செவ்வாய், 21 மார்ச், 2023

ஞானவிக்ஞான யோகம் 7.19 - 7.20

||7.19|| ஞானி மேலும் சிறப்பிக்கப்படுகிறான்:

बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते

वासुदेव: सर्वमिति महात्मा सुदुर्लभ: ।। १९ ।।

3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்3யதே । 

வாஸுதே3வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது3ர்லப4: ।। 19 ।।


बहूनां जन्मनाम् अन्ते  3ஹூநாம் ஜந்மநாம் அந்தே  பல பிறவிகளின் இறுதியில்   ज्ञानवान्  ஜ்ஞாநவாந்  ஞானி   सर्वं वासुदेव: इति   ஸர்வம் வாஸுதே3: இதி  யாவும் வாசுதேவ சொரூபம் என்று   मां  மாம்  என்னை   

प्रपद्यते  ப்ரபத்3யதே  வணங்கி வந்தடைகிறான்   : महात्मा  : மஹாத்மா  அத்தகைய மஹாத்மா    

सुदुर्लभ:  ஸுது3ர்லப4:  மிக அரியவன்.


பல பிறவிகளுக்குப் பிறகே, ‘யாவும் வாசுதேவ சொரூபம்என்று ஞானி என்னை வணங்கி வந்தடைகிறான். அத்தகைய மஹாத்மா கிடைப்பதற்கரியவன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனேஎன்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.


விளக்கம்:

பல பிறவிகளின் இறுதியில் - 3ஹூநாம் ஜந்மநாம் அந்தே, ஞானி - ஜ்ஞாநவாந், என்னை அடைகிறான் - மாம் ப்ரபத்3யதே. ஒருகால் ஒருவன் இப்பிறவியில் ஆரம்பித்தால், பல பிறவிகளுக்குப் பிறகுதான் அவன் ஞானியாகிறான் என்பது இதன் பொருளா? எனில், இல்லைஞானம் அடைவதற்குத் தேவையான புண்ணியத்தை பல பிறவிகளில் சேகரித்தான்(ப்ராப்த பரிபாஹ ஜ்ஞாந:) என்பதை3ஹூநாம்என்ற சொல் குறிப்பதாக சங்கரர் கூறுகிறார். அடிப்படைப் பிரச்சனையை உணர்ந்து தீர்வு காணத் தொடங்குவதற்கு முன், ஒருவனுக்கு எத்தனையோ ஜென்மங்கள் உள்ளன. ஜ்ஞாநவாந்என்ற வார்த்தையை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம்

(1) பல ஜென்மங்களுக்குப் பிறகு, இந்த அறிவைப் பெறுவதற்குரிய பக்குவப்பட்ட மனதை உடையவனாக ஆகிறான். இந்த முதிர்ச்சியின் காரணமாக, அவன் என்னை அடைகிறான், மாம் ப்ரபத்3யதே. அப்படிப்பட்ட ஒருவனே ஞானி ஆகிறான்

(2) ஞானத்தை உடையவன் ஜ்ஞாநவாந்; அவனே என்னை வந்தடைகிறான்.


=> யாவும் வாசுதேவ சொரூபம்:

ஞானி எப்படி பகவானை அடைகிறான்? அசைவது, அசையாதது, மேன்மக்கள், கீழ்மக்கள், நல்லார், பொல்லார் என அனைத்தும் வாசுதேவனின் சொரூபம் என்ற ஞானத்தினால். ‘வாசுதேவஎன்றால் ப்ரத்யகாத்மன், ஆத்மாவிலிருந்து பிரிக்கப்படாதவன், எதிலும் ஊடுருவி நிலைத்திருப்பவன் எனப் பொருள்படுகிறது. ஜீவனின்நான்மற்றும் ஈஷ்வரனின்நான்ஆகியவற்றிற்கு இடையேயான ஐக்கியத்தை அடையாளம் கண்டவன், இங்கு இருப்பவை அனைத்தும் வாசுதேவ சொரூபம் என்கிற திருஷ்டியைப் பெறுகிறான். இந்த காரியங்கள் அனைத்தும் காரணத்திடமிருந்து பிரிக்கப்படாதவை. ‘ஸத்என அவனால் புரிந்துகொள்ளப்பட்ட அந்த காரணத்திற்கு வேறாக எந்தவொரு இருப்பும் இல்லை. ப்ரம்மமாக இருக்கின்ற ஆத்மாவே அந்த ஸத்யவஸ்து என அறிந்த அவனுக்கு அனைத்தும் வாசுதேவனே, எல்லாம் சிவமயமே. காண்கின்ற அனைத்தும் பரமாத்ம சொரூபமாகத் தென்படும்போது ஞானம் பூர்த்தியாகிறது. இந்த அறிவினால் அவன் என்னை அடைகிறான்.


=> மஹாத்மா:

அத்தகைய மஹாத்மா கிடைப்பதற்கரியவன்: மஹாத்மா ஸுது3ர்லப4:. அவன் என்னை தனது ஆத்மாவாகவும் மேலும் அனைத்து உயிரினங்களின் ஆத்மாவாகவும் அறிவதனால் மஹாத்மா ஆகிறான். மஹாந் - எல்லையற்றது, பெரியது. பொதுவாக மஹாத்மா என்பது எந்தவொரு துறவிக்கும் சாதுவிற்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். அங்குஆத்மாஎன்பது அந்த-கரணத்தையும், மஹாத்மா என்பது பெரிய உன்னதமான மனதையுடையவர் என்பதையும் குறிக்கிறது. ஆனால் இங்கு பகவான் இதை பயன்படுத்தியிருக்கும் சூழலின் காரணமாக, யார் தன்னை ப்ரம்மமாக அறிகிறாரோ அவர் மஹாத்மா. அவருக்கு இணையானவர் யாருமில்லை, ஏனெனில் எல்லையற்ற நிலையில் மேலும் முன்னேற எதுவுமில்லை. இத்தகைய மஹாத்மாக்களை கண்டறிவது மிக மிக அரிது. இதனாலேயே அனைவரும் எனக்குப் பிரியமானவர்களாக இருந்தாலும் அதில் ஞானி தனித்துவம் பெறுகிறான்

-----------------------------------------------------------------------------------------------------------------------------

||7.20|| மேற்கூரிய ஞானம் இல்லாதவர்கள் என்ன செய்கிறார்கள்:

कामैस्तैस्तैर्हृतज्ञाना: प्रपद्यन्तेऽयदेवता

तं तं नियममास्थाय प्रकृत्या नियता: स्वया ।। २० ।।

காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்3யந்தேऽந்யதே3வதா: । 

தம் தம் நியமமாஸ்தா2ய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ।। 20 ।।


तै: तै:  தை: தை:  அந்தந்த   कामै:  காமை:  ஆசைகளால்   

हृतज्ञाना:  ஹ்ருதஜ்ஞாநா:  ஞானம் அபகரிக்கப்பட்டவர்கள்   

तं तं नियमम् स्थाय தம் தம் நியமம் ஆஸ்தா2  அந்தந்த நியமத்தைக் கையாண்டு   

स्वया प्रकृत्या  ஸ்வயா ப்ரக்ருத்யா  தங்களுடைய இயல்பினால்   नियता:  நியதா:  தூண்டப்பட்டு   

अनय देवता:  அந்ய தே3வதா:  அன்னிய தேவதைகளை   प्रपद्यन्ते  ப்ரபத்3யந்தே  போற்றுகின்றனர்.


விதவிதமான ஆசைகளினால் அறிவை இழந்தவர்கள் அவரவர் இயல்பினால் தூண்டப்பட்டு, வெவ்வேறு நியமங்களைக் கையாண்டு, பிற தெய்வங்களைப் போற்றுகின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.


