ஞாயிறு, 16 அக்டோபர், 2022

தியான யோகம் 6.20 - 6.21

||6.20|| தியான பலன் மற்றும் மோக்ஷத்திற்கான லக்ஷணங்கள்:

यत्रोपरमते चित्तं निरुद्धं योगसेवया

यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति ।। २० ।।

யத்ரோபரமதே சித்தம் நிருத்34ம் யோக3ஸேவயா

யத்ர சைவாத்மநாத்மாநம் பச்1யந்நாத்மநி துஷ்யதி ।। 20 ।।


यत्र   யத்ர  எப்பொழுது  योगसेवया   யோக3ஸேவயா  தியானத்தை அனுஷ்டானம் செய்வதன் மூலம்   

निरुद्धं   நிருத்34ம்  முறைப்படுத்தப்பட்ட   चित्तं  சித்தம்  மனமானது   

उपरमते  உபரமதே  அமைதி பெறுகிறதோ   यत्र   யத்ர   மேலும் எப்பொழுது   

त्माना   ஆத்மாநா  மனதால் (தன்னாலேயே)   त्मानं   ஆத்மாநம்  ஆத்மாவை(பரமாத்மாவை)   

पश्यन्   பச்1யந்  பார்த்து   त्मनि एव  ஆத்மநி ஏவ  ஆத்மாவினிடத்தே (தன்னிடத்திலேயே)   

तुष्यति   துஷ்யதி  மகிழ்வுறுகிறானோ;


தியானப் பயிற்சியினால் எப்பொழுது மனமானது நன்கடங்கி அமைதி பெறுகிறதோ, மேலும் எப்பொழுது ஆத்மாவால் ஆத்மாவைக் கண்டு ஆத்மாவில் மகிழ்வுறுகிறானோ;


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ


விளக்கம்:

=> ஜீவன் முக்தி லக்ஷணங்கள்:

சுலோகம் 20 முதல் 23 வரை நிதித்யாசன தியானப் பலனை, யோக முதிர்ச்சியினால் வரும் பல்வேறு அனுபவங்களை பகவான் எடுத்துக் கூறுகிறார். மேலும் இதை, ஜீவன் முக்தியானது பல கோணங்களில் விளக்கப்படுவதாகவும் கூறலாம்

பொதுவாக வேதாந்தத்தில் நாம் உபயோகிக்கும்சம்சாரம்என்ற சொல்லானது மனக்குறையை அல்லது மன நிறைவின்மையைக் குறிக்கிறது. சம்சாரத்திலிருந்து விடுபடும் நிலை மோக்ஷம்; இது ஜீவன் முக்தி என்றும் அழைக்கப்படும். விதவிதமான மனிதர்கள் அவரவர்களின் இயல்பிற்கு ஏற்றார்போல விதவிதமான காரணங்களினால் சம்சாரத்தை அடைகிறார்கள். எனவே சம்சாரத்திலிருந்து விடுவிக்கும் மோக்ஷத்தையும் பல்வேறு விதங்களில் கூறலாம். உதாரணமாக பயத்தினால் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு அபயம் மோக்ஷமாகிறது. ஆசைகளினால் அலைக்கழிக்கப் பட்டவர்களுக்கு நிராசை மோக்ஷம். அதுபோல மனநிறைவு, துயரமின்மை, மன அமைதி என முக்தியைப் பலவாறு கூறலாம். அதன் அடிப்படையில் இங்கு கிருஷ்ணர் ஜீவன் முக்திக்கான ஏழு லக்ஷணங்களை சுட்டிக் காட்டுகிறார். இது ஞானத்தை அடைந்த நிதித்யாசகனால் அடையப்படும் பலனாகும். இந்த பலன்களையே நிதித்யாசன தியானத்திற்கு உரியவைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் ஞானத்தின் பலனை தியானிக்கும் ஒருவனுக்கு முமுக்ஷுத்வம் அதிகரித்து மனவுறுதி தீவிரமடைகிறது


=> இரு லக்ஷணங்கள்:

இந்த சுலோகத்தில் பகவான் மோக்ஷத்திற்கான இரு லக்ஷணங்களை எடுத்துரைக்கிறார். ஒன்று மனதின் முழு அமைதி; இனியொன்று தன்னிறைவு.

