ஞாயிறு, 27 ஜூலை, 2025

புருஷோத்தம யோகம் 15.4 - 15.5

||15.4|| வைராக்கியத்திற்கு பிறகு ஞானயோகம்:

तत: पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गता निवर्तन्ति भूय:

तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यत: प्रवृत्ति: प्रसृता पुराणी ।। ।।

தத: பத3ம் தத்பரிமார்கி3தவ்யம் 

யஸ்மிந்க3தா நிவர்தந்தி பூ4:

தமேவ சாத்3யம் புருஷம் ப்ரபத்3யே 

யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ ।। 4 ।।


तत:  தத:  பிறகு    तत्  தத்  அந்த    पदं  பத3ம்  ப்ரம்மபதம்   

परिमार्गितव्यं  பரிமார்கி3தவ்யம்  தேடத்தக்கது    यस्मिन्   யஸ்மிந்  எங்கு   गता:  3தா:  போய்      

भूय:  பூ4:  மீண்டும்     निवर्तन्ति  நிவர்தந்தி   திரும்புவதில்லையோ     यत:  யத:  எவரிடமிருந்து  पुराणी  புராணீ  காலங்காலமாக       प्रवृत्ति:  ப்ரவ்ருத்தி:  சிருஷ்டி     

प्रसृता  ப்ரஸ்ருதா  வந்துள்ளதோ      तं आद्यं पुरुषं एव   தம் ஆத்3யம் புருஷம் ஏவ   அதே ஆதிபுருஷனை   प्रपद्ये  ப்ரபத்3யே  சரணடைகிறேன்(என்றுணர்க).


அப்பால், எப்பதம் பெற்று பிறப்பெடுப்பதில்லையோ அது தேடத்தக்கது. எவரிடத்திருந்து காலங்காலமாக சிருஷ்டி வந்துள்ளதோ அதே ஆதிபுருஷனைச் சரணடைகிறேன்(என்றுணர்க).


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப்பத முடையோனாகிய) எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.


விளக்கம்:

உலகப்பற்று அறவே நீங்குவது எதிர்மறைச் செயல். அது மட்டும் போதாது. பிறகு அது உடன்பாட்டுச் செயலாக மாறவேண்டும். ப்ரம்ம பதத்தை ஆவலோடு தேடுதல் அவசியமாகிறது. அது இந்த சுலோகத்தில் கூறப்படுகிறது


=> தேடத்தக்கது:

மோகமிருக்கும்வரை தோஷ தரிசனத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், மோகம் நீங்க நீங்க அது ஈஷ்வர தரிசனமாக மாற வேண்டும் என்றும் சென்ற சுலோகத்தில் பார்த்தோம். மேலும் மோகத்திற்கு காரணம் அவிவேகம் என்றும் அதை நீக்க விவேகம் தேவை என்றும் பார்த்தோம். எனவே இனி தனது சுயத்தைப் பற்றிய விவேகம், ஈஷ்வரனைப் பற்றிய ஞானம், மெய்ப்பொருள் பற்றிய அறிவு தேடப்பட வேண்டும்

பிறகு அந்த ப்ரம்மபதம் தேடத்தக்கதுதத: தத் பத3ம் பரிமார்கி3தவ்யம், என்கிறார் பகவான். இங்குபிறகுஎன்பது வைராக்கியத்தை அடைந்த பிறகு என்பதைக் குறிக்கிறது. தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்ற பிறகு, மோக்ஷத்திற்காக ப்ரம்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதனால்தான் வேதாந்த சாஸ்திரத்தை பகுப்பாய்வு செய்யும் ப்ரம்மசூத்திரத்தின் முதல் சூத்திரம்(1-1-1), ‘அதா2தோ ப்3ரஹ்ம ஜிக்ஞாஸா[अथातो ब्रह्म जिज्ञासा]’ எனத் தொடங்குகிறது — ‘அதன்பின் ஆகவே ப்ரம்மம் விசாரிக்கப் படவேண்டும்’. எதன்பின்? சாதன-சதுஷ்டய-சம்பத்தியை அடைந்த பின்னர். அதாவது வைராக்கியம், புலனடக்கம், மனக் கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட தகுதிகளை அடைந்த பின்னர், நித்தியத்துவத்தை அடைவதற்காக, ப்ரம்ம விசாரணை செய்யப்பட வேண்டும். அதுமட்டுமே ஒருவனை ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்கிறது. இதில் அவன் உறுதியுடன் இருத்தல் வேண்டும்

