||16.22|| அசுர-இயல்பிலிருந்து விடுதலை அடைவதன் பலன்:
एतैर्विमुक्त: कौन्तेय तमोद्वारैस्त्रिभिर्नर: ।
आचरत्यात्मन: श्रेयस्ततो याति परां गतिम् ।। २२ ।।
ஏதைர்விமுக்த: கெளந்தேய தமோத்3வாரைஸ்த்ரிபி4ர்நர: ।
ஆசரத்யாத்மந: ச்1ரேயஸ்ததோ யாதி பராம் க3திம் ।। 22 ।।
कौन्तेय கெளந்தேய குந்தியின் மைந்தா एतै: त्रिभि: ஏதை: த்ரிபி4: இம்மூன்று
तमो द्वारै: தமோ த்3வாரை: நரக வாயில்களிலிருந்தும் विमुक्त: விமுக்த: விடுபட்ட
नर: நர: மனிதன் आत्मन: ஆத்மந: தனக்கு श्रेय: ச்1ரேய: நலன்
आचरति ஆசரதி செய்து கொள்கிறான் तत: தத: பின்பு
परां गतिम् பராம் க3திம் மோக்ஷத்தை याति யாதி அடைகிறான்.
அர்ஜுனா, இம்மூன்று நரக வாயில்களிலிருந்தும் விடுபட்டவன் தனக்கு நலன் செய்துகொண்டு பின்பு மோக்ஷத்தை அடைகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.
விளக்கம்:
அசுர-குணங்களிலிருந்து விடுதலை அடைவதால் உண்டாகும் பலன் குறித்து இந்த சுலோகத்தில் எடுத்துரைக்கிறார் பகவான் கிருஷ்ணர்.
=> தனக்கு நலன் செய்துகொள்கிறான்:
இந்த சுலோகத்தில் இருள் எனும் பொருளில் வந்துள்ள ‘தமஸ்’ எனும் சொல் நரகத்தைக் குறிக்கிறது. ஏனெனில் அங்கு விவேகம் மறைக்கப்பட்டுள்ளதால் குழப்பம் இருக்கிறது; இதனால் துயரமும் இருக்கிறது. குழப்பத்தின் ஆதிக்கம் இருக்கின்ற இடத்தில் சுகம் இருப்பதில்லை. ஆகவேதான் காமம், குரோதம் மற்றும் லோபம் போன்றவைகள் இத்தகைய நரகத்தின் நுழைவாயில்களாக இருக்கின்றன.
இந்த சுலோகத்தில் விவாதிக்கப்படும் ‘நர’ என்பவன், துக்கத்தின் இந்த மூன்று வாயில்களிலிருந்தும் முற்றிலும் விடுதலையடைந்தவன். ‘நர’ என்றால் ஒரு மனிதன் என்று அர்த்தம்; வினையடியின் வரையறைப்படி, அழிக்கப்படாதவன் நரன் — ந ரீயதே இதி நர:. இந்த வரையறையே மனிதன் என்பவன் அழியாத தத்துவம், ஆத்மா, என்று நமக்குச் சொல்லுகிறது. காமம், குரோதம் மற்றும் லோபத்தால் தாக்கப்படாத இந்த நரன், தனது விவேகத்தைப் பயன்படுத்த முடியும். எனில் சரியான ஒழுக்க நெறிமுறைகளைக் கொண்ட வாழ்க்கையை வாழ்கிறான், அதாவது தனது இறுதி நலனுக்கு இட்டுச் செல்லும் ஒரு வாழ்க்கையை அவன் வாழ்கிறான், ச்1ரேயோ-மார்க்க3ம் ஆசரதி. இங்கே நலன் என்பதைக் குறிக்கின்ற ‘ச்1ரேயஸ்’ என்ற வார்த்தையின் அர்த்தம், நலனைத் தருகின்ற பாதையைக் குறிக்கிறது, ச்1ரேயோ-மார்க்க3. அப்போதுதான் அது ‘ஆசரதி’ என்ற வினைச்சொல்லுடன் இணையும்.
