||4.38|| ஞானத்தின் மஹிமை:
न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते ।
तत्स्वयं योगसंसिद्ध: कालेनात्मनि विन्दति ।। ३८ ।।
ந ஹி ஜ்ஞாநேந ஸத்3ருச1ம் பவித்ரமிஹ வித்3யதே ।
தத்ஸ்வயம் யோக3ஸம்ஸித்3த4: காலேநாத்மநி விந்த3தி ।। 38 ।।
इह இஹ இவ்வுலகில் ज्ञानेन सदृशं ஜ்ஞாநேந ஸத்3ருச1ம் ஞானத்திற்கு சமானமாய்
पवित्रम् பவித்ரம் தூய்மைப்படுத்தக்கூடியது न हि विद्यते ந ஹி வித்3யதே இல்லவே இல்லை
कालेन காலேந தக்க காலத்தில் योगसंसिद्ध: யோக3ஸம்ஸித்3த4: யோக சித்தியடைந்தவன்
अात्मनि ஆத்மநி தன் உள்ளத்தில் स्वयं ஸ்வயம் தானே तत् विन्दति தத் விந்த3தி அந்த ஞானத்தை அறிகிறான்.
ஞானத்திற்கு ஒப்பான தூய்மைப்படுத்தும் சாதனம் இவ்வுலகில் எதுவுமில்லை. யோகத்தினால் தன்னை தயார்படுத்திக் கொண்டவன் தக்க காலத்தில் இந்த ஞானத்தை தன்னகத்தே பெறுகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.
விளக்கம்:
=> தூய்மைப்படுத்தும் சாதனங்கள்:
(1) விரதம் - உண்ணாவிரதம், மெளனம் முதலியவைகள் மனதை தூய்மைப்படுத்தும் சக்திவாய்ந்த சாதனமாகும். மனதின் எந்தவொரு விகாரத்தையும் இவைகளின் மூலம் நீக்கமுடியும்.
(2) தியானம், தானம், யக்ஞம் மற்றும் பிரார்த்தனை போன்றவையும் ஒருவனை தூய்மைப்படுத்தும்.
இவ்வகை சாதனைகள் பாபத்தைத்தான் நீக்குகிறது. ஆனால் சாஸ்திரப்படி, புண்ணியமும் அசுத்தமே. ஞானம் ஒன்றுதான் புண்ணியத்தையும் நீக்கவல்லது. ஆகவே நம்மை தூய்மைப்படுத்துவதிலேயே மேலான சாதனம் ஞானம் என இங்கு சொல்லப்படுகிறது.
ஞானம் ஒன்றைக் காட்டிக் கொடுக்கிறதே தவிர அது எந்த காரியத்தையும் செய்யாது — ஞானம் போதகம் எ காரகம். எனில், அது எப்படி புண்ணிய-பாபத்தை நீக்க முடியும்? ஞானமானது அறியாமையை நீக்குவதோடு அறியாமையினால் தோன்றிய எல்லா விளைவுகளையும் நீக்குகிறது. உதாரணமாக மங்கிய மாலை நேரத்தில் பாம்பாகக் கயிறு தெரிந்து கொண்டுள்ளது. அப்போது டார்ச் ஒளி அதன் மீது அடிக்கப்படுகிறது. அந்த வெளிச்சத்தில் அது கயிறு என்ற ஞானத்தை கொடுப்பதோடு, அறியாமையினால் தோன்றிய பாம்பு எனும் விளைவையும் நீக்கிவிடுகிறது. அதுபோலவே ஆத்ம அறியாமையினால் புண்ணிய-பாபம் எனும் விளைவு உண்டாகியுள்ளது. நம் சம்சாரத்திற்கு காரணம் இந்த அக்ஞானம். ஞானம் நேரடியாக புண்ணிய-பாபத்தை நீக்குவதில்லை. அது அக்ஞானத்தை நீக்குவதால், அக்ஞானத்தின் விளைவாகத் தோன்றிய புண்ணிய-பாபத்தையும் நீக்குகிறது.
