், இருத்தல் (அஸ்தி), பிறத்தல்(ஜாயதே), வளர்தல்(வர்ததே), மாற்றத்தை அடைதல்(விபரிணமதே), தேய்தல்(அபக்ஷீயதே) மற்றும் மடிதல்(விநஷ்யதி) ஆகும். அழியாத் தன்மையையுடைய ப்ரம்ம இவ்வகை மாற்றங்களுக்கு உட்படுவதில்லை. எனவே ப்ரம்மம் அக்ஷரம்.

அழியாத தேயாத ஒன்றே காலதேச நிமித்தத்தில் அடிபடாததாக இருக்க முடியும். ஆகையினால் ப்ரம்மம் பரமம். எந்தவொரு பொருளும் காலத்தினால், தேசத்தினால் அதற்கேயுரிய குணங்களினால் வரையறுக்கப்படுகின்றது. ஆனால் அண்டங்கள் அனைத்திற்கும் இருப்பிடமாகவுள்ள ப்ரம்ம எந்த வகையிலும் வரையறுக்கப்படாதது. கால தேசத்திற்கு அப்பாற்பட்டது; குணங்களற்றது - நிர்குண:

இந்த அத்தியாயத்தின் பிற்பகுதியில், சுலோகம் 8.13-ல் அக்ஷர எனும் சொல்லினால் ஓம் என்னும் பிரணவம் குறிக்கப்படுகிறது. எனில் இங்கு ஏன் அது ஓம் எனும் வார்த்தையைக் குறிக்கக்கூடாது என்ற கேள்வியை சங்கரர் எழுப்பி, அதற்கான விடையையும் அளிக்கிறார். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளபரமஎனும் உரிச்சொல் அந்த சாத்தியத்தை நீக்குகிறது. மேலும் இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பும்ஓம்அல்ல. எனவே அக்ஷர என்பது அழியாதது என்ற அர்த்தத்தில் ப்ரம்மத்தை குறிக்கின்றது


=> சுபாவம் அத்யாத்மம்

அத்4யாத்ம = அதி4 + ஆத்மா = உள்(-ல்) + உடல். உடலுக்குள் இருப்பது என்பது பொருள். ஆத்மாநம் தேஹம் அதிஹ்ருத்ய தஸ்மிந் அதிஷ்டான தயா திஷ்டதி இதி அத்4யாத்மம்இந்த தேகத்திற்குள் அதற்கு அதிஷ்டானமாக உள்ளே இருப்பது அத்யாத்மம். பொதுவாக அது புலனுறுப்புகள், மனம், பிராணன், புத்தி, மற்றும் பிரத்யகாத்மா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே ஞானிகளினால் அறியப்படும் அந்த குறிப்பிட்ட அத்யாத்மம் என்னவென்று அர்ஜுனன் அறிய விரும்புகிறான். இங்கு ஸ்வபாவம் அத்யாத்மம் என பகவானால் குறிக்கப்பட்டுள்ளதால் அது பிரத்யகாத்மாவைக் குறிக்கிறது

கோபிக்கும் தன்மையுடைய ஒருவனை அது அவனது ஸ்வபாவம் என்கிறோம். கருணையோடு நடந்து கொள்பவனை அது அவனது ஸ்வபாவம் என்கிறோம். அதுபோல பரப்ரம்மத்தினுடைய ஸ்வபாவம், எண்ணற்ற ஜீவாத்மாக்களாகத் தன்னைத்தானே தோற்றுவித்துக் கொள்வதாகும். அந்த ஸ்வபாவமே அத்யாத்மம் என்று அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு தேகத்தினுள்ளும்நான்என்னும் சொல்லுக்கு இலக்காக உள்ள பிரக்ஞையாக பிரத்யகாத்மாவாக அது இருக்கிறது. அதுவே ஒவ்வொரு ஜீவனின் சாரம் ஆகும். அக்ஷரம் ப்ரம்ம என்பது ஜீவனின் சாரமான அத்யாத்மம் என்றும் அழைக்கப்படுகிறது.

வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்ட போதிலும், ப்ரம்ம மற்றும் அத்யாத்ம என்ற இரு வார்த்தைகளும் ஒரே மாதிரியான அர்த்தத்தைக் கொண்டவை. வெளிவுலகிற்கு அதிஷ்டானமாக இருக்கும்போது அது ப்ரம்ம என்றும் தனியொருவனின் தேகத்திற்கு ஆதாரமாக விளங்கும்போது அதே மெய்ப்பொருள் ஆத்மா(அத்யாத்ம) என்றும் அழைக்கப்படுகின்றது. ஞானியானவன் சிருஷ்டி அனைத்திற்கும் மூலகாரணமாக ப்ரம்மத்தை அறிகிறான் என பகவான் கூறியிருந்தார். எனவே ப்ரம்மனை அறியப்படும் ஒரு பொருளாக அல்லாமல் தனது சுயமாகவே அறிகிறான் என்பதை சுட்டிக்காட்ட அவர் இங்கு அத்யாத்ம என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். ஒரு ஞானி ப்ரம்மத்தை அறிகிறான். மேலும் அதே ப்ரம்ம தனது தேகத்திற்குள் அதிஷ்டானமாக இருப்பதாக அறிகிறான். இதனால் ப்ரம்ம ஞானத்தையும் ஆத்ம ஞானத்தையும் ஒருங்கே கொண்டவனாக ஆகிறான். ஏனெனில் இரண்டும் ஒன்றுதான்


=> ஆஹுதி கொடுக்கும் செயல், கர்ம:

வேள்வியின்போது ஹோம குண்டத்தில் வளர்க்கப்பட்டுள்ள நெருப்புக்கு ஆஹுதிகளை சமர்பிக்கும் செயல், கர்ம என்று சொல்லப்படுகிறதுவிஸர்க3: கர்ம ஸம்ஜ்ஞித:. பொதுவாக கர்ம எனில் செயல்கள். இலக்கணத்தில் அது அறிபடும் பொருளைக் குறிக்கின்றது. வைதிகத்தில் ஸ்மார்த்தம் கர்ம மற்றும் ஸ்ரெளதம் கர்ம இரண்டும் கர்ம என்றழைக்கப்படும். இங்கு பகவான் விஸர்கத்தை கர்ம எனக் கூறுகிறார். இலக்கணப்படி விஸர்க3: என்பது ஒரு வார்த்தையின் இறுதியில் வைக்கப்படுகின்ற அரைப்புள்ளியைக் குறிக்கிறது. ராம: என்கிற வார்த்தையில் ‘:’ என்பது விஸர்க3: ஆகும். ஆனால் இங்கு விஸர்க3: எனில் கொடுத்தல், விட்டு விடுதல் அல்லது தியாகம் செய்தலை, குறிப்பாக தேவதைகளுக்கென வேள்வியில் ஆஹுதிகளை கொடுக்கும் செயலைக் குறிக்கின்றது. கர்ம என்பது எல்லா விதமான செயல்களைக் குறித்தபோதிலும் சாஸ்திரத்தில் அது ஆஹுதிகளைக் கொடுக்கின்ற வேதச்சடங்கை குறிப்பதால் பகவான் இங்கு அந்த சொல்லை உபயோகிக்கிறார். இந்த கர்மங்களிலிருந்து உண்டாகும் கர்ம-பலனே ஒருவன் ஒரு குறிப்பிட்ட உடலில் பிறக்க காரணியாக உள்ளது. எனவே எந்த கர்மங்களினால் பாபம் மற்றும் புண்ணியம் உண்டாகி ஜென்மத்திற்கு வழி வகுக்கிறதோ அது கர்ம எனக் கூறும் விதமாக, ‘பூ4 பா4 உத்34வகர:எனும் அடைமொழியை பயன்படுத்துகிறார். விதவிதமான உடல்களை(பூ4 பா4) ஜீவன் எடுக்க காரணமாக இருப்பது கர்ம. ஒரு உயிரினம் பிறப்பதற்கு ஒரு உடல் தேவை. அதற்கு கர்மம்தான் காரணம். பொதுவாக கர்மம், ‘த்ருஷ்டமற்றும்அத்ருஷ்டஎனும் இருவித பலன்களை உருவாக்குகிறது. இதில் அத்ருஷ்ட-பலன் உடல்களை ருவாக்குகிறது.