(1) சித்த உபரம: (மனதின் முழுவமைதி) :

தியானப் பயிற்சியின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்தக்கரணம்(சித்தம்) எந்த மோக்ஷ நிலையில் ஒடுக்கத்தை அல்லது முழு அமைதியை அடைகிறதோ’,

இங்குசித்தம்என்பது அந்தக்கரணமாகிய மனதைக் குறிக்கிறது. மனமானது எப்பொழுதும் பஹிர்முகமாகவும், ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவித் தாவி விக்ஷேபம் அடைவதையும் இயல்பாகக் கொண்டுள்ளது. மனதின் இந்த தன்மைக்குக் காரணம்:

(i) மித்யாத்வம் நிச்சயம் செய்யப்படாததால்

(ii) அப்யாசம் செய்யாததால் 

ஜகத் மித்யாஎன்ற ஞானத்தை அடைந்த பிறகும் பழக்கத்தினால் மனமானது தனது பழைய இயல்புடனேயே வியவகாரத்தில் ஈடுபடுகிறது. அப்யாசம் எனில் பயிற்சி செய்தல் அல்லது பழக்கப்படுத்துதல் என்பது பொருள். நிதித்யாசனத்தின் மூலம் ஞானத்தை மீண்டும் மீண்டும் மனதிற்கு கொண்டு வந்து பழக்கப்படுத்துவதால் ஞானம் உறுதி பெறுகிறது

(2) ஆத்ம தர்ஷண ஜென்ய ஆத்ம த்ருப்தி: [ஆத்மாவை அறிந்ததனால் தோன்றிய தன்னிறைவு] :

மேலும் எந்த முக்தி நிலையில், ஒருவன் மனதின் துணைகொண்டு(ஆத்மாநா) அனைத்து சரீரத்திலும் உள்ள பரமாத்மாவை ப்ரம்மனை தானாக(ஆத்மாநம்) பார்ப்பதால் தன்னிடத்திலேயே(ஆத்மநி ஏவ) நிறைவை அடைகிறானோ;’

ஒரு குறிப்பிட்ட நபரின் இருப்பால் நான் திருப்தி அடையவில்லை என்பது தவறான பார்வை. அவரின் அருகாமையில் எனக்கு என்னிடத்தில் திருப்தியில்லை என்பதே உண்மை. இது அவரைக் குறித்த நமது தவறான மதிப்பீட்டினாலும் சரியான புரிதல் இல்லாததாலும் ஏற்படுகிறது. எனவே உண்மையில் இந்த உலகிற்கு நம்மை அதிருப்திபடுத்தும் திறன் இல்லை. அந்த சக்தியை நாம்தான் அதற்குக் கொடுக்கிறோம். பகவான், கீதையை உபதேசிக்கும் முதல் சுலோகத்தை இக்கோணத்திலேயே ஆரம்பிக்கிறார் - துயரத்திற்கு யோக்யதை இல்லாத விஷயத்தை குறித்து நீ துயரப்படுகிறாய் (அசோ1ச்யாந் அந்வசோ1:). அதாவது அது நம்மை துயரப்படுத்தும் சக்தியை நாம்தான் அதற்குக் கொடுக்கிறோம். உண்மையில் அதற்கு அந்த யோக்யதை இல்லை. இதை புரிந்து கொண்டவன் தன்னிடத்திலேயே நிறைவை, மகிழ்ச்சியை அடைகிறான்.


=> ஒரு பொருளைப் பார்ப்பதற்கும் ஆத்மாவைப் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு:

ஒருவன் ஒரு பொருளை அவனது எண்ணத்தின் மூலமாகவே அடையாளம் காண்கின்றான் அல்லது கிரஹிக்கின்றான். எண்ணம் சமஸ்கிருதத்தில்வ்ருத்திஎன்றழைக்கப்படும். ஒரு பொருளை அடையாளம் காண ஏற்படும் வ்ருத்தியானது, அதனுள் அந்த பொருளை அவசியம் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக நான் ஒரு பானையை(கட) கிரஹிக்க வேண்டுமானால், உருவாகும் எண்ணமானது பானையின் வடிவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபானை எண்ணம் (கட வ்ருத்தி)’ என அழைக்கப்படும். ஒரு பானை எண்ணத்தினால் மட்டுமே பானையை விளக்க முடியும்.

