திங்கள், 9 ஆகஸ்ட், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.1 - 4.3

                                           நான்காம் அத்தியாயம்

ஞானகர்மஸந்யாஸ யோகம் [ज्ञानकर्मसंन्यासयोग:]  

(ஞானத்தினால் கர்மத்தை விட்டுவிடுதல்)


||4.1|| ஞானகுரு சிஷ்ய பரம்பரை:

श्रीभगवानुवाच

इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम्  

विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत् ।। ।। 

ஸ்ரீப43வாநுவாச

இமம் விவஸ்வதே யோக3ம் ப்ரோக்தவாநஹமவ்யயம்

விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்3ரவீத் ।। 1 ।।


श्रीभगवान्   ஸ்ரீப43வான்  ஶ்ரீ பகவான்    उवाच   உவாச  சொன்னது

अहम्  அஹம்   நான்   विवस्वते  விவஸ்வதே  விவஸ்வானுக்கு/சூரிய தேவனுக்கு    इमं   இமம்   இந்த   

अव्ययम्   அவ்யயம்   அழியாத    योगं  யோக3ம்   யோகத்தை    प्रोक्तवान्   ப்ரோக்தவாந்   பகர்ந்தேன்    

विवस्वान्     விவஸ்வாந்   விவஸ்வான்    मनवे   மநவே   மனுவுக்கு   प्राह  ப்ராஹ   மொழிந்தான்   

मनु:   மநு:   மனுவானவன்   इक्ष्वाकवे   இக்ஷ்வாகவே  இக்ஷ்வாகுவுக்கு  अब्रवीत्   அப்3ரவீத்   உரைத்தான்.


ஶ்ரீ பகவான் சொன்னதுஅழிவற்ற இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்குப் பகர்ந்தேன். விவஸ்வான் மனுவுக்கு மொழிந்தான். மனு இக்ஷ்வாகுவுக்கு உரைத்தான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.


விளக்கம்:

=> கர்மயோகத்தின் தோற்றம்:

நான்காவது அத்யாயத்தின் முதல் மூன்று சுலோகங்களில் பகவான் கர்மயோகம் என்பது புதிதான ஒன்றல்ல, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருப்பது என்பதை அர்ஜுனனுக்கு சுட்டிக்காட்டுகிறார்

தனியொருவன் சந்யாசத்தை பின்பற்ற, முதிர்ந்த மற்றும் ஆழ்ந்து சிந்திக்க ஏதுவான மனநிலை தேவை. அத்தகுதியை அடையும் பொருட்டு மேற்கொள்ளப்படும் வாழ்க்கைமுறையை கர்மயோகம் என்கிறோம்

தனது இயல்பான சொரூபத்தை செயலிலிருந்து விடுபட்டதாகவும், படைப்பின் மையமாகவும், எல்லாவற்றின் யதார்த்தமாகவும் அங்கீகரிக்கும் ஒருவனாலேயே மோக்ஷத்தை கொடுக்கும் சுய-அறிவை பெறமுடியும். இந்த புரிதல் ஏற்பட சந்யாச வாழ்க்கைமுறையோ அல்லது கர்மயோக வாழ்க்கைமுறையோ துணைபுரிகிறது. கர்மயோகம் என்பது சரியான பாவனையுடன் செயல்களில் ஈடுபடுவது - ப்ரவ்ருத்தி லக்ஷண: யோக:(प्रवृत्ति लक्षण: योग:). சந்யாசம் அல்லது ஞானயோகம் என்பது அனைத்துச் செயலையும் துறத்தல் - நிவ்ருத்தி லக்ஷண: சந்யாஸ: (निवृत्ति लक्षण: संन्यास:). ஆகையினால் சந்யாசிகளுக்கு நிவ்ருத்தி-லக்ஷண-ஞான-யோகமும், மற்ற அனைவருக்கும் ப்ரவ்ருத்தி-லக்ஷண-கர்ம-யோகமும் கூறப்பட்டது. கீதை முழுதும் இவ்விரு யோகத்தையும் விரித்து கூறுவதாகவே உள்ளது. உண்மையில் கிருஷ்ணர் ஏற்கனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் அத்தியாயத்தில் தனது உபதேசத்தை முடித்திருந்தார். கற்பிக்க வேண்டிய அனைத்தையும் முடித்துவிட்டதை உணர்ந்த காரணத்தினாலேயே அவர் இப்போது இந்த யோகத்தை அர்ஜுனனிடம் புகழ்ந்து பேசுகிறார். இதுவரை உபதேசிக்கப்பட்ட இந்த யோகம் மிகவும் பழமையானது எனவும், ஆதியில் வேதத்தின் வாயிலாக அவரே ஈஷ்வரனாக இதை அறிமுகப்படுத்தியதாகவும் கிருஷ்ணபகவான் கூறுகிறார்


