திங்கள், 8 டிசம்பர், 2025

சிரத்தாத்ரய விபாக யோகம் 17.1

பதினேழாம் அத்தியாயம்

சிரத்தாத்ரய விபாக யோகம் 

[श्रद्धात्रयविभागयोग:]


முகவுரை:

சென்ற அத்தியாயத்தின் இறுதி சுலோகத்தில், ‘எனவே, என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை தீர்மானிப்பதில் சாஸ்திரத்தை பிரமாணமாக எடுத்துக் கொள்ளவேண்டும்என பகவான் கூறினார். எது சரி, எது தவறு என்பதைக் குறித்த பொதுவான அறிவு மக்களிடம் இருந்தாலும், அவற்றில் சரியானதைச் செய்து, தவறானதைத் தவிர்க்கும் பாங்கை நாம் அனைவரிடமும் பார்ப்பதில்லை. உதாரணமாக, திருடுவது தவறு என்பது அனைவருக்கும் தெரியும்; ஆனாலும் திருடர்கள் இருக்கிறார்கள். திருடுவதினால் அவன் எதைப் பெறுகிறான் என்பது அவனுக்குத் தெரியும், அச்செயலிலுள்ள ஆபத்துகளையும் அவன் அறிவான். அதே நேரத்தில், அவன் திருடினால் என்ன இழக்கிறான் என்பது அவனுக்குத் தெரியாது. சாஸ்திரத்தின் மூலமாக மட்டுமே இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்

நமது செயலைத் தேர்வு செய்யும் திறனும் கர்ம-நியதியும் ஒன்றாகச் செல்வதால், ஒரு செயலின் விளைவுகளிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. இங்கு தேர்வு என்பது நம்முன் இருப்பதில் நாம் எதை தேர்வு செய்கிறோம் என்பதை தீர்மானிப்பதைக் குறிக்கிறது. உதாரணமாக நான் திருடலாம், அல்லது அது எனக்கு தேவையில்லை என விலகலாம். நான் இனியொருவரை புண்படுத்தலாம், அல்லது அதை தவிர்க்கலாம். நான் பொய்யைச் சொல்லலாம் அல்லது அந்த இடத்தில் உண்மையைச் சொல்லவும் முடியும். நான் உதவலாம், அல்லது நிராகரிக்கலாம். இனி, இந்த தேர்வை நான் எதன் அடிப்படையில் செய்கிறேன்? மேலும் இங்கு இந்த தேர்வு என்பது சரி அல்லது தவறான செயலுக்கான சாத்தியக்கூறு என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இயல்பான உள்ளுணர்வின் மூலம் ஒருவன் சரியான மற்றும் தவறான செயலுக்கான புரிதலை அடைய முடியும். இது கற்பிக்கப்படாமலேயே அனைவருக்கும் தெரியும். சரி, தவறு பற்றிய இந்த உலகளாவிய உள்ளுணர்வு தர்மம் என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது செயலைத் தேர்ந்தெடுக்கின்ற சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தர்ம-நியதிக்கு இணங்குகிற அல்லது எதிரான ஒரு செயலைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த நியதியானது ஒருவனை அதற்கேற்ற பொருத்தமான முறையில் பாதிக்க வேண்டும். ஒரு பொருள் உயரத்திலிருந்து விழுந்தால், அது எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, அது கீழே விழும்; அதுதான் இயற்கை நியதி. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தைப் போலன்றி, இயற்கை விதியிலிருந்து யாராலும் தப்பிக்க இயலாது. உதாரணமாக நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டிய பின்னரும், ஒரு போக்குவரத்து அதிகாரியின் பார்வையிலிருந்தும், அதனால் ஏற்படுகிற சட்ட ரீதியான விளைவுகளிலிருந்தும் ஒருவன் தப்பிக்கலாம். ஆனால் இயற்கை நியதியை தவிர்க்கவோ அதிலிருந்து தப்பிக்கவோ யாராலும் முடியாது. நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது நியதி; அதை தவிர்க்க முடியாது

ஒருவனின் கர்ம-நியதி என்பது தர்ம-நியதியை மையமாகக் கொண்டது. அது அவனின் தேர்வு சுதந்திரம் மற்றும் செயல் செய்தல்(கர்த்ருத்துவம்) எனும் உணர்வோடு இணைக்கப்பட்டுள்ளது. பிற உயிரினங்களைப் போலல்லாமல், ஒரு செயலைச் செய்யவோ அல்லது அதைத் தவிர்க்கவோ மனிதனுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர்க்கப்பட வேண்டிய ஒரு செயலை நீங்கள் தவிர்க்க முடியும், ஆனால் அதைச் செய்யும்போது அதற்கான பலன் நிச்சயமாகக் கிடைக்கும். தர்ம நியதியைக் குறித்த பொதுவான புரிதல் இருந்தும் மக்கள் ஏன் அதை மீறுகிறார்கள்? ஏனென்றால் அதனால் அவர்கள் என்ன இழக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் என்ன பெறுகிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கிறார்கள். உதாரணமாக ஒருவரைக் கொள்ளையடிப்பதன் மூலம், எனக்கு கொஞ்சம் பணம் கிடைக்கிறது, பணத்தின் மூலம் என்ன செய்ய முடியும் என்பது எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நான் இழப்பது என்ன என்பது எனக்குத் தெரியாது, அங்குதான் சாஸ்திரம் எனக்கு அந்த அறிவைக் கொடுக்கிறது. ஒவ்வொரு செயலும், அதிர்ஷ்ட-பலன் எனச் சொல்லப்படும் கண்ணுக்குத் தெரியாத விளைவை உருவாக்குகிறது என அது கூறுகிறது. மேலும், அதை அடிப்படையாகக் கொண்டு ஒருவன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதையும் சாஸ்திரம் சொல்லுகிறது. எனவேதான் சாஸ்திரத்தில் சிரத்தை கொண்டு செயல் செய்வாயாக என அர்ஜுனனிடம் பகவான் கூறினார். இது அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது.


