திங்கள், 16 ஆகஸ்ட், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.4 - 4.5

||4.4|| அர்ஜுனனின் ஐயம்:

अर्जुन उवाच

अपरं भवतो जन्म परं जन्म विवस्वत:  

कथमेतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिति ।। ।। 

அர்ஜுந உவாச

அபரம் 4வதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத: 

கத2மேதத்3விஜாநீயாம் த்வமாதௌ3 ப்ரோக்தவாநிதி ।। 4 ।।


अर्जुन उवाच    அர்ஜுந உவாச    அர்ஜுனன் சொன்னது  

भवत:  4வத:  உம்முடைய   जन्म   ஜந்ம   பிறப்பு   अपरं   அபரம்    பிந்தியது   

विवस्वत:  விவஸ்வத:  விவஸ்வானுடைய   जन्म  ஜந்ம  பிறப்பு   परं   பரம்  முந்தியது    त्वं   த்வம்   தாங்கள்   

अादौ  ஆதெள  ஆதியில்   प्रोक्तवान् इति एतत्  ப்ரோக்தவாந் இதி ஏதத்  பகர்ந்தீர் என்பதை   

कथं   கத2ம்  எப்படி  विजानीयां   விஜாநீயாம்  அறிவேன்?


அர்ஜுனன் சொன்னது: உம்முடைய பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. தாங்கள் ஆதியில் அவருக்குப் பகர்ந்தீர் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?


விளக்கம்:

=> முரண்பாட்டினால் எழுந்த ஐயம்:

இந்த அத்தியாயத்தின் முதல் சுலோகத்தில் இந்த யோகத்தை விவஸ்வானுக்கு கொடுத்ததாக கிருஷ்ணர் கூறியிருந்தார். இதில் முரண்பாட்டை கண்டவனாய் அர்ஜுனன், எனது சமகாலத்தவரான நீங்கள், இச்சிருஷ்டியின் துவக்கத்தில் தோன்றிய விவஸ்வானுக்கு புகட்டுதல் எப்படிச் சாத்தியமாகும்? என கேட்கிறான். அவரது தந்தையான வசுதேவரும் தாயார் தேவகியும் வைக்கப்பட்டிருந்த சிறையில் கிருஷ்ணர் பிறந்தார் என்பதில் அர்ஜுனனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் பிறந்த இடமும் காலமும் நேரமும் நன்கு அறிந்தவனாக, பலகாலம் முந்திய விவஸ்வானுக்கு கிருஷ்ணனால் எப்படி உபதேசித்திருக்க முடியும்? என்ற ஐயம் ஏற்பட்டது. இந்த கேள்வியைக் கேட்பதன் மூலம் கிருஷ்ணரை ஈஷ்வரனாக, பகவானாக அர்ஜுனன் அறிந்திருக்கவில்லை என தோன்றுகிறது. ஆனால் கிருஷ்ணர், ‘பகவான்என்று அர்ஜுனனுக்கு ஏற்கனவே தெரியும் என சங்கரர் தனது பாஷ்யத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இல்லையெனில் போருக்கு முன்னர், நிராயுதபாணியாக போர்புரியாத கிருஷ்ணர் அல்லது கிருஷ்ணரின் முழு இராணுவம் என்ற இரண்டில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டபோது அர்ஜுனன் கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டான். அர்ஜுனனுக்கு கிருஷ்ணரைப் பற்றி முழுவதுமாகத் தெரியும். ஆனால் தனது மனநிறைவுக்காகவும், கிருஷ்ணனை இறைவனாக அங்கீகரிக்காதவர்களின் மனதிலுள்ள சந்தேகங்களை நீக்கும் பொருட்டும் அதை அவரிடமிருந்தே கேட்க விரும்பினான்.

------------------------------------------------------------------------------------------------------------------

||4.5|| அவதாரமூர்த்தியின் மஹிமை:

            श्रीभगवानुवाच

बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन

तान्यहं वेद सर्वाणि त्वं वेत्थ परन्तप ।। ।। 

         ஸ்ரீப43வாநுவாச

3ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந

தாந்யஹம் வேத3 ஸர்வாணி த்வம் வேத்த2 பரந்தப ।। 4 ।।


श्री भगवान् उवाच    ஸ்ரீ 43வாந் உவாச    ஶ்ரீ பகவான் சொன்னது

अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா   मे   மே   எனக்கும்    तव   தவ   உனக்கும்  बहूनि   3ஹூநி  பல   

जन्मानि   ஜந்மாநி  ஜன்மங்கள்   व्यतीतानि   வ்யதீதாநி  கடந்துபோயின  अहम्  அஹம்  நான்  

तानि सर्वाणि  தாநி ஸர்வாணி   அவைகள் எல்லாவற்றையும்   वेद   வேத3   அறிகிறேன்   

परन्तप   பரந்தப  எதிரிகளை வாட்டுபவனே   त्वम्   த்வம்  நீ   वेत्थ    வேத்த2   அறியமாட்டாய்.


