வியாழன், 20 ஜனவரி, 2022

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.41 - 4.42

||4.41|| ஐயத்தை அகற்றுவதற்கான உபாயம் அல்லது ஞானநிஷ்டை அடைந்தவனின் பலன்:

योगसन्न्यस्तकर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम्

त्मवन्तं कर्माणि निबध्नन्ति धनञ्जय ।। ४१ ।। 

யோக3ஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சி2ந்நஸம்ச1யம்

ஆத்மவந்தம் கர்மாணி நிப3த்4நந்தி 4நஞ்ஜய ।। 41 ।।


धनञ्जय  4நஞ்ஜய  தனஞ்ஜயா  

योग-सन्न्य स्त-कर्माणं   யோக3-ஸந்ந்யஸ்த-கர்மாணம்  யோகத்தினால் கர்மங்களைத் துறந்து  

ज्ञान-सञ्छिन्न-संशयम्   ஜ்ஞாந-ஸஞ்சி2ந்ந-ஸம்ச1யம்  ஞானத்தினால் சந்தேகங்களை நீக்கி   

त्मवन्तं  ஆத்மவந்தம்  ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவனை   कर्माणि  கர்மாணி  கர்மங்கள்   

निबध्नन्ति  நிப3த்4நந்தி  பந்தப்படுத்துவதில்லை.


யோகத்தினால் கர்மங்களைத் துறந்து, ஞானத்தினால் சந்தேகங்களை நீக்கி ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவனைக் கர்மங்கள் பந்தப்படுத்துவதில்லை தனஞ்ஜயா


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.


விளக்கம்:

கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனை, ‘தநஞ்ஜய’, பல பட்டங்களையும் எல்லா வகைச் செல்வங்களையும் பெற்றவனே, என்றழைத்து உபதேசத்தை தொடர்கிறார். இந்த சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளகர்மாணிஎன்பது முறையான மற்றும் முறையற்ற செயல்கள், வேத சடங்குகள் மற்றும் அனைத்துவித உலகச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது. இவை எதுவுமே அவனை பந்தப்படுத்துவதில்லைகர்மாணி நிப3த்4நந்தி. இப்படிப்பட்ட செயல்களுக்கு பந்தப்படாதவன் யார்? எனும்போது மூன்று தகுதிகளை முன்வைக்கிறார்: யோக3-ஸந்ந்யஸ்த-கர்மாணம், ஜ்ஞாந-ஸஞ்சி2ந்ந-ஸம்ச1யம் மற்றும் ஆத்மவந்தம்.


=> யோக3-ஸந்ந்யஸ்த-கர்மாணம்:

யோகத்தின் மூலம் பெறப்பட்ட யதார்த்தத்தின் தெளிவான பார்வையினால்(பரமார்த்த தர்ஷணேந) எல்லா செயல்களையும் துறந்தவன்; கர்த்ருதுவத்தை ஞானத்தினால் துறந்தவன்யோக3-ஸந்ந்யஸ்த-கர்மாணம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுயத்தின் உண்மை சொரூபத்தை அறிவதன் மூலமாக கர்மத்தை விட்டவன். இங்குயோகஎன்பது ஞானயோகத்தை குறித்தாலும் கர்மயோகமும் சேர்ந்தே புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஏனெனில் இந்த அறிவைப் பெற ஒருவன் கர்ம-யோக வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும். இவ்விதமாக செயலைத் துறந்தவன், இந்த அத்தியாயத்தில் பதினெட்டாவது சுலோகத்தில் குறிப்பிடப்பட்ட அகர்மத்தில் கர்மத்தை பார்க்கும் ஞானியாவான். சேற்றுக்குள் புதைந்திருக்கும் மீனின் மீது எவ்விதம் சேற்றின் அழுக்கு படிவதில்லையோ அவ்விதமே ஓயாது கர்மம் செய்தபோதும் அதில் கட்டுப்படாதவன் இந்த யோகி.

மேலும் இங்கு இனியொரு விசாரம் முக்கியத்துவம் பெறுகிறது. ‘யோக3-ஸந்ந்யஸ்த-கர்மாஎன்பதுஸந்ந்யஸ்த-கர்மா’-விலிருந்து வேறுபட்டது. ‘ஸந்ந்யஸ்த-கர்மாஎன்பது ஒரு சந்யாசியைக் குறிக்கிறது. ஞானத்தை பின்தொடர்வதற்காக அனைத்து கடமைகளையும் விருப்பத்தின் பேரில் துறந்தவன். மறுபுறம், ‘யோக3-ஸந்ந்யஸ்த-கர்மாஎன்பவன் ஒரு ஞானி. ‘நான் அகர்த்தாஎன்ற தன்னைப் பற்றிய அறிவினால் செயலைத் துறந்தவன். செயலில் ஈடுபட்டபோதிலும் அதனால் பந்தப்படாதவன். ஆகவேநான் கர்த்தா அல்லஎன்ற அறிவே யோக3-ஸந்ந்யஸ்த-கர்மா-வை வெறும் ஸந்ந்யஸ்த-கர்மாவிலிருந்து வேறுபடுத்துகிறது.


