செவ்வாய், 13 டிசம்பர், 2022

தியான யோகம் 6.34 - 6.35

||6.34|| அர்ஜுனன் தன் மனதை வர்ணிக்கின்றான்:

चञ्चलं हि मन: कृष्ण प्रमाथि बलवद्दृढम्

तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् ।। ३४ ।। 

சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி2 3லவத்3த்3ருட4ம்

தஸ்யாஹம் நிக்3ரஹம் மந்யே வாயோரிவ ஸுது3ஷ்கரம் ।। 34 ।।


कृष्ण  க்ருஷ்ண  கிருஷ்ணா   हि  ஹி  நிச்சயமாக   मन:  மந:   மனமானது   

चञ्चलं  சஞ்சலம்  அலையும் தன்மையது   प्रमाथि   ப்ரமாதி2 உட்கலக்கமுடையது   

बलवत्   3லவத்  பலமுடையது   दृढम्  த்3ருட4ம்  அடங்காதது  अहं  அஹம்  நான்    

तस्य   தஸ்ய  அதனுடைய   निग्रहं  நிக்3ரஹம்  அடங்குதலை   वायो: इव  வாயோ: இவ  காற்றைப் போன்று    

सुदुष्करम्   ஸுது3ஷ்கரம்  இயலாதது என்று   मन्ये   மந்யே   நினைக்கின்றேன்.


கிருஷ்ணா, மனம் அலையும் தன்மையது; திகைக்கச் செய்வது; வலிவுடையது; திடமுடையது. அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கின்றேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.


விளக்கம்:

இக்கேள்வியில் மனதின் இயல்பு முழுதும் அடங்கியிருக்கிறது.

உறுதியேதுமில்லாமல், தேவையற்ற விஷயங்களை நினைத்து, ஓயாது அலைந்து திரிவதால் மனம் சஞ்சலமுடையது(சஞ்சலம்). மேலும் அது தனது ராக-த்தேஷத்தை கொண்டு தாக்கி, மனிதனை கலக்கிக் கொண்டும் கடைந்தெடுத்துக் கொண்டுமிருக்கிறது(ப்ரமாதி2). எளிதில் வெல்ல முடியாத பலத்துடன் கூடியது(3லவத்). சஞ்சலமாக இருக்கும் தனது சுபாவத்தில் உறுதியாக இருக்கின்றது(த்3ருட4ம்); தான் விரும்பியதை கொடுக்காவிட்டால் இன்னும் அது பன்மடங்கு திடமுடையதாக ஆகிறது. இப்படிப்பட்ட இயல்புடைய மனதை அடக்குவதும் வசத்திற்கு கொண்டுவருவதும் மிக மிக கடினமானதாக இருக்கின்றது என்பதை அர்ஜுனன் இங்கு விவரிக்கின்றான்.


இந்த சுலோகத்திற்கான தனது பாஷ்ய உரையில் சங்கரர், நீண்டதொரு கூட்டுச் சொல்லை பயன்படுத்தி கிருஷ்ணரை வர்ணிக்கின்றார்பக்த-ஜந-பாபாதி-தோஷ-ஆகர்சந:. தனது பக்தர்களின் பாபம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களையும் நீக்குபவன் என்பது இதன் பொருள். ‘கிருஷ்என்ற வினையடிக்குசுரண்டுதல்என்று பொருள். அதைப் பகுதியாகக் கொண்டு பிறந்ததுகிருஷ்ணன்’ - பக்தர்களின் பாபத்தைச் சுரண்டிப் போக்க வல்லவன். இதனாலேயே கீதையில் பகவான் 'கிருஷ்ண' என அழைக்கப்படுகிறார்.


=> மனதின் திறன்:

ஒருவனின் புலன்கள், உடல், பகுத்தறிவு என அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் திறன் மனதுக்கு உண்டு; அது எல்லாவற்றையும் அடக்கி ஆள்கிறது. எந்த காரணத்தை கூறியும் ஒருவனால் இந்த மனதின் நிலையை எளிதில் மாற்றிவிட முடிவதில்லை. உதாரணமாக, யாரொருவனும் சோகமாக இருக்க விரும்புவதில்லை, ஆனாலும் அவன் சோகமாக இருக்கிறான். யாரும் கோபப்பட விரும்புவதில்லை, ஆனாலும் கோபப்படுகிறான். இதிலிருந்து மனதினுடைய நிலைகளான துக்கம், கோபம் போன்ற உணர்ச்சிகள் அனைத்தும் மனிதனை தனது பிடியில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. ஒருவன் கோபப்படும்போது அவனுடைய கலாச்சாரம், வளர்ப்பு, அந்தஸ்து, கல்வி என எதுவும் அவனை தடுக்க முடிவதில்லை. அவனுடைய அறிவும் கூட அத்தகைய நேரங்களில் அவனுக்கு துணை நிற்பதில்லை

சோகத்தின் ஊடாக ஒருவன் தான் விரும்பும் பலனை அடைய முடியாது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும் அதிலிருந்து அவனால் தப்ப முடிவதில்லை. சோகம் என்பது ஒருவனிடம் அனுமதி கேட்டு வருவதில்லை


=> மனதின் செயல்பாடு

உண்மையில், சோகம் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான சிந்தனையைக் குறிக்கிறது. சிந்திக்காமல், ஒருவனால் சோகமாக இருக்க முடியாது. துக்கம் என்பது பசி, தாகம், தூக்கம் போன்றது அல்ல. பசிக்கோ அல்லது தூக்கத்திற்கோ சிந்தனை தேவையில்லை; அந்தந்த நேரத்தில் அது இயல்பாக வருகிறது. மாறாக சோகம், கோபம், வெறுப்பு, கொந்தளிப்பு, மனச்சோர்வு, விரக்தி போன்றவற்றுக்கு ஒருவன் நிறைய சிந்திக்க வேண்டும்.

