செவ்வாய், 8 நவம்பர், 2022

தியான யோகம் 6.26 - 6.27

||6.26|| மனதின் தன்மையை விளக்குகிறார்:

यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम्

ततस्ततो नियम्यैतत्दात्मन्येव वशं नयेत् ।। २६ ।। 

யதோ யதோ நிச்1சரதி மநச்1சஞ்சலமஸ்தி2ரம்

ததஸ்ததோ நியம்யைததா3த்மந்யேவ வச1ம் நயேத் ।। 26 ।।


चञ्चलम्  சஞ்சலம்  சஞ்சலமானதும்   अस्थिरम्  அஸ்தி2ரம்  ஸ்திரமில்லாததுமாகிய   मन:  மந:  மனமானது   यत: यत:  யத: யத:   எதையெதை நோக்கி   निश्चरति   நிச்1சரதி  ஓடுகின்றதோ   

तत: तत:   தத: தத:  அதனதனிடமிருந்து   एतत्  ஏதத்  இந்த மனதை   नियम्य   நியம்ய  மீட்டு வந்து   

त्मनि एव वशं   ஆத்மநி ஏவ வச1ம்  ஆத்மாவின் வசத்திலேயே   नयेत्   நயேத்  கொண்டு வருக.


அலைவதும் நிலையற்றதுமாகிய மனது எதையெதை நோக்கி ஓடுகின்றதோ அதனதனிடமிருந்து மீட்டு வந்து ஆத்மாவின் வசத்திற்கு கொண்டு வருக.  


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.


விளக்கம்:

சிறிது சிறிதாகப் பழகவேண்டும் என்று சென்ற சுலோகத்தில் பகவான் கூறுவதை, தீவிரமான முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என சாதகன் ஒருவன் தவறாகப் புரிந்து கொள்ளலாம். அத்தகைய சந்தேகத்தை நீக்கும் பொருட்டுமெல்ல மெல்லஎன்பதன் உட்கருத்தை, மனதின் தன்மைகளை விளக்குவதன் மூலம் இங்கு தெளிவுபடுத்துகிறார். ஏனெனில் மனமே ஆத்மாவைக் குறித்த தியானத்தில் ஈடுபடவேண்டியிருப்பதால் அதுகுறித்த புரிதல் மிக அவசியமான ஒன்றாகிறது.

ஓடும் தன்மையை உடைய மனது ஒரு பொருளிடத்திருந்து விலக்கியெடுக்கப்பட்டவுடன் அது மற்றொரு பொருளிடத்துப் பாய்கிறது. அப்படிப் பாய்தற்கு தக்க காரணத்தையும் அந்த மனதே கண்டுபிடிக்கிறது. அத்தருணத்தின் போதெல்லாம் அதற்கு விவேகத்தை ஊட்டுதல் அவசியமாகிறது. இச்செயலைத்தான் சிறிது சிறிதாக வசப்படுத்துவது என பகவான் பகர்கிறார்.


=> மனதின் இயல்புகள்:

இந்த சுலோகத்தில் பகவான் இரண்டு குணங்களை மனதிற்கு அடைமொழியாகக் கூறுகிறார்:

(i) சஞ்சலம் - விக்ஷேபம்(தேவையற்ற விஷயங்களைப் பற்றிய சிந்தனை); அலைந்து கொண்டேயிருத்தல்.

(ii) அஸ்திரம் - உறுதியில்லாத, நிலை கொள்ளாத தன்மை.

பகவானே மனதை இவ்விதமாகக் கூறுவதிலிருந்து அவர், ‘நான் இந்த மனதை இப்படிப்பட்டதாகத் தான் படைத்துள்ளேன்என்கிறார். சஞ்சலமே மனதின் இயல்பு; ஒருவிதத்தில் இது நல்லதும் கூட. ஏனெனில் மனம் இப்படிப்பட்ட தன்மையுடன் இல்லையெனில் மனிதன் ஒரு சிந்தனையிலேயே சிக்கிக் கொண்டுவிடுவான். இங்கு சஞ்சலமும் அஸ்திரமும் ஒன்றையொன்று தகுதிப்படுத்திக் கொள்கின்றன; அதாவது அலைந்து கொண்டேயிருப்பதால் மனம் நிலையானதாக இல்லைசஞ்சலத்வாத் அஸ்திரம், உறுதியில்லாத தன்மையினால் மனமானது அலைந்து கொண்டேயிருக்கிறதுஅஸ்திரத்வாத் சஞ்சலம்.

