புதன், 5 ஜனவரி, 2022

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.36 - 4.37

||4.36|| ஞான பலன் - பாவத்தின் நாசம்:

अपि चेदसि पापेभ्य: सर्वेभ्य: पापकृत्तम:

सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि ।। ३६ ।।

அபி சேத3ஸி பாபேப்4: ஸர்வேப்4: பாபக்ருத்தம:

ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி ।। 36 ।।


अपि चेत्  அபி சேத்  ஒருகால்   सर्वेभ्य: पापेभ्य:   ஸர்வேப்4: பாபேப்4:  எல்லா பாபத்தையும்   

पापकृत्तम: असि  பாபக்ருத்தம: அஸி  செய்த பெரும்பாவியாக இருந்தாலும்   

सर्वं वृजिनं  ஸர்வம் வ்ருஜிநம்  அனைத்து பாபங்களையும்   

ज्ञानप्लवेन एव  ஜ்ஞாநப்லவேந ஏவ  ஞானமெனும் படகினாலேயே   सन्तरिष्यसि   ஸந்தரிஷ்யஸி  கடப்பாய்.


ஒருகால் எல்லா பாபத்தையும் செய்த பெரும்பாவியாக இருந்தாலும், பாபங்களையெல்லாம் ஞானப்படகினாலேயே நீ கடந்துசெல்வாய்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய்.


விளக்கம்:

தூய்மையான தர்ம வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கும், என்ன செய்ய வேண்டும் மற்றும் எதைத் தவிர்க்க வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் எப்போதும் இருந்தவர்களுக்கும் இந்த ஞானம் சாத்தியமாகலாம். ஆனால் தங்களைப் போன்ற ஒரு பாவிக்கு, இந்த புனிதமான அறிவை பெறக்கூடிய தகுதியில்லை எனப் பலர் நினைக்கின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பகவான் இந்த சுலோகத்தை பகர்கிறார்.


=> பாவத்தின் பெருங்கடல்:

ஒரு பெரும்பாவியாக, தர்ம வாழ்க்கையை பற்றி பெரிதும் யோசிக்காமல் வாழ்ந்து கொண்டிருந்த நான் எப்படி ஈஷ்வரனாக முடியும்? இப்படி ஒரு அறிவை என்னால் புரிந்துகொள்ள இயலும் என எதிர்பார்க்கிறீர்களா? என்ற கேள்விக்கு பகவான் இங்குஆம், இயலும்என பதிலுரைக்கிறார். மிகப்பெரிய பாவியும்கூட இறைவனுக்கும் தனது சுயத்துக்கும் இடையேயான ஐக்கியத்தை புரிந்துகொள்ள முடியும் என்பதே இந்த ஞானத்தின் மஹிமை. இங்கேபாவிகள்என்ற வார்த்தை, சிறு சிறு தவறுகள் முதல் மிகப் பெரிய குற்றங்கள் வரை உலகில் அனைத்து வகையான பாவத்தையும் செய்யும் மக்களைக் குறிக்கிறது. இதைத் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணர், இவர்களிலேயே மிகப் பெரிய பாவியை, பாபக்ருத்தம, இந்த சுலோகத்தின் பேசுபொருளாகத் தேர்ந்தெடுக்கிறார்.

வ்ருஜிநம்என்ற சொல்லின் பொருள் பாபம். பாபம் என்ற பெருங்கடலின் மத்தியில் இருக்கும் பெரும்பாவியும் இந்த ஞானம் எனும் ஒற்றைப் படகினாலேயே, ஜ்ஞாநப்லவேந ஏவ, அதைக் கடந்துவிட முடியும். அதாவது தனது அனைத்து பாவங்களையும் இந்த ஞானமெனும் படகினாலேயே கடந்து செல்வாய்ஸந்தரிஷ்யஸி, என்கிறார் பகவான்.

இவ்விதம் கடப்பது பெரும் சிரமங்களை உள்ளடக்கியும் அதிக காலத்தை எடுத்துக் கொள்ளும் பயணமாகவும் இருக்குமா? எனில் இல்லவே இல்லை. எந்தச் சிரமமுமின்றி கடக்க முடியும் ஏனெனில் இங்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் சுயத்திற்கு, ஆத்மாவின் யதார்த்தத்திற்கு விழித்தெழுவது மட்டுமே

