ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.6

||4.6|| தான் பிறவி எடுப்பது எப்படி என பகவான் கூறுகிறார்:

अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन्  

प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया ।। ।। 

அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூ4தாநாமீஸ்2வரோऽபி ஸந்

ப்ரக்ருதிம் ஸ்வாமதி4ஷ்டா2 ஸம்ப4வாம்யாத்மமாயயா ।। 6 ।।


अज: अपि सन्   அஜ: அபி சந்  பிறப்பு அற்றவனாய் இருப்பினும்   

अव्ययात्मा(सन्)   அவ்யயாத்மா(சந்)  அழியாத ஞான சொரூபமாக இருப்பினும்    

भूतानाम्   பூ4தாநாம்  உயிர்களுக்கு   इश्वर: अपि सन्    ஈச்1வர: அபி சந்  தலைவனாக இருப்பினும்   

स्वाम् प्रकृतिं   ஸ்வாம் ப்ரக்ருதிம்  என்னுடைய மாயையை   अधिष्ठाय  அதி4ஷ்டா2   வசப்படுத்திக்கொண்டு    अात्ममायया  ஆத்மமாயயா   என் மாயையினால்    सम्भवामि   ஸம்ப4வாமி   அவதரிக்கிறேன்.


நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், உயிர்களுக்கெல்லாம் ஈசன் எனினும் என் பிரகிருதியை வசப்படுத்தி ஆத்ம மாயையினால் அவதரிக்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.


விளக்கம்:

=> பிறப்பு:

பிறப்பின் இலக்கணம் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.

(i) சூக்ஷம சரீரஸ்ய ஸ்தூல சரீர க்ரஹணம் [सूक्ष्म शरीरस्य स्थूल शरीर ग्रहणम्]:

    நுண்ணிய உடலான மனம் வேறொரு ஸ்தூல உடலை எடுத்தல் பிறத்தல் எனப்படும்

எனக்கு பிறப்பு இல்லை(அஜ:). நான் நுண்ணிய உடலைக் கொண்ட ஜீவாத்மா அல்ல. நான் அனைத்து பூதங்களுக்கும், உயிர்களுக்கும் மற்றும் பிரகிருதிக்கும் தலைவனாக ஈஷ்வரனாக இருப்பவன். இப்படிப்பட்ட நான் எப்படி பிறக்க முடியும்?’ என்கிறார் பகவான்.

(ii) சேதனஸ்ய அசேதன ஸம்யோக: ஸம்பந்த: [चेतनस्य अचेतन संयोग: सम्बन्ध: ]:

    அறிவுடைய ஒன்றிற்கு ஜடமான ஒன்றுடன் ஏற்படும் சம்பந்தம் பிறத்தல் எனப்படும். அதாவது அறிவு சொரூபமான ஆத்மா, சூக்ஷம உடலுடன் சேர்ந்து ஸ்தூல உடலை பற்றிக் கொள்வது பிறப்பு

நான் ஞான சொரூபமாகவே இருக்கிறேன். எதனோடும் என்னை சம்பந்திப்படுத்திக் கொண்டு பிறக்க வேண்டிய அவசியமில்லைஎன்கிறார். அவ்யயாத்மா - அக்ஷீண ஞானசக்தி சுபாவ: [अक्षीण ज्ञानशक्ति स्वभाव:] —> ஞானசக்தி நாசப்படுத்தப்படவில்லை

எனில் என்னுடைய பிறப்பு எப்படிப்பட்டது?’ என இரண்டாவது வரியில் விளக்குகிறார்


=> பிரகிருதி எனும் மாயை:

பிரகிருதி என்றும் அவித்யை என்றும் அழைக்கப்படும் மாயைக்கு இரண்டு சக்திகள் உண்டு

1 . விக்ஷேப சக்தி; தோற்றுவிக்கும் சக்தி

2. ஆவரண சக்தி; மறைக்கும் சக்தி.

உதாரணமாக மங்கிய வெளிச்சத்தில் கயிறு பாம்பாகத் தெரிவதை எடுத்துக் கொள்வோம். இதில் இருக்கின்ற கயிறு மறைக்கப்பட்டு, இல்லாத பாம்பு தோற்றுவிக்கப்படுகிறது. அதுபோல, மாயையானது ஜீவனிடத்தில் ஆத்மாவை மறைத்து(ஆவரணம்) இருமையைத் தோற்றுவிக்கிறது(விக்ஷேபம்). ஆனால் பகவானைச் சார்ந்திருக்கும் மாயையானது, அவரிடமும் இருந்தபோதிலும் அது அவருடைய சொரூபத்தை மறைக்காமல் விக்ஷேப சக்தியாக மட்டும் வெளிப்படுகிறது. இதனால் பிறப்பற்றவன் என்ற சுய சொரூபம் மறைக்கப்படாமல், பிறப்பவனாகவும் வளர்பவனாகவும் செயல் செய்பவனாகவும் காட்டிக் கொள்ள முடிகிறது. இதனால் ஜீவர்களை பந்தத்திற்குள்ளாக்கும் சக்தியான மாயை, ஈஷ்வரனுக்கு ஆபரணமாக உள்ளது


