||6.28|| தியான யோகப் பலனின் தொடர்ச்சி:
युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मष: ।
सुखेन ब्रह्मसंस्पर्शमत्यन्तं सुखमश्नुते ।। २८ ।।
யுஞ்ஜந்நேவம் ஸதா3த்மாநம் யோகீ3 விக3தகல்மஷ: ।
ஸுகே2ந ப்3ரஹ்மஸம்ஸ்பர்ச1மத்யந்தம் ஸுக2மச்1நுதே ।। 28 ।।
एवं ஏவம் இவ்விதம் सदा ஸதா3 எப்பொழுதும் आत्मानं युञ्जन् ஆத்மாநம் யுஞ்ஜந் மனதை ஆத்மாவில் நிலைக்கச் செய்து विगत कल्मष: விக3தகல்மஷ: அசுத்தங்கள் நீங்கப் பெற்ற
योगी யோகீ3 யோகியானவன் सुखेन ஸுகே2ந எளிதில்
ब्रह्म संस्पर्शम् ப்3ரஹ்ம ஸம்ஸ்பர்ச1ம் ப்ரம்ம ஞானத்தில் பிறந்த
अत्यन्तं सुखम् அத்யந்தம் ஸுக2ம் மேலான சுகத்தை अश्नुते அச்1நுதே அடைகிறான்.
இங்ஙனம் எப்பொழுதும் மனதை ஆத்மாவில் நிலைக்கச் செய்து அசுத்தங்கள் நீங்கப் பெற்ற யோகியானவன் ப்ரம்ம ஞானத்தில் பிறந்த பேரானந்தத்தை எளிதில் அடைகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.
விளக்கம்:
=> எழுவாய் மற்றும் செயப்படுபொருள் வேறுபாடு:
முந்தய சுலோகத்தில் எழுவாய், அதாவது கர்த்தா என்பது உத்தம சுகம் என்றும் அச்சுகத்தை அடையும் யோகியான தியானிப்பவன் அங்கு செயப்படுபொருள்(கர்ம) என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த சுலோகத்தில் கர்த்தா யோகி என்றும் பொருளாகக் கிடைப்பது அத்யந்த சுகம் என்றும் சொல்லப்படுகிறது. அத்யந்தம் என்பது உத்தமம் என்பதன் இணைபொருட்சொல். இதிலிருந்து சுகம் யோகியை சென்றடைகிறது என ஒரு சுலோகத்திலும் யோகி சுகத்தை அடைகிறான் என இனியொரு சுலோகத்திலும் கிருஷ்ணர் கூறக் காரணம் என்ன? நிதித்யாசனத்தின் பலன் குறித்த எந்தவொரு குழப்பத்தையும் தீர்க்கும்பொருட்டும், கர்த்தா மற்றும் கர்ம என்ற வேறுபாட்டை நீக்கும்பொருட்டும் இந்த இருவகையான வெளிப்பாடுகளை உபயோகிக்கிறார் அவ்வளவே.
பேரானந்தத்தைப் பெறும் கர்த்தா, அதை தன்னிலும் வேறான ஒன்றாக பார்ப்பதில்லை. எனவே, இங்கு எழுவாயும் செயப்படுபொருளும், அதாவது கர்த்தா கர்ம இரண்டும் ஒன்றாகிறது - கர்த்தா ஏவ கர்ம. இது வேறெந்த விஷயத்தையும் போலல்லாமல் தன்னைப் பற்றிய அறிவாகவே இருப்பதால், இங்கு அடைபவன் மற்றும் அடையப்படும் பொருள் என்ற வேறுபாடு எதுவுமில்லை. எனவே, இந்த இரண்டு சுலோகங்களையும் ஒன்றாகப் படித்தல் வேண்டும்.
=> ஞானிக்கும் உபாசகனுக்குமுள்ள வேறுபாடு:
ஒரு உபாசகன், பகவானை பற்றிய ஞானமில்லாததால், அந்த குறிப்பிட்ட உபாசனை காலத்தில் மட்டும்தான் பகவத் சிந்தனையுடன் இருக்கின்றான். ஆனால் ஞானிக்கோ இவ்வுலகமும் பகவானும் வேறல்ல என்ற ஞானம் முழுமையாக இருப்பதனால், அவன் எப்பொழுதும் பகவானின் சிந்தனையிலேயே இருக்கின்றான். இந்த அறிவிலிருந்து அவனைப் பிரிக்க முடியாது.
