||3.35|| ஸ்வதர்மத்தைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியம்:
श्रेयान्स्वधर्मो विगुण: परधर्मात्स्वनुष्ठितात् ।
स्वधर्मे निधनं श्रेय: परधर्मो भयावह: ।। ३५ ।।
ச்1ரேயாந்ஸ்வத4ர்மோ விகு3ண: பரத4ர்மாத்ஸ்வநுஷ்டி2தாத் ।
ஸ்வத4ர்மே நித4நம் ச்1ரேய: பரத4ர்மோ ப4யாவஹ ।। 35 ।।
सु-अनुष्ठितात् ஸு-அநுஷ்டி2தாத் நன்கு அநுஷ்டிக்கப்பட்ட परधर्मात् பரத4ர்மாத் பிறருடைய தர்மத்தை(கடமையை) காட்டிலும் विगुण: விகு3ண: குணமில்லாத(குறையுடைய)
स्वधर्म: ஸ்வத4ர்ம: தன்னுடைய தர்மமானது श्रेयान् ச்1ரேயாந் சிறந்தது
स्वधर्मे ஸ்வத4ர்மே தன்னுடைய தர்மத்தில் निधनं நித4நம் மரணம் श्रेय: ச்1ரேய: சிறந்தது
परधर्म: பரத4ர்ம: பிறருடைய தர்மமானது भयावह: ப4யாவஹ பயத்தோடு கூடியது.
நன்கு செய்யப்பட்ட மற்றவர்களின் கடமையைக் காட்டிலும் குறையுடைய தனது கடமை மேலானது. ஸ்வதர்மத்தில் மரணம் வருமேயானால் அதுவே நல்லது. பிறர் தர்மம் பயத்தை உண்டாக்கும்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.
விளக்கம்:
=> ஸ்வதர்மத்திற்கும் பரதர்மத்திற்குமுள்ள வேறுபாடு:
ஒருவனின் மனதில் வந்து செல்லும் எண்ணங்களைத் தெரிவு செய்வதில் வாய்ப்பில்லை. சுபாவமாக அவைகள் வந்து செல்கின்றன. ஆனால் அவைகளைச் செயலாக மாற்றுவதில் நமக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ளது என பார்த்தோம்.
‘தர்மப்படி வாழ்தல் கர்மயோகம் எனில், சாஸ்த்திரத்தில் சந்யாசம் அதர்மம் என கூறப்படவில்லையே! ஆகவே நான் சந்யாசம் மேற்கொள்ளலாமே!’ என அர்ஜுனன் கேட்கலாம். அதை உணர்ந்தவராய் பகவான், இந்த சுலோகத்தை பதிலாக உரைக்கிறார்.
கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் ஒருவனது தர்மம், அதாவது அவனால் செய்யப்பட வேண்டிய கர்மம் அவனுடைய ‘ஸ்வதர்மம்’, தன்னறம் ஆகிறது. இங்கு தர்மம் என்பது கர்மத்தைக் குறிக்கிறது.
* தன்னால் செய்யப்பட வேண்டிய கடமை -> ஸ்வதர்மம்
* இனியொருவரின் கடமை நமக்கு -> பரதர்மம்.
ஸ்வதர்மத்தை செய்வதுதான் கர்மயோகம். மேலும் பரதர்மத்தை செய்யாதிருப்பதும் கர்மயோகம். பிறருடைய தர்மம் நமக்கு அதர்மம்.