=> ஞானமே மேலான தூய்மையைத் தருகிறது:
பிரார்த்தனை என்பது மிக முக்கியமான தூய்மைபடுத்தும் சாதனம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அது ஞானத்திற்கு நிகரானதல்ல. ஏனெனில் ஞானம் கர்த்தாவையே நீக்குகிறது. பிரார்த்தனையில், அதைச் செய்பவன் கர்த்தாவாக இருப்பதால், அந்த பிரார்த்தனையால் கர்த்தாவை அழிக்க முடியாது. உண்மையில் ஒருவனின் தூய்மையற்ற தன்மை அல்லது அபூரணத்துவத்தினால் பிரார்த்தனை வெளிப்படுகிறது. வரையறுக்கப்பட்டவன், உதவியற்றவன் மற்றும் கட்டுப்பட்டவன் போன்ற அசுத்தமான உணர்வுகளிலிருந்து விடுபடும் முயற்சியாக பிரார்த்தனை வெளிப்படுகிறது. பிரார்த்தனையின் மிகப் பெரிய பலன் ஆத்மஞானத்திற்கான தகுதியை அடைவதாகும். ஏனெனில் ஆத்மஞானம் மட்டுமே ஒருவனை அபூரணமானவன், உதவியற்றவன் போன்ற வரம்புகளிலிருந்து விடுவிக்கிறது.
=> ஞானத்திற்கு தகுதியடைதல்:
ஞானத்தை அடையும் தகுதியுடையவனாகத் தன்னை தயார்செய்து கொண்டவன் இங்கு ‘யோக3ஸம்ஸித்3த4:’ என்று அழைக்கப்படுகிறான். இப்படிப்பட்டவன் அந்த-கரண-சுத்தியை அடைந்தவனாகவும், மனதை நிலைப்படுத்தியவனாகவும் ராக-த்வேஷத்தின் பிடியிலிருந்து ஓரளவு விடுபட்டவனாகவும் இருக்கிறான்.
இந்த வகையான மனதை அடைய ஒரு குறிப்பிட்ட காலம்(காலேந) தேவைப்படும். மன முதிர்ச்சியை பொறுத்து சிலருக்கு அது உடனடியாக நடக்கலாம் அல்லது சிறிது காலம் ஆகலாம். புதிதாக ஒன்றை உருவாக்க, ஓர் இடத்தை சென்றடைய கால வரையறையைக் கூறமுடியும். உதாரணமாக கிழங்கு போன்றவற்றை வேகவைக்க அல்லது டெல்லியிலிருந்து ரிஷிகேஷிற்கு செல்ல, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை சொல்லமுடியும். ஆனால் ப்ரம்ம விஷயத்தில் புதிதாக உருவாக்கப்பட அல்லது ஓரிடத்திற்கு சென்று அடைய அங்கு எதுவுமில்லை. ஒருவன் ஏற்கனவே ப்ரம்மனாக இருப்பதால், காலத்தின் கேள்வி எங்கே? ஏற்கனவே அவன் ப்ரம்மனாக இருக்கின்ற பட்சத்தில், எப்போது ஒருவன் ப்ரம்மத்தை அடைகிறான் என்ற கேள்விக்கு உண்மையில் பதில் இல்லை. எனில் இந்த யதார்த்தத்தை ஒருவன் எப்போது அறிவான் என கேட்போமேயானால், ‘தகுதியை அடையும்போது’ என்பதே பதிலாகக் கிடைக்கும். அத்தகுதியைத்தான் எப்போது அடைகிறான்?
இந்நிலையில் ஒருவன் செய்யவேண்டியதெல்லாம், சரியான பாவனையுடன் கர்மயோக வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு, ஞானத்தை பின்தொடர்தல் வேண்டும். இவ்வழியில், ஞானத்தை அடைதல் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்; காலப்போக்கில் அதை இயற்கையாகவே ஒருவன் அடைகிறான். ஏனெனில் அவன் அடையவிரும்பியது ஏற்கனவே அடையப்பட்ட ஒன்றாகவே இருப்பதால் அங்கு அவன் எதையும் உருவாக்க வேண்டியதில்லை.