=> குருவிடமிருந்து சிஷ்யனுக்கு செல்லும் சம்பிரதாயம்:

ஒரு தலைமுறையிலிருந்து இனியொரு தலைமுறைக்கான கீழ்நோக்கிச் செல்லும் ஓட்டம் சம்பிரதாயம் என்று அழைக்கப்படும். இந்த போதனையானது அதன் மகத்துவம் தெரிந்த ஒருவரால் கையாளப்பட வேண்டுமாதலால் இங்கு சம்பிரதாயம் அல்லது குரு பரம்பரை முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆகவே எப்போதும் உரையின் தொடக்கத்தில் அல்லது முடிவில் பரம்பரையை அறிமுகப்படுத்துவது வழக்கம்


=> யோகத்தின் மஹிமை:

இந்த யோகத்தை பற்றிய ஞானம், ஈஷ்வரனாகிய தன்னால் ஆதியில் விவஸ்வானுக்கு கொடுக்கப்பட்டது(அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந்) என கிருஷ்ணபகவான் அர்ஜுனனிடம் உரைக்கிறார். விவஸ்வான் என்பது சூரியனின் பெயர். ஸ்மிருதியை இயற்றியவரும்  தனது மகனுமாகிய மனுவுக்கு சூரிய தேவன் இந்த ஞானத்தை மொழிந்தார். மனு தனது புதல்வனும் சூரியகுலத்து முதல் அரசனுமாகிய இக்ஷ்வாகுவுக்கு முக்திக்கு ஏதுவாயுள்ள இந்த யோகத்தைப் புகட்டினார். இக்ஷ்வாகு:  ஆதிவேந்தன்; க்ஷத்திரியன். தர்மத்தைக் காக்கும் பொறுப்பு க்ஷத்திரியர்களுக்கு கடமையாக இருப்பதால் இந்த ஞானம் அவர்களுக்கு முதலில் கொடுக்கப்பட்டது

இந்த அறிவானது கொடுக்கப்பட்ட புத்தியினால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல அல்லது வெறும் ஊகமும் அல்ல. இது படைப்புடன் சேர்ந்து ஈஷ்வரனிடமிருந்து வந்த அறிவு. ஆகவேதான் வேதம், மனிதனிடமிருந்து தோன்றியது அல்ல என்ற பொருளில் அபெளருஷேயம்(अपौरुषेय) என கூறப்படுகிறது என்பதை சுலோகம் 3.15-ன் விசாரத்தில் ஏற்கனவே பார்த்துள்ளோம்.  


=> சுய-அறிவு என்றும் நீங்காதது:

அழியாத வீடுபேறாகிய மோக்ஷம் பலனாகக் கிடைப்பதாலும், மேலும் அழியாத வேதத்தை இது மூலமாகக் கொண்டதாலும் இந்த யோகம் எனும் சாதனமே அழிவற்றது(அவ்யயம்) என பகவானால் புகழப்படுகிறது. மோக்ஷம் என்பது ஆத்மாவுடன் ஒத்ததாக இருப்பதால் அது எப்பொழுதும் விலகிப்போகாத ஒரே விஷயமாக நித்தியமானதாக இருக்கிறது. பெற்ற மோக்ஷம் என்றென்றும் பெறப்பட்டதாகிறது.

சங்கரர் இந்த சுலோகத்திற்கான தனது பாஷ்யத்தில், இந்த யோகத்தின் பலனாக, தெளிவான ஆத்ம தரிசணத்தின் வடிவில்(ஸம்யக் தர்ஷண நிஷ்டா) கிடைக்கும் இந்த முக்தியானது, தேய்வற்றது மரணமற்றது என்கிறார். ஆத்மாவின் தன்மையை, பலனிற்கும் அளிக்கிறார். ஒருமுறை பெறப்பட்ட இந்த ஞானமானது பெறப்பட்டுவிட்டது. இந்த மோக்ஷம், நிர்விகல்ப-சமாதியின் அனுபவத்தைப் போல மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வரும் ஒன்றல்ல. ஏனெனில் இந்த ஞானத்தினால், ‘வரையறுக்கப்பட்ட தனியொருவன் ஜீவாத்மாஎன்ற கருத்து அழிக்கப்படுகிறது. ஆகவே ஒருமுறை பெற்ற அறிவு, திரும்புதல் என்ற நிலை இல்லாததால் இதுஅவ்யயம்என அழைக்கப்படுகிறது.   