இதுபோன்ற தருணங்களில் மனமானது அதில் முழுதும் ஈடுபட்டதாக இருக்கிறது. அதே நேரத்தில் அது அவனது அனுமதியைப் பெற காத்துக் கொண்டிருப்பதும் கிடையாது. இதனால் இங்கு ஒருவனில் இருவரைக் காணலாம், ஒருவன் பண்பட்டவன், உயர் கல்வியறிவு பெற்றவன், அதிநவீனமானவன், அன்பும் மரியாதையும் கொண்டவன். அவனது மொழி, நடை, உடை மற்றும் பாவனை அனைத்தும் அந்த கோபம் கொண்ட இரண்டாமானவனிடமிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அந்த பண்பட்டவனின் அதே மனதையும் இடத்தையும் ஆக்கிரமித்துள்ள இந்த இரண்டாமானவன் தனது சொந்த வேர்களுடன் அவனில் ஒரு இணையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இவன் பொறுப்பிற்கு வரும்போது அனைத்தும் கட்டுப்பாட்டை இழக்கிறது. உடல், மனம், புலன்கள் என அனைத்தையும் தொந்தரவு செய்து தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடிய கொடுங்கோலனாக இவன் ஆகின்றான். இதுவே இங்குப்ரமாதி2ந்என்று அழைக்கப்படுகிறது.

வேறு ஏதாவது பெரிய சக்தியைக் கொண்டு அதை ஏன் கட்டுப்படுத்தக் கூடாது? என ஒருவர் கேட்கலாம். ஆனால் எவ்வளவு பலத்தை சேகரித்துக் கொண்டு அதை எதிர்த்தாலும் அது கட்டுப்படுத்த முடியாததாகத் தெரிகிறது. நழுவ முடியாதவளவு அதன்பிடி மிக பலமானதாக இருக்கிறது3லவத்

மேலும் அர்ஜுனன் இங்கே மனதைத்3ருட4ம்எனவும் வர்ணிக்கிறான். புழுவை மூடி சுற்றப்பட்ட பட்டைப் போல அது ஒருவனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆழமாக ஊன்றியுள்ள இந்த மனதின் வேர்களைப் பிடுங்குவதற்கு போதுமான வலிமை என எதுவும் இல்லை.


=> மனதின் வேர்கள்

மனமானது ஒருவனின் குழந்தை பருவத்தில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது. குழந்தை பருவத்திலிருந்தே அது எல்லா வகையான பிரச்சினைகளையும் சேகரித்து வந்துள்ளது. ஒரு குழந்தையாக, ஒருவனின் புலனுணர்வு சக்தி குறைவானதாக இருக்கும். காலப்போக்கில் அது சிறிது சிறிதாக விரிவை அடைகிறது. இவ்விதமாக பல அலங்காரங்களுடன் கூடிய ஒரு குறிப்பிட்ட அக-ஆளுமை உண்டாகிறது. உளவியல் மனம் என்றழைக்கப்படும் மனதுடன் சேர்ந்து இது ஒரு மனிதனாக வெளிப்படுகிறது

அர்ஜுனன் இங்கே பேசுவது இந்த உளவியல் மனதை, இந்த உணர்வு ரீதியான மனதையே. இந்த வேரூன்றிய மனம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. இப்படிப்பட்ட மனதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியம்தஸ்ய அஹம் நிக்3ரஹம் மந்யே ஸுது3ஷ்கரம்.

து3ஷ்கரம் எனில்கடினம்மற்றும் ஸுது3ஷ்கரம் எனில்மிகவும் கடினமானது’. அர்ஜுனன், மனதைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் ஒருவன் கையில் காற்றைப் பிடிக்கும் முயற்சியுடன் ஒப்பிடுகிறான்வாயோ: இவ ஸுது3ஷ்கரம். எவ்விதம் அலைந்து கொண்டிருக்கின்ற காற்றை கையினால் பிடித்து நிறுத்தமுடியாதோ அவ்விதம் மனதை கட்டுப்படுத்துவதும் இயலாத காரியமாகவே உள்ளது என்கிறான். அடுத்த சுலோகத்தில், மனதை எவ்வாறு நிர்வகிப்பது என்ற அர்ஜுனனின் கேள்விக்கு கிருஷ்ணர் பதிலளிக்கிறார்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.35|| பகவானின் பதில்:

श्रीभगवानुवाच 

असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम्

अभ्यासेन तु कौन्तेय वैराग्येण गृह्यते ।। ३५ ।।

ஸ்ரீப43வாநுவாச

அஸம்ச1யம் மஹாபா3ஹோ மநோ து3ர்நிக்3ரஹம் சலம்  

அப்4யாஸேந து கௌந்தேய வைராக்3யேண க்3ருஹ்யதே ।। 35 ।।


श्री भगवान् उवाच   ஸ்ரீ 43வாந் உவாச  ஶ்ரீ பகவான் சொன்னது

महाबाहो   மஹாபா3ஹோ  நீண்ட கைகளையுடையவனே  मन:  மந:  மனமானது   

दुर्निग्रहं  து3ர்நிக்3ரஹம்  அடக்க முடியாதது   चलम्   சலம்  அலைந்து திரிவது   

असंशयं   அஸம்ச1யம்   இதில் சந்தேகமில்லை   तु    து  ஆனால்   कौन्तेय  கௌந்தேய  குந்தியின் மைந்தா   अभ्यासेन   அப்4யாஸேந  தொடர் பயிற்சியினாலும்  वैराग्येण   வைராக்3யேண   வைராக்கியத்தினாலும்  गृह्यते  க்3ருஹ்யதே  அடக்கப்படுகிறது.


பெருந்தோளாய்! மனம் கட்டுப்படாதது, அலையும் தன்மையது என்பதில் ஐயமில்லை. எனினும் குந்தியின் மைந்தா, தொடர் பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் அதை அடக்கலாம்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.


விளக்கம்:

இங்கே, கிருஷ்ணர் அர்ஜுனனை முதலில்வலிமைமிக்க கைகளையுடையவனே - மஹாபா3ஹோ’, என்றழைக்கிறார். அர்ஜுனன் சிறந்த வீரனாக இருந்ததால், நிச்சயமாக வலிமைமிக்கவனாகவே கருதப்பட்டான். ஆனால் அவனுடைய வலிமை, அவனது பலம் முதலியவை மனதின் மீது அவனுடைய ஆளுமையை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டுமென்பதை பகவான் இங்கு சுட்டுகிறார்.

மனம் சலனமற்றது என்று யார் கூறுகிறார்கள்? மனம் அமைதியற்றதுதான். இதை அடையாளம் காண்பது பாதிப் போரில் வெற்றி பெற்றதற்குச் சமமாகிறது. ஏனெனில் இதில் ஏற்றுக் கொள்ளுதலே முதல் படி. கோபத்தை கட்டுப்படுத்துதலில் எனக்கு சக்தி இல்லை; இந்த அமைதியற்ற மனதைக் குறித்து எனக்கு அதிகாரம் இல்லை. இதை ஒருவன் ஏற்றுக்கொண்டால், பாதி போரில் வெற்றி கிடைத்துவிட்டது என்பது பொருள்.

பகவான் முதலில், மனதின் இயல்பு சஞ்சலம் என ஏற்றுக் கொள்வதன் மூலம் பெரிய உளவியல் உண்மையை காண்பிக்கிறார். நீ மனதின் கொந்தளிப்பை நீக்க நினைத்து இன்னும் அதிக கொந்தளிப்பை அடைய வேண்டாம். மேலும், ஏதோ உனது மனம் மட்டும் விசித்திரமானது என்றும் நினைத்துவிட வேண்டாம். எந்தவொரு மனமும் அலையும் தன்மையுடையது; அது அதனுடைய இயல்பு. மேலும் அது, அவ்விதம் மாறுதலடைய வேண்டியது அவசியம். ஒரே எண்ணத்தோடு மனம் நின்றுவிட்டால் வாழமுடியாது. ஒரு திரைப்படத்தில் எப்படி காட்சிகள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மாறிக்கொண்டே இருக்கின்றவோ அவ்விதம் மனமும்கூட எப்போதும் மாறிக்கொண்டே இருந்தால்தான் அன்றாட விவகாரம் சாத்தியம். அதனாலேயே மனம்க்ஷனிகம்என்றழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட எண்ணம் எப்போதும் க்ஷனிகமாகவே உள்ளது, அதாவது அது ஒரு நொடி கூட நீடிக்காது. இவ்வாறு மனதின் குணம் க்ஷனிகமாக இருப்பதால், இயல்பாகவே அது மாறப் போகிறது. எனவே கிருஷ்ணர், ‘மனம் அமைதியற்றது, அதில் எந்த சந்தேகமும் இல்லை அர்ஜுனா,’ என்கிறார்.

மேலும் ஒரு சந்தேகத்திற்கு பதில் கூறுவதற்கு முன், அதை தான் புரிந்து கொண்டுவிட்டதை அவனுக்கு தெரிய வைத்தல் வேண்டும். இந்த சுலோகத்தின் முதல் வரியில் பகவான் அந்த காரியத்தை செய்கிறார். அர்ஜுனா, நீ கூறியதில் சந்தேகமில்லை(அஸம்ச1யம்). மனதைக் கட்டுப்படுத்துவது என்பது கடினமானது; சஞ்சலத்துடன் கூடியது தான்து3ர்நிக்3ரஹம் சலம், என்கிறார் பகவான்.


