திங்கள், 6 மார்ச், 2023

ஞானவிக்ஞான யோகம் 7.15 - 7.16

||7.15|| ஈசனைச் சரண்புகாதவர் யார்?

मां दुष्कृतिनो मूढा प्रपद्यन्ते नराधमा:

माययापहृतज्ञाना सुरं भावमाश्रिता: ।। १५ ।।

மாம் து3ஷ்க்ருதிநோ மூடா4 ப்ரபத்3யந்தே நராத4மா:

மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பா4வமாச்1ரிதா: ।। 15 ।।


दुष्कृतिन:  து3ஷ்க்ருதிந:  பாபச் செயலை உடையவர்கள்   मूढा:  மூடா4:  மூடர்கள்   

नराधमा:  நராத4மா:  கீழ்மையான மனிதர்கள்   मायया अपहृत ज्ञाना:  மாயயா அபஹ்ருத ஜ்ஞாநா:  மாயையினால் ஞானத்தை பறிகொடுத்தவர்கள்   सुरं भावम्  ஆஸுரம் பா4வம்  அசுரர் இயல்பை  

श्रिता:  ஆச்1ரிதா:  பற்றி நிற்போர்   मां  மாம்  என்னை   

प्रपद्यन्ते   ப்ரபத்3யந்தே  வழிபடுவதில்லை/போற்றுவதில்லை.


பாபச் செயலையுடையவர், மூடர், மக்களுள் கடைத்தரமானவர், மாயையினால் ஞானத்தை பறிகொடுத்தவர், அசுரர் இயல்பை கொண்டிருப்பவர்இத்தகையவர்கள் என்னை வழிபடுவதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப்பட்டார், மாயையால் ஞான மழிந்தோர், அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர், (இனையோர்) என்னைச் சரண் புகார்.


விளக்கம்:

சுலோகம் பதினைந்து முதல் இருபத்திமூன்று வரை பக்தர்கள், பக்தி மற்றும் பக்தி செய்யும் விதங்களைப் பற்றி பகவான் பேச இருக்கிறார். முதலில் மனிதர்களை, (1) பக்தர்கள் (2) அபக்தர்கள்[கடவுளை ஏற்றுக் கொள்ளாதவர்கள்] என இரண்டாகப் பிரிக்கிறார். இந்த சுலோகத்தில் கடவுளை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பற்றிப் பேசுகிறார்.


=> ஈசனை நாடாதவர்கள்:

என்னைச் சரணடைந்து மாயையைக் கடக்க முடியும் என்றபோதிலும், இவர்கள் என்னைச் சரண்புகாதவர்கள்மாம் ப்ரபத்3யந்தே. ஏனெனில் இவர்கள் து3ஷ்க்ருதிந:, மூடா4:, நராத4மா: மற்றும் மாயயா அபஹ்ருத ஜ்ஞாநா:. பக்தர்கள் அல்லாதவர்களுக்கு தன்னை நாடாதவர்களுக்கு மேற்கூரிய குணாதிசியங்களை பகவான் அடுக்கிக் கூறுகிறார். சுருக்கமாக சொல்வதானால் தங்களுக்கு எது தீங்கானதோ அதில் ஈடுபடும் அசுர குணத்தைக் கொண்டவர்கள் இவர்கள் என்கிறார் பகவான்ஆஸுரம் பா4வம் ஆச்1ரிதா:.  

(1) பாபச் செயலையுடையவர்கள்:

து3ஷ்க்ருதிந: எனில் இந்த ஜென்மத்திலோ அல்லது முந்தைய பிறவியிலோ தவறான செயல்கள், அதாவது பாப-கர்மங்களைச் செய்தவர்கள் ஆவர். பாபமானது விவேக சக்தியை எடுத்துவிடுவதால், அவர்களிடமுள்ள இந்த பாபமே அவர்களை பகவானை நாட விடாமல் செய்கிறது. மேலும்து3ஷ்க்ருதிந:என்பதை இப்பிறவியிலும் தொடர்ந்து தீயதை செய்து கொண்டிருப்பவர்களாகவும் எடுத்துக் கொள்ளலாம்.