விளக்கம்:

துன்புற்றவன்(ஆர்த:) மற்றும் பொருளின்பம் தேடுபவன்(அர்த்தார்த்தீ) போன்ற ஷகாம பக்தர்களின், அதாவது ஆசையுடன் கூடியவர்களின் பக்தி செலுத்தும் விதம் மற்றும் அதன் பலன் குறித்து சுலோகம் இருபது முதல் இருபத்திமூன்று வரை விளக்கமளிக்கிறார்.


=> அறிவு அபகரிக்கப்பட்டவர்கள்:

ஹ்ருதஜ்ஞாநா: ஞானம் அபகரிக்கப்பட்டவர்கள். ஹ்ருத எனில் கொள்ளையடிக்கப்பட்டது, எடுத்துச் செல்லப்பட்டது என்பது பொருள்

   * எது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது? எனில் ஞானம், பகுத்தறியும் அறிவு. அதாவது, எது உண்மை(ஸத்யம்) - எது தோற்றம்(மித்யா) எனும் அறிவு, எது நன்மை(அர்த்த) - எது தீமை(அநர்த்த) எனும் அறிவு இவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுவிட்டதால் தங்களுக்கு என்ன வேண்டும் என்பது குறித்த தெளிவு அவர்களிடம் இருப்பதில்லை.

   * எதனால் இந்த அறிவானது பறிக்கப்பட்டது? விதவிதமான ஆசைகளால்காமை: தை: தை:. ஆசை என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதால், இங்கு அது பன்மையில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் அவர்களுக்கேயுரிய தனிப்பட்ட ஆசைகளினால் அறிவு இழக்கப்பட்டவர்களாக ஆகிறார்கள். விஷயமில்லாமல் ஆசை என்ற ஒன்று இருக்க முடியாது. ஆகவேதான் சங்கரர், மகன் செல்வம் சொர்க்கம் மற்றும் பற்பல பொருட்களால் அறிவு சூறையாடப்படுகிறது புத்ர-பசு-ஸ்வர்காதி விஷயை:என்கிறார். இதில்புத்ர எனில் மகன். சொத்து இருப்பவர்கள் அதைக் கட்டிக் காக்கவும், இல்லாதவர்கள் அதை சம்பாதித்து குடும்ப தரத்தை உயர்த்தவும் ஒரு வாரிசாக மகனை விரும்புகின்றனர். ஒவ்வொருவரும் தனது மகனின் வடிவத்தில் தொடர்ந்து வாழவும், மேலும் மதரீதியாக தனக்கு இறுதிச்சடங்கு செய்யவும் சந்ததியை விரும்புகின்றனர். பசு, கால்நடைகள் என்பது அந்த காலகட்டத்தில் அனைத்து வகையான செல்வங்களுக்கும் அடையாளம். அச்சமுதாயத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை ஒருவருக்குச் சொந்தமான நிலத்தின் அளவைக் குறித்தது. ஸ்வர்க என்பது சொர்க்கத்தையும், மற்றும் ஆதி என்ற சொல் பதவி, அதிகாரம் மற்றும் புகழ் போன்றவற்றையும் குறிக்கிறது.

இவ்விதமான பற்பல ஆசைகளினால் தூண்டப்பட்டவர்களாக இவர்கள் ஆத்ம-அனாத்ம மற்றும் நித்ய-அநித்ய வஸ்து குறித்து பகுத்தறிவை இழந்து, தங்களது ஆசைகளை நிறைவேற்றுவதிலேயே காலத்தை கழிக்கின்றனர்


=> சிறு தேவதைகளை வணங்குதல்:

இவ்விதம் அவர்களது ஆசைகளை நோக்கிச் செல்லும்போது பலவிதமான இடையூறுகளைச் சந்திக்கிறார்கள். அவற்றைத் தடுக்கவும், அவர்களது முயற்சிகளின் பலனை மேம்படுத்தவும், அவர்கள் வெவ்வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். அந்ய தே3வதா: ப்ரபத்3யந்தேஅன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர். பிற தெய்வங்கள் என்பவை, யாவுமாகிய சர்வேஷ்வரனுக்கு அன்னியமானைவைகளல்ல. அவரது சிறு சிறு அம்சங்களே அன்னிய தேவதைகள் எனப்படுகின்றன. உலகிலுள்ள அனைத்தும் ஈஷ்வரனின் சொரூபம். சாஸ்திரத்தில், ஒவ்வொரு சக்திக்கும் அதற்கான அதிஷ்டான தேவதைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஷகாம பக்தனானவன் அவனது ஆசைகளுக்கேற்ப, தேவையான ஐஸ்வர்யத்தை கொடுக்கும் தேவதையை வழிபடுகிறான். அதாவது, அவன் பகவானை தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் ஒரு கருவியாகத்தான்(சாதனம்) பார்க்கிறான். இறைவனைப் பற்றிய உண்மையான அறிவு அவனுக்கு இல்லை; ஐஸ்வர்யத்தையே பிரதானமாகக் கருதுகிறான்.


=> குணத்தின் தூண்டுதல்:

தங்களுடைய சொந்த குணங்களால் உந்தப்பட்டுஸ்வயா ப்ரக்ருத்யா நியதா:, அவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை அடைவதற்காக மற்ற தேவதைகளை அணுகுகிறார்கள். எந்தவொரு தெய்வத்தை வழிபடுவதன் மூலமும் அதே பலனை அடைய முடியுமெனில் அவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? இது அனைத்தும் அவரவர் சொந்த இயல்பை(சம்ஸ்காரம்) பொறுத்தது, என்கிறார். ஒருவேளை அவன் தனது முந்தைய ஜென்மத்திலோ அல்லது இந்த ஜென்மத்திலோ அந்த குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட்டிருக்கலாம். ஏற்கனவே செய்தவற்றில் சில விஷயங்கள் ஒருவனை ஈர்க்கின்றன, சில விஷயங்கள் ஈர்ப்பதில்லை. அவைகள்தான் சம்ஸ்காரங்களாகப் பதிகின்றன. இந்த பதிவுகளைப் பொறுத்தே அவனது இயல்பு அமைகிறது. எனவே, தங்களது தனித்துவமான விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு இயல்பிற்கு ஏற்றார்போல் தேவதைகளைத் தேர்ந்தெடுத்து, அந்த தெய்வத்திற்கான வழிமுறையைப் பின்பற்றி வழிபடுகின்றனர்

* ஸத்வ குணமுடையவர்கள்ஸத்வ குண பிரதான தெய்வங்களை வழிபடுகிறார்கள். பூஜை, பிரார்த்தனை, உபாசனை, மந்திரம் ஜபித்தல் போன்ற நாம் அன்றாடம் வழிபடும் சாத்விக வழிபாட்டு முறையை பின்பற்றுகிறார்கள்.

* ரஜோ குணமுடையவர்கள்அசுரர்கள்(ராக்ஷச) மற்றும் யக்ஷர்களைப் போற்றுகிறார்கள். பெருமைக்காகவும் பாராட்டைப் பெறவும் நான்கு பேருக்கு தெரிய பகட்டாக பூஜை செய்கிறார்கள்

* தமோ குணமுடையவர்கள்பேய் மற்றும் பூதகணங்களை வழிபடுபவர்கள். மேலும் அலகு குத்துதல், உடலை துளைத்து வருத்தி தேரிழுத்தல் போன்ற வழிபாட்டு முறையை கொண்டவர்களும் தமோ குணமுடையவர்களே.

அவரவர்களின் குண இயல்பிற்கு ஏற்றவாறு வழிபடும் தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் அமைத்துக் கொள்கின்றனர்.