=> விவேகத்தின் அவசியம்:
முந்தைய சுலோகத்தில் கூறப்பட்ட சுய-அழிவுப் பாதையான, ஆத்மந: நாச1நம் எனும் நிலைக்கு மாறாக, இங்கு கூறப்படுகிற இந்த நரன் தனக்கு நன்மையைத் தருகிற பாதையைப் பின்பற்றுகிறான் - ஆத்மந: ச்1ரேய: ஆசரதி. தவறான செயல்களைச் செய்யத் தூண்டிய காமம், குரோதம் மற்றும் லோபம் எனும் தடைகளிலிருந்து அவன் விடுபட்டிருப்பதால் இது சாத்தியமாகிறது. இவை மூன்றின் மூலமும் ஒருவன் தனது அனைத்து சக்திகளையும் சிதறடிக்கும்போது, அவனுக்கு என்ன விவேகம் இருக்க முடியும்? அவனுக்கு சரியாக சிந்திக்கக்கூட நேரமிருக்காது. மேலும் இவைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் தொடங்குவதற்கும் அவனுக்கு குறைந்தபட்ச விவேகம் தேவை. அப்படி அவன் அதை தொடங்கிவிட்டால், தனது மனதில் தெரிகிற மாற்றத்திலிருந்தே அது அவனுக்கு நன்மையைத் தருகிறது என்பதை அவன் உணரமுடியும். அனைத்தும் விவேகத்தின் காரணமாகவே நடைபெறும். காமம், குரோதம் மற்றும் லோபம் இருப்பது மிகவும் இயற்கையானது; ஒவ்வொரு குழந்தையிடமும் அவைகளை நம்மால் பார்க்கமுடியும். ஆனால் அவற்றிலிருந்து விடுபடுவதே வயது மற்றும் மன முதிர்ச்சியைக் காட்டுகிறது, அதற்கு நிறைய விவேகம் தேவைப்படுகிறது.
எனவே போதுமான அளவு விவேகம் இருக்கும்போதே ஒருவன் தனக்குரிய நலன்(சிரேயஸ்), அது அர்த்த, காம, தர்ம அல்லது மோக்ஷம் என எதுவாக இருந்தாலும் அதை சரியாகத் தொடரமுடியும். இவை நான்கில் ஒருவனின் உண்மையான சிரேயஸ் என்பது மோக்ஷமே ஆகும். ஏனெனில் இழத்தலை தவிர்க்க முடியாத விஷயங்களிலிருந்து ஒருவன் கண்டிப்பாக தனது பாதுகாப்புணர்வை பெற முடியாது. உண்மையான பாதுகாப்பு என்பது எதற்கும் பயப்படாமல் இருத்தலைக் குறிக்கிறது, அது மோக்ஷம் மட்டுமே ஆகும். அனைத்து புருஷார்த்தத்தையும் பகுப்பாய்வு செய்து பார்க்கும்போது அவை உண்மையில் மோக்ஷத்தில் மட்டுமே நிறைவேறுகின்றன என்பதைக் காணமுடியும். ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னாலும் இருக்கின்ற உண்மையான இலக்கு என்பது மோக்ஷமே ஆகும். முன்பு காம, குரோத மற்றும் லோபத்தினால் கட்டப்பட்டவன், இப்போது அதிலிருந்து விடுபட்டு, விமுக்த, தனக்கு நன்மை தருகிற சரியான பாதையில் பயணத்தை மேற்கொள்கிறான். அதன் காரணமாக, அவன் மேலான முடிவைப் பெறுகிறான், தத: பராம் க3திம் யாதி. அதாவது மோக்ஷத்தை, மேலான சுகத்தை, ஜீவன் முக்தியை அடைகிறான்.
காமம், குரோதம் மற்றும் லோபம் உள்ளிட்ட அனைத்து அசுர தன்மைகளையும் அகற்றி, மேன்மையை அடைவதற்கு வழி காட்டுவது எது என்கிற கேள்விக்கான பதிலை அடுத்த சுலோகத்தில் தருகிறார் பகவான்.
---------------------------------------------------------------------------------------------
||16.23||அசுர இயல்பை அகற்றி மேன்மையடைதற்கு வழிகாட்டுவது எது?