எனில் இந்த ஞானமானது எங்கே ஏற்படுகிறது? எல்லா அறிவும் ஏற்படுகின்ற மனதில், புத்தியில் தான் இந்த ஞானம் உண்டாகிறது — ஆத்மநி. தகுதியடைந்த மனதில் ஞானம் உண்டாகிறது.
=> தகுதியின் முக்கியத்துவம்:
ஞானத்திற்கு நிகரான தூய்மைப்படுத்தும் சாதனம் இவ்வுலகில் இல்லை. கர்மயோகம், பக்தியோகம் மற்றும் உபாசனையினால் தன்னை தயார்ப்படுத்தியவன் இந்த ஞானத்தை உரிய காலத்தில் தன் மனதிலேயே அடைகிறான் என பகவான் கூறினார். இதிலிருந்து எவ்வளவு தூரம் ஒருவன் தன்னை பண்படுத்தியுள்ளானோ அவ்வளவு விரைவில் ஞானம் கிடைக்க ஆரம்பிக்கிறது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஞானயோகத்தில் பொறுமை மிக அவசியம். பத்து வருட காலமாக வேதாந்த வகுப்புகள் கேட்ட பின்பும் பலனேதும் கிடைக்கவில்லை என சிலர் நினைக்க வாய்ப்புள்ளது. இப்பாதையில் மனத் தூய்மை மற்றும் மனமுதிர்ச்சி மிக இன்றியமையாதது. ஆகவே அவர்கள் தங்களை மேலும் தகுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
கர்ப்பத்திலுள்ள சிசு பத்து மாதத்தில் பிறக்கிறது. அதுபோல இங்கு சொல்லப்பட்ட ‘உரிய காலத்தில்(காலேந)’ என்பதற்கு வரையறை ஏதேனும் உள்ளதா? என்ற கேள்விக்கு பகவான் அடுத்த சுலோகத்தில் பதில் உரைக்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------||4.39|| ஞானம் அடைவதற்கான மூன்று அந்தரங்க சாதனைகள்:
श्रद्धावाँल्लभते ज्ञानं तत्पर: संयतेन्द्रिय: ।
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति ।। ३९ ।।
ச்1ரத்3தா4வாம்ல்லப4தே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்3ரிய:|
ஜ்ஞாநம் லப்3த்4வா பராம் சா1ந்திமசிரேணாதி4க3ச்ச2தி ।। 39 ।।
श्रद्धावान् ச்1ரத்3தா4வாந் சிரத்தையுடையவன் तत्पर: தத்பர: ஞானத்திலேயே கண்ணுங்கருத்துமாயிருப்பவன் संयतेन्द्रिय: ஸம்யதேந்த்3ரிய: இந்திரியங்களை அடக்கியவன்
ज्ञानं लभते ஜ்ஞாநம் லப4தே ஞானத்தை அடைகிறான் ज्ञानं लब्ध्वा ஜ்ஞாநம் லப்3த்4வா ஞானத்தை அடைந்து अचिरेण அசிரேண அதிவிரைவில் परां शान्तिम् பராம் சா1ந்திம் மேலான சாந்தியை
अधिगच्छति அதி4க3ச்ச2தி அடைகிறான்.
சிரத்தையுடையவன், ப்ரம்மத்தையே பரமாகக் கொண்டவன், இந்திரியங்களை அடக்கியவன் ஞானத்தை பெறுகிறான். ஞானத்தை அடைந்து அதிவிரைவில் மேலான சாந்தியை அடைகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.
விளக்கம்:
இது கீதையின் மற்றுமொரு முக்கியமான, அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் சுலோகமாகும். குறிப்பாக, ‘ச்1ரத்3தா4வாந் லப4தே ஜ்ஞாநம் — சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் ஞானத்தை பெறுகிறார்’, எனும் வெளிப்பாடு அதிகமாக கேட்டிருப்போம். தவறாமல் ஞானத்தை அடைவிக்ககூடிய வழிமுறைகளை இந்த சுலோகம் சுட்டிக்காட்டுவதாக சங்கரர் தனது பாஷ்யத்தில் இதை அறிமுகப்படுத்துகிறார்.
