ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

ஸாங்கிய யோகம் 2.69 - 2.72

 ।।2.69।। ஸ்தித ப்ரக்ஞ லக்ஷண முடிவுரை:

या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी  

यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने: ।। ६९

யா நிசா1 ஸர்வபூ4தாநாம் தஸ்யாம் ஜாக3ர்தி ஸம்யமீ  

யஸ்யாம் ஜாக்3ரதி பூ4தாநி ஸா நிசா1 பச்1யதோ முநே: ।। 69


सर्वभूतानां   ஸர்வபூ4தாநாம்   எல்லா உயிரினங்களுக்கும்   या   யா   எது    निशा   நிசா1  இரவாக இருக்கின்றதோ   तस्यां  தஸ்யாம்  அதில்   संयमी   ஸம்யமீ  கட்டுப்படுத்தியவன்(ஞானி/யோகி)   

जागर्ति   ஜாக3ர்தி   விழித்திருக்கின்றான்    यस्यां  யஸ்யாம்  எதில்    भूतानि   பூ4தாநி   உயிரினங்கள்    

जाग्रति   ஜாக்3ரதி   விழித்துக் கொண்டிருக்கின்றனவோ   सा   ஸா  அது     पश्यत: मुने:  பச்1யத: முநே:   தத்துவத்தை பார்த்துக் கொண்டிருக்கும் முனிக்கு(ஞானிக்கு)   निशा   நிசா1   இரவு.


உயிர்களனைத்துக்கும் எது இரவோ அதில் ஞானி விழித்திருக்கின்றான். எதில் உயிரினங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனவோ அது தத்துவ ஞானிக்கு இரவு


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.


விளக்கம்:

=> இந்திரியங்களின் தொழிலைத் தூய்மையாக மாற்றியவன் அடையும் நன்மை:

இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போல் உள்ளது. திருடர்களுக்குத் திருட்டைப் பற்றிய விவரங்களும், சூதாடுபவர்களுக்கு அச்செயல் பற்றிய நுணுக்கங்களும் பகல் போல் விளங்கும். கற்றவர்களுக்கு அறிஞர் கூட்டம் பகலுக்கு ஒப்பானது. இங்ஙனம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போல விளங்கவும், ஏனைய துறைகள் இரவு போன்று விளங்காமலும் இருக்கின்றன

இந்திரியங்களை வென்ற யோகிக்கு உலகக் காட்சிகள், உலக விவகாரங்கள் ஆகியவைகள் இருள்போன்று மறைந்து கிடக்கின்றன. பரமாத்ம தத்வம் சம்பந்தமான யாவும் பகல் போன்று நன்கு விளங்குகின்றன.

=> ஸ்தித ப்ரக்ஞ லக்ஷணம்:

அக்ஞானிகளுக்கு அத்வைத தத்வம் இரவாக இருக்கிறது. அந்த அத்வைத தத்வத்தில் ஞானியானவன் விழித்துக் கொண்டிருக்கின்றான். எந்த த்வைதத்தில்(பேதத்தில்) அக்ஞானிகள் விழித்துக் கொண்டிருக்கின்றார்களோ அது ஞானிக்கு இருளாக உள்ளது. ஞானி அதைப் பார்க்கவில்லை. உதாரணமாக மங்கிய வெளிச்சத்தில் கயிற்றில் தவறாகத் தெரியும் பாம்பை எடுத்துக் கொண்டால், கயிறு என்னும் தத்வத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ஞானி சத்யத்தை பார்ப்பவனாக விழித்துக் கொண்டிருக்கிறான். இந்த தத்வத்தில் அக்ஞானி உறங்கிக் கொண்டிருக்கின்றான். அக்ஞானிக்கு பாம்பானது பிரகாசமாக தெரிகிறது. ஆனால் ஞானிக்கு அது இருளாகத் தெரிகிறது.

