||6.24|| தியான சொரூபம்:
सङ्कल्पप्रभवान् कामांस्त्यक्त्वा सर्वानशेषत: ।
मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्तत: ।। २४ ।।
ஸங்கல்பப்ரப4வாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநசே1ஷத: ।
மநஸைவேந்த்3ரியக்3ராமம் விநியம்ய ஸமந்தத: ।। 24 ।।
सङ्कल्प प्रभवान् ஸங்கல்ப ப்ரப4வாந் சங்கல்பத்திலிருந்து பிறந்த
सर्वान् कामान् ஸர்வாந் காமாந் எல்லா ஆசைகளையும் अशेषत: அசே1ஷத: பாக்கியில்லாமல்
त्यक्त्वा த்யக்த்வா தியாகம் செய்து मनसा एव மநஸா ஏவ மனதாலேயே
समन्तत: ஸமந்தத: எல்லாப் பக்கங்களிலிருந்தும் इन्द्रिय ग्रामं இந்த்3ரிய க்3ராமம் இந்திரியக் கூட்டத்தை विनियम्य விநியம்ய நன்கு முறைப்படுத்தி;
சங்கல்பத்திலிருந்து பிறந்த ஆசைகள் அனைத்தையும் மீதமில்லாமல் துறந்துவிட்டு, மனதால் எல்லாப் பக்கங்களிலிருந்தும் இந்திரியக் கூட்டத்தை நன்கு முறைப்படுத்தி,
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு, எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,
விளக்கம்:
சுலோகம் 24 முதல் 26 வரை பகவான் தியான சொரூபத்தை விளக்குகிறார். அனாத்ம வ்ருத்தியிலிருந்து ஆத்ம வ்ருத்திக்கு வருதல் நிதித்யாசனம் எனப்படும் — அனாத்ம வ்ருத்தே: ஆத்ம வ்ருத்தி: நிதித்யாசனம். இது இரண்டு படியாக இந்த சுலோகங்களில் விளக்கப்படுகிறது. முதல் படியான மனதை அனாத்மாவிலிருந்து எடுத்தல் இங்கும், இரண்டாவது படியான ஆத்மாவில் வைத்தல் அடுத்த சுலோகத்திலும் கூறப்படுகிறது.
=> அனாத்ம எண்ணங்கள்:
சங்கல்பம் என்பது மனதில் வரும் எண்ணம். எந்தப் பொருளின் மீது ஆசை இருக்கிறதோ அதை மனமானது நினைக்கிறது. இது அனாத்ம வ்ருத்தி எனப்படும். ஓரிரு முறை நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதற்குமேல் சங்கல்பமானது தொடர்ந்து நிகழும்போது அது ஆசைக்குரியப் பொருளாக மாறிவிடுகிறது. பொருளின் மீது வரும் இஷ்ட புத்தி, அதாவது இது எனக்கு சுகத்தை கொடுக்கும் எனும் சோபனம்(शोभन) ஆசையை உறுதியானதாக ஆக்குகிறது. எனவே சங்கல்பம் விதை போன்றது; ஆசையோ செடி போன்றது. எல்லாவித ஆசையும் சங்கல்பத்திலிருந்தே தோன்றுகிறது — ஸர்வாந் காமாந் ஸங்கல்ப ப்ரப4வாந்.
=> சங்கல்பம் ஏன் வந்தது?
பொருளைப் பார்ப்பதனால் அல்லது அதைப் பற்றிக் கேட்பதனால் வருவது சங்கல்பம் எனலாம். கீழ்கண்ட படிநிலைகளில் அது அனாத்ம வ்ருத்தியாக மாறுகிறது.
தரிசனம் (பார்த்தல் அல்லது கேட்டல்) —> சங்கல்பம் —> ஆசை —> மீண்டும் சங்கல்பம்(அது எனக்கு தேவை) —> அனாத்ம வ்ருத்தி:.