இந்த சுலோகத்தில், ’பரிமார்கி3தவ்யம்என்பது முறையான விசாரணைத் தேவை என்பதைக் குறிக்கிறது. ‘பரிமார்கி3தவ்யம்என்ற சொல்லில் உள்ளபரிஎனும் முன்னொட்டு, அந்த முறையான விசாரணை எப்படி செய்யப்பட வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டுகிறதுசாஸ்திரம் மற்றும் குருவின் உதவியுடன் செய்யப்பட வேண்டும். சிருஷ்டிக்கு காரணமாகவுள்ள ப்ரம்மத்தை, பிரத்யக-ஆத்மாவான சுயத்துடன் சமன் செய்கிற மஹா-வாக்கியமாக உள்ள சாஸ்திர-வாக்கியம், குருவின் துணையுடன் சரியாகப் புரிந்து கொள்ளப்படவேண்டும். இது ஞானயோகத்தைக் குறிக்கிறது


=> ஞானயோகம்:

ஞானத்தை அடைய மேற்கொள்ளப்படும் சாதனை ஞானயோகம் ஆகும். இதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

  (1) சிரவணம்(ச்1ரவண): குருவின் துணையுடன், வேதாந்த சாஸ்திரத்தை புரியும் வரை கேட்டல் சிரவணம் எனப்படுகிறது. இதில் சிரத்தை மிக அவசியம். எந்த அறிவு தக்ஷிணாமூர்த்தியிடமிருந்து வந்ததோ அதே அறிவு குருவினால் வழங்கப்படுகிறது என்கிற முழு நம்பிக்கை இருத்தல் அவசியம். எனவே முழு சிரத்தையுடன் கேட்கப்பட வேண்டும். கேட்பதன் பலன் என்ன? நமது அறிவிற்கு வேறான ஒரு அறிவின் வழியாகப் பார்த்தலும் மற்றும் பரம்பரையாக வந்த அறிவை அறியும் முயற்சியும் பயிற்சியும் இதில் ஒருங்கே அமையப்பெறுகிறது. சிரவண நிலையில், கற்றலே பிரதானம் என்பதால் அவன் முழுக்க முழுக்க குருவையும், சாஸ்திரத்தையும் சார்ந்துள்ளான் - 100%. 

வேதாந்த சாஸ்திரத்தின் மையக்கருத்தாக இருப்பது, (i) ஈஷ்வர-ஜகத்-ஜீவன் பற்றிய அறிவு, (ii) ஜீவ-ப்ரம்ம ஐக்கிய ஞானம், (iii) உலகம் வெறும் தோற்றம் - மித்யா என்கிற அறிவு.

  (2) மநநம்: நம்மிடம் ஏற்கனவே பதிந்துவிட்ட தவறான கருத்துக்கள், புதிதாக சாஸ்திரத்திலிருந்து பெறப்பட்ட அறிவு இரண்டிற்கும் இடையேயான முரண்பாட்டை களைவது மநந-நிலை ஆகும். இது சந்தேகம் தெளிதல் படலமாக இருப்பதால் இங்கு குரு மற்றும் சாஸ்திரத்தின் உதவியும்(50%), தனது சுய புத்தியும்(50%) சமமான பங்கை வகிக்கின்றன

