||3.38|| எவ்விதத்தில் ஆசை பகையாகிறது:
धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च ।
यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम् ।। ३८ ।।
தூ4மேநாவ்ரியதே வஹ்நிர்யதா2த3ர்சோ1 மலேந ச ।
யதோ2ல்பே3நாவ்ருதோ க3ர்ப4ஸ்ததா2 தேநேத3மாவ்ருதம் ।। 38 ।।
यथा யதா2 எப்படி वह्नि வஹ்நி நெருப்பானது धूमेन தூ4மேந புகையினால்
आव्रियते ஆவ்ரியதே மூடப்பட்டிருக்கிறதோ आदर्श: ஆத3ர்ச1: கண்ணாடி
मलेन च மலேந ச அழுக்கினாலும் यथा யதா2 எப்படி गर्भ: க3ர்ப4: கர்பத்தில் இருக்கும் சிசுவானது उल्बेन உல்பே3ந கர்பப்பையினால் आवृत: ஆவ்ருத: மூடப்பட்டுள்ளதோ तथा ததா2 அப்படியே
तेन தேந அதனால்(ஆசையினால்) इदं இதம் இந்த ஞானம் आवृतम् ஆவ்ருதம் மூடப்பட்டிருக்கிறது.
நெருப்பானது புகையினாலும், கண்ணாடி அழுக்கினாலும், சிசுவானது கருப்பையினாலும் எப்படி மூடப்பட்டுள்ளதோ அப்படி இந்த ஞானமானது ஆசையினால் மூடப்பட்டிருக்கிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும் இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.
விளக்கம்:
=> ஆசையினால் ஞானம் மறைக்கப்படுவதற்கான மூன்று உதாரணங்கள்:
ஆசை என்னும் திரையினால் ஆத்மசொரூபம் மூடப்பட்டிருக்கிறது. மூன்று குணங்களை ஆதாரமாகக் கொண்டு ஆசையும் மூன்று படித்தரங்களில் இருக்கிறது. இந்த சுலோகத்தில் பகவான் கூறும் உதாரணங்கள் இந்த மூன்றையும் விளக்குவதாக உள்ளது.
[1] தீயைப் புகை மூடிக்கொண்டிருப்பது சத்வகுணத்தோடுகூடிய ஆசைக்கு உபமானமாகக் கூறப்படுகிறது. நெருப்பானது சுயமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மையுடையதாக இருந்தபோதிலும்-‘ப்ரகாசா1த்மகா’, அதிலிருந்து உண்டாகும் புகையே அதை மறைக்கக்கூடும். அவ்விதமே ஒருவனின் மனதிலிருந்து உண்டாகும் ஆசை எண்ணங்கள், அவனுடைய பகுத்தறியும் விவேகத்தை மறைக்கிறது.
புகைந்து கொண்டிருக்கிற தீயின்மீது சிறிது காற்று அடித்தால் அது பற்றி எரிகிறது; புகையும் மறைகிறது. தீயின் சுடர் நன்கு தென்படுகிறது. அவ்விதமே சிறிது விவேகம் என்னும் காற்று வீசினால் சாத்வீக ஆசை என்னும் புகை பறந்தோடிவிடும். ஆத்ம சொரூபம் உள்ளபடி ஒளிரும். இரு வகையான விவேகம் உள்ளது.
(i) தர்ம-அதர்ம-விவேகம் —> எது செய்யத்தக்கது, எதைச் செய்யக்கூடாது என்ற அறிவு
(ii) ஆத்ம-அனாத்ம-விவேகம் —> எது நிலையானது, எது நிலையற்றது எனும் அறிவு.
சாத்விக குணத்திலிருந்து வெளிப்படும் ஆசையை, ‘இது தேவையான ஒன்றுதானா? இதனுடைய பலன் என்ன? இதனால் அடையப்படும் எதிர்வினை என்ன?’ போன்ற சிறிய விசாரத்தின் மூலம் எளிதாக நீக்கிவிட முடியும்.
