வியாழன், 17 ஜூலை, 2025

புருஷோத்தம யோகம் 15.2 - 15.3

||15.2|| மரத்தினுடைய மேலும் மூன்று அம்சங்களுடனான ஒப்பீடு

अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवाला:

अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ।। 2 ।।

அத4ச்1சோர்த்4வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய சா1கா2 

கு3ணப்ரவ்ருத்3தா4 விஷயப்ரவாலா:
அத4ச்1 மூலாந்யநுஸந்ததாநி 

கர்மாநுப3ந்தீ4நி மநுஷ்யலோகே ।। 2 ।।


तस्य  தஸ்ய  அந்த மரத்தினுடைய     शाखा  சா1கா2  கிளைகள்   

गुणप्रवृद्धा:  கு3ணப்ரவ்ருத்3தா4:  குணங்களால் செழிப்படைந்து    

विषय प्रवाला:  விஷய ப்ரவாலா:  விஷயங்கள் என்னும் தளிர்விட்டு    

अध: ऊर्ध्वं  அத4: ஊர்த்4வம்  கீழும் மேலும்     प्रसृता:  ப்ரஸ்ருதா:  படர்ந்திருக்கின்றன    

मनुष्य लोके  மநுஷ்ய லோகே  மனுஷ்ய லோகத்தில்    मूलानि  மூலாநி  வேர்கள்    

कर्म अनुबन्धीनि  கர்ம அநுப3ந்தீ4நி  கர்மத்தை விளைவிப்பனவாய்    

अध:   அத4:   கீழ் நோக்கி      अनुसन्ततानि  அநுஸந்ததாநி  பரவியிருக்கின்றன.


அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்கள் என்னும் தளிர்விட்டு, கீழும் மேலும் படர்ந்திருக்கின்றன. மானுடவுலகில் விளையை விளைவிப்பனவாய் அதன் வேர்கள் கீழ்நோக்கிப் பரவியிருக்கின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் அஷ்வத்த மரத்தினுடைய சிறிய கிளைகள் ஜீவராசிகளுடனும், தளிரானது வெளிவிஷயங்களுடனும் மற்றும் சல்லி வேர்கள் கர்மத்திற்கு காரணமாக இருக்கின்ற ராக த்வேஷங்களுடனும் ஒப்பிடப்படுகின்றன.


=> சிறிய கிளைகள்:

அஷ்வத்த மரத்தின் கிளைகள் மேலும் கீழுமாக நாலாப்பக்கமும் பரவியிருக்கின்றனஅத4: ஊர்த்4வம் ப்ரஸ்ருதா:. அவ்விதம் இந்த ஸம்ஸார மண்டலத்தில் மேலும் கீழுமாக வளரும் கிளைகளாக, மேலான மற்றும் கீழான உடல்கள் அல்லது பிறவிகள் இருக்கின்றன. தேவர்கள் மேலான சரீரங்களுடன் இருக்கின்றனர். அதாவது இந்திரன், பிரஹஸ்பதி, பிரஜாபதி மற்றும் பிரம்மதேவர் வரையுள்ள அனைத்து தேவர்களும்கூட ஸம்ஸாரத்திற்குள் இருக்கிறார்கள் என்பதே இதன் பொருள். கீழாக வளரும் கிளைகளாக இங்கு மனிதர்கள், விலங்குகள் மற்றும் நகராது நிற்கின்ற உயிரினங்களான மரங்கள் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. இனியொரு கோணத்தில் இதை, ஞானத்திற்கு ஏற்ப மேலான பிறவியும், வெறும் கர்மத்திற்கு ஏற்ப கீழான பிறவியும், ஞானமும் கர்மமும் கலந்திருப்பதற்கேற்ப நடுத்தரமான மானுடப் பிறவி போன்றவையும் அமைகின்றன எனக் கூறலாம்.   