  (3) நிதித்யாசனம்: புத்தியில் ஏற்பட்ட அறிவை மனதில் நிலைபெற வைக்கச் செய்கிற தியானம் நிதித்யாசனம் ஆகும். இது குறித்து ஆறாவது அத்தியாயமான தியான யோகத்தில் நாம் மிக விரிவான விசாரணை செய்துள்ளோம். நிதித்யாசன நிலையில் மீண்டும் மீண்டும் அறிவை கொண்டு வந்து ஊற விட வேண்டும். இந்த அறிவே பலனைத் தருகிறது. ஸம்ஸாரத்தை நீக்குகிறது. இந்நிலை முழுக்க ஒருவனது சுய-முயற்சியையே சார்ந்துள்ளது - 100%. உன்னை நீயே உயர்த்திக் கொள் - உத்34ரேதா3த்மநாத்மாநம் (6.5), என்கிறார் பகவான்.

உலகமே உனது கருத்துக்கு எதிராகப் பேசினாலும் அது உனக்கு குழப்பம் விளைவிக்கவில்லையெனில், அப்போது இந்த ஞானம் தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டதாகிறது.


=> மீண்டும் திரும்புவதில்லை:

எந்த பதத்தை அடைந்தவர்கள் மீண்டும் திரும்புவதில்லையோயஸ்மிந் 3தா: பூ4: நிவர்தந்தி, என்கிறார் பகவான். இது மோக்ஷ சொரூபத்தைக் குறிக்கிறது. ‘த்வம்என்ற சொல்லின் பொருளாகஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரம்மஇருக்கின்றது என்பதை தெளிவாகப் புரிந்தவன், ப்ரம்மத்தை தனது உள்ளார்ந்த சுயமாக அடையாளம் கண்டவன், மீண்டும் திரும்பாத இடத்தை அடைகிறான். மற்றபடி, வேறு எங்கு சென்றபோதிலும் ஜீவனானவன் எப்போதும் நாடோடியாகவே இருக்கிறான். சொர்க்கத்தையே வசிப்பிடமாகக் கொண்டாலும் கடைசியில் அவன் அங்கிருந்து வெளியேறித்தான் ஆகவேண்டும். ஆனால் தனது சுயமாகவே இருக்கின்ற இந்த இடத்திலிருந்து வெளியேறுதல் என்பது இல்லை. ஆகவேதான் இங்கு, மேலும் பயணம் இல்லை எனச் சொல்லப்படுகிறதுபூ4: நிவர்தந்தி. அதாவது பிறப்பதில்லை. பிறப்பு இறப்பைக் கடந்த பெருநிலையை, மோக்ஷத்தை அடைகிறான். இந்த நிலையில் அவனால் அடையப்பட்ட மனதிருப்தி அவனை விட்டுச் செல்வதில்லை; விடப்பட்ட ஸம்ஸாரம், வீழ்ந்துவிடுவோம் என்கிற பயம் எதுவும் அவனை மீண்டும் தொடுவதில்லை


=> புருஷன்:

எதை அடைந்தால் திரும்புதல் இல்லையோ, அந்த அடையப்பட வேண்டிய ப்ரம்மம், எல்லா படைப்புகளுக்கும் முன், ஆதியில் இருந்ததுஆத்3யம், என்கிறார் கிருஷ்ணர். எப்படி பானைக்கு முன் களிமண் இருந்ததோ அதுபோல ஆதியில் இவைகளனைத்தும் வெறும் இருப்பாக மட்டுமே இருந்தது. அந்த இருப்பு ஒரு புருஷன் என இங்கு கூறப்படுகிறது. ‘புருஷஎனும் சொல்லின் மூலம் அது ஒரு சைத்தன்ய சொரூபம் என்பதையும் நிறுவுகிறார் பகவான். அகண்ட சச்சிதானந்த வஸ்து. இந்த உடலில் இருக்கின்ற அவனே, இந்த படைப்பிற்கு முழுமுதற்பொருளாக ஆதிபுருஷனாக இருந்தவன் ஆவான். இப்போது இந்த ஜீவன் சொல்லுகிறான், அந்த இறைவனிடம் நான் சரணடைகிறேன், ப்ரபத்3யே. இந்த சரணாகதி முழுமையாகும்போது அங்கு புருஷன் மட்டுமே இருக்கின்றான்.  