[2] ரஜோகுண ஆசைக்கு எடுத்துக்காட்டாக, கண்ணாடியின் மீது படிந்துள்ள அழுக்கு கூறப்படுகிறது. எவ்விதம் கண்ணாடியின் மீதுள்ள புழுதியை நீக்க, கொஞ்சம் முயற்சி அதிகமாக தேவைப்படுமோ, அவ்விதமே ரஜோகுணத்துடன் கூடிய ஆசையை சிறிது சிரமப்பட்டே போக்க முடியும்.
[3] மூன்றாவது ஆசை தமோகுணமயமானது. சிசுவைக் கருப்பையிலிருந்து விடுவிக்க ஒரு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். அங்ஙனம் தமோகுணத்தில் உதித்த ஆசையைப் போக்கக் காலமும் ஆயத்தமும் தேவை.
இவ்விதம் மூன்று படிகளில் ஆசையானது புத்தியை மறைக்கிறது. சில ஆசைகள் மேலோட்டமாகவும், சில வேரூன்றியதாகவும் இருக்கும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மேகம் சூரியனை மறைப்பதுபோல் மாயையும் ஈசுவரனை மறைக்கிறது. மேகம் அப்பால் அகன்று போனதும் சூரியன் காணப்படுகிறது. அதுபோல மாயை அகன்றதும் ஈசுவரன் கண்ணுக்குத் தென்படுவார்.
----------------------------------------------------------------------------------------------------------------------||3.39|| சென்ற சுலோகத்தில் ‘தேந இதம்’ என்பதன் விளக்கம்:
आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा ।
कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च ।। ३९ ।।
ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா ।
காமரூபேண கௌந்தேய து3ஷ்பூரேணாநலேந ச ।। 39 ।।
कौन्तेय கௌந்தேய குந்தியின் மைந்தா ज्ञानिन: ஜ்ஞாநிந: ஞானியின்
नित्यवैरिणा நித்யவைரிணா நித்தியமான பகைவனான कामरूपेण காமரூபேண ஆசை வடிவானதும்
दुष्पूरेण து3ஷ்பூரேண நிரப்ப முடியாததும் एतेन अनलेन ஏதேந அநலேன இந்த நெருப்பினால்
ज्ञानम् ஞானம் ஞானமானது आवृतं ஆவ்ருதம் மூடப்பட்டுள்ளது.
குந்தியின் மைந்தா, ஞானியின் நித்தியமான பகைவனும் நிரப்ப முடியாததுமான, ஆசையெனும் தீராத நெருப்பினால் இந்த ஞானமானது மூடப்பட்டுள்ளது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.
விளக்கம்:
=> ஞானிக்கு ஆசையானது என்றென்றும் பகைவன்:
சென்ற சுலோகத்தில் பகவான் உபயோகித்த பிரதிப் பெயர்ச்சொற்களான, ‘தேந_அதனால்’ மற்றும் ‘இதம்_இந்த’ என்பதன் விளக்கத்தை இங்கு கூறுகிறார். ‘இதம்_இந்த’ என்பது ஞானத்தைக் குறிக்கிறது. நெருப்பு, கண்ணாடி மற்றும் சிசு எவ்விதம் புகை, தூசி மற்றும் கருப்பையினால் மூடப்பட்டுள்ளதோ அவ்விதம் இந்த ஞானமானது, காம வடிவமெனும் எதிரியால் மூடப்பட்டுள்ளதாக கிருஷ்ணபகவான் விளக்கமளிக்கிறார்.
