சனி, 17 செப்டம்பர், 2022

தியான யோகம் 6.14 - 6.15

||6.14|| தியானத்தின் குறிக்கோள் என்ன?

प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारिव्रते स्थित:

मन: संयम्य मच्चित्तो युक्त सीत मत्पर: ।। १४ ।।

ப்ரசா1ந்தாத்மா விக3தபீ4ர்ப்3ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி2:

மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர: ।। 14 ।।


प्रशान्तात्मा  ப்ரசா1ந்தாத்மா  அமைதியான உள்ளத்தை உடையவன்  विगतभी:  விக3தபீ4:  பயம் நீங்கியவன்   ब्रह्मचारिव्रते स्थित:  ப்3ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி2:  பிரம்மசாரி விரதத்தில் நிலைபெற்றவன்  मन:  மந:  மனதை   संयम्य  ஸம்யம்ய  அடக்கி   मच्चित्त:   மச்சித்த:  சித்தத்தை என்பால் வைத்தவன்  

मत्पर:  மத்பர:  என்னையே குறிக்கோளாகக் கொண்டவன்   युक्त   யுக்த  யோக முயற்சியுடையவனாகவும்   

सीत  ஆஸீத  அமர்ந்திருக்க வேண்டும்.


அமைதியான மனதைக் கொண்டவனாக, அச்சத்தையகற்றி, பிரம்மசரிய விரதம் காத்து, மனதையடக்கி, சித்தத்தை என்பால் வைத்து, என்னையே குறிக்கோளாகக் கொண்டு யோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் தியானம் செய்யும் இடம், இருக்கை, அமரும் நிலையைப் பற்றிப் பேசிய கிருஷ்ணர், இங்கு தியானப் பொருளையும், தியானம் செய்பவனின் தன்மையையும் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில் ஒன்றிரண்டு வாக்கியங்களைத் தவிர தியானத்தைப் பற்றி பேசும் வசனங்கள் கீதையில் அதிகம் இல்லை. ஆனால் கீதை முழுவதும் தியானம் செய்பவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான தியானத்திற்கும் தோல்வியுற்ற தியானத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு என்பது தியானம் செய்பவனைப் பொறுத்தே அமைகிறது. இந்த சுலோகமும் தியானிப்பவனைப்ரசா1ந்தாத்மா’, அமைதியை அடைந்தவனாகப் பேசுகிறது. இங்கு ஆத்மா என்பது அந்தக்கரணமான மனதைக் குறிக்கிறது

கிருஷ்ணர், தியானம் மற்றும் ஞானத்தின் விளைவாகப் பெறப்படும் முழுமையான சாந்தியைப் பற்றி பின்னர் விளக்குகிறார். இங்கு அறிவுத் தேடலிலுள்ள ஒரு முமுக்ஷு பேசப்படுவதால், இதில் கூறப்படும் சாந்தி என்பது கர்மயோக வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஒருவன் பெற்ற ஒப்பீட்டளவிலான அமைதியைக் குறிக்கிறது. கர்மயோகத்தினால் தனது விருப்பு-வெறுப்புகளின் அழுத்தங்களிலிருந்து விடுபடுவதால் கிடைக்கும் அமைதியைக் குறிக்கிறது

தேங்கிய தடாகம்போன்று மனது தெளிவும் அமைதியும் அடையப்பெறுமிடத்து அது பிரசாந்தாத்மா எனப்படுகிறது. தியானத்தின்போது மனம் அமைதியடைய பின்வரும் இவ்விரு உபாயத்தை கையாளலாம். (i) நம் மனதை பார்த்தாலே அது ஓரளவு அமைதியை அடைய ஆரம்பிக்கும். (ii) மேலும் மனதை அவ்விதமே ஏற்றுக் கொள்ளுதல் மூலம் தற்காலிக அமைதி கிடைக்கிறது


=> பயம் நீங்கியவன்:

மேற்கூரிய பிரசாந்தாத்மா பயத்திலிருந்து விடுபட்டவனாக இருக்கின்றான்விக3தபீ4:. பயத்தில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக மரண பயம்; இது தியானத்தின்போது சிலருக்கு உண்டாகும் பொதுவான பயம் எனக் கூறப்படுகிறது.