=> ஜ்ஞாந-ஸஞ்சி2ந்ந-ஸம்ச1யம்:

இரண்டாவது தகுதியாக பகவான் கூறுவது, சந்தேகங்களிலிருந்து விடுதலை. யாருடைய அறிவு சந்தேகங்களிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதோ அவன்ஜ்ஞாந-ஸஞ்சி2ந்ந-ஸம்ச1ஆவான். சங்கரர் தனது உரையில், ‘ஒருவன் எப்படி யோக3-ஸந்ந்யஸ்த-கர்மா- வாக ஆக முடியும்? என்ற கேள்வியை முன்வைத்து, அதற்குஞானத்தினால்என பதிலுரைக்கிறார். அதைத் தொடந்து இந்த ஞானம், இந்த யோகம் தனக்கும் இறைவனுக்கும் இடையேயான ஐக்கியப் பார்வையின் மூலம் ஒருவரின் அனைத்து சந்தேகங்களையும் முற்றிலும் அழிப்பதாக இருக்கிறது என விவரிக்கிறார்

இவை என்ன மாதிரியான சந்தேகங்கள்? உதாரணமாக, முழுமை என்பது உண்மையில் தன் இயல்புதானா இல்லையா? அல்லது ஆத்மா நித்தியமானதா, நித்தியமற்றதா? என சந்தேகிக்கலாம். ஆத்மாவிற்கும் அனாத்மாவிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இருக்கிறதெனில், என்ன வகையான சம்பந்தம்? இறைவனுக்கும் தனி மனிதனுக்கும் இடையில் ஏதேனும் பிளவு அல்லது ஒற்றுமை உள்ளதா? என்பது போன்ற ஐயங்கள் எழலாம்

இம்மாதிரியான எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட்ட ஒருவனுக்கு ஆத்மா சத்தியமானது என்றும் அனாத்மா பொய்யானது, மித்யா என்றும் தெளிவாகத் தெரியும். நம்பிக்கையினால் அல்லாமல் ஞானத்தினால் ஒருவன் இந்த உண்மையைச் சந்தேகமின்றி அறிகிறான். இந்த ஞானம் ஏற்படும் வரை ஒருவனுக்கு சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை அவசியமாகிறது. சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்ட சொர்க்கம் முதலிய விஷயங்களை எடுத்துக்கொண்டால் நம்மால் அதை சரிபார்க்க இயலாது. மரணம் வரை சொர்க்கத்தின் இருப்பு ஒரு நம்பிக்கையாக மட்டுமே உள்ளது. இந்த உடலில் இருக்கும் வரை அதைச் சரிபார்க்கும் வாய்ப்பில்லை.

ஆனால் வேதாந்தம் என்பது அறிவு சம்பந்தப்பட்டதே தவிர, நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் இங்கு தானாக விளங்கிக் கொண்டிருக்கும் சுயத்தை பற்றி பேசுகிறோம். ‘நான் இருக்கிறேன்என்பது சுயமாக விளங்குவதால் இதை கூற ஒருவனுக்கு சாஸ்திரம் தேவையில்லை. தன்னைப் பற்றிய தவறான கருத்துக்களையும் முடிவுகளையும் சரிசெய்ய மட்டுமே சாஸ்திரம் தேவைப்படுகிறது.

நான் இருக்கிறேன்என்பது எந்தவித முடிவும் அல்ல; அது ஒரு தன்னிச்சையான உண்மை; அதேசமயம்நான் ஒரு சம்ஸாரிஎன்பது ஒரு முடிவு. இந்த முடிவு முற்றிலும் கற்பனையானது. ஏனெனில் இந்த பாவனை ஒருவன் தூங்கும்போது இருப்பதில்லை, இரண்டு எண்ணங்களுக்கு இடையில் இல்லை; மகிழ்ச்சியான தருணத்தில் இல்லை. மேலும் அறிவின் விழிப்பில் இந்த முடிவு பொய்யாக்கப்படுகிறது. நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன் என்பதை சரிபார்க்கத் தேவையில்லை; தன்னைப் பற்றிய ஐயங்களையும் பிழைகளையும் மட்டுமே அவன் அகற்ற வேண்டும். இதைச் செய்ய சாஸ்திரங்கள் உதவுகின்றன.