=> இந்த சுலோகத்திற்கான விளக்கம்:

இந்தச் சுலோகத்திலிருந்து கிருஷ்ணரின் பிறப்பு உண்மையில் விசித்திரமான பிறப்பு என்பதை நாம் காண்கிறோம். பிறப்பற்றராக(அஜ:) இருப்பதால், அவர் இருப்பதைப் போல இருக்கிறார் எனலாம். அவர் தனக்கு அறியும் சக்தி குறைந்து போவதோ, வீழ்ச்சியடைவதோ கிடையாது - ‘அவ்யயாத்மாஎன்கிறார்; அதாவது அறியாமை அல்லது மாயை இல்லாத நிலையிலிருப்பவன் என இங்கு தன்னைத் தானே விவரிக்கிறார். மேலும் அவர் அனைத்து உயிர்களின் தலைவனாகவும்(ஈச்1வர: அபி) அவைகளின் இன்பத்திற்காக முழு படைப்பையும் உருவாக்கி, நியதிகளையும் அதற்கான விளைவுகளையும் அறிமுகப்படுத்தியவராகவும் இருப்பதால் இவைகளினால் கட்டுப்படாதவர். எல்லா செயல்களின் பலனையும் தருபவர், கர்ம-பல-தா3தா(कर्म फल दाता). 

நுண்ணிய உலகம்(சூக்ஷம பிரபஞ்சம்), ஸ்தூல உலகம் (ஸ்தூல பிரபஞ்சம்) ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய முழு படைப்பிற்கும் ஈஷ்வரனே காரணம். அவரிடமிருந்து பிரிக்கப்படாததாய், அவரைச் சார்ந்திருக்கும் மாயை எனும் பிரகிருதியானது இந்த படைப்பிற்கான பொருள் காரணியாகிறது(உபாதான காரணம்). அவரது இந்த மாயா சக்தியை கட்டுபடுத்தி, இந்த படைப்பின் வடிவத்தில்இருப்பது போல்வருகிறார். ஈஷ்வரனாக கிருஷ்ணர் மாயையின் ஒருபுறத்திலும், ஜீவனாக அர்ஜுனன் மறுபுறத்திலும் இருப்பதால், அர்ஜுனனால் தனது சுய சொரூபத்தைப் பார்க்க முடியவில்லை. உதாரணமாக தன் முன்னேயுள்ள பார்வையாளர்களுக்கு தனது தந்திரத்தை காட்டும் மந்திரவாதி, ஒருபோதும் தனது மந்திரத்தின் வசியத்தில் சிக்கிக் கொள்வதில்லை. அதேபோல மாயையைக்கொண்டு இவ்வுலகெனும் படைப்பை தோற்றுவிக்கும் ஈஷ்வரன் அதில் சிக்கிக் கொள்ளாமல், அதை தன் கட்டுக்குள் வைக்கிறார். ஆனால் மாயைக்குள் இருக்கும் ஜீவனால் அது இயலாது. இந்த மாயையின் அறியாமை எனும் வசியத்தில் சிக்கியதால் அவன் தனது சுயத்தை, ஆத்மாவை, கிருஷ்ணரை, ஈஷ்வரனைப் பார்ப்பதில்லை.  

இதன்மூலமாக கூறப்படும் கருத்து யாதெனில், ஜீவனுக்கு அவனது உண்மையான சொரூபம் தெரியாது. இது அவித்யா, அறியாமை எனப்படும். ஆனால் ஆத்மமாயயா ஸம்ப4வாமி - என்னுடைய மாயையினால் நான் தோன்றுகிறேன் என்கிறார் கிருஷ்ணர். ஸம் - பிறக்காமல்(பந்தப்படாமல்); 4வாமி - பிறக்கின்றேன்

என்னுடைய தோற்றம் கர்மவினையினால் வந்தது அல்ல. நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன். என் மாயையை எனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, நான் உடலைக் கொண்டவன் போல ஆகிவிடுகிறேன்என்கிறார் பகவான் - இதுவே அவதாரத்தின் வரையறை.

