சனி, 17 டிசம்பர், 2022

தியான யோகம் 6.36 - 6.38

||6.36|| யோகத்தை அடைபவன் யார், அடையாதவன் யார்?

असंयतात्मना योगो दुष्प्राप इति मे मति:

वश्यात्मना तु यतता शक्योऽवाप्तुमुपायत: ।। ३६ ।।

அஸம்யதாத்மநா யோகோ3 து3ஷ்ப்ராப இதி மே மதி:

வச்1யாத்மநா து யததா 1க்யோऽவாப்துமுபாயத: ।। 36 ।।


असंयत त्मना   அஸம்யத ஆத்மநா  மனதை அடக்க முடியாதவனால்   योग:  யோக3:  யோகமானது   

दुष्प्राप:  து3ஷ்ப்ராப:  அடையமுடியாதது   इति  இதி  என்பது   मे   மே  என்னுடைய   मति:  மதி:  கருத்து   

तु து  ஆனால்   वश्यात्मना  வச்1யாத்மநா மனதை அடக்கியவனால்   उपायत:  உபாயத:  உபாயத்தால்   

यतता  யததா முயற்சி செய்கிறவனால்   अवाप्तुम् शक्य:  அவாப்தும் 1க்ய:  அடைய முடியும்.


மனதை அடக்காதவன் யோகம் அடையான் என்பது என் கருத்து. மனதை அடக்கி உபாயத்தால் முயலுபவனுக்கே அதை அடைய இயலும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன். தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.


விளக்கம்:

மனதை முயற்சி செய்து வசப்படுத்தவில்லையெனில் கண்டிப்பாக ஞானநிஷ்டையை அடைய முடியாது என பகவான் கூறுகிறார். தியானப்பயிற்சி எனும் அப்யாஸம் செய்யாதவன், மற்றும் வைராக்கியம் இல்லாதவனை பகவான் இங்குஅஸம்யத ஆத்மா’, மனதை கட்டுப்படுத்தாதவன் என்று அழைக்கிறார்.

  மேலும் அவரால் உபதேசிக்கப்பட்ட உபாயத்தை முறையாக அனுஷ்டித்து மனதை தன் வசப்படுத்தியவனைவச்1யாத்மநாஎன்கிறார். இப்படிப்பட்டவன் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்கின்றான். தனது முயற்சியால் இந்த விழிப்புணர்வை தக்கவைத்துக் கொண்டவன், யததா, மற்றும் மனதை கட்டுப்படுத்தியவனாலேயே சம தர்ஷணத்தை, ப்ரம்ம தர்ஷணத்தை அடைய முடியும்யோக3: அவாப்தும் 1க்ய:, என்கிறார்.


=> செய்யப்பட வேண்டியது:

இந்த யோகம் ஒரு குறிப்பிட்ட உபாயத்தின்(உபாயத:) மூலம் பெறப்படுகிறது என்று கிருஷ்ணர் இங்கு குறிப்பிடுகிறார். என்ன உபாயம்? இந்த சம தர்ஷணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் அப்யாஸமும் வைராக்கியமும் என சென்ற சுலோகத்தில் அவர் ஏற்கனவே கூறிவிட்டார். அப்யாஸம் மற்றும் வைராக்கியம் ஆகியவையே உபாயங்களாக இருப்பதால், அர்ஜுனன் யோகத்தைப் பெறுவது இனி கிருஷ்ணரின் கைகளில் இல்லை. ஏனெனில் கிருஷ்ணரால் ஏற்கனவே ஆத்ம-உபதேசம் சொல்லப்பட்டு விட்டதால்  இனி செய்யவேண்டியது அர்ஜுனனிடமே இருக்கிறது. அறிவைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள், தடைகள் இருந்தால் உபாயத்தின் மூலம் மனதை கவனித்து அர்ஜுனன்தான் அதை சரி செய்யவேண்டும். எனவேதான் கிருஷ்ணர் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதை குறித்து அதிகம் பேசவில்லை