அர்ஜுனா, எனக்கும் உனக்கும் பல ஜன்மங்கள் கடந்துவிட்டன. பரந்தபா, நான் அவற்றையெல்லாம் அறிகிறேன்; நீ அறியமாட்டாய்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.


விளக்கம்:

=> அவதார தத்துவம்:

முதலில் அவதார தத்துவத்தை சிறிது விசாரிக்கலாம்.

அவதார:(अवतार:) - இறங்கி வருதல். மனித உடல் எடுத்து இறைவன் இறங்கி வருதல் அவதாரம் எனப்படும். ஈஷ்வரனே ஒரு வடிவத்தின் மூலம் தன்னை விளக்குவது அவதாரமாகும்அவதாரத்தை இரண்டு கோணத்தில் விசாரிக்கலாம்

     (i) தர்ம திருஷ்டி      (ii) கர்ம திருஷ்டி.

(i) தர்ம திருஷ்டி(தர்மத்தின் அடிப்படையில் நோக்குதல்):

நமது உடல் இருப்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளது; அதாவது பிறந்து வாழ்ந்து(இருந்து) மடிதல் அதன் இயல்பு. வாழும் காலத்தில் இந்த உடலுக்கு எதிரான ஒன்று இதை அணுகும்போது அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் சக்தியை இயற்கையாகவே இறைவன் இதற்கு அளித்துள்ளான். பாக்டீரியா, தூசி போன்ற உடலெதிரிகள்(antibodies) நுழையும் போது  வாந்தி, தும்மல் மற்றும் கண்ணீர் போன்றவைகள் தானாகவே வெளிப்பட்டு ஆபத்துக் காலத்தில் உடலைக் காப்பாற்றும்.

இது போலவே, ‘விராட்சொரூபமாக இவ்வுலகமே இறைவனின் உடலாகப் பார்க்கப்படுகிறது. உலகம் சீராக இயங்க காரணம் தர்மம். அதர்மம் மேலெழும் போது உலகின் சீர்தன்மை குலைகிறது. உலக செயல்பாட்டிற்கு விரோதமாகவும் அதன் நாசத்திற்கு காரணமாகவும் ஏதேனுமொன்று நடக்கும்போது ஓர் சக்தி வெளிப்பட்டு அதை சரி செய்யும். மற்ற நேரங்களில் அது அமைதியாக இருக்கும். இப்படிப்பட்ட சக்திக்கு அவதாரம் என்று பெயர். ஆகையினால் இவ்வுலகை பாதுகாக்க வெளிப்படுகின்ற அனைத்து சக்தியும் அவதாரம் எனப்படும். அதர்மத்தின் பிடியிலிருந்து தங்களது ஊரை காத்த மனிதர்ளை, சக்திகளை, தங்களின் எல்லைச்சாமிகளாக வணங்குவதை இன்றும் நிறைய கிராமங்களில் காண முடியும்


(ii) கர்ம திருஷ்டி(கர்மத்தின் அடிப்படையில் நோக்குதல்):

இங்கு உடலைப் பற்றிய விசாரம் நடைபெறுகிறது. அவதார சரீரத்தின் தத்துவம் என்ன? ஜீவ சரீரத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு பகவானின் சரீரம் விசாரிக்கப்படுகிறது

   * ஜீவனின் உடலுக்கு காரணமாக இருப்பது கர்மவினை; பாப புண்ணிய பலன். வியவகாரத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்த பாப புண்ணியத்தை அனுபவித்து நீக்க அவனுக்கு உடல் கிடைக்கிறது. தனியொரு ஜீவனுக்கு இரண்டு வகையான கர்மத்தின் அடிப்படையில் உடல் கிடைக்கிறது

[1] வியஷ்டி கர்ம(व्यष्टि कर्म): தனிப்பட்ட பாப புண்ணியம்.