य: शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारत: ।
न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् ।। २३ ।।
ய: சா1ஸ்த்ரவிதி4முத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத: ।
ந ஸ ஸித்3தி4மவாப்நோதி ந ஸுக2ம் ந பராம் க3திம் ।। 23 ।।
य: ய: யார் शास्त्र विधिम् சா1ஸ்த்ர விதி4ம் சாஸ்திர விதியை
उत्सृज्य உத்ஸ்ருஜ்ய புறக்கணித்துவிட்டு कामकारत: காமகாரத: காமத்தால் தூண்டப்பெற்று वर्तते வர்ததே வினையாற்றுகிறானோ स: ஸ: அவன்
सिद्धिम् ஸித்3தி4ம் பரிபூரணத் தன்மையை न अवाप्नोति ந அவாப்நோதி அடையமாட்டான்
न सुखं ந ஸுக2ம் சுகத்தை அடையமாட்டான்
न परां गतिम् ந பராம் க3திம் மோக்ஷத்தை அடைகிறானில்லை.
காமத்தின் வசப்பட்டு சாஸ்திரத்தின் ஆணையை மீறி நடப்பவன் எவனோ அவன் பரிபூரணத் தன்மையை அடைகிறானில்லை. சுகம் அடையகிறானில்லை, முக்தியை அடைவதில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.
விளக்கம்:
சுலோகம் இருபத்தொன்றில் நரகத்தின் வாயிலாக இருக்கின்ற காம, குரோத லோபத்தை விட்டுவிடு என பகவான் கூறினார். அவ்விதம் விடப்பட்டால் கிடைக்கப்பெறுகிற பலன் குறித்து சென்ற சுலோகத்தில் எடுத்துரைத்தார். அவைகளை துறக்காவிட்டால் ஏற்படுகிற விளைவுகளைக் குறித்து இந்த சுலோகத்தில் பேசுகிறார். மேலும் அசுர தன்மையை விடுவதற்கு வழிகாட்டுவது எது என்பதையும் இங்கு கோடிட்டுக் காட்டுகிறார்.
=> சாஸ்திரம்:
காமத்தின் வசப்பட்டு இருப்பவன் இங்கு ‘காமகாரத:’ என்றழைக்கப்படுகிறான். ஆசைகளால் முழுமையாகக் கட்டுண்டு வாழ்க்கையை நடத்துபவனாக மட்டுமல்லாமல், அவற்றை நிறைவேற்றுவதில் முழு அர்ப்பணிப்புடன் இருக்கின்ற இவன் என்ன செய்கிறான்? சாஸ்திரத்தின் நியதிகளைப் பொருட்படுத்துவதில்லை — சா1ஸ்த்ர விதி4ம் உத்ஸ்ருஜ்ய. இங்கே சாஸ்திரம் என்பது, என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்கிற நமது அறிவிற்கு ஆதாரமாக விளங்கும் வேதத்தைக் குறிக்கிறது. இது, ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிற நேர்மறை வாக்கியங்களையும், அதே சமயத்தில் எதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் எதிர்மறை வாக்கியங்களையும் கொண்டுள்ளது. இவை அதன் விதிகள்(விதி4) ஆகும். சாஸ்திர விதிகளைப் புறக்கணித்துவிட்டு தனது காமத்தினால் மட்டுமே தூண்டப் பெற்றவனாய் வினையாற்றுகிற ஒருவனை இங்கே காண்கிறோம். அப்படிப்பட்டவன் என்ன விளைவுகளை அடைகிறான்?