தியானத்தில் இருப்பதுபோல உடல் தளர்வாக இருக்கும்போதுபொதுவாக நாம் தூங்கி விடுவதால் அங்கு பயம் இருப்பதில்லை. ஆனால் அதேசமயம் உடல் தளர்வாகி உறங்காமல் இருக்கும்போது உடலை விட்டு வெளியே செல்வது போன்ற உணர்வு ஏற்படலாம்; அப்போது என்ன நடக்கிறது என்பதை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் மரண பயம் வரலாம். தியானத்தின்போது கர்த்தா, அதாவது தியானம் செய்பவன் ஆத்மாவில் இயல்பாகக் ஒடுங்குகிறான்

உண்மையில் தியானிப்பவன் ஆத்மாவாகவே இருக்கிறான்; அவன் தியானிப்பதும் ஆத்மாவையே; இந்த முயற்சியே தியானம் என்றழைக்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியடையும்போது தியானிப்பவன் ஆத்மாவில் ஒடுங்குகிறான். அதாவது அந்தக்கரணம் ஆத்ம சொரூபத்தில் திளைத்திருக்கிற வேளையில் உடல் அல்லது வேறெந்த எண்ணமும் உண்டாகாது. அந்நிலையில், தியானிப்பவன் எனும் தானெனல்(‘நான்எனும் பாவனை) கரைந்து தியானப் பொருளில் ஒடுங்கி ஒன்றாகிறது. தானெனல் ஒடுங்குவதை தாங்களே அழிந்து போவதாகவோ அல்லது அழிக்கப்படுவதாகவோ சிலர் உணர்வதால் பயம் உண்டாகிறது. விசாரத்தின் மூலம் இந்த பயத்தை கடந்தவன் இங்குவிக3தபீ4:என்றழைக்கப்படுகிறான்


=> நாளை குறித்த பயம்:

மக்களிடம் பரவலாகக் காணப்படும் இனியொரு அச்சம், அடுத்த நாளை அதாவது எதிர்காலத்தைக் குறித்த பயம். மனிதன் பொதுவாக, மனதின் பல்வேறு நிலைகளைத் தானாகவே அடையாளப்படுத்துவதால் அவன் சம்சாரத்திற்கு, மன நிறைவின்மைக்கு ஆளாகிறான். இந்த அடையாளத்திலிருந்து விடுபடுவதையே தானெனலெனும் அஹங்காரத்தின் அழிவாகக் கூறப்படுகிறது. இவ்விதம் புரிந்து கொள்ளாதவனுக்கு எல்லா வகையான அச்சங்களும் உண்டாகிறது. இதுபோன்ற பயங்கள் ஏதுமற்றவனாகவிக3தபீ4:உள்ளான்.


=> பிரம்மசார்ய விரதம்:

இந்த விகதபீ, ‘ப்3ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி2:என்றும் அழைக்கப்படுகிறான். சாமானிய பிரயோகத்தில், திருமணம் செய்துகொள்ளாமல் (பெண் தொடர்பு இல்லாமல்) இருப்பவன் பிரம்மசாரி என்று அழைக்கப்படுகிறான். பண்டைய காலத்தில், நான்கு படிநிலைகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கையில், ஒருவன் கல்வி பயிலும் காலம் பிரம்மசரிய ஆஸ்ரமம் என்று அழைக்கப்படுகிறது. அக்காலகட்டத்தில் ஒருவன் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் என பல உள்ளன. எடுத்துக்காட்டாக, குரு சேவை, பணம் சம்பாதிக்காமல் இருப்பது, எளிமையாக இருத்தல், சரீர சம்பந்தமில்லாமல் இருத்தல் போன்றவைகள். இவைகளனைத்தும் பிரம்மசரிய விரதம் ஆகிறது. உண்மையில் பிரம்ம சரியம் என்பது ப்ரம்மத்தை (கடவுளை) நோக்கிப் பயணிப்பது. அந்த முனைப்பில் இருப்பவன் பிரம்மசாரி

பிரம்மசரிய விரதத்தை அர்ப்பணிப்புடன் கடைபிடிப்பவன் இங்கு பேசப்படுகிறான். சங்கரர் இதை ஆசிரியருக்குச் செய்யும் சேவை, குரு-சுஷ்ரூசா, மற்றும் தானமாக எது கிடைத்தபோதிலும் அதை மகிழ்ச்சியுடன் உண்பது, பிக்ஷா-அந்ந-புக்த்யாதி, போன்றவற்றின் அடிப்படையில் வரையறுக்கிறார். இந்த வகையான அர்ப்பணிப்பு கொண்ட ஒருவன் நாளையைப் பற்றி கவலைப்படுவதில்லை. மேலும் இங்கு கிருஷ்ணர் நிதித்யாசன தியானத்தைப் பற்றிப் பேசுவதால், தியானம் செய்பவன் சாஸ்திரத்தை கேட்டவனாக, நிறைய சிரவணம் மற்றும் மநநம் செய்தவனாகவும் கருதப்படுகிறது.