இந்த சுலோகத்தில், ‘ஆத்மாநம் யுஞ்ஜந்’ என்பதற்கு மனதை ஒன்றிணைத்தல் அல்லது நிலைக்கச் செய்தல் என்று பொருள். ‘இந்த முறையில்’ எனப் பொருள்படும் ‘ஏவம்’ என்ற சொல் மனம் எதனுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதாவது, ‘ஆத்மாவே அனைத்துமாக உள்ளது’ என்ற ஞானத்தில் ஒன்றிணைத்தலைக் குறிக்கிறது — அஹம் ஏவ இதம் ஸர்வம். இவ்விதத்தில் நிதித்யாசனத்தில் ஈடுபடும் யோகி அத்யந்த சுகத்தை, உத்தம சுகத்தை அடைகிறான்.
அவன் நிதித்யாசன தியானத்தில் வெற்றியடைந்ததைக் குறிக்கும் விதமாக பகவான் இங்கு யோகி எனும் சொல்லை உபயோகிக்கிறார். இந்த யோகி, தியானிப்பவன், எல்லா விதமான தடைகளிலிருந்தும் விடுபட்டவனாக உள்ளான். மேலும் இவன் அதர்மத்திலிருந்தும், புண்ணிய மற்றும் பாபத்திலிருந்தும் விடுபட்டவனாக, விக3தகல்மஷ, என விவரிக்கப்படுகிறான். தியானத்தில் ஒருவனது வெற்றி என்பது அவனது வாழ்க்கையை அவன் எவ்விதம் வாழ்கிறான் என்பதைச் சார்ந்துள்ளது. அதர்மத்திலிருந்து விலகி, அறநெறிகளின்படி வாழும் வாழ்க்கையானது ஒருவனை முரண்பாடு மற்றும் மனப்போரட்ட வடிவிலுள்ள தடைகளிலிருந்து விடுவிக்கிறது. இந்த யோகி முடிவிலா ஆனந்தத்தை பெறுகிறான்.
=> முடிவிலா ஆனந்தம்:
அத்யந்த சுகம் என்பது ஒருவன் அனுபவிக்கும் எந்தவொரு சுகத்தோடும் ஒப்பிட முடியாதது. எனில் அத்யந்த சுகம் என்பது என்ன? ‘ப்3ரஹ்ம-ஸம்ஸ்பர்ச1-அத்யந்த-சுகம்’, ப்ரம்மத்தை தொட்டுணர்வதால் வரும் சுகம், அதாவது ப்ரம்ம ஞானத்தினால் மற்றும் ப்ரம்மத்துடனான ஐக்கியத்தினால் பிறக்கும் ஆனந்தம் என இந்த சுலோகமே அதை வரையறுக்கிறது. ‘ஆத்மாவே ப்ரம்மம்’ என்ற ஞானத்தில் இருக்கின்ற சுகம், சுயத்தை ப்ரம்மமாக அங்கீகரிப்பதனால் உண்டாகும் ஆனந்தம் இங்கு ப்3ரஹ்ம-ஸம்ஸ்பர்ச1-சுகம் ஆகும். இந்த சுகம் ப்ரம்மத்தினுடையது; ப்ரம்மத்தின் இயல்பாகவே இருப்பது ஆகையால் இது ஸ்வரூப-சுகம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆனத்தத்தை தனது சுயம் என உணரும் ஒரு நிதித்யாசகன் இந்த ஸ்வரூப-சுகத்தை அடைகிறான்.
இந்த சுலோகத்திற்கான தனது பாஷ்யத்தில் சங்கரர், அத்யந்த சுகம் என்பதற்கு முடிவிற்கு வராதது என்ற விளக்கத்தை அளிக்கிறார். அனுபவமாக கிடைக்கின்ற எந்தவொரு சுகமும் முடிவிற்குட்பட்டது; மேலும் மனதின் நிலையைச் சார்ந்திருப்பதால் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குட்பட்டது. ஏனெனில் மனதின் நிலை மாறிக்கொண்டே இருப்பதால் அனுபவ சுகம் என்பது நித்தியமற்றது. ஆனால் சொரூப சுகம் ஒருவனுடைய சுபாவமாகவே இருப்பதால் இதற்கு எந்த கால வரையறையும் முடிவும் இல்லை.
