செவ்வாய், 14 மார்ச், 2023

ஞானவிக்ஞான யோகம் 7.17 - 7.18

||7.17|| இந்த நான்கு வகை பக்தர்களில் சிறந்தவர் யார்?

तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते

प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं मम प्रिय: ।। १७ ।। 

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப4க்திர்விசி1ஷ்யதே  

ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்த2மஹம் மம ப்ரிய: ।। 17 ।।


तेषां  தேஷாம்  அவர்களுள்   नित्ययुक्त:  நித்யயுக்த:  இடையறாது யோகம் பூண்டு   

एकभक्ति:  ஏகப4க்தி:  பிளவுபடாத பக்தி செலுத்தும்   ज्ञानी  ஜ்ஞாநீ  ஞானி   

विशिष्यते  விசி1ஷ்யதே  மேலானவன்  हि  ஹி ஏனென்றால்  अहं  அஹம்  நான்   

ज्ञानिन:  ஜ்ஞாநிந:  ஞானிக்கு   अत्यर्थम् प्रियஅத்யர்த2ம் ப்ரிய:  மிகப் பிரியமானவன்   

    அவனும்    मम प्रिय:  மம ப்ரிய:  எனக்குப் பிரியமானவன்.


அவர்களுள் இடையறாது யோகம் பூண்டு, பிளவுபடாத பக்தி செலுத்தும் ஞானி மேலானவன்; நான் ஞானிக்கு மிகப் பிரியமானவன்; அவனும் எனக்குப் பிரியமானவன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் விளக்கப்பட்ட நான்கு வித பக்தர்களுள் ஞானி மேலானவன் எனக் கூறி, ஒரு ஞானியின் பக்தியை பகவான் இங்கு வர்ணிக்கிறார்.


=> இடையறாது யோகம் செய்பவன்:

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த: இந்த நான்கு பக்தர்களில் ஞானி எப்பொழுதும் ப்ரம்மத்துடன் மனதை பொருத்தியவனாய், இடையறாது யோகம் செய்பவனாய், எப்பொழுதும் ஈஷ்வரனுடன் ஐக்கியத்தை அடைந்தவனாயுள்ளான். ஜ்ஞாநீ எனில் ஈஷ்வரனைப் பற்றிய உடனடி அறிவை, முழு ஞானத்தை அடைந்தவன், தத்வவித் என ஏற்கனவே பார்த்தோம். இந்த அறிவினால் அவன் எப்பொழுதும் ப்ரம்மத்துடன் ஐக்கியத்தில் உள்ளான், நித்யயுக்த:. இந்த வார்த்தையின் அர்த்தத்தை முழுமையாக உணர்தல் அவசியமாகிறது.

ஈஷ்வரன் எங்கோ ஒரு உலகத்தில் அமர்ந்திருப்பவராக (பரோக்ஷமாக) இருக்கிறார் எனும்போது, ஒரு பக்தன் அவருடன் ஒரு குறிப்பிட்ட தொடர்பை ஏற்படுத்த வேண்டும். எனவே அவன் ஒரு பிரார்த்தனை, ஒரு சிந்தனை, ஒரு மந்திரம், தியானம் அல்லது ஒரு சில சடங்குகள் மூலம் அவருடனான தனது இணைப்பை ஏற்படுத்த முயல்கிறான். ஏதோ ஒரு துன்பத்திலிருந்து மீள்வதற்காக இந்த சம்பந்தத்தை ஏற்படுத்தும்போது, அது ஆர்த-பக்த இணைப்பு ஆகிறது. இது நிரந்தரமானது(நித்ய) அல்ல. சிறிது நேரத்திற்குபிறகு அவன் அதை துண்டித்துக் கொள்கின்றான். அர்தார்தியும் முக்கியமான ஒன்றை மேற்கொள்ளும்போது மட்டும் ஈஷ்வரனைப் பற்றி நினைத்து, அந்த செயலைத் தொடங்கி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஈஷ்வரனுடன் இணைந்துள்ளான். இதுவும் நித்தியம் அல்ல. ஆர்த மற்றும் அர்தார்தியைக் காட்டிலும் ஒரு ஜிக்ஞாசுவானவன், உண்மையை அறிய விரும்பி அதிக நேரம் இறைசிந்தனையில் இருக்கின்றான். ஈஷ்வரார்ப்பண-புத்தி, பிரசாத-புத்தியுடன் கூடிய கர்மயோகியாக இதை அவன் சாத்தியப்படுத்துகிறான். என்றாலும்கூட அதுவும் நித்ய-யுக்தனாவதற்கான முயற்சியே தவிர, அதை அவன் அங்கு அடைவதில்லை.