  ஒரே தத்வம், ஒருவனுக்கு ஒரு விதத்திலும் (ஞானிக்கு அத்வைதமாகவும்), இனியொருவனுக்கு வேறொரு விதத்திலும் (அக்ஞானிக்கு த்வைதமாகவும்) தெரிகிறது ”.

ஞான அவஸ்தையில் உலகம் கிடையாது. இருப்பது ப்ரம்மம் ஒன்றுதான். அக்ஞான அவஸ்தையில் உலகம் மட்டும் சத்யமாக உள்ளது. ப்ரம்மம் இல்லை. இந்த இரு த்ருஷ்டியில் ஒன்றைத் தான் பார்க்க முடியும்; அதாவது கயிற்றை பார்க்கலாம் அல்லது பாம்பை பார்க்கலாம். இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒருவனுக்கு ஈசுவர தரிசணம் உண்டான பிறகு, அவ்வீசுவரனே ஜீவனாகவும் ஜகத்தாகவும் ஆகிறானென்பது விளங்கும். அவனுக்குத் தன் குழந்தைகள் ஶ்ரீ கோபாலனாகத் தோன்றும். அவன் தன் தாய் தந்தையரிடம் கடவுளைக் கண்டு வழிபாடுகள் செய்வான். அந்த நரனுக்கு மனைவியிருப்பின் அவளுடன் சரீர சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாது. மனைவியும் அவனும் பிரார்த்தனையிலும் பக்தியிலுமே காலத்தைக் கழிப்பார்கள். ஈசுவரனை எல்லா ஜீவன்களிடத்திலும் கண்டு அவர்களுக்குத் தொண்டுபுரிந்து, வழிபாடு செய்வார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------

।।2.70।। ஸ்தித ப்ரக்ஞ லக்ஷண முடிவுரை:

अापूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमाप: प्रविशन्ति यद्वत्

तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे शान्तिमाप्नोति कामकामी ।। ७०

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட2ம் ஸமுத்3ரமாப: ப்ரவிச1ந்தி யத்3வத்  

தத்3வத்காமா யம் ப்ரவிச1ந்தி ஸர்வே சா1ந்திமாப்நோதி காமகாமீ ।। 70


अापूर्यमाणम्    ஆபூர்யமாணம்  முழுதும் நிறைந்த    अचलप्रतिष्ठं   அசலப்ரதிஷ்ட2ம்   அசைவின்மையில் நிலைபெற்ற    समुद्रम्    ஸமுத்3ரம்   சமுத்திரத்தை    अाप:   ஆப:  நீர்கள்(ஆறுகள்)    यद्वत्   யத்3வத்   எப்படி    

प्रविशन्ति   ப்ரவிச1ந்தி   பிரவேசிக்கின்றனவோ/வந்தடைகின்றனவோ   तद्वत्   தத்3வத்  அப்படியே  

सर्वे कामा:   ஸர்வே காமா:   எல்லா காமங்களும்   यम्   யம்  எவனின்(எந்த முனியின்கண்)    

प्रविशन्ति  ப்ரவிச1ந்தி   பிரவேசிக்கின்றனவோ    :  :   அவன்  शान्तिम्   சா1ந்திம்  சாந்தியை   

अाप्नोति   ஆப்நோதி  அடைகின்றான்    कामकामी  காமகாமீ   விஷய ஆசையுள்ளவன்(பொருளை விரும்புபவன்)        அடைவதில்லை.


அசைவற்ற நிறைகடலில் ஆறுகள் சென்றடங்குவது போல, எந்த முனியின்கண் ஆசைகளனைத்தும் சென்றொடுங்குகின்றனவோ அவனே சாந்தியை அடைகின்றான். விஷய ஆசையுள்ளவன் சாந்தியை அடைவதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.