(2) மூடர்கள்:

மூடா4: எனில் மோஹத்தை அடைந்தவர்கள், குழப்பத்தையுடையவர்கள் என்பது பொருள். இவர்கள் தங்களது முன்னுரிமைகள் குறித்து குழப்பத்தை உடையவர்களாக இருக்கின்றனர். உதாரணமாக தங்களின் விருப்பம் அல்லது அதை அடையும் வழிமுறை இவற்றில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் தெளிவில்லாத இவர்கள், தாங்கள் விரும்பியதை அடைய, அதற்கான வழிமுறையில் சமரசத்தை செய்து விடுகிறார்கள். தீங்கு விளைவிக்கும் பாபச் செயலை செய்வதையும் பொருட்படுத்தாத இந்த மூடர்கள், எதைச் செய்ய வேண்டும்(கார்ய) மற்றும் எதைச் செய்யக் கூடாது(அகார்ய) என்பதில் மோஹத்தை அடைந்துள்ளனர். இதன் விளைவாக அவர்கள் தவறான செயலைச் செய்யும் துஷ்க்ருதிநர்களாக ஆகிறார்கள்


(3) கடைநிலை மனிதர்கள்:

நராத4மா: = நர + அத4மா:, கீழ்மையான மனிதர்கள்

தனது பாஷ்யத்தில் சங்கரர், மனிதர்களை மூன்றாகப் பிரிக்கிறார். உயர்நிலையில் இருப்பவர்கள் - உத்க்ருஷ்ட, இடைநிலையில் உள்ளவர்கள் - மத்யம மற்றும் கடைநிலையிலிருப்பர்கள் - அதம. சுயநலம், நம்பிக்கை துரோகம் முதலிய கீழான குணங்களை உடையவர்கள் மற்றும் ராஜஸ தாமஸ குணத்திலிருப்பவர்கள் கீழ்மையான மனிதர்களாகின்றனர். நடத்தையின் அடிப்படையில் கீழாக இருப்பது முற்றிலும் சிந்தனையின் காரணமாகவே ஆகும். அடிப்படையில் யாரும் பாவி இல்லை. ஆனால் அறியாமையினாலும் மற்றும் எது சரி எது தவறு எனப் பகுத்து அறியும் புத்தி இல்லாததாலும், மக்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள். குறைந்த பட்சம் இந்த ஜென்மத்திலாவது நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் அவர்கள் பகுத்தறியும் புத்தியைப் பெற முடியும். ஆனால் இதற்கும் கூட சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும்; அதனால்தான் இறையருள் தேவை, அதற்கு பிரார்த்தனை அவசியம்.


(4) ஞானம் அபகரிக்கப்பட்டவர்கள்:

ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? மாயயா அபஹ்ருத ஜ்ஞாநா:மாயையினால் பகுத்தறியும் புத்தியை, ஞானத்தை பறிகொடுத்தவர்களாக உள்ளனர். எந்த மாயையைக் கடப்பதன் மூலம் சம்சாரத்திலிருந்து விடுபடமுடியுமோ அந்த மாயையினாலேயே இவர்கள் தனது விவேகத்தை இழந்தவர்களாகின்றனர். நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல, மாயை என்பது தன்னைப் பற்றிய அறியாமையும்(ஆத்ம அக்ஞானம்), அதன் விளைவுகளாகத் தோன்றும் விருப்பு மற்றும் வெறுப்புகளை உள்ளடக்கிய குணக்கூட்டங்களும் ஆகும். இது பொறியைப் போல ஒருவனை வஞ்சித்து ஏமாற்றி, இங்குஞாநம்என்ற சொல்லால் குறிக்கப்படும் அவனது விவேகம் எனும் புதையலை கொள்ளையடித்துச் செல்கிறது. இதன் காரணமாக இவர்கள் அசுரர்களின் சுபாவத்தை கொண்டிருக்கிறார்கள்.


