||6.18|| தியான சொரூபம்:
यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्ठते ।
नि:स्पृह: सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा ।। १८ ।।
யதா3 விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்ட2தே ।
நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்4யோ யுக்த இத்யுச்யதே ததா3 ।। 18 ।।
यदा யதா3 எப்பொழுது विनियतं चित्तम् விநியதம் சித்தம் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட சித்தம்
आत्मनि एव ஆத்மநி ஏவ ஆத்மாவிலே अवतिष्ठते அவதிஷ்ட2தே நிற்கின்றதோ तदा ததா3 அப்பொழுது
सर्व कामेभ्य: ஸர்வ காமேப்4ய: எல்லா காமங்களினின்றும் नि:स्पृह: நி:ஸ்ப்ருஹ: ஆசை நீங்கியவனாய் युक्त: इति யுக்த: இதி தியானத்தில் நிலைபெற்றவன் என்று उच्यते உச்யதே சொல்லப்படுகிறான்.
ஆசைகளனைத்தினின்றும் நாட்டத்தை அகற்றி, நன்கு அடக்கப்பட்ட மனது ஆத்மாவிலேயே நிற்கின்ற பொழுது ஒருவன் தியானத்தில் நிலைபெற்றவன் எனப்படுகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும் வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான்.
விளக்கம்:
இங்கு ‘விநியதம்’ என்பது ஒழுங்குபடுத்தப்படுதலைக் குறிக்கிறது. சங்கரர் இவ்வார்த்தையை ‘ஏகாக்ரதா’ என பாஷ்யத்தில் வரையறுக்கிறார். மனமானது எந்த கவனச்சிதறலும் இல்லாமல், சிந்திக்கும் பொருளின் மீது மட்டும் முழுஒருமுகப்பாட்டுடன் தனித்து நிற்கும் திறனை ‘விநியதம் சித்தம்’ எனக் கூறுகிறார். அப்படிப்பட்ட மனதில் தியானப் பொருளும் தியானிப்பவனும் ஒன்றாகிவிடுகிறார்கள்; இரண்டிற்கும் இடையே எந்தப் பிரிவினையும் அங்கு இல்லை. முந்தைய சுலோகங்களில் விளக்கப்பட்ட ஒழுக்கங்களின் மூலம், மனம் ஒரு குறிப்பிட்டவளவு தேர்ச்சியை, தியானத்திற்கான மனப்பாங்கினை, அமைதியைப் பெறுகிறது. இவ்விதத்தில் தகுதியடைந்த மனமானது ஆத்மாவில் நிலைத்திருக்கிறது — ஆத்மநி ஏவ அவதிஷ்ட2தே.
நிதித்யாசகனின் மனம் ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவில் எவ்விதம் நிலைத்திருக்கிறது? உறுதியான மற்றும் தெளிவான அறிவின் மூலம் மனமானது ஆத்மாவில் ஒடுங்குகிறது. இத்தகையவனுக்கு ‘நான்’ என்பதன் அர்த்தம், எந்தவொரு தவறான கருத்துக்களுக்கோ அல்லது வியூகங்களுக்கோ இடமளிக்காதவாறு உறுதிப்பட்டிருக்கும். இங்கு ஆத்மநி ஏவ அவதிஷ்ட2தே எனும் வெளிப்பாடு ஆத்மாவில் நிலைத்திருக்கும் மனதின் இந்த திறனையே குறிக்கிறது.
=> அறிவில் ஒடுங்கும் மனம்:
ஒருவன் தனக்குப் புறம்பான பல்வேறு விஷயங்களைப் பற்றிய கவலைகள் மற்றும் ஏக்கங்கள் அனைத்தையும் கைவிட்டு, ஆத்மாவுக்கு விழித்திருக்கிறான்; அதாவது மனம் எப்போதும் ஆத்மாவில் நிலைத்திருக்கும் அல்லது ஒடுங்கியிருக்கும். இதனால் அவன் ஒருபோதும் ஆத்மாவிலிருந்து பிரிக்கப்படுவதில்லை. இவ்விதம் தெளிவான ஞானத்தை அடைந்தவன் தனது ஆசைக்குரிய பொருட்களுக்கான ஏக்கத்திலிருந்து விடுபடுகிறான்; எனவே அவன் நி:ஸ்ப்ருஹ: ஸர்வ காமேப்4ய: ஆகிறான். தன்னறிவை அடைந்தவன் இயற்கையாகப் பெறுகிற சுதந்திரம் இது.