உதாரணமாக கால்பந்து விளையாட்டில் கோல்கீப்பர், நீண்ட நேரமாகத் தன்னருகில் பந்து வராத காரணத்தினால் சலிப்படைந்து, சக வீரர்களைப் போல ஓட முடிவு செய்கிறார் எனில், அது அவரது அணிக்கு பேரிழப்பு. எதிரணியானது, பந்தை கோல்கீப்பர் வரை கொண்டு செலுத்தவில்லையெனினும் அவரின் பணி கம்பத்தின் இடையில் நின்று, வலைக்குள் பந்து வராமல் தடுப்பதே. அவருடைய பணியை செய்வதற்குப் பதிலாக சக வீரர்களின் ஆட்டத்தைப் பார்த்து அவரும் ஓட நினைத்தால் அது அவரது கடமையிலிருந்து விலகியதாக ஆகிறது. அவருடைய தோல்விக்கும், அவரைச் சார்ந்த அணியினரது தோல்விக்கும் வித்தாகிறது. அந்தச் சூழ்நிலையில் தனக்கு எது விதிக்கப்பட்டுள்ளதோ அதைச் செய்வதே ஸ்வதர்மம். அதாவது ஒருவருடைய பொறுப்பு அவரின் கடமையாகிறது. உதாரணமாக, கணவனாக இருப்பது சில கடமைகளுடன் வரும் கதாபாத்திரமாகும். மனைவி எனும் பெண்ணுடன் ஏற்பட்ட உறவினால் கணவன் எனும் கதாபாத்திரம் கிடைக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் ஒரு குறிப்பிட்ட திரைக்கதையுடன் இணைந்தே வருகிறது. இதுவே அந்த கதாபாத்திரத்தின் ஸ்வதர்மம். இதேபோல, தந்தை, ஆசிரியர், மருத்துவர், காவலர், குடிமகன் என எந்தப் பொறுப்பில் உள்ளோமோ அதற்கான கடமைக்கு கட்டுப்பட்டவராகிறோம்.
=> தன்னறத்தை தவிர்ப்பதனால் உண்டாகும் விளைவு:
இனியொருவரின் கடமையை நாம் நன்கு செய்வதைக் காட்டிலும் குறையுடன் செய்யப்பட்ட நமது கடமையே சிறந்தது. ஆகையினால் நம்முடைய கடமையில் நஷ்டமடைந்தாலும், ஒருவேளை உயிரே போயினும், அதுவே மேண்மையை தரக்கூடியது. பரதர்மமானது தவறாகச் செய்தல், தோல்வி போன்ற பயத்தை கொடுக்கவல்லது. தன்னறத்தை முறையாகச் செய்வதன் மூலமே மனமுதிர்ச்சி ஏற்பட்டு அதன் வழியாக மனத்தூய்மை சாத்தியமாகிறது. மோக்ஷத்திற்கு தகுதியான மனமுதிர்ச்சியை அடைவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதை அடைய, முந்தய ஜென்மங்களின் பலனாகக் கிடைத்துள்ள இந்த முழு வாழ்நாளே தேவைப்படலாம். வெறுப்பினால் அல்லது அச்சத்தினால் ஒருவன் தன் தொழிலை விட்டுவிட்டு, இனிய வாழ்க்கை கிடைக்குமென்று பரதர்மத்தில் பிரவேசிக்கக் நினைப்பது தகாது. உதாரணமாக க்ஷத்ரியனான அர்ஜுனனுக்கு அறப்போர் ஸ்வதர்மம். பாட்டனாரையும் ஆசிரியரையும் கொல்லுதல் என்ற துன்பத்தை தருவதனால் ஸ்வதர்மத்தை வெறுக்கலானான். காட்டிற்குச் சென்று நிஷ்டை புரிதல், பிக்ஷை எடுத்து உண்ணுதல் என்ற பரதர்மத்தில் பிரவேசிக்கப்பார்த்தான்.
இவ்விதம் விருப்பு வெறுப்பின் வசப்பட்டுத் தொழிலை மாற்றுவது உறுதியற்ற மனதின் போக்காகும். உயிரையே வழங்கவேண்டிவரினும் தன் கடமையினின்று பிறழாதிருத்தல் பக்குவமான வீரனது செயலாகும். பயந்து தொழிலை மாற்றுபவன் ஓயாது செத்துக்கொண்டே இருக்கிறான். அத்தகையவன் அழியாப் பெருநிலையைப் பெறுதல் எங்ஙனம்?
