செவ்வாய், 18 ஏப்ரல், 2023

ஞானவிக்ஞான யோகம் 7.27 - 7.28

||7.27|| மக்களது அறியாமைக்கும் பக்தியின்மைக்கும் காரணம்:

इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन भारत

सर्वभूतानि संमोहं सर्गे यान्ति परन्तप ।। २७ ।।

இச்சா2த்3வேஷஸமுத்தே2 த்3வந்த்3வமோஹேந பா4ரத  

ஸர்வபூ4தாநி ஸம்மோஹம் ஸர்கே3 யாந்தி பரந்தப ।। 27 ।।


भारत  பா4ரத  பரத குலத்தில் பிறந்தவனே!   परन्तप  பரந்தப  பகைவரை வாட்டுபவனே!   

इच्छा द्वेष समुत्थेन  இச்சா2 த்3வேஷ ஸமுத்தே2  விருப்பு வெறுப்பிலிருந்து உண்டாகும்    

द्वन्द्व मोहेन  த்3வந்த்3 மோஹேந  இருமை மோஹத்தால்   सर्वभूतानि  ஸர்வபூ4தாநி   எல்லா உயிர்களும்    सर्गे  ஸர்கே3  பிறக்கும்பொழுதே   संमोहं यान्ति   ஸம்மோஹம் யாந்தி  குழப்பமடைகின்றன.


பகைவரை வாட்டுகின்ற பாரதா, விருப்பு வெறுப்பிலிருந்து உண்டாகும் இருமை மோஹத்தால் பிறக்கும்பொழுதே எல்லா உயிர்களும் குழப்பமடைகின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், பாரதா, எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன, பகைவரைச் சுடுவோய்.


விளக்கம்:

ஒருவனின் ஞானத்திற்கு தடையாகயிருப்பது எது என்பதை சம்சாரத்தின் துவக்கத்தை பற்றிக் கூறுவதன் மூலம் பகவான் விளக்குகிறார். ஸர்வபூ4தாநி ஸம்மோஹம் ஸர்கே3 யாந்திஇந்த படைப்பில் உள்ள அனைத்து உயிரினங்களும், படைப்பின் தொடக்கத்திலிருந்தே மோஹத்தை அடைகின்றன. அதாவது பிறக்கும்பொழுதே விவேக சக்தியை இழந்த நிலையில், புத்தியில் மோஹத்துடன் குழப்பத்துடன் பிறக்கிறார்கள். அந்த குழப்பம் என்ன, அது எப்படி ஏற்படுகிறது? இருமை நிமித்தமான மோஹத்தினால், த்3வந்த்3 மோஹேந. அந்த இருமை என்ன, அவை எங்கிருந்து வருகின்றன? அவை விருப்பு மற்றும் வெறுப்பிலிருந்து எழுகின்றன, இச்சா2 த்3வேஷ ஸமுத்தே2. இந்த விருப்பு வெறுப்புகள் உறுதியான எதிர்நிலைகளை உருவாக்குவதால், அதிலிருந்து மயக்கம்(மோஹம்) பிறக்கின்றது.

=> ஞானத்திற்கு தடை:

உண்மையில் மோக்ஷத்தை அடைய வேண்டியது யார்

* ஆத்மா மோக்ஷத்தை அடைய வேண்டியதில்லை. அது எப்பொழுது சம்சாரியாக இருந்தது மோக்ஷத்தை அடைய

* எந்தவொரு ஜடப்பொருளும் முக்தியை அடையத் தேவையில்லை.

* எனில் யார் சம்சாரி? யாருக்கு முக்தி? ஒருவனது மனம். விருப்பு-வெறுப்பு எனும் இருமையில் கட்டுண்ட சம்சாரியான இந்த மனம்தான் அவனது ஞானத்திற்கு தடையாக இருக்கின்றது. இந்த மனதிலேதான் ஞானமும் ஞானநிஷ்டையும் ஏற்பட வேண்டும்.


=> எப்படி நம் மனம் ஞானத்திற்கு தடை?