  பிரம்மசரிய வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதும் இந்த சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனத்தில் நிகழும் பல்வேறு வகையான சிந்தனைகளிலிருந்து ஒருவன் பின்வாங்க வேண்டும், மந: ஸம்யம்ய, அதாவது மனதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். மேலும், தியானப் பொருளில்(த்யேய) மனதைச் செலுத்தாமல் ஒருவன் மற்ற சிந்தனைகளிலிருந்து விலக முடியாது என்பதால், கிருஷ்ணர் இங்கே தியானப் பொருளை அறிமுகப்படுத்துகிறார்என்னை சிந்தித்தவனாக தியானிப்பவன் அமரட்டும், மச்சித்த: யுக்த ஆஸீத.


=> பரமேஷ்வரனாக கிருஷ்ணன்:

மச்சித்த:எனில் பரமேஷ்வரனான என்னை மனதில் வைத்தவனாகமயி பரமேஷ்வரே சித்தம் யஸ்ய, என்பது பொருள். இதில்என்னைஎன்பதை கிருஷ்ணன் தன்னை பரமேஷ்வரனாக வைத்து பேசுகிறார் என்பதாகப் பொருள் கொள்ளவேண்டும். சாஸ்திரத்தில் பரமேஷ்வரன் என்பது சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு வெளிப்பாடு. இது இரு அர்த்தத்தை கொண்டுள்ளது. ஒன்று, இது இவ்வுலகிற்கு காரணமான ஈஷ்வரனைக் குறிக்கலாம், ஜகத்-காரண. இனியொன்று, ஆதாரமான இறை தத்துவத்தை ப்ரம்மத்தை குறிக்கலாம், பரமாத்மா

இங்கே கிருஷ்ணர், பரமேஷ்வரன் என்ற பொருளில்நான்என்ற தன்னிலை ஒருமையைப் பயன்படுத்துகிறார். வரலாற்று கிருஷ்ணர் இறைவனா இல்லையா என்பது இங்கு நமது கவலை அல்ல. தன்னை ஈஷ்வரனாகக் கொண்டு பேசும் கிருஷ்ணரை பற்றி இங்கு பேசுகிறோம் அவ்வளவே. கீதையில் ஓரிரு இடங்களைத் தவிர கிருஷ்ணர் தன்னிலை ஒருமையானஅஹம்_நான்என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போதெல்லாம் அங்கு பரமேஷ்வரனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜீவ-ப்ரம்ம ஐக்கியத்தை உணர்ந்த எந்தவொரு ஞானியும்அஹம்_நான்எனும் சொல்லை இவ்விதம் பயன்படுத்த முடியும்.


=> பரமேஷ்வரத் தியானம்:

பரமேஷ்வரன் என்ற சொல்லை சகுண-ப்ரம்ம என்று பார்க்கும்போது இறை தத்துவமான ஈஷ்வரன் படைப்பவராக, சிருஷ்டி-கர்த்தா, சிருஷ்டியை நிலைநிறுத்துபவராக, ஸ்திதி-கர்த்தா, படைப்பை தனக்குள் ஒடுக்குபவராக, லய-கர்த்தா என்று பொருள் கொள்ளலாம். இந்த வழியில், பரமேஷ்வரனே ஜகத்-கர்த்தாவாக இந்த மூன்று செயல்களையும் செய்கிறார். இப்படிப்பட்டவராக பரமேஷ்வரனை மனதில் நினைத்து  தியானித்தால், அது சகுண-ப்ரம்ம-தியானம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஈஷ்வரனை இரக்கமும் கருணையும் கொண்டவராக ஆனந்த சொரூபத்தை உடையவராக அவரின் குணங்களை தியானித்தல் நடக்கிறது. அல்லது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலில் ஏதேனும் ஒரு மஹிமையை அதன் முழுமையான அர்த்தத்தில் எடுத்து தியானிக்க முடியும். ‘இப்படிப்பட்ட இறைவனுக்கு எனது நமஸ்காரங்கள் இருக்கட்டும், பரமேஷ்வராய நம:’ என தியானம் ஒரு எளிய பிரார்த்தனை வடிவத்திலும் இருக்கலாம்.