பூ4என்பது ஏற்கனவே இருக்கின்ற ஜீவன் எனவும் எடுத்துக்கொள்ளலாம். ஜீவன் படைக்கப்படவில்லை, உடல் மட்டுமே படைக்கப்படுகிறது. ஜீவன் உருவாக்கப்படவில்லை என்பதை அறிவது அவசியம். ஏனெனில் ஜீவன் உருவாக்கப்படும்போது ஆத்மாவும் உருவாக்கப்பட்டதாக ஆகிறது, எனில் மோக்ஷத்திற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. ஜீவனின் உண்மையான இயல்பு நித்தியமானது, ஆகையால்  அது உருவாக்கப்படவில்லை. உடல் என்று கூறப்படும் ஒரு குறிப்பிட்ட வடிவம் மட்டுமே தோற்றுவிக்கப்படுகிறது, அதனுடைய மூலக்காரணியாக இருப்பது கர்ம ஆகும்.

எல்லாவற்றையும் போல கர்மமும் ப்ரம்மத்திலிருந்து பிரிக்கப்பபடாதது. சுலோகம் 4.24-ல் பார்த்ததுபோல செயல், செயலைச் செய்பவன், கருவி உள்ளிட்ட செயலுடன் தொடர்புடைய அனைத்தும் ப்ரம்ம. இவைகள் அனைத்தும் ஸத்யமாகிய ப்ரம்மத்தை சார்ந்திருக்கும் மித்யா. ஆகையினால் ப்ரம்மத்தை அறிந்த ஞானி கர்மம் முழுதையும் அறிகிறான்அகிலம் கர்ம.

---------------------------------------------------------------------------------------------------------------------

||8.4|| அடுத்த மூன்று சொற்களின் பொருள்:

अधिभूतं क्षरो भाव: परुषश्चाधिदैवतम्

अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर ।। ।। 

அதி4பூ4தம் க்ஷரோ பா4: புருஷச்1சாதி4தை3வதம்

அதி4யஜ்ஞோऽஹமேவாத்ர தே3ஹே தே3ஹப்4ருதாம் வர ।। 4 ।।


देह भृतां वर   தே3 ப்4ருதாம் வர  உடல் எடுத்தவர்களுள் உயர்ந்தவனே    

क्षर: भाव:  க்ஷர: பா4:  அழியும் பொருள்   अधिभूतं  அதி4பூ4தம்  அதிபூதம் என்று சொல்லப்படுகிறது   

परुष:  புருஷ:  புருஷன்   अधिदैवतम्   அதி4தை3வதம்  அதிதெய்வம் எனப்படுகிறான்   

अत्र देहे   அத்ர தே3ஹே  இனி இந்த தேகத்தினுள்   अहम् एव  அஹம் ஏவ  நானே    

अधियज्ञ:  அதி4யஜ்ஞஅதியக்ஞமாகிறேன்.


உடல் எடுத்தவர்களுள் உயர்ந்தவனே, அழியும் பொருள் அதிபூதம் என்று சொல்லப்படுகிறது. புருஷன் அதிதெய்வம் எனப்படுகிறான். இனி இந்த தேகத்தினுள் நானே அதியக்ஞமாகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். புருஷனைப் பற்றியது தேவ ஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்.