=> மனதை கட்டுப்படுத்துவது ஏன் கடினம்

(i) மனம் சூக்ஷமமாக இருப்பதினால்ஒரு பொருள் நுண்ணியதாக ஆக ஆக அதன் சக்தி கூடுவதால், அதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.

(ii) மனதின் சுபாவம்மனம் சஞ்சலமான இயல்புடனேயே படைக்கப்பட்டுள்ளது.

(iii) மனதைப் பொருளாக பார்த்தல் கடினம்மனதைநான்என்ற சொல்லோடு மிகவும் கலந்துவிட்டோம்; அறிபவனாகவே அதைப் பார்த்து பழகிவிட்டோம். அப்படி இருக்கும்பட்சத்தில், மனதையே நான் பார்க்கும் ஒரு பொருளாக, அறியப்படும் பொருளாக கொண்டு வந்து பயிற்சி செய்து அடக்குவது கடினம். அதாவது மனதை விஷயமாக்குவது, தன்னிலிருந்து பிரித்துப் பார்ப்பது கடினமாகிறது.

(iv) மனம் அதன் போக்கில், அதனுடைய விருப்பப்படி நீண்ட காலம் இருந்து பழகிவிட்டது. மனதை அதனுடைய சுபாவத்திற்கே அதிக காலம் விட்டுவிட்டோம்.


=> மனதைக் கட்டுப்படுத்தும் அணுகுமுறை:

(i) மனதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்ற தீர்மானத்துடன் முயற்சியை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் ஒரு விஷயத்தை சுலபம் என அணுகும்போது அது கடினமானதாகத் தெரியும். ஆனால் கடினம் என அணுகினால் அது சுலபமாக ஆகும். அதாவது, கடினம் என முடிவு செய்ததினாலேயே அதில் வரும் தடைகளை ஏற்றுக் கொண்டு கஷ்டப்படத் தயாராக இருப்போம். தெரிந்துதானே இந்த செயலில் இறங்கினோம் என்ற பாவனையிலிருந்து, தொடர் முயற்சி மற்றும் பொறுமை தானாக வந்துவிடும்

(ii) எனது சுய-முயற்சி முழுமையாக தரப்பட வேண்டுமென்ற பாவனை தேவை. பொதுவாக படிப்பு, வேலை போன்ற வாழ்க்கையின் நிறைய விஷயங்களில் மற்றவர்களின் உதவியோ அல்லது பிராரப்தமோ துணையாக வரும். ஆனால் மனதை கட்டுப்படுத்தும் விஷயத்தில் ஒருவனின் சொந்த முயற்சியை தவிர வேறெதுவும் துணை நிற்காது

(iii) பொறுமை மிக அவசியம் என்பதை உணர வேண்டும்; தோல்வியினால் மனம் சலிக்கக் கூடாது.


=> இரு உபாயம்:

மனம் அமைதியற்றது; அதற்கேயுரிய சொந்த நியாயங்களும், தர்க்கங்களும் வேர்களும் மனதிற்கு உண்டு. எனவே அது ஒருபோதும் தன்னளவில் நியாயமற்றதாக இல்லை என்ற உண்மையை முதலில் ஏற்றுக் கொள்ளவேண்டும். சரி அப்படியெனில் மனதை இவ்விதமே விட்டுவிட வேண்டும் என்று அர்த்தமா? எனில்ஆம், மனம் சஞ்சலமான இயல்புடையது. எனவே அதை பற்றி கவலைப்பட வேண்டாம். அதை மறந்துவிடு’, எனலாம். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், மனம் அலையும்போது, ​​நானும் அலைகின்றேன்; சஞ்சலத்துடன் இருக்கின்றேன் என எண்ணுகின்றோம். எனவே மனதிற்கும்நான்என்பதற்குமிடையேயான தூரத்தைக் கண்டறிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதிலுள்ள முழு தந்திரமும் இதுதான், அதனால்தான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் மனதை கட்டுப்படுத்த வைராக்கியத்தையும் பயிற்சியையும் உபாயமாகக் கூறுகிறார்அப்4யாஸேந வைராக்3யேண க்3ருஹ்யதே. வைராக்கியத்தின் துணையுடன் அனாத்மாவிலிருந்து மனதை எடுத்து, அப்யாசத்தின் மூலம் ஆத்மாவில் வைத்தலே யோகம் என ஏற்கனவே பார்த்துள்ளோம்.

=> குந்தியின் மைந்தா:

இந்த சுலோகத்தின் இரண்டாவது வரியில் அர்ஜுனனின் கேள்விக்கான நேரடியான பதிலை பகவான் உரைக்கிறார். இங்கு அர்ஜுனனை குந்தியின் மகனே- கௌந்தேய, என்று அழைப்பதன் மூலம் அவர் அர்ஜுனனுக்குள் இன்னும் இருக்கின்ற அந்த குழந்தையை, எங்கு மனம் அதன் சொந்த வேர்களைக் கொண்டுள்ளதோ அதை சுட்டிக் காட்டுகிறார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற அத்தகு குழந்தையை அந்த நபரே கவனித்துக் கொள்ள வேண்டும். ஒருவனின் வாழ்நாளில், இரண்டுவித குழந்தை பராமரிப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. குழந்தையாக இருந்தபோது பெற்றோர்களால் பராமரிக்கப்படுவது ஒன்று. இனியொன்று வளர்ந்தபின் அவனின் உள்ளுறையும் குழந்தையை அவன் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரின் குழந்தை பருவமும் ஏமாற்றங்களை உள்ளடக்கியதாக உள்ளது. ‘என் அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது, என் தந்தை என்னை வெறுக்கிறார்என்று தன் உணர்வுகளில் ஏமாற்றமடைந்த ஒரு குழந்தை எப்போதும் உண்டு. சம்பந்தப்பட்டவர்களின் நடத்தை காரணமாக இதுபோன்ற எண்ணங்கள் உறுதிப்பட்டு அந்த குழந்தை அந்த நபரின் உள்ளேயே தங்கிவிடுகிறது. இதனாலேயே ஒவ்வொரு மனிதனின் ஆழத்திலும் ஏமாற்றமடைந்த அழும் குழந்தையொன்று எப்பொழுதும் உள்ளது; அதனால்தான் மனம் திடீரென்று துடிக்கிறது; கொந்தளிப்பை, விரக்தியை அடைகிறது. குறிப்பாக 35 வயதை கடந்த ஒருவனுக்கு அந்த குழந்தையின் ஏமாற்றங்கள் ஒவ்வொன்றாக மேலே வரத் துவங்குகிறது. இன்னும் குறிப்பாக வேதாந்தத்தைப் படிக்க ஆரம்பிக்கும்பொழுது அவை அனைத்தும் நன்கு வெளியே வருகிறது!

வேதாந்தம் படிப்பது என்றால் ஒருவன் தன்னையே பார்ப்பதைக் குறிக்கிறது. முன்பு, அவன் மற்ற விஷயங்களைச் செய்து கொண்டிருந்தான். இப்போது அவன் அவனையே பார்ப்பதால் உள்ளிருக்கும் குழந்தை வெளியே வருகிறது. ஒருவனின் வாழ்நாளில் அது எவ்வளவு விரைவில் வெளிப்பட்டு கவனிக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது, அவன் மனமுதிர்வை நோக்கிச் செல்கின்றான். அர்ஜுனனைகௌந்தேயஎன்று அழைப்பதன் மூலம் கிருஷ்ணர் இங்கு குறிப்பிடும் கருத்து இதுதான். முதலில், அவர் அர்ஜுனனை பெரியவனாக, ‘மஹாபா3ஹோஎன்று குறிப்பிடுகிறார், பின்னர்கௌந்தேயஎன்று அழைத்து அவனுள்ளுறையும் குழந்தையை கவனித்துக் கொள்ளும்படி கேட்கிறார்.


=> அப்யாஸம்:

இதுவரை தன்னால் விவாதிக்கப்பட்ட யோகப் பயிற்சியையே பகவான்அப்யாஸம்எனக் குறிப்பிடுகிறார். இதன் மூலம் மனதுக்கும் நமக்குமிடையே ஒரு குறிப்பிட்ட தூரம் கிடைக்கிறது. இந்த தூரம், நாம் நம்மை சரியாக உணரவும், ‘நான்என்பதன் உண்மைத் தன்மை என்ன என்பதை அறியவும் உதவுகிறது. இம்முறையில் ஒவ்வொரு எண்ணமும் நானே என்றும், ஆனால்நான்என்பது எண்ணத்திலிருந்து விடுபட்டதாக, எண்ணத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பதும் புரிகிறது. இந்த குறிப்பிட்ட உண்மையை மேலும் மேலும் மிகத் தெளிவாக உள்ளே பார்த்தலுக்கு தொடர்பயிற்சி அவசியம். எண்ணம் என்பதுநான்ஆகவும், அதேசமயம்நான்என்பது எண்ணமாக இல்லாமல் இருக்கும் இந்த குறிப்பிட்ட சூழ்நிலையைப் பார்த்தல் நிதித்யாசனம். அதையே மீண்டும் மீண்டும் செய்வதுஅப்4யாஸம்என்று அழைக்கப்படுகிறது, இதனால் ஒருவனுக்கு தன் மனதின் மீதான ஆதிக்கம் வலுப்பெறுகிறது - அப்4யாஸேந க்3ருஹ்யதே.

* ஜபம்:

மனதை தொடர்பயிற்சிக்கு எவ்விதம் பயிற்றுவிக்கலாம்? நமது மனம் அடுத்து எதை சிந்திக்கப் போகிறது என்பது நமக்கே தெரியாது. ஆகவே ஒரே எண்ணத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்கச் செய்வதன் மூலம் அதற்கு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை முன்பே வகுத்துக் கொடுத்தல் இங்கு அப்யாஸம். உதாரணம் நாம ஜபம். ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை, அர்த்தமுள்ள பெயரை, இறைநாமத்தை, வாக்கியத்தை மனதினால் மீண்டும் மீண்டும் கூறுவது ஜபம். வேறு எந்த எண்ணத்திற்கு செல்லும்போதும் அதை திரும்ப அதே எண்ணத்திற்கு கொண்டுவந்து பழக்குவதன் மூலம் மனதிற்கு ஒரு சக்தி கிடைக்கும். தொடர்ந்து ஒரே விஷயத்தில் இருக்கின்ற யுக்தியைக் கண்டறியும். இதனால் மன ஒருமுகப்பாடு வலுப்பெறுகிறது. ஒரு விஷயத்தை செய்யும்போது அதில் முழு கவனத்துடன் இருக்கின்ற பழக்கம் மனதிற்கு வருகிறது. உதாரணமாக சாப்பிடும்போது சாப்பிடுதல், பேசும்போது பேசுதல், குறிப்பாக ப்ரம்மத்திலிருக்கும்போது ப்ரம்மத்துடன் இருத்தல் நடைபெறுகிறது; அதாவது அலைபாயுதல் குறைகிறது