=> யார் அசுரன்?

ஆஸுரம் பா4வம் ஆச்1ரிதா:என்பது அசுரனின் குணங்களை பற்றி நிற்பவர்களைக் குறிக்கிறது. ‘ஸுரஎனில் தன்னில் அல்லது நல்ல விஷயங்களில் மகிழ்ச்சியடைபவன் என்பது பொருள். ‘அஸுர என்றால் அதற்கு எதிர்மறை, அதாவது, நல்லதல்லாத விஷயங்களில் மகிழ்ச்சியடைபவன்; புலனின்பங்களில் மூழ்கியிருப்பவன் எனப்படுகிறது

பிறரைத் துன்புறுத்துதல், பொய் பேசுதல் முதலியவற்றை இயல்பாகக் கொண்டிருப்பவர்கள் அசுரர்களின் சுபாவத்தை உடையவர்கள் என சங்கரர் கூறிகிறார்ஹிம்ஸா அநர்தாதி லக்ஷணம் ஆஸுரம் பா4வம். பணம் அல்லது இன்பம் போன்ற தனிப்பட்ட ஆதாயங்களுக்காக உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ மற்றவரைக் காயப்படுத்துதல் ஹிம்ஸா ஆகும். அநர்த என்பது பொய்மை; ஆதி எனில் திருடுதல் போன்ற மற்ற அனைத்து தவறான குணங்களையும் குறிக்கும். லக்ஷணம் என்றால் இலக்கணம் என்று பொருள். ஆகவே, இத்தகைய குணங்கள் ஒரு அசுரனின் மனநிலை மற்றும் வாழ்க்கை முறையின் இயல்பைக் குறிக்கும் இலக்கணமாக உள்ளன. இவ்வாறான அசுர இயல்பை கொண்ட இந்த அபக்தர்கள், இயற்கையாகவே ஈஷ்வரனைத் தேடுவதில்லை. அவர்களின் சொந்த கற்பனைகளாலும் தவறான குணங்களாலும், முழுவதுமாக ஒரு அசுரனின் வாழ்க்கைக்கு தன்னை ஒப்படைத்து விடுவதால், அவர்கள் ஈசனிடம் வருவதில்லை; அவரை நினைப்பதில்லை; அவர்கள் வாழ்வில் கடவுள் வருவதில்லை.


நம்பிக்கையற்றதாகத் தென்படும் இந்த சூழலைக் கடக்க ஒருவன்நானே ப்ரம்மமாக இருக்கிறேன்என்பதை அறிய வேண்டியதில்லை; ஈஷ்வரன் இருக்கிறார் என்ற புரிதல் மட்டுமே கூட போதுமானது. அது அவனிடம் ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையையும் பிரார்த்தனையையும் உண்டாக்குவதால் மாற்றங்கள் தானாக நடைபெறத் தொடங்கும். நான்கு விதமான பக்தர்களைப் பற்றிக் கூறுவதன் மூலம் இதை பகவான் அடுத்து வருகிற சுலோகத்தில் விளக்குகிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

நுண்மையான தானியத்தைத் தள்ளிவிட்டு, பருமனான குப்பை முதலியவைகளைத் தங்கச் செய்வது சல்லடையின் இயல்பு. அதுபோல, நன்மையை விட்டுவிட்டுத் தீமையை மட்டும் கைக்கொள்வது தீயோருடைய குணம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

||7.16|| பக்தர்களின் வகைகள்:

चतुर्विधा भजन्ते मां जना: सुकृतिनोर्जुन

र्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी भरतर्षभ ।। १६ ।।

சதுர்விதா4 4ஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந  

ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தா2ர்தீ2 ஜ்ஞாநீ 4ரதர்ஷப4 ।। 16 ।।