மனம் சுபாவமாக சென்று ஒட்டிக் கொள்ளாத தன்மை ‘நி:ஸ்ப்ருஹ:’ ஆகும். ஒரு சாதகன் தனது ஆரம்பகாலத்தில், ஏதேனும் ஒன்றைப் பார்ப்பதாலோ அல்லது கேட்பதாலோ மனதில் இயல்பாக உண்டாகும் ஆசையை நீக்கிக் கொண்டே இருப்பான். அடைந்த ஞானத்தை மீண்டும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து ஆசைகளை நீக்கும் இந்த போராட்டம் எப்பொழுது முடிவுக்கு வருகிறதோ அதுவே முதிர்ந்த நிலை. அப்பொழுது ஆசையற்ற நிலை என்பது ஒருவனின் சுபாவமாக மாறுகிறது. இந்நிலையை அடைய வேண்டும் எனத் தெரிந்தும் மனம் ஏன் மீண்டும் மீண்டும் ஆசைபட்டுக் கொண்டே அல்லது விஷயங்களோடு ஒட்டிக் கொண்டேயுள்ளது என்ற கேள்வி சாதகனுக்கு வரலாம். அதற்கான மூன்று காரணங்கள்:
(1) போதிய வைராக்கியமில்லாததால்
(2) வாசனைகளின் பலத்தினால்(ஸம்ஸ்கார ப4லாத்)
(3) ஞானம் உறுதியாக இல்லாததால்(ஞானஸ்ய அஸ்திரத்வாத்)
=> ஆசைக்குரிய பொருட்கள்:
‘காம’ என்ற சொல்லுக்கு ‘ஆசை’ மற்றும் ‘ஆசைப்படும் பொருள்’ என இரு அர்த்தங்கள் உள்ளது என ஏற்கனவே பார்த்துள்ளோம். ஒரு பொருளை அடைய விரும்பும் எண்ணங்கள், ஆசைகள், ‘காம’ எனப்படும்; அதேபோல அடைய விரும்பும் அந்த குறிப்பிட்ட பொருளும் ‘காம’ என்றே அழைக்கப்படும். கீதை முழுவதும் ‘காம’ எனும் சொல் இவ்விரு அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுவதால் இங்கு அது எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது எனப் பார்க்க வேண்டும்.
இங்கு ‘காம’ என்பது ஆசைப்படும் பொருளைக் குறிக்கிறது. இந்த ஆசைப் பொருட்கள் என்ன? அதை இரு கோணத்தில் விசாரம் செய்யலாம்:
(1) கண்ணுக்கு தெரிவது, த்ருஷ்ட மற்றும் நேரடியாக கண்ணுக்கு தெரியாதது, அத்ருஷ்ட.
ஆசைப்படும் பொருளை அடையும்போது, அது பார்த்து அனுபவிக்கக்கூடியதாக இருப்பதை த்ருஷ்ட என்கிறோம். அதேசமயம் நேரடியாக பார்க்க முடியாததை அதாவது புண்ணியத்தை அத்ருஷ்ட எனும் சொல் குறிக்கின்றது. விரும்புகின்ற ஒன்றை பின்னர் அடைய வழிவகுப்பதால் பணத்தைப் போல புண்ணியமும் மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒன்றாகவே உள்ளது.
(2) ஒன்றைப் பார்த்ததினால் உருவான ஆசை, த்ருஷ்டம் மற்றும் பார்க்காதபோதிலும் பிறர் சொல்லிக் கேட்டதினால் வந்த ஆசை, சுருதம்.