மேலும் கீழுமாக விரிந்து கிடக்கும் அவைகளனைத்தும், குணங்களால் வளர்க்கப்படுகின்றனகு3ணப்ரவ்ருத்3தா4. மாயையின் கூறுகளாக இருக்கின்ற முக்குணங்களே இதன் பொருள்காரணமாகின்றன. குணங்களின் காரணமாகவே கர்மங்கள் நடைபெறுகின்றன; கர்மங்களினால் ஒருவன் தனது உடலைப் பெறுகின்றான்

    அறிதல்(ஜானாதி) —> ஆசையுறுதல்(இச்சதி) — > செயலில் ஈடுபடுதல்(யததே).

மேலே இருந்தாலும் சரி, கீழே இருந்தாலும் சரி, அனைத்தும் குணங்களால் தாங்கப்படுகின்றன. எனவே ஸம்ஸார மரமானது குணங்களினால் செழிப்படைந்து, தளிர்விடுகின்றன

=> தளிர்கள்:

சிறிய கிளைகள் வளர தளிர் காரணமாக உள்ளது. இந்த தளிர் இங்குப்ரவாலாஎனப்படுகிறது. ஸம்ஸார மரத்தில் இந்திரிய விஷயங்கள்(விஷய) தளிர்களாக உள்ளது. கிளைகளுள் சாரமிருந்தால்தான் அக்கிளைகள் தளிர்விடும். அதுபோல இந்திரியங்கள் வாயிலாக இந்திரியார்த்தங்களில் உழல்வது இந்த ஸம்ஸாரத்துக்குத் தளிர்களாகின்றன. குணங்கள்(கு3ணப்ரவ்ருத்3தா4) இருக்கும்வரை கிளைகள் தளிர்த்துக் கொண்டேயிருக்கும். புலன்-விஷயங்களை விரும்பி ஒருவன் புதிய கர்மங்களை மேற்கொள்வான்; அதனால் அவன் புதிய உடலைப் பெறுகிறான். இவ்விதமாக புதிய உடல்களை பெறுவதற்கு வழிவகுக்கும் தளிர்கள் இந்த விஷயங்கள் ஆகும்விஷய ப்ரவாலா:


=> சல்லி வேர்கள்:

ஒரு மரத்துக்கு இரண்டுவிதமான வேர்களிருக்கின்றன. ஒன்று ஆணிவேர்; மற்றவைகள் சல்லிவேர். மாயா சக்தியுடன் கூடிய ப்ரம்மன், அதாவது ஈஷ்வரன் இந்த ஸம்ஸார மரத்தின் ஆணிவேர் என நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்த மானுட உலகத்தில் பிணைப்பை உண்டாக்குகின்ற கர்மங்கள் சல்லிவேர்கள் ஆகும்மநுஷ்ய லோகே மூலாநி கர்ம அநுப3ந்தீ4நி. நல்லியல்பில் அல்லது கெட்ட இயல்பில் பந்தப்படுத்தி மனிதனைப் பிறப்பு இறப்பு மயமான பூவுலகில் பிடித்து வைத்திருப்பது கர்மம் என்கின்ற வேர். வெளிப்படுவதற்காக காத்திருக்கும் அனைத்து சாதகமான மற்றும் பாதகமான வினைப்பயன்கள், மேலும் இப்போது செய்யப்பட்டு சேகரிக்கப்பட்ட புதிய வினைப்பயன்கள் இந்த சல்லிவேர்களை உருவாக்குகின்றன. எனவே ராக த்வேஷத்தினால் பிறந்த இந்த கர்மாக்கள் அதிர்ஷ்ட பலனை, அதாவது கண்ணுக்குத் தெரியாத பலன்களை உருவாக்கி, அது வெளிப்படுவதற்காக காத்திருக்கின்றன. இவ்விதமாக இந்த சல்லிவேர்கள் எல்லா இடங்களிலும் பரவி(அநுஸந்ததாநி), ஸம்ஸார மரத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளன. ஒருவனின் ஜீவிதத்திற்கு சாமான்ய காரணமாக இருப்பது ப்ரம்மம்; விஷேச காரணமாக இருப்பது, வாசனைகள் எனக் கூறப்படுகிற இந்த விருப்பு-வெறுப்புகள்(ராக-த்வேஷ) ஆகும். விஷேச காரணம் எனில் ஒருவன் ஏன் அந்த குணத்தில், அந்த உருவத்தில், அந்த சூழ்நிலையில் இருக்கின்றான் என்பதைக் குறிக்கிறது.  