---------------------------------------------------------------------------------------------------------------------

||4.2|| முதல் சுலோகத்தின் தொடர்ச்சி:

एवं परम्पराप्राप्तमिमं राजर्षयो विदु:

कालेनेह महता योगो नष्ट: परन्तप ।। ।। 

ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது3:

காலேநேஹ மஹதா யோகோ3 நஷ்ட: பரந்தப ।। 2 ।।


परन्तप   பரந்தப   எதிரிகளை வாட்டுபவனே   एवं   ஏவம்  இவ்விதத்தில்  

परम्पराप्राप्तम्   பரம்பராப்ராப்தம்  பரம்பரையாக வந்த   इमं  இமம்  இந்த யோகத்தை   

राजर्षय:  ராஜர்ஷய:   ராஜரிஷிகள்   विदु:   விது3:  அறிந்திருந்தார்கள்   इह  இஹ  இவ்வுலகில்   

: योग:   : யோக3:   அந்த யோகமானது   महता कालेन   மஹதா காலேந  நெடுங்காலமாகி விட்டதனால்   

नष्ट:   நஷ்ட:   நஷ்டமாய்விட்டது.    


இவ்வாறு பரம்பரையாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள். பரந்தபா, நெடுங்காலமாகி விட்டதனால் அந்த யோகமானது இவ்வுலகில் நஷ்டத்தை அடைந்துவிட்டது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.


விளக்கம்:

   முன் சுலோகத்தில் கூறியபடி இந்த ஞானமானது வழிமுறை வழிமுறையாக அரசர்களின் குடும்பங்கள் மற்றும் ரிஷிகள் வழியாக வந்து கொண்டிருந்ததாக பகவான் தொடர்கிறார். அரச குடும்பங்கள் இந்த அறிவை தந்தையிடமிருந்து மகனுக்கு கொடுப்பது மற்றும் காட்டில் வாழும் முனிவர்கள் அதை தனது சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது என இரு விதமாக இந்த ஞானமானது அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்பட்டுவந்தது

இந்த ஞானத்தின்  காரணமாகவே, ஜனகர் போன்ற மன்னர்கள் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட அரச அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமல் தங்கள் கடமைகளைச் சிறப்பாக செய்ய முடிந்தது என சங்கரர் கூறுகிறார். அதிகாரமும் புரிதலும் ஒரு குறிப்பிட்ட மன நிறைவுடன் சேர்ந்து செல்ல வேண்டும். மேலான அதிகாரத்திலிருப்பவர்கள் அதிகம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.   ஆகவேதான் இந்த அறிவானது, நாட்டையும் அதன் மக்களையும் ஒழுங்காக ஆளம் பொருட்டு அவர்களுக்கு பலம் சேர்க்கும் விதமாக(4 ஆதா3நாய_बल अादानाय ) அரசாளும் மன்னர்களுக்கு அளிக்கப்பட்டது. தன்னை அறிவதால் கிடைக்கும் ஆத்ம-பலத்தை விட மேலான பலம் இல்லை. இந்த யோகத்தை கடைபிடித்து அரசர்கள் ராஜரிஷிகளாக சிறப்படைந்து வந்தார்கள். ஜனகர், அஷ்வபதி போன்ற ராஜாவாகவும் ரிஷிகளாகவும் இருந்த க்ஷத்திரியர்கள், ராஜரிஷிகள் என்றழைக்கப்படுவர். सूक्ष्मार्थ निरीक्षण समत्वम् ऋषित्वम् - நுண்ணிய விஷயத்தை புரிந்து கொள்ளும் சக்தி ரிஷித்துவம் ஆகும்.


