||6.32|| மற்றவர்களின் அனாத்மாவை ஞானி எப்படிப் பார்க்கிறான்:
आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन ।
सुखं वा यदि वा दु:खं स योगी परमो मत: ।। ३२ ।।
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பச்1யதி யோऽர்ஜுந ।
ஸுக2ம் வா யதி3 வா து3:க2ம் ஸ யோகீ3 பரமோ மத: ।। 32 ।।
अर्जुन அர்ஜுந அர்ஜுனா य: ய: யார் सर्वत्र ஸர்வத்ர எங்கும்
आत्मौपम्येन ஆத்மௌபம்யேந தன்னை உபமானமாகக் கொண்டு सुखं वा ஸுக2ம் வா சுகத்தையும்
यदि वा दु:खं யதி3 வா து3:க2ம் துக்கத்தையும் समं ஸமம் சமமாக पश्यति பச்1யதி பார்க்கிறானோ
स: योगी ஸ: யோகீ3 அந்த யோகி परम: பரம: மேலானவன் என்று मत: மத: கருதப்படுகிறான்.
அர்ஜுனா, தன்னையே உவமையாகக் கொண்டு இன்பத்தையும் துன்பத்தையும் எங்கும் ஒப்பக் காண்பவன் பரமயோகியெனக் கருதப்படுகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.
விளக்கம்:
சென்ற சுலோகத்தில் கிருஷ்ணர், யோகி எதைச் செய்தபோதிலும் என்னிடத்திலேயே இருக்கின்றான் — ஸர்வதா2 வர்தமாந: அபி மயி வர்ததே, என்று கூறினார். இது அதர்மமான விஷயங்களைச் செய்தபோதிலும், எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். ஆகவே ‘ஸர்வதா’ இங்கு மேலும் விளக்கப்படுகிறது. அதாவது, அதர்மத்தின் எந்தவொரு செயலையும் ஒரு ஞானியால் செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை, அதை அவன் ஒருபோதும் செய்ய முடியாது எனக் கூறி தீர்த்து வைக்கிறார். ஏனெனில் ஒரு ஞானி தன்னையே அளவுகோலாகக் கொள்வதால் அவனால் அவ்விதம் நடக்க முடியாது.
தன்னையே உதாரணமாகக் கொண்டவன், எல்லா உயிர்களையும் தனக்குச் சமமாக பார்க்கின்றான் — ஸர்வத்ர ஸமம் பச்1யதி. அவன் தனது உடலையும் மனதையும் எப்படி பாவிக்கின்றானோ அதுபோலவே மற்ற உடலையும் மனதையும் நடத்துகின்றான். சுலோகத்தின் இரண்டாவது வரியில் இந்த சமத்துவ நோக்கு சுக துக்கத்தின் அடிப்படையில் சுட்டிக் காட்டப்படுகிறது. எனது நலன், மகிழ்ச்சி என்னால் விரும்பப்படுவதால் அதை நோக்கி நான் செல்கிறேன்; இதுவே மற்றவர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு உயிரினமும் அதனது சொந்த சுகத்தில் அதேயளவு விருப்பத்துடன் உள்ளது. மேலும் துக்கம் என்பது எனக்கு எவ்விதம் விரும்பத்தகாததோ அவ்விதமே மற்றவருக்கும் விரும்பத்தகாததாக உள்ளது. இவ்விதம் தன்னை அளவுகோலாக எடுத்துக் கொண்டு அனைவரையும் தனக்குச் சமமானவனாகப் பார்க்கின்றான். இங்கு ‘தன்னை’ என்பது அனாத்ம நோக்கில் உடலையும் மனதையும் குறிக்கிறது. இவ்விதம் அவன் பார்ப்பதனால் அவன் அஹிம்சைவாதியாக ஆகி விடுகிறான் என சங்கரர் தனது பாஷ்யத்தில் குறிப்பிடுகிறார். ஞான நிஷ்டை அடையாதவரை, நம்மைப் போலவே இனியொருவனை நடத்தும் இந்த தரிசணம் சாத்தியமல்ல.