போலியான நபராக இருக்கின்ற அனாத்மாவைச் சரணடையச் செய்வதன்மூலம், பரம் ப்ரம்மத்திலிருந்து வேறாக இல்லாத, உள்ளார்ந்த சுயமாக இருக்கின்ற பிரத்யகாத்மா மட்டுமே எஞ்சுகிறது. இதுவே இங்குபுருஷஎன்றழைக்கப்படுகிறது. இவரிடமிருந்தே காலங்காலமாக சிருஷ்டி காரியம் வெளிப்பட்டுள்ளதுபுராணீ ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா. இந்த இறையிடம் சரணடைவதன்மூலம் ஒருவன் தனது சுய சொரூபத்தை வெற்றிகரமாக விசாரம் செய்யலாம். முதலில் சுயம் அல்லாத அனைத்தையும் நிராகரித்து, பின்னர் யாரிடமிருந்து இவைகளனைத்தும் வந்ததோ, விசாரிப்பவன் யாரிடமிருந்து வந்தானோ அந்த புருஷனிடம் சரணடைகிறான்.


=> ஈஷ்வர சொரூபம்:

அந்த புருஷனான ஈஷ்வரனின் சொரூபம் பொதுவாக மூன்று விதமாக பார்க்கப்படுகிறது

  (1) நிமித்த காரணம்: அதிகாரித்துவத்தில், அதாவது ஆத்ம-ஞானத்தை அடைவதற்கு தேவையான தகுதிகளில், கீழான நிலையில் இருக்கின்றஅதம அதிகாரிகள்’, ஈஷ்வரனை உலகைப் படைத்தவராகக் கருதுகின்றனர்.

  (2) உபாதான காரணம்: அதிகாரித்துவத்தில் இடைநிலையில் இருக்கின்றமத்4யம அதிகாரிகள்’, உலகமே சிவமயம். ஈஷ்வரனின் உடலே இந்த உலகம், அவரே அனைத்துமாகப் பரந்து விரிந்துள்ளார் எனப் பார்க்கின்றனர்.

  (3) விவர்த உபாதான காரணம்: அதிகாரித்துவத்தில் மேல்நிலையை அடைந்துள்ளஉத்தம அதிகாரிகள்’, மித்யாவான இந்த உலகத்தை காட்டுபவராக ஈஷ்வரன் இருக்கின்றார் எனக் கொள்கின்றனர்.


=> பக்தி:

ஞானயோகத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை, நிதித்யாசனத்திலும்கூட இருக்கவேண்டிய ஒரு பாவனை பக்தி ஆகும். அஹங்காரத்தை சரணடையச் செய்யும் சரணாகதி எனும் மனப்பாங்கு பக்தி எனப்படும். கடைசி நிலையில், பகவானை தனது சுயம் என உணரும் தருவாயில் இந்த பக்தியானது பிளவுபடாத(அநந்ய) பக்தியாக மாறுகிறது. நம்முடையதை பகவானுக்கு சமர்பித்தல் மற்றும் ஒப்புவித்தல், சரணடைதல் ஆகும். உண்மையில் இங்குள்ள அனைத்துமே இறைவனுடையது; ஒன்றைத் தவிர. அது தானெனல் எனும் அஹங்காரம். எனவேநான்எனும் அந்த அஹங்காரத்தை, தனித்தன்மையை பகவானிடம் கொடுத்தல் உண்மையான சரணாகதி ஆகிறது. அஹங்கார பலத்தினால் ஒருவன் மோக்ஷத்தை அடையமுடியாது. ஆனால் அந்த அஹங்காரத்தை சரணடைவதால் ஒரு பலம் கிடைக்கும். தோல்வியினால் வரும் சோர்வை நீக்கி, அது உற்சாகத்தை அளிக்கும். அந்த சக்தியே மோக்ஷத்தை அடைவிக்கும். ‘எனது அனைத்து வலிமையையும் உன்னிடம் ஒப்படைக்கும் வலிமையை எனக்கு கொடுஎன்றார் ரவீந்திரநாத் தாகூர். நம்முடைய அறிவோ, சக்தியோ, சிறப்புத் தன்மையோ, முயற்சியோ எதுவாக இருந்தாலும் அது அவ்விதம் இருக்கக் காரணம் ஈஷ்வர அணுகிரஹம் எனும் பாங்கு சரணடைதலை எளிதாக்குகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கண்டுபிடிக்கப்பட்டதும் திருடன் ஓடிப்போகிறான். அதுபோல மாயையின் சுபாவம் இன்னதென்று நீ ஆராய்ந்து கண்டு பிடிக்குமிடத்து அது உன்னிடமிருந்து ஓடிப்போகிறது.

