புதன், 2 ஜூலை, 2025

புருஷோத்தம யோகம் 15.1

பதினைந்தாம் அத்தியாயம்

புருஷோத்தம யோகம் 

[पुरुषोत्तमयोग:]

மோக்ஷத்திற்கென ஒருவன் அடைய வேண்டிய அறிவு, அல்லது முழு உபநிஷத்தின் சாரத்தை இவ்வாறாகக் கூறலாம்: (1) ப்ரம்ம ஸத்யம் (2)ஜகந் மித்யா(உலகம் மித்யா). இவ்விரு கருத்தும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது


=> ஸம்ஸார வர்ணநம்:

முதலில் இங்கு கிருஷ்ணர், ஸம்ஸாரத்தின் தன்மையைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். அந்த ஸம்ஸார வர்ணனையின் நோக்கம்தான் என்ன?

   (1) ஸம்ஸார ஸ்வரூப விவேகார்த்த2ம்ஸம்ஸாரத்தின் இயல்பைப் பற்றிய அறிவை அடைய. ஏனெனில் விசாரணை செய்யப்படாதவரை இவை அழகானதுஅவிசார்ய பர்யந்தம் ரமணீயம். விசாரம் செய்யப்படும்போது அது குறித்த மோஹம் சென்றுவிடும்.

   (2) வைராக்3யார்த்த2ம்வைராக்கியத்திற்கான உபாயமாக. இந்த உலகம் குறித்த உண்மை அறியப்படும்போதும், இவ்வுலக வாழ்க்கையின் தோஷமாகவுள்ள புலன்களின் தேய்வு, நோய், இறப்பு, துக்கம் இவைகள் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும்போதும், வைராக்கியம் அதிகரிக்கிறது

   (3) ப்3ரஹ்ம ஞாநார்த்த2ம் —  ப்ரம்மத்தைப் பற்றிய ஞானத்தை அடைய. மெய்ப்பொருள் குறித்த அறியாமையே ஸம்ஸாரத்திற்கு காரணமாக இருக்கிறது. எனவே அதிஷ்டானத்தைக் குறித்த ஞானமானது ஸம்ஸாரத்தை நீக்கவல்லதாக உள்ளது.


=> முழுமையான அத்தியாயம்:

ஆகையினால் அர்ஜுனனின் வைராக்கியத்தை அதிகரிக்கும்பொருட்டு, மரத்தை உருவகமாகக் கொண்டு முதலில் ஸம்ஸாரத்தை வர்ணிக்கிறார் பகவான். பிறகு, தன்னைப் பற்றிய அறியாமையினால் ஏற்படும் தவறான அறிவே ஸம்ஸாரத்திற்கு அடிப்படையாக இருப்பதால், கிருஷ்ணர் ஆத்ம-தத்துவத்தை போதிக்கிறார்.

இந்த அத்தியாயம் உலகம்(ஜகத்), தனிமனிதன்(ஜீவ), மூல காரணம், ஜீவனின் பிறப்பு மற்றும் இறப்பு, சூக்ஷம-சரீரம், உண்ணுதல் போன்ற தினசரி செயல்பாடுகளில் உணவு மற்றும் உண்பவன் முதலிய அனைத்தும் பரமாத்மாவே என வெளிப்படுத்துகிறது. மேலும் இது ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கானத் தகுதிகளைப் பற்றியும் பேசுகிறது. எனவே இது ஒரு முழுமையான மற்றும் முக்கியமான அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. இனி, இந்த அத்தியாயத்தின் முதல் சுலோகத்திற்குள் செல்லலாம்.

---------------------------------------------------------------------------------------------

||15.1|| ஸம்ஸார விருக்ஷம்:

श्रीभगवानुवाच

ऊर्ध्वमूलमध:शाखमश्वत्थं प्राहुरव्ययम्

छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद वेदवित्  ।। ।।

ஸ்ரீப43வாநுவாச

ஊர்த்4வமூலமத4:சா12மச்1வத்த2ம் ப்ராஹுரவ்யயம்
2ந்தா3ம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத3 வேத3வித் ।। 1 ।।

श्री भगवान् उवाच  ஸ்ரீ 43வாந் உவாச  ஶ்ரீ பகவான் சொன்னது       

ऊर्ध्वमूलम्  ஊர்த்4வமூலம்  மேலே வேருள்ளது    अध: शाखम्  அத4: சா12ம்  கீழே கிளைகளுள்ளது     अश्वत्थं  அச்1வத்த2ம்  ஆலமரத்தை   अव्ययम्  அவ்யயம்  அழிவற்றது என்று     

प्राहु:  ப்ராஹு:  பகர்கின்றனர்    छन्दांसि  2ந்தா3ம்ஸி  வேதங்கள்    यस्य  யஸ்ய  அதனுடைய    पर्णानि  பர்ணாநி  இலைகள்      तं  தம்  அதை     :  :  யார்     

वेद  வேத3  அறிகிறானோ    :  :  அவன்     वेदवित्  வேத3வித்  வேதத்தை அறிபவன்.   