=> அர்ஜுனனின் சந்தேகம்:

நாம் எடுத்துக் கொண்டிருக்கிற விசாரணையின் அடிப்படையில் மனிதர்களை நான்கு விதமாகப் பிரிக்கலாம்:

   (1) சாஸ்திரத்தை அறிந்தவர்கள், அதில் சிரத்தை உடையவர்கள்சா1ஸ்த்ரக்ஞ: ச்1ரத்3தா4வாந்.

   (2) சாஸ்திரத்தை அறிந்தவர்கள், அதில் சிரத்தை இல்லாதவர்கள்சா1ஸ்த்ரக்ஞ: அச்1ரத்3தா4வாந்.

   (3) சாஸ்திரத்தை அறியாதவர்கள், அதில் சிரத்தை இல்லாதவர்கள்அசா1ஸ்த்ரக்ஞ: அச்1ரத்3தா4வாந்.

   (4) சாஸ்திரத்தை அறியாதவர்கள், அதில் சிரத்தை உடையவர்கள்அசா1ஸ்த்ரக்ஞ: ச்1ரத்3தா4வாந்.

சென்ற அத்தியாயத்தில் (1), (2) மற்றும் (3) ஆகியோர் அடையும் பலன் குறித்து பகவான் விளக்கியிருந்தாக அர்ஜுனன் நினைக்கிறான். அதாவது சாஸ்திரத்தை அறிந்து அதில் சிரத்தை உடையவர்களாக நடந்து கொள்பவர்கள் நற்கதியை அடைகிறார்கள்(16.22). மாறாக, சாஸ்திரத்தில் அல்லது தர்ம-நியதியில் நம்பிக்கை இல்லாமல் அசுர இயல்புடன் இருப்பவர்களுக்கு சித்தி இல்லை, சுகம் இல்லை, மோக்ஷம் இல்லை(16.23). இனி நான்காவது வகையினராக இருக்கின்ற மக்களின் நிலை என்ன? அதாவது சாஸ்திரத்தில் சிரத்தை இருப்பதனால் அவன் அசுரன் அல்ல, ஆனால் அறியாமை இருப்பதனால் அவன் தெய்வீக சம்பத் உடையவனும் அல்ல. அப்படிப்பட்டவனின் கதி என்ன என அர்ஜுனனுக்கு சந்தேகம் எழுகிறது

---------------------------------------------------------------------------------------------

||17.1|| அர்ஜுனனின் கேள்வி:

अर्जुन उवाच

ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विता:

तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तम: ।। ।।

அர்ஜுந உவாச

யே சா1ஸ்த்ரவிதி4முத்ஸ்ருஜ்ய யஜந்தே ச்1ரத்34யாந்விதா:

தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம: ।। 1 ।।


अर्जुन उवाच  அர்ஜுன உவாச  அர்ஜுனன் சொன்னது

कृष्ण  க்ருஷ்ண  கிருஷ்ணா     ये  யே  யார்      शास्त्र विधिम्  சா1ஸ்த்ர விதி4ம்  சாஸ்திர விதியை       उत्सृज्य  உத்ஸ்ருஜ்ய  மீறி     तु  து  ஆனால்      श्रद्धया  ச்1ரத்34யா  சிரத்தையோடு      

अन्विता:  அந்விதா:  கூடியவர்களாய்      यजन्ते  யஜந்தே  ஆராதிக்கிறார்களோ     

तेषां  தேஷாம்  அவர்களுடைய      निष्ठा  நிஷ்டா  நிலை      का  கா  எத்தகையது      

सत्त्वम्  ஸத்த்வம்  சத்வமா     रजस्  ரஜஸ்  ரஜஸா     आहो  ஆஹோ  அல்லது      तम:  தம:  தமஸா?


அர்ஜுனன் சொன்னது:

கிருஷ்ணா, யார் சாஸ்திர விதியை மீறி, ஆனால் சிரத்தையோடு கூடியவர்களாய் ஆராதிகிறார்களோ அவர்களுடைய நிலை சத்வமா ரஜஸா அல்லது தமஸா?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தாமசா?)