விளக்கம்:

=> ஞானி ஆசையற்றவன் என்பதை விளக்கும் உதாரணம்:

இந்த சுலோகத்தில் சமுத்திரத்திற்கு 2 அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. (1) ஆபூர்யமாணம் - (நீரால்) முழுதும் நிறைந்துள்ளது; அதாவது ஏற்கனவே விளிம்பு வரை நிறைந்துள்ளதால், அதை மேலும் நிரப்ப அதிக நீர் தேவையில்லை. (2) அசலப்ரதிஷ்ட2ம் - அசைவின்மையில் நிலைபெற்றதாக உள்ளது; அதாவது நதியைப் போல ஓரிடத்திலிருந்து இனியொரு இடத்திற்கு ஓடுவதில்லை. மேலும் கடல் தன்னுடைய நிறைவிற்கு எதையும் சார்ந்தில்லை. அதனுடைய நிறைவு அதனிடமே உள்ளது. அதுபோலஅஹம் ஆனந்த சொரூபம்; பூரணமானவன்என்பதை அறிந்த காரணத்தினாலேயே ஞானி தனது நிறைவிற்கு எதையும் சார்ந்திருப்பதில்லை. ‘நான் எல்லையற்றவன்எனில்நான்என்பதற்கான உண்மைப் பொருளை, தேச கால வரையறையுடன் கூடிய இந்த உடல், மனம் மற்றும் புலன்களில் காண இயலாது எனப் புரிந்தவனாக உள்ளான். ஆகவே அவன் தனது மகிழ்ச்சிக்காக எந்தவொரு பொருளையோ அல்லது சூழ்நிலையையோ சாராதவனாக தன் சொரூபமாகவே நிறைவுடன் இருக்கின்றான்

இந்த சுலோகத்தில் குறிப்பிடப்படும் இனியொரு விதமான மனிதன் காமகாமீ, விஷய ஆசையுள்ளவன். காம என்பது பொருட்களைக் குறிக்கிறது(காம்யதே இதி காம:). தன்னை ஆனந்த சொரூபமாக அறியாத ஒருவன், விருப்பமான பொருள் அல்லது சூழ்நிலை வரும்போது குதூகலிப்பவனாகவும், விருப்பமற்றவைகள் வரும்போது மனத்தளர்வுடனும் காணப்படுகிறான். ஆனால் ஞானியிடம் அவைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மனசாந்தியுடன் இருக்கின்றான்.


=> மேலும் சில பொருள்விளக்கங்கள்:  


* எப்படி விதவிதமான நீர்(நதிகள்) கடலுக்குள் செல்லும் போது தன் சுபாவத்தை இழந்து கடலுடன் ஒன்றாகி ஒடுங்கி விடுகின்றதோ, அதுபோல ஞானிக்கு, அனைத்து இந்திரிய விஷயங்களும், விருப்பமான விருப்பமற்ற எல்லாவித அனுபவங்களும் தத்தம் சொரூபத்தை இழந்து ஒடுங்கி மறைகின்றன.


* சமுத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரே பின் மேகமாகி, மழையாகி, நதியாக மாறி மீண்டும் கடலை வந்தடைகிறது. அதுபோல தனக்கு வரும் விதவிதமான அனுபவங்கள், கர்மப் பலனினால் தனது சரீரம்(உபாதி) சம்பாதித்ததாகவும், தன்னிடமிருந்தே இவையெல்லாம் வந்துள்ளதாகவும் எண்ணி ஞானி வருத்தப்படமாட்டான்.


* நதிகளெல்லாம் ஓயாது கடலில் வந்து கலந்தாலும் அது மிகைபடுவதுமில்லை. நதிகள் வாராவிடில் கடலானது குறைப்பட்டுப் போவதுமில்லை. இந்திரியங்களை வென்ற முனிவனது மனம் கடல் போன்றது. காமத்தை உண்டுபண்ணும் பொருள்கள் ஓயாது அவனது முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கலாம். மனம் ஒரு விகாரத்தையும் அடையாத பரிபூரண நிலையில் அவன் வீற்றிருக்கின்றான்.