ஈஷ்வரனுடனான ஐக்கியத்தை பற்றிய ஆத்மஞானமே மேற்கூரிய பிழைகளை நீக்குகிறது. இவ்விதம் ஞானத்தின் மூலம் எல்லாவித சந்தேகங்களையும் நீக்கியவன்ஜ்ஞாந-ஸஞ்சி2ந்ந-ஸம்ச1என்றழைக்கப்படுகிறான்.


=> ஆத்மவான்:

இங்கு பகவானால் குறிக்கப்படும் மூன்றாவது தகுதிஆத்மவான்ஆகும். இது சந்தேகம் மற்றும் பிழையை எவ்வாறு அகற்றுவது என்பதை விளக்குகிறது. இந்தஆத்மவான்’, உடல்-மனம்-உணர்வுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யோகியாவான். இங்கு ஆத்மா என்பது ஒருவனின் உடல், மனம் மற்றும் புலன்களைக் குறிக்கிறது; அவற்றின் மீது ஆளுமைக் கொண்டவன், ஆத்மவான் என்று அழைக்கப்படுகிறான்.

ஒவ்வொருவருக்கும் உடல், மனம் மற்றும் புலன்கள் இருந்தாலும், அனைவருக்கும் அவற்றின் மீது கட்டுப்பாடு இருப்பதில்லை. மாறாக, அவன் பொதுவாக அவைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறான் — ‘அனாத்மவான்’. இப்படிப்பட்டவனுடைய மகிழ்ச்சியை உடலோ அல்லது மனமோ தீர்மானிக்கிறது. உடல் எடையின் ஏற்றம், நோயுருதல், மூப்பை அடைதல் இவற்றில் எதுவும் அவனது மகிழ்ச்சியை எளிதில் சீர்குலைத்துவிடும்.

கர்மயோகியாக, யோகியாக மனமுதிர்ச்சியடைந்தஆத்மவான்’, உடல்-மனம்-புலன்களை எப்போதும் தனது ஆளுமையின்கீழ் வைக்கிறான். இந்த அத்தியாயத்தின் 39 வது சுலோகத்தில் சொல்லப்பட்ட தனது கருத்தை மீண்டும் கிருஷ்ணர் இங்கு வலியுறுத்துகிறார். அங்கு அவர் புலனடக்கத்தை உடையவனைஸம்யதேந்திரியஎனக் குறிப்பிட்டார்; இங்கு அத்தகையவனைஆத்மவான்என்கிறார்.

சங்கரர் தனது பாஷ்யத்தில் ஆத்மவான் எனும் சொல்லைஅப்ரமத்த(अप्रमत्त)’ என்ற சொல்லுடன் சமன்படுத்துகிறார். கவனம் மற்றும் விழிப்புடன் கூடியவன்; சோம்பல் அற்றவன், அலட்சியம், மந்தம் மற்றும் விழிப்புணர்வின்மை அற்றவன் என்பது இதன் பொருள்

ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவன்ஆத்மவந்தம். அதாவது தன்னிடத்திலேயே இருப்பவன்; அனாத்மாவில் இல்லாதவன்; நாமரூபத்திலிருந்து விடுதலையடைந்தவன்; அதிஷ்டானத்தில் இருப்பவன். இப்படிப்பட்டவனை கர்மங்களோ அவற்றின் விளைவான புண்ணிய-பாபங்களோ பந்தப்படுத்துவதில்லை

----------------------------------------------------------------------------------------------------------------------

||4.42|| அர்ஜுனனுக்கு அறிவுரை கூறி முடிவுரை செய்கிறார்:

तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानासिनात्मन:

छित्त्वैनं संशयं योगमातिष्ठोत्तिष्ठ भारत ।। ४२ ।। 

தஸ்மாத3ஜ்ஞாநஸம்பூ4தம் ஹ்ருத்ஸ்த2ம் ஜ்ஞாநாஸிநாத்மந:

சி2த்த்வைநம் ஸம்ச1யம் யோக3மாதிஷ்டோ2த்திஷ்ட2 பா4ரத ।। 42 ।।


तस्मात्   தஸ்மாத்  ஆகவே   अज्ञानसम्भूतं  அஜ்ஞாநஸம்பூ4தம்  அக்ஞானத்தில் உண்டான 

हृत्स्थं   ஹ்ருத்ஸ்த2ம்  ஹிருதயத்தில்/மனதில் இருக்கின்ற   त्मन:  ஆத்மந: ஆத்மாவைப் பற்றிய   

एनं संशयं  ஏனம் ஸம்ச1யம்  இந்த சந்தேகத்தை  ज्ञानासिना   ஜ்ஞாநாஸிநா  ஞானவாளினால்  

छित्त्वा  சி2த்த்வா  வெட்டி  योगम्   யோக3ம்  கர்ம யோகத்தை  तिष्ठ   ஆதிஷ்ட2  கையாளுக  

भारत பா4ரத  பாரதா  उत्तिष्ठ  உத்திஷ்ட2  எழுந்திரு.