மேலும்மச்சித்த:என்ற கூட்டுச்சொல்லில் உள்ளமத்என்ற வார்த்தைக்கு, அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பரப்ரம்மமான பரமேஷ்வரன் என்றும் பொருள் கொள்ளலாம். அந்த ப்ரம்ம என்பது ஆத்மாவான சத்யம்-ஞானம்-அனந்தம்-ப்ரம்ம. எனவே யாருடைய மனமானது ஆத்மாவின் சொரூபமாகவுள்ள தூய பிரக்ஞையை தியானிக்கிறதோ அவன்மச்சித்த:என்றழைக்கப்படுகிறான். பிறப்பற்றவன், நித்தியமானவன், சுக சொரூபமானவன், அழிவற்றவன் என சுயத்தின் உண்மை சொரூபத்தை விளக்கும் பல வார்த்தைகள் சாஸ்திரத்தில் பேசப்படுகின்றன. இவைகளை எடுத்துக் கொண்டு அதன் பொருளின்மீது தியானம் செய்தல் நிதித்யாசனம் எனப்படும்.

தியானப் பொருளை அடிப்படையாகக் கொண்டு தியானிப்பவனை பகவான் இங்குமத்பர:’, பரமேஷ்வரனான என்னையே குறிக்கோளாகக் கொண்டவன் என்றும் அழைக்கிறார். மக்கள் பல காரணங்களுக்காக தியானம் செய்கிறார்கள் - நூறு சதவீத ஆன்மீக வெற்றி அல்லது நூறு சதவீத பொருள் வெற்றிக்காக. இது தியானம் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதையே நிரூபிக்கிறது. தியானம் ஒரு உத்தி அல்ல; அது ஒருவித வாழ்க்கை. எனவேதான் கிருஷ்ணர் இங்கு தியானிப்பவனைமத்பர:’, பரமேஷ்வரனைத் தவிர வேறெதுவும் குறிக்கோளாக கொள்ளாதவன் எனக் கூறுகிறார். அப்படிப்பட்டவனின் மனமே வேறெங்கும் அலைபாயாது தியானப் பொருளில் நிலைக்கும்

இங்கு குறிக்கோள் என்ற சொல்லின் அர்த்தம் சரியாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். ‘எனது இறுதி குறிக்கோள் இது; இதற்கிடையில், நான் அடைய வேறு சில இலக்குகள் உள்ளனஎன்பதாக இந்த குறிக்கோளை அர்த்தம் கொள்ளக்கூடாது. இதுவே எனது இறுதி குறிக்கோள், முதன்மையான இலக்கு; இதற்கிடையில் வேறெந்த இலக்கும் எனக்கில்லை என்பதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். மற்ற சிறிய இலக்குகள் இந்த முதன்மையான லக்ஷியத்திற்கு துணை புரிபவைகளாக இருக்கவேண்டும். இவ்விதத்தில் அர்ப்பணிப்புடன் பரமேஷ்வரனையே முழுமுதற் குறியாகக் கொண்டு தியானிப்பவன் இங்குமத்பர:எனப்படுகிறான்.

மேலும் இங்கு கிருஷ்ணர் தியானிப்பவனை மத்பர என்றழைப்பதிலிருந்து ஈஷ்வரன் அடையப்பட வேண்டிய குறிக்கோள்களில் ஒன்று என்ற உண்மை உணர்த்தப்படுகிறது; தியானிப்பவனுக்கோ ஈஷ்வரனே முழுமுதற் இலக்கு. மத்சித்த மற்றும் மத்பர என்ற இரு சொற்களும் தியானிப்பவன் எதை தெரிந்துகொள்ள விரும்புகிறான், எதைச் சாதிக்க விரும்புகிறான் என்பதைப் பற்றிய துல்லியமான புரிதலைக் கொடுக்கிறது.


