செவ்வாய், 4 ஏப்ரல், 2023

ஞானவிக்ஞான யோகம் 7.23 - 7.24

||7.23|| அவர்கள் வேண்டுவது நிலையற்ற பொருள்களாதலால்:

अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम्

देवान्देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि ।। २३ ।।

அந்தவத்து 2லம் தேஷாம் தத்34வத்யல்பமேத4ஸாம்  

தே3வாந்தே3வயஜோ யாந்தி மத்34க்தா யாந்தி மாமபி ।। 23 ।।


तु  து  ஆனால்   अल्पमेधसाम् तेषाम्  அல்பமேத4ஸாம் தேஷாம்  அற்பமான புத்தியை உடையவர்களின்   

तत् फलं  தத் 2லம்  அந்த பலன்   अन्तवत् भवति  அந்தவத் 4வதி  முடிவிற்குட்பட்டதாக உள்ளது   

देवयज: தே3வயஜ:  தேவர்களை வணங்குபவர்கள்   

देवान् यान्ति  தே3வாந் யாந்தி தேவர்களை அடைகின்றனர்   मद्भक्ता:  மத்34க்தா:  என் அடியார்கள்   

माम् अपि यान्ति  மாம் அபி யாந்தி  என்னையே அடைகின்றனர்.


ஆனால் அற்பமான புத்தியை உடையவர்கள் அடையும் பலன் முடிவிற்குட்பட்டதாக உள்ளது. தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களை அடைகின்றனர். என் அடியார்கள் என்னையே அடைகின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.


விளக்கம்:

ஷகாம பக்தர்கள், அதாவது துயருற்றவன்(ஆர்த:) மற்றும் பொருளின்பம் தேடுபவன்(அர்த்தார்த்தீ) போன்றோர் அடையும் பலன் முடிவிற்கு உட்பட்டது என இங்கு பகவான் கூறுகிறார்


=> சிற்றறிவாளர்:

தேஷாம் அல்பமேத4ஸாம்— ‘அல்பஎனில் சிறிய அளவு அல்லது கொஞ்சம்; ‘மேத4ஸ்எனில் சிந்திக்கும் திறன். ஆகவே அல்பமேத4: என்பது குறைவான சிந்திக்கும் மற்றும் விசாரிக்கும் திறனுடையவனைக் குறிக்கிறது. அற்பமான பலனில் நாட்டமுடையவர்களாக இருப்பதாலும் அற்பமான சிறிய தேவதைகளிடம் புத்தியை செலுத்துபவர்களாக இருப்பதாலும் அவர்கள் இவ்விதம் அழைக்கப்படுகிறார்கள். குறிப்பாக இங்கு அது குறைந்தவளவு பகுத்தறியும் விவேகம் கொண்டவர்களைக் குறிக்கிறது. அவர்கள் ஏற்கனவே பக்தர்களாக இருப்பதனால் தர்மம்-அதர்மம் குறித்த விவேகம் ஓரளவு கொண்டவர்களாக உள்ளனர். ஆனால் நிலைத்த இன்பம்-நிலையற்ற இன்பம் குறித்த விவேகம் இல்லாததே அவர்களை அற்பமான பலனை நோக்கி இழுத்துச் செல்கிறது. எனவே அவர்கள் அல்பமேத4:


=> கர்ம பலத்தின் தோஷங்கள்:

தத் 2லம் அந்தவத் 4வதிஅவர்கள் அடையும் அந்த பலன் முடிவிற்குட்பட்டது; நிலையற்றது; இடம், பொருள் மற்றும் காலம் இவற்றின் அடிப்படையில் எல்லைக்குட்பட்டது. காம்ய பக்தர்களால் அடையப்படும் எந்தவொரு பொருளும் அல்லது அதை அனுபவிக்கும் புலனுறுப்பும் அழிவிற்குட்பட்டது என்பதால் இந்த கர்மபலன் (1) அநித்யம். இதுபோன்ற கர்மபலனில் காணப்படும் மேலும் சில தோஷங்கள்:

(2) துஷ்பூரத்வம் - நிறைவுபடுத்தாது —> எந்தவொரு பொருளும் முழு நிறைவைக் கொடுத்துவிடாது. சில மணிநேரங்களிலோ அல்லது சில நாட்கள் கழித்தோ மீண்டும் வேறொரு பொருளுக்கு மனம் இயல்பாகச் செல்ல ஆரம்பித்துவிடும்

(3) பந்தகத்வம் - பந்தப்படுத்துவது —> இவைகள் நம்மை பந்தப்படுத்துமே தவிர விடுதலையைக் கொடுப்பதில்லை. அதிகப் பொருட்களைப் பயன்படுத்தப் பயன்படுத்த அது இல்லாமல் வாழும் தகுதியை இழக்கிறோம். இதனால் சார்ந்திருக்கும் எண்ணம் அதிகரித்து உடலும் மனமும் பலகீனமடைகிறது. ‘விட விட சுகம் துறவிக்கு(ஞானிக்கு), வர வர சுகம் இல்லானுக்குஎன்ற வாய்மொழிக்கு ஏற்றவாறு ஒரு பொருளை விட்டு வாழ பழகும்போது சாதகன் தனது பயணத்தில் முன்னேற்றத்தை அடைகிறான். ஒரு பொருளை அடைதல் லெளகிகவாதிக்கு முன்னேற்றம்; ஆனால் ஒரு பொருளை விடுதலே சாதகனுக்கு முன்னேற்றம்

(4) ஆயாஸவ்யர்த்தம் —> ஆயாஸம் எனில் உழைப்பு மற்றும் காலம்; வ்யர்த்தம் என்பது பயனற்றுப்போதலைக் குறிக்கும். அநாத்ம விஷயத்திற்காகச் செய்யும் முயற்சி வீண்; நிறைவைத் தருவதில்லை, முடிவிற்குட்பட்டது எனப் பார்த்தோம். பொருளுக்கு செய்யுமளவு முயற்சி மோக்ஷத்திற்கு செய்யப்படுவதில்லை. அநாத்மாவே லக்ஷியமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்


=> தேவர்களை வழிபடுபவர்கள்:

பல்வேறு தேவர்களை வழிபடுவதால் அல்லது பல்வேறு தேவதைகளை அவாகனம் செய்யும் சடங்குகளில் ஈடுபடுவதால் அவர்கள் தேவ-யஜ: என்றழைக்கப்படுகின்றனர். அத்தகைய வழிபாட்டின் விளைவாக அவர்கள் அந்த தேவர்களை அடைகிறார்கள், தே3வாந் யாந்தி. அந்த குறிப்பிட்ட தேவதையின் லோகத்திற்குச் சென்று தேவதைகளாகவும், சொர்க்கவாசிகளாகவும் மாறுகிறார்கள். உதாரணமாக ஒருவன் இந்திரனை வழிபட்டால் அவன் இந்திர லோகத்திற்குச் சென்று அந்த உலகில் மற்றுமொரு தேவனாக மாறுகிறான். ஆனால் அந்த தேவனும் ஒரு வகையில் ஜீவனே

நிச்சயமாக சொர்க்கம் என்பது ஒரு வரையறைக்குட்பட்ட முடிவு ஆகும். கர்மங்களினால் ஒருவன் பெறக்கூடிய அதிகபட்சம் பலன் இதுதான். அங்கு அவன் தேவர்களின் அரண்மனைகளில் பணியாளாகக்கூட இருக்கலாம் யாரறிவர். அங்குள்ள தேவர்களே இந்திரனையும், இந்திரன் தனது குருவாகிய பிரஹஸ்பதியையும் மேலானவராகப் பார்ப்பது நடக்கின்றது. இவைகளனைத்தும் இடங்கள், நிலைகள் என்பதால் வெறும் உபாதிகள். எனவே, அவற்றை அனுபவிப்பவர்கள் வெறும் ஜீவர்கள். அவர்கள் தேவலோகத்தில் சிறந்த சக்திகளும், சிறந்த புலனுறுப்புகளும், மற்றும் போகத்தை நன்கு அனுபவிக்கும் திறனும் கொண்டிருக்கலாம்; ஆனால் அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. பின்னர் ஒரு சுலோகத்தில் கிருஷ்ணர் சொல்லப் போகிறார், ‘அவர்களுக்கு அங்கு கிடைத்த புண்ணியம் தீர்ந்தவுடன், அவர்கள் அந்த குறிப்பிட்ட லோகத்தை விட்டு வெளியேறி மனுஷ்ய லோகத்தில் நுழைவார்கள் - க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விசந்தி’.