=> சித்தியில்லை, சுகமில்லை, மோக்ஷமில்லை:
அவன் சித்தியைப் பெறுவதில்லை, ஸித்3தி4ம் ந அவாப்நோதி. மனத்தூய்மையை, பரிபூரண நிலையைப் பெறுவதில்லை. ஒருவன் தனக்கான நன்மையைத் தேடுவதற்கான தகுதி சித்தி என சங்கரர் விளக்கமளிக்கிறார். இது ஒருவித முதிர்ச்சியைக் குறிக்கிறது. ஒரு மனிதன் முதலில் அடையவேண்டியது தன்னை சரியாகக் கவனித்துக் கொள்ளும் திறன்; இரண்டாவது கல்வி, இது ஒரு அறிவுசார் ஒழுக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட உணர்வுரீதியான ஒழுக்கத்தையும் தருகிறது. இது சரியாக அமையப்பெறும்போது அர்த்த, காம, தர்ம மற்றும் மோக்ஷ என எந்தவொரு நோக்கத்தையும் தொடருகிற திறனைப் பெறலாம். எந்தவொரு இலக்கை அடைவதற்கும் ஒரு மனமுதிர்ச்சி அவசியம். அந்த முதிர்ச்சி இல்லாதபோது, வாழ்க்கையில் எந்தவொரு மதிப்புமிக்க நாட்டமோ அல்லது சாதனையோ நடைபெற முடியாது. அப்படியெனில், இந்த வாழ்க்கையில் எந்த சுகமும் இருக்காது, ந ஸுக2ம். இன்பத்தை அடையவும் ஒருவனுக்கு முதிர்ச்சி இருக்கவேண்டும், இல்லையெனில் எந்த சிறிய விஷயமும் அவனை வருத்தப்படுத்தும் தகுதியை அடைந்துவிடுகிறது. இந்த உலகில் சுகம் இருக்காது என்பது மட்டுமல்லாமல், அவன் மேலான கதியை அடைவதில்லை — ந பராம் க3திம், என்கிறார் பகவான். அது சொர்க்கமாக இருந்தாலும் சரி, மோக்ஷமாக இருந்தாலும் சரி.
சாஸ்திரத்தின் உபதேசத்தைப் புறக்கணித்து, ஆசையின் வசம் சிக்கிக்கொண்டு வாழ்பவன், மனத்தூய்மையை அடையமாட்டான்; இதனால் மனிதன் அடைகிற இன்பத்தை, நிறைவை அவன் அடையமாட்டான்; மேலும் மோக்ஷத்தையும் அடையமாட்டான். எனவே, கீதையின் ஆசிரியரான கிருஷ்ணர், அசுரர்களின் இதயங்களில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்ற இந்த மூன்று அசுர இயல்புகளான காமம், குரோதம் மற்றும் லோபத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறார்.
---------------------------------------------------------------------------------------------
||16.24|| சாதகன் ஒருவன் செய்ய வேண்டியதாவது:
तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ ।
ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि ।। २४ ।।
தஸ்மாச்சா2ஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்தி2தெள ।
ஜ்ஞாத்வா சா1ஸ்த்ரவிதா4நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி ।। 24 ।।
तस्मात् தஸ்மாத் ஆகையினால் कार्य अकार्य व्यवस्थितौ கார்ய அகார்ய வ்யவஸ்தி2தெள செய்யத் தகுந்தது, செய்யத் தகாதது என்பதை நிச்சயிப்பதில் ते தே உனக்கு
शास्त्रं प्रमाणं சா2ஸ்த்ரம் ப்ரமாணம் சாஸ்திரம் பிரமாணமாகிறது इह இஹ இங்கு
शास्त्र विधान उक्तं சா1ஸ்த்ர விதா4ந உக்தம் சாஸ்திர விதியில் சொல்லப்பட்டதை
ज्ञात्वा ஜ்ஞாத்வா அறிந்து कर्म कर्तुम् கர்ம கர்தும் கர்மம் செய்ய
अर्हसि அர்ஹஸி கடமைப்பட்டிருக்கிறாய்.
ஆகையால், செய்யத் தகுந்ததையும் தகாததையும் நிச்சயிப்பதில் சாஸ்திரம் உனக்குப் பிரமாணமாகிறது. இங்கு சாஸ்திர விதியில் சொல்லப்பட்டதை அறிந்து கர்மம் செய்யக் கடவாய்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான், சாதகனுக்கான ஒரு அறிவுரையுடன் இந்த தலைப்பை முடிவுரை செய்கிறார்.