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பன்னிரண்டு வருஷங்களாக மழை பெய்யாது போனாலும் பரம்பரைக் குடியானவன் நிலத்தை சாகுபடி செய்யாமல் தவிர்திருப்பதில்லை. ஆனால் கிருஷித் தொழிலைப் புதிதாகக் கைக் கொண்ட வாணிபனை அதைரியப்படுத்துவதற்கு ஒரே வருஷம் மழையில்லாவிட்டாலும் போதும். ஆயுளளவும் பக்தி செய்தும் ஈசுவர தரிசணத்தைப் பெறாதிருந்தாலும், உண்மையான பக்தி உள்ளவனுக்கு ஒருபோதும் மனத்தளர்ச்சி உண்டாவதில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------||3.36|| அர்ஜுனனின் சந்தேகம்:
अर्जुन उवाच ।
अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पूरुष: ।
अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजित: ।। ३६ ।।
அர்ஜுந உவாச ।
அத2 கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ: ।
அநிச்ச2ந்நபி வார்ஷ்ணேய ப3லாதி3வ நியோஜித: ।। 36 ।।
अर्जुन उवाच அர்ஜுந உவாச அர்ஜுனன் சொன்னது
वार्ष्णेय வார்ஷ்ணேய விருஷ்ணி வம்சத்துதித்தவரே अथ அத2 அப்படியானால்
अयं पूरुष: அயம் பூருஷ: இந்த மனிதன் अनिच्छन् अपि அநிச்ச2ந் அபி இச்சையில்லாதிருந்தும்
बलात् ப3லாத் பலாத்காரமாய் नियोजित: इव நியோஜித: இவ ஏவப்பட்டவனைப் போல केन கேந எதனால் प्रयुक्त: ப்ரயுக்த: தூண்டப்பட்டவனாக पापं பாபம் பாபத்தை चरति சரதி செய்கிறான்.
அர்ஜுனன் சொன்னது: விருஷ்ணி வம்சத்துதித்தவரே, இந்த மனிதன் இச்சையில்லாதிருந்தும், பலவந்தமாய் ஏவப்பட்டவனாய் எதனால் தூண்டப்பட்டவனாக பாபத்தை உருவாக்கும் செயல்களைச் செய்கிறான்?
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?
விளக்கம்:
=> பாபத்தைச் செய்ய தூண்டுவது எது?
புலன்களுக்கு விஷயங்களில் விருப்பு-வெறுப்பு உண்டு. அவைகளுக்கு ஒருவன் வசப்படலாகாது(வச1ம் ந ஆக3ச்சே2த்). மேலும் செய்வதற்கு எளிமையான, மகிழ்ச்சியைத் தரக்கூடிய பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் இனிமையற்ற தனது தர்மத்தைச் செய்வது மேலானது என முந்தய சுலோகங்களில் பகவான் கூறியிருந்தார். கர்மயோகத்தை மேலும் கூர்மைப்படுத்தும் இந்த உபதேசத்தை கேட்ட பின் அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. பாபத்தை கொடுக்கும் கர்மம் என தெரிந்தும் ஒருவனை, அச்செயலைச் செய்யத் தூண்டுவது எது?
இங்கு ‘பூருஷ:’ என்பது ‘புருஷ:’எனும் பொருளில், ஒரு தனிநபரைக் குறிக்கிறது. पुरुष: एव पूरुष: — (புருஷ: ஏவ பூருஷ:). கிருஷ்ணரை அர்ஜுனன் ‘வார்ஷ்ணேய’, விருஷ்ணி குலத்தில் தோன்றியவரே என அழைத்து இக்கேள்வியை கேட்கிறான். இச்சொல்லை வேறொரு விதத்திலும் பொருள்படுத்தலாம்.
ப்ரம்மானந்தம் வர்ஷதி இதி வ்ர்ஷ்ணி சம்யக்-போ4த3: தேன அவக3ம்யதே இதி வார்ஷ்ணேய: — ப்ரம்மத்தின் முழுமையும் ஒன்றில் பொழிவது வ்ர்ஷ்ணி என்றழைக்கப்படுகிறது. ப்ரம்ம வித்யா, ப்ரம்மத்தை பற்றிய தெளிவான அறிவையுடையவரே, ‘வார்ஷ்ணேய’ என்பது இறுதிப்பொருள்.
முறையற்ற செயல் என தெரிந்தும், அக்காரியத்தில் விருப்பமில்லாதிருந்தும்(அநிச்ச2ந் அபி), பலவந்தமாய்(ப3லாத்) தள்ளப்பட்டவனைப் போல் ஏன் ஒருவன் அச்செயலை செய்கிறான்(கேந ப்ரயுக்த: சரதி)? என்பது அர்ஜுனனின் கேள்வி.
துரியோதனனிடம் ஒருமுறை, ‘நற்குடும்பத்தில் இளவரசனாய் பிறந்த உங்களை இதுபோன்ற பாபச் செயலைச் செய்யத் தூண்டுவது எது?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு துரியோதனன், ‘எது தர்மம் என்றும் எது அதர்மம் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். எது சரி, எது தவறு என்பதில் எனக்கு எந்தவொரு குழப்பமோ அறியாமையோ இல்லை. இது தர்மம் என தெரிந்தும் அதை தொடரமுடியாததும், இது அதர்மம் என்று அறிந்திருந்தும் அதை விடமுடியாததுமே எனது பிரச்சனை. என் இருதயத்தில் அமர்ந்திருப்பவனால் எந்த வழியில் தூண்டப்படுகிறேனோ அந்த வழியில் நான் செல்கிறேன்’ என்கிறான். அது ஒரு சக்தியின் தூண்டுதலா அல்லது ஒரு நபரினுடையதா என்பதை துரியோதனன் அறிந்திருக்கவில்லை.