      த்3வந்த்3 ஆத்மகம் ஜகத்உலகம் இருமை சொரூபமானது. இங்கு எந்தவொரு விஷயத்திற்கும் எதிர்பதம் உள்ளது. அடிப்படையில் நன்மை(ஹிதம்), தீமை(அஹிதம்) என்று இரண்டு இயல்புகளாக நாம் இவ்வுலகைப் பிரித்துவிட்டோம். அதாவது, இது எனக்கு உகந்தது, பிரியமானதாகையால் நன்மை; இது எனக்கு உகந்தது அல்ல, வெறுக்கத்தக்கது ஆகையால் தீமையானது. இன்பத்தை தருவது நன்மை என்றும் துன்பத்தை தருவது தீமையென்றும் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில், உலகில் இந்த இருமை இல்லை. அனைத்தும் ஈஷ்வர சிருஷ்டி எனும்போது இந்த வேறுபாடு எப்படி சாத்தியம்? ஒருவனின் மனதிலுள்ள விருப்பு வெறுப்பு எனும் இயல்புகளே இந்த இருமையை உலகின்மீது ஏற்றி வைக்கின்றன. இவை நாம் பிறக்கும்பொழுதே தோன்றியுள்ளது.

ஆகவே நமது மனம்தான் துயரத்திற்கு காரணமாக உள்ளது. மனதிலுள்ள இருமை சம்பந்தமான மோஹத்தினால்(த்3வந்த்3 மோஹேந) இந்த துயரத்திலிருந்து விடுபட அது தயாராக இல்லை. மோஹம் எனில் குழப்பம், மயக்கம், தெளிவின்மை


=> இரு வகையான மோஹம்:

(1) மனதிலுள்ள மோஹம் - நன்மையை விரும்புவது ஒருவித மயக்கத்தையும் மற்றும் தீமையை வெறுப்பது மற்றொருவித மயக்கதையும் மனதில் உண்டு பண்ணுகிறது. இந்த விருப்பு-வெறுப்பு என்னும் வில்லங்கத்துக்கு உட்பட்டவன் உலக இயல்போடு கூடிய அறிவையே உள்ளபடி பெறுவதில்லை. ஓரம் சார்தல் என்ற குற்றத்திற்கு ஆளாகின்றனர். இந்த விருப்பு வெறுப்பு நீங்கப்பெற்று நடுவு நிற்பவர்களுக்கன்றி பரஞானம், ஈஷ்வரனைப் பற்றிய உணர்வு உதிப்பதில்லை

(2) புத்தியிலுள்ள மோஹம் - மனதிற்கு வந்த மயக்கத்தின் காரணமாக நம் புத்திக்கும் மயக்கம் வந்துள்ளது. எது சரி - எது தவறு மற்றும் எது உண்மை - எது பொய் ஆகியவற்றை அறியும் திறனை இழத்தல் புத்தியில் வரும் மோஹத்தைக் குறிக்கிறது.


=> இருமை: 

உண்மையில் இருமைகளால் பிரச்சனை எதுவுமில்லை. வெப்பமோ அல்லது குளிரோ பிரச்சனை இல்லை. ஆனால் குளிர் எனக்கு பிடித்தமானது என்ற விருப்பமே சிக்கலைத் தருகிறது. அதுபோலவே வெற்றி அல்லது தோல்வி. உதாரணமாக நீங்கள் சமைத்த உணவை ருசித்துப் பார்த்து அது சரியில்லை, தோல்வி என முடிவெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் யாருக்காக சமைத்தீர்களோ அவர் அதை அற்புதமாக இருப்பதாக மெச்சுகிறார். சாதம் குழைந்து விட்டதால் அதை தோல்வி என்று நீங்களும் குழைந்த சாதம் தனக்கு மிகப் பிடித்தமானது என அவரும் நினைக்கிறார். எனில் இந்த செயல் வெற்றியா அல்லது தோல்வியா, இரண்டில் எதைக் குறிக்கிறது? அந்த நிலைபாடு முற்றிலும் ஒருவரின் எதிர்பார்ப்பைச் சார்ந்தது. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கொண்டிருக்கிறோம். அதைப் பொருத்தே வெற்றி அல்லது தோல்வி என முடிவு செய்கிறோம்.