ஸம்ஸார மரம் ஆழமாக வேரூன்றி இருப்பதுபோலத் தெரிகிறது, ஆனால் அதிர்ஷ்டவசமாக அது ஒரு கனவு போன்றது - அதாவது மித்யா. மூலமாக இருக்கின்ற ஆணிவேரான ப்ரம்மம் மட்டுமே ஸத்யம், மற்றவை அனைத்தும் மித்யா. எனவே ஸம்ஸாரத்தின் உண்மையான தன்மையையும், அதை எப்படி வேரோடு பிடுங்கலாம் என்பதையும் பகவான் அடுத்த இரு சுலோகத்தில் காட்டுகிறார்

---------------------------------------------------------------------------------------------

||15.3|| மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு:

रूपमस्येह तथोपलभ्यते नान्तो चादिर्न संप्रतिष्ठा

अश्वत्थमेनं सुविरूढमूलमसङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ।। 3 ।।

ரூபமஸ்யேஹ ததோ2பலப்4யதே 

நாந்தோ சாதி3ர்ந ஸம்ப்ரதிஷ்டா2
அச்1வத்த2மேநம் ஸுவிரூட4மூல 

மஸங்க31ஸ்த்ரேண த்3ருடே4 சி2த்த்வா ।। 3 ।।


इह  இஹ  இகத்தில்     अस्य  அஸ்ய  அதனுடைய     रूपम्  ரூபம்  ரூபம்    तथा  ததாஅங்ஙனம்   

उपलभ्यते   உபலப்4யதே  புலப்படுவதில்லை   अन्त:   அந்த:  அதற்கு அந்தமில்லை    

आदि:  ஆதி3:  ஆதியுமில்லை    संप्रतिष्ठा   ஸம்ப்ரதிஷ்டா2  இருப்புமில்லை/ இடைநிலையில்லை      एनं  ஏநம்  இந்த     सुविरूढ मूलम्  ஸுவிரூட4 மூலம்  வலுத்து வேரூன்றிய     अश्वत्थम्  அச்1வத்த2ம்  அஷ்வத்த மரத்தை    दृढेन  த்3ருடே4  திடமான     

असङ्ग शस्त्रेण  அஸங்க3 1ஸ்த்ரேண  பற்றின்மை எனும் வாளால்    छित्त्वा  சி2த்த்வா  வெட்டி; …  

  

இம்மரத்துக்கு இங்கு வடிவம் தென்படுவதில்லை, முடிவில்லை; துவக்கமில்லை, இடையுமில்லை. வலுத்து வேரூன்றிய இந்த அஷ்வத்த மரத்தைப் பற்றின்மை எனும் உறுதியான வாளால் வெட்டி


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப் பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு,


விளக்கம்:

இந்த சுலோகத்தின் முதல் வரியானது ஸம்ஸார மரமானது மித்யா என்று கூறுகிறது. இரண்டாவது வரியிலிருந்து ஸம்ஸாரத்தை நீக்கும் உபாயம் கொடுக்கப்படுகிறது.