அடுத்து நொடி மனம் எண்ணப்போவதை தீர்மானிக்கும் இந்த குறிப்பிட்ட திறனை வளர்ப்பதால், ஆன்மீக உயர்வில் ஜபம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. மனம் கணிக்கக்கூடிய ஒரே சூழ்நிலை இது. இதனாலேயே சந்யாசிகளுக்கும் கூட இது ஒரு கைவிடப்படகூடாத நியதியாக உள்ளது. அப்யாஸம் என்பதின் லக்ஷணமே அதிக காலம் அதிகமான சிரத்தையுடன் மீண்டும் மீண்டும் செய்யப்படும் பயிற்சி ஆகும்.

* நிதித்யாசனம்

இங்கு, மனதை ஆத்மாவில் நிலைநிறுத்துவதற்காக, ஆத்ம-சம்ஸ்த, ஆத்மா ஒரு தியானப் பொருளைப்போலஆகிறது. பகவானின் உபதேசத்துடன் செல்லும் இந்த பயிற்சியும் அப்யாஸம் ஆகும். திரும்பத் திரும்பச் சொல்வதுஅப்யாஸம்என்று அழைக்கப்படும். சமஸ்கிருத இலக்கணத்திலும்கூட, அப்யாஸம் என்பதற்கு நகல் என்று பொருள். அப்யாஸத்தின் மூலம் மனம் செயல்படும் வழிகளைப் பற்றிய நுட்பம் அறியப்படுகிறது.

மேலும் எண்ணத்திற்கும் சுயத்திற்கும் இடையிலான தூரம் மிகவும் தெளிவாகிறது. ‘இது எண்ணம்; எண்ணம் மட்டுமே அனைத்தும் இல்லை; எண்ணம் என்னிலிருந்து வேறானதாக, என்னால் பார்க்கப்படக் கூடியதாக உள்ளது’ — சுயத்தை இவ்விதமாக கவனித்தல் நிதித்யாசனம். சுயம் என்பது எண்ணத்திற்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக விளங்குவது என்பது இதனால் புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த உண்மை தெளிவை அடைய அடைய எண்ணம் என்பது வெறும் நாடகப் பாத்திரமாக மட்டுமே இருக்கின்றதே தவிர அதுவே அனைத்துமாக இல்லை என்பது புரிகிறது. சுயத்திற்கும் எண்ணத்திற்குமான இந்த தூரம், மனதின் நிலைகளைச் சார்ந்திராத இந்த நுண்ணறிவு, மெய்ப்பொருளைக் குறித்த இந்த அங்கீகாரத்தின் மூலம் ஒருவன் மனதின் மீதான ஆதிக்கத்தை அடைகிறான்.


=> வைராக்கியம்:

மனதைத் தன்னுள் நிலைநிறுத்துவதற்கான இரண்டாவது வழியாக கிருஷ்ணர் இங்கே வைராக்கியத்தை குறிப்பிடுகிறார். முதலில் மனம் ஏன் அங்கும் இங்கும் செல்கிறது? ஒன்றின் மீதுள்ள ஆர்வமின்மையால் மனம் வேறு எங்கோ செல்கிறது. எதை நோக்கிச் செல்கிறது எனப் பார்க்கும்போது இரு விஷயத்தை நோக்கி அது ஈர்க்கப்படுகிறது. அதன் விருப்பதிற்குரிய விஷயத்தை நோக்கியும், வலியை நோக்கியும் செல்கிறது. வலி என்றாலே அங்கு கவனம் தேவை என்பது பொருளாகையால் மனம் இயற்கையாக அங்கு செல்கிறது. இவையிரண்டும் எவ்வித முயற்சியுமின்றி ஒருவனின் மனம் செல்லும் இடங்களாக ஆகின்றன. இதில் ஒன்று மனதிற்கு சுவாரஸ்யமானது, ஆசைக்குரிய பொருளினால் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பற்றியது. மற்றொன்று, புண்பட்டதால் ஏற்பட்ட வலியினால் செல்வது. ஒன்று நேர்மறையானது, மற்றொன்று எதிர்மறையானது.