---------------------------------------------------------------------------------------------

||15.5|| ஞானிகளின் இலக்கணம்:

निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामा:

द्वन्द्वैर्विमुक्ता: सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ।। ।।

நிர்மாநமோஹா ஜிதஸங்க3தோ3ஷா 

அத்4யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:
த்3வந்த்3வைர்விமுக்தா: ஸுக2து3:2ஸம்ஜ்ஞைர் 

3ச்ச2ந்த்யமூடா4: பத3மவ்யயம் தத் ।। 5 ।।


निर्मान मोहा:  நிர்மாந மோஹா:  அஹங்காரத்தையும் அவிவேகத்தையும் நீக்கியவனாய்      

जित सङ्ग दोषा:  ஜித ஸங்க3 தோ3ஷா:  பற்று எனும் தோஷத்தை வென்றவனாய்    

अध्यात्म नित्या:  அத்4யாத்ம நித்யா:  பரமாத்ம ஞான நிஷ்டர்களாய்     

विनिवृत्त कामा:  விநிவ்ருத்த காமா:  ஆசையை முழுமையாக நீக்கியவர்களாய்     

सुखदुःखसंज्ञै: ஸுக2து3:2ஸம்ஜ்ஞை:  சுக துக்கம் எனப்படுகின்ற    

द्वन्द्वै:  த்3வந்த்3வைஇருமைகளிலிருந்து     विमुक्ता:  விமுக்தா:  விடுபட்டவர்கள்     

अमूढाः  அமூடா4:  மூடத்தன்மையற்றவர்கள்      तत्  தத்  அந்த    

अव्ययं पदं  அவ்யயம் பத3ம்  அழிவில்லாத நிலையை      गच्छन्ति  3ச்ச2ந்தி  அடைகிறார்கள்.


அஹங்காரத்தையும் அவிவேகத்தையும் நீக்கியவர்கள், பற்று எனும் குறையை வென்றவர்கள், பரமாத்ம ஞான நிஷ்டர்களாய், ஆசையை முழுமையாக நீக்கியவர்கள், சுக துக்கம் எனப்படுகின்ற இருமைகளைக் கடந்தவர்கள், மூடத்தன்மையற்றவர்கள் அந்த அழிவில்லாத நிலையை அடைகிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களை யெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் அப்போது நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர், இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் ஞானிகளின் இலக்கணத்தை கூறுகிறார். எத்தகையவர்கள் மோக்ஷத்தை அடைகிறார்கள், அல்லது எத்தகையவர்களாக ஞானிகள் அந்த பதத்தை அடைந்தார்கள்? என்பதாக ஞானிகளின் சுபாவத்தை இங்கு சொல்லுகிறார். பதின்மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அனைத்தையும் இந்த ஒற்றை சுலோகத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார். பொதுவாக ஞானிகளின் சுபாவம் என்பது சாதகர்களுக்கு சாதனமாக ஆகிறது. எனவே இங்கு கூறப்பட்டுள்ள இந்த ஐந்து சாதனத்தையும், தங்களால் அடையப்பட வேண்டிய சாதனைகள் என சாதகர்கள் எடுத்துக் கொள்ளலாம்


