வியாழன், 7 ஜூலை, 2022

தியான யோகம் 6.1

    இந்த ஆறாம் அத்தியாயத்தில் பகவான் நிதித்யாசன தியானத்தை பேசுகிறார். மனம் ஒரு நுண்மையான கருவி. இக்கருவியைக் கொண்டு செய்யப்படும் தியானம் என்ற சாதனையில் பல படிகள் உள்ளன. அதைப் பற்றி பகவான் விரிவாக இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கிறார். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தை பற்றிய ஒரு சிறு விசாரத்திற்குபின் அத்தியாயத்திற்குள் நுழையலாம்.

=> பதஞ்சலியின் அஷ்டாங்க யோகம்:

அஷ்ட - எட்டு; அங்க - படிகள்

(1) யம: - செய்யக்கூடாதது அல்லது தவிர்க்கப்பட வேண்டியது. இது ஸ்தூல மற்றும் சூக்ஷம உடலிலிருந்து வரும் செயல்களுக்கான கட்டுப்பாட்டை கூறுகிறது. அவைகள்:

(i) ஹிம்சை தவிர்க்கப்பட வேண்டும் -> அஹிம்சை. உடல், வாக்கு மற்றும் மனம் இவைகளின் மூலம் யாருக்கும் ஹிம்சை தரக் கூடாது.

(ii) பொய் பேசுதல் கூடாது —> சத்தியம் பேசுதல்

(iii) திருடுதல் கூடாது —> அஸ்தேயம்

(iv) அதிக போகம் கூடாது —> அபரிக்ரஹம்


(2) நியம: - கடைபிடிக்க வேண்டியது.

(i) அகத்தூய்மை, புறத்தூய்மை - செளசம்

(ii) இருப்பதில் திருப்தி அடைதல் - சந்தோஷ:

(iii) விரதங்கள் - தப:

(iv) சாஸ்திரத்தை படித்தல் - சுவாத்யாய:

(v) பூஜை, இறை வழிபாடு - ஈஷ்வர ப்ரனிதானம்


(3) ஆசனம் - உடலுக்கான எந்தவொரு பயிற்சியையும் குறிக்கிறது; குறிப்பாக யோகாசனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவ்வுடல் எண்ணிலடங்கா உடல் நிலைகளை எடுக்க முடியும். இந்த உடல்நிலைகளில் சிலவற்றை யோகாசனம் என்று அழைக்கிறோம்

விழிப்புணர்வாக உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒருவனின் விழிப்பு நிலை உயர்கிறது. குறிப்பிட்ட விதத்தில் அமர்வதன் மூலம் ஒருவன் சிந்திக்கும், புரிந்துகொள்ளும், உணரும் விதங்களை மாற்றும் பயிற்சியை யோகாசனம் அளிக்கிறது.


(4) ப்ராணாயாம: - பிராணனின் ஒழுங்குப்பாடு அல்லது மூச்சுப் பயிற்சி. பூரகம், கும்பகம் மற்றும் ரேசகம் போன்ற சில பயிற்சிகளை நாம் ஏற்கனவே விரிவாகப் பார்த்துள்ளோம். பிராணாயாம பயிற்சியின்போது அங்கும் இங்கும் அலையும் மனம் அடங்குவதையும், மூச்சு நிதானமாக ஓடுவதையும் அனுபவத்தில் உணர முடியும்.


(5) ப்ரத்யாஹார: - இது முழுக்க முழுக்க மனதை உள்முகமாக திருப்பும் பயிற்சி. நமது ஆன்ம ஆற்றலை உணர வைக்கும் பயிற்சி. பிரத்யாஹாரா என்றால் "உள்நோக்கி திரும்புவது" என்று அர்த்தம்; மனதின் கவனத்தை வெளியிலிருந்து உள்நோக்கி திருப்புவது பிரத்யாஹாரா.