=> ஈஷ்வரனை வேண்டுபவர்கள்:

மத்34க்தா: மாம் அபி யாந்திஅதேசமயம் என் அடியார்கள், என்னை அடைய விரும்பும் பக்தர்கள் என்னையே அடைகிறார்கள்; அவர்கள் நானாகவே மாறுகிறார்கள். பரமேஷ்வரன் என்றால் என்ன, ஆத்மா என்பது என்ன என அறிய விரும்புபவர்கள், பரமேஷ்வரனே ஆத்மாவாக இருப்பதால் அவர்கள் நானாகவே மாறுகிறார்கள். ஏற்கனவே பகவானால் சொல்லப்பட்டது இங்கே மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. இவைகளனைத்தும் வாசுதேவனே, வாசுதேவ: ஸர்வம் என்று அறிந்தவர்கள் மஹாத்மாக்களாக ஆகிவிடுகிறார்கள்

மாம்_ நான்என்ற வார்த்தையின் அர்த்தத்தை கிருஷ்ணர் ஏற்கனவே விளக்கியுள்ளார். அதாவது, எல்லாவற்றின் சுயமாக இருக்கின்ற மற்றும் ஒரு ஞானி தனது சுயசொரூபமென அறிகின்ற அந்த பரமாத்மாவின் நிலைபாட்டிலிருந்தே இந்த முழு விளக்கமும் கொடுக்கப்படுகிறது


=> ஒரே அளவு முயற்சி, முற்றிலும் வேறுபட்ட பலன்:

ஒரே மாதிரியான முயற்சியை மேற்கொண்டபோதிலும், பலனில் பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதை சங்கரர் இங்கே சுட்டிக்காட்டுகிறார். ஒரு குறிப்பிட்ட பலனைக் குறித்த யக்ஞம் அல்லது வேதச்சடங்குகள் செய்வது நிறைய முயற்சிகளை உள்ளடக்கியது. உடல், காய-கர்ம; வாய்வழி, வாசிக-கர்ம; மற்றும் மனம், மானஸ-கர்ம என்ற மூன்று நிலைகளிலும் உழைக்கவேண்டும். வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதும், அதை முறையாக மிகுந்த கவனத்துடன் செய்வதும், பின்னர் அந்த யஜமானின் செல்வத்தை சரியான பாவனையில் விநியோகிப்பதும், பொருத்தமான மந்திரங்களை உச்சரிப்பதும் சரியாகச் செய்யப்பட வேண்டும். சிலவற்றில் தெய்வத்தின் மீது தியானம் பரிந்துரைக்கப்படுகிறது, அதுவும் அவ்வளவு எளிதானது அல்ல.

பரமேஷ்வரனைப் பற்றிய புரிதலை அடைவதிலும் முயற்சிகள் உண்டு. ஆத்ம-ஞானத்தைப் பின்தொடர்வதில் ஒருவன் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்; அதற்குத் தேவையான புலனடக்கம் மற்றும் மனவடக்கம் உள்ளிட்ட ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும். பின்னர் சமஸ்கிருத மொழிப் படிப்பும், மேலும் அந்த காலங்களில் தர்க்கவியல் படிப்பும் இருந்தது. வேதாந்தத்தை பயில, ஒரு குறிப்பிட்ட அறிவுசார் ஒழுக்கம் தேவைப்படுவதால், முந்தய காலங்களில் அது தர்க்கம் மற்றும் இலக்கணம் பற்றிய ஆய்வு மூலம் பெறப்பட்டது. இக்கால கட்டத்தில் ஒருவன் பயிலும் பொதுக் கல்வியில் இருக்கும் சில தர்க்கங்கள் போதுமானதாக இருப்பதாகக் கருதப்படுகிறது. சமஸ்கிருத இலக்கணத்தைப் படிப்பது சரியாகச் சிந்திக்கும் திறனை வளர்க்கிறது. எனவே இதற்கெல்லாம் முயற்சி தேவை.