ஒருகால் பல கொலைகளைச் செய்துவிட்டு பிடிபட்டதுபோல கனவு காண்பதாக வைத்துக்கொள்வோம். கனவில், நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உங்களுடைய குற்றம் நிரூபிக்கப்படுகிறது. நீதிபதி உங்களுக்கு மரண தண்டனை விதிக்கிறார். இப்போது தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு தூக்குமேடைக்கு அழைத்து செல்லப்படுகிறீர்கள். அத்தருணத்தில் திடுக்கிட்டு விழிக்கிறீர்கள்உங்களுடைய கனவு கலைந்து எழுந்தவுடன், நீங்கள் கனவில் செய்த அனைத்து பாபங்களுக்கும் என்ன நடக்கும்? நனவிற்கு அதாவது யதார்த்தத்திற்கு விழித்தவுடன், ‘கனவில் நடந்த செயல்களைச் செய்தவன் நான் அல்லஎன்ற அறிவுப் படகினால்பாவங்கள், தண்டனை போன்ற எல்லாவற்றிலிருந்தும் முழு கனவிலிருந்தும் காப்பாற்றப்படுகிறீர்கள். அதில் எதுவுமே உங்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.

எனில் கனவில் செயல்களைச் செய்தவர் யார்? அது நீங்கள் அல்ல. ஆனால் நீங்களே அந்த சிக்கல்கள் அனைத்தையும் உங்களின் மீது ஏற்றிவைத்துக் கொண்டீர்கள். பின்னர் நனவிற்கு விழித்தவுடன் உங்களின் உண்மைச் சொரூபம் புலப்படுகிறது. இதனால் நீங்கள் என கருதிக் கொண்டிருந்த கனவு காண்பவன் பொய்யாகிறான். இவ்விதம் கனவு காண்பவனை பொய்யாக்குவதன் மூலம், கனவின் அனைத்துச் செயல்களையும், கனவையும் பொய்யாக்கிவிட்டீர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கனவு உலகம், கனவுலகின் செயல்கள் மற்றும் அதன் விளைவுகளுடன் கனவு காண்பவரும் சேர்த்து விழித்தெழுந்தவரால் விழுங்கப்படுகிறார்.


=> ஆத்மா என்றுமே பாவி அல்ல:

அதுபோலவே விழித்துகொண்டிருப்பவன் தன்னை கர்த்தா என்று நினைக்கிறான். இந்த பாவனையும் கனவு உதாரணத்தில் பார்த்ததுபோல பொய்யானது; தன்மீது ஏற்றிவைத்துக் கொள்ளப்பட்ட ஒன்று. இந்த பொய்த்தன்மையை அவ்விதமே பார்த்தல் ஞானம் எனப்படும். இந்த ஞானமானது பொய்யான கர்த்தாவினால் செய்யப்பட்ட செயல்களிலிருந்து உருவான எல்லாவித பாபத்திலிருந்தும் ஒருவனை விடுவிக்கின்றது. கர்த்தாவாக இல்லாத காரணத்தினால், உண்மையில் ஆத்மா என்றுமே பாவி அல்ல. சுத்த சொரூபம். எதையும் சாராத பிரக்ஞை சொரூபம். இந்த பாரமார்த்திக சத்தியத்திற்கு விழித்தவுடன் அவன் தன்மீது ஏற்றிவைத்துக் கொண்டிருந்த எல்லா பாபங்களிலிருந்து விடுபடுகிறான்.


=> ஞானம் எவ்விதம் பாபங்களைக் கடக்க வைக்கிறது?

* ஞானமானது, ‘நீ அகர்த்தா; எந்தச் செயலையும் செய்யாதவன்என்ற அறிவைக் கொடுக்கிறது. இதனால்நான் செய்கிறேன்எனக் கூறும் அஹங்காரத்தைப் பார்ப்பவனாகவும், சாக்ஷியாகவும் உள்ளேன் என்பது புரிகிறது. செய்தவனே அதன் பலனை அனுபவிக்கிறான் என்பதால் அந்த அஹங்காரம்தான் பலனை அனுபவிக்கின்றது; நான் அல்ல. நான் சாக்ஷி.

* ‘நான்அஹங்காரத்திற்கும் அப்பாற்பட்டவன்; அதற்கு சாக்ஷியாக இருக்கின்றேன் என்கிற புரிதலால், அந்த அஹங்காரம் இல்லாமல் போய்விடுகிறது அல்லது அந்த அஹங்காரத்தில்நான்எனும் பாவனை இல்லாமல் போகிறது

* ஒரு ஞானியானவன், பிரிக்க முடியாததைப் பிரிக்கிறான். பிரிப்பதிலேயே கடினமாக இருப்பது ஆத்மாவையும், அஹங்காரத்தையும் பிரிப்பதாகும். ஏனெனில் கலந்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒன்றை பிரிப்பது மிகக் கடினம். பிரித்துவிட்டால் மோக்ஷம்.