(6) தாரணா - மனதை ஒரு பொருளில் பொருத்துதல், குவிய செய்தல் தாரணை எனப்படும். அதன் மூலம் மனவுறுதி அதிகரிக்கிறது. தாரணை கை கூட வைராக்கியம், சாத்வீக உணவு, தனித்திருத்தல் முதலியவை தேவை.


(7) த்யாநம் - தியானத்திற்கு எடுத்துக் கொண்ட விஷயத்தில் மனம் சென்று சென்று வருதல் இங்கு தியானம் எனப்படுகிறது. அதாவது தியான நிலையில் முழு அமைதி கிடைக்கும் என பதஞ்சலி எதிர்பார்க்கவில்லை; ஆகவே நாமும் எதிர்பார்க்கக் கூடாது. போராடுதல் தியானம். இருவித எண்ணங்கள் உள்ளன:

(i) ஸஜாதீய வ்ருத்திஅதே விதமான எண்ணங்கள்

(ii) விஜாதீய வ்ருத்திஅதற்கு விபரீதமான எண்ணங்கள்

தியானத்திற்கு எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு விபரீதமான, விஜாதீய எண்ணங்கள் தாக்கும்போது ஸஜாதீய எண்ணத்தில் இருக்க முயற்சி செய்யும் பயிற்சி தியானம் ஆகும்.


(8) சமாதி: - தியானத்தின் முதிர்ச்சி.

மனம் கரைந்த மெளன நிலை. தியானத்தின் பலன் சமாதி. எந்தவித விஜாதீய எண்ணங்களும் இல்லாமல் மனம் அமைதியாக இருக்கும் நிலை

பலர் தியானத்தில் தோல்வியடையக் காரணம் தவறான எதிர்பார்ப்பு. அதிக பயிற்சி மற்றும் முயற்சியுடன்தான் எட்டாவது நிலை அடையப்பட முடியும். ஆனாலும் ஒவ்வொரு நிலைக்கும் அதற்குண்டான பலன் உண்டு. சமாதி என்பது நிதித்யாசனத்திற்கு அங்கமாக உள்ளது.


=> தியானத்திற்கான முன்னேற்பாடுகள்

பொதுவாக தியானத்திற்கு என செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை இரண்டாகப் பிரிக்கிறோம்:

(1) பஹிரங்க சாதனை:

  தியானயோகத்திற்குள் வருபவனுடைய முழு வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை கூறுவது இது. சரியான மனப்பாங்குடன் செயல் செய்வது மற்றும் நற்பண்புகளைப் பின்பற்றுவது போன்றவை இதில் அடங்கும். வேறு வார்த்தையில் கூறுவதானால், கர்மயோக வாழ்க்கைமுறை பஹிரங்க சாதனை என அழைக்கப்படும்

(2) அந்தரங்க சாதனை:

      இடம், காலம், அமரும் இருக்கை, ஆசனம் போன்றவையும்  பிராணன், இந்திரியங்கள், மனம் மற்றும் புத்தி போன்றவைகள் எப்படியிருக்க வேண்டும் மற்றும் என்ன செய்ய வேண்டும்(ஸ்திதி:) போன்றவையும் அந்தரங்க சாதனைகளாகப் பார்க்கப்படுகிறது. வேறொரு கோணத்தில் மோக்ஷத்தை சாத்தியமாகக் கொண்ட சாதகனுக்கு, கர்மயோகம் பஹிரங்க சாதனமாகவும், தியானம் அந்தரங்க சாதனமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


பகவான் தியானத்திற்குமுன் செய்ய வேண்டிய ஏற்பாடுகளில் தொடங்கி, தியானத்தின் சொரூபம் மற்றும் பலன் என கீழ்கண்ட நான்கு தலைப்புகளை இந்த அத்தியாயத்தில் மாறி மாறி விளக்குகிறார்