=> சாதனைகள்:
வேதாந்தத்தில் சாதனம்(साधन) அல்லது சாதனை என்பது ‘அடைய உதவும் கருவி’ என்ற அர்த்தத்தில் முக்கியமாக உபயோகிக்கப்படும்; சாத்யமான(இலக்கான) ஆத்மஞானத்தை அடைய உதவும் கருவி. பொதுவாக சாதனைகள் இரு வகைப்படும்.
(1) பஹிரங்க சாதனை (2) அந்தரங்க சாதனை.
பஹிரங்க சாதனைகளில் ‘இது அல்லது அது’ என தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக ஓர் இடத்தை அடைய நிறைய வழிகளில் பயணத்தை மேற்கொள்ளலாம். கால்நடையாகவோ, இரு சக்கர வண்டியிலோ அல்லது காரிலோ செல்லலாம். ஆனால் அந்தரங்க சாதனைகளில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை. இந்த சுலோகத்தில் மூன்று அந்தரங்க சாதனைகள் பகவானால் கூறப்பட்டுள்ளது. இத்தகுதிகளின்றி ஞானத்தையடைவது சாத்தியமற்றதாகிறது.
=> சிரத்தை:
சிரத்தையே, சிரவணமாக கேட்கப்பட்ட குருவின் வாக்கியத்தை ஞானமாக மாற்றும். சந்தேகமற்ற அறிவை(ப்ரமா) அடைய எது சரியான கருவியாக செயல்படுகிறதோ அது பிரமாணம்(प्रमाण). உதாரணமாக, மல்லிகையின் நறுமணத்தை அறிய மூக்கு பிரமாணமாக இருக்கிறது; ஒரு விஷயத்தை வேறொரு பிரமாணத்தினால் சரிபார்க்க முடியுமெனில் அங்கு சிரத்தை முக்கியமில்லை. ஆனால் நம் அனுபவ அறிவிற்கு விரோதமான, எந்த பிரமாணத்தினாலும் சரிபார்க்க முடியாத இந்த ப்ரம்மத்தை பற்றிய அறிவை உபநிஷத்திடமிருந்து மட்டும் தான் பெறமுடியும். ஆகவே உபதேசம் ஞானமாக மாறும் வரை நம்பிக்கை அவசியமாகிறது. சாஸ்திரத்தில் சிரத்தையில்லாமல், ஒருவன் அதை பிரமாணமாகப் பார்க்க முடியாது. தன் மீதும், குரு மீதும், சாஸ்திரத்திடத்தும் நம்பிக்கை வைக்காதவன் சிரத்தையில்லாதவன் ஆகின்றான். மூன்று வகையான சிரத்தை பேசப்படும்:
(i) குஸ்ரத்3தா4 — எந்த சிந்தனையுமில்லாமல் குருட்டுத்தனமாக அப்படியே ஏற்றுக் கொள்வது.
(ii) அஸ்ரத்3தா4 — நம்பிக்கையில்லாத நிலை
(iii) ஸ்ரத்3தா4 — குரு விளக்கியது ஒருவனின் அனுபவத்திற்கு முரண்பாடாக இருக்கும் பட்சத்தில், குருவின் வாக்கியத்தை சந்தேகிக்காமல் அதை புரிந்துகொண்ட அறிவை சந்தேகப்படுதல். மேலும் அதைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்ற பாவனையுடன் இருத்தல் சிரத்தை(ஸ்ரத்3தா4) எனப்படும்.