=> ஸம்ஸார மரத்தின் உண்மைத்தன்மை:

இங்கு சொல்லப்பட்ட ஸம்ஸார விருக்ஷமாகிய சிருஷ்டியினுடைய தன்மை என்பது இப்படிதான் என்று கூறிவிட முடியாதுஇஹ அஸ்ய ரூபம் ததா2 உபலப்4யதே. இந்த பிரபஞ்சம் எனும் அஷ்வத்த மரத்துக்கு நிலைத்த வடிவம் என ஒன்றுமில்லை. அதனிடத்து ஒரு வடிவத்தைக் காணுமுன்பு அது இன்னொரு வடிவெடுத்துவிடுகிறது. நிலைத்த சொந்த வடிவம் ஒன்று அதற்கில்லை.

ஸம்ஸார மரத்தை விவரிப்பது இங்கு சுருதியின் நோக்கம் அல்ல, மாறாக அது மித்யா என சுட்டிக்காட்டி அதற்கு ஆதாரமாக அமைந்துள்ள ஒரு ஸத்ய-வஸ்துவை வெளிக்காட்டுகிறது. காரணத்தை அறியும்போது அதிலிருந்து தோன்றிய காரியங்கள் அனைத்தும் அறியப்பட்டதாகிறது. ஸம்ஸாரம் என்பது ஒரு கனவு, கானல் நீர், மாயவித்தை அல்லது மேகங்களில் காணப்படுகின்ற நகரம் போன்றது என்கிறார் சங்கரர். அந்த நேரத்தில் அது உண்மையானதாகத் தோன்றுகிறது, ஆனால் அதை யதார்த்தத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யும் போது, ​​அது இல்லை. அதேசமயம், இந்த ஸம்ஸார மரத்தை வேரற்றது எனக் கூறிவிட முடியாது ஏனெனில் வேர் மட்டுமே இங்கு உண்மை. மற்றவையனைத்தும் இந்த வேரின்மீது ஏற்றிவைக்கப்பட்டவை, அதாவது மித்யா.


=> மித்யா:

பிரமாணங்கள் எனக் கூறப்படுகிற அறிய உதவும் கருவி பல வகைப்படும். ப்ரத்யக்ஷ ப்ரமாணம் - விஷயங்களை நேரடியாக அறிய உதவும் கருவி; உதாரணமாக கண், காது போன்ற புலனுறுப்புக்கள். அநுமாந ப்ரமாணம் - தர்க்கம் மூலம் அனுமானிப்பது.  

  (1) ஒரு பொருளின் இருப்பு பிரமாணத்தின் மூலம் நிலைநாட்டப்படுகிறதுப்ரமாண சித்34ம் வஸ்து - ஸத். உதாரணமாக கண்ணின் துணைக்கொண்டு முயலின் இருப்பைக் கூறுதல்

  (2) ஒரு பொருளின் இல்லாமையை நிலைநாட்டவும் பிரமாணம் தேவை. இதை அநுபலப்தி ப்ரமாணம் என்கிறோம். உதாரணமாக கண்ணின் துணைகொண்டு முயல்கொம்பு இல்லை எனக் கூறுதல். அநுபலப்தி பிரமாணத்தின் மூலம் ஒன்றை இல்லை எனக் கூறலாம் - அஸத்

  (3) இந்த உலகத்திலுள்ள அனைத்து பொருட்களையும் இரண்டாகப் பிரிக்கலாம்: (i) இருக்கின்ற பொருள் [ஸத் பா4:]  (ii) இல்லாத பொருள் [அஸத் பா4:

இங்கு மூன்றாவது ஒரு வகை சாத்தியமில்லை. ஏனெனில் ஓரிடத்தில், ஒரே நேரத்தில், ஒரு பொருளானது ஸத் மற்றும் அஸத் என்ற இரு தன்மையுடனும் கூடியதாக இருக்கமுடியாது. உதாரணமாக இருளும் வெளிச்சமும் ஒரே இடத்தில் அதே நேரத்தில் சேர்ந்து இருக்காது. இருள் இருப்பின் அங்கு வெளிச்சம் இல்லை; வெளிச்சம் இருக்கும்போது அங்கு இருள் இல்லை