அதேபோல ஆத்மாவை விளக்கவும் வ்ருத்தி கண்டிப்பாகத் தேவை. சாஸ்திர சிரவணத்தினால் உருவாக்கப்படும் இவ்வகை வ்ருத்திகள் சுயத்தைப் பற்றிய அறியாமையை அழிக்கின்றன. எனவேதான் இவ்வகை எண்ணங்கள் ஒரு நிதித்யாசகனால் மீண்டும் மீண்டும் சிந்தனைக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கு சுயத்தின் சொரூபத்தை விளக்கும் வ்ருத்தியானது, ஆத்மாவை ஒரு புறப்பொருளாகக் காட்டாமல் அந்த சொரூபத்தையே எடுத்துக் கொள்கிறது. இது ஒரு பானை போன்று, பொருளை அறிவதற்கு ஒப்பானது அல்ல. ஆத்மாவை அறிவதில் ஒரே ஒரு செயல்பாடு மட்டுமே இருக்கிறது; அதேசமயம் ஒரு பானையை அறிவதில், இரண்டு செயல்பாடுகள் அல்லது படிகள் உள்ளன

முதல் செயல்பாடு - வ்ருத்தி பானையின் வடிவத்தை எடுத்துக்கொள்வது மற்றும் இரண்டாவது செயல்பாடு - அந்த வ்ருத்தியை விளக்குவதன் மூலம் பானையை அறிவது. ஒன்று பொருள்மயமான எண்ணம் உருவாதல்; மற்றொன்று அந்த எண்ணத்தை விளக்குதல். இதில் பொருள்மயமான வ்ருத்தியை இனியொரு வ்ருத்தியானது விளக்குகிறது; அது த்ரஷ்டா, பார்ப்பவன் எனும் வ்ருத்தி. நான் பார்ப்பவனாக, பானையை அறிபவனாக ஆகிறேன். ஆகவே இந்த நான்-எண்ணம்(அஹம் வ்ருத்தி), பார்ப்பவன் என்ற நிலையை எடுத்துக்கொண்டு, ‘இது பானை(அயம் கட:)’ என ஒரு பொருளை எண்ணம் வழியாக அறிகிறது.

ஒரு பொருளை அறிபவனுக்கும் அந்த அறியப்பட வேண்டிய பொருளுக்கும் உள்ள சம்பந்தம், ஆத்ம-அனாத்ம-சம்பந்த, என்பது எப்போதும் இரண்டு படிகளை உள்ளடக்கியது. அப்பொருளை வ்ருத்தியின் மூலம் பொருட்படுத்துதல் மற்றும் அந்த வ்ருத்தியை அறிதல். இதனாலேயேஇது பானைஎன்று சொல்லலாம்; ஆனால்இது ஆத்மாஎன்று சொல்ல முடியாது. ஏனெனில் அதைச் சொல்பவன் யார்? நான்தான் அதைச் சொல்ல வேண்டும், ஆனால் அவ்விதம் சொல்லும்போது சுயத்தை ஆத்மாவை நான் புறநிலைப்படுத்தி அதை எனது சுயத்திற்கு வேறான ஒரு பொருளாக, நான் அல்லாததாக மாற்றி விடுகிறேன். எனில் அது ஒருபோதும் ஆத்மா அல்ல; அனாத்மாவாக ஆகிவிடும். என்னால் அறியப்படும் எந்தவொரு வெளிப்பொருளையும் போல அதுவும் அனாத்மா ஆகிவிடும்

ஆகவே இங்குஆத்மாநம் பச்1யந்என்று கிருஷ்ணர் கூறும்போது மேலே விசாரம் செய்த கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு புரிய முயற்சிக்க வேண்டும். இங்கு ஆத்மாவைப் பார்ப்பது என்பது ஒரே ஒரு செயல்பாட்டை மட்டுமே குறிக்கிறது. அதாவது ஆத்மாவை பொருள்படுத்த ஏற்படும் வ்ருத்தியே ஆத்மாவின் சொரூபத்தை எடுத்துக் கொள்கிறது. ஆத்மா தூய பிரக்ஞை வடிவானது, சுத்த சைத்தன்யம் என கூறப்படும்போது, அது உணரப்படும் பட்சத்தில், அந்த எண்ணமே பிரக்ஞை சொரூபத்தை எடுத்துக் கொள்கிறது; அந்த எண்ணத்தை புறநிலைப்படுத்தும் வேறு எந்தப் பொருளின் ஈடுபாடும் இங்கு இல்லை. அந்த பிரக்ஞை வடிவமானது, நேரடியாக ஆத்ம சொரூபத்தை குறிப்பதன் மூலம் அறியாமையை அழித்து, பின்னர் மறைந்து விடுகிறது. இதுவே இங்கு நடக்கும் ஒரே செயல்பாடு, அதாவது மற்ற பொருள்களின் அறிதலில் நடப்பதைப் போலஇது ஆத்மாஎன அங்கீகரிக்கும் இரண்டாவது செயல்பாடு எதுவுமில்லை.  