* பகவான் கொடுக்கும் இந்த உதாரணத்தை அப்படியே சிறிது  விரித்து அக்ஞானியை சிறிய நீர் குட்டையுடன் ஒப்பிடும் போது, அக்குட்டையில் ஏற்படும் விதவிதமான மாற்றங்கள்: எப்படி தூய்மையான நீருடன் சிறிது அழுக்கு கலந்தாலும் அது அழுக்கு நீராக மாறுமோ, எளிதாக குறைத்து விடவோ அல்லது நிரப்பிவிடவோ முடியுமோ அதுபோல அக்ஞானியின் வாழ்வில் வந்துசெல்லும் விதவிதமான அனுபவங்கள் அவனை எளிதில் மாற்றி சம்சாரத்திற்குள்ளாக்குகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சமுத்திரத்தின் கீழே மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், சமதரைகள் முதலியன இருக்கின்றன என்றாலும் அவைகள் மேற்பரப்பில் காணப்படுவதில்லை. அதுபோல, ஸமாதி நிலையில் ஸச்சிதானந்தமாகிய பரந்த சாகரந்தான் ஒருவனுக்குத் தோன்றுகிறது. அப்போது, நான் என்ற ஜீவநிலை ஒடுங்கி மறைந்து போகின்றது.

----------------------------------------------------------------------------------------------------------

।।2.71।। இந்நிலையை அடைவதற்கான உபாயம்:

विहाय कामान् य: सर्वान् पुमांश्चरति नि:स्पृह: ।

निर्ममो निरहङ्कार: स शान्तिमधिगच्छति ।। ७१ 

விஹாய காமாந் ய: ஸர்வாந் புமாம்ச்1சரதி நி:ஸ்ப்ருஹ: ।

நிர்மமோ நிரஹங்கார: ஸ சா1ந்திமதி43ச்ச2தி ।।  71 


य:  ய:   எந்த   पुमान्   புமாந்  புருஷன்   सर्वान् कामान्    ஸர்வாந் காமாந்  எல்லா காமங்களையும்   

विहाय   விஹாய  அகற்றி விட்டு   नि:स्पृह:   நி:ஸ்ப்ருஹ:  ஆசையற்று    निर्मम:   நிர்மம:   மமகாரமின்றி 

निरहङ्कार:   நிரஹங்கார:  அஹங்காரமின்றி   चरति  சரதி  சஞ்சரிக்கின்றானோ(நடமாடுகின்றானோ)    

स:   ஸ:   அவன்   शान्तिम्    சா1ந்திம்   சாந்தியை(மோக்ஷத்தை)  अधिगच्छति   அதி43ச்ச2தி  அடைகின்றான்.


எவன் ஆசைகளை அறவே அகற்றி, பற்றற்று அஹங்கார மமகாரமின்றி நடமாடுகின்றானோ அவன் மோக்ஷத்தை அடைகின்றான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

    இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.


விளக்கம்:

=> ஞானி இவ்வுலகில் எப்படி வாழ்கிறான்?

அனைத்து பந்தப்படுத்தும் ஆசைகளிலிருந்தும் விடுபட்டவனாக, இவ்வுலகில் ஞானி சுதந்திரமாக நடமாடுகிறான். ஜனகரை போன்ற ராஜாவாக இருந்தாலும் சரி அல்லது சங்கரரை போன்ற சந்யாசியாக இருந்தாலும் சரி அவர்களுடைய சுதந்திரத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை. தன்னிடத்திலேயே திருப்தியடைந்தவனாக இருப்பதால் தனது மகிழ்ச்சிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அவன் வேறு எதையும் சார்ந்திருப்பதில்லை. 