ப்ரம்மம் - ஆத்மா போன்ற வஸ்துவைப் பற்றி ஒருவர் காலவரையின்றி பேசலாம்; ஞானியைக் குறித்தும், சம தர்ஷணத்தை குறித்தும் வெவ்வேறு கோணங்களில் விரித்து விவாதிக்கலாம். கிருஷ்ணரும் அவ்விதமே செய்கிறார்; அதனாலேயே கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன. ஆனால் இங்கு அர்ஜுனனின் சொந்த முயற்சியினால் செய்யப்பட வேண்டிய ஒன்று வருகிறது. எனவே கிருஷ்ணர் பெரிய விளக்கமேதும் அளிக்காமல் அதை அவ்விதமே விட்டுவிடுகிறார்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

என் குழந்தைகளே, நான் அக்காலங்களில் தியானம் செய்வதற்கு முன்னால் என் மனதிலுள்ள கெட்ட எண்ணங்கள், ஆசைகள் முதலான சகல கல்மஷங்களையும் அலம்பிச் சுத்தப் படுத்திவிட்டதாகப் பாவனை செய்துகொண்டு அதன் பிறகு பகவானை அவ்விடத்தில் எழுந்தருளப் பண்ணுவேன். நீங்களும் அவ்வாறு செய்யுங்கள்என்று ஶ்ரீ ராமகிருஷ்ணர் தமது சாதன நாட்களைப் பற்றி சிஷ்யர்களிடம் கூறுவார்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.37|| அர்ஜுனனின் சந்தேகம்:

अर्जुन उवाच

अयति: श्रध्दयोपेतो योगाच्चलितमानस:

अप्राप्य योगसंसिध्दिं कां गतिं कृष्ण गच्छति ।। ३७ ।।

அர்ஜுந உவாச

அயதி: ச்1ரத்34யோபேதோ யோகா3ச்சலிதமாநஸ:

அப்ராப்ய யோக3ஸம்ஸித்3தி4ம் காம் 3திம் க்ருஷ்ண 3ச்ச2தி ।। 37 ।।


अर्जुन उवाच   அர்ஜுந உவாச  அர்ஜுனன் சொன்னது

कृष्ण  க்ருஷ்ண  கிருஷ்ணா   श्रध्दया  ச்1ரத்34யா  சிரத்தையோடு  उपेत:  உபேத:  கூடியவனாய்   

अयति:  அயதி:   அற்ப முயற்சியுடையவனாய்  योगात्   யோகா3த்  யோகத்திலிருந்து   

चलितमानस:  சலிதமாநஸ:  தவறிய மனதையுடையவன்   

योगसंसिध्दिं   யோக3ஸம்ஸித்3தி4ம்  யோகம் நிறைவேறுவதை(யோகப்பலனை)  

अप्राप्य   அப்ராப்ய  அடையாமல்   कां गतिं गच्छति   காம் 3திம் 3ச்ச2தி   என்ன கதியை அடைகிறான்?


கிருஷ்ணா, சிரத்தையுடையோனாயினும் முயற்சி குறைவால் யோகத்திலிருந்து மனம் வழுவியவன், யோகம் நிறைவேறாது என்ன கதியையடைகிறான்?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?


விளக்கம்:

யோகத்தை பூர்த்தி செய்யாதவனைக் குறித்த ஒரு சந்தேகம் அர்ஜுனனுக்கு வருகிறது. பகவானால் உபதேசிக்கப்பட்ட இந்த உபாயத்தை உபயோகித்து தன்னால் மனதை வசப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அர்ஜுனனுக்கு இல்லாததால் இந்த சந்தேகத்தை அவன் கேட்கின்றான். அதற்காக பின்வரும் தகுதியையுடைய சாதகனை கற்பனை செய்கின்றான்.

கர்மயோகம் மூலம் மனத்தூய்மையை அடைந்து, ஓரளவு தியானத்தில் ஈடுபட்டு, சிரவணம் மற்றும் மநநத்தின் மூலம் ஞானத்தை அடைகிறான். அதைத் தொடர்ந்து நிதித்யாசனத்தில் ஈடுபட நினைத்து வைதிக மற்றும் லெளகிக கர்மங்கள் அனைத்தையும் துறந்து சந்யாசத்தை எடுத்துக்கொள்கிறான். இப்படிப்பட்டவன் நிதித்யாசன காலத்தின்போது நிஷ்டையை அடையாமல் இறந்து விடுகிறான். அப்படி யோகத்தில் தோல்வியடைந்து உயிர் துறப்பவனின் கதி என்னவாகும்?