அவதாரம் என்பது கீழே இறங்கி வருதல் அதாவது ஓர் உடல் எடுத்தல் என சென்ற சுலோகத்தில் பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட தேவைக்காக மட்டும் அந்த குறிப்பிட்ட உடல் எடுக்கப்படுகிறது. அப்போது ஈஷ்வரன்ஒரு உடலைக் கொண்டிருப்பதைப் போலஆகிறார். இங்குபோலஎன்பதன் அர்த்தம், அவர் அந்த உடலில் தொலைந்து போவதில்லை என்பதும், தன்னை உடலாக எடுத்துக் கொள்வதில்லை என்பதும் ஆகும். இவ்விதமே ஜீவன்முக்தனும் தனது சுயத்தின் மெய்பொருளை அறிந்தவனாகையால் அவனும்ஒரு உடலைக் கொண்டிருப்பதைப் போலஎன்பதாகவே தன்னைப் பார்க்கிறான். வேறு விதத்தில் கூறுவதானால் ஜீவன்முக்தனும் தன்னை உடலாக எடுத்துக் கொள்வதில்லை


=> ஈஷ்வரன் அவதாரமாக உடலை எடுக்கக் காரணமென்ன?

ஒவ்வொரு அவதாரத்திற்கு முன்பும் நற்குணம் கொண்ட மனிதர்கள் மற்றும் தேவர்களிடமிருந்து பிரார்த்தனை வடிவில் ஒரு கூட்டு வேண்டுகோளானது இறைவனிடம் சமர்பிக்கபடுவதாகப் புராணங்களில் கூறப்படுகிறது. ‘இறைவா! இவர்களின் கொடுங்கோன்மை தாள இயலாத வண்ணம் அதிகரித்து விட்டது. இது குறித்து ஏதேனும் செய்து எங்களைக் காப்பாற்றுங்கள்! தயவு செய்து வாருங்கள்! இந்த நிலைமைக்கு தீர்வு காணுங்கள்!’ இவ்வித பிரார்த்தனைகளே புண்ணியங்களாக மாறுகிறது. இது இறைவன் தன்னை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான பொருள் காரணியாக(உபாதான காரணமாக) ஆவதால் அவர் ஓர் உடலை எடுத்துக் கொள்கிறார். இதுவே அவதாரம் என்பதன் பொருள். அவதார வருகையின் நோக்கம் வாமண-அவதாரம், நரசிம்ம-அவதாரத்தை போல ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்காக இருக்கலாம் அல்லது ராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரம் போல பலவற்றைச் செய்வதாக இருக்கலாம். ராமர் மற்றும் கிருஷ்ணர் போன்றோர் அவதார நோக்கத்தோடு கூடுதலாக மக்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக விளங்கினர். எல்லா துன்பங்களையும் எதிர்கொண்டு ஒருவர் எவ்வாறு தர்ம வாழ்க்கையை வாழ முடியும் என்பதை ராமரும், மகிழ்ச்சி மற்றும் ஞானத்தின் உருவகமாக கிருஷ்ணரும் இருந்தனர்


=> மூன்று விதமான மெய்மைகளுக்கிடையேயான சம்பந்தம்:

(1) முழுமையான மெய்மை (யதார்த்தம்) - பாரமார்திக சத்யம்  - पारमार्थिक सत्यम् 

(2) அனுபவ மெய்மை - வ்யாவஹாரிக சத்யம் - व्यावहारिक सत्यम्

(3) அகநிலை மெய்மை - ப்ராதிபாசிக சத்யம் - प्रातिभासिक सत्यम्

அனுபவத்தில் நம்மால் பார்த்து உணரப்படும் இந்த முழு படைப்பும் ஈஷ்வர சிருஷ்டி, அதாவது இறைவனின் படைப்பு என்றும், தனியொருவனுடைய மனதில் உருபெறும் தோற்றங்களும் உலகமும் ஜீவ சிருஷ்டி, அதாவது அகநிலை படைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. முந்தயது வ்யாவஹாரிக சத்தியத்தையும் பிந்தையது ப்ராதிபாசிக சத்தியத்தையும் குறிக்கிறது. எல்லா நேரங்களிலும் இவ்விரு மெய்மையையும் நாம் சத்யம்-ஞானம்-அனந்தம் பிரம்ம என்ற ஒரு முழுமையான மெய்மையை, பாரமார்திக சத்யத்தைச் சார்ந்தே எதிர்கொள்கிறோம். அதாவது பாரமார்த்திகத்தை ஆதாரமாகக் கொண்டே வியாவஹாரிகமும் பிராதிபாசிகமும் விளங்கிக் கொண்டுள்ளது.