தன்னைப் பற்றிய குழப்பத்தை அடித்தளமாகக் கொண்ட சுய-அறியாமையை இந்த வ்ருத்தி அழிக்கிறது. இதுவே ஆத்ம-ஞானம், தன்னை அறிதலில் நடைபெறுகிறது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------------

||6.21|| அடுத்த இரு லக்ஷணங்கள்:

सुखमात्यन्तिकं यत्तद्बुद्धिग्राह्यमतीन्द्रियम्

वेत्ति यत्र चैवायं स्थितश्चलति तत्त्वत: ।। २१ ।।

ஸுக2மாத்யந்திகம் யத்தத்3பு3த்3தி4க்3ராஹ்யமதீந்த்3ரியம்

வேத்தி யத்ர சைவாயம் ஸ்தி2தச்1சலதி தத்த்வத: ।। 21 ।।


बुद्धिग्राह्यम्  பு3த்3தி4க்3ராஹ்யம்  புத்தியினால் கிரஹிக்கப்படுவது   

अतीन्द्रियम्  அதீந்த்3ரியம்  புலன்களுக்கு அப்பாற்பட்டது   त्यन्तिकं  ஆத்யந்திகம்  முடிவில்லாதது   

यत्  யத்  எதுவோ   तत् सुखम्   தத் ஸுக2ம்  அந்த சுகத்தை  यत्र   யத்ர   இன்னும் எங்கும்   

अयम् वेत्ति   அயம் வேத்தி இந்த யோகி அறிகிறான்   स्थित:  ஸ்தி2:  நிலைத்தவனாய்   

तत्त्वत:  தத்த்வத:  ஆத்மசொரூபத்தினின்று   एव चलति    ஏவ சலதி  அசைவதே இல்லை.


புலன்களுக்கு எட்டாதததும், புத்தியினால் கிரஹிக்கப்படுவதும், முடிவில்லாததுமாகிய எந்த சுகத்தை யோகி அறிகிறானோ, எதில் நிலைத்தபின் ஆத்மசொரூபத்தினின்று அவன் அசைவதில்லையோ;



சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,


விளக்கம்:

இங்கு பகவான் மேலும் இரு மோக்ஷ லக்ஷணத்தை எடுத்துரைக்கிறார்

(3) ஆத்யந்திக சுகம்(வரையறைகுட்படாத முழுமையான ஆனந்தம்) :

புலன்களுக்கு எட்டாதததும், புத்தியினால் கிரஹிக்கப்படுவதும், முடிவில்லாததுமாகிய எந்த மோக்ஷ சுகத்தை யோகி அறிகிறானோ

மோக்ஷத்தினால் கிடைக்கப் பெறும் முழுமையான மற்றும் முடிவிற்குட்படாத சுகம் இங்குஆத்யந்திகம் ஸுக2ம்என்றழைக்கப்படுகிறது. ‘அதீந்த்3ரியம்என்பதன் பொருள் இந்திரியங்களைக் கடந்தது என்பதாகும்; அதாவது புலன்களும் அதற்குரிய விஷயங்களும் சேரும்போது கிடைக்கும் சுகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் இது புத்தியினால் கிரஹிக்கக் கூடியதாக இருப்பதுபு3த்3தி4க்3ராஹ்யம்.

ஒருவன் எப்பொழுதெல்லாம் மனதினால் கிரஹிக்கக்கூடிய இன்பத்தை அடைகிறானோ அப்பொழுதெல்லாம் அது இந்திரிய - விஷய சேர்க்கையினால் நிகழ்ந்திருக்கும். உண்மையில் அவ்வகை இன்பத்தைதான் நாம் இதுவரையில் அனுபவித்துள்ளோம். இந்த இன்பமே ஒருவகையில் சம்சாரம்; துக்கம். ஆனால் இங்கு கிருஷ்ணரால் கூறிப்பிடப்படும் இன்பம், விஷயங்களையோ இந்திரியங்களையோ சாராததாக, சுதந்திரமானதாக, வெறும் புத்தியினால் மட்டும் கிரஹிக்கப் படக்கூடியதாக உள்ளது. சுதந்திரம் சுகம்

=> ஒரு ஞானி எதை குறித்து மகிழ்கிறான்?