अर्जुन  அர்ஜுந  ஹே அர்ஜுனா   चतुर्विधा:  சதுர்விதா4:   நான்கு விதமான   

सुकृतिन:  ஸுக்ருதிந:  அறச் செயலாளர்கள்/புண்ணியத்தை உடையவர்கள்   जना:  ஜநா:  மக்கள்   

मां भजन्ते   மாம் 4ஜந்தே  என்னை வழிபடுகின்றனர்    र्त:  ஆர்த:  துன்புற்றவன்   

अर्थार्थी  அர்தா2ர்தீ2  பொருளின்பம் தேடுபவன்   जिज्ञासु:   ஜிஜ்ஞாஸு:   ஞானவேட்கையுடையவன்   

  மற்றும்   ज्ञानी  ஜ்ஞாநீ  ஞானி   भरतर्षभ   4ரதர்ஷப4   பரதகுலப் பெருமகனே!


பரதகுலப் பெருமகனாகிய அர்ஜுனா, துன்புற்றவன், ஞானவேட்கையுடையவன், பொருளின்பம் தேடுபவன் மற்றும் ஞானி என நான்கு விதமான நற்செய்கை உடையவர்கள் என்னை வழிபடுகின்றனர்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே, துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.


விளக்கம்:

பாபச் செயலை உடையவர்களை, தன்னை வழிபடாத பக்தர்கள் அல்லாதவர்களைப் பற்றி பகவான் சென்ற சுலோகத்தில் குறிப்பிட்டார். மாறாக, இங்கு தன்னை வழிபடுகிற பக்தர்களை, முற்பிறவியிலும் இந்த ஜென்மத்திலும் புண்ணியச் செயலை செய்த மனிதர்களைக் குறித்து பேசுகிறார். ஸுக்ருதிந: ஜநா: - நற்செயலைச் செய்பவர்கள்; என்னை வழிபடுகிறார்கள் - மாம் 4ஜந்தே. அவர்களின் நற்செயல்களால் ஈட்டிய புண்ணியத்தினால்தான் அவர்கள் என்னை நாடுகிறார்கள்.


=> புண்ணியம்

புண்ணியத்தில் இரு வகையுண்டு. ஒன்று செல்வம், இன்பம், செளகரிய வாழ்வு, குழந்தைப்பேறு, பரம்பரை போன்றவற்றைத் தருகிறது. இதற்கு கலாச்சாரமும், மன முதிர்ச்சியும் தேவையில்லை. புண்ணியத்தில் மற்றொரு வகை உள்ளது, இது முற்றிலும் ஆன்மீகமானது. எந்த இடத்தில் பிறந்தபோதிலும் இது தன்னை வெளிப்படுத்துகிறது. ஒருவனுக்கு கடினமான ஆரம்பம் இருந்தாலும், அது அவனின் தேடுதலைத் தடுக்காதவாறு இந்த புண்ணியமே அவனை வழிநடத்திச் செல்லும். இவ்வகையான புண்ணியத்தை உடைய ஸுக்ருதிந:, ஈஷ்வரனை வழிபடுகின்றனர்மாம் 4ஜந்தே. ஈஷ்வரனுடனான தங்களின் தொடர்பை அடையாளம் காண்கின்றனர்.


=> நான்கு வகையான பக்தர்கள்:

இவ்விதமாக, ஈஷ்வரனை அங்கீகரிக்கும் ஸுக்ருதிந:, அதாவது வழிபடும் பக்தர்களை இந்த சுலோகத்தில் பகவான் நான்காகப் பிரிக்கிறார்சதுர்விதா4:. ‘வித4எனில் வகைகள் என்று பொருள்; ஆகவே நான்கு விதமான பக்தர்கள். இவர்கள் அனைவரும் ஈஷ்வரனை ஏற்றுக்கொண்டு வணங்கக்கூடிய பக்தர்களாக இருந்தபோதிலும் இவர்களுக்குள் உள்ள படிநிலைகளில் வித்தியாசம் உள்ளது. இவர்களின் அணுகுமுறை, அங்கீகாரத்தின் அளவு, மனப்பான்மை மற்றும் பிரார்த்தனை போன்றவை இந்த நான்கு வகைகளைத் தீர்மானிக்கின்றனஆர்த: அர்தா2ர்தீ2  ஜிஜ்ஞாஸு: ஜ்ஞாநீ .