  (4) இனி, இந்த உலகின் தன்மையைப் பார்க்கும்போது, இதை இருக்கிறது எனவும், அல்லது இல்லை எனவும், அல்லது இருக்கிறது-இல்லை எனவும் கூறமுடியாத ஒன்றாக உள்ளது. கயிற்றில் தோன்றியுள்ள பாம்பை போலவே, ‘இப்படிப்பட்டதுஎன்கிற ஒரு வியவஸ்தை அற்றதாக இந்த உலகம் இருக்கிறது. மாலை நேரத்து மங்கிய வெளிச்சத்தில், கயிற்றில் பார்க்கப்படுகிற பாம்பு,

  (i) (வெளிச்சம் எனும்) ஞானத்தினால் நீக்கப்படுவதால்இருக்கிறதுஎனக் கூற முடியாது.

  (ii) தோற்றம் இருந்ததினால்இல்லைஎன்றும் கூறிவிட முடியாது. ஏனெனில் அது பார்க்கப்பட்டதாலேயே பயம் என்கிற உணர்வு உண்டானது. ஒருவேளை ஞானத்திற்கு பின் அது மறைந்தவுடன் அதைஅஸத்எனக் கூறலாம்.

இந்த பாம்பை போல உலகம் என்பது வெறும் தோற்றம்; மித்யா. பார்க்கின்றபோது இருப்பதாகத் தெரிகின்ற அது, மெய்யறிவுடன் பார்க்கப்படும்போது, வெறும் தோற்றமே எனப் புலப்படுகிறது. வியாவஹாரிக நோக்கில் இவ்வுலகைப் பார்க்கும்போது, ஐம்பூதங்கள், அதன் நியதிகள், புண்ணிய-பாபங்கள், கர்மங்கள், கர்ம-பலன், உடல், பசி, ஞானம், மோஹம் உள்ளிட்ட அனைத்தும் தெரிகிறது. ஆனால் பாரமார்த்திக நோக்கில் பார்க்கப்படும்போது, இவைகள் எதுவும் இங்கு இல்லை, ப்ரம்மம் மட்டுமே இருக்கின்றது எனப் புலப்படுகிறது. தோடு, வளையல், மோதிரம், கழுத்தணி போன்ற நகைகளைப் பகுப்பாய்வு செய்யும்போது அது தங்கம் என்கிற ஒற்றை வஸ்துவில் ஒடுக்கத்தை அடைகிறது. அதுபோல எந்தவொரு பெயரும்(நாம) மற்றும் வடிவமும்(ரூப), விசாரணை செய்யப்படும்போது அது வஸ்துவான ப்ரம்மத்தில் ஒடுக்கத்தை அடைகிறது. பெயர்களும் வடிவங்களும் வெறும் தோற்றம் மட்டுமே; அங்கு அது உண்மையில் இல்லை.  

(5) மித்யா எப்படி தோன்றுகிறது? அறியாமையினால் தவறான பிரமாணத்தை பயன்படுத்தியதால் காட்சிப் பிழை, அதாவது அத்4யாசம் ஏற்படுகிறது. எனவே தவறான அறிவு இருக்கும் வரைதான் இவ்வுலகம். அறியாமை நீக்கப்படும்போது, உலகம் மித்யா என அறியப்படும்போது, மெய்ப்பொருள் பற்றிய ஞானம் அடையப்படும்போது, ஸம்ஸார மரமானது வெட்டப்படுகிறது.

  (6) இந்த மித்யாவிற்கு தோற்றம், இடைநிலை, முடிவு இல்லை.