=> (1) அஹங்காரமும் மோஹமும் அற்றவர்கள்:

மாநஎனில் ஆணவம் கொண்டவர்களைக் குறிக்கிறது. பெருமிதத்தில் திளைக்கின்ற இவர்கள் மற்றவர்களிடமிருந்து மரியாதையைக் கோருபவர்களாக இருக்கின்றனர். ஒருவன் தனது சொந்த முக்கியத்துவத்தை தவறாக மதிப்பிடுவது ஆணவமாக பரிணமிக்கின்றது. அது தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒரு பெரிய அளவிலான பொறுப்புகளை அவன்மீது திணிக்கிறது. இதனால் அவன் தன்னை வளர்த்துக் கொள்ளவோ, அறிவைத் தேடவோ, உண்மையான கல்வியைப் பெறவோ நேரம் இல்லாதவனாக ஆகிறான்

மரியாதைக்குரிய தகுதிகள் ஒருவனிடம் இருந்தபோதிலும், போதுமானவளவு சுயமரியாதை உணர்வு அவனிடம் இல்லையெனில் அதை அவன் வெளியில் தேடுகிறான். தனது மதிப்பீட்டிற்கு இனியொருவரை சார்ந்திருக்கும்போது, அது செருக்காக வெளியாகிறது. எனவே தன்னை குறித்த தவறான மதிப்பீட்டை  சரிசெய்வதன் மூலம் பிறருடனான ஒப்பீட்டைத் தவிர்த்து அவன் இதிலிருந்து விடுபடலாம்.

   உண்மையில்நான்மட்டும் இருக்கும்போது, எனக்கு இரண்டாவதான ஒரு இருப்பு இல்லாதபோது, ஒப்பிடுவதற்கு எதுவுமில்லை; நிரூபிப்பதர்க்கும் எதுவுமில்லை. ‘நான் ஸத்-சித்-ஆனந்தம் ப்ரம்ம; இங்குள்ள அனைத்தின் இருப்பும் பிரகாசமும் என்னைச் சார்ந்துள்ளதுஎன்பது புரிந்துகொள்ளப்படும்போது, தனது மதிப்பீட்டிற்கு இனியொருவரை சார்ந்திருப்பது இல்லாமல் ஆகிறது

மோஹஎனில் மயக்கம். வெளி உலகிலுள்ள பொருள்கள், நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் பற்றிய தவறான மதிப்பீடு மோஹம் ஆகும். இந்த மயக்கமானது, நம்மைச் சுற்றி உண்மையிலுள்ள உடனடிப் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல், நம் கற்பனையின் தவறான உலகில் நம்மை வாழ வைக்கிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட விஷயம் அல்லது சூழ்நிலைக்கு, அதற்கு இல்லாத மதிப்பையோ அல்லது மதிப்பை மிகைப்படுத்தியோ வைத்துவிட்டு இறுதியில் ஏமாற்றத்தை அடைகிறோம். சரியாக வழிநடத்தப்பட்ட விசாரணையின்(விசார) மூலம் இருப்பதை அப்படியே பார்க்கின்ற திறனைப் பெறலாம்

செருக்கிலிருந்தும், மயக்கத்திலிருந்து விடுபட்டவர்கள்நிர்மாந மோஹாஎன அழைக்கப்படுகின்றனர்


=> (2) பற்றை வென்றவர்கள்:

சங்கம் எனும் தோஷத்தை வென்றவர்கள்ஜித ஸங்க3 தோ3ஷா:என்றழைக்கப்படுகின்றனர். நம்மிடம் இருக்கின்ற ஒரு பொருளின் மீது வரும் விருப்புஸங்க3ஆகும். வெறுப்பும் கூட ஒருவிதமான சங்கமே ஆகும். ஒரு பொருள் அல்லது நபருடன் சிறிது காலம் தொடர்ந்து தொடர்பிலிருந்தால் அவ்விஷயத்தின் மீது ஏதேனும் ஒரு சங்கம் ஏற்பட்டுவிடுகிறது. அதுஸங்க3 தோ3ஷம்எனப்படுகிறது. சமயங்களில் அந்த விஷயமில்லாமல் நான் முழுமையடையவில்லை எனுமளவுக்கு பற்றுதல் தோன்றுகிறது. இந்த சங்கம் மன அமைதியைக் கெடுக்கும்; சரீர அபிமானத்தை வளர்க்கும்.