மெய்மையைக் குறித்த இந்த புரிதலோடு சுலோகத்தை ஆராய்ந்தால், கிருஷ்ணர் தன்னை பிறப்பற்றவர் என கூறுவதிலிருந்து அவர் அங்கு முழுமையான மெய்மையை, அதாவது பாரமார்திகத்தைக் குறிக்கிறார். உண்மையில் பாரமார்திகத்தின் அடிப்படையில் எவருமே பிறப்பதில்லை. ஆனால் இன்று அர்ஜுனனுக்கு உபதேசம் செய்துகொண்டிருக்கின்ற இந்த கிருஷ்ணர் பாரமார்த்திகமா? எனில் கண்டிப்பாக இல்லை; ஏனெனில் அவருடைய உடல் பாரமார்த்திகம் அல்ல. நிச்சயமாக அவரின் உடல் அனுபவபூர்வமாக வியவஹாரத்தில் இருப்பது, ஆகவே வியாவஹாரிகம். ஆனால் அவரது பிறப்பு அனுபவ மெய்மையாகக் கருதப்பட வேண்டுமெனில் அவர் கர்மவினையினால் பிறந்து புண்ணிய-பாபம், தர்ம-அதர்மம் மற்றும் கர்த்தா-போக்தா என்கிற இருமையில் கட்டுண்டவராக, சம்சாரியாக இருக்க வேண்டும். உதாரணமாக அர்ஜுனன் எனும் தனிநபர், ஜீவனாக கர்மவினையினால் பிறந்தவனாகையால் அவனது பிறப்பு அனுபவ ரீதியாக உண்மையானதுஅவனது பெற்றோர், உடல், மனம் மற்றும் புலன்கள் அனுபவ ரீதியான யதார்த்தத்தைக் கொண்டுள்ளன. ஒரு ராஜ்ஜியத்தின் இளவரசனாக பிறந்தபோதிலும் கர்மவினையின் காரணமாக பதிமூன்று வருடங்கள் நாடுகடத்தப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான். ஆனால் கிருஷ்ணரோ மாயையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பிறக்கிறேன் என்கிறார். எனில் அவருடைய பிறப்பு மூன்றில் எந்த வகையான மெய்மையைச் சார்ந்தது?


 => கிருஷ்ணாவதாரத்தின் மெய்மை:

ஒவ்வொரு பிறந்த உடலும் நமது பார்த்தல் எனும் அனுபவத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. ஆனால் பார்த்து அனுபவிப்பது அனைத்தும் எப்போதும் முற்றிலும் உண்மையென ஆகிவிடாது - உதாரணமாக நீல வானம் அல்லது மந்திரவாதியின் வித்தைகள். ஆகவே அனுபவத்தால் உணர்வதிலிருந்து மட்டுமே கிருஷ்ணரின் பிறப்பை வியாவஹாரிகம் எனக் கூறிவிட முடியாது. உடலுடன் விளங்கிக் கொண்டிருக்கும் காரணத்தினால் பாரமார்த்திகமும் அல்ல. எனில் அவரின் பிறப்பை மெய்மையின் அடிப்படையில் நாம் எவ்வாறு விளக்குவது? கிருஷ்ணரின் பிறப்பு கர்மவினையினால் ஏற்பட்டது அல்ல என்பது தெளிவாகத் தெரிவதால், அவரது பிறப்பு பிராதிபாசிக சத்தியத்தை சார்ந்தது - நீங்கள் அவரைப் பார்க்கிறீர்கள், ஆகையால் அவர் இருக்கிறார். இங்கு பிராதிபாசிகம் என்பது எல்லோராலும் பார்க்கப்பட்ட ஒரு கிருஷ்ணர் இருந்தார், ஆனால் அவரது பிறப்பும் உடலும் முற்றிலும் மாயை என்பது பொருள். மற்ற உடலைப் போல பிறந்திருந்த போதிலும் கர்ம நியதிக்குள் சிக்காதவர்; ஜீவ வரையறைக்குள் வராதவர். ஒரு குறிப்பிட்ட தேவை காரணமாக மட்டுமே அவர் ஒரு குறிப்பிட்ட உடலை ஏற்றுக் கொள்கிறார்

கிருஷ்ணரை இறைவனாக வணங்குவதற்கு அவதாரம் என்ற கோட்பாடு தேவையில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். கிருஷ்ணரை இறைவனாக வரித்துக் கொள்ள அவரின் படம் ஒன்றே போதுமானது. உண்மையில், எதிலும் ஏன் ஒரு பாறையிலும் கூட இறைவனை வரித்துக் கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இறைவனை வரிப்பதும் அவதாரமும் கருத்தளவில் முற்றிலும் வேறுபட்டது. இந்தச் சுலோகம் அவதாரம் எனும் கருத்தை குறிப்பிடுவதால் அதை இங்கு விவாதிக்கிறோம் அவ்வளவே.

----------------------------------------------------------------------------------------------------------------------------