=> சந்யாசியின் வாழ்க்கை:

சமூகத்தில் வாழ்வதன் மூலம் பெறக்கூடிய பல்வேறு இன்பங்களைத் தானே மறுத்து, ஒரு சந்யாசியானவன் உணவை யாசித்து வாழ்பவனாக, பிக்ஷு, ஆகிறான். அவனிடம் பணம் இல்லை, அவனுடைய அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாமல் தன் வழியில் என்ன வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு வாழ்கிறான். சம்சார வாழ்வு தரும் சில இன்பங்கள் கூட அவனுக்கு இல்லையென்றாலும், முக்தியை பெறும் நோக்கத்தோடு அவன் துறவறத்தை மேற்கொள்கின்றான். மோட்சத்திற்காகவே மற்ற மூன்று மனித நோக்கங்களான பாதுகாப்பு, இன்பம், மற்றும் தர்மம் (தர்மார்த்தகாமம்) ஆகியவற்றைக் கைவிடுகின்றான்.


=> சாதகனின் நிலை:

இங்கு உதாரணமாக அர்ஜுனன் எடுத்துக் கொண்ட சாதகன், யோகம் நன்மை பயக்கும் என்று சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை உடையவனாக இருக்கின்றான், ச்1ரத்34யா உபேத:. அதாவது, தான் இருக்கும் பாதை சரியான பாதையே; ஆத்ம ஞானத்தை அடைந்து, அதில் ஏற்படும் நிஷ்டையினால் தான் மோக்ஷம் என்பதில் முழு சிரத்தையுடையவனாக இருக்கின்றான். இதன் காரணமாகவே சந்யாச வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு அதில் தொடர்ந்து இருப்பவனாகவும் இருக்கின்றான். ஆனால் மனதை வசப்படுத்துவதில் அரைகுறையாக முயற்சி செய்தவனாக இருக்கின்றான், அயதி:. அல்லது, பலனைக் கொடுக்கும் வரை அதில் ஈடுபடாதவனாக உள்ளான்

   * முயற்சி வெற்றியடையாததற்கான சில காரணங்கள்:

(i) கால அபா4வாத்பிராரப்தம் முடிந்துவிட்டதால் பலனை அடைய போதிய காலமில்லை.

(ii) பாஹ்ய வாசனா வசா1த் - வாசனைகளின் வசத்தினால்.

(iii) விசித்ர விக்4நாத் - சொல்ல முடியாத விதவிதமான தடைகளினால்.


=>அற்ப முயற்சியுடையவன்:

யதி எனில் முயற்சி செய்பவன் என்பது அர்த்தம்; அதாவது சரியான முயற்சி செய்யும் திறன் கொண்டவன். அதனால்தான் பொதுவாக சந்யாசியதிஎன்றழைக்கப்படுகிறான். இவன் தன்னறிவைப் பின்தொடர்வதற்காக துறவு பூண்டு, அந்த வாழ்க்கைக்கான அர்ப்பணிப்புடன் இருக்கிறான். ஆனால் இங்கு அர்ஜுனன் சொல்கிற சந்யாசியை யதி என்று அழைக்க முடியாது; போதிய முயற்சி இல்லாததாலும், மன உறுதியின்மையினாலும், தன்னால் ஏன் அதை அடையமுடியவில்லை எனத் தெரியாததாலும் அவன்அயதிஆகிவிட்டான். அதனால் வயது முதிர்ந்து, சோர்வடைந்து, விரக்தியடைந்து, ‘சலிதமாநஸ:ஆகிறான்.