‘நானே அனைத்துமாக இருக்கிறேன்’ என புரிந்தவனுக்கு ‘என்னுடையது’ என்ற புத்தியும், மேலும் ‘நான்’ என்ற தனிப்பட்ட உணர்வும் கூட இருப்பதில்லை. சிலர் இதை தற்பெருமையாகப் பார்க்கிறார்கள். ஆனால் இது தற்பெருமை அல்ல. செறுக்கு, கர்வம் மற்றும் ‘இவைகளனைத்தும் என்னுடையது’ என ஒருவர் தனது உடைமை, கொள்திறன், செல்வம், பதவி, திறமை முதலியவற்றை அளவுகோலாகக் கொண்டு இனியொருவருடன் ஒப்பீடு செய்தலின் விளைவாக எழும் அஹங்காரத்தினால் தற்பெருமை உண்டாகிறது. ஆனால் ஞானிக்கோ தனக்கு வேறாக எதுவுமே இல்லாமற் போனதால், அங்கு அஹங்காரமும் முற்றிலும் இல்லாமற் போகிறது. பிரம்மன் மட்டுமே அவனுக்கு சத்தியமாக உள்ளது. 

இந்த சுலோகத்தில் பகவான் ‘நடமாடுகிறான்(சரதி)’ எனும் சொல்லை மிக அழகாக உபயோகிக்கிறார். ஞானி இவ்வுலகிலிருந்து விலகி ஓடுவதில்லை. அனைத்து ஆசைகளையும் விட்டவனாக அவன் பல்வேறு செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இந்த உலகம் தன்னுள் நுழையும் போதும், அல்லது தான் இந்த உலகச் செயல்களில் ஈடுபடும் போதிலும் ஸ்திதப்ரக்ஞனிடன் சாந்தி மட்டுமே உள்ளது. உலக விவகாரம் ஸ்திதப்ரக்ஞனின் அறிவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் அவனிடம் ‘நான் செய்பவன்’ அல்லது ‘நான் அனுபவிப்பவன்’ என்ற எண்ணம் இல்லாததால் அவன் மோக்ஷத்தை அடைகிறான்.

எல்லாவித பந்தப்படுத்தும் ஆசைகளிலிருந்து விடுபட்டு, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயமான உணவு, உடை, இருப்பிடம் இவற்றிலும் கூட பற்றில்லாதவனாக(நி:ஸ்ப்ருஹ:), ‘கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்துகிறேன்’ என்ற எண்ணத்துடன் தன்னுடையது என எதையும் நினைக்காத மமகாரமற்றவனாக(நிர்மம:), ‘நான் ஞானி’ என்ற கர்வமும் கூட இல்லாதவனாய், நான் என்கிற புத்தியை உடலில் வைக்காமல் ஆத்மாவில் வைத்து அஹங்காரமற்றவனாக(நிரஹங்கார:) எவனொருவன் நடமாடுகின்றானோ அவன் மோக்ஷத்தை அடைகின்றான். 


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உடம்பிலிருந்து தலை வெட்டப்பட்ட பிறகு சிறிது நேரம்வரை உயிர் இருப்பதைக் காண்பிக்க ஆட்டின் உடல் அசைந்து கொண்டிருக்கின்றது. அதுபோல பரிபூரண நிலையடைந்த ஞானியின் அஹங்காரம் அழிவுண்டபோதிலும் சரீர சம்பந்தப்பட்ட அலுவல்களைக் கவனிக்க அவ்வஹங்காரத்தின் சக்தி கொஞ்சம் எஞ்சியிருக்கின்றது. ஆனால் அவனைத் திரும்பவும் உலகத்தோடு இணைக்கக்கூடிய பலம் அதனிடம் இல்லை.

------------------------------------------------------------------------------

।।2.72।। ஞானம் மற்றும் ஞானியின் ஸ்துதி:

एषा ब्राह्मी स्थिति: पार्थ नैनां प्राप्य विमुह्यति ।

स्थित्वास्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति ।। ७२

ஏஷா ப்3ராஹ்மீ ஸ்தி2தி: பார்த2 நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி ।

ஸ்தி2த்வாஸ்யாமந்தகாலேऽபி ப்3ரஹ்மநிர்வாணம்ருச்ச2தி ।। 72


पार्थ  பார்த2  பார்த்தா   एषा   ஏஷா   இது   ब्राह्मी स्थिति:   ப்3ராஹ்மீ ஸ்தி2தி:  பிரம்மத்தில் நிலைபெறுவதாகிறது(பிரம்மனிடத்தில் பிரம்ம பாவமாக இருத்தல்)   एनाम्   ஏனாம்   இந்த நிலையை   