தனக்கும் வலிக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட தூரத்தை உருவாக்குவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம். இது, சிறிது காலம் அப்யாசத்தில் தொடர்ந்து இருப்பதன் மூலம் அடையப்படும். ஆனால் விருப்பத்திற்குரிய விஷயங்கள் குறித்து மனம் அலைவதை வைராக்கியத்தின் மூலமாகத்தான் எதிர்கொள்ள முடியும். உலகிலுள்ள பல்வேறு பொருட்களின் மீது ஒரு சில பண்புகளை மிகைப்படுத்தி ஏற்றிவைத்தல்சோபனாத்4யாஸ_ शोभनाध्यासஎன்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும். இது இன்பம் மற்றும் பாதுகாப்பின் மீதுள்ள ஒருவனின் விருப்பத்தினால் நடைபெறுகிறது. ‘அப்பொருள் என்னை மேலும் பாதுகாப்பானதாக்கப் போகிறது; இதை அடைவதன் மூலம் நான் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுபவனாவேன்; இது என் மதிப்பை மற்றவர்கள் மத்தியில் உயர்த்தும்’, இதுபோன்று எதிர்பார்ப்பு மற்றும் முன்முடிவுகளின் மூலம், ஒன்றின் மீதான மதிப்பை அதிகப்படுத்திக் கொண்டு அதைக் குறித்த ஏக்கத்தையும் விருப்பதையும் வளர்த்துக் கொள்ளுதலை நாம் அன்றாடம் செய்கிறோம்


=> ஏக்கத்திலிருந்து விடுபடுதல்:

பொதுவாக, விருப்பமின்மை வைராக்கியம் எனப்படும். அதிலுள்ள பொருளை நுட்பமாக விசாரம் செய்து பார்த்தல் அவசியம். ஒருவனின் மனது எதைக் குறித்து அதிகமாக விக்ஷேபம் அடைகிறது எனக் கண்டறிதல் வேண்டும். அது அந்த குறிப்பிட்ட பொருளில் அவன் வைத்துள்ள மதிப்பைக் காட்டுகிறது. அதாவது அதில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள தனது விருப்பத்தைக் காட்டுகிறது. இந்த விருப்பத்தை, அதன் மீதுள்ள மதிப்பை நீக்கும்போது மனமானது அந்த பொருளிடம் மீண்டும் மீண்டும் செல்லாது; அலையாது. பொருட்களுக்கு அதற்குண்டான மதிப்பை மட்டும் அளிப்பதால் அதன் மீதான பற்றிலிருந்து ஒரு விலகுதல் கிடைக்கிறது. உதாரணமாக, பணத்தை வாழ்க்கையாகவே பார்ப்பதை விடுத்து, அதற்குண்டான மதிப்பை மட்டும் அளித்தல், அதை ஒரு புறவயமான நோக்கிற்கு உட்படுத்துகிறது. பணத்தினால் ஒரு பொருளை வாங்க முடியும் அவ்வளவே; ஆனால் அதுவே மகிழ்ச்சியைக் கொடுத்துவிடாது. இவ்விதம் அதனுடைய மறுபக்கத்தையும் பார்த்து அதில் ஏற்றிவைத்துள்ள அதிக மதிப்பை நீக்கி, அதனை அதன் வரையறைக்குள் வைத்தல் வைராக்கியம். சிலர் அதை அப்பொருளின் மீதான வெறுப்பு என்று புரிந்துகொள்வர். ஒன்றை வெறுப்பது வைராக்கியம் அல்ல; அதன் மீதான ஏக்கத்திலிருந்து விடுபடுதலே வைராக்கியம். மேலும் சிலர் வைராக்கியத்தை ஆசையின்மை என்பர். அவ்விதம் புரிந்துகொள்வதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ஏனெனில் அதில் ஒவ்வொரு ஆசையும் பிரச்சினைகளுக்கான புதிய ஆதாரமாக மாறுகிறது; இதுவும் மனதின் சஞ்சலத்திற்கே வழிவகுக்கும்.  

எனவே வைராக்கியம் என்பதன் பொருளைச் சரியாக புரிந்து கொள்ளுதல் அவசியம். விஷயங்களின் மீது மிகைப்படுத்தி ஏற்றிவைக்கும் குணங்களை, சோபனாத்4யாஸத்தை நடுநிலைப்படுத்துதல் வைராக்கியம். இந்த சார்பற்ற தன்மையின் மூலம் ஒரு சூழ்நிலையை உள்ளபடி கிரஹித்து சரியான முடிவுகளை எடுக்கமுடியும். இது ஒருவனின் உளவியல் ரீதியான வளர்ச்சியைக் குறிக்கிறது

* வைராக்கியத்திற்கான உபாயம்:

  (i) தோஷ தர்ஷணம் - மோஹப்பட்ட பொருள் கொடுக்கும் துக்கத்தை பார்த்தல். பொதுவாக நாம் ஒரு பொருளினால் வரும் சுகத்தை மட்டுமே சிந்திப்பதால் அதன் மீது விருப்பம் எழுகிறது. எனவே அப்பொருள் தரும் துன்பத்தையும் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். அதாவது அது பந்தப்படுத்துவது; அடிமைப்படுத்துவது; மாறக்கூடியது; அழியக்கூடியது