=> தர்மத்தின் அடிப்படை:
தர்மம் என்பது எப்படி உருவாகிறது என்பதை இங்கே அறிந்து கொள்ள முடியும். உலகளாவிய நோக்கில் மக்களின் பரஸ்பர எதிர்பார்ப்பே தர்மத்தின் அடிப்படையாக ஆகிறது. நான் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைத்தான் மற்றவர்கள் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். சுகம் எனக்கு பிரியமானது, துக்கம் எனக்கு விருப்பமற்றது எனில் அது மற்றவர்களுக்கும் அவ்விதமே. இந்த பொதுவான அடித்தளமே தர்மத்திற்கு அடிப்படையாகிறது.
எல்லா உயிர்களிடத்தும் சமமான பார்வையைக் கொண்டிருப்பதால், இங்கு விவாதிக்கப்படுபவன் விரும்பத்தகாதது என எதையும் செய்வதில்லை. ஆதலால், ‘அப்படிப்பட்டவன் அதர்மம் என்று கருதும் செயல்களைச் செய்வானா?’ என்ற கேள்விக்கு கிருஷ்ணர் ‘இல்லை!’ என்கிறார். ஞானி தனது நலனைப் போலவே மற்றவர்களின் நலனையும் கருதுவதால் அது சாத்தியமில்லை. தனக்கு கெட்டது என்பது மற்றவர்களுக்கும் கெடுதலே. தான் காயப்படுவதை விரும்பவில்லை எனும்பொழுது, அவன் வேறு யாரையும் காயப்படுத்தப் போவதில்லை. இதனால் தீங்கு-செய்யாமை, அஹிம்சை, ஞானிக்கு இயல்பாகிறது.
=> அஹங்காரம்(ஈகோ):
பிறரைக் காயப்படுத்துவது போன்ற எந்தக் குற்றத்தையும், அல்லது அதர்மமாகக் கருதப்படும் எந்தவொரு செயலையும் ஆராயும்போது, அதன் பின்னால் எப்போதும் ஒரு சுயநலமும் அஹங்காரமும் இருக்கும். அஹங்காரம் என்பது சுய-அறியாமையை அடிப்படையாகக் கொண்டது. ஆத்மாவைப் பற்றிய இந்த அறியாமை நீங்கிவிட்டால், எஞ்சியிருப்பது பரப்ரம்மம் மட்டுமே. எந்த அஹங்காரமும் இல்லை. அஹங்காரம் என்ற ஒன்றே இல்லாதபோது, முறையற்ற செயல்களைச் செய்பவனா என்ற கேள்வி அங்கு அர்த்தமற்றதாகிறது. அவன் ஈஷ்வரனிடத்தில் இருக்கின்றான் — மயி ஏவ வர்ததே. இப்படிப்பட்ட இயல்புடையவன் யோகிகளில் மேலனாவன் என கருதப்படுவதாக பகவான் கூறுகிறார் — பரம: மத:.
=> இரண்டாவது பொருள்விளக்கம்:
ஸுக2ம் வா யதி3 வா து3:க2ம், இந்த சுலோகத்தில் ‘சுகம் அல்லது துக்கம்’ என்பதிலுள்ள ‘வா’ என்ற சமஸ்கிருத சொல்லைக் கொண்டு இதை இனியொரு கோணத்திலும் பகுப்பாய்வு செய்யலாம். பொதுவாக சூழ்நிலைகளை, சுகத்தை கொடுப்பவை மற்றும் துக்கத்தை கொடுப்பவை என இரு வகைப்படுத்தலாம். இவை இரண்டையும் ஞானி சமமாகப் பார்க்கின்றான் — ஸமம் பச்1யதி. அதாவது இவனுக்கு சுகமும் துக்கமும் ஒன்றுதான். ஆத்மாவாகிய தன்னையே உவமையாகக் கொண்டு இவ்விரு சூழ்நிலையையும் சமமாகப் பார்க்கின்றான். இது எப்படி சாத்தியம்?