जानामि धर्मं न च मे प्रवृत्तिर्जानाम्यधर्मं न च मे निवृत्ति: ।
केनापि देवेन हृदिस्थितेन यथा नियुक्तोऽस्मि तथा करोमि ।। [महाभारत]
ஜாநாமி த4ர்மம் ந ச மே ப்ரவ்ருத்திர்ஜாநாம்யத4ர்மம் ந ச மே நிவ்ருத்தி: ।
கேநாபி தே3வேந ஹ்ருதி3ஸ்தி2தேன யதா2 நியுக்தோऽஸ்மி ததா2 கரோமி ।। [மஹாபாரதம்]
ஆக, துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் ஒரே சந்தேகமே எழுந்துள்ளது. எவர் அல்லது எது, மனதில் அமர்ந்து கொண்டு ஒருவனை முறையற்றது என தெரிந்தும் அதைச் செய்ய பலவந்தப் படுத்துகிறது?
-------------------------------------------------------------------------------------||3.37|| எதனால் ஒருவன் பாப கர்மத்தைச் செய்கிறான்?
श्रीभगवानुवाच ।
काम एष क्रोध एष रजोगुणसमुद्भव: ।
महाशनो महापाप्मा विद्ध्येनमिह वैरिणम् ।। ३७ ।।
ஸ்ரீப4க3வாநுவாச ।
காம ஏஷ க்ரோத4 ஏஷ ரஜோகு3ணஸமுத்3ப4வ: ।
மஹாச1நோ மஹாபாப்மா வித்3த்4யேநமிஹ வைரிணம் ।। 37 ।।
श्री भगवान् उवाच ஸ்ரீ ப4க3வான் உவாச ஶ்ரீ பகவான் சொன்னது
रजोगुणसमुद्भव: ரஜோகு3ணஸமுத்3ப4வ: ரஜோ குணத்திலிருந்து தோன்றிய
महाशन: மஹாச1ந: எதையும் உண்ணவல்லது महापाप्मा மஹாபாப்மா பெரும்பாபமுடையது
एष: ஏஷ: இது काम: காம: காமம் एष: ஏஷ: இது क्रोध: க்ரோத4: குரோதம்
इह இஹ இங்கே एनं ஏனம் இதை वैरिणम् வைரிணம் விரோதி विद्धि வித்3தி4 அறிக
ஶ்ரீ பகவான் சொன்னது: ரஜோ குணத்திலிருந்து தோன்றிய இந்த காமமும் குரோதமும் தான் எதையும் உண்ணவல்லது; பெரும் பாபமுடையது. இந்த வாழ்க்கையில் இதை பகைவனாக தெரிந்து கொள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது; பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.
விளக்கம்:
=> ஆசையைப்(காம:) பற்றிய விசாரம்:
மூன்றாம் அத்தியாயத்தில் இனிவரும் சுலோகங்களில்(37-43) காமத்தை பற்றிய விசாரம் நடக்கிறது. அதை கீழ்கண்டவாறு மூன்று தலைப்பாக பிரிக்கலாம்.
[1] காம சொரூபம் (37 - 39)
[2] காமத்தின் அதிஷ்டானம் (40)
[3] காம ஜெய உபாயம் (41-43)
=> ‘பகவான்’ என்ற சொல்லின் விளக்கம்:
இந்த சுலோகத்திற்கான பாஷ்யத்தில் சங்கரர், ‘ப4க3’ எனும் சொல்லின் மூலம், ஆறு வித குணங்களை அல்லது ஐஸ்வர்ங்களை உடையவர் பகவான் என விளக்குகிறார். இக் கருத்தை நாம் ஏற்கனவே 2.2 -ல் மேற்கோளாகப் பார்த்துள்ளோம்.
श्री भगवानुवाच [ஶ்ரீ பகவான் உவாச]
ஶ்ரீ - செல்வத்துடன் கூடியவர்
பகவான் - 6 விதமான ஐஸ்வர்யங்களை முழுமையாகக் கொண்டவர்.