விளக்கம்:

=> சாஸ்திரத்தை அறியாதவர்கள், அதில் சிரத்தை உடையவர்கள்:

சிலருக்கு தெய்வ வழிபாடு அல்லது பிரார்த்தனைகள் குறித்து சாஸ்திரத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது தெரியாது. ஆனாலும் அவர்கள் தங்களது வாழ்க்கையில் சிரத்தையுடன் கூடியவர்களாக வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அவர்களைக் குறித்து அர்ஜுனன் இந்த கேள்வியைக் கேட்கிறான். சாஸ்திர விதிமுறைகளைக் கைவிட்டு அவர்கள் இந்த சடங்குகளைச் செய்கிறார்கள்சா1ஸ்த்ர விதி4ம் உத்ஸ்ருஜ்ய. இங்குஉத்ஸ்ருஜ்யஎனில்கைவிடுதல்மட்டுமல்ல, ‘சரியாக அல்லது முழுமையாகப் பின்பற்றாமல் இருத்தல்என்றும் பொருள். அதாவது அவர்கள் சாஸ்திரத்தை முற்றிலுமாகப் பின்பற்றவில்லை என்று நாம் கூற முடியாது; இல்லையெனில், அதை வழிபாடு என்று நாம் அழைக்க மாட்டோம். குடும்பத்தில் உள்ளவர்களாலோ அல்லது வேறு யாரேனும் ஒருவர் செய்வதைப் பார்த்தோ அதை கற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் சாஸ்திரத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்தையும் கவனமாக முழுவதுமாகப் பின்பற்றவில்லை. இருந்தாலும் அவர்கள் அதைச் சிரத்தையுடன் செய்கின்றனர்


=> சத்வமா? ரஜஸா? அல்லது தமஸா?

அத்தகையவர்களின் அர்ப்பணிப்பு, அவர்களின் நிஷ்டை அல்லது செயலுக்கான அடிப்படையாக இருப்பது என்ன என அர்ஜுனன் யோசிக்கிறான். அதாவது முக்குணங்களின் அடிப்படையில் அவர்களின் அந்தக்கரணத்தின் தன்மை என்னவாக இருக்கிறது? அவர்களின் இந்த செயல்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது சத்வமா? ரஜஸா? அல்லது தமஸா? அவர்கள் செய்யும் வழிபாடு சாத்விகமானதா? ராஜஸமானதா? அல்லது தாமஸமானதா? என்பதுதான் இங்கு கேள்வி என்கிறார் சங்கரர். யார் வணங்கப்படுகிறார்கள், வழிபடுபவர்களின் மனப்பான்மை மற்றும் அதன் நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்து இவ்வகைகள் தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக சூனியவாதிகளின் வழிபாடுகள் தாமஸத்தைக் குறிக்கிறது

அர்ஜுனனின் இந்த கேள்விக்கு கிருஷ்ணர்சாத்விகமானதுஎன ஒரே வரியில் பதிலளித்திருக்க முடியும். ஆனால் இந்த கேள்வியானது சிரத்தையைப் பற்றிய முழுமையானப் புரிதல் இல்லாததால் அர்ஜுனனுக்கு எழுந்துள்ளது. ஒரு விஷயத்தைக் குறித்த பொதுவான கேள்விக்கு அதை கூறுகளாகப் பிரிக்காமல் பதிலளிக்கக்கூடாது என்பதாகக் கூறி தனது பாஷ்யத்தில் சங்கரர் பகவானின் பதிலை அறிமுகப்படுத்துகிறார். எந்தவொரு தலைப்பையும் புரிந்துகொள்வதில் இது மிகவும் அவசியமானதாக உள்ளது. மருத்துவரிடம் வலி இருப்பதாக புகார் அளிக்கும் ஒருவனிடம், மருத்துவர் முதலில் வலியின் இருப்பிடத்தையும் தன்மையையும் கண்டறிய உதவும் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்பார். இதுப்ரவிபா43என்று அழைக்கப்படுகிறது. பிரச்சனையை ஓரிடத்திற்குட்படுத்தும் வரை நீங்கள் தொடர்ந்து மறுத்துக்கொண்டே இருப்பீர்கள். எனவே, சிரத்தையை பொதுமைப்படுத்திவிட முடியாது. ஏனெனில் முக்குணத்தின் அடிப்படையில் மூன்றுவகையான சிரத்தை உள்ளது.

இந்த முழு அத்தியாயத்தின் தலைப்பும் மூன்று விதமான சிரத்தையை பிரித்துப் பார்ப்பதாக உள்ளதுச்1ரத்3தா4-த்ரய-விபா43-யோக3ம். ஒருவனுக்கு இருக்கின்ற இந்த சிரத்தையின் வகையே அவனது உணவுப் பழக்கம் உட்பட பல விஷயங்களையும் தீர்மானிக்கப் போகிறது. எனவே, மூன்று வகையான சிரத்தையின் பல்வேறு வெளிப்பாடுகள் இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட உள்ளது.

---------------------------------------------------------------------------------------------