ஆத்மாவின் சொரூபத்தை முழுமையானது; பூரணமானது என இவன் உணர்ந்துள்ளதால், அதன் அடிப்படையிலேயே சுக துக்கத்தை எதிர்கொள்கின்றான். சுக-துக்கம் இரண்டும் முழுமைக்குள்தான் இருக்கின்றன. இதை வேறு விதமாகச் சொல்வதானால், சுகம் வரும்போது ஒருவனின் முழுமை அதிகரிப்பதில்லை; துக்கம் வரும்போது முழுமை குறைந்தும் போவதில்லை. இருநிலையிலும் அவன் பூரணத்துடனேயே இருக்கின்றான். அதாவது, அவன் எப்போதும் ஈஷ்வரனிடமே இருக்கின்றான் — மயி ஏவ வர்ததே. எந்தவொரு சூழ்நிலையும் அவனை ஈஷ்வரனிடமிருந்து விலக்காது.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
||6.33|| ஞானநிஷ்டைக்கான தடைகள்:
अर्जुन उवाच
योऽयं योगस्त्वया प्रोक्त: साम्येन मधुसूदन ।
एतस्याहं न पश्यामि चञ्चलत्वात्स्थितिं स्थिराम् ।। ३३ ।।
அர்ஜுந உவாச
யோऽயம் யோக3ஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மது4ஸூத3ந ।
ஏதஸ்யாஹம் ந பச்1யாமி சஞ்சலத்வாத்ஸ்தி2திம் ஸ்தி2ராம் ।। 33 ।।
अर्जुन: அர்ஜுந: அர்ஜுனன் उवाच உவாச சொன்னது.
मधुसूदन மது4ஸூத3ந ஓ மதுசூதனா साम्येन ஸாம்யேந சமமாகப் பார்த்தல் என்ற
य: अयं योग: ய: அஹம் யோக3 யாதொரு இந்த யோகம் त्वया த்வயா உங்களால்
प्रोक्त: ப்ரோக்த: சொல்லப்பட்டதோ एतस्य ஏதஸ்ய இதனுடைய स्थिराम् ஸ்தி2ராம் உறுதியான स्थितिं ஸ்தி2திம் இருப்பை चञ्चलत्वात् சஞ்சலத்வாத் சஞ்சலத்தினால்
अहं அஹம் நான் न पश्यामि ந பச்1யாமி நான் பார்க்கவில்லை.
ஓ மதுசூதனா, ‘சமமாகப் பார்த்தல்’ என்று தாம் புகட்டிய இந்த யோகமானது உறுதியாக நிலைத்திருக்கும் என்று அலைகின்ற என் மனதுக்குத் தோன்றவில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.
விளக்கம்:
சுலோகம் 33 முதல் 36 வரை ஞானநிஷ்டைக்கான தடைகளும், அதை களையும் உபாயமும் சொல்லப்படுகின்றது — யோக ப்ரதிபந்த: தஸ்ய நிவாரண உபாய:. மேற்கூரிய விதமாக யோகம் விளக்கப்படும்போது அர்ஜுனனுக்கு ஓர் ஐயப்பாடு உண்டாயிற்று. ‘எனக்கு கிரஹண சக்தி உள்ளது; ஆனால் தாரண சக்தி இல்லை’ என்பது அர்ஜுனனின் நிலைப்பாடாக உள்ளது. அதாவது புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால் அதில் நிற்கமுடியவில்லை. மனதிலுள்ள விக்ஷேபம் என்ற தோஷத்தினால், பெறப்பட்ட அறிவில் அதனால் தொடர்ந்து நிலைத்திருக்க முடியவில்லை என்ற தனது நிலையை அர்ஜுனன் பகவானிடம் எடுத்துரைக்கின்றான்.