=> ஆதியில்லை; அந்தமில்லை

இந்த ஸம்ஸாரத்திற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை இடையில் தொடர்ச்சியும் இல்லை அந்த: ஆதி3: ஸம்ப்ரதிஷ்டா2

ஏக வஸ்துவாகிய ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்பட்ட, அறிபவன் - அறியப்படும்பொருள் - அறிய உதவும் கருவி எனும் திரிபுடி வேறுபாடுகளைக் கொண்ட இந்த ஸம்ஸாரத்திற்கு துவக்கமோ அல்லது முடிவோ இல்லை. ஆத்மாவிற்கும் மித்யாவான இந்த சிருஷ்டிக்கும் இடையில் இணைப்பு என்பது வெறும் தோற்றமே ஆகும். இது அறியாமையில் வேரூன்றியுள்ளதால் அதற்கு ஆரம்பம் என்பது கிடையாது. அதற்கு ஒரு முடிவும் இல்லை; தோன்றியிருந்தால் தானே முடிவை அடைவதற்கு! தோற்றமும் முடிவும் இல்லாத காரணத்தினால் இடைநிலை என்பதும் இல்லை. விசாரணையின் மூலம் பகுப்பாய்வு செய்யும்போது ஒரு பானை, தூய-சைத்தன்யமாக ஒடுக்கப்படுகிறது. ஏனெனில் சைத்தன்யமாகிய ப்ரம்மத்தின்மீது அது தவறாக ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. எனவே பாரமார்த்திக நோக்கில், அனைத்தும் ப்ரம்மத்தின்மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஆரம்பம் இல்லை, முடிவு இல்லை, இப்போது எந்த இருப்பும் இல்லை.

வியவஹார ரீதியாக, அனைத்தும் உண்மையைப் போலத் தெரிந்தாலும் பாரமார்த்திக ரீதியாக எதுவும் உண்மை இல்லை. கயிற்றில் தெரிகிற பாம்பில், கயிறுதான் உண்மை; பாம்பு உண்மை அல்ல. ஆனால் கயிற்றின் உண்மைத்தன்மைப் புலப்படும்வரை, பாம்பின் உண்மையற்றத் தன்மையை ஒருவன் அடையமுடியாது. ப்ரம்மத்தின் ஸத்யநிலை அறியப்படும்போதே உலகம் மித்யாவாக ஆகிறது. அனுபவத்தில் உலகம் தெரிந்தபோதிலும், அதனுடைய உண்மைத்தன்மை நீக்கப்படுகிறது. அவ்விதம் நீக்கப்படும்வரை ஸம்ஸாரம் தொடர்கிறது.   


=> ஸம்ஸாரத்தை எப்படி நீக்குவது?

ஸம்ஸாரத்தை எப்படி நீக்கலாம் என்கிற கேள்விக்கு சங்கரர் அதன் உண்மைத்தன்மையை பார்ப்பதன்மூலம் நீக்கலாம் என விளக்கமளிக்கிறார். த்3ருஷ்ட நஷ்ட ஸ்வபா4 - பார்க்கும்போது அழிவதே அதன் இயல்பு. இந்த நொடியில் ஒரு வடிவத்திலிருக்கிற எந்தவொன்றும் அடுத்த நொடியில் மாற்றத்திற்கு உள்ளாவதைத் தடுக்க இயலாது. இதன் காரணமாகவும், அதற்கு ஆரம்பம் இல்லை, முடிவு இல்லை, சொந்தமாக இருப்புமில்லை. ப்ரம்மத்தின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது அதற்கு எந்த உண்மையும் இல்லை. எந்தவொன்றும் பகுப்பாய்வின் இறுதியில் ப்ரம்மத்திற்குள் மறைந்துவிடும்.

