செவ்வாய், 11 ஏப்ரல், 2023

ஞானவிக்ஞான யோகம் 7.25 - 7.26

||7.25|| அவர்களுடைய அக்ஞானத்திற்கு காரணம்:

नाहं प्रकाश: सर्वस्य योगमायासमावृत:

मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम् ।। २५ ।।

நாஹம் ப்ரகாச1: ஸர்வஸ்ய யோக3மாயாஸமாவ்ருத:

மூடோ4ऽயம் நாபி4ஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் ।। 25 ।।


योग माया समावृत:  யோக3 மாயா ஸமாவ்ருத:  முக்குணத்துடன் கூடிய மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள   अहं  அஹம்  நான்   सर्वस्य   ஸர்வஸ்ய  அனைவருக்கும்   प्रकाश:  ப்ரகாச1:  விளங்குவதில்லை  

मूढ: अयं लोक:  மூட4: அயம் லோக:  இந்த மூட உலகம்/மூடன்   अजम्  அஜம்  பிறவாத   

अव्ययम्  அவ்யயம்  அழியாத    माम्  மாம்  என்னை   अभिजानाति  அபி4ஜாநாதி  அறிகிறதில்லை.  


முக்குணத்துடன் கூடிய மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான் எல்லாருடைய அறிவுக்கும் புலப்படுவதில்லை. பிறவாத அழியாத என்னை இந்த மூட உலகம் அறிகிறதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை.


விளக்கம்:

=> நான் மறைக்கப்பட்டுள்ளேன்:

  அஹம் ப்ரகாச1: ஸர்வஸ்யஎல்லோருக்கும் நான் விளங்குவதில்லை. ப்ரகாச1: எனில் வெளிச்சத்திற்கு வருவதில்லை என்று பொருள். அவ்வளவு சுலபமாக யாரும் என் இருப்பை உணர்வது கிடையாது. தன்னை அடையாளம் காணும் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே இறைவன் வெளிச்சத்திற்கு வருகிறாரே தவிர அனைவருக்கும் அல்ல. ஏன்?

முக்குணத்துடன் கூடிய மாயையினால் நன்கு மறைக்கப்பட்டுள்ளேன்யோக3 மாயா ஸமாவ்ருத:. எதனாலும் மறைக்கப்படாத சூரியன் மேகத்தால் மறைக்கப்பட்டது போலத் தென்படுகிறது. தன்னை மறைப்பது போலத் தென்படும் மேகத்தின் இருப்பிடத்தையே விளக்கவல்லது சூரியன். அதன் பிரகாசத்தாலன்றி மேகத்தைக் காண முடியாது. முக்குணத்தாலாகிய பிரகிருதி சர்வேசுவரனுடைய யோகமாயை. அவரைவிட்டு மாயை பிரிந்திருக்க முடியாதாதலால் அதற்கு யோகம் என்ற அடைமொழி வழங்கப்படுகிறது. சூரியப் பிரகாசத்தால் உண்டாகும் மேகம் சூரியனை மறைப்பது போல ஈஷ்வரனுடைய யோகமாயை அவரது அகண்ட சச்சிதானந்த சொரூபத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. ஆதலால் அறிவிலிகளுக்கு அவர் ஒரு சாதாரண ஜீவன்போல, பிருந்தாவனத்திலிருந்து வந்த ஒரு சாதாரண மனிதனைப் போல தென்படுகிறார். பகவானின் மேலான தத்துவத்தை அவரது உண்மையான சொரூபத்தை அவர்கள் அறிவதில்லை.

=> ஏன் அறிவதில்லை?

மூட4: அயம் லோக: மாம் அபி4ஜாநாதிமோஹமடைந்த காரணத்தினால் இந்த உலகம் என்னை அறிகிறதில்லை. உண்மையில் இந்த ஸ்தூலமான உலகயோ, உடலையோ அல்லது சைத்தன்ய ஆத்மாவையோ மோஹப்படுத்த முடியாது. எனில் பகவான் இங்கு எதைக் குறிப்பிடுகிறார்? ‘லோக:’ — எதன் மூலம் ஒன்று அறியப்படுகிறதோ அனுபவிக்கப்படுகிறதோ அது லோகம் என வரையறுக்கப்படுகிறதுலோக்யதே அநேந இதி. எனில் அது சைத்தன்ய-ஆத்மாவா அல்லது சைத்தன்யத்தினால் அறிபவன் எனும் நிலையை அடைந்த மனமா? இங்கு லோக என்பது அறிபவன்(ப்ரமாத்ரு சைத்தன்யம்), எந்த ஒன்றினால் பொருளானது அறியப்படுகிறதோ அது. எனவே அது மனதைக் குறிக்கின்றது