ஆனால் ஒரு ஞானி நித்ய-யுக்தனாக இருக்கிறான். ப்ரம்மத்தை, ஈஷ்வரனைத் தவிர வேறெதுவுமில்லை எனும் அறிவில் உறுதியை கொண்டதனால், மனம் வேறெங்கும் செல்லாதவனாக எப்பொழுதும் ஈஷ்வரனுடனான ஐக்கியத்தில் உள்ளான்.


=> பிளவுபடாத அன்பு:

ஒரு கோணத்தில், தனியொருவனின் அன்பானது மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

(1) தன்னிடத்தில் இருக்கும் அன்பு - சாதகன்,

(2) நாம் அடைய விரும்பும் ஒன்றின் மீதுள்ள விருப்பம் - சாத்யம்,

(3) சாதகனை சாத்யத்திடம் அழைத்துச் செல்ல உதவும் கருவி அல்லது சாதனத்திடமுள்ள அன்பு - சாதனம்.

* ஆரம்ப காலகட்டத்தில் சாதகனிடம் அதாவது தன்னிடத்தில் 75% அன்பும், சாத்யத்திடம் 20% அன்பும், சாதனத்திடம் 5% அன்புமாக ஒருவனது அன்பு பிரிந்துள்ளது. முந்தய சுலோகத்தில் பகவான் வர்ணித்த பக்தர்களுள் ஆர்த மற்றும் அர்தார்தி இருவரும், தனது இலக்கை அடைய உதவும் சாதனம் என்ற அளவில்தான் இறைவனை வைத்துள்ளனர்; ஆகவே அவர்களின் முழுஅன்பில் 5% அளவே பக்தியாக உள்ளது

* ஒரு ஜிக்ஞாசுவுக்கு, சாத்யம் மற்றும் சாதனம் இரண்டுமே பகவானாக இருப்பதால் 20% + 5% = 25% பக்தி உள்ளது.

* ஆனால் ஒரு ஞானி பகவானை எப்படிப் புரிந்துள்ளான்? ஈஷ்வரன் என்னிலிருந்து வேறானவராக இல்லை என்ற ஐக்கிய ஞானத்துடன் இருப்பதனால், சாதகன் சாத்யம் மற்றும் சாதனம் என்ற வேற்றுமையே அவனுக்கு கிடையாது. எனவே பிளவுபடாத 100% பக்தியைக் கொண்டுள்ளான். இதையே பகவான் இங்குஏகப4க்திஎன்கிறார்.


=> ஞானி மேலானவன்:

மேற்கூரிய நான்கு வகையினருமே பக்தர்களாக இருந்தபோதிலும் அவர்களுள் ஞானி மேலானவன்ஜ்ஞாநீ விசி1ஷ்யதே, என்கிறார் பகவான். ஞானி அசாதாரணமானவனாக காட்டப்பட வேண்டும் என்பதற்காக இவ்விதம் கூறப்படவில்லை; ஒருவனின் பக்தி எந்த அளவுக்கு முதிர்ச்சியடைய வேண்டும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. நித்திய யுக்தனாக, எப்பொழுதும் ஈஷ்வரனுடனான ஐக்கியத்தில் இருக்குமளவு அறிவில் முதிர்ச்சியடைய வேண்டும்

=> தனிச்சிறப்பு எதனால்?

ஒருவன் துன்பத்திலிருக்கும்போது என்னை வழிபடுகிறான்; அப்போதைக்கு மட்டும் என்னை அடைக்கலமாகக் கருதுகிறான். உண்மையில் அவன் என்மீது ஆர்வம் காட்டுகிறானா என்றால் கண்டிப்பாக இல்லை. ஒரு பொருளைப் பயன்படுத்துவதைப்போல, அவலநிலையிலிருந்து விடுபட என்னைப் பயன்படுத்திவிட்டு பிறகு மறந்துவிடுகிறான். ஆகவே நான் அவனுக்கு மதிப்புமிக்கவனாக இல்லை; பிரியத்திற்குரியவனாக இல்லை. என்னை பரோக்ஷமாகப் பார்க்கும் ஆர்தி மற்றும் அர்தார்தி போன்ற பக்தர்களுக்கு நான் பிரியமானவன் அல்ல. ஒரு ஜிக்ஞாசுவும்கூட என்னை முழுமையாக புரிந்து கொள்ளாததால், நான் முற்றிலும் பிரியத்திற்குரியவன் அல்ல. அவனது பிரியம் மோக்ஷம்; சம்சாரத்திலிருந்து விடுதலை. அதற்காகவே என்னை வழிபடுகிறான்.