(1) பஹிரங்க சாதனை - முழு வாழ்க்கை எப்படி அமைய வேண்டும்

(2) அந்தரங்க சாதனை - தியானத்திற்கான முன்னேற்பாடுகள்

(3) தியான சொரூபம் - நிதித்யாசன ரூபத் தியானம்

(4) தியான பலன்

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.1|| யோகமும் சந்யாசமும்:

श्रीभगवानुवाच

अनाश्रित: कर्मफलं कार्यं कर्म करोति :

सन्न्यासी योगी निरग्निर्न चाक्रिय: ।। ।।

ஸ்ரீப43வாநுவாச

அநாச்1ரித: கர்மப2லம் கார்யம் கர்ம கரோதி :

ஸந்ந்யாஸீ யோகீ3 நிரக்3நிர்ந சாக்ரிய: ।। 1 ।।


श्री भगवान् उवाच  ஸ்ரீ 43வாந் உவாச  ஶ்ரீ பகவான் சொன்னது

:  :  யார்   कर्मफलं   கர்மப2லம்  கர்மபலனை  अनाश्रित:   அநாச்1ரித:  சாராது   

कार्यं कर्म   கார்யம் கர்ம  செய்ய வேண்டிய கர்மத்தை   करोति   கரோதி  செய்கிறானோ   :  :  அவன்   सन्न्यासी योगी  ஸந்ந்யாஸீ யோகீ3   சந்யாசியும் யோகியும்(ஆகிறான்)   

निरग्नि:  நிரக்3நி:  அக்னி இல்லாதவன் அல்லன்   

अक्रिय:   அக்ரிய:  கர்மம் செய்யாதவனும்(விட்டவனும்) அல்லன்.


ஶ்ரீ பகவான் சொன்னது,

கர்மபலனைச் சாராது செய்ய வேண்டிய கர்மத்தை செய்பவனே சந்யாசி, அவனே யோகி. அக்னி ஹோத்ரத்தை நிறுத்தியவனும் கர்மத்தை விட்டவனும் சந்யாசி ஆகான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.


விளக்கம்:

தியானம் என்பது, அந்த-கரண-நைச்சல்ய, மனதை நிலைநிறுத்துவதற்காகவும், கர்மயோகம் என்பது அந்த-கரண-சுத்தி, விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுவிப்பதன் மூலம் ஒருவனின் மனதைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் உள்ளது. இந்த இரண்டு சாதனங்களும் மோட்சத்திற்கானவை.


=> கர்மயோகம்:

சுலோகம் 1 முதல் 6 வரை பகவான் பஹிரங்க சாதனையைப் பற்றி பேசுகிறார். தியானம் செய்யாத நேரத்தில் ஒருவனது வாழ்க்கை எப்படியிருக்க வேண்டுமென்பதை விளக்குகிறார். இவ்விதமான வாழ்க்கைமுறையே தியானத்தைப் பலனுடையதாக மாற்றவல்லது

கர்மயோகம் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது அத்தியாயங்களில் விவாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மோட்சத்தைப் பெறுவதற்கான வழிமுறையாக கீதை முழுவதும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுலோகத்தில் பகவான் கர்மயோகத்தை போற்றுவதன் மூலம் அதை தியானத்திற்கான பஹிரங்க சாதனமாக மாற்றுகிறார். கர்மபலனில் பற்றில்லாது செய்யவேண்டிய செயலைச் செய்யும் கர்மயோகியும் சந்யாசியே எனப் புகழ்கிறார். ஒரு கர்மயோகியானவன் செயலின் முடிவுகளைச் சார்ந்து இல்லாமல் செய்ய வேண்டியதைச் செய்கிறான். இவனுக்கு கர்மபலன் மட்டுமே செயலைச் செய்வதற்கான முக்கிய அளவுகோல் அல்ல.