மன முதிர்ச்சியினாலும் விசாரணையினாலும் மட்டுமே இதை வெல்ல முடியும். இங்குவெல்லப்பட்டதுஎன்கிற அர்த்தத்தில் வருகிறஜிதஎனும் சொல்லின் பயன்பாடு, இதில் வெல்லப்படவேண்டிய போர் இருப்பதைக் காட்டுகிறது. அது உண்மைதான், ஏனெனில் இங்கு ஒரு அறிவுசார்ந்த போர் நிகழ்த்தி அதை வென்றெடுக்க வேண்டியிருக்கிறது

சங்க தோஷத்தை நீக்கும் உபாயங்கள்:

 * அந்த பொருள் இல்லாதவனாக மனதினுள் நினைத்துப் பார்த்து, அதன் நிலையை கண்டறிதல்.

   * அந்த பொருள் இல்லாமல் இருந்து பார்த்தல்.

  * பற்றுடைய பொருளின் குறையைப் பார்த்தல் 

  * சரியான விசாரத்தை மேற்கொள்ளுதல்

  * யாத்திரை

  * விலகியிருந்து பழகுதல்

  * ஆத்ம ஞானத்தினால் சங்க தோஷம் முழுமையாக நீங்கும். ஏனெனில் அங்கு பற்று வைக்க இரண்டாவது பொருள் இல்லை.

சரியான விசாரணையின் மூலம் அகப்போரில் வென்று, பொருள் மற்றும் மனிதர்களுக்கு அடிமையாக இல்லாதவர்கள்ஜித ஸங்க3 தோ3ஷாஆகிறார்கள்


=> ஆசையை நீக்கியவர்கள்:

ஆசையைக் குறிக்கின்றகாமஎனும் சொல்லானது, இல்லாத பொருளின் மீது அது அடையப்பட வேண்டும் என எழுகிற ஆசையைக் குறிக்கிறது. ‘விநிவ்ருத்தஎனும் சொல்லில் வரும்விஎனும் முன்னொட்டுவிஷேஷேநஎனும் பொருளில், இந்த ஆசைகள் ஒரு குறிப்பிட்ட வழியில் சென்றுவிட்டன என்பதைக் குறிக்கிறது. அதாவது அடிச்சுவடும்கூட இல்லாமல் முற்றிலுமாக சென்றுவிட்டதைக் குறிக்கிறது; எதுவும் மிச்சமில்லை. உதாரணமாக வெங்காயம் அல்லது பூண்டு சாப்பிட்ட பின்னர், கை மற்றும் வாயைக் கழுவிய பின்னரும் அதன் வாசனை மிச்சமிருக்கும். அதுபோல, ஆசைகள் நீக்கப்பட்டபோதிலும் அவை சில மிச்சங்களை விட்டுச் செல்கின்றன. ஒரு நுண்மையான ஏக்கம், ஏதோ ஒன்றை இழந்த இழப்பு மிச்சமிருக்கும். ஒருவன் செயல்பாட்டினால் அதிலிருந்து விலகியிருந்த போதிலும் முழுவதுமாக வெளிவராதவனாக இருக்கிறான்

ஆனால் ஆசையை அதன் வாசனையுடன் சேர்த்து நீக்கியவர்கள்விநிவ்ருத்த காமாஆகிறார்கள். இவ்விதம் முழுமையாக வெளிவருதலே உண்மையான சந்யாசம் ஆகிறது. அதற்கு அவன்அத்4யாத்ம நித்யா’-வாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆத்ம ஞானம் மட்டுமே ஆசைகளை முழுமையாக வேரறுக்க வல்லது