=> நியமங்கள்:

அவர்கள் எவ்விதம் சிறு குறு தேவதைகளை வழிபடுகிறார்கள்? தம் தம் நியமம் ஆஸ்தா2அந்தந்த நியமத்தைக் கையாண்டு, அந்தந்த தேவதைகளை அழைக்கின்றனர். தம் தம் என இருமுறை சொல்வது, ஒவ்வொரு விருப்பத்திற்கும் ஏற்றபடி ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறை உள்ளது என்பதைக் குறிக்கிறது. உதாரணமாக ஒருவருக்கு மகன் வேண்டும் எனில் அவர் மழையை வரவழைக்கும் யக்ஞத்தையோ சடங்கையோ செய்ய முடியாது. ‘புத்ர-காமேஷ்டிஎனக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட சடங்கையே மகன் பிறப்பதற்காக அவர் செய்ய வேண்டும். இந்த வேதச்சடங்கை எப்படிச் செய்ய வேண்டும், அதற்கான தேவதைகள் யார், காணிக்கைகள் என்ன, மந்திரங்கள் என்ன, ஆஹுதிகளாக என்ன கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கான பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இவை அனைத்தும் நியமங்கள்(நியமம்) என்று அழைக்கப்படுகின்றன. ஆஸ்தா2 எனில்இந்த நிபந்தனைகளைப் பின்பற்றுதல்’.

இவ்விதமாக தங்களது சொந்த குணத்தால் தூண்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நியமங்களைப் பின்பற்றி, அவர்கள் ஆத்மாவாக வீற்றிருக்கும் வாசுதேவனைத் தவிர மற்ற தேவதைகளை வழிபடுகிறார்கள். இதில் தவறேதும் இல்லை. ஆனால் ஒரே பிரச்சனை என்னவெனில், அவர்கள் தர்மத்தில் அல்லது அர்த்தத்தில் அல்லது காமத்தில்(தர்மார்த்தகாமம்) மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் இவைகளனைத்தும் வாசுதேவனே எனப் பார்ப்பது மிகவும் கடினமாகிறது. அது குறித்த அறிவைப் பெறும் ஆசையும் அவர்களுக்கு எழுவதில்லை. அந்த திருஷ்டியைப் பெற அவர்கள் இந்த ஆசைகளின் எல்லைகளைப் பார்த்து, ஆத்மாவை புரிந்து கொள்ளும் அறிவைப் பின்தொடர வேண்டும்; நித்ய-அநித்ய வஸ்து குறித்த விவேகம் வேண்டும்; மோக்ஷ ஆசை இருக்க வேண்டும்.

அர்ஜுனனும் கூட, இப்போது வரை தர்ம அர்த்தத்தில் மட்டுமே ஆர்வமாக இருந்தான். கிருஷ்ணர் அவனுடன் பேச ஆரம்பித்து ஒன்றிரண்டு மணி நேரம்தான் கடந்திருக்கும். சில அத்தியாயங்களுக்கு முன்பு, சில மணிநேரங்களுக்கு முன்புதான், அவன் மோக்ஷத்தில் ஆர்வம் காட்டினான். அதற்கு முன், அர்ஜுனன் போரிடுவதில், தர்மத்தை நிலைநாட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தான்.

எனவே, பல்வேறு ஆசைகளால் பகுத்தறிவை இழந்து, அவரவர்களின் குணங்களால் மனநிலைகளால் உந்தப்பட்டு, வெவ்வேறு தேவதைகளை தேர்ந்தெடுத்து, நியமப்படி வழிபட்டு இக பர ஆசைகளை தன்வசமாக்குவதில் குறியாய் உள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் என்னிடம் வருவதில்லை.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தாழ்ந்த சுபாவமுள்ளவர்கள்தான் வியாதிகளைக் குணமாக்கல், வியாஜ்யங்களை வெல்லல், நீர்மேல் நடத்தல் முதலிய சித்திகளை நாடி ஓடுவார்கள். உண்மையான பக்தர்களோ ஈஷ்வரனுடைய பாதாரவிந்தங்களைத் தவிர வேறெதையும் நாடுவதில்லை.

-----------------------------------------------------------------------------------------------------------------------------