=> சுவாமி சித்பவானந்தர்:

சிற்றின்ப போகம் எதிலும் ஈடுபடாதிருத்தல் பிரம்மசரிய விரதமாகும். குருவுக்கும் உலகுக்கும் சேவை புரிவதன் மூலம் மனதினின்று காம எண்ணங்கள் அடியோடு அகற்றப்படுகின்றன. அதன்பிறகு மனதை அடக்குதல் எளிதாகிறது. அடங்கிய மனதில் ஈஷ்வரனைப் பற்றிய எண்ணமே குடிகொண்டிருக்கும்போது கீழான எண்ணங்கள் அங்கு தலையெடுக்காது. ஈஷ்வரன் ஒருவனே ஒப்பற்ற பொருள் என்றும் அவனை அடைதலே வாழ்வின் முடிவான நோக்கம் என்றும் கருதியிருப்பவன் நல்ல யோகியாகிறான்.


=> தியானத்திற்கான அந்தரங்க சாதனைகள் விளக்கப்பட்ட சுலோகங்களின்(10-14) சாரம்:

(1) அமரும் இடம்

(2) காலம்

(3) ஆஸனம்(இருக்கை)

(4) ஆஸனம்(அமரும் விதம்) - சரீர ஸ்திதி:

(5) பிராணன்(ப்ராந:)

(6) இந்திரிய செயல்பாடில்லாமல் இருத்தல்(இந்திரிய ஸ்திதி:)

(7) மன ஸ்திதி:

(8) புத்தி ஸ்திதி:

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.15|| தியானப் பலன்:

युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानस:

शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति ।। १५ ।।

யுஞ்ஜந்நேவம் ஸதா3த்மாநம் யோகீ3 நியதமாநஸ:

சா1ந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தா2மதி43ச்ச2தி ।। 15 ।।


एवम्   ஏவம்  இவ்விதம்   सदा  ஸதா3  எப்பொழுதும்   त्मानम्  ஆத்மாநம்   மனதை   

युञ्जन्  யுஞ்ஜந்  தியானத்தில் நிறுத்தி   नियत मानस:  நியத மாநஸ:  உள்ளத்தை அடக்கிய   

योगी  யோகீ3  யோகியானவன்  मत्संस्थाम्   மத்ஸம்ஸ்தா2ம்  என்னிடத்துள்ள   निर्वाण परमां   நிர்வாண பரமாம்  மோக்ஷத்திலேயே முற்றுப்பெறுகிற   शान्तिं  சா1ந்திம்  சாந்தியை  अधिगच्छति  அதி43ச்ச2தி  அடைகிறான்.


இவ்விதம் எப்பொழுதும் மனதை தியானத்தில் நிறுத்தி உள்ளத்தை அடக்கிய யோகி, என்னிடத்துள்ள, முக்தியிலே முற்றுப்பெறுகிற சாந்தியை எய்துகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி, என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.


விளக்கம்:

இங்கு கிருஷ்ணர், தியான-யோகத்தினால் உண்டாகும் முடிவை, தியானிப்பவன் அடையும் பலனைக் குறிப்பிடுகிறார். புசித்தவனுக்கு பசியடங்குகிறது. மேலே சொல்லியபடி யோக சாதனம் செய்து மனது அடங்கப்பெற்றவனுக்கு இயல்பாக சாந்தி உதயமாகிறது.

ஏவம்’, இவ்விதம் சென்ற சுலோகங்களில் விளக்கப்பட்ட அந்தரங்க சாதனைகளைப் பின்பற்றியவனாக, ‘ஆத்மாநம்மனதை, ‘யுஞ்ஜந்தியானத்தில் நிறுத்துதல் வேண்டும். இங்கு பகவான், ‘எப்பொழுதும்(ஸதா3)’ என்ற வார்த்தையை பிரயோகிக்கிறார். எல்லா காலங்களிலும் தியானம் செய்துகொண்டிருந்தால், சாப்பிடுவது உறங்குவது போன்ற மற்ற செயல்களைத் தியானிப்பவன் எப்படி செய்யமுடியும்? என்ற சந்தேகம் வரலாம். சதா காலமும் என்பது தியானிப்பவன் நேரத்தை தேவையற்று வீணடிக்காமல், கிடைக்கின்ற நேரத்தையெல்லாம் தனது குறிக்கோளை அடைவதற்காகவே பயன்படுத்துகிறான்; பரமேஷ்வரனாகிய ப்ரம்மத்தை, ஆத்மாவின் சொரூபத்தை தியானிப்பதில் செலவிடுகிறான் என்பதைக் குறிக்கிறது.