=> நஷ்டமடைந்து போனதன் காரணம்:

இந்த விஷயத்தை கேட்ட அர்ஜுனனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்ததை கண்ணன் கண்டார். அது அர்ஜுனன் அவரிடம் பின்வரும் கேள்வியை கேட்டதைப் போல உணர்ந்தார்: ‘எப்படி இது எனக்கு முன்பே தெரியாமல் போயிற்று? நான் வளர்ந்து வரும் போது ஏன் இந்த அறிவைப் பெறவில்லை? எனக்கு வில்வித்தை கற்பிக்கப்பட்டது. எது சரி, எது தவறு என்ற அறிவு கொடுக்கப்பட்டது. ஆனால் இது எனக்கு கற்பிக்கப்படவில்லையே ஏன்?’ 

இந்த ஞானத்தை முதன்முறையாக கேட்கும் எவரொருவரும் இதே ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்கள்: ‘இவ்வளவு வெளிப்படையான ஒன்றை நான் எப்படி தவறவிட்டிருக்க முடியும்!’ வியாசர், சுகர் போன்ற மாமுனிவர்கள் அர்ஜுனனின் காலத்தில் வாழ்ந்திருந்தாலும், அர்ஜுனனுக்கு கிருஷ்ணபகவான் அளித்த இந்த அறிவு உடனடியாகக் கிடைக்கவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இது தெரிந்ததால் அது தொலைந்து போனது போல் இருந்தது. மற்றவர்களனைவரும் வேறு விஷயங்களில் தங்களை ஈடுபடுத்தி இருந்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகில் துரியோதனர்களின் எண்ணிக்கை அதிகமாகிப் போனதால் அவர்களுக்கு ஞானத்திற்கு நேரமில்லாமல் போய்விட்டிருந்தது. இந்திரிய ஒழுக்கமில்லாதவர்களிடம் இந்த ஞானம் சென்றதால் அது நஷ்டமடைந்து விட்டதாக சங்கரர் தனது பாஷ்யத்தில் கூறுகிறார். இது குறித்து விரிவாக அடுத்த சுலோகத்தில் விசாரிப்போம்

இதனாலேயே பகவான் இந்த ஞானம் அர்ஜுனனுக்கு புதியதாகவும் விசித்திரமாகவும் தோன்றினாலும் இதில் புதியது எதுவுமில்லை என்கிறார். ‘இந்த உத்தமமான பழைமையான ஞானம் ஆரம்பத்திலிருந்தே இருந்தது; எப்பொழுதும் இருந்ததைப் போலவே இன்று அதை உன்னிடம் முன் வைக்கிறேன். இதற்குமுன் இதைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்காததாலேயே உனக்கு இது விசித்திரமாகவும் புதிதாகவும் தெரிகிறது’. 

முன்னாட்களில் அல்லாமல், இன்று எனக்கு இதை கற்பிக்கக் காரணமென்ன?’ என்ற அர்ஜுனனின் கேள்வியை எதிர்பார்த்தவராய் பகவான் அடுத்த சுலோகத்தில் பதிலுரைக்கிறார்

-------------------------------------------------------------------------------------

||4.3|| யோகத்தின் மஹிமை:

एवायं मया तेऽद्य योग: प्रोक्त: पुरातन:  

भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम् ।। ।। 

ஏவாயம் மயா தேऽத்3 யோக3: ப்ரோக்த: புராதந: ।। 

4க்தோऽஸி மே ஸகா2 சேதி ரஹஸ்யம் ஹ்யேதது3த்தமம்  ।। 3 ।।


मे   மே  என்னுடைய    भक्त:   4க்த:   பக்தனாகவும்   सखा     ஸகா2    நண்பனாகவும்    

असि    அஸி   இருக்கிறாய்    इति   இதி   என   अयं पुरातन:   அயம் புராதந:  இந்த பழைய    

एव योग:   ஏவ யோக3:  அதே யோகமானது   अद्य   அத்3   இன்று   मया   மயா   என்னால்    

ते   தே   உனக்கு    प्रोक्त:   ப்ரோக்த:   சொல்லப்பட்டது   हि   ஹி   ஏனென்றால்   एतत्   ஏதத்   இது    

उत्तमम्   உத்தமம்   மேலானது   रहस्यं   ரஹஸ்யம்   இரகசியமானது.


என் பக்தனாகவும் தோழனாகவும் இருக்கிற காரணத்தினால், இந்தப் பழைய அதே யோகமானது இன்று என்னால் உனக்கு சொல்லப்பட்டதுஇது மேலான இரகசியம்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன், நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.