(1) துன்புற்றவன்[ஆர்த:]: 

ஆர்த: எனில் துயரம் நீங்குவதற்காக பிரார்திப்பவன். ஆர்தி என்றால் துயரம் அல்லது கவலை என்று பொருள். கவலை, துன்பம், அசௌகரியம், தொல்லைகள் அனைத்தும் ஆர்தி எனப்படும். திருடன், புலி அல்லது நோயினால் ஏற்படும் துன்பத்தினால் பீடிக்கப்பட்டவன் என உதாரணம் கூறுகிறார் சங்கரர். காடுகள் நிறைந்த பாரததேசத்தில் அந்தக் காலத்தில் புலிகள் சர்வசாதாரணமாக இருந்தன; எனவே, அவர் புலியை உதாரணமாகப் பயன்படுத்துகிறார். இப்படிப்பட்ட துக்கத்தினால் ஆட்கொள்ளப்பட்டவனின் இறுதி அடைக்கலம் என்ன? அவன் கடைசி முயற்சியாக யாரை அழைப்பான்? எனில், ஏதாவது புண்ணியம் இருக்கும்போது, அவனுடைய வாழ்க்கையில் ஈஷ்வரன் இருப்பதனால் அவன் உதவிக்கு இறைவனை அழைக்கிறான். ஆனால் துன்பத்தில் இருக்கும்போது மட்டுமே அதிலிருந்து விடுபட அவன் ஈசனை நினைக்கிறானே தவிர அதுவரையில் அவன் பகவானை நினைப்பதே இல்லை. இந்த வகையான, துன்பத்தில் மட்டுமே வழிபடும் பக்தன் ஆர்த என்று அழைக்கப்படுகிறான்.


(2) பொருளின்பம் தேடுபவன்[அர்தா2ர்தீ2]:

அர்த்தஎனில் விரும்பியது என்பது பொருள். இங்கு அது இன்பம் மற்றும் பணம், பதவி, செல்வாக்கு, சக்தி போன்றவைகளைக் குறிக்கிறது. இதுபோன்ற விரும்பிய ஐஸ்வர்யங்களைப் பெற பகவானின் அருளை வேண்டுபவன் அர்தா2ர்தீ2 எனப்படுகிறான். இக மற்றும் பர ஐஸ்வர்யங்களைப் பெற ஒருவனால் செய்யப்படும் சடங்குகள், யாகங்கள் உள்ளிட்ட செயல்கள் காம்ய கர்மங்கள் என்றழைக்கப்படும்.

துன்பத்தில் மட்டுமே கடவுளை நினைக்கும் ஆர்த-வை விட இவன் ஒரு விதத்தில் அதிக பக்குவப்பட்டவன் என்றே கூறலாம். சந்தோஷமாக இருக்கும் நேரத்திலும் இறைவனை எண்ணுகிறான். வியாபாரம், உத்தியோகம், பரீட்சை போன்ற செழிப்பு சம்பந்தப்பட்ட செயல்களை ஆரம்பிக்கும்முன் பகவானை எண்ணிச் செயலைத் துவங்குகிறான்.