எந்த வகையான காமத்தினால் அறிவானது மூடப்படுகிறது? ‘து3ஷ்பூரேண’ பூர்த்தி செய்ய முடியாததும், ‘அநலேன’ நெருப்பைப் போன்றதுமான காமம். ‘அநல’ என்றால் நெருப்பு. சென்ற சுலோகத்தில் பார்த்தது போல, எவ்வளவு எரிபொருளைக் கொடுத்தாலும் தீயானது அதை எரித்து மேலும் உணவு வேண்டி நிற்கும். வெளிப்புறம் நோக்கியதாய் தென்படும் திருப்தியடையாத அதன் நாக்குகள், இன்னும் அதிக எரிபொருள் கேட்கும். ஆசையும் அது போலத்தான். நிறைவேற்றி முடியாதது. அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி முடித்து, பணிஓய்வு காலத்தில் ஆசையற்றவனாக பூரணமானவனாக ஆகிவிடுவேன் என்பதெல்லாம் கிடையாது. ஒவ்வொன்றாய் பூர்த்தி செய்யச் செய்ய நீரூற்றைப் போல ஊறி மேற்பரப்பில் பாய்ந்துகொண்டே இருக்கும்.
எதிரி எனும் பிரயோகத்திற்கு, நித்யமான எதிரி என்ற அடைமொழி கொடுக்கப்படுகிறது. இதிலிருந்து ஆசையானது என்றுமுள்ளது எனவும் பொருள்படுத்தலாம். இதற்கு சங்கரர் தனது பாஷ்யத்தில் அற்புதமான விளக்கத்தை கொடுக்கிறார். எது செய்யத்தக்கது மற்றும் செய்யத்தகாதது என்பதை அறிந்த காரிய-அகாரிய-விவேகியான ஞானிக்கு மனதில் ஆசையானது உதிக்கும் போதே அதை பகைவன் என்று தெரிந்து கொள்கிறான். விருப்பத்தை பூர்த்திசெய்ய வினையாற்றும் முன்பே அதிலிருந்து வரும் சுகம் நிலையற்றது என்ற அறிவுடன் இருக்கிறான். ஆசையின் வசப்பட்டிருக்கும்பொழுதும் வசப்படாதிருக்கும்பொழுதும் அதைப் பகையென்று உணர்கிறான். ஆனால் அக்ஞானியோ ஆசையை முதலில் வரவேற்று, அதை நிறைவேற்ற பாடுபட்டு, அதனால் வரும் துயரத்தை அனுபவிக்கும் பொழுதுதான் அதை பகைவன் என்றுணர்கிறான். ஆயினும் இந்த அனுபவம் நிலைத்திருப்பதில்லை. திரும்பவும் ஆசைவசப்படுகிறான். ஆனால் ஞானியின் நிலை அத்தகையதன்று. காமத்தின் இயல்பை அறிந்த காரணத்தினால் அது அவனுக்கு என்றென்றும் எதிரி.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
தராசுத் தட்டில் எந்தப்பக்கம் கனமாக இருக்கிறதோ அந்தப் பக்கத்தில் தராசுமுள்ளானது மையத்தைவிட்டுச் சாய்ந்து விலகியிருக்கும். அதுபோல, பெண்ணாசை பொன்னாசைகளால் கனத்த மனம் ஈசுவரனை விட்டு விலகித் தடுமாறுகிறது.
-------------------------------------------------------------------------------------इन्द्रियाणि मनो बुद्धिरस्याधिष्ठानमुच्यते ।
एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम् ।। ४० ।।
இந்த்3ரியாணி மநோ பு3த்3தி4ரஸ்யாதி4ஷ்டா2நமுச்யதே ।
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தே3ஹிநம் ।। 40 ।।
इन्द्रियाणि இந்த்3ரியாணி புலன்கள் मन: மந: மனம் बुद्धि: பு3த்3தி4: புத்தி
अस्य அஸ்ய அதனுடைய(ஆசையினுடைய) अधिष्ठानम् அதி4ஷ்டா2நம் இருப்பிடம்
उच्यते உச்யதே சொல்லப்படுகிறது एष: ஏஷ: இது एतै: ஏதை: இவைகளால்
ज्ञानं ஞானம் ஞானத்தை आवृत्य ஆவ்ருத்ய மறைத்து देहिनम् தே3ஹிநம் தேஹத்தை உடைய ஜீவாத்மாவை विमोहयति விமோஹயதி மயக்குகிறது.