முதலில், பார்த்தலினாலோ அல்லது பிறர் சொல்லக் கேட்டலினாலோ ஏற்படும் தர்ஷணத்திலிருந்து சங்கல்பம் தோன்றி அது ஆசையாக மாறுகிறது. பின்னர் மீண்டும் அது ‘இது எனக்குத் தேவை’, ‘இது எனக்கு சுகத்தை கொடுப்பது’ போன்ற சங்கல்பங்களாக உருவெடுக்கிறது. இவ்விதமாக பொருளைப் பற்றிய தொடர்சிந்தனையே விஷயத் தியானம் என்றும் துக்கத்திற்கும் குரோதத்திற்கும் அழிவிற்கும் இது வழிவகுக்கிறது என்றும் பகவான் இரண்டாம் அத்தியாயத்தில் ஏற்கனவே கூறியுள்ளார். இப்படிப்பட்ட எண்ணங்களுடன் தியானத்தில் அமரும்போது இந்த ஆசைகளும் அதற்குரிய விஷயங்களுமே தியானப் பொருளாக மாறிவிடுகின்றன. ஆகவே மனதை இந்த சங்கல்பத்திலிருந்து எடுக்கவேண்டும்.
நிதித்யாசனத்தின் முதற்படியான அனாத்ம வ்ருத்தியை எடுப்பதற்கு அல்லது விலக்குவதற்கு உபாயமாக, மேற்கூறப்பட்ட படிநிலைகளில் தலைகீழாக சென்றுபார்க்கும் போது, அது நம்மை மனக்கட்டுப்பாடு மற்றும் புலனடக்கம் ஆகிய சாதனைகளுக்கு இட்டுச் செல்கிறது. சங்கல்பம் கூடாது எனில் மோஹத்தை கொடுக்கின்ற பொருட்களின் தர்ஷணம் இருக்கக்கூடாது. இது புலனடக்கத்தைக்(தம:) குறிக்கிறது. அடுத்ததாக புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, ஏற்கனவே நம் மனதினுள் சென்று பதிவுகளாக உள்ள ஞாபகங்கள் மேலெழுந்து சங்கல்பத்தை உருவாக்கும். இவைகளிலிருந்து விலகுதல் மனக்கட்டுப்பாடு(சம:). ஆகவே இந்த சுலோகத்தில் பகவான் சம: மற்றும் தம: என்ற சாதனைகளை வலியுறுத்துகிறார். சங்கல்பத்திலிருந்து பிறந்த ஆசைகளைத் துறத்தல், ஸர்வாந் காமாந் த்யக்த்வா, என்பது சம மற்றும் தமத்தை கடைபிடித்தல் ஆகும்.
* த1ம: [புலனடக்கம்] - மனதிற்கும் பொருளிற்கும் உள்ள சம்பந்தத்தை நீக்குதல்.
* ச1ம: [மனக் கட்டுப்பாடு] - மனதிற்கும் சித்தத்திற்கும் உள்ள சம்பந்தத்தை நீக்குதல். ஏற்கனவே மனதிலுள்ள பதிவுகள் நம்மை தொந்தரவு செய்யாத வண்ணம் கட்டுப்பாட்டுடன் வைத்திருத்தல்.
=> இந்திரியக் கட்டுப்பாடு:
நாம் உடலுக்கு கொடுக்கும் உணவைப் பொறுத்து அதன் ஆரோக்கியம் பேணப்படுவது போல, ஐந்து இந்திரியங்களின் வழியாக கொடுக்கப்படும் உணவே மனதின் ஆரோக்கியத்தை பேணுகிறது. எனவே ஆரோக்கியமான உள்ளத்திற்கு மன ஒழுக்கமும் இந்திரிய ஒழுக்கமும் இன்றியமையாதது.