ஆகவே இந்த இருமைகள் அனைத்தும் தனியொருவனின் விருப்பு வெறுப்பினால் உருவாக்கப்பட்டவை. வெப்பம்-குளிர், இரவு-பகல் போன்ற சில இருமைகள் ஈஷ்வரனால் உருவாக்கப்படுகின்றன. எனினும் பகல் நீடிக்க வேண்டும் இரவு நேரம் குறைய வேண்டும் போன்ற எதிர்நிலைகள், தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் உருவாக்கப்படுகிறதே தவிர ஈஷ்வரனால் அல்ல. இது வேண்டும் இது வேண்டாம் என்ற சக்திமிகுந்த இருமைகளில் மாட்டும்பொழுதே அவன் வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம் முதலிய மோஹத்தில் சிக்கிக் கொள்கிறான்


=> மோஹத்தினால் உண்டாகும் நஷ்டம்:

வலுவான விருப்பு வெறுப்புகள் பன்முக மயக்கத்தை ஏற்படுத்தி விவேக சக்தியைக் கட்டுப்படுத்துகின்றன. இது ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை பற்றிய ஞானத்தின் புரிதலைத் தடுக்கிறது. கீதையில், ஒருவனின் உளவியல் அனைத்தும் இச்சை மற்றும் த்வேசத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றது; மேலும் இதுவே ஒரு மனிதனின் அனைத்து விதமான பிரச்சனைகளையும் விளக்குவதற்கு போதுமானதாகவும் உள்ளது. விருப்பு வெறுப்புகளை ஒருவனால் சரியாக நிர்வகிக்க முடிந்தால், இந்த ஞானத்திற்கானத் தகுதியான மனம் அவனிடம் உள்ளது என்பது பொருள். ஆனால் இருமைகளிலிருந்து பிறந்த இந்த மோஹம் மக்களை முற்றிலும் ஏமாற்றுகிறது.

மேலும் இந்த விருப்பு-வெறுப்பு கவலையையும் பயத்தையும் உருவாக்குகிறது. பயம் உள்ளவன் ஒவ்வொரு கயிற்றிலும் பாம்பையும், ஒவ்வொரு தூணிலும் திருடனையும் பார்ப்பான். அதாவது இவைகளின் சக்தி, ஒரு உள்ளார்ந்த மன அழுத்தத்தை உண்டாக்கி, பலவிதமான மன நிலைமைகளை ஏற்படுத்துகின்றன. இதனால் விஷயங்களை உள்ளபடி பார்க்க இயலாததாகிறது. இதுவே மோஹம். இது ஒரு திரையைப் போல மறைத்து புத்தியை குருடாக்குகிறது. இதனால் மதிப்பில்லாதது மிகப் பெரிய மதிப்பு கொண்டாதாகத் தெரிகிறது. எது சரியானது மற்றும் முறையற்றது என்பதைக் கண்டறிய முடியாமல் போகிறது. வெளிவிஷயங்களிலேயே இந்த நிலைமை எனில் புருஷார்த்த(இலக்கு) நிச்சயமும் தெளிவாக இருக்காது; இதனால் முன்னுரிமைகளில் குழப்பங்கள் உண்டாகின்றன. இப்படியிருக்க ஆத்மஞானத்தைப் பற்றிய கேள்வி எங்கே எழப்போகிறது?

-----------------------------------------------------------------------------------------------------------------

||7.28|| இருமைகளை வெல்லும் உபாயம்:

येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणाम्

ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रता: ।। २८ ।।

யேஷாம் த்வந்தக3தம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்

தே த்3வந்த்3வமோஹநிர்முக்தா 4ஜந்தே மாம் த்3ருட4வ்ரதா: ।। 28 ।।


तु  து  ஆனால்   पुण्यकर्मणाम् येषां जनानाम्  புண்யகர்மணாம் யேஷாம் ஜநாநாம்  புண்ணிய கர்மங்களையுடைய எந்த ஜனங்களுக்கு   पापं अन्तगतं  பாபம் அந்தக3தம்  பாபம் முடிவடைகிறதோ   

द्वन्द्व मोह निर्मुक्ता:  த்3வந்த்3 மோஹ நிர்முக்தா:  இருமை மோஹத்திலிருந்து விடுதலையடைந்த  

ते  தே அவர்கள்   दृढव्रता:  த்3ருட4வ்ரதா:  உறுதியான விரதமுடையவர்களாய்   

माम् भजन्ते  மாம் 4ஜந்தே  என்னைப் பஜிக்கின்றனர்.