 

=> (4) பரமாத்ம ஞான நிஷ்டர்கள்:

அடுத்ததாக, ஆத்ம சிந்தனையில்அத்4யாத்ம’, முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள்நித்யா’. எப்பொழுதும் தனது சுய-சொரூபத்தைக் காண்பதில் உறுதியாக இருப்பவர்கள் இவர்கள். எதைப் பார்க்கும்பொழுதும், சிந்திக்கும்பொழுதும் அது ஆத்ம-அனாத்ம விவேகம் குறித்ததாகவே இருக்கிறது

ஆத்மாவைப் பற்றி சிந்தித்தல் எப்படி?

  (1) விவேகம் - பிரித்தல்; நிலையானது எது, நிலையற்றது எது என பிரித்துப் பார்க்கும் விவேகம்.

  (2) நிஷேத4ம் - நீக்குதல்; நிலையற்றதை நீக்குதல்.

  (3) நிஷ்டா - நிலைத்தல்; நிலையானதில் நிலைபெறுதல்.

இந்த விஷயங்களில் முழுமையாகவும் உறுதியாகவும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்; அல்லது அதை சுபாவமாக ஆக்கியவர்கள்அத்4யாத்ம நித்யாஆகிறார்கள்


=> (5) இருமையைக் கடந்தவர்கள்:

இன்பம் மற்றும் துன்பம் என்ற பெயரையுடைய (ஸுக2து3:2ஸம்ஜ்ஞை:), இருமையிலிருந்து விடுதலை அடைந்தவர்கள்த்3வந்த்3வை: விமுக்தா:எனப்படுகின்றனர். ‘த்3வந்த்3எனில் இருமை, எதிரெதிர் தன்மைகளைக் குறிக்கிறது. இரண்டு எதிர்பதமான தன்மையைக் கொண்டது இவ்வுலகம்; இருமை சொரூபம்த்3வந்த்3வாத்மகம் ஜகத். இதிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்கள்விமுக்தா, இங்கும்விஎனும் முன்னொட்டு விஷேசத்தைக் குறிக்கும் வகையில், முழுமையாகக் கடந்துவிட்டதைக் குறிக்கிறது. எனவே இருமையிலிருந்து விடுபட்டவர்கள் என்பதை உலகத்திலிருந்து அதனுடைய சுக துக்கத்திலிருந்து விடுதலை அடைந்தவர்கள் எனவும் கூறலாம்

உடல் இருமையை அனுபவிக்கும்; மனதுக்கும் மான அவமானம் தெரியும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளவதன் மூலம் உள்மனது பாதிக்கப்படாமல் எப்போதும் மன அமைதியுடன் இருக்கிறார்கள். வருவதை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்ப்பதன்மூலம் இருமையிலிருந்து விடுபடுபடலாம்.

இவ்விதமாக எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் ஒருவித அமைதியான மனதை அனுபவிப்பதால், இருக்கின்ற சூழ்நிலையிலுள்ள நிதர்சனத்தை அவர்களால் பார்க்கமுடிகிறது. இதன் விளைவாக மோஹ-மயக்கத்தினால் ஏற்படுகிற தவறிலிருந்து விடுபடுவதால் அவர்கள் இருமையினால் இனியும் ஏமாறுவதில்லை ஆதலால்அமூடா4’. இத்தகையவர்கள் முன் சுலோகத்தில் சொல்லப்பட்ட அந்த அழியாத பதத்தை அடைகிறார்கள்; தேயாத இலக்கை அடைகிறார்கள்தத் அவ்யயம் பத3ம் 3ச்ச2ந்தி  .

அடுத்த சுலோகத்தில் அந்த பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பந்தப்பட்ட ஆத்மா மனுஷ்யனாகும்; மாயையாகிய சங்கிலியில் கட்டுப்படாத ஆத்மா ஈஷ்வரனாகும்.

---------------------------------------------------------------------------------------------