பகுத்தறியும் விவேகத்துடன் கூடிய மனதினால்தான், மநஸா ஏவ, புலன் கூட்டங்களை அதனது விஷயங்களிலிருந்து திரும்பப் பெறமுடியும். ‘க்3ராமம்’ என்ற சொல்லின் முதன்மைப் பொருளான ‘கிராமம்’ என்பது இங்கு பொருந்தாது; அதன் இனியொரு அர்த்தமான ‘ஜாத’ என்பது குழு அல்லது கூட்டம் என்ற பொருளில், இங்கு இந்திரியக் கூட்டங்கள் எனப் பொருள்படுகிறது. ‘இந்த்3ரிய க்3ராமம் விநியம்ய’ என்பது புலன்களை அவற்றின் இடத்திலேயே வைப்பது, அதாவது அவைகளது விஷயங்களிலிருந்து விலக்கி புலன்களை அதன் இடத்தில் நிறுத்துவது ஆகும். எனவே புலனடக்கமும் மனக்கட்டுப்பாடும் இருக்கும்போதுதான் ஒருவனால் தியானத்தில் அமர முடியும் என்ற அறிவுரையை பகவான் அளிக்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
புகைசூழ்ந்த அறையில் எவ்வளவு ஜாக்கிரதையுடன் நீ இருந்தாலும் உனது சரீதத்தில் கொஞ்சமாவது கரியேறத்தான் செய்யும். அதுபோல ஒருவன் எவ்வளவு சாமர்த்தியமாயும் ஜாக்கிரதையாயும் இருந்தாலும் இந்திரிய விஷயங்களுக்கிடையில் வாசம் செய்வதால் அவனுக்குக் காம இச்சைகொஞ்சமாவது உண்டாவது நிச்சயம்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
||6.25|| இரண்டாவது படியான ஆத்மாவில் வைத்தல் கூறப்படுகிறது:
शनै: शनैरुपरमेद् बुद्ध्या धृतिगृहीतया ।
आत्मसंस्थं मन: कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् ।। २५ ।।
ச1நை: ச1நைருபரமேத்3பு3த்3த்4யா த்4ருதிக்3ருஹீதயா ।
ஆத்மஸம்ஸ்த2ம் மந: க்ருத்வா ந கிஞ்சித3பி சிந்தயேத் ।। 25 ।।
धृति गृहीतया த்4ருதி க்3ருஹீதயா துணிவுடன் கூடிய बुद्ध्या பு3த்3த்4யா புத்தியினால் मन: மந: மனதை आत्मसंस्थं कृत्वा ஆத்மஸம்ஸ்த2ம் க்ருத்வா ஆத்மாவில் நிற்பதாகச் செய்து
शनै: शनै: ச1நை: ச1நை: மெல்ல மெல்ல उपरमेत् உபரமேத் அமைதி பெற வேண்டும்
किञ्चित् अपि கிஞ்சித் அபி வேறு எதையும் न चिन्तयेत् ந சிந்தயேத் சிந்திக்கலாகாது.
உறுதியான அறிவினாலும் ஆத்ம சொரூபத்தில் நிலைநாட்டப்பெற்ற மனதினாலும் படிப்படியாக அமைதி பெற வேண்டும். வேறு எதையும் நினைக்காதே.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்; எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் நிதித்யாசனத்தின் இரண்டாவது படியான மனதை ஆத்மாவில் வைத்தலை கிருஷ்ணர் விளக்குகிறார். இங்கு ‘த்4ருதி’ எனில் உறுதி மற்றும் தைரியம்; நெறியான வாழ்க்கையினாலும் ஞானத்தினாலும் கிடைக்கும் வல்லமை. இத்தகு தைரியத்துடன் கூடிய பகுத்தறியும் விவேகத்தையுடைய புத்தியுடன், த்4ருதி க்3ருஹீதயா, மனதை ஆத்மாவில் நிறுத்தவேண்டும் என பகவான் இங்கு கூறுகிறார்.
மேலும் ‘ச1நை: ச1நை:’, அதாவது ‘மெல்ல மெல்ல’ அல்லது ‘சிறிது சிறிதாக’ என இருமுறை கூறும் வெளிப்பாடு சமஸ்கிருத மொழியில் பொதுவாகக் காணப்படும் முறை. ஒருவன் மெல்ல மெல்ல மனதை அமைதிப்படுத்தி, வேறு எதையும் சிந்திக்காது, தியானப் பொருளான ஆத்மாவில் பொருத்துதல் வேண்டும் - ஆத்மஸம்ஸ்த2ம் க்ருத்வா.