ஆனால் புண்ணிய கர்மங்களையுடைய எந்த ஜனங்களுக்கு பாபம் முடிவடைகிறதோ இருமை மோஹத்திலிருந்து விடுதலையடைந்த அவர்கள் உறுதியான விரதமுடையவர்களாய் என்னைப் பஜிக்கின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்.


விளக்கம்:

சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவதற்கான உபாயத்தை இந்த சுலோகத்திலிருந்து படிப்படியாக விளக்க ஆரம்பிக்கிறார். அதன் முதல் படியாக தர்மப்படி வாழ்தலை, ‘புண்யகர்மணாம்என்ற சொற்பிரயோகத்தின் மூலம் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஆனால்என்று பொருள்படும்துஎனும் சொல்லானது முந்தைய சுலோகங்களில் விவாதிக்கப்பட்டவர்களிலிருந்து இவர்களை வேறுபடுத்தும் பொருட்டு உபயோகிக்கப்படுகிறது. யேஷாம் ஜநாநாம் புண்யகர்மணாம்நல்ல கர்மங்களைச் செய்தவர்களுக்கு, அதாவது தர்மப்படி வாழ்பவர்களுக்கு என்பது பொருள். இத்தகையவர்கள் தங்களது விருப்பு வெறுப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, அதற்கு பதிலாக தங்களை புண்ணிய கர்மத்தில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இதனால் உண்டாகும் அதிருஷ்ட பலன் அவர்களது பழைய பாப கர்மங்களை நடுநிலையாக்குகின்றது. மேலும் தர்ம வாழ்க்கை மற்றும் தினசரி பிரார்த்தனைகள் வழியாக புதிய பாப-கர்மத்திலிருந்து  தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்கின்றனர். இவ்விதம் சரியான பாவனையுடன் நல்ல செயல்களைச் செய்பவர்கள் புண்ணியகர்மா என்றழைக்கபடுகின்றனர். சங்கரர் புண்ணிய-கர்ம என்பது மனதை தூய்மைப்படுத்தும் செயல்கள் என வரையறுக்கிறார்.

மேலும் இப்படிப்பட்ட எவர்களுக்கு பாப-கர்மங்கள் முடிவை அடைகின்றதோயேஷாம் பாபம் அந்தக3தம், என்கிறார் பகவான். அதாவது புண்ணிய கர்மங்களைச் செய்பவர்கள், தவறான செயல்களைச் செய்யும் பழக்கத்தை முடிவிற்கு கொண்டுவருகிறார்கள் என்பதே இதன் பொருள். பாபச் செயலைத் தவிர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை உபயோகிக்க கூடத் தேவையில்லாத அளவு முதிர்ச்சியை அடைகிறார்கள். இதனால் அவர்கள் பாபச் செயலை செய்யும் போக்கிலிருந்து விடுபடுகிறார்கள்.

 

=> பாப-கர்மத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் உபாயம்:

ஆரம்ப காலகட்டத்தில் ஒருவனது தீர்கமான விருப்ப எண்ணம் மற்றும் மனவலிமையின் மூலம் பாப-கர்மத்தை தவிர்க்க வேண்டும். சிறிது காலத்திற்கு பின் அந்த முயற்சி அவசியமில்லாததாக மாறி, பாப-கர்மத்தை தவிர்த்தல் ஒருவனது இயல்பாக மாறிவிடும். உதாரணமாக, ஒருவன் கோபத்திற்கு ஆளாகும்போது பழிவாங்கும் வார்த்தைகளை உபயோகிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறான் என வைத்துக் கொள்வோம். ஒரு நாள் அவன், ‘இனி அவற்றைப் பயன்படுத்தப் போவதில்லைஎன முடிவு செய்கிறான். ஆரம்பத்தில் குறிப்பாக கோபத்தின்போது அவ்வார்த்தைகள் நாக்கின் நுனி வரை வந்தும், அதை தனது மனஉறுதியை பயன்படுத்தி கட்டுப்படுத்துகிறான். மிகவும் கவனமாக வேறு விதமான வார்த்தைகளை உபயோகித்துப் பழகுகிறான். இதைச் சிறிதுகாலம் கஷ்டப்பட்டு செய்யும்போது நாளடைவில் அந்த பழிச்சொல் அவனது அகராதியிலிருந்தே மறைந்துவிடும். இனி அவன் அதைக் கட்டுப்படுத்த அதே அளவு கடினப்படத் தேவையில்லை. இயல்பாகவே அது வருவதில்லை. இவ்விதம்தான் ஒரு பழக்கத்தை மாற்றியமைக்க முடியும்