விளக்கம்:

=> வேதத்தின் சாரம்:

வேதத்தின் பார்வையில், தனியொருவனானவன் படைக்கப்பட்ட ஓர் உயிரினம் அல்ல; முழு படைப்புக்கும் காரணமானபரப்ரம்ம’. இத்தத்துவமே கீதையிலும் பேசப்படுவதால் கீதை வேதத்தின் சாரம் என்று கூறப்படுகிறது. இந்த அறிவை பெறுவதே மனித வாழ்க்கையின் ஒரே இலக்கு. அதுவரையில் ஒருவன் சுகம்-துக்கம், மகிழ்ச்சி-இன்னல், பிறப்பு-இறப்பு போன்ற சம்சார இருமைக்கு கட்டுப்பட்டவனாகிறான்

ப்ரம்மமாக இருக்கிறேன் எனும் சுய-அறிவை பெற, வேதமானது ஒருவனுக்கு இரண்டு மார்க்கத்தை வழங்குகிறது. எந்தவொரு அறிவுக்கும் அதற்குரிய தகுதி தேவை. சுயத்தைப் பற்றிய அறிவைப் பெற ஆழ்ந்து சிந்திக்கும் திறனும், மனவெழுச்சியில் பக்குவமும், புத்தியில் தெளிவும் தேவை. செம்மையடைந்த இயல்பான சிந்திக்கும் திறனும், ஒப்பீட்டளவில் தன்னுடன் மகிழ்ச்சியாக வாழும் மன முதிர்ச்சியும் உள்ள ஒருவனுக்கு வேதமானது சந்யாச வாழ்க்கைமுறையைப் பரிந்துரைக்கிறது. தன்னறிவைப் பெறும் பொருட்டு அனைத்துவித கடமைகளிலிருந்தும் அவனை விடுவிக்கிறது

மன முதிர்வை அடையாத ஒருவன், கர்மயோக வாழ்க்கைமுறையை மேற்கொள்வதன் மூலம், சந்யாசி தொடரும் அதே இலக்கான சுய-அறிவுத் தேடலை பின்தொடரலாம். இதுவே எல்லா வேதங்களின் சாராம்சமாகும். கீதையில்யோக:என்ற சொல் பயன்படுத்தப்படும்போது, அது ஒரு சந்யாசிக்கு ஞானயோகத்தையும், சந்யாசி அல்லாத மற்றவர்களுக்கு கர்மயோகத்தையும் குறிக்கிறது. எனினும் இவையிரண்டுமே சுய-அறிவை அடைவிக்கும் பாதை.

இந்த சுலோகத்திற்கான அறிமுக உரையில் சங்கரர் இந்த யோகத்தின் நஷ்டத்திற்கான காரணத்தைக் கூறுகிறார். இந்திரிய ஒழுக்கமில்லாத, சிதறடிக்கப்பட்ட மனதையுடையவர்களிடம் செல்லும்போது இந்த ஞானமானது தொலைந்து போனதை போல தெரிகிறது என்கிறார். दुर्बलान् अजितेन्द्रियान् प्राप्य नष्टं योगम् - து3ர்ப3லாந் அஜிதேந்த்3ரியாந் ப்ராப்ய நஷ்டம் யோகம். மக்களின் நிலை காரணமாக இது இழக்கப்பட்டுள்ளதே தவிர இது கிடைக்காததால் அல்ல. மனமானது அங்குமிங்கும் சிதறடைந்து உள் வலிமை இழந்த மக்களை சென்றடைந்ததால்(அஜிதேந்த்3ரியா:) இந்த யோகமும் சிதறடைந்துவிட்டது. அதாவது இது அவர்களின் அறிவிற்கு பிடிபடாமல் போய்விட்டது. எனவே இந்த ஞானம் இழக்கப்பட்டதை போல் ஆயிற்று.  

முன் அத்தியாயங்களில் பேசப்பட்ட இரண்டு மார்க்கத்தையுடைய இந்த அறிவானது எப்போதும் இருந்து வந்ததை ஏவ யோக: - அதே யோகமானதுஎனும் சொல் பிரயோகத்தின் மூலமும், ஒருபோதும் இது புதிதானதல்ல என்பதைபுராதந:எனும் சொல்லின் மூலமும் பகவான் உறுதிப்படுத்துகிறார். உண்மையில் எந்தவொரு அறிவும் எப்போதும் புதியதல்ல. அது வற்றாத நித்தியமாய், பழமையானதாய் இருக்கிறது. கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் புதியது எனத் தோன்றலாம். உண்மையில், அது எப்போதும் இருந்து வருகிறது. முன்பு யாரும் இதை அறிந்திராத காரணத்தினால் புதிதாகத் தெரிகிறது. உதாரணமாக, பூமி எப்போதும் சூரியனைச் சுற்றுவதும், பூமியுடன் ஒப்பிடும்போது சூரியன் நகராமல் எப்போதும் நிலையானதாக இருப்பதும் அறிவியலால் அறியப்படும் முன்பே அது உண்மையானதாகவே இருந்தது