பொதுவாக வேதாந்த ஞானத்திற்கு தகுதியான அதிகாரிகளை மூன்றாகப் பிரிக்கலாம்:
(1) உத்தம அதிகாரி - கிரஹண மற்றும் தாரண சக்தி உடையவர்கள்.
(2) மத்யம அதிகாரி - கிரஹணம் இருக்கும்; தாரண சக்தி இருக்காது.
(3) அதம அதிகாரி - கிரஹண மற்றும் தாரண சக்தி இரண்டும் அற்றவர்கள்.
=> அர்ஜுனனின் மனநிலை:
மனம் உள்ள எவராலும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையை அர்ஜுனன் இங்கு முன்வைக்கிறான். கிருஷ்ணர் இதுவரை கற்பித்தது அர்ஜுனனுக்கு புரிந்தது போலத் தோன்றினாலும், ஒரு முறையான சந்தேகம் எழுந்தது. முழு உபதேசத்தையும் அர்ஜுனன் இரு குடைக்கு கீழ் வைத்து நோக்கினான். ஒன்று, உறுதியான மற்றும் நிலைத்த மனமானது இந்த அறிவிற்கான சரியான பாத்திரம்; இரண்டு, இந்த அறிவு தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒருமுகப்பாட்டை அடைந்த மனம் இருக்கும்பட்சத்தில், முறையான விசாரணையின் மூலம் அறிவில் தெளிவைப் பெற்றுவிடலாம். எனவே, அர்ஜுனனின் கேள்வி மனதை நிலைப்படுத்துவதற்கான உபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அவனது மனம் மிகவும் கொந்தளிப்புடன் சஞ்சலமானதாக இருப்பதை புரிந்தவனாக, அறிவைப் பெறும் பொருட்டு இந்த மனதை ஒருமுகப்படுத்தும் உபாயத்தை இங்கு கேட்கின்றான்.
அர்ஜுனன் கிருஷ்ணனை மதுசூதனா, மதுவை அழித்தவனே என்று அழைக்கின்றான். மது என்பது கிருஷ்ணரால் கொல்லப்பட்ட அசுரனின் பெயர். மது என்பது தேன் என்றும் பொருள்படும். மேலும் சமஸ்கிருதத்தில் அஹங்காரத்தின் மற்றொரு பெயர் மது. ஒவ்வொருவரும் தனது சொந்த அஹங்காரத்தை விரும்புகிறவர்களாகவும் அதை பெரிதுபடுத்த எத்தனிப்பவர்களாகவும் உள்ளனர். சரியான ஞானத்தைக் கொண்டு இந்த பொய்யான அஹங்காரத்தை அழிக்க வல்ல குருவாக இங்கு கிருஷ்ணர் இருப்பதால், அர்ஜுனன் அவரை மதுசூதனா என்று அழைக்கின்றான்.
பகவானால் இதுவரை உபதேசிக்கப்பட்ட இந்த சமத்துவ தரிசணத்தில் தன்னால் நிலைத்திருக்க முடியாது என்பதை அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு அதற்கான காரணத்துடன் தெரிவிக்கின்றான். ஏனெனில் தனது மனம் எப்பொழுதும் கொந்தளிப்புடனும் நிலைத்திராத தன்மையுடனும் இருக்கின்றது - சஞ்சலத்வாத். இது தொடரும் பட்சத்தில் பகவான் புகட்டிய சம தரிசணத்தை அடைவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிவிடும். இந்நிலைபாட்டிற்கான சொந்த காரணங்களையும் தர்க்கங்களையும் மனம் கொண்டுள்ளதாக இருக்கிறது. இதனால் இயல்பாகவே, அர்ஜுனன் இதைப் பற்றி என்ன செய்ய முடியும் என்பதை அறிய விரும்புகின்றான். ஆகவே அடுத்த சுலோகத்தில் தனது கேள்வியை மேலும் தெளிவுபடுத்துகின்றான்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------