(1) ஆள்தல்
(2) தர்மம்; உருவாக்கும் வலிமை
(3) புகழ்
(4) செல்வம்
(5) ஞானம்
(6) வைராக்யம்
ஒவ்வொரு மனிதனிடமும் இந்த குணங்கள் சிறிய அளவில் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக வைராக்கியம் எனும் குணத்தை எடுத்துக்கொண்டால், குப்பையைக் குறித்த வைராக்கியம் நிச்சயமாக அனைவரிடமும் இருக்கும். ஆனால் எது குப்பை அல்லது தேவையற்றது என்பதில் ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். பகவானிடம் மேற்கூரிய இந்த ஆறு குணங்களும் எந்த இடையூறுமின்றி பூரணமாக உள்ளது.
சங்கரர் ‘பகவான்’ எனும் சொல்லை விஷ்ணு புராணத்தை மேற்கோள் காட்டி, வேறொரு கோணத்திலும் விளக்குகிறார்.
उत्पत्तिं प्रलयं चैव भूतानामागतिं गतिम् ।
वेत्ति विद्यामविद्यां च स वाच्चो भगवानिति ।।
உத்பத்திம் ப்ரளயம் சைவ பூ4தாநாமாக3திம் க3திம் ।
வேத்தி வித்3யாமவித்3யாம் ச ஸ வாச்சோ ப4க3வாநிதி ।। (விஷ்ணு புராணம் - 6.5.78)
தோற்றத்தையும், ஒடுக்கத்தையும் அறிந்தவர்; அனைத்து உயிரினங்களின் ஆயுட்காலம், வகை, பிறப்பிடம், இறப்பு மற்றும் எல்லாவிதமான முடிவுகளையும் முழுமையாக அறிந்தவர்; உயிர்களின் சுக துக்கத்தையும், அவற்றின் அறிவையும் அறியாமையையும் அறிந்தவர் என பகவானை சர்வத்தையும் அறிந்தவராக கூறுகிறார்.
இந்த சுலோகத்தில் பகவான் அர்ஜுனனிடம், எண்ணங்களே ஒருவனை பாபம் செய்ய தூண்டுவதாக கூறுகிறார். எவ்விதமான எண்ணங்கள் என்பதை இனி விரிவாகப் பார்க்கலாம். வெறும் எண்ணங்களே மனிதன் ஆகிவிடமுடியாது என்றாலும் அவைகளைச் சார்ந்தே மனிதன் வெளிப்படுகிறான்.
=> பாபத்தின் பிறப்பிடம் இச்சை:
புத்தி என்பது மனதின் ஓர் அங்கமாக இருந்தபோதிலும் எண்ணங்களின் அடிப்படையில் மனதை இரண்டாகப் பிரிக்கிறோம்.
[1] புத்தி - அறிவின் அடிப்படையில், நிச்சயம் செய்யும் எண்ணங்களை உருவாக்கும் சொரூபத்தை கொண்டது.
[2] மனம் - சுக, துக்கத்தின் அடிப்படையில், உணர்ச்சி வசப்பட்ட எண்ணங்கள் மற்றும் சந்தேக எண்ணங்களை உருவாக்கும் இயல்புடையது.
முன் சுலோகத்தில், அர்ஜுனனின் கேள்வியில் இடம்பெற்ற ‘இச்சா_ஆசை’, அறிவின்படி புத்தியில் தோன்றும் எண்ணத்தைக் குறிக்கிறது. இங்கு பகவானின் பதிலில் வரும் ‘காம:’, அதாவது இச்சா_ஆசை என்பது மனதில் சுகத்தின் அடிப்படையில் வரும் ஆசையைக் குறிக்கும். சில சூழ்நிலைகளில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர, பொதுவாக திருடுதல், ஹிம்சை செய்தல், பொய் கூறுதல் போன்ற செய்கைகளை புத்தியானது இயற்கையாகவே அதர்மம் என அறிந்து கொள்ளும். புத்தியில் பாப வினையாற்றுதல் கூடாது என்ற ஆசையிருந்தும், மனதில் அதனால் வரும் சுகத்தில் ஆசை உண்டாவதால் மனிதன் தவறான கர்மத்தை நோக்கி ஏவப்படுகிறான். ஆக உண்மையில் யுத்தம் மனதிற்கும், புத்திக்குமே நடக்கிறது.