=> நிதித்யாசன தியானம்:

  ஒருவன் தனது மனதை ஆத்ம சொரூபத்தில் எப்படி நிறுத்துவது? வேதாந்த சாஸ்திரத்தில் ஆத்ம சொரூபத்தை விளக்கும் பல சொற்கள் உள்ளன என சென்ற சுலோகத்தில் பார்த்தோம்பிறப்பற்றது(अजम्), நித்தியமானது(नित्यम्), சுக சொரூபமானது(नन्दम्), அழிவற்றது(अक्षरम्). மேலும் ஆத்ம லக்ஷணத்தை கூறும் சத்யம், ஞானம் மற்றும் அனந்தம் உள்ளிட்ட சொற்களின் துணைக்கொண்டு, நிதித்யாசனத்தில் ஈடுபடுவதன்மூலம் மனதை ஆத்ம சொரூபத்தில் நிறுத்தமுடியும். இவ்விதம் அந்தக்கரணத்தை தியானப்பொருளுடன் இணைத்தலே தியானித்தல் எனப்படுகிறது.

இங்கு பகவான், தியானிப்பவனை மீண்டும்நியத மாநஸ:என்று விவரிக்கிறார்; அதாவது மனதை கட்டுப்படுத்தியவன், உள்ளத்தை அமைதிப்படுத்தியவன் அல்லது தன் மனதை தன் வசம் வைத்தவன் என்கிறார். தியானிப்பவன் அடையும் பலன்தான் என்ன? எனும்போது, ‘சா1ந்திம் அதி43ச்ச2தி’ — சாந்தியை, மன நிறைவை, ஜீவன் முக்தியை அடைகிறான். தியானத்தினால் விருப்பு-வெறுப்பு நீங்கி, மனம் தெளிவடைந்து, மனதிலுள்ள தடைகள்(பிரதிபந்தங்கள்) நீங்குவதால் சாஸ்திரத்தின் மையக்கருத்து அனைத்தும் தெளிவாக விளங்க ஆரம்பிக்கிறது. இதனால் கற்பிக்கப்பட்டவைகளின் உண்மைத்தன்மை மனதில் ஸ்புரிக்க, அவன் சாந்தியை எய்துகிறான்


=> சாந்தி:

சாந்தி என்பதன் பொதுவான பொருள் அமைதி. எவ்விதமான அமைதி? ‘மத்ஸம்ஸ்தா2ம் நிர்வாண பரமாம்என்னிடத்துள்ள மோக்ஷத்திலேயே முற்றுப்பெறுகிற சாந்தி என்கிறார் பகவான். நிர்வாணம் எனில் மோக்ஷம். எனவே இது மோக்ஷத்தை அடிப்படையாகக் கொண்ட சாந்தி, மோக்ஷ சாந்தி.

மோக்ஷ சாந்தி என்பது என்ன? பொதுவாக மூன்று வகையான சாந்தி பேசப்படுகிறது. ஒன்று, எந்தவொரு சிந்தனையும் எண்ண ஓட்டமும் இல்லாதபோது அடையப்படுவது. இரு எண்ணங்களுக்கு இடையில் கிடைக்கும் இவ்வகை சாந்தி மிக தற்காலிகமானது, மேலும் இதை நீட்டிக்க நிறைய பயிற்சிகள் மற்றும் தூண்டுதல்கள் தேவைப்படுகின்றன. இரண்டாவது வகை சாந்தி என்பது மனதை தன் வசப்படுத்திய ஒருவன், தனது துறுதுறுப்பான மனதை சரியான பாதையில் ஒழுங்குப்படுத்தும் திறனினால் உண்டாவது. இதில் ஒருவனின் மனதுக்கும் அவனுக்கும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி இருப்பதால் எந்த சூழ்நிலையில் இருந்தபோதிலும் அவன் இந்த சாந்தியுடன் உள்ளான். இதன் காரணமாக அவன் தனது விவகாரங்களை ஒரு குறிப்பிட்ட அளவு நிதானத்துடன் நிர்வகிக்க முடிகிறது.