பூரண ஆனந்தத்தை(ஆத்யந்திக ஸுகம்) தனது சொரூபமாக அடையாளம் கண்டு கொண்டதனால் அவன் மகிழ்கிறான். சங்கரர் தனது பாஷ்யத்தில் ஆத்யந்திக சுகத்தை முழுமையான ஆனந்தம், சுயத்தின் இயல்பாய் மிளிரும் ஒருவனின் ஸ்வரூப-சுகம் என விளக்குகிறார்.

சென்ற சுலோகத்தில் சொல்லப்பட்ட ஆத்மானம் என்ற சொல் இங்கு ஆத்யந்திக சுகம் என மாற்றப்பட்டுள்ளது. ‘ஆத்மாநம் பச்1யந்’, சுயத்தை பார்ப்பது என்பது முழு ஆனந்தத்தை தனது இயல்பெனக் கொண்ட சுயத்தை சுக-சொரூபமாக அங்கீகரிப்பதாகும். புலன்களுக்கு அப்பாற்பட்ட இந்த சுகத்தை அங்கீகரித்தல் என்பது புத்தியில் நடைபெறுகிறது.

சுகம் வெளியுலகில் இல்லை; அது ஆத்ம சொரூபத்திலேயே இருக்கிறது. உள்ளே இருப்பதை உணர இந்திரியங்களுக்கு இயலாது. தெளிவடைந்த புத்தியே அதைத் தெரிந்து கொள்கிறது. அது ஆத்ம-சுகமாதலால், முடிவில்லாதது. நீரினின்று நிலம் போக விரும்பாத மீனைப் போல தெவிட்டாத ஆத்மானந்தத்தை அனுபவிப்பவன் தெவிட்டுகிற விஷய ஆனந்தத்துக்கு போவதில்லை.

விஷயானந்தத்திற்கு, பொருள் மற்றும் புலன்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் ஆத்மானந்தம் என்பது புத்தியினால், புத்திக்குள் ஆத்ம தர்ஷண ஞானத்தினால் அடையப்படுவது ஆகும். ஆத்மாவை அனுபவிப்பதனால் கிடைக்கும் சுகம் என இதை புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் நானே ஆத்மாவாக இருப்பதால் என்னை நான் அனுபவித்தல் என்பது பொருந்தாது. இந்த ஞானத்தினால் மனதிற்கு வரும் நிலை இந்த ஆத்யந்திக சுகம் என்பதாக பகவான் கூறுகிறார்


=> ஒப்பீட்டளவிலான சுகம்:

ஒரு ஜீவனால் வாழ்க்கையில் பொதுவாக நான்கு வகையான சுகத்தை அடைய முடியும்

(1) விஷய-சுகம்

இந்திரிய விஷய சேர்க்கையினால் உருவாகும் இவ்வகை சுகம், பொருள் குறித்த ஆசையை நிறைவேற்றுவதன் மூலம் உண்டாகும் அனுபவத்திலிருந்து கிடைக்கிறது. அந்த ஆசையின் தீவிரத்தை பொறுத்து இந்த சுகம் வெவ்வேறு அளவுகளையும் படிநிலைகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக ஆசைக்குட்பட்ட பொருளைப் பார்ப்பது ஒரு குறிப்பிட்ட அளவு சுகமெனில் அதை அடைவதும் அல்லது அனுபவிப்பதும் இன்னும் அதிகமான சுகத்தை கொடுக்கிறது. இந்த விஷய சுகம், பறவைகள் மிருகங்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது.

(2) வித்யா-சுகம்:

ஏதேனும் ஒரு அறிவை அடையும்போதும், புரிந்துகொள்ள முயலும் விஷயம் ஒன்று புரிதலைக் கொடுக்கும்போதும் கிடைக்கும் சுகம், வித்யா-சுகம் எனப்படும். உதாரணமாக ஏதேனும் ஒரு புதிரை அல்லது பிரச்சனையை தீர்க்கும்போது மனதில் தோன்றும் சுகம். பள்ளிப் பருவத்தில் கணித வகுப்புகளிலும் செய்தித்தாள்களில் வரும் குறுக்கெழுத்துப் புதிருக்கு விடை காணும்போதும் இதை சிலர் அனுபவித்திருக்கலாம். எளிமையானதோ அல்லது சிக்கலானதோ ஒன்றை அறிதலில் கிடைக்கும் இது மனிதர்களுக்கு மட்டுமே உரியது.  