இங்கு பகவான் கையாளும் ‘இந்த ஆசை(ஏஷ: காம:)’ எனும் வெளிப்பாடு, ‘நம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட இந்த ஆசை’ எனும் பாவனையைக் குறிக்கிறது. ஒருவன் தன்னை கவனிப்பதன் மூலம் இந்த ஆசையை, அவனே எளிதாக அறியலாம். வெளியிலிருந்து எந்தவொரு பிசாசும் அல்லது சாத்தானிய சக்தியும் ஒருவனை பாபம் செய்ய தூண்டுவது இல்லை. இந்த ‘விருப்பம்’ என்ற எண்ணமே பிசாசைப் போன்ற பெரும் சக்தியாக மாறுகிறது. இதனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதால், அவன் ஏற்கனவே அடைந்த ஞானத்தினால் புத்தியில் தோன்றும் எச்சரிக்கையை மெளனப்படுத்திவிடுகிறான். ரஜோகுணத்திலிருந்து தோன்றும் இந்த காம எண்ணம் எனும் சக்தி மேலெழும்போது, சத்வத்திலிருந்து தோன்றும் ஞானமானது மறைக்கப்பட்டு விடுகிறது. ஆகவேதான் பகவான் இதை பகைவன்(வைரிணம்) என்கிறார்.
=> குரோதத்தின் தன்மை:
‘காம’ எண்ணத்தின் இனியொரு வடிவமே குரோதம். ஆசையானது அழிக்கப்பட்டாலோ அல்லது நிறைவேற விடாமல் தடுக்கப்பட்டாலோ அது கோபமாக வடிவெடுக்கிறது. இது எப்படி நடக்குமென அர்ஜுனன் நன்றாகவே அறிந்திருந்தான்.
வனவாச காலத்தின் போது, இந்திரனிடம் சென்று வலிமையான அஸ்திரங்களைக் கேட்டுப் பெறுமாறு கண்ணன் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினார். குந்திதேவி, இந்திரனுக்கு உரிய மந்திரத்தை ஜபித்தல்லவா அர்ஜுனனைப் பெற்றாள்? தனக்கு மகனே போன்ற அர்ஜுனன் கேட்டால் இந்திரன் தேவ அஸ்திரங்களைத் தர மறுப்பானா என்ன? அர்ஜுனன் விண்ணுலகம் புறப்பட்டான். தேவசபையில், தன்னைத் தேடி வந்திருக்கும் அர்ஜுனனைப் பார்த்து தந்தைக்கே உரிய பாசத்தில் மகிழ்ந்தான் தேவேந்திரன். அச்சமயம் தேவலோக அப்சரஸான ஊர்வசி அர்ஜுனனிடம் காதல் கொண்டாள். ஆனால் அர்ஜுனன் அவளை தனது தாய்க்கு சமமானவள் என கருதி அவளது காதலை நிராகரித்தான். அப்போது காதல், கோபமாக மாறி அவனை அலியாக மாறும்படி சபித்தாள். திடுக்கிட்ட அர்ஜுனன் மன வருத்தத்துடன் தன் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி சாபவிமோசனம் அருள வேண்டினான். அதன்பிறகு கோபம் தணிந்த ஊர்வசி, சபித்ததை திரும்ப பெற இயலாது எனவும் உன் வாழ்வில் நீ விரும்புகிற நேரத்தில் அதுவும் ஓராண்டு மட்டும் அலித்தன்மையை பெறக் கடவாய் எனவும் கூறி சாபவிமோசனம் கொடுத்தாள். பின்னாளில் இச்சாபமே வரமாக அர்ஜுனனுக்கு மாறியது. பதிமூன்று வருட வனவாசத்தில், கடைசி ஓராண்டு அஞ்ஞாத வாசமாக கழிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. யாராலும் அடையாளம் காணாமல் வாழவேண்டிய நிர்பந்தத்திலிருந்த அந்த கடைசி ஆண்டை, அர்ஜுனன் இச்சாபம் நடைமுறைக்கு வர தேர்வு செய்தான். திருநங்கை வடிவத்தில் பிருகன்னளை என்ற பெயரில், மன்னர் விராடனின் இளவரசி உத்திரைக்கு ஆடல், பாடல் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தான். ஆகவே இச்சை எவ்விதம் குரோதமாக மாறும் என்பதில் அர்ஜுனனுக்கு அனுபவமிருந்தது.