அதேபோல், இந்த அறிவானது ஒருபோதும் புதியதல்ல; பழமையானது. மேலும் ஓர் அறிவு எப்போதுமே அதுகுறிக்கும் பொருளைப் போலவே உண்மையானது. அதாவது ஆத்மா நித்தியமாக இருந்தால் அதனைப் பற்றிய அறிவும் அதே அளவு நித்தியமானது


=> இரண்டு வகையான நித்தியம்:

நித்தியம் என்பது இரண்டு வகையாக உள்ளது. அவைகள் பிரவாக நித்தியம் மற்றும் கூடஸ்த நித்தியம். கூடஸ்த நித்தியம் அல்லது முழுமையான நித்தியம் என்பது காலத்தைக் கடந்து, மாறாமல் என்றும் இருந்து கொண்டிருப்பது. இதுபாரமார்த்திக நித்யத்வா என்று அழைக்கப்படுகிறது. இவ்வகைக்கான ஒரே உதாரணம் ப்ரம்ம. பிரவாக அல்லது வற்றாத நித்தியம் என்பது ஒவ்வொரு படைப்பு மற்றும் கல்பத்தின் போதும் தோன்றி, தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். வேதமெனும் அறிவு ஒவ்வொரு படைப்பிலும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தபோதிலும் காலத்திற்கு உட்பட்டதாகையால் இது பிரவாக நித்தியமாக இருக்கிறது

 

=> இந்த அறிவை இப்போது உபதேசிக்க காரணம்:

பதிமூன்று வருடகாலமாக நாடுகடத்தப்பட்டு அதில் பன்னிரண்டு வருடங்கள் வனவாசத்தில் கழித்த போது இந்த அறிவை பகவான் அர்ஜுனனுக்கு போதித்திருக்கலாம். அமைதியான சூழ்நிலையில் நதியோரம் அமர்ந்து உரையாடும் எத்தனையோ தருணமிருந்தும் கிருஷ்ணர் இந்த ஞானத்தை இன்று வரை கற்பிக்காததன் ஒரே காரணம் அர்ஜுனன் இந்த அறிவை அப்போது கேட்கவில்லை. மாறாக, இன்று போர்களத்தின் நடுவே குதிரைகள், ரதங்கள், யானைகள், காலாட்படை, சங்கு மற்றும் மத்தள ஒலியுடன் எல்லா இடங்களிலும் சத்தம், தூசி மற்றும் குழப்பங்களால் சூழப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அர்ஜுனன் கேட்டவுடனேயே சூழலையும் பொருட்படுத்தாமல் இன்று அதை பகவான் உபதேசம் செய்கிறார்(அத்3 மயா தே ப்ரோக்த:). ‘நீ என் மாணவன் என்றும் என்னிடம் சரணடைவதாகவும் கூறி இதை கற்பிக்கச் செய்தாய்என்பதாக கிருஷ்ணர் இவ்விதம் உரைக்கிறார். யார் தெரிந்துகொள்ள விரும்புகிறார்களோ அவர்களுக்குத்தான் இது கொடுக்கப்பட வேண்டும். பிரச்சனையை அங்கீகரிக்காத ஒருவனுக்கு தீர்வை வழங்குவது பயனற்றது. அர்ஜுனனும் அவனது சிக்கலை அங்கீகரிக்க வேண்டியிருந்தது. பன்னிரண்டு வருட வனவாசத்தின் போது அர்ஜுனனின் ஆவேசம் மற்றும் அர்ப்பணிப்பு முழுதும் ராஜ்ஜியத்தை மீண்டும் வெல்வதிலேயே இருந்தது. அச்சமயத்தில் இந்த ஞானம் அவனுக்கு தேவைப்பட்டிருக்கவில்லை. அப்படி கொடுக்கப்பட்டிருப்பினும் அந்த அறிவு அர்ஜுனனுக்கு எந்த அர்த்தத்தையும் கொடுத்திருக்காது. ஆனால் இப்போது போர்களத்தில், அனைத்து ஆர்வங்களும் ராஜ்ஜியத்தை அடையும் கனவும் அவனுக்கு பயனற்றதாகத் தோன்றின. தனது முந்தைய முயற்சிகள் மற்றும் வெற்றிகளின் அர்த்தமற்ற தன்மையைக் கண்ட அர்ஜுனன் வாழ்க்கையின் அர்த்தத்தை அறிய விரும்பினான். ‘இந்த வெற்றியிலிருந்து நான் என்ன பெறப்போகிறேன்? நான் எதிலிருந்து எதையும் ஏன் பெற வேண்டும்?’ அர்ஜுனனின் இந்த கேள்வியின் சாராம்சம் வாழ்க்கையைப் பற்றியதாக உள்ளது. இப்போது கேள்வியானது கேட்கப்பட்டு விட்டதால் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்த அறிவைக் கொடுக்க முடியும். கேட்கப்பட்ட பின் இந்த அறிவு கொடுக்கப்படலாம். இக்காரணத்தினாலேயே இது மக்களிடமிருந்து நீண்ட காலமாக விலகியிருந்தது. மேலும் இந்த அறிவு கிடைத்த போதிலும் புரிவதில்லை அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படலாம். பெரும்பான்மையான மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட இதுவும் ஒரு காரணம். கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் இது மிகவும் பரவலாகக் கிடைக்கிறது