ஶ்ரீ பகவான் சொன்னது

மேலே வேருள்ளதும் கீழே கிளைகளுள்ளதும் ஆகிய ஆலமரம் போன்ற ஸம்ஸாரத்தை அழிவற்றது என்கின்றனர். வேதங்கள் அதன் இலைகள். அதை அறிபவனே வேதத்தை அறிபவன் ஆகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர். இதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேத மறிவோன்.


விளக்கம்:

=> ஸம்ஸாரமெனும் மரம்:

இங்கு ஆலமரத்தின் உருவம் ஸம்ஸாரத்துடன் ஒப்பிடப்படுகிறது. உண்மையில்அச்1வத்த2ம்எனில் அரசமரம் ஆகும். ஆனால் இங்கு அது ஆலமரம் என எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அரசமரம் மற்றும் ஆலமரம் இவையிரண்டுமே ஒரே இனத்தைச் சேர்ந்தவைகள் ஆகும் - ஃபிகஸ் ரிலிஜியோசா; ஆலமரம் உபமானத்துக்கு முற்றிலும் பொருத்தமுடையதாகிறது

அச்1வத்த2எனில்நாளை அது அப்படி இருக்காது ஸ்வ: திஷ்டதி இதி அச்1வத்த2என்பது பொருள். ஒருநாள் இருப்பதுபோன்று அடுத்தநாள் அது இருப்பதில்லை என்பதாகிறது. ஆலமரம் எல்லா நேரமும் மாறிக்கொண்டே இருந்தபோதிலும் அதனுடைய விதை மற்றும் ஆணிவேர் மூலம் அது தன்னை நிலைநிறுத்துகிறது. ஸம்ஸாரமாகிய உலகமும் அத்தகையதே. இந்த அஸ்வத்த மரத்தைப் போலவே அதுவும் அடுத்த நாள் அந்த வடிவத்தில் இருக்காது. எந்த மாற்றமும் அடையாத ப்ரம்ம என்கிற ஆணிவேரை ஆதாரமாகக்கொண்டு (அதிஷ்டாந), அது மாறிக்கொண்டே இருக்கிறது

ஸம்ஸாரம் என்பது அஸ்வத்தம் என்றாலும், அதாவது அப்படியே இல்லாமல் மாறிக்கொண்டேயிருந்த போதிலும், ஸம்ஸாரம் அவ்யயம், அழியாதது. மாறிக்கொண்டேயிருப்பது ஆனால் அழியாதது - ப்ரவாஹ நித்யம். இங்கு பெயர்களும் வடிவங்களும்(நாமரூப) மாறிக்கொண்டே செல்கின்றன; ஆனால் அனைத்தும் ஒடுங்கியபோதும்கூட, அது வெளித்தோற்றத்திற்கு வராத வடிவத்தில் இருந்து, அடுத்த சுழற்சிக்கு திரும்ப மீண்டும் வெளிவருகிறது. ஆகையினால், இதற்கு ஆரம்பம் இல்லை, ஆனால் வெளித்தோற்றத்திற்கு வருவதும், மற்றும் தோற்றத்திற்கு வராத வடிவத்தில் ஒடுங்கி இருப்பதுமாக அழியாது இருக்கிறது. நமது விழிப்பு நிலை, உறக்கத்தில் ஒடுங்கி மீண்டும் வெளிவருவதுபோல இவை தோன்றி ஒடுங்கிக் கொண்டுள்ளன. ஸம்ஸாரம் அழிவற்றது எனக் கூறப்பட்டபோதிலும், அதன் வேராகவுள்ள அறியாமையை ஒருவன் ஒருமுறை நீக்கிவிட்டானானால் அது முடிவை அடைகிறது.  