प्राप्य   ப்ராப்ய  அடையப்பெற்று    न विमुह्यति  ந விமுஹ்யதி  மோஹமடைவதில்லை 

अन्तकाले अपि   அந்தகாலே அபி   மரணகாலத்திலாயினும்   अस्याम्   அஸ்யாம்  இதில்    स्थित्वा   ஸ்தி2த்வா   நிலைத்திருந்து     ब्रह्मनिर्वाणम्  ப்3ரஹ்மநிர்வாணம்  பிரம்ம நிர்வாணத்தை    ऋच्छति   ருச்சதி   அடைகிறான்.


பார்த்தா, இதுவே பிரம்ம நிலைபேறு ஆகும். இதை அடைபவனுக்கு மோஹமில்லை. இறுதிக் காலத்திலாவது இதில் நிலைத்திருப்பவன் பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.


விளக்கம்:

=> ஸ்திதப்ரக்ஞன் எப்படி வாழ்கின்றான் என மீண்டும் கூறப்பட்டு முடிவுரை செய்யப்படுகிறது:

கனவில் இருக்கும் போது கனவில் காண்கிற பொருள்களுக்கும், அங்கு உண்டாகிற இன்ப துன்பங்களுக்கும் மதிப்புண்டு. அத்தகைய கனவைவிட பெருநிலையாகின்றது நனவு. நனவுக்கு வந்தவுடனே கனவைப்பற்றிய மயக்கம் போய்விடுகிறது. கனவில் வந்த இன்ப துன்பங்களுக்கு நனவில் மதிப்பில்லை. அதுபோல கனவுக்கும் நனவுக்கும் மேம்பட்ட நிலையொன்று உண்டு. அது பிரம்ம நிர்வாணம் என கூறப்படுகிறது. அதை அடையப் பெற்றவனுக்குக் கனவு, நனவு ஆகிய அவஸ்தைகளைப்பற்றிய மயக்கம் கிடையாது. மனம் மொழிக்கு எட்டாத இந்த பேரானந்தப் பெருநிலையிலிருந்து கீழே இறங்கிவந்தவன் ஜீவன். திருப்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன். பிரம்ம நிர்வாணம் அடைதலே ஜீவனின் குறிக்கோளாம். சாகும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது முக்தியேயாம். விடுதலையென்றும் வீடுபேறு என்றும் இதைச் சொல்வதுண்டு.

=> பிரம்மத்தை பற்றிய அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட நிலை அல்ல:

ஞானத்தில் நிலைத்திருத்தல் ஞான நிஷ்டா; ஆத்மாவையே பிரம்மமாக அறிவது பிரம்ம நிஷ்டா. இரண்டாவது அத்யாயத்தின் இறுதி சுலோகமான இங்கு இந்த பிரம்ம நிஷ்டா புகழப்படுகிறது. ஸ்தி2தி: எனும் சொல் இந்த நிஷ்டையைக் குறிக்கிறது. இங்கு பிரம்மனைப் பற்றிய அறிவில், பிரம்மத்தில் நிலைத்திருத்தல் அதாவது ஸ்திதப்ரக்ஞனாக இருத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட நிலை போல கூறப்பட்டுள்ளது. ‘நிலை’ எனும் சொல் உபயோகிக்கப்படும் போது பொதுவாக அது பின்வரும் குழப்பத்தை உண்டுபண்ணலாம். முன்னர் வேறொரு நிலையிலிருந்த ஒன்று, இப்போது இந்நிலையை அடைந்துள்ளது. இதே முறையில் பின்வரும் காலங்களில் அது வேறொன்றாக மாறலாம். உதாரணமாக நனவு நிலை சென்று கனவு வருகிறது. கனவு நிலை சென்று உறக்கம் வருகிறது. உறக்க நிலை செல்லும் போது நனவு வருகிறது. இப்படி ஒவ்வொரு நிலையும் மாற்றத்தை அடைந்து கொண்டேயுள்ளது. ஆனால் இந்த சுலோகத்தில் ‘நிலை’ என்பது அந்த அர்த்தத்தில் உபயோகிக்கப்படவில்லை. நிஷ்டை என்பது பிரம்மத்தில் நிஷ்டை, பிரம்மனை பற்றிய அறிவில் இருத்தல். இருப்பது ஆத்மாவாகிய நான் மட்டுமே, அந்த நான் பிரம்மனாகவே இருக்கிறேன். ஆத்மாவிற்கு வேறாக பிரம்மன் என்ற ஒன்று கிடையாது. ஆத்மாவே பிரம்மன். ‘நானே பிரம்மன்’ எனும் போது இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய அறிவே தவிர, இது வந்து செல்லும் ஒரு நிலை அல்ல. இந்த அறிவை அடைந்தவன் மோஹத்தை அடைவதில்லை. சொரூப ஞானத்தை அடைந்தவனிடம், ‘நான் ஜீவன், மரணத்திற்குட்பட்டவன், கர்த்தா, போக்தா’ போன்ற அறியாமையினால் விளையும் தவறான கருத்துக்கள் திரும்ப வருவதில்லை.