இந்திரியங்களும், மனமும் புத்தியும் அதற்கு இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இவைகளால் இது ஞானத்தை மறைத்து மனிதனை மயக்குகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர். இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.
விளக்கம்:
முறையற்ற செயல் என தெரிந்தும் ஆசையே ஒருவனை பலவந்தமாக அச்செயலைச் செய்ய தூண்டுவதாக பகவான் கூறினார். ஆசை எவ்வளவு சக்தி வாய்ந்ததெனில் அதை நிறைவேற்றும் வழிமுறையைப் பற்றி ஒருவன் யோசிப்பதை அது தடுத்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட முடிவை அடைவது முக்கியத்துவம் பெறும் பொழுது அதற்கான மார்க்கத்தில் நாம் சமரசம் செய்துவிடுகிறோம். ஏனெனில் எல்லா விருப்பங்களும் இறுதிப்பலனை அடைவற்காகத்தானே தவிர மார்க்கத்தை குறித்தது அல்ல.
பொதுவாக நாம் விரும்பும் விஷயம் மிக அரிதாகவே தவறானதாக இருக்கும். ஆனால் அதை அடைய நாம் பின்பற்றும் வழிமுறைகளால் தான் அச்செயல் முறையற்றதாக மாறுகிறது.
=> ஆத்மா ஆசையற்றது:
ஆசை எங்கு வாசம் செய்கிறது? ஆத்மாவில் உள்ளதா? ஆசையில் ஸத்-சித்-ஆனந்த-ஆத்மா இருந்த போதிலும் ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவில் ஆசையானது இல்லை. ஆத்மா இல்லாமல் எந்த விருப்பமோ, தேவைகளோ அல்லது மனதின் நிலையோ இல்லை. மனம் கிரஹிக்கும் இன்பம் மற்றும் துன்பம் எதுவாக இருப்பினும் அனைத்திலும் ஆத்மா உள்ளது. ஆனால் ஆத்மாவில் இவையெதுவுமில்லை. ஆத்மா ஆசையற்றது; குணங்களற்றது.
ஏறக்குறைய அனைத்து ஆசைகளும் புலன்களுக்கான விஷயங்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. புலன்களின் துணையின்றி இவ்விஷயங்களை அறியமுடியாது; அறிந்திராமல் அது ஆசைக்கான இலக்காக மாறி இருக்காது. ஆகையால் இந்திரியங்கள், மனதில் ஆசை உதிக்க ஓர் அடித்தளமாக விளங்குகிறது. மேலும் ஆசையின் முடிவான விஷய போகத்தை அனுபவிப்பதும் புலன்களே.
மனமில்லாமல் விருப்ப எண்ணங்கள் இல்லை. கற்பனைகளின் மூலம் ஆசையின் ஆரம்பப்புள்ளியாக திகழ்வதால் மனமும் ஆசையின் அதிஷ்டானமாக விளங்குகிறது. மனதின் தூண்டுதலால் இதை அடைந்தே தீர வேண்டுமென்ற நிச்சயத்தை புத்தி எடுக்கிறது. அதுவே செயலில் ஈடுபடுத்துகிறது. ஆகவே புத்தியும் ஆசையின் இருப்பிடமாகக் கூறப்படுகிறது.