இவ்விதம் சோர்வுற்ற, தன் முயற்சியிலிருந்து நழுவிய சந்யாசியின் நிலை என்னவாகும் என்பதை அர்ஜுனன் அறிய விரும்பினான். கடைசி காலத்தில் வரும் உடல் உபாதைகள் போன்ற தடைகளினால் அவன் மரண காலத்தில் யோகத்திலிருந்து வீழ்ந்து நிதித்யாசனத்தின் பலனான மோக்ஷத்தை அடையவில்லை. அர்ஜுனனின் சந்தேகம், ‘ஹே கிருஷ்ணா, அறிவு பெறுவதற்குள் அவன் இறந்துவிட்டால் அவனுடைய கதி என்னவாகும்? அவன் எதை பலனாக அடைகிறான்?’ — காம் 3திம் க்ருஷ்ண 3ச்ச2தி.


=> இப்படிப்பட்டவனின் நிலை என்னவாக இருக்கும்?

  இப்படிப்பட்டவனுக்கு சம்சார வாழ்க்கையின் சிறிய சுகங்களோ அல்லது மோட்சத்தின் ஆனந்தமோ கிடைக்கவில்லை. ஞானத்தை பெறும் நோக்கில் அவன் அனைத்து கர்மங்களையும் துறந்து சந்யாசத்தை எடுத்து கொண்டதால், கர்மத்தினால் கிடைக்கும் கர்மபலன் அவனுக்கு இல்லாமல் போகிறது. இதனால் அவன் அடுத்த வாழ்க்கைக்கான புண்ணியத்தையும் சம்பாதிக்கவில்லை. இவ்விதத்தில் லெளகிக வாழ்க்கையின் சிற்றின்பத்தையும் இழந்து, மோக்ஷத்தின் பேரானந்தத்தையும் இழந்து, இறுதியில் சொர்க்கத்தை அடைவதற்கான புண்ணியத்தையும் ஈட்டாமல் உயிர் துறப்பவனின் நிலை என்ன?

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.38|| அர்ஜுனனின் கேள்வியின் தொடர்ச்சி:

कच्चिन्नोभयविभ्रष्टश्छिन्नाभ्रमिव नश्यति  

अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मण: पथि ।। ३८ ।।

கச்சிந்நோப4யவிப்4ரஷ்டச்1சி2ந்நாப்4ரமிவ நச்1யதி

அப்ரதிஷ்டோ2 மஹாபா3ஹோ விமூடோ4 ப்3ரஹ்மண: பதி2 ।। 38 ।।


महाबाहो  மஹாபா3ஹோ  தோள்வலிவுடையவனே  ब्रह्मण: पथि   ப்3ரஹ்மண: பதி2  ப்ரம்மத்தை அடையும் மார்க்கத்தில்  विमूढ:  விமூட4:   மோஹமடைந்தவன்   अप्रतिष्ठ:  அப்ரதிஷ்டோ2:  ஆதரவின்றி   

उभयविभ्रष्ट:   உப4யவிப்4ரஷ்ட:   இரண்டினின்றும் வழுவியவன்   छिन्नाभ्रम् इव   சி2ந்நாப்4ரம் இவ  சிதறடைந்த மேகம் போல  नश्यति कच्चित्  நச்1யதி கச்சித்   அழிந்து போகிறானல்லவா?


பெருந்தோளாய், ப்ரம்ம மார்க்கத்தில் மோஹமடைந்தவன் எந்த ஆதாரமுமின்றி, இரண்டினின்றும் வழுவி சிதறடைந்த மேகம் போல அழிந்து போகிறானல்லவா?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ? பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?


விளக்கம்:

அர்ஜுனனின் கற்பனையின் காரணமாக உண்டான சந்தேகம் இந்த சுலோகத்திலும் தொடர்கிறது. சென்ற சுலோகத்தில் விவரிக்கப்பட்டதைப் போல கர்மம் மற்றும் ஞானம் இரண்டிலிருந்தும் வீழ்ந்த ஒருவனின் கதி குறித்த கேள்வியை தொடர்கிறான்.