இதன் ஒப்புமையை இனியொரு கோணத்திலும் ஆராயலாம். பொதுவாக ஒரு மரத்தின் வேரானது நமது கண்களுக்கு தெரியாவிட்டாலும், மரம் அதன் வேர்களால் நிற்கிறது என்பதை நாம் ஊகிக்கிறோம். அதுபோலவே ஸம்ஸாரத்தின் வேர் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது எனினும் அதன் காரியத்தைக் கொண்டு காரணத்தை ஊகிக்கிறோம்காரண-காரிய-சம்பந்த. எப்படி மரத்தின் வேரானது பார்வைக்கு புலப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதோ, அதுபோல இந்த உலகத்தின் வேரானது அதைப் பார்ப்பவனுக்குள் மறைக்கப்பட்டுள்ளது

இந்த சுலோகத்தில் மரத்தினுடைய மூன்று அம்சங்கள் ஒப்பிட்டுப் பேசப்படுகின்றன. மேலிருந்து கீழாக வருகிற வேர், மாயையுடன் கூடிய ப்ரம்மத்துடனும், மரத்தின் கிளைகள் ஸ்தூல மற்றும் சூக்ஷம பூதங்களுடனும், இலைகள் வேதத்திலுள்ள கர்ம காண்டத்துடனும் உபமானமாகப் பேசப்படுகிறது


=> வேர்கள்:

ஊர்த்4 மூலம்எனில் மேலே வேருள்ளது என்று அர்த்தம். ‘ஊர்த்4மேலானது; உயர்ந்தது என்பது பொருள். இந்த முழுவுலகிற்கும் காரணமாக இருக்கின்ற மாயா-சக்தியுடன் கூடிய ப்ரம்மமே ஸம்ஸாரம் எனும் மரத்தின் வேராக உள்ளது. ஆலமரத்தின் விழுதானது மேலிருந்து கீழாக உள்ளது. மேலே கிளையில் சத்துக்களை வாங்கிக் கொண்டு கீழ் நோக்கி வருகிறது. அதுபோல மாயப் பிரபஞ்சம் மேலே பரம்பொருளிடத்திருந்து சாரத்தை(சத்தை) வாங்கிக் கொண்டு கீழே பிரகிருதியாகப் பரிணமித்து வருகிறது. பரம்பொருள் மேலானது என்பதற்கு சங்கரர் இங்கு நான்கு காரணங்களைக் கொடுக்கிறார்

   (1) நுண்ணியது(சூக்ஷமத்வாத்) - காலத்தை விடவும் நுண்ணியதாக இருப்பதால், ஸம்ஸாரத்தின் வேரானது மேலே உள்ளது என சங்கரர் விளக்கமளிக்கிறார். நேரம் ஒரு பொருளாக பார்க்கப்படுவதில்லை என்றாலும் அது மனதினால் உணரப்படுகிறது. ஆனால் இங்கே நாம், மனதை விடவும் நுட்பமான ஒன்றை, அந்த மனம் மற்றும் காலம் தேசம் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்ற ஒன்றை கையாளுகிறோம். மிக மிக நுண்ணியது என்பதால் மேலானதுஊர்த்4.    

   (2) காரணமாக இருப்பது(காரணத்வாத்) — எல்லாவற்றிற்கும் காரணம் எனும் நோக்கில் சிருஷ்டிக்கு முந்தையதாக இருப்பதால் ப்ரம்ம மேலானது.

   (3) என்றுமிருப்பது(நித்யத்வாத்) — எவ்வளவு முறை வெட்டப்பட்டாலும் வேர் இருக்கின்ற வரை மரமானது மீண்டும் மீண்டும் உருவாகும். எனவே மற்ற பாகங்களை ஒப்பிடும்போது ஒரு மரத்தின் வேரானது அதிக காலம் இருப்பதாகிறது. அதுபோல ஜகத்தை பொருத்தமட்டில், மாறிக்கொண்டே இருக்கின்ற ஸம்ஸாரத்திற்கு ஆதாரமாக, மூன்று காலத்திலும் மாறாமல் இருப்பதாக ப்ரம்ம உள்ளது. எனவே மேலானது.

   (4) மஹத்தானது (மஹத்வாத்) — எல்லையற்றதாகவும், (ஸ்த்யத்வாத்) மித்யாவுக்கு ஆதாரமாக ஸத்யமாக இருப்பதாலும் ப்ரம்ம மேலானது.


=> கிளைகள்:

கீழ்நோக்கிய கிளைகள் கொண்டதாக அஸ்வத்தம் உள்ளதுஅத4: சா12ம். இது ஸ்தூல மற்றும் சூக்ஷம பூதங்களைக் குறிக்கிறது. இவை கீழானது என்பதற்கான காரணங்கள்:

   (1) ஸ்தூலத்வாத்ஸ்தூலமாக இருப்பதினால் கீழானது. நுண்ணியதன் நோக்கில், மிக நுண்ணியதான ஆதாரத்துடன் ஒப்பிடும்போது, கால தேச வரையறைக்கு உட்படும் ஸ்தூல மற்றும் சூக்ஷம பூதங்கள் கீழானது

   (2) காரியத்வாத்காரியமாக(விளைவு) இருப்பதினால் கீழானது. காரணம் அழிவதில்லை; ஆனால் காரியங்கள் அழிவை அடைகின்றன என்பதால்அத4:’.