=> ‘ஆசை’ உருவாகும் விதம்:
அவரவர்களின் சுபாவத்தின்படி ராகத்வேஷங்கள் உருவாகின்றன. இந்திரியங்கள் வழியாக மனம் வெளியிலுள்ள பொருட்களை தனது சம்ஸ்காரங்களுக்கு ஏற்றவாறு பற்றிக் கொள்கிறது. பல்பொருள் அங்காடியில் நுழையும் ஒருவன் பல்வேறு பொருட்களை பார்க்க நேரிட்டாலும் அவனது சுபாவத்திற்கு ஏற்றவாறு அவை மனதில் பதிகின்றன. பின்னர் ஏற்படும் தொடர் சங்கல்பத்தினால் அது ஆசையாக மாறுகிறது. இந்நிலையில் மனமானது புத்தியை மயக்கி, அப்பொருளின் தேவையைக் குறித்த பகுத்தறியும் விவேகத்தை மறைத்து, அப்பொருள் தனக்கு தேவையான ஒன்று என்ற முடிவை எடுக்கச் செய்கிறது. இவ்விதம் புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆசைக்கு இருப்பிடமாக திகழ்கிறது.
எதிரி எந்தக் கோட்டையில் எப்படி வாசம் செய்கிறான் என்பது தெரிந்தால் பின்பு அவனை எதிர்ப்பது எளிதாகிறது. ஆசை என்னும் பகைவன் மனிதனது மனக்கோட்டையில் வசிக்கிறான். அந்த பகைவனானவன், ஒருவனின் இந்திரியங்களையும், மனதையும், புத்தியையும் தனது கருவிகளாகக் கைப்பற்றிக் கொண்டு, அவனது அறிவை மறைத்து விதவிதமான மோஹத்திற்கு உட்படுத்துகிறான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
தீயவழியில் செல்லும் மனம் நீசர்கள் மத்தியில் வசிக்கும் பிராம்மணனையும் பெரிய நகரத்தின் தூய்மையற்ற இடத்தில் குடியிருக்கும் கனவானையும் ஒக்கும்.
-------------------------------------------------------------------------------------||3.41|| காமத்தை வீழ்த்தும் யுக்தி(காம ஜெய உபாய:):
तस्मात्त्वमिन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ ।
पाप्मानं प्रजहि ह्येनं ज्ञानविज्ञाननाशनम् ।। ४१ ।।
தஸ்மாத்த்வமிந்த்3ரியாண்யாதௌ3 நியம்ய ப4ரதர்ஷப4।।
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாச1நம் ।। 41 ।।
भरतर्षभ ப4ரதர்ஷப4 பரதவம்சத்துக் காளையே तस्मात् தஸ்மாத் ஆகவே त्वं த்வம் நீ
आदौ ஆதெள ஆதியில் इन्द्रियाणि இந்த்3ரியாணி புலன்களை नियम्य நியம்ய கட்டுப்படுத்தி
ज्ञान-विज्ञान-नाशनम् ஜ்ஞாந-விஜ்ஞாந-நாச1நம் ஞானத்தையும் விக்ஞானத்தையும் அழிக்கின்ற
पाप्मानं பாப்மாநம் பாப சொரூபமான एनम् ஏனம் இந்த ஆசையை हि ஹி உறுதிப்பாட்டுடன்
प्रजहि ப்ரஜஹி ஒழித்து விடு
ஆகையால் பரதவம்சத்துக் காளையே, நீ முதலில் புலன்களை முறைப்படுத்தி ஞானத்தையும் விக்ஞானத்தையும் அழிக்கின்ற பாப சொரூபமான இந்த ஆசையை ஒழித்துவிடு.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.
விளக்கம்:
=> ஆசையை வெல்லுதல் எங்ஙனம்?
ஆசையை வெல்லும் யுக்தியை பகவான் இங்கு பகர்கிறார். புலனடக்கத்தின் மூலம் எதிரியாகிய ஆசைக்கு இருப்பிடம் இல்லாது போய் விடுகிறது. அதில் எதிரியின் பலம் பெரிதும் குறைந்து விடுகிறது. இதைத் தொடர்ந்து சங்கல்பத்தினாலும் பழக்கத்தினாலும் ஆசையை உறுதிப்படுத்தும் மனதைக் கட்டுப்படுத்துவதும்(ச1ம:_शम:) சாத்தியமாகிறது. பிறகு ஆசையை வெல்லுதல் எளிதாகிறது.