இவ்வகையான அனைத்து ஆசைப் பொருட்கள் மீதான ஏக்கத்திலிருந்தும் விடுபட்டவன், நி:ஸ்ப்ருஹ: ஸர்வ காமேப்4ய:. இவ்விதம் நிதித்யாசனத்தின் பலனாக அடைய வேண்டியது அடையப்பட்ட காரணத்தினால் இவன் சாதித்தவன், தியானத்தில் நிலைபெற்றவன் என்று சொல்லப்படுகிறான் — யுக்த: இதி உச்யதே.
=> சாதித்தவன்:
ஒருவனை சாதித்தவன் என்று அழைப்பதன் பொருள் என்ன? தன்னுடனே இருப்பது எப்படி எல்லா ஏக்கங்களையும் போக்குகிறது? தனது சுயத்தை அறியாத ஒருவனே வெளிப்பொருட்களுக்காக ஏங்குகிறான். எனவே இந்த தன்னறிவு பெறப்படும்போது, மனமானது தன்னில் மட்டுமே நிலைத்திருக்கும்போது, அவன் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறான். ஏனெனில் ஒருவனின் பாதுகாப்பிற்கும் முழுமைக்கும் ஆத்மாவை சீர்படுத்தவோ அல்லது மேம்படுத்தவோ தேவையில்லை என்பதை அவன் அறிந்துள்ளான். ஆத்மா எப்பொழுதும் முழுமையானது; பூர்ணமானது. ஆத்மாவில் எந்தக் குறையுமில்லை; எந்த பற்றாக்குறை உணர்வுமில்லை. எனவே ஏதேனும் ஒன்றை அடைந்து அதை மேம்படுத்தத் தேவையில்லை. இதனால் ஒன்றை அடைவது குறித்த ஏக்கம் அவனிடம் இல்லாமற் போகிறது.
=> தியானத்தின் முதிர்ந்த நிலை எப்படி இருக்கும்?
நிதித்யாசனத்தில் ஒருவனது கவனம் முழுதும் அசப்தமான, அரூபமான ஆத்ம தத்துவத்தில் இருக்கவேண்டும். நான் நித்தியமானவன், சாந்தமானவன், பூரண சொரூபம் என ஆத்ம சொரூபத்தை மன ஒருமுகப்பாட்டுடன் தியானித்து, ஆத்மாவிலேயே நிற்கும் நிலை தியானம் கைகூடிய நிலை ஆகும்.
மனமானது எந்தவித சந்தேகமும் இல்லாமல், முற்றிலும் ஆத்மாவிற்கு விழித்திருக்கிறது. தன்னைப் பற்றிய யூகங்கள் அல்லது தெளிவின்மை இல்லை என்பதால் இயற்கையாகவே அனைத்து ஏக்கங்கள் மற்றும் பந்தங்களிலிருந்து இவன் விடுபடுகிறான். இவனின் மனதை பிரசித்தமான ஒரு உதாரணத்துடன் அடுத்த சுலோகத்தில் பகவான் விளக்கிக் காட்டுகிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
கிழிந்த மூட்டையிலிருந்து சிதறி நாலாப்பக்கங்களிலும் ஓடிய கடுகைப் பொறுக்கியெடுப்பது சிரமம். அதுபோல, உலக விஷயங்கள் பலவற்றிலும் உழலும் மனதைக் குவியச் செய்வது எளிதன்று. மனம் குவிந்து ஒருமுகப்படுவதே தியானம்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
||6.19|| ஒருமைப்பட்ட மனது எத்தகையது என்பது விளக்கப்படுகிறது:
यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता ।
योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मन: ।। १९ ।।
யதா2 தீ3போ நிவாதஸ்தோ2 நேங்க3தே ஸோபமா ஸ்ம்ருதா ।
யோகி3நோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோக3மாத்மந: ।। 19 ।।
यथा யதா2 எவ்விதம் निवातस्थ: நிவாதஸ்த2: காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட
दीप: தீ3ப: தீபமானது न इङ्गते ந இங்க3தே அசைகிறதில்லையோ
आत्मन: योगम् ஆத்மந: யோக3ம் ஆத்மாவை விஷயமாகக் கொண்ட தியானத்தை
युञ्जत: யுஞ்ஜத: பழகுகின்ற योगिन: யோகி3ந: யோகியின் यतचित्तस्य யதசித்தஸ்ய கட்டுப்படுத்தப்பட்ட மனதிற்கு सा उपमा ஸா உபமா இந்த உதாரணம் स्मृता ஸ்ம்ருதா கூறப்படுகிறது.