=> முழுமையான அர்ப்பணிப்பு:
ஞானத்தின் பாதைக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்தவனாக இருத்தல் இங்கு ‘தத்பர:’ எனும் சொல்லின் மூலம் குறிக்கப்படுகிறது. ‘பர:’ எனில் உறுதியுடன் இருப்பவர். ப்ரம்மத்தையே பரமாகக் கொண்டு, ஒவ்வொரு செயலையும் அந்த லக்ஷியத்திற்கு இடையூறு இல்லாததாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். அந்தரங்க சாதனைகளில் முழு முயற்சியும் முமுக்ஷுத்துவமும் ஞான வளர்ச்சிக்கு இன்றியமையாததாக அமைகிறது.
=> புலனடக்கம்:
தனது கற்பனைகளைத் திருப்திப்படுத்தும் நோக்கில் அதன்பின் செல்லாமல் புலன்களை கட்டுப்படுத்துதல் — ஸம்யதேந்த்3ரிய:. இது ஒருவனது கவனச்சிதறல்களை தடுத்து அவனது இலக்கை பின்தொடரத் தேவையான முழுமையான பலத்தை அளிக்கும். ஆகவே ‘ஸம்யதேந்த்3ரிய:’ என்பது மனதை நிலைப்படுத்தியவனைக் குறிக்கிறது. இந்திரிய ஒழுக்கமே மனக் கட்டுப்பாட்டிற்கு ஆரம்பப் புள்ளியாகும். மனத்தூய்மையே ஞானத்திற்கு ஒருவனை தயார்படுத்துகிறது. ஆகவே ஞானத்தை சம்பாதிக்கவும்(ஞாந சம்பாதனார்த்தம்) அதை காப்பாற்றவும்(ஞாந ரக்ஷணார்த்தம் ச) புலன்களைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.
மேற்கூரியவைகளின் தீவிரத்திற்கு ஏற்றவாறு ஞானம் விரைவில் வந்தமையலாம்; பல ஜன்மங்களில் அது கைகூடலாம்; ஒரே ஜன்மத்தில் வந்தமையலாம்; சில வருடங்களில் சித்தியாகலாம். ஒரு வருடம், ஒரு கணப்பொழுது — இப்படி தீவிரத்திற்கு ஏற்றார்போல் காலம் குறுகுகிறது. ஞானத்தை அடைபவன் எல்லாம் ஈஷ்வரனிடத்து அடங்கப் பெற்றிருப்பதாகப் பார்ப்பது மட்டுமல்ல, ஞானத்திற்கு ஏற்ற சாந்தியை அல்லது முக்தியையும் அக்கணமே பெறுகிறான்.
=> ஒப்பீட்டளவிலான சாந்தி மற்றும் முழுமையான சாந்தி:
இந்த ஞானத்தை அடைவதினால் என்ன பலன்? இந்த அறிவை அடைந்த ஒருவன் உடனடியாக முழுமையான சாந்தியை அடைகிறான் — பராம் சா1ந்திம் அசிரேண அதி4க3ச்ச2தி. இது மனதின் வழக்கமான இரண்டு மோதல்களுக்கிடையில் இருக்கும் போர்நிறுத்தமோ அல்லது அமைதியோ அல்ல. இந்த அமைதி ஒருவனின் இன்றியமையாத இயல்பை, சொரூபத்தைக் குறிக்கிறது.
பொதுவாக அமைதி என்பது பதற்றம் என்ற மனநிலைக்கு எதிரான ஒரு மனதினுடைய நிலை என்று புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மையில் நமது மனம் அமைதியாக இருக்கும்போது நாம் அமைதியாக இருப்பதாகவும், அது பதற்றத்துடன் இருக்கும்போது நாம் அவ்வாறே இருப்பதாகவும் உணர்கிறோம். ஆனால் இந்த சுலோகத்தில் கூறப்படும் சாந்தி இப்படிப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கவில்லை. மனநிலையைப் பொருட்படுத்தாமல், எப்போதும் அமைதியாக இருக்கும் சுய இயல்பு, சா1ந்தி. மனதின் நிலையைச் சார்ந்திராத இந்த சாந்தி, ‘பராம்’ என்றழைக்கப்படுகிறது — பராம் சா1ந்திம்.