=> இந்திரிய மற்றும் மன ஒழுக்கத்தின் முக்கியத்துவம்:
நமக்கு பயனளிக்காத ஒன்றில், நாம் விரும்பும் போதெல்லாம் புலன்களைத் தடுத்து நிறுத்த அல்லது விஷயங்களைக் குறைத்துக் கொடுக்கப் பழகுதல் வேண்டும். உதாரணமாக சாப்பிடுவதை எடுத்துக் கொண்டால், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அது புலனின்பத்திற்கான விஷயமாக ஆகிவிடுகிறது. பசி தீரும் அளவு சாப்பிட்ட பின்னரும், ஆசையானது உள்ளிருந்து, ‘இன்னும் கொஞ்சம் வேண்டும்’ என கூறும் நேரத்தில் ஒருவன், ‘இல்லை! போதும்’ என கூறி புலன்களின் மட்டத்தில் ஒழுக்கம் பழகுதல் த3ம:(दम:) எனப்படுகிறது.
தன்னியல்பு காரணமாக உண்டாகும் விருப்பு-வெறுப்பை கட்டுப்படுத்தவோ, அல்லது உருவாகாமல் தடுக்கவோ இயலாது எனக் கண்டோம். தனியொருவரின் சுபாவமானது பூர்வ ஜென்ம வாசனைகளையும், கடந்த காலத்தையும், அதன் அனுபவங்களையும் அடித்தளமாகக் கொண்டது. இதுவே ஒருவரின் குறிப்பிட்ட வகையான சிந்தனைக்கும் சில விருப்பங்களுக்கும் வழிவகுக்கிறது. இது குறித்து உண்மையில் ஒருவனால் எதுவும் செய்ய இயலாது. செய்யப்பட வேண்டியதும் செய்ய முடிவதும் ஒன்றே. அது என்னவெனில், நமக்கும் நமது ராக-த்வேஷத்திற்கும் இடையில் எப்பொழுதும் ஒரு சிறு இடைவெளியை வைத்திருக்கப் பழகுதல் வேண்டும். வேறு வார்த்தையில் கூறுவதானால், அவைகளுக்கு நம்மை வாரி வழங்காமல் தடுத்தல் மனக் கட்டுப்பாடு(ச1ம:_शम:) எனப்படும். ஒருவன் தனது எளிய கற்பனைகளுக்கும், விருப்பங்களுக்கும் இரையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு விருப்பம் உண்டாகும் பட்சத்தில், அதை நிறைவேற்றுவது அவசியமா, சாத்தியமா, பயனுள்ளதா? இது சரியானதா? என ஆராய வேண்டும். அதற்கு மேற்கூரிய சிறு இடைவெளி மிக அவசியம். இந்த இடைவெளிச் சுதந்திரம் இல்லையெனில் மனமானது ஆராய்ச்சிக்கெல்லாம் இடம் கொடுக்காமல் பெருங்காற்று சிறு தோனியை எளிதில் அசைத்து கவிழ்பதைப் போல நம்மை கவிழ்த்துவிடும்.
அனைத்து காரணிகளையும் எடை போட நம்முள் நாம் மேற்கொள்ளும் இந்த விவாதமே மனக் கட்டுப்பாடாகும். இதன் பின், விரும்பியதை அடைவது குறித்து முடிவெடுக்கலாம். இந்த முடிவு நம்முடையதாக இருக்க வேண்டும். நமக்கான இந்த முடிவை ராக-த்வேஷங்கள் எடுக்க அனுமதிக்க கூடாது. இவ்விதம் ஒருவன் புலனடக்கத்தையும் மன ஒழுக்கத்தையும் பயிற்சி செய்வதன் மூலம் தனது விருப்பு-வெறுப்பை நிர்வகிக்கலாம். இல்லையெனில் அவைகள் நம்மை நிர்வகித்து நமது வாழ்க்கையை குழப்பிவிடும். இதனாலேயே சிலர் மெளனத்தை விரதமாக மேற்கொள்வர். ஒரு நாள் முழுதும், அல்லது தினமும் ஒரு சில மணி நேரம் மெளனியாக இருந்து புலனடக்கத்தை பழகுவர். சில சாதுக்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் உண்ணா நோன்பிருப்பர். இவ்விதமான புலனடக்கம், மன ஒழுக்கத்திற்கு(ச1ம:_शम:) இட்டுச் செல்கிறது. ஆகவே கண்ணன் அர்ஜுனனை முதலில் புலனடக்கத்தையும் பின்னர் மனக் கட்டுப்பாட்டையும் பயிற்சி செய்வதன் மூலம் ‘விட்டுப் பழகு’ என்கிறார்.