=> கடினமில்லாமல் அடையப்படுவது:
இந்த முடிவிலா ஆனந்தத்தை எவ்விதம் அடைவது? எனில், இதையடைய முயற்சியோ குறிப்பிட்ட கர்மமோ என எதுவும் தேவையில்லை. இந்த சுலோகத்தில் கிருஷ்ணர் உபயோகிக்கும் ‘ஸுகே2ந’, கடினமேதுமில்லாமல் எளிதாக எனும் சொல் இதை விளக்குகிறது. அதாவது ப்ரம்மமாகவே இருக்கின்ற சுயத்தை அடையாளம் காண்பதால் அடையப்படுகின்ற இந்த சுகம், கண்ணீர் இல்லாமல், வியர்வை இல்லாமல் எளிதாக அடையப்படுவதாக உள்ளது.
பொதுவாக மக்கள், சுற்றுலா செல்வது தொடங்கி எந்தவொரு சுகத்தை பெறவும் துக்கத்தை தருகிற சில விஷயங்களைக் கடந்து சென்றுதான் ஒரு குறிப்பிட்ட சுகத்தை அடைகிறார்கள். முதலீடு, திட்டமிடல், முயற்சி, அனைத்தும் சரியாக நடக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு மற்றும் இதனால் உண்டாகும் பதற்றம் என சிறிதளவு சுகத்தை அடையவும் அதிக உழைப்பு தேவைப்படுகிறது. இவ்வளவு துக்கத்துடன் கூடியதினாலேயே அது அல்ப-சுகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த சுலோகத்தில் குறிப்பிடப்படும் முடிவிலா ஆனந்தத்தை அடைய எவ்வளவு துக்கம் இதில் அடங்கியுள்ளது? எனில், எல்லா விதத்திலும் இது இனிமையான ஒன்றாகவே இருக்கிறது. அவன் மகிழ்ச்சியுடன், ஸுகே2ந, தன்னை கண்டடைகிறான். சாஸ்திரமானது பூர்ணமானவன் எனக் கூறி சாதகன் ஒருவனை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்வதால் அதைக் கேட்பதும் விசாரிப்பதுமே இனிமையானது.
‘தத் த்வம் அஸி, நீயே அதுவாக இருக்கிறாய்’ என சாஸ்திரம் கூறும்போது, அது உன்னை அப்படியே ஏற்றுக் கொள்கிறது என்பதைக் காட்டிலும், நீ முற்றிலும் முழுமையானவன் என அது சுட்டிக் காட்டுகிறது என்றே கூறமுடியும். சிருஷ்டியில் இருக்கும் ஒரே ஸத்யம் நீயே; வேறு எதுவும் உண்மையில் இல்லை. மற்ற அனைத்தும் அனாத்மாவாக, ஆத்மாவான உன்னைச் சார்ந்துள்ளதாக இருப்பது. நீ மட்டும் தான் சுயமாக விளங்கிக் கொண்டிருப்பவன், ஸ்வத-சித்த; மற்றவையனைத்தும் உன்னைச் சார்ந்துள்ளது என்கிறது சாஸ்திரம். இத்தகைய ஞானத்தை அடைதலும் அதற்கான பயணமும் கண்டிப்பாக இனிமையானதே.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஜலத்தில் அமிழ்த்திவைத்த பாத்திரத்தின் உள்ளேயும் வெளியிலும் ஜலம் நிரம்பியிருக்கும். அதுபோல ஈசுவரனிடம் ஆழ்ந்துள்ள ஆத்மாவானது உள்ளும் புறமும் ஸர்வவியாபகமான சைத்தன்யத்தைத்தான் காணும்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
||6.29|| ஞானியின் திருஷ்டி:
सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ।
ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शन: ।। २९ ।।
ஸர்வபூ4தஸ்த2மாத்மாநம் ஸர்வபூ4தாநி சாத்மநி ।
ஈக்ஷதே யோக3யுக்தாத்மா ஸர்வத்ர ஸமத3ர்ச1ந: ।। 29 ।।
योगयुक्तात्मा யோக3யுக்தாத்மா யோகத்தில் உறுதி பெற்றவன் सर्वत्र ஸர்வத்ர எல்லா இடத்திலும் समदर्शन: ஸமத3ர்ச1ந: சம திருஷ்டியுடையவன் आत्मानं ஆத்மாநம் தன்னை
सर्वभूतस्थम् ஸர்வபூ4தஸ்த2ம் எல்லா உயிர்களிடத்து இருப்பதாகவும்
सर्वभूतानि च ஸர்வபூ4தாநி ச எல்லா உயிர்களையும் आत्मनि ஆத்மநி தன்னிடத்தும்
ईक्षते ஈக்ஷதே காண்கிறான்.