=> ஆத்மாவின் வரையறை:
‘ஆத்மஸம்ஸ்த2ம்’ என்ற வெளிப்பாட்டில், ஆத்மா என்பதன் வரையறை என்ன? ‘எதில் வேறொன்று பார்க்கப்படுவதில்லையோ(யத்ர நாந்யத் பஷ்யதி), எதில் வேறொன்று கேட்கப்படுவதில்லையோ(யத்ர நாந்யத் ச்ருனோதி), மற்றொன்று அறியப்படுவதில்லையோ(யத்ர நாந்யத் விஜானாதி)’ என்கிறது சாந்தோக்ய உபநிஷத். அதாவது சாஸ்திரமானது ஆத்மாவை அனைத்து குணங்களிலிருந்தும் விடுபட்ட ஒன்றாக வெளிப்படுத்துகிறது, நிர்விஷேஷ. அது முற்றிலும் பிரக்ஞை வடிவமானது - சைத்தன்யம்.
மேலும் சுருதியானது ஆத்மாவை, பார்ப்பவன் ஆனால் பார்க்கப்பட முடியாதவன்; அறிபவன் ஆனால் அறிபொருளாக இல்லாதவன்; சிந்திப்பவன் ஆனால் சிந்தனையாக இல்லாதவன்(மந்தா ந து மந்தவ்யம்) என்கிறது. ஆத்மாவின் இந்த வரையறையின் அடிப்படையில், ஒருவன் எப்படி மனதை ஆத்மாவின் மீது வைக்க முடியும்? ஆத்மாவை சிந்தனைக்கு உட்படும் அறிபொருளாக, தியானப் பொருளாக மாற்றினால் அது சுருதியின் வரையறைக்கு முரண்படுவதாக ஆகிறது.
=> ஆத்மாவில் பொருத்துதல் எங்ஙனம்?
ஆத்மாவில் மனதை வைப்பது எங்ஙனம்? ஒரு கோணத்தில் மனமே ஆத்மாவாக இருப்பதால், ஆத்மா எப்படி ஒருவரின் தியானப் பொருளாக முடியும்? உறுதியான மன அழுத்தத்தின் காரணமாக மனதை சிறிது நேரம் ஆத்மாவின்மீது அமரவைத்து நிலைநிறுத்துதல் என்பதுபோன்ற தவறான பொருள் தரும் மொழிபெயர்ப்புகளும் காணப்படுகின்றன. ஆகவே இங்கு விசாரம் மிக அவசியமான ஒன்றாகிறது.
‘ஆத்மா ஏவ இதம் ஸர்வம்’ என்ற சுருதி வாக்கியத்தில், ‘அனைத்தும் ஆத்மா மட்டுமே’ என வரையறுக்கப்பட்டுள்ளது. ‘இதம் ஸர்வம்’ என்பது அறிபவன் - ஞாதா, அறிவு - ஞானம் மற்றும் அறிபொருள் - ஞேய ஆகியவற்றைக் குறிக்கிறது. ஸர்வ என்பது அனைத்தும், எதுவும் விடப்படாமல் இவை மூன்றும், ஆகும். எனவே அறிபவன் அறிவு மற்றும் அறிபொருள் என அனைத்தும் நானாக, ஆத்மாவாகவே உள்ளது. உதாரணமாக ஒருவனுடைய கனவை எடுத்துக் கொள்வோம். கனவில் கனவை அறிபவன், அறிபொருளாகவுள்ள கனவு உலகம் மற்றும் கனவைப் பற்றிய அறிவு இவை மூன்றும் ஒரே பிரக்ஞையாக உள்ளது. ஒரு சைத்தன்ய-ஆத்மாவே இவை மூன்றாக தெரிந்தது. ஒருவன் விழிதெழுந்தவுடன் அறியப்பட்ட கனவு, கனவை அறிந்தவன் மற்றும் கனவு அறிவு அனைத்தும் அவனுக்குள் ஒடுங்குவதால் அவை அனைத்தும் ஒன்றே என்பதை அவன் எளிதாக புரிந்துகொள்கிறான். பிரக்ஞை உணர்வே அறிபவன், அறிவு மற்றும் அறிபொருளாகிறதே தவிர, பிரக்ஞைக்கு வேறானதாக அங்கு வேறெதுவுமில்லை. எனவே அறிபவன் எனும் வரையறைகுட்பட்டு முறையே அறிபவன்-பிரக்ஞை, அறிவு-பிரக்ஞை மற்றும் அறிபொருள்-பிரக்ஞையாக ஆகிறது. அறியப்பட்ட ஒரு பொருள் எப்போதாவது பிரக்ஞையிலிருந்து பிரிந்து இருக்க முடியுமா? அது முடியாது. ஒரு பொருள் அறியப்படும்போது பிரக்ஞை இருக்கிறது. அறியப்பட்ட பொருள் இல்லாதபோதும், பிரக்ஞையுணர்வு தொடர்ந்து இருக்கிறது. பொருளை அழித்துவிட முடியும் ஆனால் பிரக்ஞையுணர்வை, இருத்தலை அழிக்க முடியாது.