   (3) அநித்யத்வாத் —  மாறிக்கொண்டேயிருக்கிறபடியால் கீழானது.

   (4) மித்யாத்வாத்மித்யாவாக இருப்பதனால் கீழானதுமாறிக்கொண்டேயிருப்பது எனில் வெறும் தோற்றமாக மட்டுமே இருப்பது என்பது பொருள். ஆகவே மித்யா என்பதால் ஸத்யமான ப்ரம்மத்துடன் ஒப்பிடும்போது கீழானது


=> இலைகள்:

இலைகளானது ஒரு மரத்தின் முக்கியமான பாதுகாப்பு உறையாக, உயிர்ச்சக்தியின் ஆதாரமாக உள்ளது. அதுபோல ஸம்ஸாரம் எனும் விருக்ஷத்திற்கு இலைகளாக இருப்பது வேதங்கள் ஆகும்2ந்தா3ம்ஸி யஸ்ய பர்ணாநி. இங்கு வேதங்கள் என்பது வேதத்தின் கர்மகாண்டத்தைக் குறிக்கிறது. ஸம்ஸாரத்தை தக்கவைக்க கர்மங்களே தேவை என்பதாலும், மேலும் ஞானகாண்டமான வேதாந்தம் என்பது ஸம்ஸாரத்தை அழிக்கின்ற இயல்பைக் கொண்டிருப்பதாலும், இங்கு வேதங்கள் என்பது வேதத்தின் முதல் பகுதியை மட்டுமே குறிப்பதாகிறது

வேதத்தின் கர்மகாண்டம், ஜீவாத்மாவின் மனதிலுள்ள ஆசையின் அடர்த்தியை உணர்ந்து, விதவிதமான பொருள்களையும் அதை அடைகின்ற கர்மங்கள் மற்றும் சாதனங்களாக யக்ஞங்களையும் பரிந்துரைக்கிறது. ஒரு மரத்தினுடைய (1) இருப்பிற்கு, (2) அழகிற்கு, (3) நிலைநிறுத்துவதற்கு மற்றும் (4) அதன் சொரூபத்தை மறைப்பதற்கு இலைகள் உதவுகின்றன. அதுபோல

 (1) வேதத்தின் இக்கர்மங்கள் புண்ணியத்தை உற்பத்தி செய்யும் கருவிகளாக இருப்பதால் இவைகள் ஜீவாத்மாவை கர்மத்திலேயே, ஸம்ஸாரத்திலேயே வைத்துள்ளது

 (2) துக்கம் எனும் தோஷத்தினால் சூழப்பட்ட இந்த ஜீவிதத்தை ஆசைகளையும் அதை அடையும் வழிமுறைகளையும் காட்டுவதன் மூலம் அழகானதைப்போல வேதங்கள் காட்டுகிறது

 (3) ஜீவன் தனது ஆசைகளை நிறைவேற்றும் நோக்கில், பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு வழிகளைச் சரியாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்துகிறான். இதனால் புண்ணியத்தையும் பாபத்தையும் சேகரிக்கிறான். இது மேலும் பிறவிகளைக் கொடுப்பதால் அவனுக்கு ஸம்ஸாரம் தொடர்கிறது. மரங்களுக்கு இலைகள் போல இந்த கர்மங்கள் அவனை ஸம்ஸாரத்தில் உயிர்ப்புடன் இருக்க உதவுகின்றன.

 (4) ‘இவ்வுலகில் எதுவும் நம்மை திருப்திப்படுத்தாதுஎன்கிற உண்மையை, அதாவது ஸம்ஸாரத்தின் சொரூபத்தை கர்மங்கள் மறைக்கின்றன


=> இது ஒரு பிரசித்தி பெற்ற உபமானம்:

ஸம்ஸாரத்தை மரமாகப் பார்க்கின்ற இந்த உதாரணத்தை ஸ்ருதியும் கையாளுகிறது. கடோபநிஷதத்தில், மரத்தின் வேராக ப்ரம்மமும், அதன் கிளைகளாக கால-தேச கட்டமைப்பும் கூறப்படுகிறது