ஆகவே அக்ஞானத்திலிருந்து தோன்றிய நம் மனதிலுள்ள ஆத்மாவைப் பற்றிய சந்தேகத்தை ஞானவாளால் வெட்டி யோகத்தைக் கைக்கொண்டு பாரதா, எழுந்திரு.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனை, பரத குடுப்பத்தில் பிறந்தவனே, பாரதா, என அழைத்து, அவனை எழுந்து நின்று யோக வாழ்க்கையை மேற்கொள்ளச் சொல்கிறார். இங்கு யோகம் என்பது ஞானயோகத்திற்கு இட்டுச்செல்லும், கர்மயோகத்தைக் குறிக்கிறது. ஏனெனில் கர்மயோக வாழ்க்கையை வாழும்போது, ஞானமானது எந்தத் தடையையும் சந்திக்காது. ஆகையால், கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ‘நீ இவ்வளவு நேரம் என் உபதேசத்தை கேட்டுக்கொண்டிருந்தாய். இப்போது, எந்த வாழ்க்கைமுறையினால் முக்திக்கான அறிவு சாத்தியமோ அந்த கர்மயோக வாழ்க்கையை எடுத்துக் கொள்வாயாகயோக3ம் ஆதிஷ்ட2என்கிறார்.


சந்யாசம் என்றொரு வாழ்க்கைமுறை இருந்தபோதிலும், வெறும் கடமைகளைத் துறத்தல் மட்டுமே சந்யாசம் ஆகாது என ஏற்கனவே பார்த்தோம். முதன்மை அர்த்தத்தில், ஒரு சந்யாசி என்பவன்நான் கர்த்தா அல்லஎன்ற அறிவால் அனைத்து செயல்களையும் விடுகிறான்; செயலில் ஈடுபட்டபோதிலும் அது அவனை பந்தப்படுத்துவதில்லை. இதனால் கிருஷ்ணர் இங்குஆகவே-தஸ்மாத்என்ற சொல்லை பயன்படுத்துகிறார். ‘ஆகவே அர்ஜுனா, கர்மயோகத்தை எடுத்துக் கொள்வாயாக; எவன் தனது அனைத்து செயல்பாடுகளையும் ஞானம் என்ற யோகத்தினால் துறந்தானோ, எவனுடைய சந்தேகங்கள் அனைத்தும் ஞானவாளால் வெட்டப்பட்டதோ, ஜ்ஞாந-ஸஞ்சி2ந்ந-ஸம்ச1, இப்படிப்பட்ட சந்யாசியாக மாறத் தேவையான அறிவைப் பெற கர்மயோகத்தில் ஈடுபடுவதற்காக எழுந்திரு’. 


=> மனதில் குடிகொண்டுள்ள சந்தேகமெனும் பகைவன்:

அறியாமையினாலும் பகுத்தறிவின்மையினாலும் ஒருவனுக்கு தன்னைப் பற்றிய சந்தேகம் பிறக்கிறது. கிருஷ்ணர் கூறுகிறார், ‘ஒருவனை அழிக்கக்கூடிய இப்படிப்பட்ட சந்தேகம் எனும் பகைவன் எங்கு உள்ளான்? துரியோதனனைப் போல அவன் உனக்கு வெளியில் இல்லை அர்ஜுனா, அவன் உன்னில், உன் இருதயத்தில், உன் மனதில் இருக்கிறான்ஹ்ருத்ஸ்த2ம். சந்தேகம், ஸம்ச1யம், உன் மனதில் நுழைந்து வேறூன்றியுள்ளது.