(3) இறைவனை அடைய விரும்புபவர்கள்[ஜிஜ்ஞாஸு:]:

அறிய விரும்புபவன், ஞானவேட்கையுடையவன் ஜிஜ்ஞாஸு ஆவான். தனது துயரம் நீங்கவோ பொருளின்பத்திற்காகவோ இவன் ஈசனை நாடவில்லை; இவனுக்கு ஞானம் மட்டுமே தேவை. ஈஷ்வரனை பற்றிய ஞானம்(பகவத்-தத்வ), மெய்ப்பொருளைப் பற்றிய ஞானமே இவனது குறிக்கோள்; அதற்காகவே இறைவனின் அருளை வேண்டுகிறான்; பிரார்த்தனைகளைச் செய்கின்றான். எனவே இவன் ஒரு மேலான பக்தனாகின்றான். அன்றாட கடமைகளைச் செவ்வனே செய்வதன் மூலம் அந்த-கரண-சுத்தியை அடைந்து ஈஷ்வர ஞானத்தை, ஆத்ம ஞானத்தை அடைகிறான்.

ஈஷ்வர ஞானம் என்பது ஆத்ம ஞானத்தை தவிர வேறில்லை. அனைத்திற்கும் காரணமான ஈஷ்வரனின் சாராம்சம், சுயம் ஆகும். ஒருகால் ஈஷ்வரன் ஆத்மாவிலிருந்து வேறானவராக இருந்தால், அவர் அனாத்மாக, அதாவது செயலற்றவராக ஜடமாக ஆகிறார். சேதனமான, உணர்வுள்ள ஒரே சொரூபம் ஆத்மாவாக இருப்பதனால், ஈஷ்வரன் ஆத்மாவிலிருந்து வேறாக இல்லை. ஈஷ்வரனுக்கும் தனிமனிதனுக்கும் இடையே தோன்றும் இந்த வித்தியாசம் உபாதியின் காரணமாகத் தோன்றுகிறது என நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த உண்மையையே ஒரு ஜிக்ஞாசு அறிய விரும்புகிறான். இதற்காக அவன் ஈஷ்வரனின் அருளை வேண்டுவதால் அவன் பக்தனாகிறான். ஆனால் இவன் ஆர்தி மற்றும் அர்தார்தியைப் போல இந்த சம்சார உலகில் எதையும் விரும்பி செய்யும் காம்ய-கர்மங்களைச் செய்வதில்லை. மாறாக இவன் ஒரு கர்ம-யோகி; எனவே இவனுடைய பக்தி வேறு வகையானது


(4) ஈஷ்வரனை அடைந்தவன்[ஜ்ஞாநீ]:

நான்காவது பக்தன் ஜ்ஞாநீ, ஈஷ்வரனைப் பற்றிய முழு ஞானத்தை அடைந்தவன்; மோக்ஷத்தை அடைந்தவன். என்னை அங்கீகரிக்கும் இந்த நான்கு வகை பக்தர்களும், எந்தவளவு என்னை அடையாளம் காண்கிறார்களோ அந்தவளவு என்னுடன் இணைந்திருக்கிறார்கள். இந்த நான்காவது பக்தனான ஞானியின் அங்கீகாரம் முழுமையானது; ஆகவே எனதுடனான அவனது ஐக்கியமும் முழுமையானது. அவனே உண்மையான பக்தனாகிறான்; மற்றவர்கள் அதற்கான வெவ்வேறு படிநிலைகளில் உள்ளனர். ஜிக்ஞாசுவான ஒருவன் கண்டிப்பாக நான்காவதான ஞானி நிலையை, ஈஷ்வரனைப் பற்றிய முழுமையான அறிவை, ஈஷ்வரனுடனான ஐக்கியத்தை அடைகிறான்.  


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பகவானை முதலாக வைத்துக் கொண்டு புருஷார்த்தங்களைத் தேடுபவர் புண்ணியசாலிகள்.

ஒன்று என்னும் இலக்கத்தோடு பூஜ்ஜியங்களைச் சேர்த்தால் அவைகளுக்கு மதிப்பு உண்டு. ஒன்றை விட்டுப் பிரித்தால் அவைகள் வெறும் பூஜ்ஜியங்களே. கடவுள் ஒன்று என்னும் இலக்கமாவார். உலகப் பொருள்களெல்லாம் அவரோடு சேர்க்கப்பட்ட பூஜ்ஜியங்கள். தம்மளவில் அவைகளுக்கு மதிப்பில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------------