ஆத்ம தியானம் பழகுகிற யோகியின் அடங்கிய மனதுக்கு, காற்றில்லா இடத்தில் வைத்த தீபம் அசையாதிருப்பது உதாரணமாகக் கருதப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில் அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.
விளக்கம்:
தியானம் கைகூடிய யோகியின் மனதை பகவான் இங்கு ஓர் அழகிய உபமானம் மூலம் வர்ணிக்கிறார். உபமானம் என்பது ஒரு பொருளைப் பற்றிய புதிதான அறிவு எதையும் கொடுக்காது. ஆனால் அது ஏற்கனவேயுள்ள புரிதலை மேலும் தெளிபடுத்த உதவும். இங்கு நிதித்யாசனத்தில் ஈடுபடும் ஞானியின் மனம், காற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட சுடருக்கு உபமானமாகக் கூறப்பட்டுள்ளது. காற்று அடிக்காத இடத்தில் ஏற்றிவைத்த தீபம் தனது நிலை பிறழாது வரைந்த சித்திரம்போன்று நின்று எரிகிறது. ஆசை என்ற காற்று அடியாதிருக்கிற காரணத்தினால் யோகியின் சித்தமும் அங்ஙனம் அசைவற்றிருக்கிறது. இந்த உவமையில்,
ஸ்தூல சரீரம் - விளக்கு
தீபச் சுடர் - மனம்
அசைகின்ற காற்று - ஆசை.
அதிக காற்று இல்லாத இடத்தில் தீபச் சுடர் எவ்விதம் அசையாமல் எரியுமோ, அதுபோல அசையாத மனதை உடையவனாக நிதித்யாசனப் பலனை அனுபவிக்கும் யோகி ஆசைகளற்று உள்ளான். அடிக்கின்ற காற்றிலிருந்து தீபத்தை பாதுகாக்க அதன்மேல் மூடப்படும் கண்ணாடிக் குடுவை உதவுவது போல, வைராக்கியமும் ஞானமும் யோகியின் மனதை ஆசையிலிருந்து பாதுகாக்கிறது.
மனமானது எதனோடு அபிமானம் வைக்கிறதோ அதனுடைய சுபாவமாகவே மாறிவிடுகிறது. இதுவே மனதினுடைய சுபாவமாகும். ஞானியின் மனம் ஆத்மாவில் வைக்கப்படுவதால், ஆத்மாவின் சொரூபமான ஆனந்தம், சாந்தம் போன்ற தன்மை மனதிற்கு வருகிறது. இதனால் அது இங்கும் அங்கும் அசைவதில்லை. நன்கு முறைப்படுத்தப்பட்ட யோகியின் மனதில் தொடர்ச்சியான எண்ணங்கள் தோன்றும்போதும் எந்த காரணத்திற்காகவும் அது பயத்தாலோ குழப்பத்தினாலோ நடுங்குவதில்லை. மேலும் அந்த யோகி எதிர்கொள்ளும் சூழ்நிலைகளினால் அது ஒருபோதும் திசை திருப்பப் படுவதில்லை.
=> உபமானத்திற்கானத் தேவை:
ஞானியின் மனதை அறிந்தவர்கள் கூறும் உதாரணம் இங்கு கொடுக்கப்பட வேண்டிய தேவை என்ன? ஏனெனில், உபதேசத்தை கேட்பவரால் இந்த நேரத்தில், ஒரு ஞானியின் மனதைக் கற்பனை செய்ய முடியாது. எவ்விதம் பணம் பதவி பங்குச் சந்தை போன்ற பெரியவர்களின் பிரச்சினைகளை ஒரு குழந்தையினால் புரிந்து கொள்ள இயலாதோ அதுபோல பொருள் மற்றும் பாதுகாப்பிற்காக ஏங்கும் ஒருவனின் மனமானது, மனதைக் கருவியாக மட்டுமே பார்க்கும் முதிர்ச்சி பெற்ற ஒரு யோகியின் மனதை புரிந்து கொள்ள முடியாது.