=> இருத்தல்:
எந்தவொரு பொருளும் இருத்தலின்றி இல்லை. எடுத்துக்காட்டாக, ‘சட்டை இருக்கின்றது’ அல்லது ‘துண்டு இருக்கின்றது’ எனக் கூறும்போது அதிலுள்ள ‘இருத்தல்’ என்பது பெயர் மற்றும் வடிவத்தை(நாமரூபம்) உடைய ஒரு பொருளினால் தகுதிப்படுத்தப்படுகிறது. சட்டை எனும் பொருளை மேலும் ஆராயும் போது, சட்டைக்கென தனி இருப்பு எதுவும் கிடையாது என அறியலாம். சட்டையானது அதற்கு காரணமாகவுள்ள நூலின் இருத்தலைச் சார்ந்தே உள்ளது. மேலும் பகுப்பாய்வை தொடரும்போது நூலானது பருத்தியைச் சார்ந்தும், பருத்தி அதன் இருப்புக்கு மரத்தைச் சார்ந்தும் உள்ளது. இவ்விதம் ஒரு பொருளானது மாறிக்கொண்டே இருந்தபோதிலும் இருத்தல் என்பது எப்போதும் நிலைத்திருப்பதைக் காணலாம்.
தன் இருப்புக்கு எதையும் சார்ந்திராமல் சுயமாக இருப்பதை மட்டுமே இருத்தல், அதாவது ஸத்யம் என்று சொல்லமுடியும். இப்படிப்பட்ட ஒன்று பிரக்ஞையுணர்வாக மட்டுமே இருக்கமுடியும். பிரக்ஞையுணர்வு மட்டுமே சுயமாக விளங்குவது; மற்றவையனைத்தும் அதைத் தொடர்ந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. ‘நான் இருக்கின்றேன்’ என்பதை அறிய வேறு எந்தக் கருவியும் ஒருவனுக்கு தேவையில்லை. ‘நான்’ எனும் பிரக்ஞையுணர்வின் இருத்தல் எதையும் சார்ந்தில்லை; அறிபவன், அறிவு மற்றும் அறிபொருள் அனைத்தும் இந்த பிரக்ஞையின் இருத்தலிலிருந்து வேறாக இல்லை. இந்த உண்மையைப் பற்றிய புரிதலே, இதை அங்கீகரித்தலே, இந்த சுலோகத்தில் ‘ஆத்மஸம்ஸ்த2ம் மந: க்ருத்வா’ எனப்படுகிறது.
=> மனதை திசைத் திருப்புதல்:
மேற்கூரிய புரிதல் ஒருவனுக்கு, எப்பொழுதும் இது அல்லது அது என சிந்தித்துக் கொண்டேயிருக்கின்ற மனதை திரும்பிப் பார்க்க உதவுகிறது. புரிதலுக்கு பின்னும் மனமானது பல்வேறு விஷயங்களைப் பற்றி எண்ணிக் கொண்டேதான் இருக்கும் என்றபோதிலும் இப்பொழுது அவனின் கவனம் பார்ப்பதில் இல்லை. கவனத்தை எண்ணங்களிலிருந்து விலக்கி எண்ணங்களின் அடிப்படைக்கு திருப்புகிறான். இவ்விதமாக கவனத்தை சிந்தனையின் பொருளிலிருந்து, அதன் மூலத்திற்கு திருப்புதல் தியானம் எனப்படும்.