[2] சமஷ்டி கர்ம(समष्टि कर्म): கூட்டு பாப புண்ணியம். அதாவது பிறக்கும் சூழ்நிலை, பெற்றோர்கள் அமைவது, இப்படிப்பட்ட பிள்ளைகள்தான் இவர்களுக்கு பிறக்க வேண்டுமென்ற நியதி போன்றவைகளனைத்தும் சமஷ்டி கர்மத்தைச் சார்ந்தது

பாப புண்ணியம் கிடையாதாகையால், அவதார சரீரத்திற்கு வியஷ்டி கர்மம் என்பது இல்லை. அவதார புருஷனது சரீரம் சமஷ்டி கர்மத்தின் அடிப்படையில் உருவாகின்றது. ஜன சமூகத்தின் தொகைவினை முழுதும் அவதார புருஷனது ஜீவிதத்தில் விளங்குகிறது. உலகத்தின் நன்மைக்காக, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அதற்கேற்றவாறு சரீரம் எடுக்கப்படுகின்றது.  


=> இந்த சுலோகத்திற்கான விளக்கம்:

அர்ஜுனனின் கேள்விக்கான பதிலாக பகவான் அவதாரமூர்த்தியின் மஹிமையை விளக்க ஆரம்பிக்கிறார். தன்னை ஈஷ்வரனாகக் கொண்டே கிருஷ்ணபகவான் இங்கு பேசுகிறார். தனக்கும் அர்ஜுனனுக்கும் முன்பே பல பிறப்புகள் கழிந்துவிட்டதாக அவர் கூறுகிறார். பகவானாக, ஈஷ்வரனாக, கிருஷ்ணருக்கு தனது அனைத்து பிறப்புகளும் நினைவில் இருந்தது; ஆனால் ஜீவனான அர்ஜுனனால் அது இயலவில்லை.

ஜீவனான அர்ஜுனனுக்கு முந்தய பிறப்புகள் தெரியாது. தர்ம-அதர்மம் மற்றும் பாப-புண்ணியமெனும் ஊழ்வினையின் பலனாகக் கிடைத்த ஒரு ஜீவனின் அந்தகரணம், இயற்கையாகவே நிபந்தனைக்குட்பட்டதாக இருக்கிறது. அவனுடைய சொந்த கர்மமே அவனது உடலை ஒரு வரையறுக்கப்பட்ட மனதுடனும் புலன்களுடனும் பிறப்பெடுக்க வைத்துள்ளது. ஆகவே இயல்பாகவே அர்ஜுனனின் தெரிந்து கொள்ளும் சக்தி வரையறைக்குட்பட்டது. இவ்வாறு கர்மத்தின் பலனாக பிறந்த அர்ஜுனனுக்கும், தனக்குமான வேறுபாட்டை அர்ஜுனன் அறிந்திருக்கவில்லை என்பதை கிருஷ்ணர் அறிந்திருந்தார். ‘நான் நித்திய சுத்தனாக, முக்தனாக, நித்தியமான புத்தியுடன் சர்வஞனாக இருக்கப்பெற்றவன். ஆகவே நான் ஒரு உடலை எடுத்துக் கொண்டாலும் கூட எந்த வகையிலும் ஒருபோதும் எதனோடும் பிணைக்கப்படுவதில்லை. அர்ஜுனா, நீயும் நித்திய முக்தனே; உண்மையில் உன் சுய சொரூபமும் எதனோடும் பந்தப்படுவதில்லை. ஆனால் அறியாமையினால் இந்த உண்மை உனக்கு மறைக்கப்பட்டுள்ளது. என்னிடம் எந்த அறியாமையும் இல்லை என்பதால் அனைத்தையும் நான் அறிவேன். தன்னைப் பற்றிய அறிவை பெறுவதற்காகவே ஜீவனுக்கு அந்தகரணம் கொடுக்கப்பட்டுள்ளது’.