மஹாபாரதத்திலும் இந்த உருவகம் வருவதாக சங்கரர் தனது பாஷ்யத்தில் சுட்டிக்காட்டுகிறார். மரமானது அதன் வேரிலிருந்து பிறந்து பின் வேரினால் நிலைநிறுத்தப்படுவதுபோல, ஸம்ஸார மரமானது வெளிதோற்றத்திற்கு வராத ஒன்றிலிருந்து (ப்ரம்மத்திடமிருந்து) மேலெழுந்து, ஈஷ்வரனால் நிலைத்து நிற்பதாகக் கூறப்படுகிறது. இதில் மரத்தின் தண்டு(அடிமரம்) புத்தியுடனும், கிளைகள் புலனுறுப்புகளுடனும், மலர்கள் புண்ணிய பாபத்துடனும் ஒப்பிடப்படுகிறது. மேலும் மலரிலிருந்து உருவாகும் பழங்களாக புண்ணிய பாபத்தினால் உருவாகும் சுக-துக்கமும், மரத்தில் வாழும் பறவைகளுக்கு ஒப்பாக ஸம்ஸார மரத்தை சார்ந்துள்ள ஜீவனும் கூறப்படுகிறது.

இவ்விதமாக ப்ரம்ம-ஞானத்திற்கான முக்கிய மூன்று சாஸ்திரங்களும் இந்த உபமானத்தைப் பயன்படுத்துகின்றனஸ்ருதியில் கடோபநிஷத்; ஸ்மிருதியில் கீதை; இதிஹாச-புராணத்தில் மஹாபாரதம்


=> அனைத்தையும் அறிந்தவன்:

யாரொருவன் இதை அறிகின்றானோ அவன் வேதத்தை அறிந்தவன்: தம் வேத3 : வேத3வித், என்கிறார் பகவான். ‘இதைஎன்பதைக் குறிக்கின்றதம்என்ற சொல், ஸம்ஸார மரத்தைக் குறிக்கிறது. உண்மையில் வேதம் சொல்ல விரும்பும் முக்கிய விஷயம் என்னவென்றால், தனியொருவனின் பிரத்யக ஆத்மாவே ஸம்ஸாரத்தின் ஆதாரமாக இருக்கின்ற ப்ரம்மம் ஆகும். எனவே இந்த ஸம்ஸார மரத்தை அதன் வேரான ப்ரம்மத்துடன் அறிபவனே, முழு ஸம்ஸாரமும் மித்யா மற்றும் அதனுடைய வேராக விளங்கும் ப்ரம்மமே ஸத்யம் என அறிபவனே, வேதத்தை அறிபவன் ஆகிறான்வேத3வித். அவனே அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான்ஸர்வவித்.

இந்த அத்தியாயத்தின் தொடக்க சுலோகமான இது ஒரு பிரதிக்ஞை வாக்கியமாக உள்ளது. அதாவது இந்த ஸம்ஸார மரத்தை, அதன் வேருடன் சேர்ந்து அறிவதன் மூலம் அனைத்தும் அறியப்படுவதாக ஆகின்றது எனக் கூறுகின்றது இந்த சுலோகம். இனி, இந்த அத்தியாயத்தின் எஞ்சிய பகுதி முழுதும் இதை நிறுவுவதற்கான விளக்கமாக வர இருக்கின்றது

அடுத்த சுலோகத்தில் ஸம்ஸார மரத்தின் மற்ற பாகங்கள் விளக்கப்படவுள்ளது. இதன்மூலம் அது என்ன மற்றும் அதை அறிவதன்மூலம் எப்படி ஒருவன் வேதத்தை அறிந்தவனாக ஆகின்றான் என்பதைப் பார்க்கலாம்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்திலிருக்கும் போது உருத்தெரியாதஹோஎன்ற சப்தத்தை மட்டும் கேட்கிறான். ஆனால் அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக் கிழங்குக்கும் மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் இம்மாதிரியாக மனிதர்கள் பேரம் பண்ணுவதை ஸ்பஷ்டமாகக் கேட்கிறான். ஒருவன் ஈஷ்வரனிடமிருந்து வெகு தூரத்துக்கு அப்பாலிருக்கும் வரையில் அவன் குழப்பத்திலும் காரண காரிய வாதப்பிரதிவாத அமளியிலுமே இருப்பான். ஆனால் அவன் ஈஷ்வரனை நெருங்குங்கால் காரண காரிய வாதம், வாதப் பிரதி வாதம் எல்லாம் நின்றொழிகின்றன. தெய்விக ரகஸ்யங்கள் எல்லாவற்றையும் வெகு தெளிவாயும் ஸ்பஷ்டமாயும் அறிந்து கொள்கிறான்

---------------------------------------------------------------------------------------------