மேலும் மூன்றாவது சாந்தி என்பது மோக்ஷத்தைக் குறிக்கிறது. இதில் மனம் என்பது ஒருனுக்கு சிறப்புமிக்க சலுகையாக, அலங்காரமாக ஆகிறது. ‘எப்படிப்பட்ட மனமாக இருந்தபோதிலும் அது என்னுடையது; ஆனால்நான்அந்த மனம் அல்ல; எனது இருப்பைச் சார்ந்தே அது உள்ளது’. இந்த அறிவு கொடுப்பதே உண்மையான சுதந்திரம்; முழுமையான விடுதலை. இவனுக்கு மனம் எங்கு சென்றபோதிலும் இந்த அறிவு எப்பொழுதும் இருக்கிறது; இதனால் இவனது மனம் செல்லுமிடமெல்லாம் அங்கு இறைவனை, ஆதாரத்தைக் காண்கிறது. இங்கே எதிலிருந்தும் மனதை வெளியேற்றுவது அல்லது எதற்குள்ளே மனதைச் செலுத்துவது என்ற கேள்விக்கே இடமில்லை. இது பிருஹதாரண்யக உபநிஷத்தில், ‘மனம் போனது போல் இருக்கிறது, எனவே நான் தியானம் செய்வது போல் இருக்கிறேன்என ஒரு முமுக்ஷு கூறுவதாக சொல்லப்படுகிறதுध्यायति इव लेलायति इव. இதில்போல_ इवஎன்பதன் பொருள் தெளிவாகத் தெரியும்போது மனம் வெளியேறுவதுமில்லை; எனவே, தியானம் என எதுவும் தேவையுமில்லை. இதுவே நிர்வாண-பரமா-சாந்தி, மோக்ஷம்; இது ஒருவனுடைய சொரூப சாந்தி; இதில் வருவதும் போவதும் இல்லை; அளவுகளோ தரநிர்ணயமோ அல்லது மாறுபாடுகளோ இல்லை; எதனுடனும் இதை ஒப்பிடவும் முடியாது.


=> சொரூப சாந்தி:

இந்த சாந்தி ஒருவனின் சொரூபமாகவே இருப்பதால், இதை பகவான்மத்ஸம்ஸ்தா2ம்’, எப்போதும் பரமாத்மாவில் இருப்பதான ஒன்று எனக் கூறுகிறார்மத்-அதீனா. ஏனெனில் பரமாத்மா அசையாதது; மாறாததுகூடஸ்த; அது எதிலும் ஈடுபடாது, எதையும் எதிர்க்காது. ஏதேனும் ஒன்றை எதிர்த்தால் அங்கு அசாந்திக்கு வாய்ப்புள்ளது. சொரூப சாந்தி எதற்கும் எதிரானதல்ல. சிந்தனைக்கோ உலகத்திற்கோ அறியாமைக்கோ அறிவிற்கோ என எதற்கும் எதிரானது அல்ல என்ற தன்மையில் அது பரமத்மாவுடன் ஒத்திருக்கிறது. தியானிப்பவன் இப்படிப்பட்ட சாந்தியை, விடுதலையை, முக்தியை அடைகிறான்மத்ஸம்ஸ்தா2ம் சா1ந்திம் அதி43ச்ச2தி.

அக்னியில் சூடு இருப்பதுபோன்று பரமேஷ்வரனிடத்து சாந்தி நிலவுகிறது. அதை அடையுமளவு ஒருவன் முக்த புருஷனாகிறான். இறைவனை அடைதல், சாந்தி பெறுதல், முக்தி சேர்தல் இவையாவும் ஒன்றேயாகும். இதுவே யோகத்தின் பயனாகிறது.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பட்டணத்துக்கு புதிதாக வருபவன் ராத்திரி வேளையில் தங்குதற்கு வசதியான விடுதியொன்றை முதலில் தேடி அதில் தன் சாமான்களை வைக்கவேண்டும். பிறகு அவன் ஊர் சுற்றி வேடிக்கை பார்க்கலாம். இல்லாவிட்டால் இருளில் இடம் தேடுவதில் சிரமப்படுவான். அதுபோல இவ்வுலகுக்குப் புதிதாக வருபவனும் ஈசுவரனாகிய நித்திய விடுதியைத் தேடிவைத்துவிட்டு, பயமின்றி இவ்வுலகில் திரிந்து, தான் செய்யவேண்டிய காரியங்களையெல்லாம் செய்யலாம். இல்லாவிட்டால் மரணமாகிய பயங்கரமான அந்தகாரம் வரும்பொழுது மிகுந்த துயரங்களை அவன் அனுபவிக்க நேரும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------