சங்கரர் தனது பாஷ்யத்தில், இறக்கும் தருவாயில் உள்ள ஒருவனால் மோக்ஷத்தை அடைய முடியுமெனில் மற்றவர்களாலும் அது இயலும் என்கிறார். பிரம்மச்சாரியோ அல்லது கிரஹஸ்த ஆஸ்ரமத்திலிருப்பவனோ, யாராக இருந்தாலும் இந்த பிரம்ம வித்யையை பயில்பவனால் மோக்ஷத்தை அடைய முடியும். 

அறிவை அடைதலின் மூலமே ஒருவன் மோக்ஷத்தை அடைகின்றான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்துடன் இரண்டாவது அத்யாயம் நிறைவு பெறுகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

புதிதாக கல்யாணம் செய்துகொண்ட நங்கையொருத்திக் குழந்தை பிறக்காமலிருக்கும் வரையில் அவள் எப்போதும் வீட்டு வேலைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்வாள். ஆனால் அவளுக்கு ஒரு மகவு பிறந்தவுடன் அவள் சில்லறை வேலைகளைக் கவனிப்பதில்லை. தன் குழந்தையிடம் கொஞ்சிக் குலாவுவதிலேயே அவளுக்குப் பொழுது போகின்றது. அதுபோல, அக்ஞானி கண்ட வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருப்பான். ஆனால் தன்னுள்ளத்திலே கடவுள் இருப்பதை உணர்ந்ததும் பழைய வேலைகளில் அவனுக்குப் பிரியமேற்படுவதில்லை. ஈசுவர சேவையிலேயே ஈடுபடுகிறான். வேறெதுவும் அவனுக்கு இன்பம் தருவதில்லை. ஈசுவரானுபவத்தில் உண்டாகும் ஆனந்தத்திலிருந்து அவனால் விலகியிருக்கவும் முடியாது.


ऒं तत्सत् । इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे साङ्क्ययोगो नाम द्वितीयोऽध्याय: ।। २ ।।

ஓம் தத் ஸத் ।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 ஸாங்க்யயோகோ3 நாம த்3விதீயோऽத்4யாய: ।। 2 ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் ஸாங்கிய யோகம் என்ற இரண்டாம் அத்தியாயம்.

----------------------------------------------------------------------------------------------------------------


ஸாங்கிய யோகம் சாரம்:

 (1) அர்ஜுனனின் சரணாகதி [1 - 10]

 (2) ஞான யோகம் [11 - 39]

 (3) கர்ம யோகம்  [40 - 53]

 (4) ஸ்தித ப்ரக்ஞ லக்ஷணம் & உபாயம் [54 - 72] 

-------------------------------------------------------------------------------------