=> சாஸ்திரம் பிரமாணம்:
‘ஆகவே உனக்கு சாஸ்திரம்தான் பிரமாணம்’ என பகவான் அர்ஜுனனுக்கு அறிவுரை செய்கிறார். வேத சாஸ்திரம் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பிரமாணம் ஆகிறது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்யப்பட வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதற்கான வழிகாட்டியாக சாஸ்திரம் விளங்குகிறது. சாஸ்திரம்தான் வழிகாட்டி, உன்னுடைய காமம் வழிகாட்டியல்ல எனக் கூறுகிறார் பகவான்.
பிரமாணம் எனில் கருவி; அறிவைக் கொடுக்கும் கருவி. இந்த வார்த்தையின் அர்த்தம், ப்ரமா-கரணம் ப்ரமாணம் — அறிவு உருவாகக் கருவியாக இருப்பது பிரமாணம் என்பதாகும். என்ன மாதிரியான அறிவு? ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிக்கத் தேவையான அறிவு. ஒருகால் ஒருவனுக்கு தனக்கு இது சரியானதா இல்லையா, என்ன வகையான கர்மங்களை அல்லது பிரார்த்தனைகளை எப்போது செய்ய வேண்டும், அவற்றைச் செய்யும் முறை, எவ்வளவு செல்வம் தன்னிடம் இருக்க முடியும், எவ்வளவு பகிர்ந்தளிக்க அல்லது தானம் செய்யப்பட வேண்டும், எப்படி மற்றும் யாருக்கு தானம் செய்யப்பட வேண்டும் போன்றவற்றை அறிய விரும்பினால் சாஸ்திர நெறிமுறைகள் அதற்கு வழிகாட்டுகிறது. சாஸ்திர விதியில் சொல்லப்பட்ட நெறிமுறைகளை அறிந்து இங்கு கர்மம் செய்ய கடமைபட்டிருக்கிறாய் — சா1ஸ்த்ர விதா4ந உக்தம் ஜ்ஞாத்வா கர்ம கர்தும் அர்ஹஸி, என்கிறார் பகவான். ‘விதா4ந’ எனில் கட்டளையிடப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகள் என்று பொருள். உதாரணமாக, ‘துன்புறுத்தாதே — ஹிம்சாம் ந குர்யாத்’ என்றும் ‘பொய் கூறாதே — அநர்த2ம் ந ப்3ரூயாத்’ என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவனது செயல்கள், அதிர்ஷ்ட பலன் எனக் கூறப்படும் புண்ணியத்தையும் பாபத்தையும் ஈர்க்கின்றது என்பதால் தனது செயல்களில் கவனமாக இருத்தல் வேண்டும்.
சம்சார சாகரத்தைக் கடந்து அப்பால் செல்லுதற்கு சாஸ்திரம் உற்ற துணையாகிறது. ஆதலால் இவ்வுலகில் கட்டுண்டு கிடக்கும் ஒருவன், இதிலிருந்து மீளுவதற்கு கையாளுகிற கர்மங்களெல்லாம் சாஸ்திரத்திற்கு உடன்பட்டவைகளாக இருத்தல் வேண்டும். முற்றிலும் தெய்வ சம்பத்தில் ஊறியிருப்பவர்கள் இயல்பாகவே சாஸ்திர விதியை பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய செயலும் சாஸ்திரப் பிரமாணமும் ஒன்றுபட்டிருக்கின்றன.