எனவே மனதின் இந்த தன்மைகளை முதலில் ஏற்றுக் கொண்டு, பிறகு அதை மாற்ற முயற்சி செய்கிறோம். மனதின் இயல்பே இவ்விதம் இருப்பதனால், ஏதேனும் ஒரு காரணத்தை கொண்டு அது தியானப் பொருளிலிருந்து விலகிச் செல்கிறது, யத: யத:. மனம் அவ்விதம் நடந்து கொள்ள போதுமான காரணங்களும் ஒருவனிடம் இருக்கின்றன. இதிலிருந்து அதன் உறுதியில்லாத மற்றும் அலைகின்ற தன்மையைக் குறித்து மனதின் மீது கோபப்பட வேண்டாம். ‘எங்கெங்கெல்லாம் அது செல்கிறதோ அங்கங்கு சென்று அதை மீண்டும் அழைத்து வாஎன்கிறார்


=> சங்கரரின் ஆலோசனை:

தனது பாஷ்யத்தில் சங்கரர் இதை எப்படி செய்வது என்பதற்கான ஒரு சிறந்த ஆலோசனையைத் தருகிறார். மனமானது வெளி விஷயத்தை நோக்கி செல்லும்போது அதை பின்னுக்கு இழுக்க முயற்சி செய்யவேண்டாம். மாறாக, அது எந்த பொருளை நோக்கிச் செல்கிறதோ அதையையே கவனத்திற்குரிய பொருளாக மாற்றி தற்காலிகமாக அதைப் பார்த்தல் வேண்டும்.

    தற்போது அந்தப் பொருளானது பிரக்ஞையுணர்விலிருந்து வேறானதாக இருக்கிறதா? இவ்விதம் கேள்வி கேட்கும்போது அது தொடர்வதில்லை. அப்பொருள் மித்யாவாக மாறுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. இதன்மூலம் மனமானது ஸத்யத்திற்கு, அதாவது நானாகிய ஆத்மாவிற்குத் திரும்புகிறது.

முழு வேதமும் செயல், செயல்-செய்பவன், பொருள், செயல்-கருவிகள் மற்றும் செயல் குறித்த பலவற்றைப் பற்றி பேசுகிறது. பின்னர், வேதத்தின் இறுதியில்(வேதாந்தம்), இதுவரை சொன்னது அனைத்தும் சத்தியமானதாக இல்லை, இவையனைத்தும் மித்யா எனக் கூறுகிறது

    தியானப் பொருளிலிருந்து ஒருவனை இழுத்துச் செல்லும் அந்தவொரு குறிப்பிட்ட எண்ணத்தையே பார்ப்பதன் மூலம் அது குறித்த உண்மைத்தன்மை அறியப்பட்டு அந்தப் பொருள் மித்யாவாகிறது. இங்கு கிருஷ்ணர் ஒருவன் மனதை மீண்டும் தன் கைக்குள் கொண்டு வர வேண்டும் - வச1ம் நயேத், என்கிறார். அதாவது ​​​​அதை மீண்டும் தியானப் பொருளுக்கு, ஆத்ம சிந்தனைக்கு திருப்ப வேண்டும்.


=> தியானயோகம்:

இந்த முறையில் எந்த பொருளால் ஒருவனை திசை திருப்ப முடியும்! இந்த தியானப் பயிற்சியின் வலிமையால், தியான யோகத்தினால், மனமானது ஆத்மாவில் ஒடுங்குகிறது. கவனச்சிதறலும் தவறான சுயஅடையாளமும் மெல்ல மெல்ல விலகுகிறது. இதனால் மனம் ஒரு மனமாக மட்டுமே உள்ளதால் அதிலிருந்து எந்த பிரச்சனையும் உண்டாவதில்லை.

இவ்விதம் தொடர்ந்து செய்யும் பயிற்சியினால் மனம் வெளியே செல்வது குறைந்து, நம்மிடமிருக்கும் காலம் அதிகமாகிறது. வேதாந்தத்தின் அடிப்படையில் வ்ருத்திகளை இரு விதத்தில் வகைப்படுத்தலாம்

(1) ஸஜாதீய வ்ருத்தி - ஒரே விஷயத்தை(ஆத்ம தத்துவத்தை) குறித்த எண்ணங்கள்.

(2) விஜாதீய வ்ருத்தி - ஆத்ம தத்துவத்திற்கு அப்பாற்பட்ட எண்ணங்கள்.