எந்தவொரு எண்ணத்திற்கும் அடிப்படையாக விளக்குவது பிரக்ஞையுணர்வு. உதாரணமாக, ஒரு பானை பற்றிய எண்ணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதில் பானை-எண்ணத்தின் ஆதாரம் பிரக்ஞை. அதனுடைய அறிபொருளான பானையும் அதை அறிபவனும் பிரக்ஞையிலிருந்து வேறாக இல்லை. இவை மூன்றுமே பிரக்ஞையாக ஆத்மாவாகவே உள்ளது. இந்த புரிதலும் அங்கீகாரமுமே ஒரு எண்ணம்தான் எனினும், இது இம்மூன்றும் தனித்தனியே உள்ளது என்ற அறியாமையை அழித்து, இவைகளை ஒன்றாக்கி, பிறகு ஒடுங்குகிறது. எனவே பகவான் இங்கு, ஒருவன் வேறு எதையும் சிந்திக்கலாகாது - ந கிஞ்சித் அபி சிந்தயேத், என்கிறார். உண்மையில் அனைத்தும் ஆத்மாவாகவே இருப்பதால் வேறு எதுவும் இங்கு இல்லை.
மனம் வேறு எதையும் நினைக்காமல் இருக்க, போதனைக்கு புத்தியை உட்படுத்தி பெறப்பட்ட த்4ருதி, ஞானம் தேவை. ஞானத்தினால் பெறப்பட்ட நுண்ணறிவை உடைய ஒருவனால் மட்டுமே, இந்தச் சிந்தனையைப் பயிற்சி செய்ய முடியும். இங்கு ‘த்4ருதி’ என்பது தைரியத்தையும் குறிக்கின்றது. ஏனெனில் தனித்தனியானதாக கிரஹித்து பழகிய அறிபவன் அறிபொருள் மற்றும் அறிவு மூன்றும் ஒன்று என புரிந்துகொள்ளும் நிதித்யாசனத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிலைத்தன்மை, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. நம்முடைய அனுபவம் இதற்கு எதிரானதாக இருப்பதால் இதை அங்கீகரிப்பதில் இயல்பாகவே சில தடைகள் இருக்கும். தொடர்பயிற்சியினால் அத்தடைகள் விலகும்வரை இந்த தைரியமே துணைநிற்கிறது.
இந்தக் கருத்தை வலியுறுத்தும் நோக்கில் சங்கரர், ‘மெல்ல மெல்ல_ச1நை: ச1நை:’ என்பதற்கு ‘உடனடியாக இல்லை_ ந ஸஹஸா’ என்பதை பொருளாக வரையறுக்கிறார். ‘ஆத்மஸம்ஸ்த2ம் மந: க்ருத்வா’ என்பது மனதை உடனடியாக ஆத்மா என்ற ஒரு பொருளின் மீது திருப்புவது என்பதை குறிப்பதல்ல. இங்கு நிதித்யாசன சூழ்நிலையை உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட உள்நுட்பம் ஈடுபட்டுள்ளது. இந்த நிதித்யாசன காலத்தில் மெதுவாக, நிதானமாக புரிதலும் அங்கீகாரமும் ஏற்படுகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மனம்தான் எல்லாம். அது தனது சுயேச்சையை இழக்குமானால் நீயும் உனது சுயேச்சையை இழப்பாய். மனம் சுயேச்சையோடு இருக்குமானால் நீயும் சுயேச்சையோடு இருப்பாய். மனதை வண்ணானிடமிருந்து வந்த வெளுப்பு வஸ்திரத்தைப்போல, எந்தச் சாயத்திலும் தோய்த்தெடுக்கலாம். சமஸ்கிருதம் படித்த பண்டிதன் சுலோகங்களை மேற்கோளாக எடுத்துக் காட்டுவான். கெட்டவர்களோடு சகவாசம் செய்தவனது மனமும் வாக்கும் கெட்டுப்போம். பக்தர்களின் மத்தியிலிருந்தால் மனம் ஈசுவரனைப் பற்றிச் சிந்திப்பது நிச்சயம். இவ்விதம் சகவாசத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி மனதின் சுபாவம் மாறுபடும்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------