நேரடியாகப் பார்க்கக்கூடிய அல்லது கற்பனை செய்யக்கூடிய ஒன்றுக்கு உவமைத் தேவையில்லை. பொருளாக இருந்தால் அது கிடைக்கும் பட்சத்தில் அதை நேராகக் காட்டிவிடலாம். உதாரணமாக, ஒரு படிகம் நேரடியாகக் காட்டப்படும்போது, அதை விளக்க ‘படிகம் என்பது ஒரு கண்ணாடியைப் போன்றது’ என்ற உபமானம் எதுவும் அங்கு தேவையில்லை. அதேசமயம், காட்டெருமை என்றால் என்னவென்று தெரியாத ஒருவனுக்கு, அது எருமையை போன்றது என உதாரணம் கொடுத்து விளக்கலாம். இரண்டுக்கும் இடையே தோராயமான ஒற்றுமை இருப்பதால், காட்டெருமை பற்றிய புரிதல் அவனுக்கு சிறிது அதிகப்பட்டிருக்கும். அதேபோல இங்கு, ஒரு ஞானியின் மனதை புரிந்து கொள்ள அதை அறிந்த சான்றோர்களால் மேற்கோளாகக் காட்டப்படும் சுடர் எடுத்துக்காட்டு கூறப்படுகிறது.
இங்கு, யோக3ம் யுஞ்ஜத: ஆத்மந: என்பது ஆத்மாவை விஷயமாகக் கொண்ட தியானத்தை பழகுகின்ற யோகியை, நிதித்யாசனத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ள ஒரு ஞானியைக் குறிக்கிறது. சங்கரர் ‘யுஞ்ஜத்’ என்பதை ஆத்மாவுடன் மனதை ஒருங்கிணைக்கும் யோகத்தை நிதித்யாசனத்தை செய்பவனைக் குறிப்பதாக விளக்குகிறார்.
=> ஆத்ம அம்சத்தின் பிரதிபிம்பம்:
ஆத்மா ஸத்-சித்-ஆனந்த சொரூபம். உலகிலுள்ள ஜடப் பொருட்கள் அனைத்தும் ஆத்மாவின் சொரூபமான ஸத்தின் பிரதிபிம்பம். உதாரணமாக, பானையின் இருத்தல் உண்மையில் பானையைச் சார்ந்ததல்ல; களிமண்ணின் இருத்தலையே அது பிரதிபிம்பிக்கின்றது. அதுபோல ஆத்மாவின் இருத்தலையே இவ்வுலகமானது பிரதிபிம்பிக்கின்றது. மேலும் ஆத்மாவின் சித் அம்சத்தின் பிரதிபிம்பத்தினாலேயே ஜடமான மனம் அறிவு மற்றும் உணர்வை அடைகிறது. மனதில் எவ்வித விக்ஷேபமும் இல்லாதபோது ஆத்மாவின் ஆனந்த சொரூபம் பிரதிபிம்பிக்கப்படுகிறது. வைராக்கியம் மற்றும் ஞானத்தினால் தூய்மையடைந்த யோகியின் மனமானது விக்ஷேபத்தை அடைவதில்லை. எனவே யோகியின் மனதில் ஆத்மாவின் ஆனந்த அம்சத்தின் பிரதிபிம்பம் உண்டாகிறது. இதிலிருந்து ஞானம் மற்றும் வைராக்கியத்தின் மூலம் மனதை சாந்த சொரூபமாக ஆக்குவது மோக்ஷமாகும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
‘தியானத்தில் முதிர்ந்தவனுக்கு முக்தி வெகு சமீபம்’ என்பது ஒரு பழமொழி. தியானத்தில் ஒரு மனிதனுக்கு எப்போது முதிர்ச்சி உண்டாகிறது தெரியுமா? அவன் தியானத்துக்கு உட்கார்ந்தவுடன் திவ்வியதேஜஸ் அவனைச் சுற்றிக்கொள்கிறது. அவனுடைய ஆத்மா ஈசுவரனுடன் கலந்து கொள்கிறது.
—---------------------------------------------------------------------------------------------------------------------------