பொதுவாக தியானம் என்பது ஸஜாதீய வ்ருத்திக்கும் விஜாதீய வ்ருத்திக்கும் வரும் போராட்டம். இந்த செயலிலேயே ஒரு ருசியை அடையவேண்டும். முந்தைய சுலோகங்களில் பகவான் கூறியதுபோல விவேகம் மற்றும் வைராக்கியத்தின் துணைக்கொண்டு, தைரியத்துடனும் ஊக்கத்துடனும் செய்யப்படும் தொடர் முயற்சியின் மூலம் மனதை நம் வசப்படுத்த வேண்டும்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

இச்சையானது கடுகளவு இருந்தாலும் ஈசுவரனைக் காணமுடியாது. ஆதலால் உன்னிடத்துள்ள குற்றமற்ற சிறிய இச்சைகளைத் திருப்திசெய்துகொண்டு, விஷயாதிகளிலுள்ள கொடிய பெரிய இச்சைகளை விவேகத்தாலும் விசாரத்தாலும் ஒழித்து விடு.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.27|| தியான பலன்:

प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम्

उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम् ।। २७ ।।

ப்ரச1ந்தமநஸம் ஹ்யேநம் யோகி3நம் ஸுக2முத்தமம்

உபைதி சா1ந்தரஜஸம் ப்3ரஹ்மபூ4தமகல்மஷம் ।। 27 ।।


प्रशान्त मनसं   ப்ரச1ந்தமநஸம்  மிகச் சாந்தமான மனதையுடையவன்  

शान्तरजसं  சா1ந்தரஜஸம்  ரஜோகுணத்தின் வேகம் தணிந்தவன்  अकल्मषम्   அகல்மஷம்  பாபமற்றவன்   ब्रह्मभूतम्   ப்3ரஹ்மபூ4தம்  ப்ரம்ம சொரூபமாகவே ஆனவன்   एनं  ஏனம்  இப்படிப்பட்ட   

योगिनं हि   யோகி3நம் ஹி   யோகியைத்தான்   उत्तमं सुखम्   உத்தமம் ஸுக2ம்  உத்தமமான சுகம்  

उपैति   உபைதி   வந்தடைகிறது.


மிகச் சாந்தமான மனதையுடைய, ரஜோகுணத்தின் வேகம் தணிந்த, பாபமற்ற, ப்ரம்ம சொரூபமாகவே ஆன யோகியையே பேரின்பம் வந்தடைகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.


விளக்கம்:

சுலோகம் 27 முதல் 32 வரை பகவான் தியானத்தின் பலனை எடுத்துரைக்கிறார். இந்த சுலோகத்தில் ஒரு முக்தனின் மனதை வர்ணிப்பதன் மூலம் நிதித்யாசனத்தின் பலனைக் கோடிட்டு காட்டுகிறார்


=> முக்குணம்:

ஒவ்வொரு மனமும் மூன்று குணத்துடன் கூடியது எனவும் அது ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்று அழைக்கப்படுகிறது எனவும் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். ஒரு முக்தனின் மனமானது ரஜஸ் மற்றும் தமஸிலிருந்து விடுதலையடைந்து ஸத்வ குணப் பிரதானமாக ஆகிறது. பின்னர் ஸத்வ குணத்திலிருந்து வரும் பந்தங்களிலிருந்தும் அது தன்னை விடுவித்துக் கொள்கிறது

 (1) தமஸ்(தமோ குணம்) - ஜடம், மந்தத் தன்மை, மோஹம், உறக்கம்

 (2) ரஜஸ்(ரஜோ குணம்) - செயல், ப்ரவ்ருத்தி, விக்ஷேபம்

 (3) ஸத்வம்(ஸத்வ குணம்) - அறிவு, ஞானம், அமைதி, தெளிவு

இந்த சுலோகத்தில் பகவான் குறிக்கும் மிகச் சாந்தமான மனதையுடையவன் என்பது ஸத்வ குணத்திலுள்ள ஞானியைக் குறிக்கிறது. ஒழுங்குப்படுத்தப்பட்ட இவனது மனம் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாத வண்ணம் அமைதியை அடைந்துள்ளது. ‘சா1ந்தரஜஸம்என்பது ரஜோ குண ஆதிக்கமில்லாதவனைக் குறிக்கிறது. அனைத்து அசுத்தங்களையும் நீக்கியவனாய், ரஜஸின் பிடியிலிருந்து தப்பியவனைக் குறிக்கிறது. விருப்பு வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு எழுந்த, முற்றிலும் பொய்யான ஒன்றின் மீதான ஈர்ப்பையே அசுத்தங்கள், மோஹாதி க்லேஷ, என சங்கரர் வரையறுக்கிறார். இங்கு வர்ணிக்கப்படுவன், விருப்பு வெறுப்பின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாக இருப்பதால் இவன் பாபமற்றவன் ஆகின்றான்