இங்கே இரண்டு வகையான அமைதியைப் பற்றி பேசுகிறோம். ஒன்று கர்ம-யோகம் மற்றும் பக்தி-யோகம் மூலம் ஒருவன் அடையும் ஒப்பீட்டளவிலான அமைதி. இது முற்றிலும் மனதினுடைய நிலையைக் குறிக்கிறது. மனதின் நிலையாக இருப்பதாலேயே மாற்றத்திற்குட்பட்டது. புலனடக்கத்தினால்(ஸம்யதேந்த்3ரியத்வா) அடையப்படும் இந்த வகை அமைதியும் ஞானத்தை அடைய கண்டிப்பாகத் தேவை. இவ்வகையான சாந்தியை அனுபவிக்கும் ஒருவனாலேயே ஞானத்தினால் பெறப்படும் முழுமையான சாந்தியையும் அடையமுடியும். இந்த இரண்டாவதான அமைதியே, ‘பராம் சா1ந்திம்’ என்றழைக்கப்படுகிறது; இது ஒருவனுடைய சொரூபம் —> சொரூப-பூத-சாந்தி(स्वरूप-भूत-शन्ति). ‘நான் சாந்த சொரூபமானவன்’ என்ற ஞானமே அவனுக்கு இந்த சாந்தியை, மோக்ஷத்தை அடைவிக்கிறது.
இந்த ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் இடையிலான அவகாசத்தின் தூரம் என்ன? உண்மையில் எந்த தூரமுமில்லை. எவ்விதம் உணவை உட்கொள்வதற்கும் பசி நீங்குவதற்குமிடையில் எந்த இடைவெளியும் இல்லையோ அவ்விதம் ஞானத்தின் எழுச்சியில் சாந்தி உடனடியாக பெறப்படுகிறது — அசிரேண அதி4க3ச்ச2தி.
=> சங்கர பாஷ்யம்:
சங்கரர் இந்த சுலோகத்திற்கான தனது பாஷ்யத்தில், இந்த ஞானத்தை அடைய தேவையான சாதனைகளின் வரிசைக் கிரமத்தை தெளிவுபடுத்துகிறார். முதலில், பிரமாணமான சாஸ்திரத்தினிடத்தில் சிரத்தை. இந்த பலனாக எழும் அர்ப்பணிப்பினால் ஒருவன் எல்லாவற்றையும் விட ஞானமே முக்கியமென, சரியான பாவனையுடன் குருவை வந்தடைகிறான். மேலும் இவன் புலனடக்கதை பழகியவனாக இருத்தல் வேண்டும். இந்த மூன்று காரணிகள் இருந்தால் அறிவு நிச்சயமாக பெறப்படும் என்கிறார் சங்கரர்.
குருவின் மீதுள்ள சிரத்தையை வெளிக்காட்டும் வழிமுறைகளாக இந்த அத்தியாயத்தின் 34-வது சுலோகத்தில் பகவானால் கூறப்பட்ட — நமஸ்கரித்தல்(ப்ரணிபாத), முறையாக கேள்வி கேட்டல்(பரிப்ரச்1ந) மற்றும் குருவிற்கு செய்யும் பணிவிடை(ஸேவா) ஆகியவற்றைக் குறித்தும் இங்கு சங்கரர் தனது கருத்தைக் கூறுகிறார். இவைகளனைத்தும் வெளிப்புறமாக இருப்பதால், போதுமான அளவு சிரத்தையில்லாமலும் கூட அவைகளைக் காட்சிப்படுத்தலாம். எனவே இப்படிப்பட்ட பஹிரங்க வெளிப்பாடு, பொய்யாக இருக்க வாய்ப்புள்ளதால், அவைகள் ஞானத்திற்கான உத்திரவாதத்தை கொடுக்காது என்கிறார்.
இந்த சுலோகத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனிடம், சிரத்தையுடையவன் ஞானத்தை அடைகிறான் என்று கூறி அதன் ஆக்கப்பூர்வமான அம்சத்தை முன்வைத்தார். அடுத்த சுலோகத்தில் சிரத்தையில்லாதவனின் நிலை குறித்து கூறி அதன் எதிர்மறையான அம்சத்தை விளக்குகிறார்.