யோகத்தில் உறுதிபெற்று எங்கும் சம திருஷ்டியுடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்தும், எல்லா உயிர்களை தன்னிடத்தும் காண்கிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.
விளக்கம்:
=> யோக சித்தி:
சுலோகம் இருபத்தி ஒன்பது முதல் முப்பதியிரண்டு வரை, ஒரு ஞானியின் திருஷ்டி அதாவது ஞானியானவன் உலகை எவ்விதம் காண்கிறான் என்பது விவரிக்கப்படுகிறது. தன்னகத்து ஆத்ம சொரூபத்தை அறிந்து அனுபவித்தவனுக்கு உலகக் காட்சியில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா என்பதற்கான விடையாக இந்த சுலோகம் வருகிறது.
இங்கு கிருஷ்ணர், ஒரு யோகியானவன் தனது சுயத்தை இவ்விதம் பார்க்கிறான், ஆத்மாநம் ஈக்ஷதே, என்பதாகக் கூறுகிறார். மனிதன் பொதுவாக, தன்னை ஒரு குறிப்பிட்ட வரலாறு மற்றும் சுயசரிதையுடன் கூடியவனாக அறிகிறான். அது அவனது உடலுடனும் அனுபவங்களுடனும் தொடர்பு கொண்டதாக இருக்கும். மேலும் அந்த உடலானது வேறு சில உடல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்னை, தந்தை, உடன்பிறந்தோர், பிள்ளைகள் போன்ற உறவுகள் வந்தமைகின்றன. இப்படியாக கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட உடலுடன் அறியப்படும் இந்த சுயம், அந்த குறிப்பிட்ட உடலில் தங்கியிருக்கும் ஒரு நபராகவே அறியப்படுகிறது.
ஆனால் நிதித்யாசனத்தில் மனதை ஒடுக்கிய யோகி, தனது சுயத்தை எல்லா உயிர்களிடத்து இருப்பதாகவும் — ஸர்வபூ4தஸ்த2ம் ஆத்மாநம், எல்லா உயிர்களையும் தன்னிடத்து இருப்பதாகவும் காண்கிறான் — ஸர்வபூ4தாநி ச ஆத்மநி.
=> சம திருஷ்டி:
மேலும் இப்படிப்பட்ட யோகி எல்லா இடத்திலும் சமமான திருஷ்டியுடையவனாக இருக்கின்றான் — ஸர்வத்ர ஸமத3ர்ச1ந:. இங்கு ‘ஸம’ என்பது ஆத்மாவை, ப்ரம்மனை குறிக்கிறது; அதாவது அனைத்திலும் ப்ரம்மத்தையே பார்க்கின்றான்.
எல்லா உயிர்களிடத்தும் ஏதோ ஒரு தனித்தன்மை, விஷேஷ, உள்ளது; அதேசமயம் எல்லாவற்றிலும் நிர்விஷேஷ, சிறப்பு தன்மையேதுமற்ற அல்லது குணங்களற்ற ஒன்றும் உள்ளது. உதாரணமாக மட்பாண்டங்களை எடுத்துக் கொள்ளலாம். பானை, தட்டு மற்றும் டம்ளர் போன்ற ஒவ்வொரு மட்பாண்டத்திற்கும் அவைகளுக்கேயுரிய விஷேஷ தன்மைகளாக வடிவங்களும் பெயர்களும் பயன்பாடுகளும் இருந்தபோதிலும் அனைத்திலும் பொதுவானதாக களிமண் நிர்விஷேஷமாக உள்ளது. ஆகவே வேறுபட்ட தன்மைகளுடன் கூடிய பானை, தட்டு மற்றும் டம்ளர் போன்றவற்றை ‘நாமரூபம்’ என்றும் அவை அனைத்திலும் பொதுவாக வியாபித்து இருக்கும் களிமண்ணை ஸத்யம் என்றும் கூறலாம். அதேபோல இவ்வுலகில் எல்லா நாமரூபங்களும் தங்களது அடித்தளத்தை, இருப்பை ஸத்-தில், அதாவது ப்ரம்மமாகவுள்ள ஆத்மாவில் கொண்டுள்ளன. அந்த ஆத்மா, ப்ரம்மன், நானாகவே இருக்கின்றேன்.