இவ்விதம் யக்ஞம் முதலிய வேதச்சடங்குக்காக ஒருவன் நிறைய முயற்சிகளில் ஈடுபடுகிறான், ஒருவன் இந்த ஆத்ம விசாரணைக்காக நிறைய முயற்சிகள் செய்கிறான். முந்தையவன் வரையறைக்குட்பட்ட முடிவை பெறுகிறான்; பிந்தையவன் அடையும் பலனோ எல்லையற்றதுஎனவே தேவதைகளை வணங்குவதிலும் பரமேஷ்வரனை வணங்குவதிலும் முயற்சி ஒன்றே; பலன் வேறுபட்டது. அதே முயற்சியால் அந்தமில்லா ஆனந்தத்தைப் பெறுவதற்குப் பதிலாக அற்பமான சுகத்தைப் பெறுபவர்கள் சிற்றறிவாளர் ஆகின்றனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||7.24|| முழுமுதற் பொருளை எல்லோரும் ஏன் வணங்குவதில்லை என்பதற்கான விடை:

अव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ते मामबुद्धय:

परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम् ।। २४ ।। 

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபு3த்34:  

பரம் பா4வமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் ।। 24 ।।


मम  மம  என்னுடைய   अव्ययं  அவ்யயம்  அழிவற்ற   अनुत्तमम्  அநுத்தமம்  ஒப்பற்ற   

परम् भावम्  பரம் பா4வம்  மேலான சொரூபத்தை   

अजानन्त: अबुद्धय:  அஜாநந்த: அபு3த்34:  அறியாத அறிவிலிகள்  

अव्यक्तं माम्  அவ்யக்தம் மாம்  வெளித்தோற்றத்திற்கு வராத என்னை   

व्यक्तिम् पन्नं   வ்யக்திம் ஆபந்நம்  புலன்களுக்கு தென்படும் இயல்பை அடைந்ததாக   

मन्यन्ते  மந்யந்தே  நினைக்கிறார்கள்.


என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பர சொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னை புலன்களுக்கு தென்படும் இயல்பை அடைந்தவனாக நினைக்கிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தம மாகிய பரநிலையை அன்னார் அறிகிலர்.


விளக்கம்:

பரா பிரக்ருதியின் சொரூபத்தை சுலோகம் 24 முதல் 26 வரை பகவான் விளக்குகிறார். இந்த சுலோகத்தில் பரா பிரக்ருதியின் நான்கு லக்ஷணங்களை எடுத்துக் கூறி, புத்தியில்லாதவர்கள் இப்படிப்பட்ட என்னை அறிவதில்லை என்கிறார்


=> பரசொரூபத்தின் நான்கு லக்ஷணங்கள்:

(1) அவ்யக்தம் - இந்திரியங்களினால் அறியமுடியாதது. எந்தவிதமான ப்ரமாணங்களினாலும் அறியமுடியாது, அப்ரமேயம். ஏனெனில் அது ஸ்வப்ரகாச:, அதாவது சுயமாக விளங்கும் தன்மையுடையது என்பதால் புலனுறுப்புகள் அனுமானம் உள்ளிட்ட எந்த ப்ரமாணமும் அதை விளக்கத் தேவையில்லை.

* த்ருக் சொரூபம் - இருளையும் ஒளியையும் விளக்கும் சைத்தன்ய தத்துவமாக இருப்பதால் அது ஞானத்திற்கு விஷயமாக இல்லை; மாறாக ஞான சொரூபமாகவே இருக்கிறது.

(2) பரம் பா4வம் - மேலான ஸத்யம்; பாரமார்த்திக ஸத்யம்; மாறாத உண்மை; என்றுமுள்ளது.

(3) அவ்யயம் - அழியாதது; தேயாததது; மாற்றத்தை அடையாதது. வ்யயம் எனில் செலவு, தேய்வு, அழிவு. ஏன் அழியாதது? அவையவங்கள் அதாவது எவ்வித உறுப்புகளோ பகுதிகளோ இல்லாத ஏக சொரூபம் என்பதனால் இதற்கு அழிவில்லை. அத்வைதம், இரண்டற்றது. மேலான சொரூபமாக இருப்பதால் அதை வெளியிலிருந்து நாசப்படுத்த முடியாது. நாசப்படுத்தும் கருவிகளாக நாம் அறியும் அனைத்தும் உண்மையில் அந்த பரசொரூபத்தைச் சார்ந்து இருக்கின்றன.