ஒரு மரமானது இரண்டு படியில் வெட்டப்படுகிறது. (1) அதன் கிளைகள் வெட்டப்பட்டு பலகீனப்படுத்தப்படுதல் (2) பின்னர் முழுமையாக நீக்கப்படுதல். அதுபோல ஸம்ஸார மரமும் வைராக்கியத்தின் மூலம் பலகீனப்படுத்தப்பட்டு, பின்னர் ஆத்மஞானத்தின் மூலம் முழுமையாக நீக்கப்படுகிறது


=> பற்றின்மை எனும் வாள்:

வலுத்து வேரூன்றியுள்ள இந்த அரச மரம்ஏநம் அச்1வத்த2ம் ஸுவிரூட4 மூலம், என்கிறார் பகவான். வடிவமற்ற, ஆதி அந்தமற்ற இந்த ஸம்ஸாரமானது அறியாமையில்(அக்ஞாநம்) நன்கு வேரூன்றி வலுத்துள்ளது. மரத்தை வெட்டுதற்குக் கோடரி வேண்டும். அதுபோல இந்த மாயா காரியமாகிய பிரபஞ்சவாழ்க்கை என்ற மரத்தை வெட்டுதற்குப் பற்றின்மை அல்லது வைராக்கியம்(அஸங்க3 1ஸ்த்ரேண) என்கிற வாள் ஒன்றே தகுந்தது. பற்றின்மை எவ்வளவு வலியதோ அவ்வளவு விரைவில் ஸம்ஸார விருக்ஷம் வெட்டப்படும்.

இந்த பற்றின்மை உறுதியானதாக இருக்கவேண்டும், த்3ருடே4. சுருதியானது மூன்று விதமான ஆசைகளைப் பற்றி பேசுகிறதுபுத்ரேஷணா(புத்திரன் மற்றும் உறவுகளின் மீதான ஆசை), வித்தேஷணா(செல்வத்தின் மீதான ஆசை) மற்றும் லோகேஷணா(பதவியில் அல்லது பரலோகத்தில் இச்சை). இந்த மூன்றின் மீதும் நாம் வைராக்கியத்தை வளர்க்க வேண்டும்.

பற்றின்மையை வளர்த்தல் என்பது ஓடிப்போவதன் மூலமாக அல்ல; சரியான விசாரணையின் மூலம், தன்னைத்தானே பார்ப்பதன் மூலம் இவை அனைத்திலிருந்தும் ஒரு விலகலை அடைய முடியும். ஏனெனில் இவ்விதமான ஆசைகளும் ஒருவித எண்ணங்களே ஆகும். எனவே சரியான கோணத்தில் செய்யப்படுகின்ற விசாரம், ஒருவனின்என்னுடையதுஎன்கிற உரிமையுணர்வில்(மமகார) இருக்கின்ற பிணைப்பை குறைக்க உதவுகிறது. இது ஜாக்கிரதையாக பின்பற்றப்படும்போது, இந்த மமகாரம் என்பது தவறானநான்என்ற உணர்வான அஹங்காரத்திலிருந்து தோன்றியுள்ளது என்பது புலப்படுகிறது. இந்த மமகாரமும் அஹங்காரமுமே (நான் - எனது) ஸம்ஸார மரத்தின் சல்லிவேர்களாக உள்ளன


=> வைராக்கிய விசாரம்:

* இஹ பர போ4கே3ஷு இச்சா2 ராஹித்யம்இந்த மற்றும் வேறு லோகங்களில் விருப்பமில்லாத தன்மை வைராக்கியம் ஆகும். அதாவது போகத்தில் இஷ்டமில்லாத மனநிலை. இது வெறுப்போ அல்லது பிடிவாதமோ அல்ல. ஆரம்பத்தில் அது உலகத்துடனான வெறுப்பை போலத் தென்பட்டாலும் மனமானது பக்குவமடைய அடைய அது வைராக்கியமாக மாறுகிறது. வைராக்கியத்தின் அடுத்த நிலை விவேகம் ஆகும்

* ஏன் சில ஆசைகள் மிகவும் பலமானதாக உள்ளது? இதற்கு காரணம்ஸங்கல்பம்’, அதாவது தொடர் எண்ணங்கள் ஆகும். நமக்கு விருப்பமான ஒரு பொருளையோ அல்லது செயலையோ அல்லது நபரையோ பற்றி எழும் தொடர் சிந்தனை, ஆசையாக மாறுகிறது. அந்த சூழ்நிலையினால் வரும் சுகத்தை தொடர் அப்யாசம் செய்வதன் மூலம் அந்த ஆசை உறுதியாகி பற்றாக ஆகிறது