மனமானது இயல்பாகவே மாயையினால் மூடப்பட்டுள்ளதால் அவன் மோஹத்தை, உண்மையான சொரூபத்தை குறித்த குழப்பதை அடைவதால் என்னை அறிவதில்லை. இந்த உலகிலேயே மோஹத்திற்கு உள்ளாகும் ஒரே விஷயம் மனம்(அந்தகரண) மட்டுமே. எல்லா குழப்பங்களும் அங்குதான் வசிக்கின்றன. உண்மையில் மேகத்தால் சூரியனை மறைக்கமுடியாது. சூரியனைப் பார்க்கின்ற நமது திருஷ்டியையே மேகம் மறைக்கிறது. அதுபோலவே ஈஷ்வரனாக விளங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவை எதனாலும் மறைக்க இயலாது. ஐக்கியத்தை அறியும் கரணமாக விளங்கும் மனதையே இந்த யோகமாயை மறைக்கின்றது.

இங்கே அபி4ஜாநாதி என்பது நல்லதொரு சொற்பிரயோகம். ஜாநாதி எனில்அவனுக்குத் தெரியும்’; அபி4ஜாநாதி எனில்அவனுக்குச் சரியாகத் தெரியும்’. ‘ அபி4ஜாநாதிஎனில்அவனுக்குச் சரியாகத் தெரியாது’. 


=> எது தெரிவதில்லை?

எப்படிப்பட்ட என்னை அவனுக்கு சரியாகத் தெரியவில்லை? யார் அந்தநான்’? எனில், பிறக்காத சுயம் - அஜம். தோற்றமற்ற என்னை அறிவதில்லை. அறியாமை(அக்ஞானம்) போன்ற சில விஷயங்களுக்குப் பிறப்பில்லை எனினும் அவைகள் கண்டிப்பாக இறப்பிற்குட்பட்டது. ஏன் அறியாமைக்கு ஆரம்பம் இல்லை? ஒருகால் அறியாமைக்கு தொடக்கம் என்ற ஒன்று இருந்தால், அது தோன்றுவதற்கு முன்பே அதற்கு எதிரான இயல்புடைய ஒன்று அங்கு இருந்திருக்க வேண்டும். அறியாமைக்கு எதிரானது அறிவாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் அறிவு இருந்தால் அறியாமை எப்படி வரும்? எனவேதான் அறியாமைக்கு தொடக்கம் இல்லை, ஆனால் கண்டிப்பாக முடிவு உண்டு. ஆத்மாவை பற்றிய அறியாமையோ அல்லது வேறு எந்தவொரு விஷயத்தைப் பற்றிய அறியாமைக்கும் ஆரம்பம் இல்லை, ஆனால் அது அறியப்படும்போது அறியாமை முடிவை அடைகிறது

ஆத்மாவும் பிறப்பற்றது; தொடக்கமற்றது. அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தோன்றியிருந்தால் அதை கவனிக்க யாராவது இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் அது பிறந்தது என்று நமக்கு எப்படித் தெரியும்? ஆத்மாவின் பிறப்பை பார்த்தவன் ஒரு உணர்வுசொரூபமாகத் தான் இருக்கமுடியும்; ஆனால் அதுதானே ஆத்மா. ஆத்மா ஒரே நேரத்தில், இருந்துகொண்டும் தனது சொந்த இருப்பு இல்லாததை அறியவும் முடியாது. மேலும் ஆத்மா தொடர்ந்து இருக்கும்போது, அது இல்லாததாக ஆகி மீண்டும் அடுத்தடுத்த பிறப்பு எடுக்கவும் வாய்ப்பில்லை. இந்த காரணத்திற்காக ஆத்மா பிறப்பற்றது.  