இவ்விதமாக எல்லாவற்றிலும் உள்ள இருத்தலாக(ஸத்), அனைத்து நாம ரூபங்களுக்கும் இருப்பைக் கொடுக்கின்ற குணங்களற்ற நிர்விஷேஷத்தை அறிந்தவன், இங்கு ஸமத3ர்ச1ந: என்றழைக்கப்படுகிறான். எல்லாவற்றிலும் அவன் ப்ரம்மத்தையே, தன்னையே காண்கின்றான்.
=> யோகி:
யோக3யுக்தாத்மா = யோக + யுக்த + ஆத்மா => தத்துவ ஞானத்தில் பொருந்திய மனதையுடையவன்; ஞானி. யோகத்தில் முதிர்ச்சியடைந்து வருபவனுக்கு இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற வேற்றுமையெண்ணம் போய்விடுகிறது. சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மா முதல் சிருஷ்டிப் பொருட்களில் மிகச் சிறியதாகிய புல் வரை எல்லாவற்றையும் சிறந்த பான்மையுடன் கருதுதல் அவனுக்கு இயல்பாகிறது. எல்லா உயிர்களையும் தன் சொரூபமாகவும், தன்னை எல்லா உயிர்களின் சொரூபமாகவும் உணரும் தன்மை அவனுக்கு வந்தமைகிறது. உதாரணமாக கடல் அலையை எடுத்துக் கொண்டு இதை விசாரம் செய்யலாம்.
=> கடலலை:
முழுதும் நீர் சொரூபமாகவுள்ள அலையானது, பெரிய அலை சிறிய அலை என்ற நாமரூபத்துடன் விளங்கிக் கொண்டுள்ளது. தன்னை நீரின் சொரூபமாக உணர்ந்த அலை ஒன்று பின்வருமாறு கூறுகின்றது:
* என்னை அனைத்து அலைகளுக்குள்ளும் பார்க்கின்றேன்.
* அனைத்து அலைகளையும் எனக்குள் பார்க்கின்றேன்.
பார்ப்பதற்கு நீர் மற்றும் அலை என்ற இருமை(துவைதம்) தெரிந்தபோதிலும் உண்மையில் நான் அனைத்து அலைகளுக்குள்ளும் நீராக வியாபித்து இருக்கின்றேன். நான் நீர் சொரூபமானவன். அனைத்து அலைகளும் என் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. எனவே அலை என்ற ஒன்று தனியாக இல்லை; அனைத்தும் நீர் தத்துவம் என்கிறது.
இந்த உவமையில் அலை என்பது உடலையும், நீர் என்பது ஆத்ம தத்துவத்தையும் குறிக்கிறது எனில்,
* (ஸத், சித்)ஆத்ம சொரூபமான நான் அனைத்து உடல்களையும் வியாபிக்கின்றேன்.
* எல்லா உயிர்களின் சரீரமும் ஆத்மாவான என் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. (இவ்விதமாக அனைத்து இருமையும் நீக்கப்படுகிறது)
எவ்விதம் அலையானது தன்னை நீர் சொரூபமாக புரிந்து கொண்டு எல்லா அலைகளிடத்திலும் நீராகிய தன்னையே பார்க்கின்றதோ அவ்விதம் ஸத் மற்றும் சித் சொரூபமாக தன்னை புரிந்த ஞானி, எல்லா உயிர்களிடத்தும் தன்னையே காண்கிறான். மேலும் நீராகிய அலை, அவ்விதமே நீராகவுள்ள எல்லா அலைகளையும் தனக்குள் காண்பதுபோல, ஸத் மற்றும் சித் சொரூபமான அனைத்து உயிர்களையும் ஒரு ஞானி தன்னிடத்தே காண்கிறான்.
* ப்ரத்யக ஆத்மா -> நான் அனைத்தையும் வியாபிக்கின்றேன்.