விளக்கம்:

=> அழியக்கூடியவைகள் அதி4பூ4தம்:

அதி4பூ4தம் க்ஷர: பா4:அழியும் தன்மையுடைய உயிரினங்கள் அல்லது பொருள்கள் அதி4பூ4தம் என்று அழைக்கப்படுகிறது. இருக்கின்ற அனைத்தும் பா4 எனப்படும். மேலும், இருக்கின்ற எதுவும் மாற்றம் மற்றும் அழிவுக்கு உட்பட்டவையாகையால்க்ஷர: பா4:. சென்ற சுலோகத்தில் பார்த்ததுபோல எந்தவொரு உடலும் இருத்தல், பிறத்தல், தேய்தல் உள்ளிட்ட ஆறுவித மாற்றங்களுக்கு உட்பட்டவைகள் ஆகும். இந்த அழியக்கூடிய பொருள்கள் அதி4பூ4தம் ஆகும். ப்ரம்மத்தை அறிந்த ஞானியானவன், ஸ்தூல மற்றும் சூக்ஷம சரீரம் உட்பட தோற்றத்திற்கு வந்த அனைத்துவித அதிபூதத்தை அழியக்கூடியதாக அறிகிறான்.

 

=> புருஷன் அதி4தெய்வம்:

புருஷனான ஹிரண்யகர்பன் அதி4தெய்வம் எனப்படுகிறான். புரியிலே சயனிப்பவன் புருஷன். அகிலாண்டத்தையும் தன் இருப்பிடமாகக் கொண்டு, அதில் நீக்கமற நிறைந்திருக்கிறவன் புருஷன். இங்கு அது, எல்லார்க்கும் முதலிலே உடலை எடுத்த சூக்ஷம பிரபஞ்சத்தின் அதிபதியான ஹிரண்யகர்பனை அல்லது பிரம்மதேவனை இச்சொல் குறிக்கிறது.


=> சாக்ஷி அதியக்ஞன்:

இங்கே இந்த உடலில், நான்தான் அதியக்ஞனாக இருக்கின்றேன். அதாவது எல்லோரின் மனதிலும் சாக்ஷியாக இருக்கின்ற நான் அதியக்ஞ: ஆகும்.  

எங்கெல்லாம் மாற்றம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் அது மாறாத ஒரு அதிஷ்டானத்தை சார்ந்திருக்கிறது. எந்தவொன்று மாறும்போதும் அது இனியொன்றாக ஆகிறதே தவிர அது முற்றிலும் இல்லாமல் ஆகிவிடுவதில்லை. மாற்றத்திற்கு உட்படும் அந்த பொருளின் இருப்பு அல்லது சாரம் என்பது அழியாது. அது நானாக இருக்கின்றேன் என்கிறார் கிருஷ்ணர்.

ஆகவே அக்ஷரமாகிய இந்த ப்ரம்மமே, ஆத்மவிசாரத்தில் ஈடுபடுபவனை குறிக்கும்போது அத்யாத்மமாகவும், மற்ற எல்லா உடல்கள் மற்றும் பொருள்களை குறிக்கும்போது அதிபூதமாகவும் இருக்கின்றது. ‘இவ்வாறு அத்யாத்மம் மட்டுமல்ல அதிபூதமாக அதியக்ஞனாக நானே இருக்கின்றேன்என்கிறார் பகவான்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

எவனுடைய உடலும் உள்ளமும் பூரணமாக ஈஷ்வரனுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அவன்தான் உண்மையான ஸாது. ஸதா ஸர்வகாலமும் ஈஷ்வரனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பான். அந்த ஈஷ்வரன் எல்லா ஜீவர்களிடத்தும் இருக்கின்றான் என்பதை அவன் அறிந்துகொண்டு எல்லார்க்கும் தொண்டு செய்வான்.

---------------------------------------------------------------------------------------------------------------------