=> இரு மார்க்கத்திலும் தோற்றவன்

உப4-விப்4ரஷ்ட:எனும் சொல், கர்மயோகம் மற்றும் சந்யாசம் ஆகிய இரு வாழ்க்கை முறைகளிலிருந்தும் விலகியவனைக் குறிக்கிறது. கர்மயோகம் அல்லது கர்ம-மார்க்கம் என்பது செயலில் இருந்துகொண்டே ஞானத்தையும் பின்தொடரும் வாழ்க்கைமுறையாகும். இது இறுதியில் அறிவை மட்டுமே தொடரும் சந்யாச வாழ்க்கைக்கு ஒருவனை ஆயத்தப்படுத்துகிறது.

இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டவன், சந்யாசத்தை பின்பற்ற நினைத்து கர்ம மார்க்கத்திலிருந்து நழுவிப் போனதால், கர்மயோக நோக்கில்விப்4ரஷ்ட:’, வழுவியவன் என்று அழைக்கப்படுகிறான். மேலும், யோக மார்க்கத்தை குறித்த துறவு வாழ்க்கையையும், ப்3ரஹ்மண: பதி2, வெற்றியடையாததாக பயனற்றதாக ஆக்கிவிட்டிருக்கிறான். எனவே இரண்டிலும் விலகி, இரண்டிலும் தோற்றவன்உப4-விப்4ரஷ்ட.  

இரண்டிலிருந்தும் வழுவியவன் செய்ய வல்லது என்ன? மூப்பின் காரணமாக அவன் மீண்டும் கர்ம மார்க்கத்திற்கு திரும்ப முடியாதவனாக இருக்கலாம். அதுமட்டுமின்றி, சந்யாசத்திலிருந்து கர்ம மார்க்கத்திற்குச் செல்வது முறையல்ல. மேலும் அனைத்தின் நிலையாமையைக் குறித்த அறிவு இருப்பதால், மீண்டும் அந்த சம்சார வாழ்க்கைக்குள் நுழைய அவனுக்கு எந்த உற்சாகமும் இல்லை. ஆனால் யோகத்தில் முழுமையை அடையாததால் அவனுக்கு ஞானி என்ற திருப்தியும் இல்லை. இவ்விதம் சாதாரண மக்களுடனும் சரி அல்லது முழுமையடைந்த சந்யாசியுடனும் சரி தன்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடியாமல் எங்கோ இடையில் தொங்கிக் கொண்டிருப்பதை போன்ற உணர்வையுடையவன், உப4-விப்4ரஷ்ட.

மேலும் இவன் தன்னிலையில் மோஹமடைந்தவனாக குழப்பத்துடன் இருக்கின்றான்விமூட. அதாவது, தான் ஏதோ தவறு செய்துவிட்டதாக உணர்கிறான் அல்லது தான் ஒரு தனிமனிதனான ஜீவனா அல்லது பரப்ரம்மா என்ற குழப்பத்தை உணர்கிறான். ப்ரம்ம-ஞானத்தை பிந்தொடர்ந்த அவனது பாதையில் இவ்விதமான சந்தேகமும் குழப்பமும் இருந்துகொண்டே இருப்பதால், அவன் எதையும் சாதிக்கவில்லை.


=> சிதறடைந்த மேகம் போன்றவன்:

பெரிய மேகக் கூட்டத்திலிருந்து சிதறடைந்த மேகம் மண்ணுலகில் மழையாய்ப் பெய்வதில்லை; விண்ணுலகில் உருத்தெரியாது மறைந்துபோகிறது. அதுபோல விரைவாக மோக்ஷத்தை அடையும் பொருட்டு சமுதாயத்திலிருந்து விலகி, கர்மபலத்தில் பற்று வைக்காமையால், அவன் சுகபோகத்தைப் பூவுலகிலும் வானுலகிலும் அனுபவிப்பதில்லை. ப்ரம்ம மார்க்கத்திலும் மனத் தெளிவை அடையாமையால் அவன் ப்ரம்மஞானியாகவில்லை. ஆக, அவன் போகம், யோகம் இரண்டையும் இழந்தவனாகின்றான். இதை விடப் பரிதாபகரமான நிலை மனிதனுக்கு யாது உளது? அவன் தன்னையே அழித்துக் கொண்டவனாகிறானல்லவா? — நச்1யதி கிம், என்பது அர்ஜுனனின் கேள்வியாக உள்ளது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------