-------------------------------------------------------------------------------------||4.40|| மூன்றுவித தோஷங்கள் இருக்கக்கூடாது என எடுத்துரைக்கிறார்:
अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति ।
नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मन: ।। ४० ।।
அஜ்ஞச்1சாச்1ரத்3த3தா4நச்1ச ஸம்ச1யாத்மா விநச்1யதி ।
நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுக2ம் ஸம்ச1யாத்மந: ।। 40 ।।
अज्ञ: அஜ்ஞ: அறியாமையுடன் இருப்பவன் अश्रद्दधान: அச்1ரத்3த3தா4ந: சிரத்தையில்லாதவன்
संशयात्मा ஸம்ச1யாத்மா சந்தேகப்படுபவன் विनश्यति விநச்1யதி நாசமடைகிறான்
संशयात्मन: ஸம்ச1யாத்மந: சந்தேகப்படுபவனுக்கு अयं लोक: அயம் லோக: இந்த உலகம்
न अस्ति ந அஸ்தி இல்லை न च पर: ந ச பர: பரலோகமும் இல்லை न च सुखं ந ச ஸுக2ம் சுகமுமில்லை.
அறியாமையிலிருக்கும் அக்ஞானி, நம்பிக்கையில்லாதவன், சந்தேகப்படுபவன் அழிவடைகிறான். சந்தேகப்படுபவனுக்கு இவ்வுலகும் இல்லை; அவ்வுலகும், இன்பமும் இல்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.
விளக்கம்:
=> சந்தேகம் எவ்விதத்திலும் உதவாது:
இங்கு ‘அஜ்ஞ:’ எனும் சொல் அவிவேகியை, அதாவது நிலையான-நிலையற்ற விஷயங்களைப் பற்றிய பகுத்தறிவில்லாத அக்ஞானியைக் குறிக்கிறது. சங்கரர் இவர்களை ‘அனாத்மஜ்ஞ:’ என்றழைக்கிறார். சுயத்திற்கும் சுயமற்றதிற்கும் பாகுபாடு தெரியாத, ஆத்ம-அனாத்ம விவேகமற்றவர்கள் என்கிறார். சுருக்கமாக ஆத்ம சொரூபத்தை அறியாதவன் அக்ஞானி.
கிட்டதட்ட அனைவரும் ‘அனாத்மஜ்ஞ’ தான். ஆனால் சாஸ்திரத்தின் மீது சிரத்தையுடைய ‘அனாத்மஜ்ஞ’ எனும்போது, எது சரி, எது தவறு என்ற அறிவுடன் தர்மத்தை பின்பற்றுபவர்களாக இருப்பதால் அவர்கள் மெதுவாக விவேகத்தை அடையவும் அதன்மூலம் ஞானத்தை அடையவும் வாய்ப்புள்ளது.
ஆனால் அக்ஞானியாக இருக்கும் ஒருவன், சிரத்தையில்லாதவனாகவும் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவன் சந்தேகத்தின் பலனைக் கூட சாஸ்திரத்திற்கு கொடுக்கமாட்டான். இவனின் அவநம்பிக்கை எந்த காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது; குருட்டுத்தனமான நிராகரிப்புடன் கூடியதாக இருக்கும். உதாரணமாக சொர்க்கம் இல்லை என்பதை ஒருவன் எப்படி நிரூபிக்க முடியும்? சொர்க்கத்தின் இருப்பை நிரூபிக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது. தவிர ஏதாவது ஒன்றை சரி அல்லது தவறு என்று முடிவு செய்ய விசாரம் தேவை. இந்த ஆரம்பகட்ட விசாரணைக்கும் கூட சிறிதளவேனும் சிரத்தை தேவை.