* பரமாத்மா -> அனைத்தும் என்னிடத்தில் இருக்கின்றது.
இந்த ஞானி, புல் முதல் பிரம்மா வரை அனைத்தையும் சம தர்ஷணத்துடன் பார்க்கின்றான். தன்னை தூய பிரக்ஞை சொரூபமாக அடையாளம் காண்பதால் இவ்வுலகின் அனைத்து உயிரினங்களும் மனங்களும் இந்த பிரக்ஞை உணர்விலிருந்து வெளியே இல்லை. தேச கால வரையறைக்குட்படாத இந்த ஆத்மாவே, நானே(அஹம்) அனைத்திற்க்கும் ஆதாரமாக இருக்கிறேன். அஹம், இந்த ஆத்மா ஒரு உயிரின் சுயமாக மட்டுமல்ல, அனைத்துயிர்களின் சுயமாகவும் இருக்கிறது — ஸர்வ பூதஸ்த ஆத்மா. இது ஞான நிஷ்டையின் பலனாக கிடைக்கும் திருஷ்டி ஆகும்.
=> அனைத்து உயிர்களின் ஒடுக்கம்:
நிதித்யாசகன் எல்லா உயிர்களையும் தன்னிடத்தில் பார்க்கின்றான் — ஸர்வபூ4தாநி ச ஆத்மநி ஈக்ஷதே. இது எவ்விதம் நடைபெறுகிறது? இது ஒடுக்கத்தினால் சாத்தியப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ள முதலில் ஒடுக்கங்களின் வகைகளை பற்றித் தெரிந்து கொள்வோம். இது லயம் அல்லது பிரளயம் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக இரு வகையான லயங்கள் பேசப்படுகின்றது.
ஒன்று நித்ய-லயம், உறக்கத்தில் நிகழ்வது. அனைத்து அனுபவங்களும், நிகழ்வுகளும், உலகம் மற்றும் அதன் அனைத்து உயிரினங்களும் ஒருவனது உறக்கத்தில் அவனுக்குள் ஒடுங்குகின்றது. இந்த தினசரி ஒடுக்கம், நித்ய-லயம் ஆகும்.
மற்றொன்று மஹா-பிரளயம். சிருஷ்டி-ஸ்திதி-பிரளயம் எனக் கூறப்படும் உலகத்தின் தோற்றம், இருத்தல் நிலை மற்றும் ஒடுக்கத்தை குறிக்கும் வெளிப்பாட்டிலுள்ள பிரளயம் இது. தனியொருவனின் ஆழ்ந்த உறக்கத்தைபோல இதை பிரபஞ்சத்தின் உறக்கம் எனலாம். இந்த இரு வகை ஒடுக்கத்திலும் உண்மையில் எதுவும் இழக்கப்படுவதில்லை; வெளித்தோற்றத்திற்கு வராத நிலையிலிருந்து பின் மீண்டும் வெளிப்படும் போது அது முன்பு இருந்ததைப் போலவே வெளிப்படுகிறது. எவ்விதம் உறக்கத்திலிருந்து திரும்பும் ஒருவன், விழித்தவுடன் அனைத்தையும் அதேபோல் காண்கிறானோ அவ்விதமே மஹா-பிரளயத்திலும் முன்பு இருந்தது அப்படியே மீண்டும் வருகிறது. ஆழ்ந்த உறக்க நிலைக்கு பின்னதான தொடர்ச்சியாக, இந்த ஒடுக்கம் மற்றும் வெளித்தோற்றத்திற்கு வருதல் என்பது ஒரு சுழற்சி நிலையை உருவாக்குவதால் இங்கு உண்மையில் எதுவும் இழக்கப்படுவதில்லை. இந்த சிருஷ்டி-ஸ்திதி-பிரளய சுழற்சி என்பது பிரக்ஞையுணர்வின் வெளிப்பாடும் ஒடுக்கமுமன்றி வேறில்லை.
=> மோக்ஷமெனும் ஒடுக்கம்:
மூன்றாவது வகையான ஒடுக்கம் ஒன்று உண்டு, அது அத்யந்த-பிரளயம் என்றழைக்கப்படும். இதுவே மோக்ஷம் என்றும் கூறப்படும். இங்கு எந்த விதமான மறைதலும் நிகழ்வதில்லை. பதிலாக, இங்கு அந்தப் பொருளை அப்படியே பார்த்து, அதனுடைய அதிஷ்டானத்தில், மெய்பொருளில் ஒடுக்குதல் என்பது நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக, களிமண்ணிலிருந்து தோன்றிய ஆயிரம் பானைகளை பார்க்கும்போது, அதனுடைய மெய்ப்பொருளான களிமண்ணில் ஒவ்வொரு பானையையும் ஒடுக்குவதால் அது மஹா-பிரளயமாகிறது.