இவ்விதமாக, இப்பிறப்பை எடுப்பதற்கு முன் தான் செய்த அனைத்தையும் அறிந்திருப்பதாகவும், இதனாலேயே விவஸ்வானுக்கு இந்த அறிவைக் கொடுத்ததை தன்னால் சொல்ல முடிந்ததாகவும் பகவான் கூறுகிறார்


=> ஒரு ஜீவனின் பிறப்பிற்கு காரணம்:

ஜீவனின் இயல்பு மீண்டும் மீண்டும் பிறப்பதாக இருக்கிறது. ஏனெனில் ஜீவன் தன்னை கர்மத்திற்குட்பட்டவனாக, வினையாற்றுபவனாக(கர்த்தா) மற்றும் நுகர்பவனாக(போக்தா) பார்ப்பதால் மறுபிறப்பு நிகழ்கிறது. அவன் தனது தன்னியல்பை, உண்மைச் சொரூபமான ஆத்மாவை அங்கீகரிக்காமல் போனதேஜீவத்துவம் எனும் நிலைக்கு அடிப்படை காரணம். இதனால் ஜீவன் எனும் நிலை சுயத்தின் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஜீவத்துவம் ஒரு வரையறுக்கப்பட்ட உணர்வைத் தருவதோடு அதைக் கடந்து செல்லும் ஆசையையும் உருவாக்குகிறது. எங்கு விருப்பம் எழுகிறதோ அங்கு செயல் உருவாகி அதற்கான பலனும் கிடைக்கிறது. இது கர்ம-பலன்(कर्म फल) எனப்படும். இரண்டு வகையான கர்மபலன் சாத்தியம். ஒன்று நேரடியாக கிடைக்கும் பலன்; திருஷ்ட பலன். இனியொன்று கண்ணிற்கு தெரியாத பலன்அதிருஷ்ட பலன். இந்த அதிருஷ்ட பலன் இந்த வாழ்க்கையிலோ அல்லது பின்னரோ பலனளிக்கிறது. இவ்விதம் செயல் செய்பவனாக திரட்டப்பட்ட அதிருஷ்ட கர்ம பலன்களினால் அந்த ஜீவன் மீண்டும் பிறக்கிறான். மீண்டும் அவன் செயல் செய்கிறான்; அதற்காக கண்ணுக்கு தெரியாத பலனைச் சம்பாதிக்கிறான்; மீண்டும் பிறக்கிறான்; இந்தச் சக்கரம் தொடர்கிறது. இந்த தொடர் சக்கரமே சம்சாரம்(संसार) எனப்படுகிறது. இது ஜீவனுக்கு மட்டுமானது

மாறாக, ஈஷ்வரனுக்கு எந்தவிதமான செயல்களும் இல்லை; கர்த்ருத்துவம்(कर्तृत्वम्) அதாவதுநான் செயல் செய்கிறேன்எனும் பாவனையும் இல்லை. ஈஷ்வரன் இந்த படைப்பையே உருவாக்கி, காத்து ஒடுக்குகிறார் என்றாலும் அறியாமை இல்லாததால், ‘நான் செய்கிறேன்என்ற பாவனை இல்லாததால், அவருக்கு எந்தவிதமான செயலும் இல்லை. அவரைப் பொறுத்தவரை உருவாக்கும் திறன் என்பது ஒரு சக்தி மட்டுமே. அதைக் கொண்டு எல்லாவற்றையும் தோற்றுவிக்கிறார். ‘நான் செயல் செய்பவனோ மற்றும் அனுபவிப்பவனோ அல்லஎன்ற உண்மை மறைக்கப்படாத காரணத்தினால் அவருக்கு தர்ம-அதர்மம், புண்ணிய-பாபம் மற்றும் கர்மபலன் எதுவும் இல்லை. ஆகவே உண்மையில் அவர் பிறக்க முடியாது

கிருஷ்ணர் அளித்த இந்த பதில் அர்ஜுனனின் குழப்பத்தை அதிகரித்திருக்கக்கூடும். இருவரின் முந்தய பிறப்புகளை அறிந்திருப்பதால் கண்டிப்பாக கிருஷ்ணர் ஈஷ்வரனாகத் தான் இருக்க வேண்டும். நித்திய முக்தனான ஈஷ்வரனுக்கு தர்மம், அதர்மம் ஆகிய வினையேதும் இல்லை. ஆகவே அவர் பிறவி எடுப்பது எப்படி? இதையெல்லாம அர்ஜுனனுக்கு அடுத்த சில சுலோகத்தில் விளக்குகிறார் பகவான்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உலகில் தோன்றிய அவதாரங்களெல்லாம் ஒரே ஈஷ்வரனே. அவன் பிரம்மமாகிய சமுத்திரத்தில் அமிழ்ந்து ஓரிடத்தில் கிளம்பும் போது கிருஷ்ணன் எனவும், இன்னொரு தரம் மூழ்கி வேறிடத்தில் கிளம்பும்போது கிறிஸ்து எனவும் அழைக்கப்படுகின்றான்

-------------------------------------------------------------------------------------