ஒரு மனிதன் எதற்குத் தகுதியுடையவனாகத் தன்னைச் செய்துகொள்கிறானோ அதனை இயற்கை வலியக்கொண்டுவந்து அவனுக்குத் தக்க தருணத்தில் கொடுத்துதவுகிறது. தன்னை ஒரு மாணவனாக, ஒரு பக்தனாக கண்ணன் அங்கீகரித்தவுடன், குருவைப் பெற்றிருந்தாலும், நல்ல ஒரு நண்பரை இழந்துவிட்டதாக அர்ஜுனன் உணரலாம். ஆகவே தனது நட்பை இழக்கவில்லை என்பதை உறுதியளிக்கும் விதமாக பகவான், ‘நீ என் பக்தன்(4க்த:) மட்டுமல்ல நீ என் நண்பனும் ஆவாய்(ஸகா2 அஸி)’ என்கிறார். இதனால் அர்ஜுனன் இரட்டிப்பாக ஆசீர்வதிக்கப்பட்டவனானான். குருவாக மட்டுமல்லாமல் நண்பனாகவும் கிருஷ்ணனுடன் தொடர்ந்து பேசமுடியுமே!

 

=> சுய-அறிவு மிகப் பெரிய ரகசியம்:

இந்த குறிப்பிட்ட அறிவு ஒரு ரகசியம்(ரஹஸ்யம்) என பகவான் இங்கு கூறுகிறார். ஆத்மஞானத்தை மையப்பொருளாகக் கொண்ட உபநிஷத் எனும் சொல்லும் கூட ரகசியம் என்ற பொருளை தன்னகத்தே கொண்டுள்ளது. தனது சுயத்தை பற்றிய அறிவு என்பது எல்லா ரகசியங்களிலும் மேலான ரகசியம்(உத்தமம் ரஹஸ்யம்). ஏனெனில் பகிரப்பட்ட போதும் தகுதியில்லார்க்கு அது புரிந்துகொள்ளப்படாத மறைபொருளாகவே உள்ளது. ஒருவருடன் இந்த அறிவை நூறு முறை பகிர்ந்தாலும் அவர், ‘ஆத்மா என்றால் என்ன?’ என கேட்பார்

உதாரணமாக வேதத்தைப் படிப்பவர்கள் உபநிடதப் பகுதிகளைப்  பாராயணம் செய்யும்போது பொதுவாக அவர்கள் என்ன பாராயணம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அத்தகையவர்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் சொற்கள் கிடைத்தும் அதைப் பற்றிய அறிவு அவர்களிடம் உண்டாவதில்லை. எனவே இது மிகப்பெரிய ரகசியம், உத்தமம் ரஹஸ்யம். ஆகவே இது எளிதாகக் கிடைக்காத காரணத்தினாலோ அல்லது புரியாத காரணத்தினாலோ மேலான ரகசியமாகவே உள்ளது.  

-------------------------------------------------------------------------------------