பகுத்தறிவின்மையினால் சந்தேகம் பிறந்துள்ளது எனக் குறிப்பிட்டோம். இங்கு பகுத்தறிவின்மை என்பது ஆத்ம-அனாத்ம விவேகமின்மையைக் குறிக்கிறது; வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து நிலையானது-நிலையற்றது குறித்த விசாரணையின்மையைக் குறிக்கிறது. இதனால் அனைத்தும் குழப்பமானதாக, சந்தேகத்திற்குரியதாக தென்படுகிறது. ஒருவன் விதவிதமான குழப்பங்களை தனது வாழ்வில் எதிர்கொண்ட போதிலும் இங்கு, தன்னை, தனது சுயத்தைக் குறித்த ஐயம் குறிப்பிடப்படுகிறது. இது அழிக்கப்பட வேண்டியது.


=> ஞானமெனும் வாள்:

கிருஷ்ணரின் கருத்தை தெளிவுபடுத்தும் விதமாக, சங்கரர் தனது பாஷ்யத்தில், ஞானம் என்பது துக்கம் மாயை போன்ற குறைபாடுகளை அழிக்கும் தெளிவான பார்வையாக உள்ளது என வரையறுக்கிறார்.

இங்குதெளிவான பார்வைஎன்பது ஆத்ம-அனாத்மாவிற்கிடையேயான பாகுபாட்டையும் மற்றும் நிலையான-நிலையற்றது குறித்த விவேகத்தைக் குறிக்கிறது. ஞானம் மட்டுமே ஒருவனுடைய சோகம், மோஹம், விருப்பு-வெறுப்பு மற்றும் கோபம் போன்ற அனைத்து குறைபாடுகளை(தோஷங்களை) நீக்க வல்லது. சுயத்தைப் பற்றிய சந்தேகம் எல்லா வகையான பிரச்சினைகளையும் உருவாக்குகிறது; எனவே அது அழிக்கப்பட வேண்டியது. ஞானவாளால் அதை வெட்டுவதன் மூலம் மட்டுமே சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியும். அதற்காக ஒருவன் கர்ம-யோகத்தை எடுக்க வேண்டும். ஆகையால், கிருஷ்ணர், 'வா, எழுந்து நில், அர்ஜுனா! — உத்திஷ்ட2 யோக3ம் ஆதிஷ்ட2, என்கிறார்.

இந்த அத்தியாயத்தின் 40-வது சுலோகத்தில் குறிப்பிடப்பட்ட, ‘சந்தேகப்படுபவன் அழிவையடைகிறான்என்ற கருத்தின் நீட்சியாக இந்த சுலோகத்தை சங்கரர் கூறுகிறார். ஐயமுறுபவனுக்கு, ஸம்ச1யாத்மா, இவ்வுலகும் இல்லை; அவ்வுலகும், இன்பமும் இல்லை என சொல்லப்பட்டது. ஆகவே சந்தேகம் என்பது சொந்த அழிவுக்கு காரணமாக இருப்பதால், அதை ஒருவனின் மனதில் குடிகொள்ள அனுமதிக்க கூடாது. சுயத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதன் மூலம் மட்டுமே அதை நீக்கமுடியும். வெளிச்சம் வந்தால் இருள் தானே மறைவது போன்று ஆத்மஞானம் ஒன்றே ஐயத்தை அகற்றுவதற்கான உற்ற உபாயம். இதற்காக கண்டிப்பாக கர்மயோக வாழ்க்கையை மேற்கொண்டு, ஞானத்தை பிந்தொடர்ந்து, இந்த சந்தேகத்தை முழுவதுமாக அழிக்கும் முயற்சியில் ஒருவன் ஈடுபட வேண்டும்

----------------------------------------------------------------

ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे ज्ञानकर्मसंन्यासयोगो नाम चतुर्तोऽध्याय: ।।

ஓம் தத் ஸத் ।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 ஜ்ஞானகர்மஸந்யாஸயோகோ3 நாம சதுர்தோऽத்4யாய: ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் ஞானகர்மஸந்யாஸயோகம் என்ற நான்காம் அத்தியாயம்.

-------------------------------------------------------------------------------------

ஞானகர்ம ஸந்யாஸ யோகம் - சாரம்:

(1) ஞானகுரு சிஷ்ய பரம்பரை/யோகத்தின் மஹிமை [1 - 3]

(2) அர்ஜுனின் கேள்வி [4]

(3) அவதார தத்துவம் [5 - 8]

(4) சாதனைகள் மற்றும் மோக்ஷ பலன் [9 - 15]

(5) ஞான கர்ம சந்யாஸம் [16 - 24]

(6) விதவிதமான 12 சாதனைகள் [25 - 33]

(7) குரு சிஷ்ய இணக்கம் [34]

(8) ஞானத்தின் பலன் [35 - 37]

(9) சில பண்புகள் [38 - 39]

(10) சந்தேகம் உதவாது [40 - 42]

-------------------------------------------------------------------------------------