அகல்மஷம்என்பதற்கு பாபமற்றன் அல்லது தமோ குணத்திலிருந்து நீங்கியவன் என்பது பொருள். எனவே தமஸிலிருந்து நீங்கிய, ரஜஸின் வேகம் தணிந்த மற்றும் ஸத்வத்தினால் மனதை சாந்தப்படுத்திய இந்த யோகி ப்ரம்ம சொரூபமாகவே (ப்3ரஹ்மபூ4தம்) இருக்கின்றான். அதாவதுப்ரம்மமே அனைத்தும்; அந்த ப்ரம்ம நானாகவே இருக்கின்றேன்என்ற அறிவில் உறுதியை உடையவனாக ப்ரம்மபூத ஆகின்றான்.   இத்தகையவனை உத்தமமான சுகம் வந்தடைகிறது.


=> உத்தமமான சுகம்:

உத்தமம் ஸுக2ம்என்பது நிரதிசய சுகத்தை, அதாவது எதை அடைந்தால் அதற்குமேல் அடைய ஒன்றுமில்லையோ அத்தகு சுகத்தை குறிக்கின்றது. இது நாம் அறிந்த எந்தவொரு மகிழ்ச்சியோடும் சுகத்தோடும் ஒப்பிட முடியாதது. இது முழுமையானதுபூர்ணத்வா; ஆத்மாவின் சொரூபமாகவே இருப்பது. உத்தம சுகம் என்பதன் எதிர்ப்பொருள் அதம சுகம். ‘அதம சுகம்என்பது துக்கம் கலந்தது; அதிருப்திகரமானது; எவ்வளவு அடைந்தாலும் அதற்குமேல் என அடைய வாய்ப்பு இருப்பதாக உள்ளது

நிதித்யாசனத்தின் பலனாக அடையப்படும் இந்த உத்தமம் சுகம் என்பது ஆத்ம ஞானத்தினால் கிடைப்பது; ஆத்மாவினால் அல்ல. இதன் பொருள் என்னவெனில் இத்தகு சுகத்தை அனுபவிக்க ஆத்மா ஒரு பொருளாக, விஷயமாக இல்லை. ஆத்மா என்றும் நானாக, அனுபவிப்பவனை விளக்குபவனாக இருக்கின்றது. ஆகவே உண்மையில் இந்த சுகத்தை அனுபவிப்பதும் நமது மனம்தான். இதுவே மனதினால் அடையப்படக்கூடிய அதிகபட்ச சுகம். நானாக விளங்கும் ஆத்மா சுக சொரூபம் என்ற ஞானத்தினால் மனதிற்கு வரும் நிறைவு இந்த உத்தமம் சுகம்.


=> சுகம் அவனை சென்றடைகிறதா அல்லது அவன் சுகத்தை பெறுகிறானா?

இலக்கணப்படி இந்த சுலோகத்தின் வாக்கிய அமைப்பில், உத்தம சுகம் என்பது வாக்கியத்தின் எழுவாயாகவும்(கர்த்தா) மற்றும் சுகத்தை அடைபவன் இங்கு செயப்படுபொருளாகவும்(கர்ம) உள்ளது. பொதுவாக ஆனந்தம் என்பது பெறப்பட வேண்டிய ஒன்று என நினைக்கிறோம். ஆனால் இங்கே அது ஒருவனை வந்தடைகிறது என்று கூறப்படுகிறது. இது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயம். அதாவது அடைபவன் ஒரு பொருளாகவும், ஆனந்தம் என்பது எழுவாயாக, அச்செயலில் ஈடுபடுபவனாக ஆகிறது. இதிலிருந்து ஆனந்தம் என்னை அடைகிறதா அல்லது நான் ஆனந்தத்தை சென்றடைகிறேனா எனும் கேள்வி எழலாம்

உண்மையில் இரண்டும் சரியானதே என்பதை அடுத்த சுலோகத்தில் நாம் காணலாம்.


சுவாமி சித்பவானந்தர்:

துன்பத்துக்கு ஏதுவான பற்றுதல்களை ரஜோகுணம் உண்டு பண்ணுகிறது. அதன் வேகம் தணியும்போது மனதில் இனிமையோடு கூடிய அமைதி தானாக வந்தமைகிறது. அப்பொழுது யோகி ஜீவன் முக்தனாகிறான். எல்லாம் ப்ரம்மம் என்று அறிகிறவன் தானே ப்ரம்மமாகிறான். வினையே பாபம் எனப்படுகின்றது. தர்மம் அதர்மமாகிய கர்மத்தில் கட்டுப்படாதவனுக்கு பாபமில்லை. பிறகு பேரின்பமான சித் சுகமே அவனை யாண்டும் அடுத்திருக்கும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------