புண்ணிய-கர்மத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒருவனால் இயல்பாகவே பாப-கர்மத்தை செய்யமுடியாது. ஏனெனில் எந்தவொரு செயலும் ஒருவித பதிவை மனதில் உண்டாக்குகிறது. இதையே நாம் சம்ஸ்காரம் என்றழைக்கிறோம். ஒன்றை திரும்ப திரும்பச் செய்யும்போது அதற்கான சம்ஸ்காரங்கள் அந்த அளவுக்கு வலுப்பெறுகின்றன. இதனால்தான் குற்றவாளிகள் வழக்கமான குற்றவாளிகளாக மாறுகிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை குற்றத்திற்கும் அதைச் செய்வதற்கான ஒரு குறிப்பிட்ட வழிக்கும் பழக்கப்படுகிறார்கள். ஒரு மலையிலிருந்து கீழே ஓடும் நீர் அதே பாதையில் மீண்டும் மீண்டும் செல்லும்போது, அந்த பாதை ஆழமாகிக் கொண்டே செல்லும். அதுபோல எந்தவொரு கர்மமும் அது குறித்த ஒரு சம்ஸ்காரத்தை உருவாக்கும். மேலும் அந்த மலைநீரானது தொடர்ந்து ஒரே பாதையில் செல்லும்போது அந்த பாதை மேலும் மேலும் ஆழமானதாகி, அது தண்ணீரை வேறு எங்கும் செல்ல முடியாதபடிச் செய்கிறது. அதுபோல ஒரே காரியத்தைச் செய்ய செய்ய சம்ஸ்காரங்களும் ஆழமானதாக, அதிலிருந்து வெளியேற முடியாதவளவு வலிமையானதாக மாறுகிறது. இந்த சம்ஸ்காரமே அதை மீண்டும் மீண்டும் செய்யத்தூண்டுகிறது.

ஆகையினால் எந்தவொரு சம்ஸ்காரத்திலிருந்தும் வெளியேற ஒருவனுக்கு தீர்கமான விருப்ப எண்ணம் மற்றும் மனவலிமை அவசியம். மேலும் அறிவுநிலையில் உண்டாகும் மாறுதலினால்தான் இது சாத்தியம். தனது வாழ்க்கையை வித்தியாசமாகப் பார்க்கும் இந்த மாறுதலை, கடவுளின் கருணையும் குருவின் உதவியும் சாத்தியப்படுத்தும்

எனவே புண்ணிய-கர்மங்களைச் செய்து பழகியவர்களுக்கு பாப-சம்ஸ்காரங்கள் அழிகின்றன. இதனால் முன்பு செய்த பாபங்களும் பெருமளவு நடுநிலையாக்கப்படுகின்றன. இப்போது அவர்கள் பாப-கர்மங்களின் முடிவை நெருங்கிவிட்டனர், பாபம் அந்தக3தம். ஆனால் அவைகள் முழுமையாக நீங்குவதில்லை ஏனெனில் பாபம் மற்றும் புண்ணியம் இரண்டையும் ஞானத்தினால் மட்டுமே நீக்கமுடியும். ஆனால் இவர்களது மனம் பாப-கர்மங்களினால் பாதிக்கப்படுவதில்லை; இப்படிப்பட்ட மனமே ஒடுங்குகிறது; இதுவே தூய்மையான மனம் ஆகும்