ஆத்மா தொடக்கமற்றது, ஆனால் அறியாமையை போலல்லாமல் இது முடிவும் அற்றது. இது அவ்யயம், மாறாதது - வ்யதி இதி அவ்யயம். அதற்கு வீழ்ச்சியும் இல்லை, அழிவும் இல்லை. ‘அவர்கள் என்னைப் பிறக்காதவனாகவும், அழியாதவனாகவும், நித்தியமானவனாகவும் அறிகிறதில்லைஎன்கிறார் கிருஷ்ணர்.

மோஹத்தினால் நாமரூபத்தில் திருஷ்டி சென்றுவிட்டதால், அவைகளுக்கு அதிஷ்டானமாக விளங்கும் ஸத் வஸ்துவை இந்த ஜீவன் விட்டுவிட்டான். நாய் வடிவிலுள்ள கற்சிலையைப் பார்க்கும் ஒருவனுக்கு, ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’. அதுபோல ஸத் வஸ்துவில் திருஷ்டி செல்லும்போது நாமரூபம் சென்றுவிடும், நாமரூப திருஷ்டியினால் ஸத் வஸ்து மறைக்கப்படுகிறது.

=> இனியொரு விளக்கம்

இதுவரை நாம் பார்த்த விளக்கத்தில், முக்குணத்துடன் கூடிய மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள பகவானின் சொரூபம் அனைவருக்கும் புலப்படுவதில்லை. உண்மையில் பிறவாத அழியாத அவரை இந்த மூட உலகம் சரியாக அறிவதில்லை. இதை இனியொரு கோணத்திலும் விளக்கலாம்:

நான் எல்லாருக்கும் புலப்படுவதில்லை. முக்குணத்துடன் கூடிய மாயையினால் மூடப்பட்டவனாக மோஹத்தை அடைந்தவன், பிறவாத அழியாத என்னைச் சரியாக அறிவதில்லை


=> பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும் இந்த யோக மாயையினால் மூடப்பட்டுள்ளாரா?

கண்டிப்பாக இல்லை. ஈஷ்வரன் ஒரு மாயாவி. இந்த யோகமாயை அவரது உபாதி; அதன் மூன்று குணங்களும் அவருக்கு மஹிமைகள் ஆகின்றன; எனவே அது அவரை எந்த வகையிலும் பிணைக்கவோ அல்லது தடுக்கவோ முடியாது. யோகமாயையைக் கொண்டு இந்த அனைத்து நாமரூபங்களையும் அவர் உருவாக்குகிறார். அவைகளை பகுப்பாய்வு செய்து பார்த்தால் உண்மையில் அவைகள் இல்லை. இருப்பதெல்லாம் சைத்தன்யமான ஈஷ்வரன் மட்டுமே. இதுவே அவரின் மாயமந்திரம்.

ஒரு மாயாவியின் மாயவித்தையில் மற்ற அனைவரும் மயங்கினாலும் அது ஒரு வித்தை என்பது அந்த மாயாவிக்கு நன்கு தெரியும். அதுபோலவே ஈஷ்வரன் ஒரு மிகப் பெரிய மாயாவி. மயக்கம் முழுவதும் மற்றவர்களைச் சார்ந்தது. இறைவனோ சர்வக்ஞன். இக்கருத்தை அடுத்த சுலோகத்தில் தொடர்கிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||7.26|| அந்த மாயை என்னிடம் வேலை செய்வதில்லை:

वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन

भविष्याणि भूतानि मां तु वेद कश्चन ।। २६ ।।

வேதா3ஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந  

4விஷ்யாணி பூ4தாநி மாம் து வேத3 கச்1சந ।। 26 ।।


अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா   समतीतानि  ஸமதீதாநி  சென்றனவும்   वर्तमानानि  வர்தமாநாநி   இருப்பனவும்   भविष्याणि   4விஷ்யாணி ச  வருவனவும் ஆகிய   भूतानि  பூ4தாநி  உயிர்களை   

अहं वेद  அஹம் வேத3  நான் அறிவேன்   तु  து  ஆனால்   कश्चन   கச்1சந  யாரும்   माम्  மாம்  என்னை   

वेद  ந வேதஅறியார்.


அர்ஜுனா, சென்றனவும் இருப்பனவும் வருவனவும் ஆகிய உயிர்களையெல்லாம் நான் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறியார்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர்.