(4) அநுத்தமம் - இதற்கு மேல் உத்தமமானது, அடையக் கூடியது என எதுவும் இல்லை. நிரதிஷயம், அதாவது அதற்கு மேல் என ஒன்று இல்லாத நிலை

ஸ்தூல நோயான பசிக்கு உணவெனும் பதார்த்தம் பரிகாரமாகவுள்ளது. சம்சாரம், மனநிறைவின்மை என்பது ஒரு சூக்ஷம நோய். இந்த மன நோயை ஸ்தூல பொருட்களினால் எப்படி நிறைவுபடுத்தமுடியும்? சூக்ஷமமான ஞானத்தை கொண்டே அதைச் செய்யமுடியும்.


=> அறிவிலிகள்:

அபு3த்34: எனில் போதிய விவேகம் இல்லாதவர்கள் அல்லது குறைந்த அளவு பகுத்தறியும் விவேகத்தைக் கொண்டவர்கள் என்று பொருள். மந்தமான அறிவை உடைய இந்த பக்தர்கள், பரசொரூபமான என்னை கிருஷ்ணனின் வடிவத்தில் வந்த விஷ்ணுவாகப் பார்க்கிறார்கள்

அவ்யக்தம் மாம் வ்யக்திம் ஆபந்நம்அவ்யக்தமான என்னை வ்யக்தமானவனாக பார்க்கிறார்கள். ‘அவ்யக்தம்என்பதற்கு இரு பொருளுண்டு. சங்கரர் இங்கே அதை, (1)  ‘அப்ரகாச1_ஒரு பொருளாக தெரியாதஎனும் அர்த்தத்தில் எடுத்துக் கொள்கிறார். அதாவது புலனுறுப்புகளால் நேரடியாக அறியமுடியாதது, இந்திரிய அகோ3சரம்(अगोचर). (2) அவ்யக்த எனில் வெளித்தோற்றத்திற்கு வராதது. குறைந்த அளவு விவேகத்தையுடைய இந்த பக்தர்கள் புலனுறுப்புகளால் அறிய முடியாத, வெளித்தோற்றத்திற்கு வராத என்னை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வந்துள்ளதாக நினைக்கிறார்கள், வ்யக்திம் ஆபந்நம் மந்யந்தே

ஏன் அவ்விதம் கருதுகிறார்கள்? எனது மேலான சொரூபத்தை அவர்கள் அறியவில்லைமம பரம் பா4வம் அஜாநந்த:. நான் அவர்களிடமிருந்து தொலைதூரத்தில் எங்கோ ஒரு லோகத்தில் இருக்கின்ற ஒருவன் என்றும் ஒரு குறிப்பிட்ட உடலை எடுத்துக்கொண்டு வேறொரு இடத்திலிருந்து வந்திருப்பதாகவும் நினைக்கிறார்கள். உண்மையில், இந்த முழு உலகமும் நானே; அனைவரின் ஆத்மாவாக இருப்பவனும் நானே. அழிவற்ற எனது உண்மையான இயல்பிற்கு அப்பால் பெரிதாக எதுவும் இல்லைஅவ்யயம் அநுத்தமம். இந்த வழியில் என்னை அறியாமல், அவர்கள் என்னை ஒரு கொடுக்கப்பட்ட வடிவம் என்று கருதுகின்றனர்

இந்த அறியாமைக்கு என்ன காரணம்? அவர்கள் ஏன் சிறிய பலன்களை எதிர்பார்த்து மற்ற தெய்வங்களைப் பின்தொடர்கிறார்கள்? மக்கள் ஏன் இறைவனை நேரடியாகத் தேடுவதில்லை? போன்ற கேள்விகளை சங்கரர் கேட்டு அதற்கான விடையை கிருஷ்ணர் அடுத்த சுலோகத்தில் உரைப்பதாகக் குறிப்பிடுகிறார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------