சிலர் சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாவிடினும், குறைந்தபட்சம் தங்களை அல்லது மற்ற உலகத்தினரை நம்புகிறார்கள். அவர்கள் பணத்தின் மீதோ அல்லது அதிகாரத்தின் மீதோ கூட நம்பிக்கை வைத்திருக்கலாம். இவ்வகையான நம்பிக்கை இந்த மக்களுக்கு குறைந்தபட்சம் எதையாவது கொடுக்கும். உலகில் நம்பிக்கை இருந்தால், இவ்வுலகம் அதற்கேயுரிய மகிழ்ச்சி, பாதுகாப்பு போன்ற சில தற்காலிகச் சுகங்களை வழங்குகிறது.
இந்த சுலோகத்தில் முன்வைக்கப்படும் முக்கிய பிரச்சனை சந்தேகம். சந்தேகிப்பவனை, ‘ஸம்ச1யாத்மா’ என்கிறார் பகவான். சந்தேகம் என்பது மனதில் மட்டுமே இருக்க முடியுமாதலால், இதில் ‘ஆத்மா’ என்ற சொல்லானது அந்தக்கரணமாகிய மனதைக் குறிக்கிறது. உலகில் யார் எதைச் சொன்னாலும், செய்தாலும் அவையெல்லாம் தனக்கு கேடு விளைவிக்கும் என எண்ணி ஐயமே வடிவெடுத்தவன் சந்தேகப்படுபவன். உலகத்தவரை நம்புகிறவளவு உலகத்தவர் ஒரு மனிதனுக்கு உரியவர் ஆகின்றனர். ஒருவரையும் நம்பாது உலகத்தவருக்கு வேற்றானாயிருப்பதே பெரிய வேதனையாகிறது. அனைத்தையும் சந்தேகம் கொள்ளும் இயல்புடையவன் வாழ்க்கைக்கும் தகுதியற்றவனாகிறான். எனில் இத்தகையவனுக்கு சொர்க்கம், ப்ரம்மலோகம் முதலிய மேல்லோக சுகங்கள் எப்படி கிடைக்கும்?
பகுத்தறியும் தகுதியற்ற அக்ஞானி மற்றும் சிரத்தையில்லாதவன் மரணத்திலிருந்து மரணத்திற்கு செல்வதாக சங்கரர் தனது பாஷ்யத்தில் விளக்குகிறார். ஆனால் இவர்கள் சந்தேகிப்பவனைபோல மோசமான கதியை அடைவதில்லை. சாஸ்திரத்தில் சிரத்தையில்லாத காரணத்தினால் புண்ணிய-பாபத்தில் நம்பிக்கையற்று, தர்மத்தை பெரிதும் பிந்தொடராதவர்களாக இனிவரும் லோகத்தை இழக்கிறார்கள். ஆனால் ‘ஸம்ச1யாத்மா’, ஐயத்தின் காரணமாக இந்த உலகத்திலேயே சுகம் காண்பதில்லை. எனவே இம்மூன்று தோஷங்களையும் ஒன்றாகக் கூடியவன், இவ்வுலக சுகத்தையே அடைவதில்லை எனில் பரலோக சுகத்திற்கு அவனுக்கு வாய்ப்பேயில்லை. இத்தகையவன் தனக்கு மட்டுமல்ல தன்னைச் சுற்றி இருப்பவனுக்கும் துன்பத்தை தருகின்றான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
நம்பிக்கையில் குழந்தையைப்போல ஆனாலொழிய ஈஷ்வரனைக் காண்பது துர்லபம்(கடினம்). யாரேனும் ஒருவனைச் சுட்டிக்காட்டி, ‘அவன் உன் சகோதரன்’ என்று தாய் ஒரு குழந்தையிடம் சொன்னால் அக்குழந்தை அவள் சொல்வதை உண்மையெனவே நம்பும். இப்படிப்பட்ட குழந்தையின் விசுவாசம் எவனிடம் உள்ளதோ அவனிடந்தான் ஈஷ்வரனுக்குக் கருணை பிறக்கிறது. எல்லாவற்றிலும் கணக்குப் பார்க்கும் சுபாவத்துடனிருந்தால் ஈஷ்வரனைக் காணவே முடியாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------