* இந்த சங்கல்பத்தை எப்படி நீக்குவது? இத்தகைய சங்கல்பத்தின் தொடர்ச்சி என்பது அறிவின்மையினால்(அவிவேக) உண்டாகிறது. ஒரு பொருளின் அல்லது நாம் விருப்பப்படுகிற அந்த விஷயத்தின் முழு தன்மையை உணராமல், அதிலிருந்து கிடைக்கின்ற சுகத்தை மட்டுமே பார்ப்பதால் சங்கல்பம் ஏற்படுகிறது. ஒன்றின் நிறையும் குறையும் முழுமையாகத் தெரிந்துவிட்டால் அதை நினைக்க மாட்டோம்

 அவிவேகம் —> ஸங்கல்ப: —> இச்சா2 —> ஸங்கம்

* எனவே அறிவின்மை, தொடர் எண்ணங்களை உருவாக்கி, அது ஆசையாக மாறி, பின்னர் அது தீவிரமான பற்று எனும் நிலையை அடைகிறது. இந்த அவிவேகத்தை விவேகத்தைக் கொண்டு நீக்க வேண்டும். விவேகம் இரு பகுதிகளாக அடையப்படுகிறது:

 (1) யதா2ர்த2 3ர்ச1னம் ஒன்று எப்படி இருக்கிறதோ அப்படியே பார்ப்பது

 (2) தோ3 3ர்ச1னம் அதன் குறையைப் பார்ப்பது

போகத்தினது தோஷத்தைப் பார்ப்பதன் மூலம் அதன் மீதான தொடர் சங்கல்பத்தை குறைத்து, பின்னர் பற்றின்மை நிலையை அடையலாம். பற்று குறைய குறைய அதற்கு நாம் பலியாக மாட்டோம். ‘தோஷ தரிசனம் பண்டித லக்ஷணம்என்கிற ஒரு சொல்லாடல் உண்டு. மேலும் ஒரு தோஷத்தை பார்ப்பதென்பது வேறு, தோஷ வர்ணனை செய்வதென்பது வேறு. ஒருவருடைய தோஷத்தை பார்ப்பதென்பது நமது பற்றைக் குறைப்பதற்காகவேயொழிய அவர்களைப் பற்றி கிசுகிசுப்பதற்காக அல்ல. ஒன்றின் குறையை நாம் பார்ப்பதென்பது, அக்குறையை நாம் மற்றவர்களிடம் கிசுகிசுப்பதிலிருந்து முற்றிலும் வேறானது. தோஷ தரிசனத்தின் நோக்கம் தெளிவானதாக இருக்கவேண்டும்

மோஹம் உள்ளவரை தோஷ தரிசனத்தை கடைபிடிக்க வேண்டும். மோஹம் குறையக் குறைய அது ஈஷ்வர தரிசனமாக மாற வேண்டும்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வண்ணத்துப் புழு, தான் கட்டும் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. அதுபோல உலகப்பற்றுள்ள ஆத்மா அதனுடைய ஆசைகளாகிய வலையில் சிக்கிக்கொள்கிறது. ஆனால் அந்தப் புழு ஓர் அழகிய வண்ணத்துப் பூச்சியாகப் பரிணமிக்கும்போது, கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்து வெளிச்சத்தையும் காற்றையும் ஆனந்தமாய் அனுபவிக்கிறது. அதுபோல விவேகம், வைராக்கியம் என்ற இரண்டு சிறகுகளால், உலகப்பற்றில் உழலும் ஆத்மாவானது மாயையாகிய வலையைக் கிழித்துக்கொண்டு வெளிப்படக்கூடும்.

---------------------------------------------------------------------------------------------