இவ்விதம் எந்தப் பொருளையும் மறையச் செய்யாமலும் அல்லது மாற்றாமலும், ஆனால் அதே நேரத்தில் அவைகளின் ஆதாரமாக விளங்கும் ப்ரம்ம-ஆத்மாவிடமிருந்து பிரிக்கப்படாதவைகளாக பார்க்கப்படுகின்றன. இந்த தரிசணத்தையே இவ்வெளிப்பாடு எடுத்துரைக்கிறது — ஸர்வபூ4தாநி ச ஆத்மநி ஈக்ஷதே.
வேதாந்தம், அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பதை(காரணம்) ‘ஸத்யம்’ என்றும் விளைவாகத் தோன்றியுள்ளதை(காரியம்) ‘மித்யா’ என்றும் கூறுகிறது. இந்த குறிப்பிட்ட காரணம்-விளைவு பற்றிய பகுப்பாய்வு, காரண-காரிய-வாதம் எனப்படுகிறது. இவற்றில் ஒன்று மித்யாவாகிப் போவதால், உண்மையில் இங்கு காரணம் காரியம் என எதுவுமில்லை. காரணம் என்ற நிலையுமே கூட தற்செயலானதாக ஆகிறது. இங்குள்ள அனைத்தும் ஸத்ய-ப்ரம்ம மட்டுமே.
இந்த அறிவை அடைந்தவன் இந்த உலகத்தை, அதே உலகத்தை, வேறு புத்தியுடன் பார்க்கின்றான். தன்னையே, தனது சுயத்தையே அனைத்திற்கும் காரணமாகப் பார்க்கின்றான். இதனால் இந்த முழு படைப்பும் ஸ்தூல மற்றும் சூக்ஷம சரீரங்களாக மட்டுமே உள்ளது. மேலும் இவைகள் மட்டுமே உருவாக்கப்பட்டதாக, காலத்தை கடந்த ஆத்மா உருவாக்கப்படாததாக என்றுமுள்ளதாக ஆகிறது. இந்த ஆத்மாவே, மெய்ப்பொருளாக, அனைத்திற்கும் அதிஷ்டானமாக இருக்கிறது. ஆத்மாவைக் குறித்த இந்த புரிதலே இந்த சுலோகத்தில் குறிப்பிடப்படும் இந்த தரிஷணத்திற்கு அடிப்படையாகும் — ஸர்வபூ4தஸ்த2ம் ஆத்மாநம் ஸர்வபூ4தாநி ச ஆத்மநி ஈக்ஷதே.
=> நிதித்யாசனத்திற்கான சுலோகங்கள்:
இங்கு ‘பார்க்கின்றான்’ என்பது கண்களினால் நேரடியாக காண்பதைக் குறிக்கவில்லை. இதன் பொருள் என்னவென்றால், இந்த யோகிக்கு, சுயத்தைப் பற்றிய அறியாமை இல்லை. எல்லா உயிர்களிலும் தான் இருப்பதும், எல்லா உயிர்களும் தன்னில் இருப்பதும்தான் இந்த ஞானியின் பார்வை. வேதாந்தத்தின் இந்த தரிசனமே சுலோகம் 29 முதல் 32 வரை விவரிக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்படும் இந்த அறிவினால், இவை மூன்றும் உண்மையில் நிதித்யாசனத்திற்குரிய சுலோகங்களாகின்றன. ஏனெனில் இந்த அறிவைப் பற்றிய புரிதலே நிதித்யாசனத்தின் பலனாகவும் உள்ளது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
நான் தனிப்பட்ட ஜீவன் என்று கூறுவது கங்கை பிரவாகத்துக்குள் ஒரு சிறு பாகத்தை அணையிட்டுக் கட்டி அவ்வணைக்குள்ளிருக்கும் நீரைத் தன்னுடைய கங்கை என்று கூறுவதற்கொப்பாகும்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------