அதேசமயம், ஒரு கர்மியைப் பொறுத்தவரை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மட்டுமே அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. அவைகளை நிறைவேற்றும் செயல்பாட்டில், தர்மம் மற்றும் அதர்மம், சரி மற்றும் தவறு பற்றி அவன் கவலைப்படுவதில்லை. ‘எனக்கு இது வேண்டும்; ஆகையால், நான் அதைப் பெறுவேன்!’ எனும் பாவனையைக் கொண்டிருப்பவன். செயலைச் செய்வதற்கான ஒரே அளவுகோலாக ராக-த்வேஷம் மட்டுமே இருப்பதால், ஒரு கர்மியானவன் முழுமையாக கர்மபலத்தை சார்ந்து செயல் செய்கிறான், கர்ம-பல-ஆஷ்ரித:.

ஒரு கர்மயோகியை முழுமையாக விருப்பு-வெறுப்பற்றவன் எனக் கூறிவிட முடியாது. ஆனால் அவன் ராக-த்வேஷத்தினால் செலுத்தப்படுபவனாக இருப்பதில்லை. தர்மத்திற்குட்பட்டு என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்பவனாக இருப்பதால், அவனது ஆசை அங்கு முக்கியத்துவம் பெறுவதில்லை. ‘இது செய்யப்பட வேண்டும்; எனவே, நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைச் செய்கிறேன்என்பது ஒரு கர்மயோகியின் மனப்பாங்கு. இவ்விதத்தில் தனது ராக-த்வேஷத்தை துறப்பதன் மூலம் கர்மபலத்தையும் துறப்பதால் இவர்களும் ஒரு விதத்தில் சந்யாசியே. ஆகவேதான் கிருஷ்ணர் கர்மயோகியை சந்யாசி என வர்ணிக்கிறார். கர்மயோகி ஒரு முழுமையான சந்யாசி அல்ல எனினும் ஆசைகளைத் துறந்ததன் அடிப்படையில் ஒரு சந்யாசிக்கானத் தகுதியுடன் உள்ளவர்.

ஒருவரை இனியொருவருடன் ஒப்பிட்டுக் கூறுதல்குண வ்ருத்திஎனப்படும். கர்மபலனைச் சார்ந்திராமலும் அதே சமயத்தில் செய்யப்பட வேண்டிய கர்மத்தையும் கர்மயோகியானவன் செய்கிறான். இங்கு கர்மயோக லக்ஷணத்தைக் கூறிய பகவான், பலனைத் துறப்பதால் அவனை சந்யாசி என்றும், யோகியைப் போல கர்மயோகியிடமும் மனவமைதி நிலவுவதால் அவனை யோகி என்றும் புகழ்கிறார்.

தியானயோகத்திற்குள் வருபவனை உற்சாகப்படுத்தவும், கர்மயோகத்தை முழுமையாக விட்டுவிட்டு ஞானயோகத்திற்கு ஒருவனால் வர முடியாது என்பதை காட்டிக்கொடுக்கவும் இவ்விதம் புகழப்படுகிறது(ஸ்துதி).


=> இருவித செயல்பாடுகள்:

மேலும் கிருஷ்ணர் இவன் எப்படிப்பட்டவன் அல்ல என்பதை விவரிக்கிறார் - நிரக்3நி: அக்ரிய:. இந்த இரண்டு வெளிப்பாடுகளும் ஒரு சந்யாசியால் கைவிடப்பட்ட இரு வித செயல்பாடுகளைக் குறிக்கின்றன. ஒன்று வைதிக-கர்ம, வேதப்பூர்வமாக கட்டளையிடப்பட்ட செயல்கள்; மற்றொன்று, லெளகிக-கர்ம, மற்ற அனைத்து செயல்கள். சில தினசரி மற்றும் அவ்வப்போது செய்யும் வேத சடங்குகளான நித்ய-நைமித்திக-கர்மங்களை சந்யாசியாக மாறுவதற்கு முன்பு ஒருவன் செய்தான். இதுபோன்ற பெரும்பாலான வேதச் சடங்குகள் நெருப்பை அங்கமாகக் கொண்டிருக்கின்றன. சந்யாசத்திற்கு பின் ஒருவன் இச் சடங்குகளைச் செய்வதில்லை ஆகையால் அவன்நிரக்3நி:என அழைக்கப்படுகிறான். மேலும் அவன் மற்ற லெளகிக செயல்கள் அதாவது அனைத்து வகையான வழிபாடுகள், குடும்பக் கடமைகள் மற்றும் வணிகம் போன்றவற்றையும் கைவிடுகிறான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மகனாக அல்லது மகளாக, பெற்றோராக, நண்பனாக, குடிமகனாக என எந்த பாத்திரங்களும் அவனுக்கு இல்லை. எனவே, அவன்அக்ரிய:’, அனைத்து செயல்களையும் துறந்தவன் என்றும் குறிப்பிடப்படுகிறான்.


=> அக்னியை விட்டவன்

வைதிக சம்பிரதாயத்தின்படி, பிரம்மசர்யத்திலிருந்து இல்லறம் செல்பவனுக்கு அக்னிஹோத்ரம் செய்யகார்கபத்யாக்நிஎன்ற தீ வளர்க்கப்படும். அவன் அந்த அக்னியை அணையாமல் பாதுகாக்க வேண்டும். இரண்டு நிபந்தனைகளில் பேரில் அது அணைக்கப்படும்.

(1) மரணத்தின்போது, அந்த அக்னியைக் கொண்டு அவனை எரித்த பின் அது அணைக்கப்படும், அல்லது

(2) சந்யாச ஆஸ்ரமம் செல்லும்போது அது அணைக்கப்படும்.

ஆகவேதான் கிரஹஸ்தனுக்குசாக்நி:’, நெருப்புடன் கூடியவன் என்ற பெயரும் உண்டு. அந்த நெருப்பு அவனுடைய கர்மத்தின் ஒரு அங்கமாக உள்ளது. நிரக்நி: - சந்யாசியின் இனியொரு பெயர், ‘யாருக்கு அக்னி இல்லையோ அவன் நிரக்நி:’. 


உலக வழக்கத்தில் சந்யாசி என்பதற்கு தவறான ஒரு பொருளுண்டு. அதாவது அவன் ஒரு கடமையையும் ஏற்றுக் கொள்ளலாகாது. மேலும் அக்னிஹோத்ரம் போன்ற யாகம் எதுவும் செய்யாது, எந்த பொறுப்பும் ஏற்காது செயலற்று இருத்தலே சந்யாசம் என எண்ணுகிறார்கள். இதை மனதில் வைத்தே அர்ஜுனனும் யுத்தம் செய்ய மாட்டேன்; இதைவிட பிச்சை எடுத்தேனும் உயிர் வாழ்தல் நன்மை எனக் கூறினான். ஆனால் பகவானுடைய கோட்பாடு அதுவல்ல. தேகம் எடுத்த யாரும் கர்மத்தை விட்டுவிட முடியாது. அவரவர் கடமையை நன்கு செய்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் கர்மபலனை யார் பொருட்படுத்துவதில்லையோ, தனது நித்திய கர்மத்தை நிஷ்காமியமாக யார் செய்கிறானோ அவன் சந்யாசி; அவனே யோகி. கர்மபலனில் ஆசை அறவே அகன்று விடுவதால் அவன் சந்யாசி ஆகிறான். கர்மம் ஓயாது அவன் மூலம் நடைபெறுவதால் அவன் யோகி. இதிலிருந்து வெறும் அக்னியை விட்டவனும் செயலில்லாமல் இருப்பவனும் மட்டும் சந்யாசி அல்ல; எவனொருவன் கர்மயோகியாக இருக்கிறானோ அவனே சந்யாசி; அவனே யோகி என்கிறார்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------