விளக்கம்:

இதற்கு முன்பு என்ன நடந்தது(ஸமதீதாநி) என்பதை நான் அறிவேன் என்கிறார் பகவான். அதீதாநி எனில் முன்பு சென்றது, அதில்ஸம்என்று முன்னொட்டுமுன்பு சென்ற ஒவ்வொரு விஷயத்தையும்என்ற பொருளைத் தருகிறது. பூ4தாநி எனில்அனைத்துயிர்கள்’. அர்ஜுநா, மேலும் இப்பொழுது இருக்கின்ற அனைத்தையும்(வர்தமாநாநி ) மற்றும் வெவ்வேறு வடிவங்களில் இனி பிறக்கப் போகும் அனைத்து உயிரினங்களையும்(4விஷ்யாணி ) நான் அறிவேன்.

ஆனால் என்னை அறிந்தவர்கள் யாரும் இல்லைமாம் து வேத3 கச்1சந, என்கிறார். இறைவனுடைய அடைக்கலத்தை அடைந்தவனைத் தவிர, இறைவனைத் தனது மிக நெருக்கமான சுயம் எனப் புரிந்தவனைத் தவிர வேறு யாரும் இறைவனை அறிய மாட்டார்கள் என சங்கரர் கூறுகிறார்.


=> ஈஷ்வர தத்துவம்:

ஈஷ்வரன் என்பது ப்ரம்மமும் மாயையும் சேர்ந்த தத்துவம், மாயையினால் வரையறுக்கப்பட்டதைப் போன்ற சைத்தன்யம்மாயா அவச்சிந்ந சைத்தன்ய. மாயையை உபாதியாக கொண்ட ப்ரம்மம் ஈஷ்வரன் ஆகும். எனில் ஈஷ்வரனுக்கும் ப்ரம்மனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? மாயை என்பது முற்றிலும் ப்ரம்மத்தை சார்ந்துள்ளது; ப்ரம்மம் இல்லாத மாயையைக்கு இருப்பு இல்லை. ஒன்றைச் சார்ந்து இருக்கும் எதுவும் மித்யா என்பதால் மாயை மித்யா. மாயையின் மெய்மையாக இருப்பது ப்ரம்மம். ஈஷ்வரன் என்பது மாயையுடன் கூடிய ப்ரம்மம்; ப்ரம்மமேயன்றி வேறில்லை

இந்த உலகில் நாம் பார்த்து அனுபவிக்கும் எந்தவொரு பொருளும் தனது மெய்மைக்கு இனியொன்றைச் சார்ந்து இருப்பதை பார்க்கின்றோம். உதாரணமாக நாற்காலி, மரக்கட்டையைச் சார்ந்தும், மரக்கட்டை மரத்தை சார்ந்தும், மரம் என்பது விதையைச் சார்ந்தும், விதை தனது வளர்ச்சிக்கு சூழ்நிலையை சார்ந்தும் என சென்று கொண்டேயிருக்கிறது. எதையும் சாராத தனித்துவமான ஒன்று என இவ்வுலகில் எந்தப் பொருளுமில்லை. இந்த மித்யாவான உலகத்தை உருவாக்க, ஈஷ்வரனுக்கு ஒரு மித்யா மூலக்காரணம் தேவை. அது இந்த மாயை. எல்லையற்ற சைத்தன்யமானது, அனைத்தையும் அறிந்த ஸர்வஞ:, எல்லா சக்தியையும் கொண்டிருக்கும் ஸர்வ-சக்திமான், உலகிற்கு காரணமான ஸர்வ-சிருஷ்டி-கர்த்தா எனப் பலவாறு தோன்றுவதற்கு காரணமான காரணி இந்த மாயை. அந்த ப்ரம்மம், சைத்தன்ய சொரூபம், ஆத்மா, மாயையுடன் சேரும் போது அது சிருஷ்டி காரணமாகிறது.