* அஹங்காரம் விடப்பட்டதால், நான் கர்த்தாவாக இல்லாத காரணத்தினால் கர்மவினை என்னைத் தொடுவதில்லை. உதாரணமாக, கனவில் செய்த பாபமோ புண்ணியமோ விழித்தபின் வருகிறதா? எனில், இல்லை. கனவில் எவ்வளவு பாபம் செய்திருந்தாலும் அந்த கர்த்தா விழித்தபின், விழித்ததினாலேயே அவன் பாபத்தை, கனவுலகின் கர்மவினையை கடந்தவனாகிறான்.

-------------------------------------------------------------------------------------------------------------------

||4.37|| ஞான பலன் - கர்ம நாசம் மற்றும் கர்ம பல நாசம்:

यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात्कुरुतेऽर्जुन  

ज्ञानाग्नि: सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा ।। ३७ ।।

யதை2தா4ம்ஸி ஸமித்3தோ4ऽக்3நிர்ப4ஸ்மஸாத்குருதேऽர்ஜுந

ஜ்ஞாநாக்3நி: ஸர்வகர்மாணி 4ஸ்மஸாத்குருதே ததா2 ।। 37 ।।


अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா   यथा  யதா2  எவ்விதம்  समिद्ध: अग्नि: ஸமித்34: அக்3நி:  சுடர்விட்டெரியும் தீயானது   एधांसि ஏதா4ம்ஸி   விறகுகளை   भस्मसात् कुरुते   4ஸ்மஸாத் குருதே  சாம்பலாக்குகிறதோ   

तथा   ததா2   அவ்விதமே  ज्ञानाग्नि:   ஜ்ஞாநாக்3நி:  ஞானம் எனும் நெருப்பானது   सर्वकर्माणि  ஸர்வகர்மாணி   எல்லாக் கர்மங்களையும்   भस्मसात् कुरुते  4ஸ்மஸாத் குருதே  சாம்பலாக்குகிறது.


அர்ஜுனா, சுடர்விட்டெரியும் தீயானது விறகுகளைச் சாம்பலாக்குவதுபோல, ஞானம் எனும் நெருப்பு கர்மங்களையெல்லாம் சாம்பலாக்குகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா, ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.


விளக்கம்:

நன்கு சுடர்விட்டெரியும் நெருப்பானது, விறகுகட்டைகளைப் பொசுக்கி சாம்பலாக்குகிறது 4ஸ்மஸாத் குருதே. இவ்விதமே ஞானம் எனும் நெருப்பானது(ஜ்ஞாநாக்3நி:) அனைத்து கர்மங்களையும் அதன் கர்ம-பலனோடு சேர்த்து எரித்து விடுவதாக கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார். இங்கு எரித்தல் என்பதை தீ மரத்தை எரிப்பதைப்போல கர்மங்கள் எரிக்கப்படுவதாக நேரடியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஞானமானதுகர்த்தாஎனும் பாவனையை நீக்கி ஒருவனை கர்மம் மற்றும் அதனுடைய விளைவுகளிலிருந்து விடுவிக்கிறது என்பதையே அது குறிக்கிறது.


=> மூன்று வித கர்மங்கள்:

1. சஞ்சித கர்மம்: சிதம் - சேர்த்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஜீவனும் கர்ம மூட்டையோடு இருக்கிறான். எண்ணற்ற ஜென்மங்களில் அஹங்காரத்தினால் ஏற்கனவே சேர்த்து வைக்கப்பட்ட கர்மத்திற்கு சஞ்சித கர்மம் என்று பெயர்.

2. பிராரப்த கர்மம் - சஞ்சிதத்திலிருந்து வெளிப்படும் ஒரு சிறு பகுதி பிராரப்தம். சஞ்சிதத்தில் சேர்ந்த அனைத்து பாவ புண்ணியங்களையும் ஒரே உடலில் தீர்க்க முடியாது. ஆகவே ஒரு குறிப்பிட்ட சுக துக்கத்தை தீர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட உடல் கொடுக்கப்படுகிறது. இவ்விதத்தில் ஒரு குறிப்பிட்ட பிராரப்த கர்மத்தை தீர்க்க ஜீவனுக்கு உடல் கொடுக்கப்படுகிறது. நம் முயற்சிக்கு அப்பாற்பட்டதான விஷயங்கள் இதன் மூலமே கிடைக்கின்றன. உதாரணமாக பெற்றோர்கள், உடலமைப்பு, ஆண்-பெண், ஆயுட்காலம் போன்றவைகள்.

3. ஆகாமி கர்மம்: ஆகாமி கர்மம் எனில் எதிர்கால கர்ம எனப்படும். பிராரப்த கர்மத்தை தீர்க்க கொடுக்கப்பட்ட உடலினால் புதிதாக செய்யப்படும் கர்மம் ஆகாமி. கடைசியில் ஆகாமி, சஞ்சித கர்மத்தோடு சேர்ந்து கொள்கிறது. 