=> மோஹ நிவ்ருத்தி

தே த்3வந்த்3 மோஹ நிர்முக்தா: அவர்கள் விருப்பு-வெறுப்பு எனும் இருமை மோஹத்திலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்படுகிறார்கள். முக்த எனில்விடுதலை’, நிர்முக்த எனில்முற்றிலும் விடுவிக்கப்படுவது’. ஒருவனிடம் சக்திவாய்ந்த விருப்பு வெறுப்புகள் இருக்கும்போது அவன் அதை அடைவது குறித்து மட்டும் சிந்திக்கிறானே தவிர இது சரியா அல்லது தவறா என்பதில் கவனம் செல்வதில்லை. இதனால் இயற்கையாகவே அவன் பாப-கர்மத்தை செய்கிறான். ஆனால் இந்த விருப்பு வெறுப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்படும்போது, மனம் அவனுக்கு எது சரி எது தவறு என்பதை முன்வைக்கும். இதனால் அவன் இருமை மோஹத்தின் உள்ளழுத்தத்திலிருந்து விடுவிக்கப்படுகிறான்.


=> விவேக ப்ராப்தி:

மாம் 4ஜந்தேஎன்னை வழிபடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களே ஒருவன் தனது வாழ்க்கையில் எதை தேட வேண்டும் என்பதை உணர்ந்தவர்கள் ஆகிறார்கள். முன்பு ராக-த்வேஷத்தின் காரணமாக சாஸ்திரத்தை பற்றிச் சிந்திக்ககூட நேரமில்லாமல் இருந்தவர்கள், இப்பொழுது அதன் எல்லா சொற்களுக்கும் அர்த்தத்தைப் பார்க்கிறார்கள். ஆகவே தர்மப்படி வாழ்தல் மனதிலுள்ள ராக-த்வேஷத்தை நீக்குகிறது. இதனால் மனமானது அமைதியடைந்து அது புத்திக்கு உதவுகிறது; புத்தியானது விவேக சக்தியைப் பெறுகிறது. இதனால் அவர்கள் பரமேஷ்வரனை, பரமாத்மாவை நாடுகின்றனர். இத்தகையவர்கள் யார்?

த்3ருட4வ்ரதா: உறுதியான அர்ப்பணிப்பு உள்ளவர்கள். வெற்றி தோல்வி லாபம் நஷ்டம் ஆகியவைகளுக்கிடையில் மாறாத பக்தி பூண்டொழுகுபவர் திட விரதமுடையவர்கள் ஆகின்றனர். இந்த உறுதியினால் மட்டுமே ஒருவன் மெய்ப்பொருளை, பரமாத்ம-தத்துவத்தைப் பெற முடியும் என சங்கரர் கூறுகிறார். இந்த திட அர்ப்பணிப்பின் காரணமாக அவர்கள் மற்ற எல்லா முயற்சிகளையும் விட்டுவிடுகிறார்கள். விருப்பு-வெறுப்பிலிருந்து விடுபட்டவர்களாக அவர்கள் தங்களது மோக்ஷ புருஷார்தத்திற்கு பயன்படுகின்ற ஆசைகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். அவர்கள் மனதினாலோ அல்லது நடைமுறையிலோ சந்யாசிகளாக மாறுகிறார்கள். தர்மத்தை கடைபிடித்தல், கீழ்கண்ட படிநிலைகள் வழியாக ஒருவனை சாதகனாக மாற்றுகிறது:

* தர்மம் —> பாப நிவ்ருத்தி —> மோஹ நிவ்ருத்தி —> விவேக ப்ராப்தி —> முமுக்ஷுத்வம்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

துருப்பிடித்த இரும்பு காந்தத்தின் கவர்ச்சிக்கு உட்படுவதில்லை. துரு நீங்கப்பெற்றதும் அது காந்தத்தால் இழுக்கப்படுகிறது. விருப்பு வெறுப்பு என்னும் துருப்பிடித்த உள்ளத்தில் பக்தி பெருக்கெடுப்பதில்லை. சுத்த மனதின்கண் பக்தி விரைவில் தோன்றுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------