ஆரம்பத்தில் ‘வேண்டும்’ என்ற விருப்பமாக தோன்றி, நாளடைவில் ‘அடைந்தே தீர வேண்டும்’ என்ற பேரார்வமாக மாறி, இறுதியில் அதற்கு வரும் தடையினால் அது குரோதமாக வடிவெடுக்கிறது. குரோதத்திலிருந்து உண்டாகும் செயலினால் ஒருவன் வாழ்நாள் முழுதும் வருந்த நேர்வதால் அது ‘மஹாபாப்மா’, பெரும் பாபமுடையது என்கிறார் பகவான். இப்படிப்பட்ட கர்மத்திற்கு ஆத்மாவோ, ஏன் உடலோ மனமோ புலன்களோ கூட காரணமல்ல. முழுக்க முழுக்க ‘காம’ எண்ணமே விதையாக உள்ளது. சம்பிரதாயத்தில் இதை குறிக்கும் ஒரு மந்திரம் கூட உண்டு. ‘அதை ஆசை செய்தது, கோபம் செய்தது. ஓ கடவுளே! என் நமஸ்காரங்கள்’ - காமோகார்ஷீத் மந்யுரகார்ஷீத் நமோ நம:. ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த மந்திரத்தை பெரியவர்களும் குழந்தைகளும் 1008 முறை உச்சாடனம் செய்வது வழக்கம். இது வெறும் பிரார்தனை அல்ல. இதில் ‘நான் செய்யவில்லை’ என்ற முக்கிய கருத்து அடங்கியுள்ளது.
தன் மனதில் இருந்து கொண்டு, தன்னை தவறான காரியங்களில் ஈடுபடுத்துபவன் யார் என்று தனக்கு தெரியவில்லை என துரியோதனன் கூறியதை சென்ற சுலோகத்தில் பார்த்தோம். அர்ஜுனனுக்கும் அப்படிப்பட்டவன் யார் என தெரியவில்லை. ரஜோ குணத்திலிருந்து உண்டாகும் காமமும், அதற்குத் தடையுண்டாகும் போது வெளிப்படும் கோபமுமே ஒருவனை பாப காரியத்தைச் செய்யத் தூண்டுவதாக பகவான் பதிலுரைக்கிறார். இவையிரண்டையும் ‘மஹாச1ந:’, எதையும் உண்ணவல்லது என வர்ணிக்கிறார். ஒருவன் தனது ஆசையை நிறைவேற்ற நிறைவேற்ற அது ஒரு நாள் தீர்ந்து, எந்தவொரு ஆசையும் எஞ்சியில்லாதவனாக மாறும் நாள் வரும் என அனுமானம் செய்வது சரியானது அல்ல. அதிக ஆகாரத்தை கொடுக்க கொடுக்க அது வளர்ந்து கொண்டே செல்கிறதே தவிர அதன் வீரியம் குறைவதில்லை. எவ்விதம் நெருப்பானது எவ்வளவு விறகு கொடுத்தாலும் அதை பொசுக்கிவிட்டு மேலும் விறகு வேண்டி நிற்கிறது. அவ்விதமே காமத்துக்கு விஷயங்களை ஊட்ட ஊட்ட அது அவைகளை உண்டு வளர்கிறது. ஆசை பெருகப் பெருக பாபமும் பெருகுகிறது(மஹாபாப்மா). மனிதனுக்கு வரும் கேடுகளெல்லாம் ஆசையிலிருந்து வந்தவைகள். ஆகையால் அது இவ்வுலக வாழ்க்கையில் எல்லோர்க்கும் பகைவன்(வைரிணம்).
=> காமத்தின் சொரூபம்:இங்கு(3.37) பகவான் ஆசையின் சொரூபத்தை தொகுக்கிறார்:
* குரோதம் அல்லது கோபம்
* அதிக ஆகாரத்தினால் அதிகரிக்கும் தன்மையுடையது
* பெரிய பாபத்திற்கு காரணமாகிறது
* மனிதனுக்கு பகைவனாக இருப்பது
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
காமத்தையும், காசு ஆசையையும் பூர்த்தி செய்து கொள்வதில் அனேகந்தரம் அவமானமடைந்தாலும், உலகப்பற்றுள்ளவர்கள் அவைகளை வெறுத்து ஈசுவரனைத் தியானம் செய்யச் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------