ஒரு ஞானிக்கு மட்டுமே நான் மிகவும் பிரியமானவன்ப்ரியஅஹம் ஜ்ஞாநிந: அத்யர்த2ம். ஏனெனில் அவன், என்னை தனது பிரியமான ஆத்மாவாகவே அறிகிறான். இந்த முழு படைப்பிலும் ஒருவனுக்கு மிக மதிப்பிற்குரியதாகவுள்ள ஆனந்தம், அவனது ஆத்மாவாகவே உள்ளது; ஆனந்த ஆத்மா. ஆகவே ஆத்மாவே ஒருவனின் பிரியத்திற்குரியது; அப்படிப்பட்ட பிரியமான ஆத்மாவாக அவன் என்னை அறிவதால் நான் அவனுக்கு மிகப் பிரியமானவன் - அத்யர்த2ம் ப்ரிய:. கிருஷ்ணர் இங்குஅத்யர்த2ம்’, முழுவதுமாக, என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

அவன் நானாகவே இருப்பதால், அந்த ஞானியும் எனக்கு மிகப் பிரியமானவன் - அத்யர்த2ம் மம ப்ரிய:, என்கிறார் பகவான். இங்குஅத்யர்த2ம்என்ற சொல், ஈஷ்வரன் மற்றும் ஜீவன் இருவருக்கும் பயன்படுத்தப்படும். சென்ற சுலோகத்தில் குறிப்பிடப்பட்ட அனைவருமே பக்தர்களாக இருந்தாலும், பக்தியால் சாதிக்கக்கூடியதைச் சாதித்தவன் என்பதால் பகவான் இங்கு ஞானியை தனித்துக் கூறுகிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பகவத் தரிசனம் பெற்றபிறகு ஒருவன் தானே தெய்வப் பெற்றியுடையவனாக மாறிவிடுகிறான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

||7.18|| மற்ற பக்தர்களும் நல்லவர்கள்தான் எனக் கூறுகிறார்:

उदारा: सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम्

स्थित: हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम् ।। १८ ।।

உதா3ரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்  

ஆஸ்தி2: ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் 3திம் ।। 18 ।।


एते सर्व  ஏதே ஸர்வ  இவர்கள் எல்லோரும்   उदारा: एव  உதா3ரா: ஏவ   நல்லோர்களே   तु  து  ஆயினும்   

ज्ञानी  ஜ்ஞாநீ  ஞானி    त्मा एव  ஆத்மா ஏவ  என் ஆத்ம சொரூபமே என்பது   मे मतम्  மே மதம்  என் கருத்து   हि  ஹி  ஏனென்றால்   युक्तात्मा :  யுக்தாத்மா :  யோகத்தில் நிலைத்திருப்பவனாகிய அவன்   

अनुत्तमां गतिम्  அநுத்தமாம் 3திம்  மிக உத்தமமான கதியான   माम् एव   மாம் ஏவ  என்னையே  

स्थित:  ஆஸ்தி2:  கடைபிடித்து நிற்கின்றான்/அடைந்துள்ளான்.

 

இவர்கள் அனைவரும் நல்லோர்களே. ஆயினும் ஞானி என் ஆத்ம சொரூபமே என்பது என் கருத்து. ஏனென்றால் யோகத்தில் நிலைத்திருப்பவனாகிய அவன் மிக உத்தமமான கதியாகிய என்னையே கடைபிடித்து நிற்கின்றான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் யானாகவே கொண்டுளேன். அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.


விளக்கம்:

ஏதே ஸர்வ உதா3ரா: ஏவஇந்த பக்தர்கள் அனைவரும் நல்லோர்களே, உயர்ந்தோர்களே ஆவர். என்னை ஏற்றுக்கொள்வதால் இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட அளவு முதிர்ச்சியை அடைந்தவர்களாகவே உள்ளனர். எனவே என்னை மறுப்பவர்களின் நிலைப்பாட்டிலிருந்து நோக்கும்போது, இந்த பக்தர்கள் அனைவரும் உயர்ந்தவர்கள்தான் என்கிறார் கிருஷ்ணர். ஆனால் சங்கரர் இங்கு சற்று வித்தியாசமாகப் பொருளைக் கொடுக்கிறார். ஒரு ஞானியை தனக்கு மிகப் பிரியமானவன் எனக் கூறி பகவான் ஏற்கனவே தனித்துவப்படுத்திவிட்டதால், இங்குஏதேஎன்ற சொல்லானது மற்ற மூன்றுவித பக்தர்களைக் குறிப்பதாகக் கூறுகிறார்

=> ஞானி என் சொரூபம்:

மேலும், ஜ்ஞாநீ து ஆத்மா ஏவ மே மதம் — ‘ஞானியை நானாகவே கருதுகிறேன்’, என்கிறார் பகவான். அனைத்துவித பக்தர்களும் மேலானவர்கள் எனில் பகவான் ஏன் ஞானியை மட்டும் தனக்கு மிகப் பிரியமானவன் எனக் குறிப்பிட்டார்? ஈஷ்வரனுக்கு பிரியமில்லாத பக்தர்கள் என யாருமில்லை; அனைவருமே அவரின் அருளுக்கு பாத்திரமாகின்றனர், என்கிறார் சங்கரர். ஞானி மிகப் பிரியமானவன் ஏனெனில், ‘அவன் என் ஆத்ம சொரூபமாக, நானாகவே உள்ளான். அவன் என்னிடமிருந்து வேறானவனாக இல்லை. மற்றவர்களும் என்னிடமிருந்து வேறுபட்டவர்களாக இல்லையெனினும் அவர்கள் அந்த உண்மையை உணரவில்லை. ஒரு ஞானியின் ஆத்ம சொரூபமாக மட்டும் நான் இல்லை; எல்லோரினுடைய ஆத்ம சொரூபமாக நானே இருப்பதால் எனக்கு யாரிடமும் பாரபட்சம் கிடையாது. ஆனால் ஒரு ஞானி தனது சுயசொரூபத்தை பரமேஷ்வரனாக அடையாளம் காண்கிறான். எனவே அவன் நானாக மாறுகிறான், நான் அவனாக மாறுகிறேன்’, என்கிறார் பகவான். ‘மே மதம்என்றால்அது என் கருத்து’.

ஞானியானவன் தன்னிடமிருந்து வேறானவனாக ஏன் இல்லை என்பதற்கு பதிலளிக்கும் விதமாக தொடர்கிறார், : யுக்தாத்மா மாம் ஏவ அநுத்தமாம் 3திம் ஆஸ்தி2:. யாருடைய மனமானது என்னிடம் லயித்துள்ளதோ, யோகத்தில் நிலைத்திருக்கிறதோ அந்த யுக்த-ஆத்மா, மிக உத்தமமான கதியாகிய என்னையே கடைபிடித்து நிற்பதால் அவன் ஈஷ்வரனாகிய என்னிடமிருந்து வேறானவனாக இல்லை. ஆகவே அவன் எனக்கு மிகப் பிரியமானவன். அநுத்தமாம் 3திம் என்பது அதற்கு மேலானதாக எந்தவொரு முடிவுமற்ற மிக உயரிய முடிவைக் குறிக்கிறது

=> பக்தி:

பக்தி என்பது இந்த அறிவை பெறுவதற்காக, இந்த முடிவை அடைவதற்காக என்பதைச் சுட்டிக் காட்டவே இங்கு ஞானி இவ்விதம் புகழப்படுகிறான். பக்திக்காகவே ஞானம் என்று சொல்பவர்களும் உள்ளனர்; அதாவது ஈஷ்வரனைப் பற்றிய அறிவு அவரின் மீது பக்தியை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஆனால் ஈஷ்வரனைப் பற்றிய முழு ஞானத்தினால், இறையை ஆத்மாவுடன் ஐக்கியப்படுத்தும் இந்த அறிவினால் பக்தி முழுமையை அடைந்து, ஒடுக்கத்தை அடைகிறது. அந்த நிலை வரை பக்தி; அதன் உச்சம் ஞானம். இதிலிருந்து பக்தி என்பது ஞானத்திற்கு பின் அல்ல, அது ஞானத்திற்கு முன் என்பது தெளிவாகிறது; பக்தி என்பது ஞானத்திற்காக, ஞானமே பக்தி.

பரம-ப்ரேம-ஸ்வரூப’, முழுமையான அன்பு, என்பது பக்தியின் வரையறை ஆகும். அதாவது நேசிக்கும் பொருளுக்கும் நேசிப்பவருக்கும் இடையில் எந்தவித வித்தியாசமும் இல்லை; மற்றொன்று இல்லாத நிலை, அநந்ய. பக்தனும் பக்தி செலுத்தப்படும் இடமும் ஒன்றே. இப்படிப்பட்ட பக்தி ஞானத்தை தவிர வேறில்லை.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

முழு மனதுடன் தொண்டுபுரியும் வேலைக்காரனிடத்து எஜமானனுக்கு அதிகப் பிரியம் ஏற்படுகிறது. அவனுடைய தூயபாங்கையும் திறமையையும் கண்டு திருப்தியடைந்து தம்முடைய ஸ்தானத்திலேயே வேலைக்காரனை வைக்கவும் அவர் செய்வார். பகவானும் தம் பக்தனிடத்து இங்ஙனம் செய்கிறார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------