எந்த மாயா-உபாதியினால் ஈஷ்வரன் என்று அழைக்கப்படுகின்றாரோ அதுவே இந்த முழு உலகத்திற்கும் உபாதான காரணமாக ஆகிறது. இந்த மாயை மாற்றங்களுக்கு உள்ளாகி வேற்றுமைகளுடன் கூடிய இந்த உலகாக மாறுவதால் இது பரிணாமி-உபாதான-காரணம் ஆகும். இந்த முழு உலகமும் மாயை; மாயை என்பது ஈஷ்வரன்; ஈஷ்வரன் என்பது சித் சொரூபமான ப்ரம்மமன்றி வேறில்லை. எந்தவித மாற்றத்திற்கும் உள்ளாகாத இந்த ப்ரம்மமே தனது பிரக்ஞை சொரூபத்தினால் எல்லாவித மாற்றங்களையும் சாத்தியமாக்குகிறது. எனவே ப்ரம்மம், விவர்த-உபாதான-காரணம் ஆகும். ஆகவே ப்ரம்மமே இந்த முழு உலகின் உபாதான மற்றும் நிமித்த காரணம் ஏனெனில் ப்ரம்மமே ஈஷ்வரன்.


=> ஈஷ்வரன் அபரோக்ஷம்:

இந்த முழு உலகமும் ப்ரம்மம் எனும்போது அதில் ஒருவனது உடல், பிராணன், புலன்கள், மனம் மற்றும் இந்த ஸ்தூல சூக்ஷம உலகமும் அடங்கும். இதெல்லாம் ப்ரம்மத்தைத் தவிர வேறில்லைஸர்வம் கலு இதம் ப்ரம்ம, இங்கே வேறு எதுவும் இல்லை - நேஹ நாநா அஸ்தி கிஞ்சந

எனவே இவைகளனைத்தும், அதாவது என்னுடைய மற்றும் உங்களுடைய உடல், பிராணன், புலன்கள், மனம், புத்தி, ஞாபகங்கள் என அனைத்தும் ஈஷ்வர-உபாதி. இவைகளனைத்தையும் விளக்கிக் கொண்டுள்ளநான்எனும் பிரக்ஞையே ப்ரம்மம், சைத்தன்ய சொரூபம். இந்த உணர்வுசொரூபத்திற்கு வேறாக வேறெதுவும்நான்அல்ல. இந்தநான்எனும் சித் சொரூபமே ப்ரம்மம், இதுவே ஈஷ்வரன். ஈஷ்வரன் எங்கு உள்ளார்? பிரக்ஞை வடிவாக, எனது சுயமாக இருக்கிறார். அனைத்தும் ஈஷ்வரனே; ஆகவே அனைத்தும் நானாகிய சுயமே. இவ்விதம் தனியொருவனுக்கும் ஈஷ்வரனுக்கும் இடையேயான வித்தியாசமின்மையையே ஜீவ-ஈஷ்வர-அபே4 என்றழைக்கப்படும். ஈஷ்வரன் என்பது உணர்வுசொரூபமான ப்ரம்மத்தை தவிர வேறில்லை; அந்த பிரக்ஞை சொரூபமேநான்எனும் சுயம். இதுவே அபரோக்ஷம்.

அறிவு இல்லாதவன் மட்டுமே ஈஷ்வரனை பரோக்ஷமாக, எங்கோ ஒரு லோகத்தில் அமர்ந்திருக்கின்ற தன்னிலிருந்து வேறான ஒரு தெய்வமாகப் பார்க்கின்றான். உண்மையில் ஈஷ்வரன் பரோக்ஷம் அல்ல. ஆகவே பரோக்ஷமாக ஈஷ்வரனை அறிந்தவன், உண்மையில் அவரை அறிந்தவன் அல்ல.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஜலம் கலந்த பாலிலிருந்து ஜலம் வேறு, பால் வேறாகப் பிரிக்கக்கூடிய அன்னப்பறவை, பாலைமட்டும் குடித்து நீரைத் தள்ளி விடுகிறது. ஆனால் மற்ற பறவைகளுக்கு இப்படிச் செய்யச் சக்தியில்லை. ஈஷ்வரன் மாயையோடு இரண்டறக் கலந்திருக்கின்றார். சாதாரண மனுஷ்யர்களுக்கு மாயையினின்றும் தனித்து அவரைக் காணச் சக்தியில்லை. பரமஹம்ஸர்கள் மட்டுமே மாயையை அகற்றி விட்டுச் சுத்தாத்மாவான ஈஷ்வரனைப் பற்றிக்கொள்ளச் சக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------