=> மனித லோகம்:
இங்கு நீ கர்மம் செய்ய கடமைபட்டிருக்கிறாய்— இஹ கர்ம கர்தும் அர்ஹஸி, எனக் கூறுகிறார் பகவான். ‘இங்கு’(இஹ), அதாவது இந்த உலகில், இந்த பூமியில் ஒரு மனிதனாக நமக்கு செயல்படவும் அல்லது செயல்படாமல் இருக்கவும் சுதந்திரம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மறுபுறம், சொர்க்கம் போன்ற பிற உலகங்களில், ஒருவனுக்கு இந்த சுதந்திரம் இல்லை என சாஸ்திரம் கூறுகிறது. அங்கு ஒருவனால் கர்மத்தை தீர்க்க மட்டுமே முடியும், புதிய கர்மத்தைச் செய்து புண்ணியத்தையோ அல்லது பாபத்தையோ சேகரிக்க முடியாது. ஒரு கோணத்தில் இந்த பூமியிலும்கூட இந்தியா கர்ம-பலனை சேகரிக்க ஒரு சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. மாறாக, அமெரிக்கா உள்ளிட்ட சில மேலை நாடுகள் ஒரு போக-பூமியாக, கர்ம-பலனை அனுபவிக்கும் இடமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் பொதுவாக இந்த பூமியில் எல்லா இடங்களிலும், மனிதர்களாக, நமது செயலை நாம் தேர்ந்தெடுக்கவும், மற்றும் அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் ஏற்றதான சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மாறாக, கந்தர்வ-லோகத்தை எடுத்துக் கொண்டால், அங்கு எல்லா நேரமும் இசையை அனுபவிப்பதிலேயே கழிகிறது. எனில் அங்கு ஒருவர் என்ன கற்றுக்கொள்ள முடியும்? எனவே இந்த மனிதப் பிறப்பு மிகவும் அரிதானது, விலைமதிப்பற்றது. தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் என்பது இங்கு நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்; இந்த உலகில் கர்மத்தைக் கற்றுக் கொள்ளவும், செய்யவும், கர்மபலத்தைப் பெறவும் உள்ள சுதந்திரத்தை ஒருவன் சரியாகப் பயன்படுத்த வேண்டும், துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது. பகுப்பாய்வு செய்யும்போது, கர்மங்களைப் பற்றி சாஸ்திரம் கூறுகிற சாராம்சம் இதுதான். எனவே சாஸ்திரங்கள் விதித்த கர்மத்தை அறிந்து, கர்மம் செய்யக் கடவாய் — கர்ம கர்தும் அர்ஹஸி.
தெய்வீக சம்பத் மற்றும் அசுர சம்பத் பற்றி விளக்கமாகப் பேசிய பகவான், அர்ஜுனனிடம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் அவன் எப்போதும் சாஸ்திரத்தின்படி நடக்க வேண்டும் என்பதாகக் கூறி இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
‘நீங்கள் எந்த சாஸ்திரத்தை பின்பற்றுகிறீர்கள்’ என்று ஓர் அன்பர் ஶ்ரீ ராமகிருஷ்ணரிடம் கேட்டார். ‘நான் ஒரு சாஸ்திரத்தையும் பின்பற்றுவதில்லை. என் சித்தமிசைகுடிகொண்டுள்ள தெய்வத்தின் அனுமதி கேட்டு என் வாழ்க்கையை நடாத்துகிறேன். ஆகையால் நான் தவறிப் போவதில்லை. என் வாழ்க்கை சாஸ்திரத்துக்கும் முரண்படாது’ என்றார் அவர்.
---------------------------------------------------------------------------------------------
ऒं तत् सत् । इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रीकृष्णार्जुनसंवादे दैवासुरसम्पद्विभागयोगोनाम षोडशोऽध्याय: ।।
ஓம் தத் ஸத்। இதி ஶ்ரீமத்3ப4க3வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 தைவாஸுரஸம்பத்3விபா4க3யோகோ3நாம ஷோட4சோ1ऽத்4யாய: ।।
ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் தைவாசுரசம்பத் விபாக யோகம் என்ற பதினாறாம் அத்தியாயம்.
——————————————————————————————————
தைவாசுரசம்பத் விபாக யோகம் - சாரம்:
(1) தெய்வீக சம்பத் - 26 பண்புகள் [1 - 3]
(2) அசுர சம்பத் சாரம் [4]
(3) தெய்வீக மற்றும் அசுர சம்பத்தின் விளைவுகள் [5]
(4) அசுர சம்பத்தின் விளக்கம் [6 - 21]
(5) அசுர சம்பத்தை துறப்பதால் உண்டாகும் பலன் [22]
(6) அசுர சம்பத்தை பின்பற்றுவதன் விளைவு [23]
(7) சாஸ்திரம் பிரமாணம் [24]
---------------------------------------------------------------------------------------------