=>ஞானியின் நிலை:

ஞானத்திற்குப் பிறகு மேற்கூரிய எல்லா கர்மங்களும் அழிந்துவிடுகின்றன. கர்ம-பலனை தீர்க்க கொடுக்கப்பட்ட உடல்தான் கர்மத்தை அனுபவிக்கிறது. கர்த்தாவிற்குத் தான் கர்மம். ‘நான் கர்த்தா அல்லஎனப் புரிந்து கொண்டதால் ஆகாமி கர்மம் நாசமடைகிறது. அதாவது ஞானி கர்மத்தில் ஈடுபட்ட போதிலும் கர்த்ருதுவம் இல்லாததால் கர்ம-பலன் வருவதில்லை.

கர்மம் அஹங்காரத்தை சார்ந்தே உள்ளது. ஞானி அறிவினால் அஹங்காரத்திலிருந்து தன்னைப் பிரிப்பதால், அஹங்காரம் அழிந்து விடுகிறது. இதனால் அக்கர்மத்திற்கு சார்ந்து இருப்பதற்கு இடமில்லாமல் போவதால் சஞ்சித கர்மம் நாசமடைகிறது

ஆனால் பிராரப்தம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதால் அதை ஞானி தடுப்பதில்லை. அனுபவித்து தீர்க்கிறான்; அதாவது சரீரம் அனுபவித்து தீர்க்கிறது. உயிரோடிருப்பது என்பது உண்மையில் சம்சாரமல்ல. அதிலுள்ள அபூர்ணத்துவம்தான் சம்சாரம். பிராரப்தம் சம்சாரத்தை கொடுப்பதில்லை; அது சூழ்நிலைகளைத் தான் கொடுக்கிறது. ஆகவே வருகின்ற சூழ்நிலையை ஒருவன் எப்படி எடுத்துக் கொள்கிறான் என்பது பிராரப்தம் அல்ல. உதாரணமாக நெருங்கிய ஒருவரின் மரணத்தை குறித்து ஒருவன் மூன்று நாள் வருத்தப்படலாம் அல்லது மூன்று வருடமும் வருத்தப்படலாம்; ஒரு துக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வதென்பது அவரவர்களின் கையில் உள்ளது

உண்மையில் ஞானத்திற்கு பின், ஞானிக்கு பிராரப்தமும் இல்லாமல்தான் போகிறது. பிறகு ஏன் மூச்சு விடுகிறார் (உயிரோடிருக்கிறார்) எனும் கேள்விக்கு பதிலாகவே, ‘இந்த பிராரப்தம் தொடர்கிறதுஎன்று சொல்லப்படுவதாக சங்கரர் தனது பாஷ்யத்தில் கூறுகிறார். தீயினால் வறுபட்ட விதை மரமாகும் தன்மையை இழப்பதைப் போல பிராரப்தமும் அதனுடைய சக்தியை இழக்கிறது என சங்கரர் விளக்குகிறார். ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை நிறுத்திய பிறகும் சிறிது நேரம் அது மெதுவாக சுற்றிவிட்டுத்தான் ஓய்வு நிலைக்கு வருவதைப் போல, உடல் பிறப்புடன் ஏற்கனவே பலனளிக்கத் தொடங்கிவிட்ட பிராரப்தம் அதை முடித்தபின்னரே ஓய்வை அடைகிறது.

சாந்தோக்ய உபநிஷத், ‘ஒரு ஞானி இந்த உடலிலிருந்து விடுவிக்கப்படும் வரை இங்கேயே இருக்கிறார். பின்னர் அவர் ப்ரம்மனுடன் ஒன்றாகி விடுகிறார்என கூறுகிறது

तस्य तावदेव चिरं विमोक्ष्येऽथ संपत्स्य इति

தஸ்ய தாவதே3 சிரம் விமோக்ஷ்யேऽத2 சம்பத்ஸ்ய இதி

(சாந்தோக்ய உபநிஷத் 4.1.4)

உடல், மனம் மற்றும் உணர்வுகள் தொடரும் வரை அவர் ஜீவன்-முக்தனாக வாழ்கிறார். உடல் மரணமடையும்போது மறுபிறப்பை ஏற்படுத்த எந்த கர்மவினையும் எஞ்சியில்லாததால் அவர் விதேஹ முக்தியை, பிறப்பற்ற தன்மையை அடைகிறார். தோன்றிக் கொண்டிருந்த ஜீவன் - உலகம் - ஈஷ்வரன் ஆகிய பேதங்கள் மறைகின்றன.

-----------------------------------------------------------------------------------------