  (ii) தோஷ தர்ஷண அப்யாஸ: - ஒருமுறை சிந்திப்பதால் அது எளிதில் மறக்கடிக்கப்படலாம். எனவே மனம் தனது விக்ஷேப்பத்திற்குரிய விஷயத்தை நோக்கி செல்லும்போதெல்லாம் அதன் கேடுகளை மீண்டும் மீண்டும் ஞாபகமூட்டுதல் வேண்டும். வாழ்க்கையில் எந்தவொரு கலையையும் தொடர் பயிற்சியினால் தான் அடைய முடியும். நீச்சலைப் பற்றிய அறிவே ஒருவனை நீந்த வைத்து விடாது. நீந்துதல் என்ற செயலை மீண்டும் மீண்டும் பயின்று அவன் அதைக் கற்றுக் கொள்கின்றான். அதுபோல இந்த மன ரீதியான ஏற்றிவைத்தல் நீங்கும்வரை அப்பொருளிலுள்ள தோஷத்தை மீண்டும் மீண்டும் பார்த்தல் இங்கு அப்யாஸம் எனப்படுகிறது.


=> யோகத்திற்கான தடைகள்:

யோக சாஸ்திரத்தில் கீழ்கண்ட நான்கும் தியானத்திற்கான தடைகளாகக் கூறப்படுகிறது:

(i) விக்ஷேபம் - அலைபாயும் தன்மை. இது ரஜோ குணத்தினால் உண்டாவது. அதிகமான செயல்களில் ஈடுபடுதலை குறைத்தல் வேண்டும். ஆரம்பத்தில் அளவான செயல், அளவான பொழுதுபோக்கு போன்றவற்றின் மூலம் இதை கட்டுப்படுத்தி, பின்னர் வைராக்கியம் மற்றும் அப்யாஸத்தை முன் நிறுத்துவதன் மூலம் இந்த தடையிலிருந்து விடுபடலாம்.

(ii) நித்ரா - உறக்கம். இது தமோ குணத்தினால் உண்டாவது. சரியான பழக்க வழக்கங்கள், அளவான உணவு, தேவையான அளவு உறக்கம் போன்றவற்றின் மூலம் இந்த தடையை நீக்கலாம்.

(iii) கஷாய: - பொதுவாக நாம் அன்றாட வியவஹாரத்தின்போது மேலோட்டமான மனதுடனேயே வாழ்கின்றோம். தியானத்தின்போது உள்மனது நம் அறிமுகத்திற்கு வருகிறது. ஆழ்ந்த மனதில் பதிந்துள்ள பழைய சம்ஸ்காரங்கள் தியானத்தின்போது வெளியே வந்து நம்மை தடை செய்யும். மனதை செயலோட்டாமல் வைத்திருக்கும்; ‘ஸ்தப்தீ3 பா4:_மந்தத் தன்மைஎனும் நிலைக்கு மனமானது சிறிது நேரம் செல்லும். அதாவது எந்த செயல் செய்வதற்கும் உற்சாகம் இருக்காது. இந்த தடைக்கான உபாயம், பொறுமை. சாட்சி பாவத்திலிருந்து அதை பார்க்கும்போது சிறிது நேரத்தில் சரியாகி விடும்.

(iv) ரஸாஸ்வாத:தியானம் பழகப் பழக அதில் ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது. அந்த அமைதியையே அனுபவிக்க, சுவைக்க ஆரம்பிக்கும்போது அது நம்மை விட்டு சென்றுவிடுகிறது. ஆகவே அமைதியையும் சாட்சியாக இருந்து பார்க்கப் பழகுதல் வேண்டும். அந்தச் சுவையிலும் வைராக்கியத்துடன் இருத்தலே இந்த தடையை நீக்கும்.


அப்யாஸம் மற்றும் வைராக்கியத்தின் மூலம், ஒருவனால் மனதில் ஆதிக்கம் செய்யமுடியும்மந: க்3ருஹ்யதே. எப்பொழுதும் சலசலத்துக் கொண்டேயும், அறிவுரை கூறியும், மதிப்பீடுகளுக்குட்படுத்தி முன்முடிவுகளை எடுத்துக்கொண்டும் கொந்தளிப்புடன் அலையும் மனம், தியானப் பொருளான ஆத்மாவிலிருந்து விலகியிருப்பதால் அதைக் கட்டுப்படுத்துவது கடினமானதுதான், என்றாலும் அதைச் செய்யமுடியும். ஆனால் மனமானது தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்து தியானத்தில் வெறுமனே உட்கார முடியாது. அதற்கான உரிய கவனத்தை செலுத்த வேண்டும் என பகவான் அடுத்த சுலோகத்தில் வலியுறுத்துகிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

நீந்தக் கற்றுக் கொள்ள விரும்புகிறவன் அதைத் தொடர்ந்து அப்பியசிக்க வேண்டும். ஒரே ஒரு நாள் பழகியவுடன் கடலில் நீந்துதற்கு ஒருவனும் துணியமாட்டான். அதுபோல பிரம்மமாகிய கடலில் நீந்தப் பிரியப்பட்டால் முதலில் அநேகம் தரம் பயன்படாத பிரயத்தனங்கள் செய்து தீர வேண்டும். அப்போதுதான் அங்கு நீந்தக் கூடிய சக்தி உனக்கு உண்டாகும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------