(3) யோக-சுகம்: 

பிரார்த்தனை, தியானம், பிராணாயாமம் மற்றும் யோகாசனம் போன்ற ஒழுக்கங்களைப் பின்பற்றுவதால் கிடைக்கும் சுகம், யோக-சுகம் ஆகும். ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் சீரான வாழ்க்கைமுறையினால் கிடைக்கின்ற ஒரு வகையான திருப்தியும் இதில் அடக்கம். இது கர்மயோக வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவனால் அடையப்படுகிறது.

(4) துரீய-சுகம்

எந்தவொரு பொருளையும், ஆதாயத்தையும், சாதனையையும் சார்ந்திராத இந்த நான்காவது வகை சுகம், துரீய-சுகம் எனப்படும். தனக்கு வேறான ஒன்றை அடைவதால் கிடைப்பதல்ல இது; தன்னையறிவதால், தனது சொரூப ஞானத்தினால் உண்டாவது. இந்த சுகத்தையே பகவான் இந்த சுலோகத்தில் புலன்களுக்கு அப்பாற்பட்ட, புத்தியினால் கிரஹிக்கக்கூடியதான முழுமையான சுகம், ‘ஆத்யந்திக-சுகம்என வர்ணிக்கிறார்.  


மேலே கூறப்பட்ட இந்த நான்கு வகையான சுகமும் புத்தியினால் கிரஹிக்கப்படுவதுதான், பு3த்3தி4க்3ராஹ்யம். இதில் விஷய-சுகம், வித்யா-சுகம் மற்றும் யோக-சுகம் மூன்றும் அதீந்திரியமானது அல்ல; அதாவது புலன்களுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் முழுமையானதும் முடிவற்றதுமான இந்த ஆத்யந்திக சுகம், புத்தி கிராஹ்யம் மற்றும் அதீந்திரியம்; அதாவது இது புறச் சூழ்நிலையையோ அல்லது அகநிலையையோ சார்ந்ததல்ல; எந்தவொன்றிலிருந்து தோன்றவுமில்லை. அது நானாக ஆத்மாகவே இருக்கிறது.

இப்படிப்பட்ட ஆத்ம சொரூபத்தை அடையாளம் கண்டுகொண்டவன் அந்த தத்துவத்திலிருந்து, ஆத்மா ஆனந்த சொரூபமானது என்ற உண்மையிலிருந்து நழுவுவதில்லை; அசைவதில்லைதத்த்வத: சலதி. இங்குதத்த்வத:என்ற சொல் ஆத்மாவின் சொரூபத்தை அல்லது உண்மையைக் குறிக்கிறது. ஆத்மா எந்த வரையறைக்குமுட்படாத பூரண சொரூபம், முடிவிலா ஆனந்த சொரூபம் போன்ற அறிவில் நிலைத்து நிற்கின்றான். இது மோக்ஷத்தின் மூன்றாவது லக்ஷணமாக ஆகிறது.


(4) தத்த்வ நிஷ்டா (தத்துவத்தில் பொருந்தியிருத்தல்) :

இந்த ஞானி, எந்த ஞானத்தில் உறுதியாக நின்றதனால், தத்துவத்திலிருந்து அவன் அசைவதில்லையோ[அது மோக்ஷ நிலை]’


சில சமயம் தத்துவமானது(உண்மை) மனதில் ஸ்புரிக்கும்(தெரியும்), ஆனால் அந்த ஞானத்தில் நிற்க ஒருவனுக்கு சக்தி இருக்காது. எந்த நிலையில் அவனால் உண்மையிலிருந்து நழுவாமல் தத்துவத்தில் உறுதியாய் நிற்க முடியுமோ அது மோக்ஷம். ஒருவன் உண்மையிலிருந்து வீழ, முழு முதற்காரணம் லெளகிக சுகம். பொருள் புகழ் மற்றும் பதவி போன்ற போகத்தினால் நம்மால் தத்துவத்தில் நிலைத்திருக்க முடிவதில்லை. இந்த உலகத்தில் எந்தவொரு பொருளுக்கும் நமக்கு சுகத்தை கொடுக்கும் சக்தியிருக்கக் கூடாது. இவ்வுலகம் எப்பொழுது நம்மை சுகப்படுத்தும் சக்தியை இழக்கிறதோ அப்பொழுதுதான் நாம் உலகை மித்யா எனக் கூறுவது புரிந்து கொள்ளப்பட்டதாக ஆகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உண்மையான சமாதியடையும்போது ஒருவன் தன் இயல்பான சச்சிதானந்த சாகரத்தில் ஆழ மூழ்குகிறான். அவன் கருவி கரணங்கள் ஒடுங்குகின்றன.

—----------------------------------------------------------------------------------------------------------------------------------