=> சங்கரரின் கருத்து:
ஞானத்தை திருடும் பாவத்தை செய்யும் பாவியான இந்தக் காமத்தை அழிப்பதன் மூலம் அதனைத் தொடர்ந்து வரும் கோபத்தையும் நீக்கு என்கிறார் பகவான். விருப்பத்தை முற்றிலுமாக விட்டுக்கொடுப்பதன் மூலமே அதை வெல்ல முடியும் என சங்கரர் தனது பாஷ்யத்தில் தெளிவுபடுத்துகிறார். விருப்பத்தை விட்டுக் கொடுப்பதும், அதனுடன் செல்லாமல் இருப்பதும் ‘ச1ம:’, மனக் கட்டுப்பாடு. ஆசை எழும்போது அவைகளுடன் செல்லவில்லையெனில் அவைகள் நம்மை காலவரையின்றி பின் தொடராது. தன்னை ஆதரிக்க யாருமில்லாத காரணத்தினால் அது அர்த்தமற்றதாகி விடுகிறது.
=> காமம் ஏன் பாப சொரூபம்?
ஏனெனில் அது அறிவையும் ஞானத்தையும் கொள்ளையடித்து விடுகிறது. மக்களின் பணத்தை திருடுபவர்களை குற்றவாளி என்கிறோம். நம் அறிவு நாம் சேகரித்ததிலேயே மிகப் பெரிய செல்வம். பணம் திருடப்பட்டால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் அறிவை அவ்வளவு எளிதாக சேகரித்துவிட முடியாது. நீண்ட கால அனுபவங்கள் மற்றும் தேடுதல்களால் திரட்டப்பட்ட நம் அறிவானது புதையலைப் போன்றது. அதை எளிதாக அபகரித்து விடுவதால் ஆசையை பாவி,‘பாப்மா’ என்கிறார் பகவான்.
மேலும் ஆசையானது மனதின் அமைதியை கெடுப்பதன் மூலம் பிரம்ம ஞானத்திற்கும், ஞான நிஷ்டைக்கும் தடையாக இருக்கிறது. ஆத்ம சொரூபத்தை மறைப்பதால் அது பாப சொரூபமானது(பாப்மாநம்). அத்தகைய ஆசையை வெல்லுதல் வீரனது செயல்.
=> ஞானம் மற்றும் விக்ஞானம்:
இங்கு ஞானம் எனும் சொல் நூலறிவையும், அதைத் தன் அனுபவத்தில் உணர்தலை விக்ஞானமும் குறிக்கிறது.
* ஞானம் (பரோக்ஷ ஞானம்)-> எல்லாமே பிரம்மமாக இருக்கின்றது என்கிற சாமான்ய ஞானம்.
* விக்ஞானம் (அபரோக்ஷ ஞானம்)-> அந்த பிரம்மமே நானாக, ஆத்மாவாக இருக்கின்றேன் என்கிற விஷேஷ ஞானம்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மாயை என்பது என்ன? ஆத்மீக அபிவிருத்திக்கு இடையூறாகவிருக்கும் காமம் தான் மாயை.
----------------------------------------------------------------------------------------------------------------------